நைலான் புடவை

< 1 நிமிட வாசிப்பு

அன்று அப்படியொன்றும் பிரமாதமாக
நிகழ்ந்துவிடவில்லை, என்றும் போல

அதே காலி நாற்காலிகள்
அதே அந்திம வெளிச்சம்
அதே இரைச்சலும் அமைதியும்
அதே இருக்கையில் அதே வெறித்த பார்வையுடன்
அதே கண்ணாடிக் கோப்பையுடன்
அதே போன்ற நாளொன்றில் அமர்ந்திருந்தான்
அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது
அவன் கண்கள் இருந்த திசையில்
அவனுக்குப் பக்கவாட்டில்
வலது கைக்கு எட்டும் தொலைவில்
அது இருந்தது

திடமா திரவமா வாயுவாவென்பது
அவனுக்குச் சரியாகப் புலப்படவில்லை
வழுக்கிச் செல்வதைப் போல
மிதப்பதைப் போல
உருகி ஓடுவதைப் போல
அல்லது
அத்தனையும் கலந்ததோர் இயக்கம்
அதில் இருந்தது
அது தற்போது இருந்தவிடத்திலிருந்து
அடுத்ததாக எத்திசையில் செல்லுமென்பதை
அவனால் கணிக்கவே முடியவில்லை
ஆடிக்காற்றில் பறந்து செல்கிற
ஒரு நைலான் புடவையைப் போலிருந்தது அது
அம்மாவின் வாசனை அவன் நினைவுக்கு வந்தது

அசைய அசைய அதன் நிறம்
மாறிக்கொண்டேயிருந்தது
ஆக்டோபஸின் கால்களைப் போல் அலைந்த
அதன் விளிம்புகள் அவனை இறுக்கிவிடுமோவென்று
ஒரு கணம் தோன்றியது
அது குறித்தான அச்சம் எதுவும் இல்லையெனினும்
கண்ணாடிக் கோப்பையைத்
தள்ளி வைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டான்

அது அவனை இன்னும்
நெருங்கியிருந்ததாகத் தோன்றியது
எட்டப் போவதில்லையெனத் தெரிந்தாலும்
அதன் திசையில் வலது கையை நீட்டினான்
அதற்குள் அது இன்னும் இடது பக்கமாகச் சென்றிருந்தது

அப்பொழுதுதான்
அது மெல்ல மெல்ல நிறத்தை
உதறிக்கொண்டிருப்பதை உணர்ந்தான்
அது நிறமிழப்பதும் அவனைக் கடந்ததும்
ஒன்றாகவேதான் நிகழ்ந்ததாகத் தோன்றியது
அவன் கோப்பையை இறுகப் பற்றிக்கொண்டான்
கோப்பையைப் பற்றியிருந்த விரல்கள்
கண்ணுக்குப் புலப்படவில்லை
கண்ணாடியும் சரியாகக் கீழே விழுந்து சிதறியது

ஒரு நைலான் புடவையைப் போல
காற்றில் அலைந்தபடி
கொஞ்சம் கொஞ்சமாக
நிறமேறிக் கொண்டிருந்தான் அவன்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்