கதை

கடைசி ஓவியம்

4 நிமிட வாசிப்பு

நான்கு தெருக்கள் சந்திக்கும் அந்தச் சதுக்கத்தில் இருக்கும் ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான் நம் ஓவியர் வசிக்கிறார். முன்பு அந்தச் சதுக்கத்தின் பெயர் “விக்டோரியா சதுக்கம்”. அந்தப் பெயருக்கான காரணம் அங்கு வசிக்கும் எவருக்கும் தெரியாது. சுதந்திரம் அடைந்த பிறகு வெள்ளையர்களை மீண்டும் துரத்தும் இரண்டாவது முயற்சியில் அந்தப் பெயரை நீக்கி ஒவ்வொரு கட்சியும் தங்களின் ஆளுமைகளின் பெயரை முன் நிறுத்த, அதுவே ஒப்பீட்டளவில் ஒரு போராட்டமாக உருமாறியதாக அங்கு வாழும் சில முதியவர்கள் கூறுவார்கள். இந்தக் குழப்பத்தில் ஆட்சியும் கை மாற அடுத்து வரும் அரசியல் கட்சிகள் இந்தச் சதுக்கத்தின் பெயர் மாற்றம் அந்த அளவிற்கு வாக்கு வங்கியை மேம்படுத்தாது என்று எண்ணியதால் வழக்கமாக அந்தத் திட்டத்தை நிரந்தரமாகக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இந்த அரசியல் குழப்பத்திற்கிடையில் அந்தச் சதுக்கம் “நோமேன்” சதுக்கமாக அங்கிருந்த மக்களால் அழைக்கப்பட்டது. நாளடைவில் அந்தச் சதுக்கத்தில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய சில வெள்ளைக்காரத் துரைமார்களால் அதுவே பின்வரும் காலங்களில் “நார்மேன்” சதுக்கமாக மாறியது என்பது அதன் நீண்ட வரலாறு.

அந்த ஓவியர் முறைப்படி எதுவும் பயிலவில்லை எனினும் அவருடைய ஓவியங்களுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பிருந்தது. உள் நாட்டிலும் நல்ல மதிப்பும் இருந்தது. ஒரு சாயலில் சீனனையும் மறு சாயலில் ஓர் ஏழை பர்மீய விவசாயியையும் போலத் தோற்றமளிப்பார். மெலிந்து பரவிய மீசையின் ஓரங்கள் கூர் உடைந்த பென்சிலைப்போலச் சீரற்று இருக்கும். நெற்றிச் சுருக்கங்களின் மடிப்பு நெருக்கமாக வடிவமைத்த கீரைப்பாத்தியை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். ஆங்கிலத்தில் மிகவும் சரளமாகப் பேசுவார் எனினும் கல்கத்தாவில் வசிப்பதால் ஓரளவு பெங்காளி மொழியிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.

உலக அளவில் பாரீஸில் நடக்கும் ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள அவருக்குத் தனி அழைப்பு வந்திருந்தது. அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்தார். கண்களை மூடி யோசித்துக்கொண்டிருந்த போது தேனீர்க்கடைச் சிறுவன் கையில் தேனீருடன் ஒரு சிகரெட்டையும் வைத்துக்கொண்டு ஓவியருக்காகக் காத்திருந்தான். ஓவியர் தன் சராசரி இயக்க நிலையில் இருந்து மாறி வேற்று மனிதர் போலச் சிறுவனிற்குத் தோன்றியது. ஓவியர் தேனீர் குடிக்கும் வரை காத்திருந்த சிறுவன் சிகரெட்டை அவரிடம் பணிவுடன் நீட்ட “உலகில் மிகச் சிறந்த அழகி யார் தெரியுமா?” என்று சிறுவனிடம் கேட்டார். அவனிடம் தயாராக எந்தப் பதிலும் இல்லை. எதுவும் கூறாமல் ஓவியரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

தன் கற்பனைக்கு ஈடாக பல பெண்களின் படத்தை வரைந்தார். எதிலும் அவர் எதிர்பார்த்த அந்தக் கனல் இல்லை. முதலில் பிரிட்டிஷ் கால அரசக் குடும்பத்தில் இருக்கும் ஒரு சீமாட்டியை வரைந்தார். பிறகு ரஷ்யக் கதைகளில் வரும் பெண் விவசாயிகள் குழுவாக அறுவடைக்கால நாட்டியம் ஆடுவதைப் போல வரைந்தார். பரதம், கதகளி, குச்சுப்பிடி பாவங்களை மையப்படுத்தி சில பெண் ஓவியங்களையும் வரைந்தார். எதிலும் திருப்தியடைமாமல் அனைத்தையும் கசக்கிக் கூடையில் வீசியெறிந்தார். கடைசியாகக் கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு அவர் மனதில் இருந்த அந்த அழகியின் ஓவியத்தை வரைந்து முடித்தார். சாதகமான தீர்ப்பிற்குக் காத்திருக்கும் ஒரு குற்றவாளியின் பதட்டமான மனநிலையில் கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தார். ஓவியப் பலகையில் வெற்று வெள்ளைத்தாள்தான் அவருக்குத் தெரிந்தது. அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது. ஓவியர் தடுமாறுவதைப் பார்த்த சிறுவன் “உண்மையிலேயே இவள்தான் பேரழகி” என்று வியந்து கூறி ஓவியரின் கைகளில் முத்தம் கொடுத்தான். சிறுவனின் உதட்டில் படிந்த வானவில்லின் நிறம் ஓவியரின் கண்களை மிகவும் பிரகாசமாக்கியது.

அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.

பாரீஸில் இருக்கும் புகழ்பெற்ற “முசீ தே ஓர்சே” கலைக்கூடத்தில் ஓவியரின் வெள்ளைதாள் படம் “அழகி” என்ற தலைப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தைப் பல பெண்கள் கூட்டமாகப் பார்ப்பதும், பிறகு தணிந்த குரலில் ரகசியமாகச் சிரிப்பதுமாகக் கலைந்து போய்க்கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் அந்த ஓவியத்தைப் பார்த்த இளைஞன் ஒருவன் ஓவியரிடம் வந்தான். “வணக்கம் என் பெயர் ஜோனாஸ். ஓவியப்பள்ளி மாணவன்” என்று கூறிக் கை கொடுத்தான். “எப்படி ஒரு பெண்ணின் அழகை இவ்வளவு நுணுக்கமாக உங்களால் வரைய முடிந்தது என்று நினைக்கும்போதே மிகவும் வியப்பாக இருக்கிறது. அவளின் அப்பழுக்கற்ற நிர்வாணம் துளியும் கொச்சைப்படுத்தப்படாமல் பார்வையாளர்களை எப்படித் திகைக்க வைக்கிறது தெரியுமா?” சுறுக்கமாகக் கூறினால் அந்த நிர்வாண அழகியின் உதட்டில் வெளிப்படும் மறைக்க முயற்சித்துத் தோற்றுப்போன சோகம்தான் உங்கள் படைப்பின் வெற்றி” என்றான். அவன் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஓவியர் பதில் ஒன்றும் கூறவில்லை. “இன்று மாலை எதிரில் இருக்கும் காஃபி ஷாப்பில் நாம் மீண்டும் சந்திக்கலாமா?” என்று இளைஞனிடம் கேட்க மறுப்பேதும் கூறாமல் அவனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான்.

அரங்கின் ஓரத்தில் இருக்கும் தாழ்வான மர இருக்கையில் அமர்ந்துகொண்டு முதன் முதலாகத் தன் வெள்ளைத்தாள் ஓவியத்தைப் பார்ப்பதுபோலப் பார்த்தார். அப்போது அங்கு வந்த ஒரு முதியவள் ஓவியத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கண்கள் பனிக்க ஓவியரிடம் வந்தாள். இரண்டாவது உலகப்போர் நடந்த காலத்தில் அவளின் தாயார் செவிலியராகப் போர் முனையில் பணிபுரிந்தபோது இறந்ததாகவும், இந்த அழகி ஓவியத்தில் இருப்பவள் அவளின் தாயாரின் சாயலில் இருப்பதாகவும் கூறி ஓவியரை இறுக அணைத்துக்கொண்டாள். தான் கொண்டு வந்திருந்த போலராய்டு கேமாராவில் ஓவியருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டாள். கேமிராவில் இருந்து வெளியேறிய ஈரமான படத்தைக் காற்றில் ஆட்டிக்கொண்டே படம் நிலைப்பட்ட பிறகு ஓவியரிடம் காண்பித்தாள். அந்தப் படத்தில் அவர்களின் பின்புலத்தில் இருந்த ஓவியரின் வெள்ளைத்தாள் படத்தில் “அழகி” என்ற தலைப்பு மட்டுமே தெரிந்தது. ஓவியர் தன் கண்களில் தெரிந்த மிரட்சியை மறைக்க கூடுமானவரை முயற்சித்து தோற்றுவிட்டதைப் போலக் காட்சியளித்தார்.

மாலை காஃபி ஷாப்பில் இளைஞன் ஓவியருக்காகக் காத்திருந்தான். அவர் வந்தவுடன் அவருக்கான இருக்கையை மேஜையில் இருந்து விலக்கிப் பணிவாக அவரை உட்கார வேண்டினான். “நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். நான் வரைந்த அந்த அழகி ஓவியத்தை நீ எனக்கு வரைந்து காட்ட வேண்டும். ஓவியப்பள்ளி மாணவன் என்பதால் அதை நீ ஒரு பயிற்சிப்பாடமாக ஏற்றுக்கொண்டு வரைந்தாலும் எனக்கு முழுச் சம்மதமே” என்றார்.

ஓவியர் அந்த இளைஞனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அடுத்த நாள் அவனுடைய கலைக்கூடத்திற்குச் சென்றார். தான் வரையும் ஓவியத்தை முழுவதும் வரைந்து முடித்த பிறகே ஓவியர் அதைப் பார்க்க வேண்டும் என்ற அன்புக் கட்டளையுடன் இளைஞன் வரைய ஆரம்பித்தான். பத்து படங்களுக்கு மேல் வரைந்தும் எதிலும் முழுத்திருப்தியடையாமல் அனைத்தையும் கிழித்துப் போட்டான். எந்தப் படத்திலும் அந்த அழகி அவனின் வரை கோட்டு வலைகளில் சிக்கிக்கொள்ளாமல் வெகு சாதுரியமாகத் தப்பித்துக்கொண்டிருந்தாள். பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்தவன் போலக் கண்களை ஒரு கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு வரைய ஆரம்பித்தான்.

முழு ஓவியத்தை வரைந்து முடிந்த பிறகு கண்கட்டை அவிழ்த்து அடுத்த அறையில் அமர்ந்திருக்கும் ஓவியரிடம் காண்பிக்க ஓடி வந்தான். தரையில் ஒரு குழந்தை போல ஓவியர் தவழ்ந்துகொண்டு கீழே தெறித்து விழுந்த தன் இரண்டு கரு விழிகளைத் தேடிக்கொடுக்குமாறு இளைஞனிடம் மன்றாடிக் கேட்க உடனே அவன் சுருட்டி வைத்திருந்த தன் ஓவியத்தை முதன் முதலாக விரித்துப் பார்த்தான்.

இளைஞனின் பார்வையும் மங்கிக்கொண்டே வந்தது. நிர்வாணத்தைக் கூடுமானவரை கைகளால் மறைத்துக்கொண்ட அழகியின் இதழில் இருந்து முதன் முறையாக மெல்லிய புன்னகை இழையோடியது.

 

பிரேம பிரபா

நொடிக் கனவுகளாய்க் கடந்த காலங்களை மீண்டும் ஒழுங்குபடுத்தி, மீள்பட்டியலிட்டு, மறு வாசிப்பிற்குட்படுத்தி நம்மை நாம் தயார்ப்படுத்தும் நிலைதான் ஒரு படைப்பாளி குழந்தைத்தனத்துடன் வைக்கும் முதலடி. இப்படி நடந்துவிட்டது, இப்படி நடந்திருந்தால் இதை ஓரளவிற்குத் தவிர்த்திருக்கலாம், இப்படித்தான் நடந்திருக்க வேண்டும், என்ற தடுமாற்றத்தின் பதிவுகளாகத்தான் என் சிறுகதைகள் (1.அவன், அவள் மற்றும் நிலா 2.தொடர்ந்து தோற்கும் புலிக்கடவுள் 3.டோரியன் சீமாட்டி) என் கட்டுரைகள் (1.முகமூடிகளும் முட்கிரீடங்களும்) என் கவிதைத் தொகுப்புகள் (1.ஒரு கோடிக் கனவுகள் 2. அஞ்சறைப் பெட்டி) வெளிவந்திருக்கின்றன. முக்கியமாக ஒரு படைப்பாற்றலின் ரகசிய நீட்சி படைப்பாளியைச் சற்றே ஆசுவாசப்படுத்தும் தற்காலிகச் சலுகையே தவிர, அவன் அத்தகைய படைப்புகள் வாசகனின் மனதில் இடம் பிடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கிறது. தன் கதாபாத்திரங்களின் வடிவை மேம்படுத்தி வாசகனின் பொதுப்புத்தியில் சிறிது நேரம் இளைப்பாற வைப்பதற்கான யுக்தியை நோக்கித்தான் என்னைப் போன்ற பலரின் இலக்கியப் பயணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Share
Published by
பிரேம பிரபா

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago