சிறுகதை

ஒரு பறக்கும் நாளில்

5 நிமிட வாசிப்பு

பரபரப்பான விளையாட்டு மைதானத்தில் வைத்து டிசம்பர் 31-க்கு முந்தைய நாளின் விடியற்காலை தற்செயலாகத் தொடங்கியது. அங்கு, இளம் முதியவர்களோடும் சிறுவர்களோடும் இருபத்தியிரண்டு வயதேயான பச்சை படிந்த கண்ணாடியைக் கண்ணுக்கு அணியத் தெரியாதவன் ஒருவனும் ஓடிக்கொண்டிருந்தான். 49 கிலோ என்றிருந்த உடல் பருமன் யாரோ இட்ட சாபத்தின் விளைவு போல (தன்னை மீறித் தனக்கு நிகழ்வது எல்லாமே அவனுக்குச் சாபம்தான்) திடுக்கிடலுடன் உயர்ந்தது. போராட்டக்காரர்கள் உயர்த்திப்பிடித்த கொடியென ஒற்றைத்தோள் மட்டும் உயர்ந்திருக்கும் அவனுடைய சமீபத்திய எடை 79 கிலோ. அவன் ஓடிக்கொண்டிருந்தான். இந்நாள் அவனுடைய தலைவிதியைக் கவிழ்த்துப் போடுமென்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. உண்மையில் எதைத்தான் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு விபத்து. சைக்கிள் போல ஓடிக்கொண்டிருந்தவன், வேகமாக நடந்துசென்று கொண்டிருந்த பாட்டியை மோதித்தள்ளினான். கூட்டம் கூடிவிட்டது. பாட்டிக்குத் தலையில் இருந்து ரத்தம். குரலிலிருந்து சில கடுஞ்சொற்கள். கொஞ்சமும் கருணையே இல்லாதவனெனப் பிறர் நினைக்கும்வண்ணம் வேகமாக ஓடி மைதானத்தை விட்டுத் தப்பிச் சென்றான். பாட்டி தன் மனதிற்குள் சொன்னாள்: நீ ஓடிக்கொண்டேயிருப்பாய். உன்னால் நிற்க முடியாமல் போகும் போ..

உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் காதுகள் இருந்தால்.. இதயத்திற்குக் காது, ஆண்குறிக்குக் காது. இப்படி இருந்துவிட்டால் நிலைமை கைமீறிப் போகும்போது உறுப்புகளிடம் பேசிப்பார்க்கலாம்.

ஆமாம், உண்மைதான். அவனால் நிற்க முடியவில்லை. கால்கள் இரண்டும் அவன் சொல்வதைக் கேட்கவில்லை. அது தன்போக்கிற்கு ஓடிக்கொண்டிருக்கிறது. கால்கள் சரீரத்திலிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டன. (இனி உடலுக்குள் கொடி நட்டு வணக்கம் செலுத்ததாததுதான் குறை) ஒரிடத்தில் நிற்கவேண்டுமென எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தான். ஆனால் முடியவில்லை. கால்கள் ஓடுவதற்கு அடிமையாகிவிட்டன. உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் காதுகள் இருந்தால்.. இதயத்திற்குக் காது, ஆண்குறிக்குக் காது. இப்படி இருந்துவிட்டால் நிலைமை கைமீறிப் போகும்போது உறுப்புகளிடம் பேசிப்பார்க்கலாம். (துறவிகள் சொல்கிற உடல் கட்டுப்பாடும் எளிமையாகக் கிடைத்திருக்கும்)குறைந்தபட்சம் கால்களுக்காவது  காதுகள் இருந்திருக்கலாம் என எண்ணம் சுழன்று கொண்டிருந்தது. இப்பொழுது கால்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஓட்டத்தில் உடம்பைத் தனியே விட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமென்ற எண்ணம் இருப்பது அவனுக்குத் தெரிய வந்தது..உடலுக்கும் உயிருக்குமான பனிப்போர் என்றுதான் முற்றுபெறுமோ. அப்படி முடிவேயில்லாமல் ஓடுவதற்குச் சாதகமாக உடல் தகவமைந்திருந்தது. வால் தேய அத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனது என்று சொன்னார்கள். இத்தனை மாற்றங்களுக்கு உடல் தன்னைத் தகவமைத்துக்கொள்ள இத்தனை நொடிகள்தான் ஆனதா? மூச்சுவாங்குதல் இல்லை. உடல் உபாதைகள் இல்லை. ஓரிடத்தில் நின்றுகொண்டு உடல் தனக்காகச் செய்துகொள்ள வேண்டிய வேலைகள் ஏதுமில்லை. ஓடிக்கொண்டே வழியிலிருந்த மின்கம்பத்தை இரண்டு கைகளால் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். சூறைக்காற்று அசைக்கும் பனைமரம் போல அது ஆட்டம் காண ஆரம்பித்தது. போதாக்குறைக்கு  அப்போதும் கால்கள் இரண்டும் ஓடிக்கொண்டிருந்தன.

இன்னும் எதிர்பாராதது ஒன்றும் நடந்தது. திடீரென கால்கள் இரண்டும் அந்தரத்தில் ஏறத்தொடங்கின.. அவன் மிகவும் இறுக்கமாக மின்கம்பத்தை பிடித்துக்கொண்டான். பாம்பின் வாயிலிருக்கும் உயிருள்ள எலியைப் போன்ற பீதி உணர்வு கால்களைய் தவிர அவனுடைய உடல் மற்றும் மனதின் அத்தனை பாகங்களையும் ஆட்கொண்டது. தரையில் நடப்பவர்கள் அனைவரும் அவனைப் பார்த்தனர். ஒருவன், அவன்தான் கடவுளின் தூதன் என்றான். இன்னொருவன் அவனை வானிலிருந்து யாரோ கயிறுகட்டி இழுக்கிறார்கள் என்றான். இன்னொருவன் அவனால் தலைகீழாக ஓடமுடியும் என்றான். அவனைப் பார்த்த ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அவனைப் பற்றிக் கூறினர். சற்றுநேரத்தில் ஒரு பிரபலமான ஊடகத்தில் ஊழியம் பார்க்கும் ஒருவர் அங்கே வந்தார். தன்னை அறிமுகப்படுத்திவிட்டு உங்களுடைய பேட்டி வேண்டும் என்று சொன்னார். அவனும் ஒப்புக்கொண்டான். அரைமணிநேரம் பேட்டி தொடர்ந்தது. முன்னணி புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து விதவிதமான கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அடுத்த இதழில் உங்களுடைய பேட்டி வரும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். நெடுநேரம் இப்படி மின்கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தோன்றியது. வீட்டிற்குச் செல்ல வேண்டும். நிலைமையைப் புரியவைக்க வேண்டும். மின்கம்பத்தில் இருந்து கைகளை விலக்கினால் ஒழுங்காகத் தரையிறங்குவோமா என்றுகூட ஒரு சந்தேகம் அவனுக்கு இருந்தது. ஒருவேளை காற்றில் நீச்சலடித்து பூமியை விட்டு வெளியே சென்றுவிட்டால்?

ஓவியம்: ஜெயந்தி சங்கர்

யாரையாவது உதவிக்கு அழைக்கலாம். வேடிக்கை பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து எல்லாம் ஆட்கள் வந்திருந்தனர். சிறுவர்கள் அவனை நோக்கிச் சின்னஞ்சிறிய கற்களை வீசினர். சிறுமிகள் அச்சத்துடன் பார்த்தனர். கல்லூரிப் பெண்கள் தங்களுக்குள் பேசியபடி ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தால் கொஞ்சம் அழகான சட்டையை அணிந்து வந்திருக்கலாமே என்று அவன் மனதிற்குள் எண்ணிக்கொண்டான். சற்றுநேரத்தில் காவல்துறை வாகனம் ஒன்று வந்தது. அதில் மருத்துவர் ஒருவரும் இருந்தார். கூட்டத்தை விலக்கியபடி அதிகாரியும் மருத்துவரும் அவனை நெருங்கி வந்தனர். மருத்துவர் அவனிடம்  “உங்களுக்கு என்ன ஆயிற்று?” எனக் கேட்டார். தெ-ய-வில்-ஐ என்று சொன்னான். உங்களுடைய ரத்த மாதிரி தேவை. எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்டார். சரி என்றான் திணறிக்கொண்டே. அதன்பிறகு, என்னைப் பழையபடி மாற்றுங்கள் டாக்டர் என்றான். நிச்சயமாக மாற்றிவிடலாம் என்றார் அவர். அவனைத்  தொடாமல் மிகவும் கவனமாகக் கைக்கவசமணிந்தபடி இடது கையில் ஓர் ஊசியை இறக்கினார். தேவைப்படும் அளவு ரத்தத்தை எடுத்துக்கொண்டு விடைபெற்றார்.

நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.

அதிசயங்கள் அச்சுறுத்துகின்றனவோ என்னவோ தேநீர்க்கடையிலிருந்து ஒரு கும்பல் அவனை நோக்கித் திடுமென வந்தது. அக்கும்பலில் இருந்த புட்டமும் புஜமும் பருத்த இளைஞன் ஒருவன் அவன் கையை மின்கம்பத்திலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கினான். பத்துநொடி அவனுடைய  கையைத் தொட்டிருப்பான். அவ்வளவுதான். அந்த இளைஞனுடைய கால்களும் கட்டுப்பாடின்றி ஓடத்துவங்கின.  ஆரம்ப கட்ட உந்துதல் வலுவாக இருந்ததால் நேரடியாக ஒரு சுற்றுச்சுவரில் போய் மோதி கீழே விழுந்தான். அவனுக்குக் கால்கள் துடுப்பு போல அசைந்துகொண்டிருந்தது. கும்பல் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்தது. தன் நண்பனுக்கு நிகழ்ந்ததைத் தாங்க இயலாது, சரமாரியாக அவனைத் தாக்கத் தொடங்கினர். அந்தரத்திலிருந்து ஊசலாடிக்கொண்டிருக்கிற நீண்ட உருளையை நினைவூட்டக்கூடிய அவனுடைய ஓடிக்கொண்டிருக்கிற கால்களைப் பிடித்து ஒருவன் தொங்கினான். இன்னொருவன் மீண்டும் அவனுடைய கைகளை மின்கம்பங்களில் இருந்து விலக்கினான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவனைத் தாக்க, தீண்டியவர்கள் அனைவரின் கால்களும் ஓடத்தொடங்கின. கூட்டநெரிசல் உள்ள சாலை என்பதால் அனைவரும் ஆங்காங்கே நின்று பராக்கு பார்த்துக்கொண்டிருந்தனர். கும்பலில் இருந்த ஆறு பேரும் சரமாரியாக ஓடத்துவங்கும் உற்சவமும் தொடங்கியது. ஓடும்போது வழியில் வருகிறவர் போகிறவர்களைத் தாறுமாறாக இடித்துக்கொண்டே ஓடினர். நகரம் முழுவதும் நிற்க முடியாமல் ஒடும் நோய் பரவிற்று. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும் காட்சி. மிருகங்களும் தப்பவில்லை. இந்நகரத்தில் இருந்து பக்கத்து நகரம். அங்கிருந்து இன்னொரு நகரம் என மாவட்டம் முழுவதும் பரவியது. சிலர் முன்னெச்சரிக்கையாக மறைவிடத்தில் ஒளிந்துகொண்டனர். எங்குப் பார்த்தாலும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் ஓடாமல் நிற்பதற்காகப் பிடிமானமாக எதையெல்லாம் கைகளால் பிடிக்க முடியுமோ அதையெல்லாம் பிடித்துக்கொண்டனர். நிற்க முடியாமல் ஒடும் நோய் டிசம்பர் 30 இரவுக்குள் மாநிலம் முழுவதும் பரவிற்று. கற்பனை செய்துபாருங்கள். நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள். இது ஒரு பேய்க்கனவைப் போலில்லை..

பேய்க்கனவேதான். இந்தப் பூமி எங்கோ கொரில்லா போராளிகளைப்போல மறைந்து வாழும் இன்னொரு பூமியின் பைசாசக்கனவு. கனவு கலையும்போது உலகமும் அழிந்துவிடும், கனவை நினைவுபடுத்திக் குறித்துக்கொள்ளக்கூட முடியாதவாறு சுவடற்றுப் போயிருக்கும். அரசாங்க அலுவலர்கள், வாக்காளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், பாம்பாட்டிகள், சோம்பேறிகள் , மந்திரவாதிகள், அர்ச்சகர்கள், துறவிகள், கவிஞர்கள், விபச்சாரிகள் என மாநிலத்தின் எல்லாத் தரப்பினரையும் வியாதி தொற்றிக்கொண்டது. அங்கிருந்து எல்லா மாநிலங்களுக்கும் பரவி தேசம் மொத்தத்தையும் வியாதி பீடித்தது.  எல்லையோரங்களில் ராணுவ வீரர்கள் கூட்டம் கூட்டமாக மக்கள் ஓடிவருவதைப் பார்த்ததும் முதலில் ஒலிபெருக்கியில் எச்சரித்துப் பார்த்தனர். யாருமே நிற்காததால் சரமாரியாகச் சுடத்துவங்கினர். ஒரு கட்டத்தில் ஆயுதங்களின் கையிருப்பு தீர்ந்துபோக ராணுவ வீரர்களும் ஓடத்துவங்கினர். முள்வேலிகளை ஏதோ ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசுக்கான ரிப்பனை மார்பால் தட்டிக்கொண்டுபோவதைப் போல முள்வேலிகளோடு அண்டைநாட்டை நோக்கி அனைவரும் ஓடினர். டிசம்பர் 31 இன்னும் தொடங்கியிருக்கக்கூட இல்லை. புத்தாண்டு பிறக்கத்தான் போகிறது. ஆனால் என்ன ஒன்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் அப்போது நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்… இது மகிழ்ச்சியான புத்தாண்டு இல்லையா?

வே.நி.சூர்யா and ஜெயந்தி சங்கர்

வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.

Share
Published by
வே.நி.சூர்யா and ஜெயந்தி சங்கர்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago