“டிஜிட்டல் புரட்சி தமிழ்ச் சமூகத்தின் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.”
அறிவியல் புனைவு, மிகுபுனைவு மட்டுமல்லாமல் பற்பல கலை வடிவங்களுக்கிடையே நிகழும் ஊடாட்டங்களில் இழையோடும் அரூபத்தை ஆராயும் விருப்பத்தில் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுடன் அரூ குழு தொடர்ந்து உரையாடவிருக்கிறது. கோட்டோவியம், அனிமேஷன், கணினி வரைகலை, சினிமா கலையமைப்பு, ஸ்டோரிபோர்ட், காமிக்ஸ், கிராபிக் நாவல் போன்ற பல்வேறு காண்பியல் துறைகளில் தொடர்ந்து இயங்கும் ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது.
தென்னிந்தியக் கலைச் செயல்பாட்டு வரலாறு, ஜப்பானிய காமிக்ஸ் வடிவம், காண்பியல் கலைகளின் பல்வேறு சாத்தியங்கள் என விரிகிறது உரையாடல்.
ஓவியங்களால் நீங்கள் முதன் முதலில் ஈர்க்கப்பட்ட தருணம் நினைவிருக்கிறதா?
நான் பிறந்து வளர்ந்தது மதுரை. சிறு வயதில் என் அம்மா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லும்போது அங்குள்ள சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, அழகர் கோவில் சிற்பங்கள். மதுரை சித்திரைத் திருவிழாவில் கிராமியக் கலைஞர்களின் ஆட்டமும் பாட்டமும் என்னைக் கவர்ந்தன. நாயக்கர் காலத்து ஓவியம் ஒன்று மதுரை பொற்றாமரைக்குளத்தைச் சுற்றி இருந்தது. சிறு வயதில் அதைக் கடந்து செல்லும்போதெல்லாம் நிமிர்ந்து பார்ப்பேன். விவரமில்லாத அரசு அதிகாரியால் அதை நாம் இன்று இழந்துவிட்டோம்.
என் தந்தை எனக்கு வாங்கித்தந்த படங்கள் நிறைந்த புத்தகங்கள் நினைவிருக்கிறது. யுலிஸிஸ் (Ulysses), சிந்துபாத் போன்ற கதைகளை நான் ரே ஹாரியின் (Ray Harryhausen) அனிமேஷன் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். சைக்ளோப்ஸ் (Cyclops) என்கிற ஒற்றைக்கண் பூதம் வரும். ஐந்து வயதில் இவையனைத்தும் எனக்குள் உண்டாக்கிய ஆர்வத்தின் வழியில்தான் இன்றும் பயணிக்கிறேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே பணம் சேர்த்துவைத்து ஒரு கேமரா வாங்கிவிட்டேன். புகைப்படங்கள் எடுப்பதில் தனி ஆர்வம் இருந்தது. ஓவியங்களும் வரைவேன். பிறகு சினிமா அனிமேஷன் துறைகளிலும் இயங்கினேன். இவை அனைத்துமே தனித்தனித் துறைகளாக இருந்தன. டிஜிட்டல் புரட்சி வந்து அனைத்தையும் ஒன்றாக்கிவிட்டது. நான் மிகச் சரியான பாதையில் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், அதன் வளர்ச்சியுடன் கூடவே நானும் நடந்து வளர்ந்திருப்பதாகவே கருதுகின்றேன்.
தமிழ் ஓவிய வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகளாக எவற்றைச் சொல்வீர்கள்?
தமிழ் ஓவிய வரலாற்றுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம் சோழர் காலம் என்பது உலகறிந்த உண்மை. மாபெரும் கலைப் படைப்புகளை உருவாக்குவதற்கான தூண்டுதலையும், கலைஞர்கள் இயங்குவதற்கான சூழலையும், மன்னர்கள் மட்டுமன்றி அன்றிருந்த சமூகமும் ஏற்படுத்தியது. உலக அளவில் சோழர் காலத்துக் கலை வடிவங்களுக்கு இணையானது எதுவுமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இதைத் தவிர, நாயக்கர் காலத்து சிருங்காரம் குறிப்பிடத்தக்கது. வெள்ளையர்கள் வருகைக்குப் பின்னர், மேலை நாடுகளுடனான தொடர்புக்குப் பிறகு, நமது கலை வடிவங்களில் எதார்த்த அம்சங்களும் இணைகின்றன. எந்தக் காலத்துப் படைப்பாக இருந்தாலும், அது இன்று நமக்கு என்ன சொல்கிறது என்பதை வைத்துதான் அதன் சிறப்பை அளவிட முடியும்.

ஒரு நேர்காணலில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளராகப் புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரது படைப்புகளில் குறிப்பிட்ட எந்த அம்சம் உங்களைக் கவர்ந்தது? அவரது எழுத்தின் தாக்கம் உங்கள் கலையில் எவ்வாறு வெளிப்படுகிறது?
நான் ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு முடித்த பிறகு, கோடை விடுமுறையில் ஒரு நூலகத்தில் புதுமைப்பித்தனின் பொன்னகரம் என்கிற கதையைப் படித்தேன். பள்ளிக்கூடம் சொல்லிக்கொடுத்தது வேறு, அக்கதை சொன்னது வேறு. அந்த வயதில் இக்கதை எனக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாவிடம் கேட்டபோது புதுமைப்பித்தன் மிகப் பெரிய எழுத்தாளர் எனச் சொன்னார். பதிபக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு போன்ற முக்கியமான திரைப்படங்களின் கதாசிரியரும் வசனகர்த்தாவுமான எம்.எஸ்.சோலைமலை எனது சின்னத் தாத்தா. அவர் திரைப்படங்களில் பணியாற்றும்போது, நான் சென்னைக்கு வந்து அவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவர் புதுமைப்பித்தனை மிகவும் சிலாகித்துப் பேசுவார். புதுமைப்பித்தனை அவரது அலுவலகத்திற்குச் சென்று பார்க்கத்தான் முதன் முதலில் சென்னைக்கே வந்ததாகச் சொன்னார். பின்னாட்களில் அவர் ‘பொன்னகரம்’ என்கிற நாடகத்தை அமைத்தார். அதில் நடிகை மனோரமா நடித்திருந்தார். புதுமைப்பித்தனுக்கான காணிக்கையாகவே இந்தக் கதைக்கு ‘பொன்னகரம்’ என்ற பெயரை வைத்தார்.
பள்ளி இறுதியாண்டிற்குள், புதுமைப்பித்தனின் 30 கதைகளைத் தேடிப் படித்துவிட்டேன். ஒவ்வொருமுறை புதுமைப்பித்தனைப் படிக்கும்போதும் அந்தந்தக் காலகட்டத்தின் அனுபவ சேகரங்கள் மூலம், அது இன்னொரு புதிய வடிவமெடுக்கும். புழக்கத்தில் இல்லாத பழைய வார்த்தைகளாக இருந்தாலும்கூட, அவரது எழுத்து நம் மனதில் ஒரு சித்திரத்தை அதிவிரைவில் உருவாக்கும். எழுத்தும் வாழ்க்கையும் பிணைந்திருப்பதால் அவரது படைப்புகளில் ஒருவித ஆதிக்கமும் நையாண்டியும் காணப்படும். அவை எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவரின் சில கதைகள் சினிமாவிற்கென்றே முறைப்படுத்தித் தொகுத்தது (cinematically edited) போலிருக்கும். அவரின் இருண்ட கதைகளைப் படிக்கும்போது சிறு வயதில் பார்த்த Hammer Film Productions தயாரித்த திகில் திரைப்படங்கள் நினைவுக்கு வந்தன. புதுமைப்பித்தன் வரலாறு எழுதிய தொ.மு.சி.ரகுநாதன் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு நேர்காணலுக்காக அவரைச் சந்தித்தபோது, புதுமைப்பித்தனுடன் நிறைய திகில் படங்கள் பார்த்தாகவும், அவருக்குத் திகில் படங்கள் பிடிக்கும் என்றும் சொன்னார். நான் வியந்துபோனேன்.
புதுமைப்பித்தன் படைப்புகளில் சிலவற்றைக் காமிக்ஸ் வடிவத்தில் மாற்றியிருக்கிறேன். அவை தி ஹிந்து, காலச்சுவடு பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன.
[புதுமைப்பித்தனின் கபாடபுரம் சிறுகதையைக் காமிக் வடிவில் டிராட்ஸ்கி மருது வரைந்துள்ளார். எழுத்துகளின்றி தொடர்ச்சித்திரங்களாகக் கபாடபுரத்தை இங்கே காணலாம்.]
தமிழ்ச் சூழலில் சினிமா என்கிற காட்சி ஊடகத்தின் அளவிற்கு காமிக்ஸ், கிராபிக் நாவல் வடிவங்கள் பிரபலமடையாததற்கு என்ன காரணம்?
தமிழ்ச் சமூகம் அடிப்படையில் சொல் சார்ந்த சமூகம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான பத்திரிகைகளைப் பார்த்தாலே தெரியும். ஓவியங்களுடன் புத்தகங்களை அச்சிடுதல் தமிழ்ச் சூழலில் மிகவும் குறைவு. வார்த்தைகளால் மட்டுமே நிரம்பியதாக இருந்தன. மேலும், நமது நாடக வடிவம் கூத்திலிருந்து வந்ததால், வார்த்தைகளால் ஒவ்வொரு காட்சியிலும் விரிவாக விளக்குவதே நமது மரபாக இருந்துள்ளது. அதனால்தான் ஆரம்ப காலத்தில் சினிமாவிலும் கதாபாத்திரங்கள் அதிகமாக வசனங்கள் பேசுவதாகவே அமைந்திருக்கும். காட்சி ரூபத்தின் வழி ஒரு விஷயத்தைக் கடத்துவது என்பதே தமிழ்ச் சூழலில் இல்லை.
சோழர் காலத்திலிருந்தே நமது கலைச் செயல்பாடுகள் செழிப்பாக இருந்துள்ளன. இந்தியா 200 ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டுண்டு இருந்தபோதும்கூட, தென்பகுதியில் இருக்கும் கலைஞர்களின் தேடல்தான் காட்சி ஊடகத்தை முன்னகர்த்தியுள்ளது. கலைக்கல்லூரி இங்குதான் முதலில் நிர்மாணிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் வசதிமிக்க குடும்பங்களுடன், அதிலும் குறிப்பாக அரசக் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், ரவி வர்மா போன்ற ஓவியர்கள் உருவானார்கள். அவர் பம்பாய்க்குச் சென்று தனது கலைப் பயணத்தைத் தொடங்கியதற்குத் தென்பகுதியில் உருவான கலைத் தேடல்தான் காரணம். ரவி வர்மாவின் அச்சகத்தில் வேலை பார்த்த தாதா சாகேப் பால்கே பின்னாளில் இந்தியாவின் முதல் திரைப்படத்தை எடுத்தார் (ராஜா ஹரிச்சந்திரா, 1913). அப்படி இருந்தும், பத்திரிகைகள் பிராமணர்களின் பிடியில் இருந்த காரணத்தால், அவர்கள் காட்ட நினைத்த விஷயங்கள் மட்டுமே வெளியாகின. கடந்த 200 ஆண்டுகளின் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் மூலமாக இந்த உண்மை உங்களுக்குப் புலப்படும். யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை. கார்ட்டூனிஸ்ட் மாலி, கோபுலு, ராஜு போன்ற மிகப்பெரிய கலைஞர்கள் எல்லாம் அப்பத்திரிக்கைகளில் பங்களித்துள்ளார்கள். கலைக் கல்லூரியிலும் ராய் சௌத்ரி மற்றும் தனபால் போன்ற சில குறிப்பிடத்தகுந்த கலைஞர்கள் இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் சினிமாவின் தாக்கத்தால் காலண்டர் கலை வடிவமும் சிவகாசியில் உருவாகியது.
தமிழ்ச் சார்ந்த விஷயங்களைக் கொண்ட ஓவியங்களையும் சித்திரங்களையும் தமிழ் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் கே.மாதவன் பெரும் பங்கு வகித்துள்ளார். அவர்தான் அந்தக் காலத்தில் பத்திரிக்கை, புத்தகம், சினிமா ஆகிய மூன்று ஊடகங்களுக்கும் பாலமாக இருந்தவர். திராவிட இயக்கம் நடத்திய பத்திரிகைகளுக்கும் பாரதிதாசனின் புத்தகங்களுக்கும் சினிமாவுக்கும் ஓவியங்கள் வரைந்தார். பம்பாய்க்குச் சென்று திரைப்பட உருவாக்கத்தில் அனுபவம் பெற்று, தமிழகம் திரும்பி சினிமாவின் மீது பெரும் ஆதிக்கத்தைச் செலுத்திய திரு என்.எஸ்.கிருஷ்ணனும் ஆதரவாக இருந்திருக்கிறார். இப்படி ஒரு பெரிய தொடர்பு இருந்துள்ளது. இது பொதுவெளியில் முக்கியமான பத்திரிக்கைகள் மூலமாக நிகழாமல் வெளியே நிகழ்ந்தது.
1970களின் தொடக்கத்தில் நான் ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது, பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் மாங்கா புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். அப்புத்தகம் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வாரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஜப்பானியப் பத்திரிக்கைகள் வெளிவரும். அவற்றில் ஒன்றுதான் அந்த மாங்கா இதழ். சென்னைத் தெருவில் கிடைத்தது. அரிதிலும் அரிது. இதற்கு முன்னர், பள்ளி நாட்களில், மதுரை வீதிகளில் மேட் பத்திரிகை இதழ்களை (Mad magazine) தெருவில் கண்டு, பின்பு சாதாரண காமிக்ஸ் புத்தகங்களைத் தாண்டி, உலகளவில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெளியான பரீட்சார்த்தமான காமிக்ஸ் புத்தகங்கள் என் கண்களில் அகப்பட்டன. சென்னைக்கு வந்த பிறகு மூர் மார்க்கெட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அமெரிக்காவில் ஸ்டூடியோ அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு, அவர்கள் சேகரித்து வைத்திருந்த சில புத்தகங்களை வாங்கினேன். இவற்றின் மூலம் கிராபிக் நாவலுக்கான முன் படியாக இருந்த நிலையை அறிந்துகொள்ள முடிந்தது.
தொடர்ச்சித்திரங்களாகிய காமிக்ஸ், ஸ்டோரி போர்ட், அனிமேஷன், சினிமா கலைஞர்கள் மற்றும் டிஜிட்டல் புரட்சிக்குக் காரணமாக இருந்த கலைஞர்கள், உலகம் முழுவதிலும் இவர்களுக்குள் ஒரு தொடர்பு நீண்ட காலமாக இருந்திருக்கிறது. இதைப் பற்றிய அறிதல் இல்லாத காரணத்தால் இவையனைத்தும் கால தாமதத்துடன் வந்துசேரும் நிலைதான் இங்குள்ளது. இனிமேல் தமிழ்ச் சமூகம் வெறுமனே தமிழில் பேசினால் மட்டும் போதாது, எல்லாவற்றையும் காட்சி ரூபமாக உலக மக்களுக்கு முன் நிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. டிஜிட்டல் புரட்சி தமிழ்ச் சமூகத்தின் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது என்றே சொல்ல வேண்டும். இச்செயல்பாட்டைத் தமிழ் மக்கள் முன்னின்று செய்வார்கள் என நம்புகிறேன்.

ஓவியங்களைவிட எழுத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளதாகவே தமிழ்ச் சமூகம் இருப்பதற்கு என்ன காரணம்?
ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமா பம்பாயிலிருந்து வந்தவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. நான் சினிமாவையே தொடர்ந்து குறிப்பிடுவதற்கான காரணம், கடந்த நூற்றாண்டின் வலுவான கலை வடிவமாக அது உருவாகி வந்துள்ளது. பல்வேறு நிலைகளில் வளர்ச்சிகள் அடைவதற்கு முன்னரே அது தமிழ் மக்களைச் சென்றடைந்துவிட்டது. 40, 50களில் திராவிட இயக்கத்தின் எழுத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் கைவசம் சினிமா கிடைத்தது. அவர்கள் அதை ஓர் இயக்கமாக மாற்றி முன்னகர்த்தினார்கள். மேலும் அவர்களின் மேடைப் பேச்சு, எழுத்துத் திறமை எல்லாம் சினிமாவிற்குள் சென்றது. ஏற்கனவே சொல் சார்ந்த சமூகமாக இருக்கும் தமிழகத்தை, இது இன்னமும் அதே திசையில் தள்ளியது. இதை முற்றிலும் தவறென்று சொல்ல முடியாது. பெரியாரின் சிந்தனைகளின் தாக்கத்தால் தமிழர்களுக்கு ஓர் அரசியல் தெளிவு ஏற்பட்ட பிறகு, திராவிட இயக்கம் தன் சக்தியை இந்த ஊடகங்களுக்குள் கொண்டு செல்கிறது.
சினிமாவில் ஓவியர்களின் பங்களிப்பு என்னவாக இருந்துள்ளது?
கடந்த 100 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சினிமாவின் வளர்ச்சியைக் கவனித்தால், எழுத்தாளர்களைவிட ஓவியர்களின் பங்களிப்புதான் முக்கியமானதாக இருக்கிறது. காமிக்ஸ் ஓவியர் வின்சர் மாக்கே (Winsor McCay) அனிமேஷன் திரைப்படங்களுக்கும் வித்திட்டவர். ஜப்பானில் மாங்கா (Manga) காமிக்ஸ் வடிவத்தின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமு தேசுகா (Osamu Tezuka) காமிக்ஸ், அனிமேஷன், சினிமா ஆகிய மூன்று ஊடகங்களிலும் பங்களித்துள்ளார். உலகம் முழுவதிலும் முக்கியமான சினிமா கலைஞர்கள் குறிப்பாக, செர்கெய் ஐஸன்ஸ்டீன் (Sergei Eisenstein), சத்யஜித் ரே, ஹிட்ச்காக், குரோசாவா, ரிட்லி ஸ்காட் (Ridley Scott) அனைவரும் அடிப்படையில் ஓவியர்கள். அமெரிக்காவில் புகழ்பெற்ற இயக்குனர்களான ஜார்ஜ் லூகாஸ் (George Lucas) மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) காமிக்ஸின் அடிமைகளாக இருந்தனர். 1970களில் சினிமா, காமிக்ஸ், அனிமேஷன், டிஜிட்டல் எபெக்ட்ஸ் துறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒருங்கிணைக்கப்பட்டதற்கு இவ்வகையான பங்களிப்பே காரணம்.

அமர் சித்ர கதா போன்ற முன்னெடுப்புகள் ஏன் தொடர்ந்து நடைபெறவில்லை?
இந்தியாவில் அமர் சித்ர கதாவிற்கு முன்னரே இந்திரஜால் காமிக்ஸின் முகமூடி படித்த நினைவிருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும் வயதில் என் தந்தை வாங்கிக் கொடுத்தார். முதல் இதழிலிருந்தே வாசித்திருக்கிறேன். நான் இளம் வயதிலேயே மேற்கத்தியக் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்து வளர்ந்தவன். அமெரிக்காவின் கிளாசிக்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (Classics Illustrated) இதழ் உலகின் மாபெரும் இலக்கியங்களைக் காமிக்ஸ் புத்தகமாக்கியிருக்கிறது. மேலும், அந்த வயதிலேயே எச்.ஜி.வெல்ஸ் (HG Wells) எழுதிய டைம் மெஷின் கதையை சினிமாவாக, அனிமேஷன் படமாக, ஸ்டாப் மோஷன்(stop motion) படமாகப் பார்த்திருக்கிறேன். கிளாசிக் இல்லஸ்ட்ரேட்டட் இதழில் காமிக்ஸ் வடிவிலும் பார்த்திருக்கிறேன். டார்ஜான் காமிக்ஸ் வரைந்த பர்ன் ஹோகார்த் (Burne Hogarth), அலெக்ஸ் ரேமண்ட் (Alex Raymond), ஹால் ஃபாஸ்டர் (Hal Foster) போன்ற மாபெரும் கலைஞர்கள் காமிக்ஸ் வடிவத்தை முன்னெடுத்தவர்கள். இவர்களுக்குப் பின்னர் வந்தவரான வால்லி வுட் (Wally Wood) போன்று இன்னும் பல கலைஞர்களும் இருக்கிறார்கள்.
ஓவியக் கல்லூரியில் நவீன ஓவியம் சார்ந்து எனக்குக் கிடைத்த அறிமுகத்துடன், ஃபிராங்க் ஃபிரசிட்டா (Frank Frazetta) போன்ற கலைஞர்களின் ஓவியங்களும் அறிமுகமாகின. ஸ்டோரி போர்ட், சினிமா, சினிமா செட், மிகுபுனைவு, ரே ஹேர்ரியின் ஸ்டாப் மோஷன் திரைப்படங்கள் இவை அனைத்திற்குள்ளும் இருப்பது காமிக்ஸ். ஆகவே காமிக்ஸ் வடிவத்தை ஒரு தனித்த கலை வடிவமாகப் பார்க்கக் கூடாது. ஒரு காட்சியைக் கட்டம் கட்டமாக நகர்த்துவதுதான் காமிக்ஸின் அடிப்படை. இது சினிமாவில் அதன் முன் வடிவமான ஸ்டோரி போர்டாக மாறுகிறது. ஸ்டோரி போர்ட் கிட்டத்தட்ட ஒரு காமிக்ஸ் புத்தகம்தான், ஒரு குறிப்பிட்ட உபயோகம் கொண்ட காமிக்ஸ் புத்தகம். செயல் வடிவம் ஆக்குவதற்கு முன்பிருக்கும் ஒரு வடிவம். திரைப்படத்தை எடுத்து முடித்தவுடன் ஸ்டோரி போர்ட் தன் சக்தியை இழந்துவிடுகிறது. ஆனால் இன்று உலகம் முழுவதிலும் மிகப்பெரிய கலைஞர்கள் வரைந்த ஸ்டோரி போர்டும் கலைப்படைப்புகளாகக் கருதப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் அமர் சித்ர கதா இந்திய காமிக்ஸ் வடிவத்தில் ஓர் ஆரம்பப் புள்ளிதான். அது கட்டம் கட்டமாக வரையப்பட்ட தனித்தனிச் சித்திரங்களாகவே இருக்கிறது. படங்களுக்குள் செயல் தொடர்பிருக்காது. அப்படியான ஓர் ஆரம்ப கால முயற்சிதான் அமர் சித்ர கதா. பின்னாளில் வந்த காமிக்ஸ் ஓவியர்கள் கதை சொல்லப்படும் காலம், சட்டக அமைப்புமுறை ஆகியவற்றில் பல பரிசோதனைகளைச் செய்துள்ளனர். அமர் சித்ர கதா இந்தியக் காலண்டர் ஓவியங்களைப் போல நமது வரலாற்று மற்றும் மரபார்ந்த கதைகளைச் சொன்னதே ஒழிய, பெரும் முயற்சிகளைச் செய்யவில்லை. பெரும்பாலும் மதம் சார்ந்த தொன்மங்களையே சொல்லி வந்தது. சிறுவயதிலேயே வெவ்வேறு காமிக்ஸ் புத்தகங்களின் அறிமுகம் கிடைத்துவிட்டதால் அமர் சித்ர கதா என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை.
தமிழில் மரபுசார்ந்த கதைகள் காமிக்ஸ் புத்தகங்களாக வெளிவர வாய்ப்புள்ளதா?
தமிழ்நாட்டில் மட்டும் என்றில்லை, இந்தியா முழுவதுமே காமிக்ஸ் புத்தகம் சிறுவர்களுக்கானது என்னும் பொதுக் கருத்து நிலவுகிறது. வளர்ந்தவர்கள் காமிக்ஸ் புத்தகம் படித்தால், அவர்களை இன்னும் வளராதவர்கள் என்று நினைக்கும் சூழல் இங்குண்டு. என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு முட்டாள்தனமான பார்வை. இதுவே தமிழில் காமிக்ஸ் வெளியாவதற்கான மிகப் பெரியத் தடையாக உள்ளது. வார்த்தைகளைப் படிப்பது போலவே ஒரு சித்திரத்தை எவ்வாறு படிப்பது, எப்படி அணுகுவது என்ற பயிற்சி தமிழ்நாட்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஒரு போதும் இருந்ததில்லை. நல்ல சித்திரங்களைக் கொண்ட பாடப் புத்தகங்களும்கூட இங்கிருந்ததில்லை.
உலகம் முழுதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கான பாடத் திட்டத்தை வகுக்கும் பணியின்போது, ஐரோப்பிய நாடுகளின் பாடப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் சித்திரங்களுக்குத்தான் முதலிடம் இருக்கிறது. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தற்போது படிக்கும் குழந்தைகள் திப்பு சுல்தானின் வாழ்க்கையைச் சொற்களாகப் படிக்கிறார்கள். திப்புவின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் 2000 ஓவியங்கள் இருக்கின்றன. கற்பனையாகவும், சம்பவங்களைக் கேட்டு, பார்த்து எழுதப்பட்ட காலனித்துவ ஆட்சி காலத்து நூல்களிலிருந்து உந்துதல் பெற்றும் பல கலைஞர்கள் வரைந்திருக்கிறார்கள். திப்பு உயிருடன் இருந்த காலத்திலேயே தாமஸ் டேனியல் (Thomas Daniell) மற்றும் வில்லியம் டேனியல் (William Daniell) ஆகியோர் இந்தியா முழுதும் பயணம் செய்து வரைந்த ஓவியங்கள் எதுவும் நமது பாடப் புத்தகங்களில் இல்லை. அப்படியான ஒரு பழக்கமே நமக்கில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
தமிழ்ப் பாடப் புத்தகங்கள் அனைத்தும் சித்திரங்களுடன் இருக்க வேண்டும் என்பதைப் பாடத் திட்ட ஆலோசனைக் குழுவிற்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பிரெஞ்சு மக்களையும் ஜப்பானிய மக்களையும் ஏன் காமிக்ஸ் புத்தகங்களுக்கு அடிமை எனச் சொல்கிறேன் என்றால், காட்சி ஊடகத்தில் தேர்ச்சிபெற்ற சமூகமாக இருக்கிறார்கள். உலகம் முழுதும் வளர்ச்சி பெற்ற சமூகமானது மொழியையும் தாண்டி, சொற்களே அற்ற காண்பியல் மொழியில்தான் உரையாடுகிறது. இனிமேல் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் இவ்வாறே நிகழும்.

ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எப்படித் தயார் செய்வது? ஒரு கிராபிக் நாவலை எப்படி உருவாக்குவது? ஓர் ஓவியர் தனித்தோ அல்லது எழுத்தாளருடன் இணைந்தோ இயங்குவதற்கான அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் பட்சத்தில்தான் தமிழ்ச் சமூகம் தங்களுடைய வரலாற்றையும், வாழ்வையும் உலக மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். நமது கலாசாரத்தைப் படித்து மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்கிற நிலை மாற வேண்டும். அவற்றைக் காட்சிரூபமாக்கும்போது, தற்செயலாக அதைக் கடந்து செல்பவருக்கும்கூட இச்சமூகத்தின் வாழ்வு, நெறி, மரபு பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜப்பானைப் போலவே, இங்கும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காண்பியல் கலை தனிப் பாடப் பிரிவாக்கப்பட வேண்டும். அதற்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். பொறியியல், மருத்துவம் போன்ற மற்ற துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் காண்பியல் சார்ந்த அறிமுகம் இருக்க வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இது நிகழ்வதற்குப் பாடத்திட்ட ஆலோசனைக் குழு முயற்சிகள் எடுக்கும் என நம்புகிறேன்.
ஜப்பானுக்கே உரிய காமிக்ஸ் வடிவமாக மாங்கா இருப்பதைப் போன்று தமிழுக்கே உரிய காட்சி வடிவமாக ஏதேனும் உருவாகியுள்ளதா?

அப்படித் தனித்து எதுவும் இல்லைதான். நம் சுவரோவிய உத்தியுடன் மேற்கத்திய மற்றும் மாங்கா பாணிகளினூடே நாம் கண்டடைய வேண்டும். அது நடக்கும் என்றே நம்புகிறேன்.
மாங்கா ஜப்பானுக்கே உரிய காமிக்ஸ் வடிவம்தான். உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஜப்பானில் புத்தகங்களைப் பின் பக்கத்திலிருந்து முன் பக்கமாகப் படிக்கிறார்கள். மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இவை தனித்துவமாக இருக்கின்றன. கதையைக் காட்சிகளாக முன்னகர்த்தும் பாணியில் பல்வேறு வகையில் நம்மிலிருந்து மாறுபட்டவர்கள் ஜப்பானியர்கள். கடந்த 20 ஆண்டுகளில் ஐரோப்பா அமெரிக்கா உள்ளிட்ட பல நாட்டுக் கலைஞர்களிடம் மாங்கா காமிக்ஸ் வடிவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலனித்துவ ஆட்சியின்போது ஸ்பானியக் கட்டுப்பாட்டில் இருந்த சில ஆசியப் பகுதிகளில், குறிப்பாக மணிலாவில், ஸ்பெயின் நாட்டுக் கலைஞர்கள் தொடங்கிய கல்விக் கூடங்களின் வழியாகக் காண்பியல் அறிமுகம் பெருகியது. அங்கு ஒரு பாரம்பரியம் தோன்றி, ஸ்பெயினுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் கலைப் பரிமாற்றம் நிகழ்ந்தது. ஸ்பெயினிலிருந்து அது இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பரவியது. பிறகு இக்கலைஞர்கள் அமெரிக்கா சென்று இயங்கும்போது இந்தக் கூறுகள் உலகம் முழுதும் பரவின. உதாரணத்திற்கு Bambi என்கிற அனிமேஷன் திரைப்படம். அக்கதையில் வரும் காடு வரையப்பட்டிருக்கும் விதம் இன்றளவும் பேசப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த டைரஸ் வாங்க் (Tyrus Wong) என்கிற கலைஞரின் தூரிகையே இதற்குக் காரணம் என்று படித்திருக்கிறேன். இவர் சமீபத்தில் தனது 106வது வயதில் மறைந்தார்.
அறிவியல் புனைவு மிகு புனைவு மட்டுமே காமிக்ஸ் வடிவத்தில் சொல்லப்படுகின்றனவா அல்லது எதார்த்தக் கதைகளுக்கும் இடமுள்ளதா?
காமிக்ஸ் வடிவம் எதார்த்தக் கதைகளையும் சொல்லியதுண்டு. சமகாலத்தில் ஈரான் ஈராக் நாடுகளில் நடந்த போரைப் பின்புலமாகக்கொண்ட கதைகளை அனிமேஷன் திரைப்படங்களாகச் செய்துள்ளனர். பிரான்ஸில் கடந்த 200 ஆண்டுகளில் நடந்த அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சியைப் பின்புலமாகக்கொண்ட வரலாற்று நிகழ்வுகளைக் காமிக்ஸ் புத்தகங்களாக்கியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இது போன்ற பல முயற்சிகள் நிகழ்ந்துள்ளன.
அறிவியல் புனைவுகள் ஆரம்பத்திலிருந்து காமிக்ஸ் வடிவத்தில் வந்துள்ளன. நான் முன்பு டைம் மெஷின் புத்தகத்தைக் குறிப்பிட்டிருந்தேன். சமகாலத்தில் இருக்கும் கண்டுபிடிப்புகளையும் இயந்திரப் பின்னணியில் நிகழும் மாற்றங்களையும் காமிக்ஸ் புத்தகங்களில் காட்சியாகப் படிக்கலாம். சமகாலத்து அரசியல் நிலைப்பாடுகளைச் சொல்லும் காமிக்ஸ் புத்தகங்களும் கிராபிக் நாவல்களும் இருக்கின்றன. Barefoot Gen, Persepolis, Pride of Baghdad ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நீல் கெய்மன் (Neil Gaiman) மற்றும் டேவ் மேக்கீன் (Dave McKean) கடந்த 30 ஆண்டுகளில் காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல் துறைகளில் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கின்றனர். நான் சமீபத்தில் நியூயார்க் சென்றபோது கூட, அங்குள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்வதைவிட ஃபோர்பிடன் பிளேனட் (Forbidden Planet – காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்கள் விற்கும் கடை) சென்று காணத்தான் ஆசைப்பட்டேன்.
நான் அடிக்கடி ஓர் உதாரணம் சொல்வதுண்டு. ஓவியர் மணியத்தின் சித்திரங்கள் இல்லையென்றால் கல்கியின் கதை வெறும் பஞ்சாங்கம்தான். ஆனால் மணியத்தை முன்னிறுத்தி யாரும் பேசுவதே இல்லை. அவரது ஓவியங்களில் பார்ஸி நாடகங்களின் தன்மையும் சினிமாத்தன்மையும் காணப்பட்டன. வரலாற்றுச் சித்தரிப்புகளில் இந்த மராத்தியத் தன்மையே ஒரு பொதுப் படிமமாக இருந்து வருகிறது. அதை மாற்றும் முயற்சியாக, ஒரு மூலத் தமிழ்த்தன்மை கொண்ட படிமத்தை உருவாக்கும் எண்ணத்தில் நான் சிலவற்றைச் செய்திருக்கிறேன். குறிப்பாக, தேவதை திரைப்படம் ஒரு முதன்மையான முயற்சி. (தேவதை நாஸர் இயக்கத்தில் 1997இல் வெளியான திரைப்படம். டிராட்ஸ்கி மருது இப்படத்திற்கு கலை வடிவமைப்பு செய்தார்.) வரலாற்றுத் திரைப்படங்கள் சம்மந்தப்பட்ட விவாதங்களில் இன்றும் தேவதையின் எதிரொலி கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
தமிழில் முக்கியமான பன்முகத் திறன்கள்கொண்ட கலைஞர்களாக (multi-disciplinary artists) யாரைக் குறிப்பிடுவீர்கள்? உங்கள் பார்வையில் தற்கால ஓவியக் கலைஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் யார்?

தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல், இந்தியா முழுதுமாகத்தான் என்னால் இக்கேள்விக்குப் பதிலளிக்க முடியும். ஐந்து ஆண்டு ஓவியப் படிப்பில் சிற்பங்கள், விளம்பரத்துறை, ஓவியங்கள் போன்ற ஏதேனும் ஒன்றில் தனித்திறன் பெறத் தேர்வு செய்துகொள்ளலாம். அவ்வாறு பயிற்சி பெற்று வந்தவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். வட இந்தியாவில், குறிப்பாக, வங்காளக் கலைஞர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் கணேஷ் பைன் (Ganesh Pyne). நவீனமும் வங்க அடையாளமும் கலந்த வடிவம் என்பதால் அவர் என்னைக் கவர்ந்தவராவார். சுனில் தாஸையும் (Sunil Das) சொல்லலாம். காமிக்ஸ் புத்தகங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவில் பெருமளவிலான முயற்சிகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
எனக்குத் தெரிந்து தமிழில் பன்முகத் திறன்கொண்ட கலைஞர்களாக யாரும் பயிற்சி பெறவில்லை. நான் பயிற்சி பெற்ற அளவிற்கு, எனது பரிசோதனை முயற்சிகளின் அளவிற்கு, சமகால ஓவியர்கள் யாரும் செய்யவில்லை என்பதை நான் தைரியமாகவும் திமிராகவும் சொல்வேன். எனக்கு வெகுஜன ஓவியங்கள் மீது எந்த வெறுப்பும் கிடையாது. நான் அவற்றை வரலாற்றுக் கோணத்திலிருந்து பார்க்கிறேன். மக்களின் எண்ணங்களை அவை பிரதிபலிக்கின்றன. மேலும் தீவிரக் கலை வெகுஜனக் கலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெகுஜனக் கலையும் தீவிரக் கலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போது இந்தப் பாகுபாடுகள் அனைத்தையும் இணையம் அழித்துவிட்டது. நடுவில் இருந்த சுவர்களையெல்லாம் தகர்த்துவிட்டது.
காமிக்ஸ் ஓவியர்கள் சிறந்த ஓவியர்களாக மதிக்கப்படாத காலகட்டமும் இருந்தது. என் ஓவியக் கல்லூரியிலேயே மூத்த ஆசிரியர்கள் சிலர் அக்கருத்தைக் கொண்டிருந்தனர். உலகமே 1960களுக்கு முன் காமிக்ஸ் ஓவியர்களை மதிக்கவில்லை. ஆனால் இன்று அந்த நிலை கிடையாது. ஹால் ஃபாஸ்டர், பர்ன் ஹோகார்த், ஃபிரசிட்டா, அலெக்ஸ் ரேமண்ட், செஸ்டர் கோல்ட் (Chester Gould) போன்ற கலைஞர்களின் பங்களிப்பை எவரும் மறுத்துவிட முடியாது. இவர்களின் படைப்புகளில் சினிமாவின் தாக்கம் இருந்துள்ளது. திரைப்படக் கலைஞர்களும் இவர்களின் கதை சொல்லும் முறைகளை உள்வாங்கிக்கொண்டனர். இவர்கள் நவீன ஓவியர்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் இல்லை. “நான் என் வாழ்வில் காமிக்ஸ் புத்தகம் உருவாக்காமல் போய்விட்டேனே!” என்று பிக்காஸோவும் சொல்லியிருக்கிறார்.
அமெரிக்காவில் இருந்த மில்டன் கிலேசர் (Milton Glaser) போன்ற graphic designers, ரே ஹாரி, வால்ட் டிஸ்னி (Walt Disney), ஐரோப்பாவில் கிளாஸிக் காலத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் இருந்த நவீன ஓவியர்கள், ஜான் லெனிக்கா (Jan Lenica), ஹேன்ஸ் ஈடல்மேன் (Heinz Edelmann) போன்ற சில ஜெர்மானியக் கலைஞர்கள், போலாந்து கலைஞர்கள், கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்து வந்த கலைஞர்கள், இவர்கள் அனைவரும் ஓவியம், அனிமேஷன், graphic design போன்ற பல்வேறு துறைகளில் இயங்கியுள்ளனர். இவர்கள் பொம்மைகள், நாடக வடிவமைப்பு, புத்தக அட்டை, போஸ்டர், ஆடை வடிவமைப்புகூடச் செய்துள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் கலை வடிவங்களும் ஊடகங்களும் இணைந்து செயலாற்றும் களம் உருவாகிவிட்டது.
எனது ஓவியக் கல்லூரி காலத்திலிருந்தே நான் பல்துறைக் கலைஞனாக இருக்க வேண்டும் என நினைத்தேன். வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களும், ரே ஹாரியின் மிகுபுனைவு திரைப்படங்களும், வில் ஐஸ்னரின் (Will Eisner) காமிக்ஸ் ஓவியங்களும் என்னைப் பெரிதும் பாதித்தன. அதனால்தான் 1970களில் ஸ்டார் வார்ஸ் வெளியான காலகட்டத்தில் இது உலகையே மாற்றப்போகும் சினிமா என்று என் ஓவியக் கல்லூரி நண்பர்களிடம் சொன்னேன். காமிக்ஸ் வடிவத்தின் மீதான மோகத்தால் இப்படிச் சொல்வதாக எண்ணினார்கள். உண்மையில், போட்டோஷாப் (Photoshop) போன்ற பல டிஜிட்டல் மென்பொருட்கள், புழக்கத்தில் உள்ள மிகப் பெரிய சாதனங்கள் எல்லாம் உருவாவதற்குப் பின்னணியில் ஸ்டார் வார்ஸ் திரைப்பட உருவாக்கத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் இருந்துள்ளனர்.
இனி வரப்போகும் கலைஞர்களுக்குக் கையால் ஓவியத்தை வரையும் தகுதியும், கலைஞர்களுக்கென்றே இருக்க வேண்டிய கலை ஒழுக்கமும், கணினியின் பயன்பாட்டு ஞானமும், 3டி அனிமேஷன் உருவாக்கும் மென்பொருள், Photoshop, சினிமாவில் composit செய்வதற்கான மென்பொருட்களைப் பயன்படுத்தும் திறமையும் இருத்தல் அவசியம். வீடியோ எடிட் செய்யும் திறமையும் தேவை. இன்று கைபேசியிலேயே வீடியோ எடிட்டிங் செய்யலாம். நான் சொல்லும் இம்மூன்று கலை வடிவங்களிலும் இயங்கும் தகுதி கொண்டவர்களே இனி முன்னணிக் கலைஞர்களாகக் கருதப்படுவார்கள். நான் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறேன் — நான் இன்று எப்படிப் பன்முகத் திறன் கொண்டவனாக இருக்கிறேனோ, அது போலத்தான் இனி 20-30 ஆண்டுகள் கழித்து வரும் கலைஞர்கள் இருப்பார்கள் என நம்புகிறேன்.

எழுத்தாளர்களும் ஓவியர்களும் இணைந்து எம்மாதிரியான கூட்டு முயற்சிகளைச் செய்யலாம்?
தமிழகத்தில் எழுத்தாளர்கள் கூட்டு முயற்சிகள் செய்வதற்கு முன் வருவதில்லை. ஓவியர்கள் எழுத்துக்குப் பக்க வாத்தியமாக இயங்க வேண்டும் என்பதே எழுத்தாளர்களின் மனநிலை. பத்திரிக்கைகளின் மனநிலையும் இதுதான். இதில் மாற்றம் உண்டாகும்போது கூட்டுமுயற்சிக்கான மனநிலை உண்டாகும். என்னுடன் வேலை செய்த பல எழுத்தாளர்களைக் கவனித்திருக்கிறேன். சிலர் தனக்குக் கிடைத்திருக்கும் மேடையைப் பாதி அபகரிக்க வருபவர்களாகவே ஓவியர்களைப் பார்க்கிறார்கள்.
பத்திரிக்கைகளுக்கு வரையும்போது, நான் கதையில் இல்லாததைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன். நான் தனி ஓவியராக இருந்ததால், நான் முன்னரே வரைந்ததைச் சில கதைகளுடன் இணைத்திருக்கிறேன். தமிழ்நாட்டுப் பத்திரிக்கைச் சூழலில் இப்பழக்கத்தை நான் ஏற்படுத்தினேன். அதற்கு முன்னால், பத்திரிக்கைகளுக்கு வரைபவர்கள், ஏதேனும் ஒரு சம்பவத்தை மட்டுமே வரைவார்கள். சில நவீன ஓவியர்கள் பத்திரிக்கைகளுக்கு வரைவது கேவலமான செயல் என்பதாகப் பேசி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். அது அப்படி அல்ல. பத்திரிக்கைத் துறைக்கு வருவது பொதுவெளிக்கு வருவதாகும். தகுதியும் திறமையும் இல்லாமல் இது நிகழாது. கோட்பாடுகளின்படி வரையத் தெரிந்திருக்க வேண்டும். உள்ளதை உள்ளபடி வரைய வேண்டும். ஓவியங்களை வரைய இரண்டு முறைகள் உள்ளன – கோட்பாடுகளின்படி வரைதல், சிதைத்து வரைதல். நான் பத்திரிக்கைகளுக்கு வரைய ஆரம்பித்த காலகட்டத்தில், வரையத் தெரியாதவர்கள்தான் நவீன ஓவியங்கள் வரைகிறார்கள் என்ற கருத்து இருந்தது. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நானே ஒரு கதைக்குச் சிதைந்த ஓவியம் வரைவேன், இன்னொரு கதைக்குக் கோட்பாட்டின்படி சீராகவும் வரைவேன்.
காட்சி ஊடகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?
இனி வரும் காலங்களில் 5000 பக்கங்களுக்கு மேல் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆகையால் காட்சிப்படுத்தித்தானாக வேண்டும். ஒரு மொழியில் எழுதுவதை இன்னொரு மொழிக்குக் கொண்டுசேர்க்கும் பணியை மென்பொருள் எளிதாக்கிவிட்டது. ஆகவே மொழி தெரியாத இடத்திற்குச் செல்வது கடினமான விஷயமல்ல. ஆனாலும் காட்சிரூபமாக இல்லாத பட்சத்தில் இனிமேல் நீங்கள் இன்னொரு சமூகத்துடன் உரையாடவே முடியாது. தமிழ்ச் சமூகம் தன்னுடைய கலாசாரத்தை, செழிப்பை, கடந்த காலத்தை, காட்சி வடிவில் மாற்றுவதன் மூலமாக உலக மக்களோடு தன்னை இணைத்துக்கொண்டு இன்னும் தமிழுக்குச் சிறப்பும் உயர்வும் தேடித்தர வேண்டும் என்பது என் எண்ணம். அது நடக்கும் என்றும் நம்புகிறேன். அந்த வகையில் காண்பியல் கலைஞர்கள்தான் இனி மிகவும் முக்கியமானவர்கள். அதிலும் தமிழின் தொன்மை அறிந்து, அதன் சிறப்புக்காகச் செயல்படும் இளம் கலைஞர்களே தேவை. இனிவரும் காலங்களில் அறிவுத்துடிப்பு மற்றும் புத்தாக்கத்துடன் எழுதுபவரும், காட்சி ரூபமாகச் சிந்திப்பவரும் இணைந்து செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியம். அவ்வகையில் தனித்த ஓவியத்தை, தனித்த எழுத்தைத் தாண்டி — கிராபிக் நாவல், அனிமேஷன், சினிமா — இவை மூன்றையும் மிகவும் முக்கியமான வடிவங்களாகத் தமிழ்ச் சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
காண்பியல் கலைகளைப் பற்றி டிராட்ஸ்கி மருது அரூ குழுவினருடன் தொடர்ந்து உரையாடவிருக்கிறார். காண்பியல் கலைகள் தொடர்பான கேள்விகள் இருந்தால் aroomagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
Congrats Marudu Sir….
Very informative intervew, I’m very happy to understand you more after going thru the above article
God Bless you with many Laurels
Dear Sir
It is so interesting like your drawing. I shall meet at your place if you don’t mind.
Pls. Reply or call me
Thank you
Dr.Gopal Jayaraman
Artist,
Regional Director
IGNCA
Puducherry.
9944615164