உணர்வுகளின் சீர்மை

3 நிமிட வாசிப்பு

க.அரவிந்த் எழுதிய சீர்மை குறுநாவல் குறித்தான பார்வை

சீர்மை குறுநாவலை முதலில் வாசித்தபோது அடைந்த கலவையான உணர்வுகளையே மறுவாசிப்பிலும் உணர்ந்தேன். தத்துவார்த்த அறிவுத்துறைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் ஒரு லட்சியவாதத்தின் பின்புலத்தில் கென் வில்பர் என்ற ஆளுமையைக் குறித்தும் கீழைத்தேய சிந்தனைகளை உள்வாங்கியிருந்த அவருடைய பணித்திட்டம் குறித்துமான ஓர் அறிமுகத்தைத் தமிழ் வாசகர்களுக்குச் செய்ததோடு வாழ்க்கையின் விண்டெடுத்த ஒரு சிறிய கீற்றைத் தெளிவாக வரைந்து காட்டியதையும் இந்தக் குறுநாவலின் முக்கியமான அம்சங்களாகச் சொல்லலாம்.

மேற்கத்திய உளவியலையும் கிழக்கத்திய மெய்யியலையும் இணைத்து வேலை செய்த வில்பருக்கு ஒன்றுக்கொன்று சிதறுண்டு கிடக்கும் அறிவுத்துறைகளுக்குள் ஓர் ஒழுங்கமைவை ஸ்தாபித்து அவற்றுள் இயங்கும் சீர்மையைக் கண்டவறிதே நோக்கமாக இருந்திருக்கிறது. ஒரே உருவரைக்குள் கொண்டுவரும் மாபெரும் திட்டம். அதற்காக அவர் உருவாக்கிய ஒருங்கிணைவுக் கோட்பாட்டின் அடிப்படைக் கட்டமைப்பாக AQAL (All Quadrants All Levels) அமைந்திருக்கிறது. இதைத் தமிழில் எளிமையாக ’ஒரு கட்டமைப்பின் அனைத்துப் பாகங்கள் மற்றும் அனைத்து நிலைகள்’ என்று சொல்லலாம். தன்னளவில் முழுமையாக இருக்கிற அதே தருணத்தில் வரிசைக்கிரமமான இன்னொரு முழுமையின் அங்கமாகவும் அமைந்திருக்கிற பொருட்களும் கருத்துகளுமாய் ஹோலான்களாக (Holan’s) இருக்கின்றன. இதுவே AQAL கட்டமைப்பின் அடிப்படை அலகாக இருக்கிறது.

மேற்கத்தியக் கல்விப்புலம் வில்பரின் ஒருங்கிணைவுக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகத் தெரிகிறது. கல்விப்புலத்திற்கு வெளியேயும் அதைப் பற்றிய விமர்சனங்கள் இருப்பதைப் பல இணையக் கட்டுரைகளின் வழியே அறிய முடிகிறது. எது எப்படியாயினும், தத்துவம் மற்றும் உளவியல் உள்ளிட்ட அறிவுத்துறை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வில்பரை முழுமையாக வாசித்துப் பார்ப்பது அத்துறைகள் சார்ந்த அறிமுகத்திற்கோ அல்லது மாற்றுக் கோணங்களைப் புரிந்துகொள்ளவோ உதவக்கூடும். இங்கே ஓர் இலக்கிய வாசகராக நாம் சீர்மையில் பார்க்க வேண்டியது அது சொல்லும் வாழ்க்கையைத்தான்.

விஷயங்களைக் கிரகிக்கும் திறனின் அடிப்படையில் வில்பர் கருவிலேயே திரு உடையவராகத்தான் தெரிகிறார். மேலும் சிறுவயதின் தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் வழக்கத்திலிருந்து விலகியவராக அவரை வடிவமைத்திருக்கின்றன. தீவிரமான வாசிப்பு, தாவோ தேஜிங், அரவிந்தர் என்று கீழைத்தேய மெய்யியல் சார்ந்த சிந்தனைப் பாதிப்புகள் என வில்பரின் சுருக்கமான பின்புல விவரிப்போடு மிகப் பிரதானமாக வில்பரின் வாழ்க்கைக்குள் த்ரேயாவின் இருப்பையும் மறைவையும் சீர்மை பேசுகிறது. தனக்கு நிகழ்ந்த துயரத்தின் வீச்சினால் தன்னுடைய மாபெரும் லட்சியத்தினை இழந்துவிடாமல் மேலெழுந்த வில்பரின் மனம்தான் இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன.

ஓளிமிக்கதாய்த் தொடங்கும் வில்பர் மற்றும் த்ரேயா தம்பதிகளின் திருமண வாழ்க்கை த்ரேயாவின் புற்றுநோயால் இருளடைகிறது. மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோயின் தொடர் தாக்குதலால் த்ரேயாவுக்கும் வில்பருக்கும் ஏற்படும் தொடர்ச்சியான மனநிலை ஊசலாட்டங்களும் (Mood Swings) அன்பின் உள்ளுறைந்த வன்முறையின் வழியே வலியை வெளியேற்ற அல்லது பகிர்ந்துகொள்ள முயலும் எத்தனிப்புகளும் மிக நுட்பமாக சீர்மையில் சொல்லப்பட்டிருக்கின்றன. பிறகு, உக்கிரங்களின் பின்பருவமான தணிதலை நோக்கிய பயணத்தில் த்ரேயாவின் மறைவிற்குப்பின் அவளுடைய கண்ணாடி ஓவியங்களின் வழியே சீர்மையை நோக்கிய வில்பரின் பயணம் தொடங்குகிறது.

நோய்மையின் முன்னான கையறுநிலை மனிதர்களை மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிச் செலுத்திவிடுகிறது. த்ரேயாவின் நோயிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் வில்பர் அடையுமிடம் குடியும் போதையுமாக இருக்கிறது. மரணத்தைக் குறித்த நம் மறதியில்தான் வாழ்க்கையின் நோக்கங்களும் இலக்குகளும் ஒளிர்ந்து துலங்குகின்றன. வாழ்க்கையின் அர்த்தங்களைக் குலைப்பதே நோய்மையின் முதல் தாக்குதலாக இருக்கிறது. த்ரேயாவின் நோய்க்கும் வாதைக்கும் சாட்சியாய் நின்று ஊழை அனுபவித்த வில்பருக்கு த்ரேயாவே பெரிய மீட்சியாகவும் அமைந்துவிடுகிறாள். சாதாரண மனிதர்கள் துயரங்களிலிருந்து மீண்டெழுவதே பெரிய ஆன்மிக அனுபவம்தான். வில்பரைப் போன்ற ‘அதிமனிதர்கள்’ அதை வேறொருவிதமான மெய்யியல் அனுபவமாக மாற்றுகிறார்கள்.

வாசக நனவிலியில் கென் வில்பரும் த்ரேயாவும் கதாப்பாத்திரங்கள் என்பதைவிட இயல்வாழ்க்கையின் நிஜமான மனிதர்களாகவே பதிகிறார்கள். சீர்மையில் ஒரு டைரிக்குறிப்பின் தொனி இருப்பதே இந்தத் தன்மைக்குக் காரணமாக யூகிக்கலாம். இருந்தபோதும் நாவலின் முக்கியமான மையமாகச் சொல்லத்தக்க த்ரேயாவின் புற்றுநோயும் அதன் தொடர்நிகழ்வுகளும் புனைவின் வலுவான நாடகீயத் தன்மையோடு (dramatic) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முரணே எனக்கு ஏற்பட்ட கலவையான உணர்வுகளுக்குக் காரணம். புறவயத்தில் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமில்லாத வாழ்க்கையையும் விஷயங்களையும் பேசினாலும் சீர்மை குறுநாவலுக்குள் உள்ளுறைந்திருப்பது உலகின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான உணர்வுகளின் பிசிரற்ற சீர்மை.

 

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்