Categories: கட்டுரை

வரலாற்றின் திசைவழிகளில் நீளும் கோணங்கியின் த

7 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் கோணங்கியின் நேர்காணலுடன் அவரது படைப்புகள் பற்றிய சில கட்டுரைகளையும் வெளியிடுவதன் மூலம் அவரது படைப்புலகம் குறித்தான ஒரு நிறைவான சித்திரத்தை அளிக்க முடியும் என்கிற முனைப்புடன் இவற்றைப் பிரசுரிக்கிறோம்.


தமிழ் புனைவிலக்கியத்தில் ஒரு புராணீகமாக நம்பப்படும் கோணங்கியின் எழுத்துகளின் புரியாமை குறித்த சில அடிப்படைக் கேள்விகளுக்கான விடைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகவும் அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரிகின்றன என்ற பாவனையோ அல்லது எள்ளளவும் புரியப் போவதில்லை என்ற முன்னூகமோ இல்லாமல் பிரதி முன்வைக்கும் சவாலை எதிர்கொள்ள முயலும் வாசகன் ஒருவனின் குறிப்புகளாகவும் கோணங்கியின் த நாவல் குறித்த இக்கட்டுரை அமைகிறது.

த நீளும் நிலப்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்னர் கோணங்கியின் விவரிப்புமுறையைச் சற்றே அவதானிக்கலாம். யதார்த்தவகை எழுத்தை மறுதலிக்கும் கோணங்கி தன் விவரிப்பில் அவ்வகைப்பட்ட கதை சொல்லுதலின் அடிப்படையான அம்சமாக இருக்கும் கால ஒருங்கமைவையும் நேர்கோட்டுத் தன்மையையும் குலைத்துவிடுவதால் யதார்த்தவகை விவரிப்பில் கட்டியெழுப்பப்படும் முழுமையான காட்சி என்ற பண்பை அவரது எழுத்து வாசகருக்கு அளிக்காமல் அக்காட்சியின் ஒரு கோட்டுச்சித்திரத்தை மட்டுமே அளிக்கிறது. புறவயமான காட்சியை வெளிப்படையாக விவரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு அக்காட்சியை உருவாக்கும் மூலகப்பண்புகளின் வழியே அவர் விவரிப்பை நிகழ்த்துகிறார். அவருடைய மொழியிலேயே சொல்வதானால் இது அசேதனங்களைக் கைப்பற்றுதல். மிக நெடிய மரபும் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மொழியின் சொல்வளங்களில் சிறந்த பயிற்சி கொண்டவராகக் கோணங்கி இருப்பது அவருடைய இவ்வகையான விவரிப்புமுறைக்குத் துணை புரிகிறது. தொல்காப்பியம் தொட்டு நாளது வரையிலான தமிழ்க் கவிதையின் படிமங்கள் அவரது எழுத்தில் கரைபுரள்கின்றன. மேலும் வாசகனிடமும் அப்படிப்பட்ட ஒரு சொல்வளத்தை அவருடைய எழுத்து கோருகிறது. கவிதையறிந்த வாசகர் அவரை இன்னும் நெருக்கமாக அணுக முடியுமென்றே தோன்றுகிறது. ஆக அவரிடமிருந்து காட்சிக்குப் பதிலாக நாம் மொழியையே பெறுகிறோம்.

அசேதனங்களின் வழியாகவும் மூலகப்பண்புகளின் வழியாகவும் நிகழ்த்தப்படும் அவரது விவரிப்பு முழுக்கவும் அகவயமான சித்திரங்களைக் கொண்டதாக இருப்பதால் அவை எளிதில் நம் நினைவில் தங்குவதில்லை. பிரதியினுள் வாசகன் முன்னகர நகர பிரதி வாசக நினைவிலிருந்து தன்னை அழித்துக்கொண்டு மீள்வாசிப்பைக் கோருகிறது. மீள்வாசிப்புச் செயல்பாட்டில் அது தன்னை முற்றிலும் வேறொன்றாகப் புதுப்பித்துக்கொண்டு முந்தையதிலிருந்து வேறுபட்ட இன்னொரு புதிய கோட்டுச்சித்திரத்தை அளிக்கிறது. அவருடைய விவரிப்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்சியாக விளங்கிக்கொள்ளுதல் என்பது ஒரு பெரும் விருட்சத்தினுடைய சல்லிவேர்களை எண்ண முயலும் செயலுக்கு ஒப்பாகும். அப்படியானால் கோணங்கியின் விவரிப்பு முறை நமக்குத் தரும் அனுபவம்தான் என்ன?

வாசிப்பினால் பெறப்படும் அனுபவம் சொற்களாகத் திரளாமல் எண்ணத்தின் லார்வா நிலையில் உள்ளுணர்வாய்த் துடிக்கும் உணர்ச்சிகளையே கோணங்கியை வாசிக்கும்போது நாம் பிரதானமாகப் பெறுகிறோம். அதுவே அவருடைய எழுத்து அளிக்கும் வாசிப்பின்பம். புனைவில் இயங்கும் யதார்த்தம் மற்றும் அனுபவத்தின் மீது வாசகரின் எதிர்வினையைத் தர்க்கத்தின் மூலமாக அல்லாமல் உள்ளுணர்வின் மூலம் கட்டியெழுப்பவதை Radical Plurality என்ற பின்னவீத்துவப் பண்பு பேசுகிறது. சொல்முறையில் த பிரதி இப்படிப்பட்ட பண்போடு இயங்குகையில் அதன் உள்ளடக்க ரீதியில் Palimpsest எனக் குறிப்பிடப்படும் அழித்தெழுதுதல் என்ற உத்தி ஒரு குறிப்பிட்ட சதவீத அளவில் இயங்கி வருவதையும் காண்கிறோம். தமிழ்ப்புனைவில் இவ்வகைப்பட்ட அழித்தெழுதுதலில் முன்னோடியாகத் தமிழவன் குறிப்பிடப்படுகிறார். ஆனால் மொழி வெளிப்பாட்டில் கோணங்கி தமிழவனிடமிருந்து மாறுபடுகிறார்.

அவருடைய விவரிப்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்சியாக விளங்கிக்கொள்ளுதல் என்பது ஒரு பெரும் விருட்சத்தினுடைய சல்லிவேர்களை எண்ண முயலும் செயலுக்கு ஒப்பாகும். அப்படியானால் கோணங்கியின் விவரிப்பு முறை நமக்குத் தரும் அனுபவம்தான் என்ன?

பிரதியை உள்ளுணர்வின் மூலம் அறிவதாக அல்லாமல் ஒரு கட்டுறுதியான வாசிப்பனுவத்தை எதிர்பார்க்கும் ஒரு வாசகர், பிரதியைத் திரும்பத் திரும்ப வாசித்து தமக்கான அகவயப் பிரதி ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இவ்வகையான விவரிப்பு முறை அவருடைய சிறுகதைகளுக்கு வீரியமான வகையில் பொருந்துகிறது என்று நம்புகிறேன். சற்றே முயன்றால் கட்டுறுதியான வாசிப்பனுபவத்தை அவருடைய சிறுகதைகளிலிருந்து உருவாக்கிவிடலாம். ஆனால் அவருடைய நாவல்களில் கட்டுறுதியான வாசிப்பனுபவத்தை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களும் சவால்களும் விவாதத்திற்குரியவையே.

ஒரான் பாமுக்கின் நாவல்களில் அவர் அதிகமாகப் பேசும் விஷயங்களில் ஒன்று இஸ்தான்புல் மற்றும் அந்நகர மனிதர்களுடைய மெலன்கலி. இந்த ஆங்கிலச் சொல்லை சி.மணி அவர்கள் சோர்வச்சம் என்று தமிழில் மொழிபெயர்த்திருப்பதாக ஓர் உரையாடலில் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தனிப்பட்ட முறையில் இச்சொல்லைத் துயரார்ந்த அமைதி என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். த வை வாசித்து முடிக்கும்போது அவ்வகையான உணர்ச்சியின் ஒரு மெல்லிய நிழலை உணர்ந்தேன். இப்பரந்த பூமியும் அதன் உயிரினங்களும் மனிதர்களும் தோன்றி வாழ்ந்து காலத்தினுள் மறைந்துபோகும் இடையறாத சகடச்சுழலின் ஒரு மெல்லிய மங்கலான காட்சி. இச்சுழலின் இடையில் நிகழும் மனித உணர்ச்சிகளின் இடையறாத தழுவல்கள்,மோதல்கள்,மன அவசங்கள். மனித இருப்பைப் பொறுத்தவரையில் காலம் ஒரு கண்ணாடிக் காமிரா. பதிவது மறைந்துவிடும். இந்தப் பேருணர்ச்சிகளைத் தாபங்களை, நடுக்கங்களை, மகிழ்ச்சிகளைக் கலையிடம் ஒப்புக்கொடுக்காமல் இருந்தால் கைகள் இரண்டும் திரும்பவும் முன்னங்கால்களாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. தூரத்தில் எரியும் சொக்கப்பனையிலிருந்து பறந்து அருகே வந்து அணைந்துபோகும் கங்குகளைப் போல த விலிருந்து பல உணர்வுகள் கிளைத்து மறைகின்றன.

உலகெங்கும் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்டு நிலத்தின் அந்நியமான பரப்புகளில் அடிமைகளாய், கூலிகளாய் முத்திரையிடப்பட்டுச் சுரண்டலுக்கு உள்ளாகி ப்ளேக் மலேரியா கொள்ளை நோய்களால் அடையாளமற்று மரித்துப்போன உயிர்கள் த வெங்கும் அலைகின்றன. தொன்மத்தை மட்டும் பேசும் பிரதியாக த சுருங்கிவிடாமல் உலமயமாக்கலுக்குப் பின்னர் வடகிழக்கிலிருந்தும் ஒதிஷா, பீகாரிலிருந்து தேசமெங்கும் கிளம்பி அலையும் உள்நாட்டு அகதிகளைக் குறித்தும் பழங்குடிகளின் வளத்தைச் சுரண்டும் பெருமுதலாளியத்துவ ஆதிக்கத்தைக் குறித்தும் த நம் கவனத்தைக் கோருகிறது.

த வின் பக்கங்களில் ஓயாத அலைகளோடு கடல் ததும்புகிறது. கடல்வாழ் உயிரினங்கள், கடற்தாவரங்கள், பூச்சிகள், புழுக்கள், தேவதைகள், வினோத உயிரினங்கள், தேவதைகள் போன்றவற்றைத் தொன்மத்தை ஊடுபாவாக்கிப் பேசுகிறது த. உடன் அது கடலோடு தங்கள் வாழ்வைப் பிணைத்துக்கொண்டு அதனோடே அழிந்துபோன மனிதர்களைப் பற்றியும் பேசுகிறது. ஒரு வகையில் த வை ஒரு கேட்டலாக் புஸ்தகம் எனலாம். மனித நாகரீகத்தின் வளர்சிதை மாற்றத்தில் உருமாறும் கலாச்சாரப் பண்பாட்டில் நம் நினைவிலிருந்து மறதியின் வெளிக்குள் நழுவும் விஷயங்களை மீட்டு புனைவுக்குள் அட்டவணையாகவும் ஆவணமாகவும் ஆகியிருக்கிறது.

பிரபஞ்ச உயிர்களையும் இயற்கையையும் கடலையும் வரலாற்றையும் தொன்மங்களையும் உள்ளுறைப் பொருளாகக் கொண்ட த மேற்சொன்னவற்றிற்குச் சம அளவில் கலை மூலங்களிலிருந்தும் தனக்கான உந்துதலைப் பெற்றுக்கொள்கிறது. மகாயான பெளத்த காப்பியமான மணிமேகலை,புத்த ஜாதகக் கதைகள்,பைபிள்,ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்,மகாவம்சம்,கருணாமிர்த சாகரம்,சரஸ்வதி மகால் சுவடிகள்,ஓவியங்கள்,டச்சு வைஸ்ராய் ஹென்றிக் வான் ரீட் தொகுத்த ஹெர்தூஸ் மலபாரிக்கஸ் தாவர நூல்,மறுமலர்ச்சிக்கால ஓவியர் பீட்டர் புரூகெலின் டவர் ஆப் பேபல் ஓவியங்கள்,பாலி மொழித் தோற்பாவைக் கூத்துப்பிரதியான பீம ஸ்வர்கா ஓவியங்கள், ஆஸ்திரேலிய வாண்ட்ஜீனா பாறை ஓவியங்கள், எகிப்திய மெம்பிஸ் செராப்பியம், தமிழ்த் திணைக்கோட்பாடு எனப் பலப் பிரதிகளை ஊடாடி த நெய்யப்பட்டிருக்கிறது. மானுடவியலைக் கலையின் கண் கொண்டு நோக்கும் பார்வையாகவும் த வைச் சொல்லலாம்.

த வின் திசைவழிகள் ஏராளம். அதுவொரு புதிர்ப்பாதை. இருந்தாலும் ஸ்தூலமாய் தெரியும் அதன் பாதைகள் சிலவற்றை வகைப்படுத்திக்கொண்டு த வை அணுக முயலலாம்.

மதுரகவி பாஸ்கரதாஸ் மற்றும் ஜார்ஜ் வாலடர் டில்நட்டின் மூலமாகச் சொல்லப்படும் காலனியகாலத் தமிழிசை வரலாறு மற்றும் குஜிலிப்பாட்டுக்கள் குறித்த ஒரு பரந்துபட்ட சித்திரம். காலம் என்னும் மீப்பெரும் மறதிக்குள் அழிந்துபோன இசைவிற்பன்னர்களும் அவர்தம் படைப்புகளும் த வெளிக்குள் உயிர்பெறுகிறார்கள். இப்பரந்த நிலப்பரப்பின் மண்வாசனையும் வாழ்வும் ஒன்றுகலந்த வாய்மொழி இசைவடிவங்களைக் கிராம்போன் தட்டுக்களில் ஏற்றிவிட உக்கிரமான வேட்கையோடு அலையும் வால்டர் டில்நட் இசையின் தேவதைகளால் வழி நடத்தப்படுகிறான். கல்கத்தா ஜெசூர் ரோடு பதேர் பிரதர்ஸ் விடுதியில் நிழல்களாகத் தோன்றி மறையும் இசையன்றி வேறேதும் அறியாத ஆன்மாக்களின் உயிரிசை த வின் நரம்புகளிலிருந்து ஓயாமல் எழுகையில் த வின் இன்னொரு திசைவழியில் வீணை தனம்மாளும் பால சரஸ்வதியும் தோன்றுகிறார்கள். நாதமும் பாவமும் அபிநயமும் த வில் நிறைகிறது. கந்தப்ப நட்டுவனாரும் கணேசனும் ஊழின் வழியே மறைகிறார்கள். கலையில் மகத்துவத்தை சிருஷ்டிக்கும் கலைஞர்கள் பலர் உணரும் வாழ்வின் பாழ்வெறுமையைக் கடக்க போதையின் வழியே தங்களை உருக்கி அழித்துக்கொள்கிறார்கள் கே.எல்.சைக்காலைப் போல.

தஞ்சையிலிருந்தும் சரபோஜியிடமிருந்தும் சரஸ்வதி மகால் நூல்களிலிருந்தும் தொடங்குகிறது த வின் இன்னொரு பாதை. சித்திரங்கள், சுவடிகள், நூல்கள், நயனசிகிச்சை போன்றவற்றில் சரபோஜிக்கு இருந்த வேட்கையும் கலம்காரி சித்திர மரபும், தாம்பூலம் மடிக்கும் தாம்பூலக்கரங்கவாகினியரும், முதிய தாசிகளும் தனவந்திரி மகாலின் மூலிகை வாசனையும் காட்சிகளாய் கிடைக்கின்றன. மரபையும் நவீனத்தையும் இணைத்த சரபோவின் வாழ்வைப் பார்க்கும்போது அவர் ஒரு புனைவான கதாப்பாத்திரமாகவே தோற்றமளிக்கிறார். கலைகள் மற்றும் அறிவுத்தேடலில் சரபோவிற்கு இருந்த வேட்கையையும் அரண்மணையின் இருண்ட மூலைகளையும் சொற்சித்திரமாக்குகிறது த.

புதுச்சேரி மற்றும் கடலூரின் வழியே த பாதை தொடர்கிறது. இந்தியத் தேசிய காங்கிரஸின் தீவிரவாதி அணியைச் சேர்ந்தவர்களான பாரதி,வ.வே.சு அய்யர்,வாஞ்சி நாதன் ஆகிய மூவரும் த வில் தோன்றுகிறார்கள். வ.வே.சுவிடம் பயிற்சிபெற்ற வாஞ்சி, மணியாச்சி சந்திப்பில் ஆஷ் துரையின் மீது ஏவும் பிரெஞ்சுத் துப்பாக்கியின் ரவை வெடிக்கும் ஓசை த பக்கங்களில் எதிரொலிக்கிறது. வாஞ்சி ஆஷைக் கொல்லும் காட்சியின் புனைவுருவாக்கத்தில் மிகச்சிறப்பாக வந்திருக்கும் அத்தியாயங்களில் ஒன்றாகச் சொல்லலாம். த வின் இந்தப் பாதை ஐ.என்.ஏ மற்றும் உலகப் போர்களின் வழியேயும் நீள்கிறது. மாறுவேடத்தில் நேத்தா யூஜின் காற்றின் வழியே தப்பித்து காந்தார புத்தரைக் கடந்து காண்டீஜாவின் ஒட்டகச்சத்திரம் வழியே மறைகிறார். யூதர்களின் மீது நாஜிக்கள் ஏவிய ஆஸ்விட்ச் கேஸ் சேம்பர் கொடூரங்கள் நமது குருதியின் பாதையில் நெருப்புக்கங்குகளைக் கொட்டுகின்றன. மனிதன் சமாதி கட்டிக்கொள்ளும் விலங்கு என்று ஓரிடத்தில் கோணங்கி குறிப்பிடுகிறார். அவன் பல சமயங்களில் கொடூர விலங்கு என்பதையும் த பக்கங்களில் காண்கிறோம். சாண்டாகனிலிருந்து ரானவ் வரையான 260 கிலோமீட்டர் சாண்டகான் டெத் மார்ச்சில் உயிரிழந்த 2000க்கும் மேற்பட்ட போர்க்கைதிகளின் ஆவிகள் த பாதையில் புதைந்து கிடைக்கின்றன.

தூரத்தில் எரியும் சொக்கப்பனையிலிருந்து பறந்து அருகே வந்து அணைந்துபோகும் கங்குகளைப் போல த விலிருந்து பல உணர்வுகள் கிளைத்து மறைகின்றன.

த நிலப்பரப்பில் காலனிய காலம் குறித்த நிறையச் சித்திரங்களைக் காண்கிறோம். குறிப்பாக போர்த்துகீசியர்கள் மற்றும் டச்சுக்களின் காலம். காலனிய நிலப்பரப்பின் மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட திருமண உறவுகளின் மூலம் பிறந்த வெள்ளை மற்றும் கறுப்புக் காஸாதுகளின் வரலாறு கடல்சார் வெளியின் பிண்ணனியில் வைத்து த வில் பேசப்பட்டிருக்கிறது. போர்த்துக்கீசியர்கள் மற்றும் டச்சு காலனிப்பிரதேசமாக இருந்த புலிக்காடு, நாகப்பட்டினத்தில் டேனிஷ் காலனிய பிரதேசமாக இருந்த தரங்கம்பாடி போன்ற நிலவெளிகளின் வரலாற்றுத் தடயங்களின் மீதும் ஒரு பயணத்தை நிகழ்த்துகிறது த. டச்சு மலபாரின் வைஸ்ராயான ஹென்றிக் வான் ரீடால் முப்பதாண்டுகாலப் பரப்பில் தொகுக்கப்பட்ட ஹொர்தஸ் மலபாரிக்காவின் எழுநூறு வகையான தாவரங்களிலிருந்து ஒரு தாவர நூலகாவும் தன் பக்கங்களில் கிளைக்கிறது த.

தனுஷ்கோடி ஓர் ஊழாக கோணங்கியைப் பற்றியிருக்கிறது. அவர் அதை வெவ்வேறு விதமாக எழுதிப்பார்க்கிறார். இறந்த நகரமாக அறிவிக்கப்பட்டுவிட்ட தனுஷ்கோடியின் சாவும் பாழும் படிந்த மணற்துகள்கள் அத்தனையையும் எழுத்தாக மாற்ற முயல்கிறார். சுட்டுக்கொல்லப்பட்ட நாய்களின் மரண ஓலங்களைக் கடல் தன் குரலில் சதா ஊளையிடுவது த பக்கங்களில் எதிரொலிக்கிறது. கடலால் ஓயாது அலைகழிக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்ட தனுஷ்கோடி ஒரு தொன்மமாகவே த வில் உருப்பெற்றிருக்கிறது.

மகாயான பெளத்தம் த வில் விரிவாகப் புனைவிற்குள் வந்திருக்கிறது. த நாவலின் ஆகச்சிறந்த அத்தியாயமாக ”ஆயிரம் வயதான ஆமையும் ஒரு த” அத்தியாயத்தைச் சொல்லலாம். ரோகிணி நதிநீரைப் பகிர்ந்துகொள்வதில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமான முரண்பாடுகளைத் தத்துவார்த்தப் புனைவாக கோணங்கி வார்த்தெடுத்ததைச் சமகால நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனைக்குக் குறியீடாக்கியும் வாசிக்கலாம். போதிதாமோவும் சங்கமித்யையும் உலவும் இப்பாதையில் மணிமேகலை காப்பியம் விஸ்தாரமாகத் தொழிற்பட்டிருக்கிறது. மணிபல்லவத்தில் ஆடையுலர்த்திய பாறையில் மெலிவுகொள்ளும் மணிமேகலையின் துயரம் மிக அபூர்வமான வகையில் வெளிப்பட்டிருக்கிறது.

த வின் இன்னொரு பாதை மிக அரூபமானது. அது வரலாற்றுக்கு முந்தைய நிலவெளியில் தொடங்கி சமகால நிலவெளியில் முடிகிறது. பழங்குடி வம்சங்களான நாகர்கள், தயாக்குகள் மற்றும் ஒடியன்கள் ஆகிய மூன்று இனங்களையும் வைத்து நெய்யப்பட்ட த வில் மலேசியப் பழங்குடிகளாக தயாக்குகள் மற்றும் ஒடியன் பிரதிகள் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதல் வாசிப்பில் கடும் பிரயத்தனத்தோடு முட்டிப்பார்த்தும் அவை உயிர்கொள்ள மறுத்து மறுவாசிப்பைக் கோரி நிற்கின்றன. ஆனால் நாகர்களின் பிரதியோடு ஏதோவொரு விதத்தில் குருதித்தொடர்பை ஸ்தாபித்துக்கொள்ள முடிந்தது. நாகர்களின் மருத்துவ மரபைப் பற்றிய குறிப்புகளும் கந்தமான சிம்மாசனத்திற்காக மோதிக்கொண்ட மாமன் மகோதரன் மருமகன் குலாதரனுக்குமிடையேயான உரையாடல்களும் குறிப்பிடத்தகுந்தவை. ஆக்கிலிசின் பாதம் குறித்த கிரேக்கத் தொன்மத்தைக் குலாதரனுக்குக் கோணங்கி மறுகட்டுமானம் செய்வது நுட்பமானது. மகாவம்சம், அரக்கப் பிரகாசிகை, ராவணம் இவற்றைக் குலைத்துப் போட்டு உருவாக்கப்பட்ட பிரதியை நாம் முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடலில் நிகழ்ந்த பெரும் மானுடத் துயருக்கான பிரதியாகவும் மாற்றி வாசிக்கலாம்.

த வில் பல ஒற்றையடிப் பாதைகளும் இருக்கின்றன. குறிப்பாக பர்மாவுக்கும் முஷ்டக்குறிச்சிக்குமிடையே நீளும் தினகரனின் பாதை. மலேரியா மரணங்களின் காலகட்டத்தில் வாட்சனுக்கும் தினகரனுக்குமிடையேயான நட்பைக் குறித்த சித்திரங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இருட்டு மொழியில் எழுதப்பட்ட தினகரன் கொல்லப்படும் காட்சிப்பதிவு பனங்கருக்குகளின் கூர்மையோடு எழுதப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கும் பர்மாவுக்கும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கும் கூலிகளாக ஏறிப்போன மனிதர்களின் கதையும் ஊர் ஊராய் வண்டிகட்டிப் போய் பேங்கு நடத்திய கலாச்சாரமும் சிறுத்தைகளோடு உறங்கும் நாகா இளவரசி கிளிமாந்தாவும் கேஸ்ராசா கதையும் குறிப்பிடத்தக்கவை.

இயற்கை, வரலாறு, மானுடம் போன்றவற்றைக் கலையின் வழியே உற்றுநோக்குவதற்கு சில திசைகாட்டிகளை த காட்டியிருக்கிறது.அத்திசைகாட்டிகளை வைத்துக்கொண்டு திரும்பவும் த வுக்குள் பயணிப்பதே த வை அணுக இன்னும் சிறந்த வழி.


எழுத்தாளர் கே.என்.செந்திலின் ‘கபாடபுரம்’ இணைய இதழில் வெளியான கட்டுரையின் மறுபிரசுரம் இது.

குணா கந்தசாமி

கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய வடிவங்களில் இயங்கும் குணா கந்தசாமி சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். தூரன் குணா என்ற புனைப்பெயரில் ’சுவரெங்கும் அசையும் கண்கள்’ (2007), ’கடல் நினைவு’ (2012) ஆகிய கவிதைத் தொகுதிகளும், ’திரிவேணி’ (2014) என்ற சிறுகதைத் தொகுதியும், ’உலகில் ஒருவன்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளன.

Share
Published by
குணா கந்தசாமி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago