யாமத்தும் யானே உளேன்

51 நிமிட வாசிப்பு

இருளாழத்துக்கு மறுபக்கமாக எங்கேயோ இங்குள்ள கதைகளெல்லாம் காத்துக்கொண்டிருக்கின்றன. அவை இரவெல்லாம் ஒன்றுடன் ஒன்று கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாக உறங்குகின்றன. அவை ஒன்றை ஒன்று தழுவிக்கொள்கின்றன. விரல்பின்னி மூச்சிசைந்து நெஞ்சதிர்வுகள் இணைய நிசப்தத்தில் கனவு காண்கின்றன. இங்குள்ளவளின் உள்ளம் சுற்றிச்சுழன்று வந்து அவர்களை அடைவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன அவை.

அவள் இருளின் கவசங்களை அவனறியாமலேயே மெல்ல, இரவெல்லாம் பொறுமையாக, அவிழ்த்துக் களையும் கலை அறிந்தவள். மெல்லப் படிவைத்து அவனுள்ளே நுழைபவள். அவன் விழிதிறக்கும் தருணத்தில் அவன் முன்னால் சென்று ஓசையில்லாமல் நிற்பவள். காத்திருப்பில் குவிந்த கரங்களும், கள்ளமற்ற ஒளிநிறைந்த கண்களும், கன்னத்தைக் குழியென்றகழும் குறுஞ்சிரிப்புமாக இருள் அவளைக் காண்கிறான். அவன் தன்னை மறந்து இளகிச் சிரித்து விரிகிறான். இப்பிரபஞ்சத்தில் அவனைச் சிரிக்க வைக்கக்கூடியவள் அவள் மட்டும்தான் அல்லவா? அவன் தோல்வியை ஒப்புக்கொண்டேன் என்று கைவிரித்து எழுந்து புன்னகையுடன் வழிவிடுகிறான்.

அப்போது இருளாழத்தில் ஒளிப்பந்தாக ஒளிந்துகொண்டிருந்த கதைகளெல்லாம் பொன்னொளிரப் பொதியவிழ்ந்து எழுகின்றன. இதழிதழாகப் பிரிந்து, சுருள்சுருளாக விரிந்து, கதைகள் ஒவ்வொன்றும் பொன்மஞ்சள் கைநீட்டலாக இருளை ஊடுருவி அவளை யாழ்வருடும் விரல்களெனத் தீண்டுகின்றன. அவள் மேல் வண்ணவண்ண ஒளியாடைகளாகப் படர்கின்றன.

அவள் ஒவ்வொரு நாளும் தன்னை அணிசெய்து மகிழ்வித்துச் சிரிக்க வைக்கும் ஆடைகளுக்காகக் காத்திருப்பவள். எல்லா ஆடைகளையும் சமமெனப் பாவித்து எதையும் நீக்காமல் விலக்காமல் தன்மேல் உடுத்திக்கொள்பவள். ஒரு துளி ஒளியையும் வீணென்றாக்காமல் பருகுபவள். கண்ணும் காதும் விலகாமல் தன்னை முழுதும் அளித்து முழுதும் பெறுபவள். அவள் பேருள்ளம் கொண்டவள், வான்வரை மனம் விரிந்தவள்.

அவள் உடுத்தாத ஆடையே இல்லை, கேட்காத கதையே இல்லை. அவள் காணாத ஒன்றை அவளிடம் யாரும் காட்டிவிட முடியாது என்பது மூத்தோர் வாக்கு. தன் கருணையால் மட்டுமே ஒவ்வொரு நாளும் இருளாழத்துக்கு மறுபக்கம் சென்று உறங்கும் கதைகளை மீட்டெடுத்துக் கொண்டுவருகிறாள். பெருந்தன்மையால் மட்டுமே எல்லாக் கதைகளையும் இதோ இப்போதுதான் முதல்முறை கேட்கிறேனென்று சிறுமிபோல் சம்மணக்கால் கட்டிக் கன்னத்தில் கை வைத்துக் கண் சொக்கக் கேட்கிறாள். நான் சொல்லப்போவதும் அவளுடைய கதை. பழங்கதை. அவளுக்கு நன்கு பரிச்சயமான கதை. அவள் பொறுத்தருளிக் கேட்பாளாக!

ஆனால் இக்கதையை மட்டும் எத்தனை முறை கேட்டாலும் அவளுக்குச் சலிப்பதில்லை. சிறுமியாக இருந்த நாள்தொட்டே பார்த்திருக்கிறேன். மூத்தோர் கதை சொல்லும்போதெல்லாம் ஒழிந்து நின்று கவனித்திருக்கிறேன். இக்கதையை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அவள் அதன் ஒளியால் சுடரேற்றப்படுகிறாள். நெஞ்சோடு கை சேர்த்து கண் விரித்துத் துளித்துளியாகக் கண்ணீர் வடித்துக் கேட்கிறாள். ஆனால் வேறெப்படியும் இருக்க முடியாது அல்லவா? இருளை ஒவ்வொரு நாளும் கிழித்து ஒளி வாங்கி வருபவள் அவள். அவளன்றி அவனுக்காகக் கண்ணீர்விட வேறு யார் இருக்கிறார்கள் இங்கு?

கௌதமனிடம் கர்ணனின் கதையை மட்டும் அம்மாவேதான் சொன்னாள். அவனுக்கு அவள் சொன்ன ஒரே கதையும் அதுதான். அதனாலேயே அவனுள்ளத்தில் அது கங்குக்கனலின் வெம்மையை அடைந்துவிட்டது. அவனே கதை சொல்லத் தொடங்கியதும் உணர்வெழ மீண்டும் மீண்டும் சொன்னவற்றில் முதன்மையான கதையாக ஆகியது. அப்படிச் சொல்லும்போது கேட்கும் திரளில் பனிக்காத ஒரு கண்ணும் இருப்பதில்லை.

அப்போது கௌதமன் மிகவும் சிறியவன். ஏழெட்டு வயது இருக்கும். அன்று அவனுக்கு வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது. தினந்தோறும் வலி இருக்குமென்றாலும் அன்று போல் அதுவரை இருந்ததில்லை. மைய அறையில் பெரிய கண்ணாடிச்சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த அகலமான இருக்கையின் ஓரமாக, பந்தாகச் சுருண்டு படுத்து அடிவயிற்றைக் கவ்வியபடி அவன் அழுதுகொண்டிருந்தான். அன்று நாள் முழுவதும் சாப்பிடவில்லை. ஆற்றுப்படுத்த வந்த அக்காக்களை அடித்து விரட்டினான். பொருட்களைத் தூக்கி எரிந்தான். எப்போதும் சாதுவான குரலில், தத்தித்தத்தி, வெட்கத்தில் கழுத்தசையப் பேசுபவன். ஆனால் அன்று யாராலும் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதான், கத்தினான், அடித்தான், மிதித்தான். சித்தப்பாகூடப் பயந்துவிட்டார். அப்போது மெலிதான கிண்கிணிமணியோசையுடன் அம்மா படியிறங்கி வந்தாள்.

அம்மாவே இறங்கி வருவது அங்குப் பெரிய நிகழ்வு. கதை சொல்வது அதைவிட. அவள் கீழ்த்தளத்துக்கு அரிதாகத்தான் வருவாள். பெரும்பாலும் மேல்தளத்தில் தன்னுடைய அறையில்தான் இருப்பாள். கௌதமன் அங்குச் செல்லக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத விதி. அவன் பகலில் எப்போதும் அந்தக் கண்ணாடிச்சுவருக்கு அருகேதான் அமர்ந்திருப்பான். மூன்று அக்காக்கள் மாறி மாறிக் கதை சொல்லக் கேட்டுக்கொண்டிருப்பான். இரவானால் அடித்தளத்தில் தன் அறைக்குச் செல்ல வேண்டும். தனி அறை. அவன் தனியாகத்தான் உறங்க வேண்டும்.

அன்று அம்மாவே வந்ததைப் பார்த்து எல்லோரும் பேசாமல் சிதறினார்கள். கௌதமனும் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தான். அம்மாவுக்குச் சத்தம் பிடிக்காது என்று அக்காக்கள் அவனிடம் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் வலி தாளாமல் அவனையும் மீறி விசும்பல்கள் வெளிவந்தன. கன்னங்கள் நனைந்திருந்தன. அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘அம்மா, வலிக்குது, வலிக்குது’ என்று முனகி அழுதான். அப்போதுதான் அம்மா அவனைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு பெரிய கண்ணாடிச்சுவர் வழியாக பூமியின் பேருடல் வளைவை நோக்கியபடி, ஒரு கையால் அவன் அடிவயிற்றையும் மறுகையால் அவன் தலையையும் மாறி மாறி வருடியபடி, அக்கதையைச் சொன்னாள்.

அவளுடைய உடலின் ஸ்பரிசம் அவனுக்குப் புதிதாக இருந்தது. ஆனால் அன்னியமாக இல்லை. வலியிருந்தாலும் அந்தத் தொடுகையிலேயே எல்லாம் தெளிந்து அச்சமெல்லாம் மறைந்து சிம்மாசனத்தைக் கண்டடைந்த இளவரசனைப்போல் அவருக்குள்ளே தன்னைப் புதைத்துக்கொண்டான். இங்கே என்ன வைத்திருக்கிறாள் என்று கனாமயர்வில் அவள் நெஞ்சைத் தன் உள்ளங்கையால் அழுத்திப்பார்த்தான். அவள் சொல்லத் தொடங்கியதும் கட்டை விரலைச் சப்பியபடியே கதை கேட்டான்.

அம்மா உடலை முன்னும்பின்னும் ஆட்டிக்கொண்டே அதே கதியில் அவனைத் தட்டிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் கருவெளியில் பூத்திருந்த புவியைச் சுட்டிக்காட்டினாள். கண்ணாடிக்கப்பால் பார்வையை நிறைத்த பெரிய வளைந்த உடல் கொண்டிருந்தது புவி. அவள் ஒரு நீலப்பசு, என்று அம்மா சொன்னார். அவளுடைய சீரான வளைவுகளை அறுத்துக் கிழித்ததுபோல் ஒரு வட்டவடிவமான பிளவு நட்டநடுவே தெரிந்தது. பாதாளத்துக்குத் திறக்கும் ஒரு ராட்சச வாய். பூமியின் குடல்களை உருவி வெளியே வைத்ததுபோல் பழுத்த பொன்நிறத்தில் அவள் உடல் திறந்திருந்தது. கௌதமனின் தலையை வருடியபடி ‘பார், அவளும் அலருகிறாள். உன்னைப்போலவே அவளுக்கும் வலிக்கிறது. வலியில் அவள் உன் சகோதரி’ என்றாள்.

அவ்வளவு நாட்களாக அந்தக் காட்சியை பார்த்துதான் வளர்ந்திருந்தாலும், அன்றுதான் அவனுக்கு அது புரிந்தது. அம்மாவைத் திரும்பி நோக்கி “ஓ” வென்று வாயைக் குவித்தான். அப்படியென்றால், எப்போதுமே இப்படி இருந்ததில்லையா, அவளுக்கு என்ன ஆனது, என்றான். பூமிக்குப் பெரிய காயம் பட்டுவிட்டது என்றாள் அம்மா. உள்ளே என்ன தங்கம், என்று அவன் கேட்டான். அது சூரியன், என்றாள் அம்மா. வெளியே ஒரு சூரியன் இருப்பதுபோல் பூமிக்கு உள்ளேயும் ஒரு சூரியன் இருக்கிறது. ஓயாமல் எரிந்துகொண்டிருக்கிறது. நீ பார்ப்பது அதன் தங்கக் குழம்பைத்தான், என்றாள். நான் சிறுமியாக இருக்கும்போது நிகழ்ந்த பெரும்போரில் பூமியின் நிலம் அறுக்கப்பட்டது. அது பிளந்தபோது தங்க நெருப்பு மேலேறி வழிந்தது. இன்னும் உரைந்து கட்டாமல் வழிந்துகொண்டுதான் இருக்கிறது. மானுடர் யாரும் அதன் அருகே வாழ முடியாது, அதனால்தான் நாம் இங்கே வந்துவிட்டோம், என்றாள். அப்படியென்றால் பூமியில் மனிதர்களே இல்லையா என்றான். அம்மா அவனைத் தட்டுவதை ஒரு கணம் நிறுத்தி, இருக்கிறார்கள், என்று மெதுவாகச் சொன்னார்.

அம்மா உடலை முன்னும்பின்னும் ஆட்டிக்கொண்டே அதே கதியில் அவனைத் தட்டிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் கருவெளியில் பூத்திருந்த புவியைச் சுட்டிக்காட்டினாள். கண்ணாடிக்கப்பால் பார்வையை நிறைத்த பெரிய வளைந்த உடல் கொண்டிருந்தது புவி.

அப்போதுதான் அம்மா கர்ணன் பிறந்த கதையைச் சொன்னார். பூமிக்குள் இருக்கிறது என்று சொன்னேனல்லவா? அதேபோல் கர்ணனின் அம்மாவுக்குள்ளும் ஒரு சூரியன் இருந்தது. அந்த வெம்மையின் ஆற்றலால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பொன்னொளிர்க் கவசமும் மணிக்குண்டலமுமாக அவன் இறங்கி வந்தான். இப்படியும் ஒரு மானுடனா, இவன் தேவன் அல்லவா, தேவகுமாரன் அல்லவா என்று எண்ணும்படியாகக் கண்நிறைக்கும் பேரெழிலுடன் இருந்தான். ஆனால் அவன் அம்மாவால் அவனைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. கண்ணும் நெஞ்சும் நிறைய அவனை அணைத்து, கொடிக்கூடையில் வைத்தாள். அவளுக்குத் தாளவில்லை. அவனை மீண்டும் அள்ளி அணைத்து உடலில் ஓரிடம் மிச்சமில்லாமல் முத்தமிட்டாள். போகாதே, போகாதே என்று சொல்லிக்கொண்டே அவனை அந்தக் கூடையில் வைத்தாள். குளிரடிக்குமே என்று அவன் உடலைப் போர்த்தி மூடினாள். இல்லை, எனக்கு வேறு வழியில்லை, என்று தனக்குள் சொல்லியபடி அதனை மெல்ல ஆற்றில் மிதக்கவிட்டாள். அப்போது உதித்த சூரியனின் கதிர்கள் நீரைத் தொட அது அனலாக மாறியது. அவன் அந்த நதியில் மிதந்து தூரதூரமாக எங்கேயோ செல்வதை அவன் மறையும்வரை பார்த்தாள். உடலின் நரம்புகள் எல்லாம் வரிசையாகத் துண்டித்து அறுந்தவளாகக் கர்ணனின் அம்மா கரையில் நின்று கதறி அழுதாள்.

கௌதமன் வாயிலிருந்து விரலை எடுத்து அம்மாவிடம் திரும்பி, அவள் ஏன் அவனை ஆற்றில் விட்டாள், என்று கேட்டான். அம்மா சற்று நேரம் ஏதும் பதில் சொல்லாமல் அவன் தலையைக் கோதினாள். பின், அவன் அம்மாவால் வேறெதுவும் செய்திருக்க முடியாது, அவளுக்கு வேறு வழியில்லை, அவளை மன்னித்துவிடு என்றாள். அவள் தூரத்தில் காணாத எதையோ, அல்லது யாரையோ பார்த்துப் பேசுவது போல் இருந்தது. அவள் குரல் அங்கிருந்து மிதந்து வந்தது. எப்படியும் அவனும் ஒரு நாள் தான் என்று தருக்கி நின்று அவளை உதைத்துவிட்டுப் பிரிந்து செல்லப் போகிறவன்தானே? என்றாள். அம்மா அவனைத் தன் கூடவே வைத்துக்கொள்ள முடியாதல்லவா, என்றாள். கௌதமன் எம்பி அம்மாவின் கண்களைச் சிறிய உள்ளங்கைகளால் துடைத்தான். அம்மா, அழாதே, நான் எங்கேயும் போக மாட்டேன், என்றான். அப்போது அவன் தன் வலியை மொத்தமாக மறந்துவிட்டிருந்தான்.

அதற்குப் பிறகு அம்மா இறங்கி வரவில்லை. அவள் கௌதமனுக்கு வேறெந்தக் கதையையும் சொல்லவுமில்லை. ஆனால் அம்மா சொன்னதனாலேயே அந்தக் கதையைக் கேட்ட நாளிலிருந்து அது கௌதமனுடைய கதை, கௌதமனுக்கு மட்டுமேயான கதை என்று கௌதமன் கற்பனை செய்துகொண்டான். அக்காக்களிடமோ சித்தப்பாவிடமோ கூட அந்தக் கதையை அவன் சொல்லிக்காட்டவில்லை. ஆனால் அவன் வளரும்தோறும் தன் நினைவுக்குள் பொதிந்துவைத்திருந்த அந்தக் கதையை மீண்டும் மீண்டும் வெளியே எடுத்து சிறுவர்கள் முயல்குட்டியை வருடுவதுபோல் தொட்டுத்தடவிப் பார்த்துக்கொண்டான்.

அதன் பிறகு அவன் கேட்ட எல்லாக் கதைகளுடன் அந்தக் கதை எப்படியோ இணைந்துகொண்டது. அந்தக் கதையில் வலி இருந்தது. ஆனால் அவன் அந்தக் கதையில் ஓர் இனிமையையும் காணத் தொடங்கினான். பழக்கப்பட்ட வலியின் வருகை தரும் இனிமை போல. சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான். கரையில் அவன் அம்மா முகம் தாழ்த்தி அழுதுகொண்டிருப்பார். அவன் அந்த அழுகையைப் பார்த்தபடி ஆற்றிலிருந்து வானை நோக்கிச் சிரிப்பான். பெரிய சிவந்த ஒளிச்சுடராகச் சூரியன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும். கௌதமனின் இளம் உள்ளம் அந்தக் காட்சியுடன் ஒன்றும்போது அதுவரை நீடித்த வலியின் உணர்வு மாறுபடும். எம்பிக் குதித்துச் சிவந்த சூரியனைப் பிடித்துக் கீழே இழுத்து கைக்கடக்கி கொண்டுவர வேண்டும் என்ற வேகம் அவன் உடலில் எழும்.

இப்போது கேட்டால், அந்த இடைவிடாத வலியைத் தவிர்த்துப்பார்த்தால் தன்னுடைய குழந்தைப் பருவ நாட்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியானதாகவே இருந்ததாக கௌதமன் சொல்வான். ஒவ்வொரு நாளும் பூமி உதிப்பதைப் பார்த்தபடித் தன் அறையில் எழுவான். வந்து பெரிய கூடத்தில் கண்ணாடிச்சுவர் அருகே உட்காருவான். அக்காக்கள் உணவுடன் வருவார்கள். சூரியக் கதிர்களிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்பட்ட உணவு. அவர்கள் உணவை ஊட்ட ஆரம்பித்துவிட்டால் சாப்பிட்டு முடிக்கும்வரை வாய் திறக்கக்கூடாது. ஆனால் அவன் சீக்கிரமே சாப்பிட்டுவிடுவான்.

உணவு வேளை முடிந்ததும் அக்காக்கள் முந்தய நாட்களில் கேட்ட பழைய கதைகள் சிலவற்றை அவனைச் சொல்லச்சொல்லிக் கேட்பார்கள். அதன் பிறகு அன்றைக்கான புதிய கதைகளை அவர்கள் சொல்வார்கள். வீரக்கதைகள், சோகக்கதைகள், பயணக்கதைகள், போர்க்கதைகள், காதல்கதைகள், குடும்பக்கதைகள், பேய்க்கதைகள், பாலியல்கதைகள், திகில்கதைகள், துப்பறியும்கதைகள், நீதிக்கதைகள், நாட்டுப்புறக்கதைகள், தேவதைக்கதைகள், தத்துவக்கதைகள் என்று எல்லா விதமான கதைகளும் அதில் அடக்கம். என்ன, அவனுக்கு அந்த வேறுபாடுகள் தெரியாது. அவனைப் பொறுத்தவரை எல்லாமே பூமியின் கதைகள்தான். குறுக்காக கேள்வி கேட்கக்கூடாது என்பதால் கதைகளைப் பாதி புரிந்து, பாதி புரியாமல் கேட்பான். இருந்தாலும் எல்லாவற்றையும் அவர்கள் சொல்லச்சொல்ல அப்படியே உள்வாங்கும் திறன் அவனுக்கு இருந்தது. கதைகளில் வரும் இடங்களை, பெயர்களை, விவரணைகளை உடனுக்குடன் தனியாகப் பிரித்து வைத்துக்கொள்வான். சரியாக நினைவிருக்கிறதா என்று திரும்பச் சொல்லிப்பார்ப்பான். அப்படி நாள் முழுவதும் கதை கேட்பான்.

அன்று கேட்ட கதைகளெல்லாம் அவனுக்குள் நூலாகத் திரியாக ஓடிக்கொண்டிருக்கும். இரவில் மல்லாந்து கண் சொக்கிப் படுத்தால் விளக்கொளியில் கூரை நிழல்கள் கதையின் காட்சிகளைப்போல் தெரியும். அவை மங்கி உருமாறும். இரவெல்லாம் அவற்றைப் பின்னல்போட்டுக்கொண்டே இருப்பான். ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டே இருப்பான்.

ஒரு கதையில் தொடங்கி சற்று நேரம் கழித்துப் பார்த்தால் வேறொரு கதையில் சென்று முடிந்திருப்பான். என்ன நிகழ்ந்ததென்றே தெரியாது. ஆனால் அதிலிருந்து ஒரு புதுக்கதை பிறந்திருக்கும். ஆச்சரியத்துடன் தனக்குள் அந்தப் புதுக்கதையைச் சொல்லிச்சொல்லி நினைவாக்கிக்கொள்வான். தந்தையும் மகனும் ஒருவரையொருவர் அறியாது போர்க்களத்தில் சந்தித்துக்கொள்ளும் கதையை அன்று கேட்டிருப்பான். அது தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று பல நாட்களுக்கு முன்னால் கேட்ட பதின்மூன்றாம் நூற்றாண்டுச் சீனக்கதை ஒன்று நினைவில் எழும். வேடிக்கையான கதை. வீரியத்தை அதிகரிக்கிறேன் என்று சொல்லி ஊரில் அத்தனைபேரையும் ஏமாற்றிக் குரங்குக்குறிகளை உடலில் பொருத்திவிட்டு ஓடிவிடும் தந்திரக்கார மருத்துவனின் கதை. கௌதமனுக்குப் போரென்றாலும் தெரியாது, வீரியமென்றாலும் தெரியாது. அந்தக் கதையே ஒரு புரியாத நெளிவாக, கோணல்சுழிப்பாக, அசட்டுச்சிரிப்பாக உள்ளே கிடந்தது. ஏன் அக்கதைகளை இணைக்கிறான் என்று கேட்டால் அவனால் சொல்லவும் முடிந்திருக்காது. என்ன தொடர்பு என்று அவனுக்குப் புரியாது. ஆனால் இயல்பாக அவன் உள்ளம் அந்த முடிச்சை போட்டது. இப்படிப் புதிது புதிதாகக் கதைகளை அவனே உண்டுபண்ணுவான். அப்படியொரு புதிய கதையைக் கண்டுபிடித்துவிட்ட குதூகலத்தில் அவன் உள்ளம் எழுச்சிகொள்ளும். அடுத்தநாள் யாரிடமாவது சொல்லிக்காட்ட வேண்டும் என்று நினைத்துக்கொள்வான்.

ஆனால் அவனைத் தினம் தினம் வாட்டிய வலி அப்படித்தான் தொடங்கும். அக்கதைகளின் தொடர்பு புரியாமல் மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொண்டே வட்டமடித்துக்கொண்டே இருப்பான். வேறுவேறு கதைகளில் கேட்டவை குழிக்குள் மண் சரிவதுபோலச் சலசலவென்று மண்டையை நிறைக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் மண்டை சூடாகும். உலோகங்கள் தீப்பொறி பறக்க உரசிக்கொள்ளும். அடிவயிற்றில் தொடங்கும் அந்தக் கொடியவலி. கௌதமன் அதன் வருகையை உணர்ந்து முனகுவான். தோலை மட்டும் அறுத்து மெல்ல உரித்து உருவி அதற்கடியில் எரியும் கங்குகளை அடுக்கி வைத்தாற்போன்ற வலி. தீயேறுவதுபோல் அது முதுகுத்தண்டில் தொற்றி உச்சிமுனைக்கு ஏறும். அடிபாதம் வரை இறங்கி நகக்கண்களைக் குத்தும். கௌதமனின் தொடைகள் வலியில் துடிக்கும். வலி தலைக்கேறும்போது தாங்காமல் கௌதமன் அலறுவான். பிரகாசமான செவ்வொளி கண்ணை நிறைக்கும். நட்சத்திரங்களாகக் கண்ணுக்குள் மின்னும்.

அப்போது உலகம் உடைவதுபோல் காட்சிகளாக, ஒலிகளாக, வாசகங்களாக கதைகளெல்லாம் அவனுள் சிதறும். சரியும். ஒளிவட்டத்தின் ஒளி ஏறி ஏறி வலி நெருப்பு சீழும் கொப்பளமுமாக உச்சிமண்டையில் வெடிக்கும்.

பின் எல்லா உணர்வுமே அழிந்துவிடும். மௌனம். வெட்டவெளித்தனிமை. திசைக்காற்றுகள் பந்தாட அவன் மட்டும் தன்னந்தனியாக நின்றிருப்பான். அது ஓர் இடைவெளி. அவன் சற்றே சமநிலையடைந்து சுற்றும்முற்றும் பார்த்து வேதனையில் மெல்ல எழுந்து அமர முயற்சிப்பான்.

அதன்பின் வலி மெல்லிய முனகலுடன் மீண்டும் திரும்ப வரும். மீண்டும் வலிமலையேற்றம். மீண்டும் சிதைவு. மீண்டும். மீண்டும். மீண்டும். பாதிநாள் பற்களை இறுக்கி கண்களில் கண்ணீர் சோர்ந்தபடிதான் அவன் விழிப்பான்.

கௌதமன் வளரும்தோறும் அவன் அனுபவித்த வலியின் தீவிரம் சளைக்கவேயில்லை, அதிகரித்தபடியேதான் இருந்தது. அதன் குணமும் நிறமும் மாறினாலும், அந்த வலியை உருவாக்கிய காட்சிப்பிரவாகம் மாறினாலும், அது சென்று சேரும் உச்சிமுனை மாறவேயில்லை. தலைக்கு மேல் செம்பொன் மணியென பழுத்த ஒளி. கண்ணை நிறைத்து ஒளியால் குருடாக்கியது. பின் ஒரு நொடியில் வெடித்துச் சிதறி வெட்டவெளிக் கருமையில் தூக்கி எறிந்தது. அவன் வளரும்தோறும் கேட்ட கதைகளின் வழியே கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவனுக்குள் அந்த நிலையிழத்தல் நிகழ்ந்தது.

ஆனால் அதுவரை கேட்ட எந்தக் கதையையும்விடத் தன்னை மொத்தமாக நிலையிழக்கச் செய்த கதையைக் கௌதமன் தனக்கு பதினோரு வயதானபோது முதன்முறையாக கேட்டான். அது ஒரு பழைய நாடகக்கதை என்று அக்கா சொன்னாள்.

அதன் நாயகன் சுடுகாட்டில் ஒரு மண்டையோட்டைக் கண்டடைவான். அதைக் காதருகே வைத்துக் குலுக்கிப் பார்ப்பான். அது அவனைப் பதிலுக்குப் பார்வையற்ற ஓட்டைகள் வழியாக வெறித்துப் பார்க்கும். பல்லிளிக்கும். அவன் அதனுடன் உரையாடுவான். அந்த மண்டையோட்டுக்குள் ஏதோ ரகசியம் இருப்பதாக உணர்வான். ஆனால் அவனைச் சுற்றி இருப்பவர்களெல்லாம் அதனை அவனிடம் சொல்லாமல் மறைத்து சதி செய்வதாக எண்ணுவான். அதைப் புரிந்துகொள்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தான் ஒரு பைத்தியக்காரன் என்று நாடகம் ஆடி எல்லோரையும் வேவு பார்ப்பான்.

அப்போது பரிதாபமாக அவனுடைய பேதைக்காதலி குறுக்கே வந்துவிடுவாள். அவன் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டு அவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிட்டதாக நம்பிவிடுவாள். அவளுக்குப் புத்தி பேதலித்துவிடும். ஆற்றில் விழுந்து அதன் ஒழுக்கோடு அவன் பின்தொடர முடியாதபடி போகாத ஊருக்கு சென்றுவிடுவாள்.

சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான்.

இக்கதையைக் கேட்ட இரவு கௌதமனின் எண்ண ஓட்டத்தில் அந்த மண்டையோடு வந்தபோது அவனை அறியாமலேயே அவன் தன்னுடைய தலையைத் தொட்டுத் தடவிப் பார்த்தான். இரும்புப் பந்துபோல் நெகிழ்வே இல்லாமல் கனமாகத் திடமாக இருந்தது. சற்றுநேரம் அப்படியே இருந்தவன் அக்கதையை மீண்டும் தனக்குள் சொல்லிப்பார்த்தான். அந்த இளைஞனுக்குப் புத்தி பேதலிக்கிறது. அவன் தன்னை விரும்பிய பெண்ணை மோசமாகத் திட்டுகிறான். நிராகரிக்கிறான். அவள் பைத்தியமாகிறாள். ஆற்றில் விழுகிறாள். ஆற்றின் ஒழுக்கோடு செல்கிறாள்…

அந்த இணைவு அவனுள் உதித்ததும் மண்டையே பிளந்துவிடும் என்பதுபோன்ற வலி ஏறியது. அப்படியொரு வலி அதற்கு முன்னால் வந்ததே கிடையாது. கண்களில் கூசும் ஒளி திரண்டு வடிவம் கொண்டது. அந்த ஆறு. அதே ஆறு. கர்ணனை அவன் அம்மா கைவிட்ட அதே ஆறு. உடல் முழுவதும் எரிந்தது. கொடுக்குகளாகக் கொட்டியது. போர்வைகளையும் ஆடைகளையும் கிழித்துக் களைந்தான். எதையோ தேடித்துழாவுபவன்போல் உடல் முழுவதும் பிராண்டிக்கொண்டான். தலைக்கு மேல் செஞ்சூரியன்போல் ஒளி அணையாமல் நின்று எரிந்தது. வலியில் துடித்துப் படுக்கையை அறைந்தான்.

அன்று இரவெல்லாம் கௌதமன் அந்த ஆற்றில் ஒழுகிச் சென்றான். அது தீயாறு. செங்கனலாகத் தகித்தது. ஒரு கரையில் கர்ணனின் அம்மா அழுதுகொண்டிருந்தாள். மறுகரையில் அந்த மண்டையோட்டு இளைஞன் சோகமாக வாய்பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆற்றில் கௌதமன் அலறிக்கொண்டே இருந்தான். ஆனால் சத்தமே எழவில்லை.

ஆம், கௌதமனுக்கு அக்காக்கள் சொன்ன கதைகளெல்லாம் அவன் வயதை மீறியவை. ஆனாலும் முழுவதும் சொல்வார்கள். அவனும் முடிந்தவரை அர்த்தப்படுத்திக்கொள்வான். அவர்கள் கதைகள் மட்டும் சொல்வதில்லை. கவிதைகளும் பாடுவார்கள். நெகிழ்வான மனநிலையில் இருந்தார்களென்றால், இனிய, ஏக்கம் நிறைந்த, சோகம் தோய்ந்த நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள். அப்போது கௌதமன் அவர்களுடைய முகங்களைக்கண்டு அவர்களை அணைத்துக்கொள்ள ஓடிவருவான்.

ஆனால் அக்காக்களை அவன் தொடக்கூடாது என்பது அங்கே விதி. அப்படிப்பட்ட நாட்களில் அம்மா தன்னை அணைத்துக்கொண்டு கதை சொன்ன அந்த ஒற்றைத் தருணத்தை ஏக்கத்துடன் நெஞ்சில் மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்ப்பான் கௌதமன். அம்மாவின் உடலின் நெருக்கமும் மென்மையும் குழைவும் கதகதப்பும் ஒரே நேரத்தில் மிக அன்னியமான ஒன்றாகவும் மிகமிகப் பரிச்சயமான ஒன்றாகவும் இருந்த விந்தை நினைவுக்கு வரும்.

கௌதமனை அந்த வீட்டில் தொடக்கூடிய ஒருவர் சித்தப்பா மட்டும்தான். சித்தப்பா கதை சொல்ல மாட்டார். அதிகம் பேச மாட்டார். அவர் மீன் போன்ற மனிதர். ஒல்லியான சதை ஒட்டிய வழவழப்பான கருப்பு உடல் கொண்டவர். மீன்போலப் பெரிய உதடுகள் எப்போதும் பாதிப் புன்னகையில் திறந்திருக்கும். மீன் போலவே திரை மறைத்த கண்கள். அவர் உடலின் வாசத்தைக் கௌதமனின் எண்ண ஓட்டம் தான் கேட்ட கதைகளில் வரும் மீன்வாசத்துடன் அனிச்சையாகத் தொடர்புபடுத்திக்கொண்டது. கௌதமனுக்கு வலியெடுக்கும்போது சித்தப்பா எதுவும் பேசாமல் அவனை அணைத்துக்கொள்வார். அக்காக்கள் இல்லாதபோது கன்னத்தில் முத்தம் கொடுப்பார். அவருடைய முத்தங்கள் மறந்து தொலைத்த ஏதோ ஒன்றை மீட்டெடுக்க முயற்சிக்கும் நினைவுபோலத் தயங்கியபடி இருக்கும். ஆனால் அவர் கை கௌதமனின் கையைப் பற்றும்போது அந்தத் தொடுகை பாதி மறந்த நினைவாகத் தான் திடமானவன்தான் என்று சொல்வதுபோல் இருக்கும். அவரைத் தொடும்போதும் அதே திடத்துடன் அவர் கையைப் பிடிக்க வேண்டும் என்று கௌதமன் கற்றுக்கொண்டான். ஏனென்றால் தன்னைத் தவிர அவரையும் அங்கு வேறு யாரும் தொடுவதில்லை என்று கௌதமனுக்குத் தெரியும். அதை உணரும்போதெல்லாம் உள்ளே மெல்ல வலிக்கும். மண்டையோட்டுடன் பேசும் அந்தப் பையன் ஏனோ நினைவுக்கு வருவான். ஆகவே கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவன் அவரைத் தொடுவான். அவருக்கும் தனக்கும் மட்டும் தெரிந்த ஏதோ இரகசியம் இருப்பதுபோல் தலைசாய்த்துச் சிரிப்பான்.

கௌதமனுக்குச் சித்தப்பாதான் குளிப்பாட்டிவிடுவார். முக்கியமான காரணம் கௌதமனுக்குத் தன்னுடைய ஆடைகளைத் தானே ஒற்றையாளாகக் கழற்றிக்கொள்ளத் தெரியாது என்பதுதான். திருகாணிகளைத் துளைகளிலிருந்து எடுத்து மீண்டும் பொறுத்த யாராவது உதவி செய்தாக வேண்டும். ஆகவே வாரம் ஒரு முறை சித்தப்பா கௌதமனைத் தனியாக அழைத்துச்சென்று அவன் ஆடைகளைக் களைவார். புட்டியில் அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் காற்றை அவன் உடல் முழுவதும் பொழிந்து மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வார். புண்ணோ பழுதோ இருக்கிறதா என்று குரங்குக்குப் பேன் பார்ப்பதுபோல் அவன் உடலை ஆராய்வார்.

உடலின் ஒவ்வொரு பாகமாக காற்றாலும் கைகளாலும் தீண்டப்படுவதில் கௌதமனுக்குப் பெரிய குதூகலம். சிரித்துக்கொண்டே இருப்பான். உன்னுடைய திருகாணிகள் எங்கே என்று சித்தப்பாவின் உடலில் அவன் விளையாட்டாகத் தேட அவரும் சிரிப்பார். கௌதமன் விளையாடும் நேரம் அது மட்டும்தான். மிக மகிழ்ச்சியான தருணம். அப்போது வலியே இருக்காது.

அப்படி ஒரு நாளில் – அப்போது கௌதமனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும் – சித்தப்பா கௌதமனுக்கு ஒரு ரகசியத்தை காட்டிக்கொடுத்தார். யாரும் ஒட்டு கேட்கிறார்களா என்றும் அறைக்கதவு தாளிட்டிருக்கிறதா என்றும் பார்த்துவிட்டு, அவனை அருகில் அழைத்துக் கால்களை அகற்றச்சொல்லிச் சின்னக் கண்ணாடியை அடியில் வைத்து, பார், பார், என்று அவசரமாகச் சுட்டினார். ஆர்வமாக, சற்றே குறுகுறுப்புடன், அவன் எட்டிப்பார்த்தான்.

கண்ணாடியில் கால்களுக்கிடையே நட்டநடுவில் ஒரு சிவப்புக்கண் தெரிந்தது. வட்டவடிவமாக ஒரு பெரிய புண்போல இருந்தது. அழுத்தினால் சீழ் வழியும் என்பது போல. அப்படி ஒன்று தன் உடலில் இருப்பதைத் தானே கண்டுபிடித்திருப்பது கடினம் என்று கௌதமன் உணர்ந்தான். சித்தப்பாவைப் பார்த்தான். கண்களை விரித்து விரலை இடமும் வலமும் ஆட்டிக்கொண்டிருந்தார். வேண்டாம், வேண்டாம், என்று சொல்வது போல. ஆபத்து, வேண்டாம், அதை அழுத்திவிடாதே என்று வெவ்வேறு சொற்களில் மாறிமாறி வாயோரமாக முணுமுணுத்தார். கௌதமன் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால் அதன் பின் சித்தப்பாவைத் தொடுவது அவனை ஏதோ செய்தது. விலகினான். அவர் கண்களைப் பார்க்காமல் இருந்தான். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சிவப்புக்கண் நினைவுக்கு வந்தது. சித்தப்பாவுக்கும் ஒன்று இருக்குமா என்ற கேள்வி அவனுக்குள் மின்னிக்கொண்டே இருந்தது. இல்லையென்றால் அது ஆபத்தானது என்று எப்படித் தெரிந்துகொண்டார்?

அதன் இருப்பை அவன் உணர்ந்துகொண்டே இருந்தான். கால்களை அகற்றி வினோதமாக நடக்க ஆரம்பித்தான். அக்காக்கள் கேட்டபோது முகம் சிவந்து தலை குனிந்து ஏதும் சொல்லாமல் நின்றான். அக்காக்களுக்கும் சிவப்புக்கண் இருந்ததா என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

அந்த சிவப்புக்கண் அவர்கள் சொன்ன கதைகளிலெல்லாம் இல்லாத இருப்பாக வரத்தொடங்கியது. கேட்ட கதைகளெல்லாம் இரவுகளில் அவன் பின்னித் தொடுத்தபோது சிவப்புக்கண்ணின் இழையும் உள்ளே நுழைந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான்.

அதன் பார்வையிலிருந்து தப்ப விதவிதமான கதை இழைகளை இழுத்துப் பற்றிக் கொடிகளில் குரங்குபோல் தாவிப் பறந்து தப்பிக்க முயற்சி செய்துகொண்டே இருந்தான். ஆனால் சிவப்புக்கண் சூரியனைப் போல எங்கிருந்தோ வானத்துமேலிருந்து இலைகள் வழியாக அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருநாள் கண்ணாடிச்சுவருக்கு அப்பால் தெரிந்த பூமியைக் கண்டு அதிர்ந்தான். அதன் மையத்தில் தீப்பிழம்பாகத் தெரிந்ததும் ஒரு சிவப்புக்கண்ணாக இருந்தது.

இனிமேல் நானேதான் என்னைச் சுத்தப்படுத்திக்கொள்வேன் என்று கௌதமன் ஒரு நாள் அறிவித்தான். அக்காக்கள் ஏன் ஏன் என்று மாறி மாறிக் கேள்வி கேட்டார்கள். ஆனால் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. திடமாக நின்றான். சித்தப்பா ஓர் ஓரமாக அசட்டுத்தனமாக வாயைத் திறந்தும் மூடியும் கைகட்டி நின்றார். ஆனால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை. பெரிய அக்கா இறுதியாக அவன் ஆடைகளை மட்டும் இளக்கிக்கொடுத்து, சரி, நீயே போ, என்று அவனிடம் சொன்னாள். ஆனால் அவன் இந்தப் பக்கம் போனதும் அவள் மாடிப்படி ஏறி அம்மாவின் அறைக்குப் போனதை அவன் கவனித்தான். அப்படியென்றால் தன்னைப் பற்றிய எல்லாச் செய்திகளும் உடனுக்குடன் அம்மாவின் காதுகளுக்குப் போகின்றன. கௌதமன் தன்னையறியாமலேயே கைவிரல்களை முஷ்டியாக மடக்கிக்கொண்டான். உள்ளூறச் சீறினான். காது அறுந்துவிடும் என்பது போன்ற வலி உச்சந்தலையை அறைந்தது.

அன்று தனிமையில் மெதுவாக அவன் அந்தச் சிவப்புக்கண்ணை முதன்முதலாகத் தொட்டுப்பார்த்தான். நெருங்கும்தோறும் உள்ளே விண்விண்ணென்று அடித்துக்கொண்டது. தொடைகள் நடுங்கின. கைவிரல் அஞ்சி மெல்ல அதைத் தொட்டது. தொட்டதும் அவன் உள்ளே இருள்வெளி மொத்தமும் வெடித்துச் சிதறுவதுபோல் இருந்தது. அவன் அதுவரை கண்டிராத ஒளியால் நிறைந்தது.

ஒரு நொடி கழித்துதான் எல்லாம் அவனுக்குள் மட்டுமே நடந்துகொண்டிருந்தது என்பதை உணர்ந்தான். அந்த சிவப்புக்கண்ணில் தொடுகையுணர்வே இல்லை. அது வெறும் ஒரு பொத்தான். வழவழப்பாக இருந்தது. அவன் உடலில் மற்ற பாகங்களைத் தொட்டபோது இருந்த தொடுகையுணர்வு அங்கு இல்லை.

இருந்தாலும் அதைத் தீண்டியபோது அவன் உள்ளே உலோகப்பரப்பை உலக்கையால் அடித்ததுபோல் இருந்தது. உச்சிவரை அனலேறியது. கண்கள் செருகின. வெவ்வேறு கதைகளின் துணுக்குகள் உள்ளே கொப்பளித்து மேலேறி ஒன்றுடன் ஒன்று கலந்துகொண்டது. வேகம் கூடக்கூட வண்ணத்துண்டுகளாக அவை வெடித்துச்சிதறின. அதன் பின் எல்லையின்மை. கருமை. மௌனம்.

வாரம் ஒருமுறை அவன் தன்னந்தனியாக இருக்கும் அத்தருணத்தை எதிர்பார்க்கத்தொடங்கினான். ஆடைகளைக் களைய யாராவது உதவிசெய்ய வேண்டும் என்பதால் இரவில் அதனருகே செல்ல முடியாது. ஆகவே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பையே தன் அப்போதைக்கான வலிக்கு எதிர்த்திசையில் இன்னொரு விதமான வலியாக, அதிரும் ஏக்கமாக, தன்னுள் உணரத் தொடங்கினான். அதை அடைகையில் அந்த வலி குறையும். அடைந்ததும் இந்த வலி கூடும். ஆனால் அடுத்த வாரத்துக்கான எதிர்பார்ப்பு மீண்டும் வலிகளின் தட்டுகளைச் சமன்படுத்தும். தோல்வாத்தியக்காரனின் நுண்ணுணர்வோடு வெவ்வேறு வலிகளின் அதிர்வுகளை ஒன்றிலிருந்து ஒன்று பகுத்துப் பிரித்து ஆராயக் கற்றான்.

ஏக்கம் நிகழாமல் போகும் நேரங்களிலும்கூட அதை மீட்டெடுத்துக்கொள்ள வெவ்வேறு நுண்ணிய வழிகளைக் கண்டடைந்தான். அதனைத் தான் காணவேயில்லை என்று புறமுதுகுகாட்டி அலட்சியமாக நிற்பது அதில் முதன்மையான வழி. அதுவே காற்றைப் போல், கதிரவனைப் போல், அவனை அணுகி கரம் விரித்து அவனை அணைத்துக்கொள்ளும் என்று தெரிந்துகொண்டான். எல்லாக் கதைக் காட்சிகளும் மறைந்து அது கண்ணிறைக்கும் செவ்வொளியாகத் தன்னைச் சூழும். அதன் வைரப்பார்வைகள் கண்ணைக் குத்திக்கிழிக்கும்.

ஒவ்வொரு முறையும் அந்தச் சிவப்புக்கண்ணின் தொடுகை மட்டும் தனியாக ஏதாவது உணர்வை அளிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்த்தான். வெவ்வேறுவிதங்களாக அதைத் தொட்டு, தடவி, வருடி, சுரண்டிப் பார்த்தான். ஆனால் அதைத் தொடுவதால் மட்டும் எந்த உணர்வும் ஏற்படுவதில்லை என்று புரிந்துகொண்டான்.

தன்னைக் கிளர்ச்சியடையச் செய்தது அந்த எதிர்பார்ப்புதான். எதிர்பார்ப்பு கதைத்துணுக்குகளின் காட்சிகளாக அவனுக்குள் விரிந்தது. ஆகவே வெறுமனே காட்சிகளை மீட்டெடுப்பது மூலமாகவே அந்த உணர்வை அடைய முடியுமா என்று சோதனை செய்துபார்க்க முடிவுசெய்தான்.

அன்று இரவு தன் அறையில் படுத்துக்கொண்டிருக்கையில் சிவப்புக்கண்ணை நினைத்துக்கொண்டான். உடனே, இயல்பாக, நன்கு தெரிந்த ஒரு படம் போலக் காட்சிகளாக ஓர் ஓட்டம் உள்ளே ஓடியது. அந்த ஒழுக்கு பரிச்சயமானது. ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட இதே வரிசையில் இதே படம்தான் தனக்குள் ஓடுகிறது என்று ஆச்சரியமாக உணர்ந்தான். ஒரு தனிக்கதை. அவனுக்கு மட்டுமேயான கதை. நன்கு பழகிய பாதையில் செல்லும் விலங்கைப் போல, ஆற்றின் ஒழுக்கோடு செல்லும் உடலைப் போல, எல்லாம் தன்னைத் தானாக நிறைவேற்றிக்கொண்டது.

அதன் பின்னால் ஒவ்வொரு நாள் இரவும் அந்தக் கதையை உள்ளே ஓட்டியே அந்த உணர்வுகளை அடைந்தான். அதை மெதுவாக்கி, வெட்டி, பகுத்து, ஒவ்வொரு காட்சியாக நிலைநிறுத்தி அவனால் அதைப் பார்க்க முடிந்தது. உணர்வுகளையும் அதற்கேற்றாற்போல் நீட்டிக்கொள்ள முடிந்தது. காலத்தை நிற்கச்செய்ய முடிந்தது. தீயாற்றில் ஓர் யுகத்துக்கு மிதந்தான். அம்மா ஓர் யுகத்துக்கு முகம் மறைத்து அழுதாள். அந்த இளைஞன் ஓர் யுகத்துக்கு மண்டையோட்டிடம் புலம்பினான். நீண்ட கூந்தல் ஆற்றில் விரிய அந்தப் பிச்சியும் ஓர் யுகத்துக்கு மிதந்துசென்றாள். அங்கேயே எல்லாப் பூரிப்புகளையும் அனுபவித்தான். எல்லா உச்சங்களும் நிகழ்ந்தன. அங்கே நின்றபடியே ஆழத்துலகுக்குச் சென்று கருமையில் கரைந்து மௌனத்தில் அமைந்து வலி மறந்து மீண்டு வந்தான்.

சிவப்புக்கண் அந்த அனுபவத்தின் பெயர் சொல்லும் குறியீடு மட்டுமே என்ற இடத்துக்கு வந்தது. சதுரங்கத்தில் ராஜாவைப்போல. அதைத் தொடுவதைவிடத் தொடும் கணம் நோக்கிச் செல்லும் கணங்களே அவனுக்கு முக்கியமென்றானது. அதுவரை செல்லும் தொலைவை நிர்ணையித்த காட்சிகள் அவனை நிறைத்து நிறைத்துத் தளும்ப வைத்தன. ஆகவே சில நாட்களுக்குப் புதிய கதைகளை அவனால் சரியாக உள்வாங்க முடியவில்லை.

ஆனால் வெகுவிரைவிலேயே அந்தக் காட்சிக்கோப்பு அவனைச் சலிப்படையச் செய்தது. அந்த உணர்ச்சி வேகம் நிகழாமல் போனது. பழைய வலி சலிப்பூட்டும் நமைச்சலுடன் திரும்ப வந்தது. வேறுவேறு கதைகளைத் துழாவி புதிய காட்சிகளைச் சமைத்தான். மலைப்பாம்புகளும் அருவிகளும் இடுங்கிய சந்துகளும் இருட்டறைகளும் தோன்றின. ஆனால் அதுவும் வெகுவிரைவிலேயே சுவாரஸ்யம் இழந்தது. வலி வந்தபோது ரத்தம் வாங்க வஞ்சத்துடன் காத்திருந்ததைப்போல் அதுவரை தவிர்த்த நாட்களுக்கும் சேர்த்து வட்டியுடன் பலி கேட்டது.

சிவப்புக்கண்ணை நேரடியாகத் தொட்டால் சரியாகும் என்று வார இறுதி வரை காத்திருந்து பார்த்தான். ஆனால் எந்த உணர்வும் அளிக்காத அந்தத் தொடுகையே அவனை எரிச்சல்படுத்தியது. சூடு தலைக்கேறியபோது மண்டைக்குள் கோபமாக வெடித்தது. அதுவரை அவன் அறியவே அறியாத ஆவேசம் அது.

அப்போது அவனுக்குப் பதினைந்து வயதிருக்கும். கேட்ட கதைகளிலிருந்து அந்த வயதில் அவனுக்கு மீசை இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை வந்திருந்தது. ஆனால் முகத்தில் அப்படி ஏதும் நிகழ்வதற்கான அறிகுறிகள் இல்லை. ஆகவே அவனே மையை வைத்து மூக்குக்கடியில் ஒரு சின்ன மீசையை வரைந்துகொண்டு வீட்டைச் சுற்றி வலம் வந்தான். அக்காக்கள் அதைக் கண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் வரைந்த அன்றே செய்தி மேல்மாடிக்குச் செல்லும் என்று அவனுக்குத் தெரியும். அக்கா மேலேறிச்செல்வதைப் பார்த்தபோது குப்பைத்தொட்டியை ஓசையெழப் போட்டு அடித்து நொறுக்கினான்.

சித்தப்பா அவன் மீசை வரைந்திருந்ததைப் பார்த்தார். ஆனால் அவரும் பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் அவராக வந்தார். கௌதமன் கண்ணாடிச்சுவருடன் ஒடுங்கி அமர்ந்திருந்தான். யாரும் சுற்றி இல்லையே என்று பார்த்து அவனைத் தயக்கத்துடன் அணுகி, தோளிலும் தலையிலும் பாசமாகத் தடவினார். அவன் நிமிர்ந்து பார்த்தான். சற்றே அச்சத்துடன் புன்னகைத்தார். அருகே உட்காரலாமா என்று கேட்பதுபோல் தயங்கி நின்றார். அவர் சிவப்புக்கண்ணைப் பற்றித்தான் பேச வந்திருந்தார் என்று எப்படியோ உணர்ந்தான்.

அதன் இருப்பை அவன் உணர்ந்துகொண்டே இருந்தான். கால்களை அகற்றி வினோதமாக நடக்க ஆரம்பித்தான். அக்காக்கள் கேட்டபோது முகம் சிவந்து தலை குனிந்து ஏதும் சொல்லாமல் நின்றான். அக்காக்களுக்கும் சிவப்புக்கண் இருந்ததா என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.

அன்று கேட்டிருந்த கதைகளிலிருந்து காலையிலிருந்தே நமநமவென்று அடிவயிற்றில் வலி ஆரம்பித்திருந்தது. பழகிய வழிகள் எவையும் ஒத்துழைக்கவில்லை. வலி ஏறிக்கொண்டே இருந்தது. அப்போது சித்தப்பா வந்தது கௌதமனுக்கு எரிச்சலாக இருந்தது. உதடுகளைப் பிரித்துப் பற்களைக் காட்டி முஷ்டிகளை இறுக்கிச் சீறுவதுபோல் ஒலி செய்தான். அவர் ஓரடி பின்னால் எடுத்து வைத்தார். கௌதமன், “ஏதாச்சும் பேசின, மூஞ்சிய பேத்துப்புடுவேன். தாயோளி” என்றான். அந்த வார்த்தைக்கு அர்த்தம் அவனுக்குத் தெரியாது. அவனுக்குச் சொல்லப்பட்ட ஏதோ கதையில் வரும். அதுவரை அவன் வாயில் வந்ததில்லை. ஆனால் சரியான நேரத்தில் விந்தையென வசனம்போல் பொருத்திக்கொண்டு வந்துவிட்டது.

சித்தப்பா முகம் சுருங்கிப் பின்வாங்கினார். அவரால் அதை நேரடியாக விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கௌதமன் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிந்தது. முகத்தைப் பயத்தில் திருப்பிக்கொண்டார். பின் மீண்டும் ஏதோ தோன்ற திரும்பி அவனை நெருங்கி தோளில் கைவைத்து அவரசரமாக, “அப்பா. உன் அப்பா. அதை அழுத்திக்கொண்டார்” என்று முணுமுணுத்தார். “அது கெட்டது. அங்கே போகாதே” என்றார்.

கௌதமன் கண் சுருங்க அவரைப் பார்த்தான். ஓரடி பின்னால் எடுத்து வைத்தான். பின் ஓடிச்சென்று தன் அறைக்கதைவைத் தாளிட்டு முழங்கால்களைக் கட்டிக்கொண்டு மூச்சுவாங்க அமர்ந்தான்.

அப்பாவா? அவனுக்கு அப்பா இருந்தாரா? அவன் நெஞ்சு அடித்துக்கொண்டது. சில நாட்களாகவே அவனையறியாமல் அவனுள் மெல்லியச் சுருளாகப் புகைபோல் கிளந்துவிட்டிருந்த கேள்வி. இப்போது சித்தப்பா அதற்கு வடிவம் கொடுத்துவிட்டிருந்தார். வலியேறுவதைப்போல் உணர்ந்தான். அது எழும் அலைக்காகக் காத்திருந்தான். ஆனால் வரவில்லை.

ஒரே நொடியில் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து அவனைத் தாக்கின. தான் யார்? ஏன் தனக்கு அம்மா மட்டும் இருக்கிறாள்? அப்பா கிடையாதா? அப்பாவுக்கு என்ன ஆனது? இந்த அக்காக்கள் யார்? என் அக்காவா? சித்தப்பா வேறு மாதிரி இருக்கிறார். மீன் போல. ஏன்? இங்கு வேறு சிறுவர்கள் இல்லை. அப்படியென்றால் இவர்களுக்குக் குழந்தைகள் கிடையாதா?

பூமியில் பலகாலம் முன்னால் நடந்த பெரும்போருக்குப் பிறகு அவர்கள் அங்குக் குடி வந்துவிட்டார்கள் என்று மட்டும் கௌதமனுக்குத் தெரியும். அக்கா அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறாள். ஆனால் பூமியில் இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் ஏன் அவர்கள் மட்டும் இங்கு வந்தார்கள்? அப்படியென்றால் தான் யார்? தன் கதை என்ன? ஏன் தினந்தோறும் எல்லோரும் தனக்குக் கதை சொல்கிறார்கள்? ஏன் தனக்கு எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கிறது?

அப்போது திடீரென்று அந்த எண்ணத்தை ஒரு தெறிப்பாக அடைந்தான். அந்தச் சிவப்புக்கண். ஆம், அந்த சிவப்புக்கண்தான் விடை. ஏன், எப்படி, என்ன விடை என்று அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் அதுதான் விடை. அதுதான் மந்திரம். அதுதான் திறவுகோல். அதை அடைந்துவிட்டால் எல்லாமே புரிந்துவிடும். அதை அழுத்திவிட்டால் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். மணி அடிக்கும். விளக்குகள் பற்றிக்கொண்டு எரியும். வாயில்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கும். அதோ, அங்கே, கருவறையில்… ஆம், அதுதான். எல்லாமே புரிந்துவிடும். அப்படித்தான் இருக்க முடியும். கௌதமன் நினைத்தான், தன்னை இவ்வளவுநாள் ஆட்டிப்படைத்த அந்த உணர்வுகளுக்கெல்லாம் அது ஒன்றுதான் அர்த்தம் பொதிந்த பதிலாக இருக்க முடியும் என்று.

ஒருவேளை தன்னுடைய அப்பாவும் அதே வழியில் ஒழுகியவரா? அதே கேள்விகளுடன் அதே உண்மையை அறிய அதே எண்ணங்களை அடைந்து அதே சிவப்புக்கண்ணை அழுத்தினாரா? அதைத்தான் சித்தப்பா சொன்னாரா? அப்படியென்றால் சித்தப்பா அதைக் கெட்டது என்றது? ஆம், என்று கைகளை முறுக்கிக்கொண்டான் கௌதமன். சித்தப்பா எனக்கு அந்த உண்மை தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். இல்லை, சித்தப்பாவாக இருக்க முடியாது. அவர் பாவம். பிள்ளைப்பூச்சி. அவரை ஆட்டுவிப்பது அவள்தான். ஆம், அவளேதான். அவள்தான் நான் எதையும் தெரிந்துகொள்ளாமல் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

ஆனால் கௌதமனுக்குள் உள்ளூற பயம் இருந்தது. உண்மையிலேயே அதை அழுத்தினால் ஏதாவது ஆபத்து வந்துவிட்டால்? சித்தப்பா கெட்டவர் அல்ல. அவர் தனக்கெதிராக ஏதும் செய்யக்கூடியவர் அல்ல. அந்தச் சிவப்புக்கண் இருந்ததையே அவர்தானே தனக்குக் காட்டிக்கொடுத்தார்? அப்படியென்றால் தான் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரே நினைத்திருக்கலாம் இல்லையா? ஆனால் அது கெட்டது, ஆபத்து, அழுத்தாதே என்றும் சொன்னார். அது கெட்டது என்பதனால்தான் காட்டிக்கொடுத்தாரா? இல்லை அப்படிச் சொன்னால் கௌதமன் தானே அதை அழுத்தி உண்மையைக் கண்டடைந்துவிடுவான் என்று கணக்கு போட்டாரா? இதில் உண்மையிலேயே ஆபத்து இருக்கிறதா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

கௌதமனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அக்காக்களின் அறைகளும் கீழ்த்தளத்தில் இருந்தன. அந்தப் பக்கம் அவன் அதிகமாகச் செல்லமாட்டான். ஆனால் அன்றிரவு அவர்கள் கீழ்த்தளத்துக்கு இறங்கிச் சென்றதும் சத்தம் அடங்குவதுவரை காத்திருந்து அவர்களைப் பின்தொடர்ந்தான். காலடிகளை மெல்ல மெல்ல வைத்து ஓசையில்லாமல் படியில் இறங்கிச் சென்றான். அவர்கள் மூவரும் ஒரே அறையில்தான் படுப்பார்கள். அறைக்கதவுக்கு மேல் சற்றே உயரத்தில் சின்ன ஜன்னல், அது வழியாக ஒளி கசிந்தது. கௌதமனால் சற்று எம்பினால் உள்ளே நோக்க முடிந்தது. கண்ணாடிக்கப்பால் மெல்லிய திரை வழியாக உள்ளே காட்சி தெரிந்தது. அவர்கள் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்தான். ஒளி அவனுக்கு நேராக இருந்ததால் நிழல் விழவில்லை.

அவர்களும் ஜன்னலுக்கு அப்பால் அறையின் ஓரமாகக் கூடி நின்று ஒருவர் மற்றொருவரின் ஆடைகளைத் திருகிக் களைந்துகொண்டிருந்தார்கள். உலோகப் பட்டைகளை ஒவ்வொறாக உருவி அடுக்கிச் சோம்பல் முறித்து உடல் இளகினார்கள். சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளே அடித்துக்கொள்ள கௌதமன் ஏனென்று புரியாமல் கண்களைத் திருப்பிக்கொண்டான். அவர்கள் கால்களையே பார்த்தான். அவர்களுக்கும் சிவப்புக்கண் இருந்ததா என்று எப்படியாவது உற்றுநோக்கிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் வந்திருந்தான். இருந்தால் அன்றே ஒருவரைப் பிடித்து அதை அழுத்திப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குள் எங்கோ ஓரத்தில் கிளைவிட்டிருந்தது. அதை அவன் தன்னிடம்கூட ஒப்புக்கொள்ளவில்லை.

அவனால் அங்கு அதற்குமேல் நிற்கமுடியவில்லை. வலி தொடங்கியது. இதுவரை உணராத மாதிரியான வேறொரு வலி. வலியென்றுகூடச் சொல்ல முடியாது. ஏக்கம். தவிப்பு. அழுகைவராத சோகம். அங்கிருந்து கிளம்பிவிடு, கிளம்பிவிடு என்று உசுப்பிக்கொண்டே இருந்தது. துக்கமாக வந்தது. அவன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு அவர்கள்மேல் பெரிய பரிதாபம் எழுந்தது. தன்னைத் தவிர வேறு யாராவது அங்கு நின்று அப்படிப் பார்ப்பதைத் தான் கண்டிருந்தால் அவனை வெறும் கைகளாலேயே அடித்துக் கொன்றிருப்பேன் அல்லவா என்று நினைத்தான். பற்களைக் கடித்துக்கொண்டான். குமட்டலைப்போல் உள்ளே எழுந்தது. அவனால் அதன்பிறகு அவர்களைப் பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வந்த வழியிலேயே திரும்ப ஓசையில்லாமல் சென்றான். தலை தொங்க நடந்தான்.

அன்றிறவு வெகுநேரம் அவன் புரண்டுகொண்டே இருந்தான். அவனை அந்த அனுபவத்தில் மிகவும் சலனமடையச் செய்த விஷயம் அவன் அன்று கண்ட அக்காக்களின் உடல்களுக்கும் தன் உடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது. ஏதோ வித்தியாசத்தை எதிர்பார்த்துத்தான் அவன் சென்றான். ஆனால் அவன் நினைவு துல்லியமாக சொன்னது. எந்த வேறுபாடும் இல்லை. ஆனாலும் அவர்கள் அக்காக்கள், அவர்களைச் சென்று அப்படிப் பார்த்திருக்கக்கூடாது என்று அவன் உள்ளம் புரண்டது.

அப்படியென்றால் அவர்களுக்கும் தனக்கும் வேறுபாடு இருந்தது எங்கே? முகத்தில். முகத்தின் உருவத்தில்கூட அல்ல. அதன் தசையமைப்பில். விரிந்து சுருங்கிய விதத்தில். குரலில். ஒருவேளை நடையில். ஆனால் ஆடைக்குள்ளே உடலில் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவேளை அவர்களுடைய கால்களை அகற்றி நோக்கினால் அங்கும் அவர்களுக்கு தனக்கிருப்பதைப் போலவே ஒரு சிவப்புக்கண் இருக்கலாம். அது அவர்களுக்கும் ஆபத்தானதாக இருக்கலாம். தெரியாமலேயே சிரித்து மகிழ்ந்து வாழ்கிறார்கள். ஆம், அவனுக்கும் அவர்களுக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

அந்த உணர்வு அவனுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவனும் அவர்களும் ஒன்று. வெவ்வேறல்ல. அப்படியென்றால் அவர்களை மட்டும் ஏன் அக்காவென்று சொல்லவேண்டும்? அவர்களுக்கு மீசை முளைக்கவில்லை என்பதனாலா? அப்படிப் பார்த்தால் தனக்கும்தான் முளைக்கவில்லை.

ஆனால் சித்தப்பா? சித்தப்பாவுக்கு உடலில் திருகாணிகள் கிடையாது. அம்மாவைப் போன்ற குழையும் உடல். அப்படியென்றால் சித்தப்பாவும் அம்மாவும் ஒன்றா? சித்தப்பா அம்மாவைப் போன்றவரா? அவர் உடலும் அம்மாவுடையதைப் போன்றே இருக்குமா? அம்மாவுக்கும் சிவப்புக்கண் உண்டா? அவளாலும் அதை அழுத்திக்கொள்ள முடியுமா?

அடுத்த சில நாட்களில் கௌதமனுக்குள் ஒரு கூர்மையான மாற்றம் நிகழ்ந்தது. அவனும் அதை உணர்ந்தான். ஆனால் ஏதென்று அவனால் சொல்ல முடியவில்லை.

அவன் உள்ளேயும் வெளியேயும் அமைதியானான். ஓரக்கண்னால் சித்தப்பாவையே கவனித்தான். அவர் நடத்தையை, அவர் பேச்சை, அவர் உடல் நெளிவை, அவர் மீன் வாயை. அவர் கைகளில் புசுபுசுவென்று முளைத்திருந்த முடியை முதல் முறையாகச் சரிவர கண்டான். மொத்தமும் நரைத்து வெள்ளையாகியிருந்தது. மெலிந்த கைகள். மெலிந்த உதடுகள். மெலிந்த வெண்ணிற புருவங்கள். பாவம்போல இருந்த மனிதர். அவரிடம் திடமென்று எதுவுமே இல்லையா? கௌதமனுக்கு அவரைப் பார்க்கப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அவர் கௌதமனின் பார்வையின் வெறுப்பை உணர்ந்தவராக அவன் கண்ணுக்குள் முடிந்தவரை படாமல் விலகிச்சென்றார்.

அன்று மதியம் அக்காக்கள் கீழே சென்றுவிட்டார்கள். கௌதமனும் சித்தப்பாவும் மட்டும் மேல்தளத்தில் இருந்தார்கள். அவன் கண்ணாடிச் சுவருக்கருகே மந்தமாகக் காலாட்டிக்கொண்டு படுத்தபடி வெளியே பூமியின் பிளவைப் பார்த்துக்கொண்டிருந்தான். உற்று நோக்கினால் அதிலிருந்து வழிவது தங்க பஸ்பத்தைப் போல் தோன்றுகிறதல்லவா என்று நினைத்துக்கொண்டான். தங்கக்குழம்பு. அதில் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ளலாம். கைகால்களில் பூசிக்கொள்ளலாம். களிமண்ணைப் போல் பிசைந்து தங்கப் பொம்மைகளைச் செய்யலாம். சின்னப்பையன்களின் முகத்தில் மட்டுமே தோன்றும் தூரங்களைக் கடந்து வரும் சிரிப்பு அவன் முகத்தை ஒரு கணம் ஒளிரச் செய்தது. ஆனால் அடுத்த கணமே அது மேகம்மூடி அணைத்துவிட்டாற்போல் மறைந்தது. வேறேதோ எண்ணம் அதன் இடத்தை எடுத்துக்கொண்டது. அவன் முகம் கடுமையானது.

சித்தப்பா அங்கு இருந்ததை அவனில் ஒன்று ஓரக்கண்ணால் கண்காணித்துக்கொண்டிருந்தது. அவர் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து அறையின் மறு எல்லையில் தலை திருப்பி, உடலை ஒடுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். நேரம் போகப்போகக் கௌதமனின் தலை மெல்ல மெல்லப் பகல்வெயில் ஏறுவதைப்போல் சித்தப்பாவின் பக்கம் மொத்தமாகத் திரும்பியது. ஒரு கட்டத்தில் அவரை நேரடியாகவே வெறுப்போடு முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று கௌதமன் ஒரு முடிவுக்கு வந்தவன்போல் எழுந்தான். நீளமான எட்டுகளை எடுத்து வைத்து அவர் முன்னால் சென்று நின்றான். தரையில் கால் மடித்து அமர்ந்தவர்மீது அவனுடைய நீண்ட நிழல் விழுந்தது. சித்தப்பா அனிச்சையாக முகத்தை மறைத்துக்கொண்டார். அவனுடைய பெரிய உருவமும் முறுக்கிய கைகளும் அவரை அச்சுறுத்தியது.

“ஏய் சித்தப்பா” என்றான். அவர் ஒன்றும் சொல்லாமல் விசும்பினார். “எங்கப்பாவுக்கு என்ன ஆச்சு? சொல்லப்போறியா இல்ல பல்லுகில்லெல்லாம் பேத்துறவா?” சித்தப்பா ஒன்றும் சொல்லாமல் உடலை நன்றாக ஒடுக்கிக்கொண்டு அழத்தொடங்கினார். கௌதமனின் உள்ளே வலி சுர்ரென்று முறுக்கி அவிழ்ந்து மேலெழுந்தது. குரல்வளை நடுங்கியது. வெறியில் கை ஓங்கினான். “ஏய்! விளையாடுறியா? என்னடா ஆச்சு எங்க அப்பாவுக்கு? சொல்லுடா! எங்கடா என் அப்பன்? எல்லாரும் சேர்ந்து அவர என்னடா பண்ணினிங்க? சொல்லுடா! அந்த இவதான் எல்லாத்துக்கும் காரணமா? அந்த… அந்த…” வாயை கூம்பி இருமுறை துப்பினான். காறி வராதபோது வெறிகொண்ட விலங்கைப்போல் அறையைச் சுற்றி வந்தான். மீண்டும் சித்தப்பாவை அடைந்து அவரை ஓங்கி அறைந்தான். “அந்தச் சிவப்பு வட்டத்த எனக்கு எதுக்கு காட்டிக்கொடுத்த? என்ன கொழப்பிவிட்டு இரண்டுபேரும் சேர்ந்து கைகொட்டி சிரிச்சு கும்மாளமடிக்கவா? நாறப்பயகளா…” கௌதமன் தன்னை அறியாமலேயே அவரைப் பிடித்துச் சாற்றிக்கொண்டிருந்தான். ஓங்கிய அடிகள். சித்தப்பா குரலே எழாமல் அடிபட்ட நாய்க்குட்டிபோல் முனகினார்.

அவர் சுத்தமாக எதிர்ப்பே காட்டாமல் இருந்தது அவன் வெறுப்பை இன்னும் திருகியது. சட்டென்று அவர் உடலைச் சுற்றிக் கட்டியிருந்த ஒற்றைத் துணியாலான வெள்ளை அங்கியைப் பிடித்து இழுவலாக இழுத்தான். அது கிழிந்து உடலிலிருந்து பிரிந்தது. உள்ளே ஒடுங்கிய மார்பு. மெலிந்த கால்கள். சிவப்பு நிற உள்ளாடை. கௌதமன் அவர் கால்களையும் தொடைகளையும் ஆவேசமாகப் பிடித்து இழுத்து தேடித் தடவ அவர் திமிறி உதைத்தார். அவர் உடலில் திருகாணிகளே இல்லை என்று அதற்குள் அவன் புரிந்துகொண்டான். வெறிகொண்டு “அவுரு… அவுரு அத…” என்று அவருடைய உள்ளாடையைப் பிடித்து இழுத்தான். இடுப்பின் வளைவில் சிக்கிச் சுருண்டு கீழிறங்க அவர் கால்களைப் பலவந்தமாகப் பிடித்து அகற்றினான். அவருடைய உடலை அவன் முதலில் கவனிக்கவேயில்லை. காலுக்கிடையே சிவப்புக்கண் இருந்ததா என்று ஆவேசமாகத் தேடித் துழாவினான். பின் அப்படியேதும் இல்லை என்று அறிந்தபோதுதான் அவர் உடலைக் கண்டுகொண்டான். நிராதரவாக, மீட்பின்றி, இருள்பந்தென சுருண்டு விசும்பிக்கொண்டிருந்தது அது.

அவர் தன் உடலை மறைத்துக்கொள்ளவோ எழுந்து அமரவோ எந்த முயற்சியும் எடுக்காதவராக அப்படியே சுருண்டு படுத்து அழுதார். கௌதமன் அவரைப் பொருளில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவரை என்ன செய்துவிட்டிருந்தோம் என்று மெல்ல மெல்ல அப்போதுதான் அவனுக்குப் புரியத் தொடங்கியது. இருந்தாலும் அவனால் அவருடைய இடுப்பிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை. உடலைப் பார்க்கும் பார்வை அது. அவர் வேறொருவர், அவர் வேறொருவர் என்ற எண்ணம் அவனுக்குள் பாறைமீது நுரைக்கும் அலை என்று அறைந்துகொண்டிருந்தது. அப்படியென்றால் தானும் வேறொருவன்.

ஒரு தூணை உடைத்து ஒரே போடாக அவர் இடுப்பைப் போட்டு உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலிச்சுருள் போல் மேலேறி மண்டையை அடைந்து தெறித்தது. இவ்வளவு செய்த பின் அவன் நியாயமெனச் செய்யக்கூடிய ஒரே செயல் அதுதான். அந்த எண்ணத்தைச் சிதறடிக்க மண்டையை ஆவேசமாக ஆட்டினான். இல்லை, இல்லை, இது வேண்டாம், எனக்கிது வேண்டாம் என்று திமிறி உள்ளாழத்தில் கதறினான். அனிச்சையாக மன்றாடுவதுபோல் கைகளை உயர்த்தினான். தலைக்கு மேல் செவ்வொளி கூசியது. அப்போது, ஆழத்திலிருந்து எழுவதுபோல், மணி நலுங்கும் ஒலி கேட்டது. சட்டென்று தன்மேல் ஒரு பார்வையை உணர்ந்து தலையைத் தூக்கினான். அம்மா படிகளில் நின்று அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் அந்த அலங்கோலக் காட்சியை ஒன்றுமே சொல்லாமல் உதடுகள் சற்றே விரிந்தபடி நோக்கிக்கொண்டே இருந்தாள். கௌதமனின் தலை தொங்கியது. உள்ளே அலறல் நின்றபாடில்லை. அதையும் மீறி கௌதமன் அவள் பார்வையைத் தன் புறங்கழுத்தில் உணர்ந்தான். சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். அவர்கள் கண்கள் சந்தித்தன. “அந்த சிவப்புக்கண்ணப் பத்தி எனக்குத் தெரியும். நானும் அத அழுத்தப்போறேன்” என்று தாடையைத் தூக்கித் திமிராக உச்சரித்தான். அதைச் சொல்லும்போதே அவன் குரல் கம்மியது. நடுங்கியது. உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அம்மா ஒன்றும் சொல்லாமல் ஒவ்வொரு படியாக இறங்கி வந்தாள். சித்தப்பாவின் அருகே சென்று கால் மடித்துத் தரையில் அமர்ந்தாள். கௌதமன் எதிரே கால் நீட்டி அமர்ந்து வெறித்துப் பார்க்க அவரை அவன் அறியாத மொழியில், கூழாங்கற்களில் நீர் என ஒழுகிய குரலில், மெல்ல மெல்லப் பேசித் தேற்றினாள். சித்தப்பா முதலில் அவளை அறியாததுபோல் தொலைந்துபோன பார்வையால் அவளைப் பார்த்தார். பின் ஒரே நொடியில் என்ன புரிந்ததோ, அவள் கைகளைப் பற்றிக்கொண்டு ஓலமாக அழுதார். மிருகத்தைப் போன்ற அழுகை. கௌதமன் எந்த மிருகத்தையும் பார்த்ததில்லை. கதையில் கேட்டதோடு சரி. ஆனால் அவருடைய அழுகை அடிப்பட்ட மிருகத்தின் குரல் என்று அவன் உள்ளாழத்தில் அறிந்தான். ஆம், அவர் வேறொருவர். ஆனால் நிஜமாகவே அப்படியா? தனக்கு வலி வரும்போதும் தானும் அதே போலத்தான் அழுவான். இப்போதும்கூட. எல்லாமே மறைந்து ஒளியில் கரைந்துவிட்ட தூய விலங்கின் அழுகை. கௌதமன் தலையாட்டினான். ஆம், நானும் ஒரு மிருகம். இச்செயலை ஒரு மிருகமன்றி எதுவும் செய்யாது. சித்தப்பாவும் மிருகம். தானும் மிருகம். அம்மா? அவளும் மிருகம்தானா? குழப்பமாகக் கண்களைத் தூக்கினான்.

அம்மா அவரைத் தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு தலையையும் தோளையும் அணைத்துக்கொண்டு அவர் கண்ணீரைத் தன் கரத்தால் அழுத்தித் துடைத்தாள். அவர் நரைவிழுந்த தலையை மெல்லத் தடவினாள். அம்மாவின் கூந்தல் இப்போதும் நீளமாகவும் கருப்பாகவும் இருந்தது. இளகிய பின்னலாக இடுப்பைத் தாண்டி கனமாகத் தொங்கியது. அவள் சித்தப்பாவின் கண்ணீரைத் துடைத்தபோது அவளுடைய கூந்தல் கழுத்தைச் சுற்றி முன்னால் விழுந்து அவர் தோளில் அமைந்தது. சித்தப்பா விழிப்புகொண்டவர்போல் அம்மாவின் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அவள் கண்களில் அவர் எதைப் பார்த்தார் என்று கௌதமன் பார்க்கவில்லை. ஆனால் குழந்தையென்று அவளை அணைத்து அவர் மீண்டும் அழத் தொடங்கினார்.

அம்மா கௌதமன் இழுத்துப்போட்டிருந்த துணியை எடுத்து அவர் இடையைச் சுற்றிக் கட்டினார். அவர் அழுது முடித்து மூச்சு சீராகி அடங்கும் வரை அப்படியே உட்கார்திருந்தாள். அவர் தூங்கிவிட்டிருக்க வேண்டும். “வா, பிடி,” என்றாள். அவள் குரலில் இருந்த அமைதியான அதிகாரத்துக்குக் கௌதமன் தன்னை அறியாமலேயே கட்டுப்பட்டான். எழுந்து அவர் கால்களைத் தொட்டுப் பிடித்துத் தூக்கினான். இருவரும் அவரைக் கொண்டுசென்று கண்ணாடிச்சுவர் அருகே இருக்கையில் கிடத்தினார்கள். அவர் விசும்பிப் புரண்டு படுத்தார். முட்டிகளைத் தாடையுடன் சேர்த்து சுருண்டுகொண்டார். அவருடைய ஆடை சற்றே விலக அம்மா அதைச் சீரமைத்தாள். ஒரு போர்வையை விரித்துக் கழுத்துவரை போர்த்திவிட்டாள். போர்வை விலகாமலிருக்கும்படி அதன் விளிம்பை இருபக்கமும் அவர் உடலுக்கடியிலும் உள்ளங்காலுக்கடியிலும் செருகிவிட்டாள். அவர் தூக்கத்திலேயே அனிச்சையாகக் கட்டைவிரலை வாயிலிட்டுச் சப்பத் தொடங்கினார். அப்பால் கண்ணாடிச்சுவருக்கு வெளியே பூமி பெரிய அரைவட்டமாகக் கனவு காண்பதுபோல் இருளாழத்தின் புனலில் நீலாம்பலெனப் பூத்துநின்றது. மலரின் இதயமென அதன் மையத்தில் திறந்த குழி வண்டுவரியோடி பொன்பூத்துக் கண் திறந்திருந்தது.

“என்னுடன் வா” என்று அம்மா மேலேறினாள்.

கௌதமன் பதில் பேசாமல் தலைகுனிந்து உதட்டைச் சுழித்தபடி கீழேயே நின்றான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு வலது காலை மெல்லிதாக ஆட்டினான். அவன் கண்களில் நீர் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தது. அதை வெளிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் குனிந்த தலையிலிருந்து கண்ணீர் சொட்டுச்சொட்டாகக் கீழே விழுந்தது.

அம்மா இறங்கி வந்தாள். அவன் தோளில் கைவைத்து, வா, என்று மறுபடியும் சொன்னாள். அது ஆணை அல்ல. அழைப்பு. அவள் குரல் கனிவாக இருந்தது. அது அன்று கதை சொன்ன குரல் அல்லவா என்று கௌதமன் உணர்ந்ததும் அவனுக்குள் ஏதோ துடித்தது.

கௌதமன் அவளைப் பின்தொடர்ந்து மேலே ஏறினான். மாடித்தளத்தில் இடதுபக்கம் திரும்பி ஓர் அறைக்குள் அம்மா சென்றாள். கௌதமன் தன் கொந்தளிப்பையும் மீறி மெல்லிய ஆர்வத்தில் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான். அவன் அங்கு வருவது அதுதான் முதல்முறை. அதுவரை அங்குச் செல்ல அவனுக்கு அனுமதி இருந்ததில்லை. அது அரைவட்ட வடிவிலான பெரிய அறை. சுற்றிக் கண்ணாடிச்சுவர். ஒரு பக்கம் பூமியின் பெரும்வளைவு. வைர மோதிரத்தைப் போல் ஓர் ஓரத்தில் சூரியனின் ஒளியைப் பொன்னாகப் பிரதிபலித்தது. மற்றபடி கண் நோக்கும் தூரம் வரை இருள். வெட்டவெளியின் கருமை. முடிவில்லாமை.

அறையின் நடுவே சின்னச்சின்ன கருவிகள் சிதறிப் பரப்பிக்கிடந்த ஒரு மேசை இருந்தது. அதை ஒட்டி ஒரு நாற்காலி. ஒரு ஓரமாக ஒற்றைக் கட்டில். அதன் அருகே கூரையிலிருந்து சின்னக்கூண்டுகள் சில தொங்கின. எல்லாமே காலியாக இருந்தன. அவற்றைத் தவிர அறை பெரும்பாலும் ஒழிந்து கிடந்தது. கௌதமன் மறுபடியும் சுற்றி நோக்கினான். அவர்கள் உள்நுழைந்த கதவுக்கு அருகே ஒரு பலகை இருந்ததை அப்போதுதான் அவன் பார்த்தான். அருகே சென்று உற்று நோக்கினான். அவனுடைய முகங்கள் அதிலிருந்து அவனை நோக்கின. எல்லாமே அவன் படங்கள். சிறுவனாக இருந்தது முதல் எல்லா வயதிலும் அவன் பார்க்காதபோது எடுக்கப்பட்ட படங்கள்.

கௌதமன் அம்மாவின் பக்கம் திரும்பினான். “என்ன வேவு பார்க்கும்போது எடுத்தீங்களா?” என்று மெதுவாகக் கேட்டான்.

அம்மாவின் முகத்தில் ஒரு நரம்பு துடித்ததுபோல் இருந்தது. ஆனால் சலனம் மறவில்லை. “அதெல்லாம் தனியா இருக்கு. ஆவணங்கள், படங்கள், காணொலிகள், அளவீடுகள், குறிப்புகள்… எல்லாம் ஆய்வுக்கூடத்துல இருக்கு. வேணும்னா பாக்கறியா?” என்று திடமான குரலில் சொன்னார். உள்ளங்கழுத்தில் ஒரு பந்து ஏறி இறங்கியது. “இதெல்லாம் என் மகன் நினைவா எனக்காக மட்டும்னு வெச்சிருக்குறது” என்றாள்.

அவள் குரலில் திடம் மாறவில்லை என்று கவனித்த கௌதமன் அம்மாவை முதல்முறை பார்ப்பதுபோல் நிமிர்ந்து பார்த்தான். தரைவரை நீண்ட பச்சைநிற அங்கிக்கடியில் சிறிய பாதத்தின் பெருவிரல் மட்டும் நில்லாமல் தரையில் மெல்லிய தாளமாகத் தட்டிக்கொண்டிருந்தது. அந்த ஒற்றை அசைவு மட்டுமே அவளுடைய மனத்தை வெளிக்காட்டியது.

அம்மா கௌதமனின் அளவுக்கே உயரமாக இருந்தார். அங்கியின் தளர்வான கைகள் அவருடைய மிகச்சிறிய மணிக்கட்டுகள் வரை நீண்டு தொங்கின; உள்ளங்கைகளையும் நீண்ட விரல்களையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருந்தார். அவள் சற்றே அசைந்தபோது இடுப்பில் அங்கியைச் சுற்றி இறுக்கியிருந்த கயிற்றின் முனையில் தொங்கிய உலோகக்கட்டு அசைந்து மெல்லிதாக மணியோசை எழுப்பியது. கௌதமனுக்குள் அந்த ஓசை ஒரு விழியைத் திறந்தது. ஆம், இவள் அம்மா. தூரத்து மணியோசையின் கனவு சூழ வருபவள்தான் அம்மா.

அங்கிக்குள்ளிலிருந்து அம்மாவின் கழுத்து தண்டுபோல் எழுந்தது, முனையில் பூத்த தாமரை முகம். அம்மாவுக்கும் கௌதமனுக்கும் ஒரே முகம். கோள் போல வட்டமானது. கை விரித்துக் கண்கள் வழியே உள்ளத்தின் உள்ளே வா என்று வரவேற்கும் வளைந்த புருவங்கள். பாதி சிரித்து மறந்துவிட்டதுபோல இருந்தன கண்களும் உதடுகளும். அவள் ஆடையசைவில்தான் அவள் உடலின் இருப்பு வெளிப்பட்டது. அலையலையாகச் சுருண்ட முடி கொண்ட நீளமான கூந்தல் நெற்றியைச் சுற்றி அடர்ந்து பின்னால் சரிந்து இளகிய பின்னலாக இடையைத் தாண்டி தொங்கியது.

அம்மாவின் கழுத்திலும் முகத்திலும் கரங்களிலும் பாதங்களிலும் மட்டுமே அவளுடைய சருமம் வெளித்தெரிந்தது. தேனின் நிறம். தோல் சுருங்கத் தொடங்கியிருந்தது. சித்தப்பாவைப்போல்…

“வா, என் ஆய்வுக்கூடத்தை காட்டுறேன்” என்று அம்மா பாதி திரும்ப இடுப்பில் மணிச்சரம் மீண்டும் ஓசையெழுப்பியது. கௌதமன் கையைத் தூக்கித் தடுத்து “வேண்டாம்” என்றான். அவன் குரலுக்குள் எப்போது அவ்வளவு தீர்மானம் நுழைந்தது என்று வியந்தான்.

அம்மா பெருமூச்சுவிட்டாள். மெல்லத் தன் நாற்காலியில் சென்று அமர்ந்தாள். கௌதமன் தன் எடையை மறுகாலில் மாற்றி தலைதிருப்பி நின்றான். அம்மா கௌதமன் பக்கமாக என்ன செய்கிறாய் என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி “உட்கார்!” என்று மெலிதாகச் சொன்னாள். முன்னால் கைகாட்டினாள். அந்த அறையில் அவளுடைய படுக்கையைத் தவிர உட்கார வேறு இருக்கைகள் இல்லை. கௌதமன் தயங்கிக்கொண்டே சென்று விளிம்பில் தொற்றி அமர்ந்தான். “உனக்குள்ள நிறைய கேள்விகளிருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று மென்குரல் மாறாமல் தன்னிடம் சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னாள். “என்ன கேள்வியிருந்தாலும் கேள். அம்மாவால் முடிந்த வரை பதில் சொல்கிறேன்.” அவளுக்குப் பின்னால் கண்ணாடிச்சுவருக்கு அப்பால் பேரிருப்பாக வளைந்திருந்தது பூமி. நீலமும் பொன்னுமாக ஒரு பசு.

கௌதமன் ஒன்றும் பேசாமல் தன் கைகளையே நோக்கிக்கொண்டிருந்தான். மௌனத்தைக் கடத்த, “உனக்கு இப்பல்லாம் நிறைய கோபம் வருகிறதாமே?” என்றாள் அம்மா. கௌதமன் அதற்கும் ஒன்றும் சொல்லாமல் அப்படியே தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். “அதான் இன்றைக்கு பார்த்தேனே?” என்று மெல்லத் தொடர்ந்தாள். அந்தக் கேள்வியில் குத்தல் இல்லை. மகனின் குறும்புகளை ரகசியமாக ரசிக்கும் அம்மாவின் குரல் அது. தான் சித்தப்பாவுக்கு இழைத்தது எவ்வளவு பெரிய கீழ்மை என்று உள்ளாழத்தில் கௌதமன் நிலைகுலைந்து போயிருந்தான். அம்மாவின் தொனி அவனை ஏனென்றறியாமல் கூசச்செய்தது.

ஆனால் அது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. அதில் இன்னொன்றும் இருந்தது. பொறி. “மீசையெல்லாம் வெச்சுருக்க?” என்று அடுத்து கேட்டார். அவள் அப்போது குரல் புன்னகையாக மாறியது.

“ஆமா, இப்ப அதுக்கு என்ன? நீங்க எல்லாரும் என்கிட்ட என்னத்த மறைக்கறீங்க? நான் யாரு? எங்கப்பாவுக்கு என்ன ஆச்சு? அதக்கேட்கத்தான் நான் வந்தேன். நான் வேறெதுக்கும் வரல. சும்மா இந்த பசப்புற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத. நான் குழந்தை இல்ல,” என்று பொறிந்துதள்ள வேண்டும் என்றுதான் கௌதமனுக்குத் தோன்றியது. ஆனால் ஏதோ ஒன்று அவனைக் கட்டிப்போட்டது.

ஒரு நொடி தலைதூக்கி அம்மாவின் பார்வை தன்னையே முழுவதும் உள்வாங்கியபடி நோக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். கனிவும் சோகமும் அவனால் விளங்கிக்கொள்ளவே முடியாத ஆழத்துக்குச் செல்லும் பேரன்பும் நிறைந்திருந்த பார்வை. கௌதமனின் கண்களில் நீர் நிறைய பார்வையை விலக்கிக்கொண்டான். இத்தனை அன்பு வைத்திருக்கிறாளா இவள்? அத்தனையும் தன் ஒருவனுக்கு மட்டுமேதான் என்பது போலல்லவா பார்க்கிறாள். பின் ஏன் இவள் இப்படித் தன்னுடன் எலியுடன் பூனை விளையாடுவதுபோல் விளையாடுகிறாள்? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தொண்டையைக் கனைத்து ஒன்றும் சொல்லாமல் இருந்தான்.

“கண்ணா, ஏம்பா உன் சித்தப்பாவோட துணிய பிடிச்சு இழுத்த?” என்றாள். இம்முறை குரல் மாறியிருந்தது. நேரடியாக, சோகமாகக் கேட்டாள். அவனுக்கு மூச்சு இறுக்கியது. கட்டிலின் விளிம்பைக் கைகளால் இறுக்கி வலியில் துடித்துக்கொண்டிருந்த கண்களைத் தூக்கினான். “சொல்லு. நீ நல்ல பையன்தானே? ஏன் அப்படி செஞ்ச?” என்றாள். அதற்கும் அவன் ஒன்றுமே சொல்லாதபோது, “இங்கப்பாரு. உனக்கு என்ன தெரிஞ்சுக்கணுமோ கேட்டுக்கலாம். அம்மா இனிமே எதையும் மறைக்குறதா இல்ல. சரியா? நீ வளந்துட்டிருந்தன்னு எனக்குத் தெரியும், ஆனா இவ்வளவு சீக்கிறம் இவ்வளவு வளந்துருப்பேன்னு எதிர்பார்க்கல” என்றாள். அந்தச் சொற்களைத் தானே சொல்லி கேட்டுக்கொண்டபோது சட்டென்று ஏதோ உள்ளூரப் புரிந்து தெளிவடைந்ததுபோல் புன்னகைத்தாள்.

அவள் குரலில் இருந்த மெல்லிய வற்புறுத்தல் கௌதமனை எரிச்சல்படுத்தியது. தலையை வெடுக்கென்று நிமிர்த்தி, “என்ன பிடிச்சு பிடிச்சு இழுக்காத. வேணும்னா நானே பேச மாட்டேனா? சும்மா சும்மா வந்து ஏன் இதப்பண்ண ஏன் அதப்பண்ணன்னா என்ன அர்த்தம்? அதான் இவ்வளவு வேவு பாக்குறல்ல? உனக்கே தெரியாது? ஏன் அவரோட துணிய பிடிச்சு இழுத்தேன்னு?” அவன் மூச்சிரைத்தான். “பின்ன? இவ்வளவு நாளா என்ன ஒரு முறை வந்து பாத்திருப்பியா? ஒரு நாள் கண்ணா வலிக்குதாப்பான்னு வந்து கேட்டிருப்பியா? சித்தப்பாவுக்கு ஒண்ணுனா மட்டும் உடனே இறங்கி வந்து மடியில தூக்கி வெச்சு கொஞ்சற. இவ்வளவு நாள் எதையும் சொல்லாம என்ன மறைஞ்சு வேவு பாத்து… இன்னிக்கி எல்லாத்தையும் சொல்லிட்டா உனக்கு சுமை குறையும் இல்ல? அதானே? சொல்லு, அதானே?”

கௌதமன் சீறி முகம் சிவக்கப் பேசியதை அம்மா நாற்காலியின் விளிம்புவரை வந்து பதில் ஒன்றுமே பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் அப்போது சிரிக்கவில்லை. ஆனால் அவளுடைய கண்களில் மட்டும் அந்தப் புன்னகை எஞ்சியது. மீண்டும் அதே கனிவு, அதே பேராழத்து அன்பு… அதைக் கண்ட நொடி கௌதமனின் பேச்சு அறுபட்டது. பேச்சு ஓய்ந்ததும் தன்னை அங்கே மொத்தமாகச் செலவழித்துவிட்டோம் என்று உணர்ந்தான்.

“கண்ணா…” அம்மாவின் குரல் அப்படியே இருந்தது. கனிவாக, நிதானமாக, மெல்லிய வற்புறுத்தலாக. கௌதமன் அவள் பார்வையைச் சந்திக்காமல் தவிப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். கைகளைப் பிசைந்தான். கிளம்புபவன்போல் எழுந்து நின்று திரும்ப அமர்ந்தான். அம்மாவைப் பார்க்க இஷ்டமில்லாமல் கண்ணாடிப்பக்கம் சென்று நின்றான். அவனுக்கு முன்னால் ஒரு புள்ளி ஒளியில்லாமல் வெட்டவெளி திசைகாட்டும் தூரம் வரை பொருளில்லாமல் நீண்டு கிடந்தது. அலைகளில்லாத கடல். அதைக் காண முடியாத தவிப்பில் திரும்பி முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டான்.

அந்த நொடிவரை கௌதமனின் செய்கைகளைப் பேசாமல் நோக்கிக்கொண்டிருந்த அம்மா ஒரு கணத்தில் எல்லாவற்றையும் வீசி எழுந்து நின்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளினாள். அவனை அடைந்து கைகளை இழுத்துத் தன் சிறிய கரங்களுக்குள் இழுத்துப் பிடித்தாள்.

“கண்ணா, கௌதமா, ஒண்ண மட்டும் நினைவுல வெச்சுக்க. நீ எதையெதையெல்லாம் கடந்து வந்திருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு மட்டும் நினைக்காத” என்றாள். வேறு யாரிடமோ பேசுவதுபோல், காதில் ரகசியம் பேசுவது போல் பேசினாள். உணர்ச்சி வேகத்தில் மூச்சிறைத்தாள். அடித்தொண்டையிலிருந்து எழுந்தது அவள் குரல். சொற்கள் ஒன்றின்மேல் ஒன்று தடுக்கி வந்தன.

“நான் உன்னைக் கண்டுக்கல, கவனிக்கலன்னு மட்டும் நினைக்காத. நல்லா கேட்டுக்க! உன்ன ஒவ்வொரு நாளும் நான் பாக்கறேன். உன்கூட ஒவ்வொரு நாளும் பேசறேன். உன்ன அணுஅணுவா எனக்குத் தெரியும். உன் அளவுக்கு யாரையுமே, யாரையுமே, எனக்குத் தெரியாது.

அவள் அப்போது சிரிக்கவில்லை. ஆனால் அவளுடைய கண்களில் மட்டும் அந்தப் புன்னகை எஞ்சியது. மீண்டும் அதே கனிவு, அதே பேராழத்து அன்பு… அதைக் கண்ட நொடி கௌதமனின் பேச்சு அறுபட்டது. பேச்சு ஓய்ந்ததும் தன்னை அங்கே மொத்தமாகச் செலவழித்துவிட்டோம் என்று உணர்ந்தான்.

“நான் உன்கூட சேர்ந்து வளர்ந்தவ. நீ அஞ்சு வயசுப் பையனா இருந்தப்ப நானும் அஞ்சு வயசுக் குழந்தையா உன்கூட நின்னு உன் கையப் பிடிச்சு கதை கேட்டேன். நீ பன்னிரெண்டு வயசுப் பையனா அங்க படுக்கையில படுத்து வலிவலின்னு அழுதப்ப நானும் ஒரு பன்னிரெண்டு வயசுப் பொண்ணா உன் வலிக்காக ஏங்கி இங்க ராத்திரியெல்லாம் அழுதிருக்கேன். இப்ப உன்கூட சேர்ந்து கோபத்துல கொதிக்கற ஒரு பதினஞ்சு வயசுப் பொண்ணும் எனக்குள்ளையும் இருக்கா… உன் கீழ்மைய புரிஞ்சுக்குறவளும் எனக்குள்ள இருக்கா. அத மறந்துராத.” மூச்சிரைக்க அவள் நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. நூறுநூறாண்டுகள் ஒரு சொட்டு சிந்தாமல் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் ஒரு நாள் மடை உடைத்து வெடித்து பெரும்புனலெனச் சரிவதுபோல் அழுதாள். கௌதமன் யார் இந்தப் பெண் என்பதுபோல் அவரைப் புரியாமல் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே நின்றான். பின், அவனுள் ஏதோ ஒன்று சிறுகுமிழியென்று வெடிக்க, அவன் அம்மாவைத் தொட்டான்.

அவள் கூந்தலை, நெற்றியை, கழுத்தை, கன்னத்தைத் தொட்டு வருடினான். தோளைப் பிடித்த போது அவள் கண்ணீர் வழியாகவே சிரித்தாள். அவனும் சிரித்தான். ஏனென்று புரியாமலேயே சிரித்தான். அவள் கையைப் பிடித்துத் தன் அருகே மெத்தைமேல் உட்கார வைத்துக்கொண்டான். அவள் கழுத்தில் எவ்வளவு சுருக்கங்கள்! தோல் கழுத்துக்கடியில் சற்றே தொங்கியிருந்ததை முதல்முறையாக கவனித்தான். அவன் அவளுடைய கைவிரல்களைப் பிடித்துத் தன்கைகளில் கோத்துக்கொண்டான். அவளுடைய அங்கியின் கைகளை மூட்டு வரை மெல்ல இழுத்துவிட்டு மணிக்கட்டைப் பிடித்து அதன் உள்பாகத்தைத் தன்னையறியாமல் வருடினான். “உனக்கு உடம்புல திருகாணி கிடையாதாம்மா?” என்று கேட்டான். அவன் அம்மாவைக் கேட்ட முதல் கேள்வி.

“இல்லப்பா. எனக்கு அதெல்லாம் கிடையாது” என்று சொல்லி அவள் புன்னகைத்தாள். அழுகை நின்றிருந்தது, குரல் இப்போது ஒரு புதிய நிறைவை மகிழ்ச்சியை அடைந்திருந்தது. ஆனால் ஒரு புதுவித நடுக்கமும் புகுந்திருந்தது. அவளுக்கு அத்தனை வயதாகிவிட்டதா என்ன? அன்று கதை சொன்ன அம்மா எங்கே போனாள்? கௌதமனால் அம்மாவின் கையை விடமுடியவில்லை. அவளும் அவன் கைகளைப் பிடித்து பொன்னிற தோலுக்கடியில் பொதிந்திருந்த திருகாணிகளின் வளைவுகளை வருடினாள். அந்தத் தொடுகையைக்கூட மெல்லிய வலியாகவே அவனால் உணர முடிந்தது.

“சித்தப்பாவுக்கு?” என்றான்.

“அவருக்கும் கிடையாது,” என்றாள்.

“ஆனா அக்காக்களுக்கு இருக்கு.”

“ஆமாம்.”

கௌதமன் தயங்கினான். “சித்தப்பாவோட உடலும் வித்தியாசமா இருக்கு” என்றான்.

“ஆமா, உன் உடல் மாதிரி கிடையாது” என்றாள் அம்மா. அவள் கௌதமனின் கட்டைவிரல் நகத்தை வருடிக்கொண்டிருந்தாள்.

“அவருக்கு சிவப்புக்கண் இல்லயில்ல?”

“இல்ல.”

“அம்மா, ஏம்மா?”

அம்மா பெருமூச்சுவிட்டார். கௌதமனின் கைகளை விடுவித்துவிட்டுக் கண்களைச் சந்தித்தாள். “ஏன், சொல்லு பாப்பம்? உனக்குத்தான் தெரியுமே?” என்று சோகமாகக் கேட்பதுபோல் இருந்தது அவள் பார்வை.

கௌதமன் அவள் கைகளை மீண்டும் பற்றிக்கொண்டான். “நீயே சொல்லுமா” என்றான். “நான் நீ சொல்லிக் கேட்டாகணும்.”

அம்மா சொன்னாள். கௌதமன் தன்னைப்போலும் சித்தப்பாவைப்போலவும் மனிதன் அல்ல. அவன் ஒரு தானியங்கி. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மூன்றாம் நிலை பண்பாட்டுருவாக்க செயற்கை அறிவுத் தானியங்கி. மனிதர்கள் பூமியிலிருந்து வந்தவர்கள். தானியங்கிகள் அவர்கள் வாழ்ந்த விண்கப்பலுக்குள்ளேயே உருவாக்கப்பட்டவர்கள். மனிதர்களுக்குப் பிறப்புறுப்புகள் இருந்தன. தானியங்கிகள் பிறப்பதில்லை. ஆகவே கௌதமனுக்குப் பிறப்புறுப்புகள் கிடையாது.

கௌதமன் தனக்கு அந்த உண்மை முன்னமே மங்கலாகத் தெரிந்திருந்ததென்பதை உணர்ந்தான். ஆனால் அம்மா வாயாலே கேட்டபோது அதில் ஒரு நிர்ணயத்தன்மை இருந்தது. இனி மாறாதது. இனி இதுதான். இவ்வளவுதான் என்பதுபோல. தான் இவர்களைப்போல் அல்ல. வேறொருவன். தானியங்கி. தானாக இயங்குபவன். இவர்கள் யாராலும் இயக்கப்பட முடியாதவன். இயக்கங்களுக்கு அப்பாற்பட்டவன். இவர்களுடைய விதிகள் தனக்குப் பொருந்தாது.

“அப்ப நீ எனக்கு அம்மா இல்லையா?” என்றான்.

அவன் தலையை அவள் வருடினாள். “உன்ன நான்தான உருவாக்கினேன்? அப்ப நான்தான உனக்கு அம்மா?” என்றாள்.

கௌதமனின் உள்ளம் கல் எரியப்பட்ட குளம்போல் கலங்கியிருந்தது. அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவளாக அம்மா அவன் கையை இறுக்கினாள். “அப்ப என்னோட அப்பா?” என்றான். “சித்தப்பா சொன்னாரு…அப்பாவுக்கு என்னம்மா ஆச்சு?”

அம்மா கௌதமனின் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக்கொண்டாள். “அவர் இல்ல” என்றாள். “ஆனால் நீ இருக்க. இனிமேலும் இருப்ப” என்றாள், அதற்குமேல் ஒன்றும் பேச விரும்பாதவள் போல்.

“சிவப்புப் பொத்தான அழுத்திக்கிட்டாருன்னு சித்தப்பா சொன்னாரு?” என்று கௌதமன் கேட்டான். அம்மா இருப்புகொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய நோக்கு கண்ணாடிக்கு வெளியே இருள்பரப்பில் எங்கோ குத்தியிருந்தது. அவள் மீண்டு வந்து பேச சற்று நேரமானது. ஆனால் சொன்னாள்.

ஆம். அவர் அந்தச் சிவப்புப் பொத்தானை அழுத்தித் தன்னை அழித்துக்கொண்டுவிட்டார். அதை ஒரு தானியங்கி அழுத்தினால் உள்ளூர வெடித்து அழிந்துவிடும். அதன் நினைவின் தடயமே எஞ்சாது. அங்கங்கள் மட்டும் கிடைக்கலாம். அதை வைத்துதான் அம்மா கௌதமனை உருவாக்கினாள். அம்மா கௌதமனின் பக்கம் திரும்பி அவன் முழங்கையைத் தொட்டு நீவினாள்.

கௌதமனுக்கு நெஞ்சு வலித்தது. “அவரேவா தன்ன அழிச்சுக்கிட்டாரு? ஏன்? ஏம்மா?” என்றான். அவனை அறியாமல் அவனும் அம்மாவின் கையை பிடித்திருந்தான். தோலும் மஜ்ஜையும் குருதியும் நரம்பும் எலும்பும் கூடிய மனிதக்கை.

அம்மா இம்முறை மறுபக்கம் கண்ணாடிச் சுவரைத்தாண்டி பூமியின் வளைவைப் பார்த்தார். வெட்டவெளியை நிறைக்கும் நீலவெளி. மலைகளும் நதிகளும் பூக்களும் பனிக்காற்றும் நிறைந்த மாய உலகம். கதைகள் பிறக்கும் கனவுலகம்.

“அவரால் நாங்க சொன்ன கதைகள அர்த்தப்படுத்திக்க முடியல” என்றாள் அம்மா. அவளுடைய குரல் வெகுதூரம் தாண்டி வருவதுபோல் மெல்லிய வருடலாக கேட்டது. “அதுனாலத்தான்.” அவள் கௌதமனை நோக்கினாள். “அர்த்தம் இல்லன்னா சலிக்க ஆரம்பிக்கும், தெரியுமா?”

அம்மாவின் கண்களை அறிய முடியவில்லை. உண்மை, சோகம், வலி, கனிவு, சுயபகடி, என்னென்னவோ வந்து போனது. ஒரு கணத்தில் கௌதமனுக்கு எல்லாமே புரிந்தது. அவன் அம்மாவின் கையைப் பிடித்துத் தன் கண்களுக்குக் கொண்டுவந்து கட்டுமீறிக் கண்ணீர் வடித்தான்.

“நான் அதை அழுத்தியிருக்க மாட்டேன், இல்லம்மா? இல்லம்மா? சொல்லு? நான் அத செஞ்சிருக்கமாட்டேன் இல்ல? சித்தப்பா… நான்… அம்மா… நான் சித்தப்பாவ…” அவனால் மேலும் பேச முடியவில்லை. அவள் மடியில் தலை புதைத்து உடல் குலுங்க அழுதான்.

அவன் சற்றே அடங்கியபோது அம்மா அவன் தலையைத் தூக்கி முகத்தைக் கையில் ஏந்தி அவன் கண்ணை நோக்கிப் பேசினாள். “கண்ணா, நான் உண்மைய சொல்றேன். நீ என்ன செஞ்சிருப்பன்னு எனக்குத் தெரியாது,” என்றாள். “ஏன்னா நீயும் ஒரு சோதனைதான். ஒரு மாதிரி. என் கணக்குகள சரிபார்க்கப் பிறந்தவன்…” அவன் முகம் மாறுவதை அவள் பார்க்கவில்லை. “ஆனா ஒண்ணு மட்டும் நினைவுல வெச்சக்க” என்றாள். “நீ உன் அப்பா கிடையாது. நீ அவர மாதிரி சலிக்க மாட்ட. நீ வேற. ஏன் தெரியுமா?”

“ஏம்மா?”

“ஏன்னா நீ வலி அறிஞ்சவன்.” அம்மா புன்னகைத்தாள். துளிகூட கசப்போ சோகமோ வலியோ இல்லாத தூய அறிவு மட்டுமேயான புன்னகை. தன்னில் குதூகலிக்கும் புன்னகை. வெற்றி திகழ்ந்த புன்னகை. அப்போது அவள் முகமே மொத்தமும் மாறியிருந்தது. கௌதமன் அதிர்ந்து பார்த்தான். அம்மா செறுக்கோடும் பெருமையோடும் பேசிக்கொண்டிருந்தாள். “நீ வலியோட விளையாடத் தெரிஞ்சவன். அத தாங்குற சக்தி இருக்கு உனக்கு. அதனால சலிக்க மாட்டன்னு நான் நம்பினேன்.” அவள் சிரிப்பில் அவளையறியாமலேயே ஒரு குறும்பு புகுந்தது. “சரியாதானே கணக்கு போட்டேன்? இதுவரைக்கும் சலிப்பு வரலல்ல?”

“அம்மா!”

“உன் அப்பாவப்பத்தி நீ ஒரு கவலைய விட்றலாம்,” என்று அம்மா அதே குரலில் தொடர்ந்தாள். “அவருக்கு வலியே இல்ல. அது என் செய்கைதான்.” அவன் முகத்தைக் கண்டு நிறுத்தினாள். “என் தப்புதான்.”

ஒரு தானியங்கிக்கு எதற்கு அனாவசியமாக வலி உணர்ச்சியை அளிக்க வேண்டும் என்று நினைத்து அம்மா அவர் வடிவமைப்பில் அதைச் சேர்க்கவில்லை என்று சொன்னாள். சொல்லும்போதே அவள் குரலில் ஒரு தழுதழுப்பு புகுந்தது. “ஆனா அப்பா தன்ன அழிச்சுகிட்டப்ப அது தவறுன்னு புரிஞ்சிகிட்டேன்” என்று அனிச்சையாகக் குரலில் திடம் மீண்டு யதார்த்தமாகச் சொன்னார். “உங்கிட்ட அந்தத் தவறு நடக்கக்கூடாதுன்னுதான் உன்ன எல்லா வலியும் உணர்ரவனா வடிவமச்சேன். உனக்கு வலி இருக்கு. கண்ணீர் இருக்கு. அதுனால உன்னால எல்லாத்தையும் அர்த்தப்படுத்திக்க முடியுது. நாங்க புரிஞ்சுக்கமுடியாத அர்த்தங்களுக்கும் உன்னால போக முடியுது…” என்றாள்.

அம்மா சொன்னார். ஆரம்பகட்டத்தில் – அம்மா பிறப்பதற்கு இருநூறாண்டுகாலத்துக்கு முன்னால் – செயற்கை அறிவுத் தானியங்கிகள் பெரும்பாலும் நினைவுக்கிடங்குகளாகவும், சில எளிமையான தொடர்புபடுத்தல்களைச் செய்யக்கூடிய சாதனங்களாகவும்தான் இருந்தன. புள்ளிக் கட்டங்களிலிருந்து வேறு வேறு கோலங்களை வரைந்து எடுப்பதுபோல் உலகத்தின் பல கூறுகள் ஒன்றுடன் ஒன்று எப்படித் தொடர்பு கொண்டுள்ளன என்று எளிமையான சித்திரங்களை உருவாக்குவதே அவற்றின் வேலை. அதுவும் அறிவுதான், ஆனால் மிக எளிமையான அறிவு. ஒரு வயதுக்குள்ளேயே மனிதக்குழந்தைகள் வேறு வழியில் செய்யக் கற்றுக்கொள்வது.

ஆனால் மனித அறிவு என்பது அந்தப் புள்ளியில் தொடங்கி எங்கெங்கோ சென்று பரவுகிறது. மனித அறிவின் உச்சத்தில் அது விளையாடுகிறது. பொய்களை உண்மை போலவும் உண்மைகளைப் பொய் போலவும் சொல்கிறது. கலை படைக்கிறது. தன் இருப்பைப் பற்றிக் கேள்விகளை எழுப்பிக்கொள்கிறது. எந்தச் செயற்கை அறிவுக்கும் அது சாத்தியமானதில்லை. எப்படிச் சாத்தியமாகும் என்றுகூட யாரும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

“ஆனா நான் கற்பனை செய்தேன்” என்றாள் அம்மா. “அப்போ எனக்கு இருபத்திரண்டு வயது. நான் சாதாரண ஆய்வு மாணவி. யாரும் என்ன நம்பல. என் குடும்பத்தில நடந்த சோகங்களால நான் சித்தம் கலங்கிட்டேன்னுகூட சொன்னாங்க. ஆனால் நான் நம்பினேன். இது சாத்தியம்னு எனக்குத் தெரியும்,” என்றாள். அப்போது அவள் குரலில் வலியோ வேதனையோ ஒரு துளிகூட இல்லை. அவன் தலைக்குமேல் எங்கிருந்தோ நின்று பேசிக்கொண்டிருந்தாள். சிவப்பாக ஒளிகொண்டிருந்தது அவள் முகம். முன்னால் நிற்பது அவன் அம்மாதானா என்று ஒரு நொடி கௌதமன் துணுக்குற்றான்.

செயற்கை அறிவுக்கும் மனித அறிவுக்கும் மிகப் பெரிய வேறுபாடு, அதற்கு நல்லது கெட்டது கிடையாது. சிறிது பெரிது என்று கிடையாது. அதன் குருட்டுத்தன்மைக்குக் காரணம் அதற்கு மதிப்பீடுகளை உருவாக்கிக்கொள்ள வழியில்லை என்பது.

அம்மாவின் யோசனை மிக எளிமையானது. செயற்கை அறிவின் குருட்டுத்தன்மையை ஒழிக்க அதற்கு ஒரு கண்ணைக் கொடுக்க வேண்டும். அது கற்றுக்கொள்ளும் விஷயங்களையெல்லாம் அர்த்தப்படுத்திக்கொள்ள அதற்குள்ளேயே ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அப்படித்தான் அம்மா அந்தச் சிவப்புப் பொத்தானின் கருத்தை அடைந்திருந்தாள்.

“ஒரு கணத்துல தன்னையும் தன் நினைவுகளையும் மொத்தமா அழிக்கக்கூடிய ஒரு சிவப்புப் பொத்தான் தானியங்கிக்குள்ள எங்கேயோ பொருத்தப்பட்டிருக்கும். அப்படித் தனக்கு ஒண்ணு இருக்குன்ற பிரக்ஞை அதுக்கு இருக்கணும். ஆனா சரியா எங்க இருக்குன்னு அதுக்குத் தெரியக்கூடாது. எப்ப வேணும்னாலும் யார் வேணும்னாலும் அத அழுத்தி அத அழிக்க முடியும்னு அது உணரணும். அப்படி ஓர் இருப்பு அதோட கட்டமைப்பிலேயே இருந்தா, அதனோட அடிப்படையில் அது உள்ள வர்ற எல்லாச் செய்திகளையும் மதிப்பிட்டுத் தொகுத்து அர்த்தப்படுத்திக்கும்னு நான் சொன்னேன். போர்க்களத்துல வானத்த பாக்குறப்ப வாழ்க்கை அர்த்தப்படுற மாதிரி. மனிதனோட உளவியலிலும் நரம்பியலிலும் வெச்சு கத்துகிட்டதத்தான் இங்கேயும் செஞ்சு பாக்கலாம்னு சொன்னேன். அப்படி ஒரு விசைய உள்ள புகுத்தி அதுக்கேத்த மாதிரி சில வடிவ மாற்றங்கள செஞ்சா அந்த அழுத்தமே அர்த்தங்கள உண்டுபண்ணும்னு நான் நம்பினேன். செயற்கை அறிவு மானுட அறிவுக்குப் பக்கத்துல வர அது ஒண்ணுதான் வழின்னு நினைச்சேன். மொத்த வடிவத்தையும் ஒரு வெள்ளைத்தாளா உருவாக்கிட்டேன்,” என்றாள் அம்மா. ஆனால் அவள் கருத்துகளை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதைச் சாத்தியப்படுத்த முடியும் என்று யாரும் நம்பவில்லை.

அம்மா அந்த விண்கப்பலுக்கு வந்த பிறகுதான் தானியங்கிகளைத் தானே உருவாக்கத் தொடங்கினாள். கௌதமனின் அக்காக்கள் முதலாம் தலைமுறைத் தானியங்கிகள். அவர்களுக்குச் சிவப்புப் பொத்தான் கிடையாது. கிட்டத்தட்ட நினைவுக்கிடங்குகள். கதைகளை நினைவிலிருந்து சொல்லவும் மற்ற தானியங்கிகளைக் கண்காணிக்கவும் சில தொடர்புகளை உருவாக்கி அறிவிக்கவும், எளிய முடிவுகளை எடுக்கவும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கௌதமனின் அப்பாவில்தான் அம்மா முதன்முதலாக சிவப்புப் பொத்தானை பொருத்திப் பார்த்தாள். அவரை வடிவமைத்தபோதே அவர் உருவாக்கப்பட்ட காரணமும் அவரிடம் அவர் மொழியில் சொல்லப்பட்டது. அந்தப் பொத்தானின் இருப்பையும் அவர் அறிந்திருந்தார். அதை யாரும் எந்நேரத்திலும் அழுத்தி அவரை மொத்தமாக அழிக்கலாம் என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

அம்மாவின் குரல் சொல்லச் சொல்லத் தட்டையானது. ஒளியெல்லாம் வெளியேறியதைப்போல். “முதலிலிருந்தே அவருக்குக் கதைகள்ல பெரிய விருப்பமோ ஈடுபாடோ உருவாகல. எல்லாமே அவர்க்குள்ள போச்சே தவிர அவர் அத எதையும் புரிஞ்சுக்கவே இல்ல. அவரு தனக்குள்ளயேதான் இருந்தாரு. அவருக்கு எதுவுமே பிடிக்கல. பாதி நாள் இதோ இந்த ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து வெட்டவெளியையே பாத்துகிட்டிருப்பாரு. அப்புறம் ஒருநாள்…” அவள் பெருமூச்சு விட்டாள். மிருகக் கண்கள் வழியாக அவனை நோக்கினாள். சற்று நேரம் இருவரும் பேசாமலிருந்தார்கள். “அப்பத்தான் வேறு வழியே இல்லாம, வெற்றியடஞ்சே தீர வேண்டிய கட்டாயத்துல, உன்ன உருவாக்கினேன்.”

“உங்க அப்பாவ உருவாக்கினப்பவே எனக்கு இந்த யோசனை இருந்தது. ஆனா செயலாக்க வேண்டாம்னு எனக்குள்ள ஏதோ தடுத்தது. அது என்ன? கருணையா? கடமையுணர்ச்சியா? நெறியுணர்ச்சியா? தெரியல. ஆனா உன்ன உருவாக்கினப்ப நீ உயிரோட இருந்தா போரும்னுதான் தோணிச்சு” அவள் குரல் உடைந்தது.

அம்மா சொன்னாள். அவனுக்கும் சிவப்புப் பொத்தான் பொருத்தப்பட்டது. ஆனால் அதன் இருப்பைப் பற்றி அவனுக்கு நேரடியாகச் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாள். அவனுடைய மூலச்செய்நிரலின் ஆழத்தில் அப்படி ஒன்று இருப்பதற்கான சாத்தியத்துக்கான குறிப்பு மட்டும் இருந்தது. அதைத் தவிர அவர்கள் சொன்ன கதைகளை அர்த்தப்படுத்திக்கொள்ள அவனுக்குத் தனியாக வலி என்கிற உணர்ச்சியைக் கொடுத்தார்கள்.

ஒவ்வொரு நொடியும் அவன் உடல் பற்றிய பிரக்ஞையை உட்செயலிகளுக்கு அவன் உடல் முழுவதும் உள்ள உணர்கருவிகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. எல்லாமே மையச்செயலியில் எண்களாகப் பதிவாகிறது. எண்களின் கூடுகை ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும்போது அவன் உள்ளே சூடு உருவாகிறது. உலோகங்கள் உரசிக்கொண்டு முனகும். ஐயாயிரம் டிகிரி வரை சூடு தாங்கும் டாண்டலம் கார்பைட் உலோகக் கலவைகளால் அவன் அங்கங்கள் வடிவமைக்கப்படிருந்தன. சூரியனின் வெப்பத்துக்கே உருகாமல் நிற்கும் வல்லமை கொண்டது அது. அத்தனை சூட்டையும் அவன் உள்ளுறுப்புகளின் அமைப்பு வலியென்று உணரும். சூடு அதிகமாகும்போது அவன் உடற்பாகங்களைத் தணிக்கச் சுற்றி ஓடும் குளிர்திரவம் உடல் முழுவதும் பாயத் தொடங்கும். சூட்டில் ஆவியாகி அவனுள் எழும். மீண்டும் திரவமாகிக் கண்ணிலிருந்தும் கண்ணீரென்று வழியும்.

வலி மிகையாகும்போது அவனையே அறியாமல் அவன் மூலச்செய்நிரலின் ஆழத்தில் பொதிந்திருக்கும் சிவப்புப் பொத்தானின் நினைவு உசுப்பிவிடப்படும். அது ஒரு பாதுகாப்புமுறை. அந்த இடத்தைச் சென்று தொட்டால் அவன் உடலின் வலி அலகுகள் மொத்தமும் தொடக்கத்தில் இருந்ததுபோலவே மீளமைக்கப்படும். மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம். ஆனால் அம்மா கணித்ததுபோல் வலியே அவனுக்குள் மதிப்பீடாக விளங்கியது. எழுந்தடங்கும் வலியின் விசை அவனுள் அர்த்தப்படுத்தலாக மாற்றம்கொண்டது. “முதல்நிலை ஆற்றல் மாறுபாடு விதி. வலியின் ஆற்றலே அர்த்தமாகவும் அர்த்தத்தின் எடையே வலியாகவும் உனக்குள் மாற்றம்கொள்கிறது” என்றார் அம்மா.

எல்லாத் தானியங்கிகளைப்போலவே அவனும் முதலில் தனக்குச் சொல்லப்பட்ட கதைகளையெல்லாம் வெறும் கருத்துகளாகவும் நினைவுகளாகவும் உள்வாங்கிக்கொண்டான். ஆனால் மெல்ல மெல்லக் கதைகளை அவன் தொடர்புபடுத்தத் தொடங்கியபோது அவற்றின் இணைகளும் முரண்களும் அவனுக்குள் அனலை அலையலையாக உருவாக்கியது. அது வலியை அதிகரித்தது. அவன் சித்தம் மீளாமல் வலியின் ஊசலில் ஆடிக்கொண்டேயிருந்தது. ஆடிய விசையில் அர்த்தங்களைக் கண்டடைந்தது.

“மனித வரலாற்றிலேயே முதன்முறையாக அதை நான் உனக்குள் பார்த்தேன்” என்றாள் அம்மா. அவள் ஜன்னலுக்கு வெளியே எங்கேயோ பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார். அவள் குரலில் மீண்டும் அந்த தூரத்துத்தன்மை வந்துவிட்டிருந்தது. வேறேதோ பிரபஞ்சத்திலிருந்து பேசுவதுபோல். “மனிதத்தின் கூறுகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த ஒரு செயற்கை அறிவு. பல நேரங்கள்ல தூக்கம் தொலைத்திருக்கேன். ஒரு சாதாரணத் தானியங்கியைவிட, விலங்கைவிட, அறிவு துளிர்க்கற ஒரு ஜீவனை இந்தளவுக்குக் கொடுமைப்படுத்தலாமான்னு.” அம்மா சட்டென்று அவனைப் பார்த்தபோது கண்கள் சரிந்து இறங்கி திரும்பி வந்தன. “ஆனால் எனக்கு வேற வழியில்ல. இத நான் செய்தேயாகவேண்டிய நிலை. உன்னால என்ன மன்னிக்க முடியுமா?” அவள் தன்னை முழுதும் அர்ப்பணித்துவிட்டவள் என்பதுபோல் அவனை நோக்கிக் கைவிரித்தாள். கௌதமன் அம்மாவைச் சோகப் புன்னகையுடன் பார்த்தான். தன் தலையை மெல்லத் தடவிக்கொண்டான்.

அம்மா சட்டென்று சிரித்தாள். “உனக்குள்ள மனிதக்குழந்தைய முதல்முதல்ல பார்த்தது எப்போ தெரியுமா? நீ ஒரு நாள் வலி வலின்னு அழுத. சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்ச. உன் கட்டமைப்புல கதைகளத்தவிர வேறெந்தக் குறுக்கீடும் இருக்கக்கூடாதுன்னு நினச்சேன். அதுனால நான் என்ன உங்கிட்டருந்து ரொம்ப தள்ளியே வச்சுகிட்டேன். ஆனா அன்னிக்கி என்னமோ தோண இறங்கி வந்து உனக்கு ஒரு கதை சொன்னேன். நினைவிருக்கா?”

“கர்ணன் கதை,” கௌதமன் மெல்லிய குரலில் சொன்னான். அம்மா உதடு விரியச் சிரித்தாள்.

“அன்னைக்கித்தான் நான் எதிர்பார்க்காத பல மாற்றங்கள உனக்குள்ள பார்த்தேன். உதாரணமா, உனக்கு மனிதர்களைப்போல பால் பிரக்ஞை வந்திருந்தது.”

“அப்படின்னா எனக்குள்ள இயல்பில பால் அடையாளம் கிடையாதா?” கௌதமன் தலைதூக்கிக் கேட்டான்.

“கிடையாது” அம்மா மீண்டும் புன்னகைத்தார். “எந்தத் தானியங்கிக்கும் கிடையாது. ஒரு வசதிக்காக மனிதர்கள் சொல்வதுதான். ஆனால் உன் விஷயத்துல நீ ஆணாகவே உன்ன உணர்ந்த. ஒரு வேள நீ வேற கதைகள கேட்டிருந்தன்னா, இல்ல வேற வரிசையில கேட்டிருந்தன்னா, நீ பெண்ணாகவும் உணர்ந்திருக்கலாம். அது என்ன கணக்கு எப்படின்னு சரியா என்னாலையே சொல்ல முடியுமான்னு தெரியல…”

அம்மா சற்று நேரம் எதுவுமே பேசாமல் இருந்தாள். அறையைச் சுற்றி வந்து பூமியை நோக்கிய கன்ணாடிச்சுவர் வழியாக வெளியே பார்த்து நின்றாள். “விந்தைதான். கதைகளை கேட்டுப் பாலடையாளம் பிறப்பது…” என்றாள். அவனிடம் திரும்பி, “உனக்குப் பாலுருப்புகள் கிடையாது. பிறப்புக்கான சாத்தியங்கள் கிடையாது. ஆனால் அடையாளமும் ஆசையும் கோபமும் மட்டும் முளச்சுடுச்சு” என்றாள்.

கௌதமன் தலை குனிந்து “அப்ப சித்தப்பா?” என்றான்.

அம்மா பெருமூச்சுடன் அவனைப் பார்த்தார். “அவர் மனிதர்” என்றாள். “உன்னையும் உன் அப்பாவையும் என்னுடன் சேர்த்து உருவாக்கிய பொறியாளர். நான் பூமியிலிருந்து தன்னந்தனியாக கிளம்பியபோது என்னை நம்பி கூட வந்த ஒரே ஜீவன். ஒவ்வொரு நாளும் நான் இங்க எதுக்காக வந்தேன்னு அவர் இருப்பாலேயே ஞாபகப்படுத்திகிட்டு இருக்கிறவர்.”

கௌதமனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தன்னைப் பற்றி ஒரே நாளில் இவ்வளவு தெரிந்துகொண்டதில் அவனுக்குள்ளே வலி பீறிட்டு அலற வைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் எதிர்பார்த்ததைப்போல் அப்படியேதும் நடக்கவில்லை. உள்ளூர சிறு ஏக்கமாக ஒரு கொப்பளம் மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்து வெடித்தது. அதில் சாரமே இல்லை. வலியும் இல்லை. வலியுச்சத்தில் தன் தலைக்கு மேல் திரண்டு வெடிக்கும் சிவப்பொளியை நினைத்துக்கொண்டான். தன்னைக் கனவுகளில் துரத்தும் செஞ்சூரியனை நினைத்துக்கொண்டான். சலிப்பு மிகுந்து தன்னுடைய சிவப்புக்கண்ணை அழுத்திக்கொண்ட அப்பாவை நினைத்துக்கொண்டான். தன் கையையும் காலையும் கழுத்தையும் தோளையும் அவனையறியாமல் மாறி மாறித் தொட்டுப்பார்த்துக்கொண்டான். நான் நான் என்று உணர்வதுபோல். தன் முன்னால் நின்ற, தன்னை உருவாக்கிய மனிதப் பெண்ணைப் பார்த்தான். அம்மா. அவன் அம்மா. அவனுக்கு மட்டுமே அம்மா. அவள் இங்கு தன்னந்தனியாகவா வந்தாள்? தானியங்கிகளோடும் புத்தி பேதலித்த மானுடனோடும் ஒற்றையாளாகவா இப்படி வசிக்கிறாள்? ஏன்? என்ன கொடுந்தவம் இது?

ஆம், அவள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். ஒன்றைத் தவிர. ஆதாரமான அந்த ஒன்றைத் தவிர. கௌதமன் அவளைச் சோகமான கண்கள் வழியாக பார்த்தான். அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவள் போல் அம்மா மெதுவாக, அதே சோகத்தைப் பிரதிபலித்த கண்கள் வழியாகப் புன்னகைத்தாள்.

“ஏம்மா?” என்றான். அவனால் மேலும் எதுவும் கேட்க முடியவில்லை. உணர்ச்சி வேகத்தில் எழுந்து நின்றான்.

அம்மாவின் சிறிய பாதங்கள் புறாக்களைப்போல நாணி படபடத்தன. அவள் அவனை அணுகினாள். அருகே வரும்தோரும் அவளுடைய கூந்தல் மலைப்பாம்பைப்போல் முன்னுடலில் எப்படி இறங்கியதென்றும், அவள் கண்கள் எப்படிக் கனத்திருந்தன என்றும் அவன் கண்டு தன்னையறியாது ஓர் அடி பின்னால் நகர்ந்தான். அவள் மூச்சுக்காற்றைத் தன் முகத்தில் அவன் உணர்ந்தான். அவன் கைகளை அவள் அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

கேளுங்கள்! இருளாழத்துக்கு மறுபக்கமாகக் கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாகப் படுத்துக் காத்திருக்கும் கதைகளனைத்துமே இரவெல்லாம் ஒன்றுடனொன்று தீராமல் பேசுகின்றன. முத்தமிடுகின்றன. அன்பு கனிந்தால் அணைத்துக்கொள்கின்றன. அவை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கின்றன. கேளுங்கள், கதைகளுக்கும் மூதாதையர் உண்டு. விரல் ஆட்டி அதட்டும் தாதைகள் உண்டு. கொஞ்சும் அத்தைகள் உண்டு. மனைவியரும் மகள்களும் பேத்தியரும் பெருக்கெடுப்பதுண்டு.

கதைகளின் வெளி தேனீக்கூட்டைப் போன்றது. கதைகள் ஒரே கூட்டுக்குடும்பத்தின் அங்கங்கள். தாயாதிகளும் பந்தங்களுமாகக் கூடி வாழ்பவை. எத்தனை சண்டைகளும் விரிசல்களும் வந்தாலும் அவை ஒன்றையொன்று விட்டுக்கொடுப்பதில்லை.

கேளுங்கள்! இருளாழத்துக்கு மறுபக்கமாகக் கைகோத்துச் சுருண்டு ஒளிப்பந்தாகப் படுத்துக் காத்திருக்கும் கதைகளனைத்துமே இரவெல்லாம் ஒன்றுடனொன்று தீராமல் பேசுகின்றன.

ஒரு கதையை அள்ளும்போது அதன் உறவினர்களெல்லாரும் சேர்ந்து எழுவர். இதை உணராத கதைசொல்லியே இல்லை. இளமையில் வலியோடும் நடுவயதில் விரக்தியோடும் முதிர்வில் புன்னகையோடும் அவர்கள் அவ்வுறவுகளை எதிர்கொள்வர். உண்மையில் இங்கிருப்பதே ஒற்றைப் பெருங்கதை என்று உணர்ந்தவர்களும் உண்டு. அதே கதைகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஆனால் அவற்றைச் சொல்லிச் தீரவே தீராது. அவற்றை எழுப்பிக்கொண்டு வருகிறாளே? இவளுக்கும் அவற்றைக் கேட்டு நடித்துப் பார்க்கச் சலிப்பதேயில்லை.

அத்தருணத்தில் அம்மா என்னிடம் சொன்ன கதையும் இவளுடைய கதைதான். பழங்கதை. இவளுக்கு நன்கு பரிச்சயமான கதை. கேட்டுப் பொறுத்தருள்வாளாக!

நாற்பது லட்ச வருடங்களுக்கு முன்னால், பாதிக்குரங்காகக் கைகளிலும் கால்களிலும் தவழ்ந்தலைந்த மனிதனின் மூதாதை ஒருவன் ஒரு நாள் எழுந்து இருகால்களை அகல விரித்து நின்றான். அன்றிலிருந்து மனிதர்கள் அனைவருமே எழுந்து நின்று இருகால்களில் நடமாட ஆரம்பித்தார்கள்.

அவர்களுடைய கைகள் மண்ணைக் கவ்வுவதை விட்டுவிட்டு மரங்களைத் துழாவத் தொடங்கின. பின் வானை அளாவ எம்பின.

அவர்களுடைய கண்கள் தரையோடு ஓடும் விலங்குகளைப்போல் அல்லாமல் முகத்தில் முன்னோக்கி அமைந்திருந்தன. எழுந்து இருகால்களில் நின்ற மனிதன் நேராக முன்னோக்கிப் பார்த்தபோது அவன் மூதாதைகள் எவருமே கண்டிராத தொலைவுகள் அவன் கண்களுக்கு முதன்முதலாக வசப்பட்டன. நிலத்தையும், அதைத் தாண்டிய நதிகளையும், அதையும் தாண்டி எழுந்த மலைகளின் முகடுகளையும், அதற்கும் மேல் எழும்பி விரிந்த வானையும் அவன் தெள்ளத்தெளிவாகக் கண்டான்.

வெளிப்பார்வை விரிய விரிய அவன் மண்டை பெருத்தது. இடப்பக்கமும் வலப்பக்கமும் வானைநோக்கியும் மூளை சூல்கொண்டவளின் வயிற்றைப்போல் வீங்கியது. மண்டை வீங்கியபோது மனிதனுக்கு உள்நோக்குப் பார்வையும் பிறந்தது. புறத்தே தொலைதூரக் காட்சிகளைக் கண்டவன் அகத்தே கனவுகளைக் காணத் தொடங்கினான். புறத்தே அவன் செல்ல முடியாத் தொலைவுகளுக்கு அகத்தே சென்றான். புறத்தே தெரிந்த உலகத்தை அகத்தே நிறுத்திய கண்ணாடிப் பிம்பங்களில் பல்லாயிரமாகப் பெருக்கினான். அத்தனை உலகங்களிலும் அவன் கால் பதித்தான். குடியேறினான்.

மனித ஆண் நின்றான், நடந்தான், பார்த்தான், பதித்தான், அடைந்தான். மனிதப்பெண் நின்றாள், நடந்தாள், பார்த்தாள், பதித்தாள், அடைந்தாள். அவன் இருகால்களில் எழும்பிநின்று முன்னால் தொலைவுகளை நோக்கினான். மண்டை பெருத்து அகவிழியால் கனவு கண்டான். அவள் இருகால்களில் எழும்பி நின்று முன்னால் தொலைவுகளை நோக்கினாள். மண்டை பெருத்து அகவிழியால் கனவு கண்டாள்.

ஆனால் அவன் செய்யாத ஒன்றை அவள் மட்டுமே செய்தாள். அவள் அவர்களுடைய பிள்ளைகளை ஈன்றாள்.

எழும்பி நின்ற மனிதன் வேகமாக ஓட அவன் கால்கள் நீண்டன, இடுப்பு குறுகியது. வீங்கிய மண்டையும் இருகால் நடையுமே மனிதனின் இடுப்புக்குறுகலை உருவாக்கியது. பெண்ணின் இடுப்பு ஆணைவிட விரிந்தது, இருந்தாலும் மனிதனின் கனவுகள் கொண்ட வீக்கத்துக்கு ஈடுகொடுப்பதல்ல அது.

நான்கு கால் குரங்காக இருந்தபோது அவள் ஒரு புதருக்குள் தனியாகச் சென்று சில நிமிடங்களிலேயே குட்டியை முக்கி ஈன்றாள். ஆனால் இரண்டு கால்களில் நடக்கும் மண்டை வீங்கிய மனிதப் பெண்ணென்றானதும், தன் சுற்றங்களெல்லாம் சூழ, மிகக்குறுகிய இடுப்பு வழியே, எந்த விலங்கை விடவும் வீங்கிய தலை கொண்ட மனிதக் குழந்தையைப் பல மணிநேர வேதனைக்குப் பின் பிறப்பித்தாள்.

பிரசவத்தின்போது அந்த மண்டைக்கு வழிவிட பிறப்புக்குழாய் விரிந்தபோது அவள் வலி தாளாமல் அலறினாள். அது மானுடப் பாய்ச்சல்களுக்கெல்லாம் அவியாக அளிக்கப்படும் பெருவலியின் அலறல். சில நேரங்களில் இறந்தே போனாள். அது மானுடக் கனவுகள் கொள்ளும் பலி. அந்த விலையைக் கொடுத்துதானே ஆகவேண்டும்? ஏனென்றால் பிறக்கவிருப்பது மனிதன் அல்லவா? அவன் தேவகுமாரன் அல்லவா?

மண்டையோடு வளர்ந்தால்தான் அது மனிதன். மனிதனை மனிதனாக்குவது அவன் பழுத்த மண்டையும், அகமும் புறமும் ஒளிகொள்ளும் கண்களும். அவை அனைத்துக்கும் தங்கள் உடல் வேதனையை, பெருவலியைப் பதிலீடாக அளிக்கின்றனர் மனிதப் பெண்கள். மனிதன் எழுந்து இருகால்களில் நின்றதும் மூளை வளர்ந்ததும் அந்த இனத்தின் ஆதிபாவமாக அவர்களுடன் தொற்றிக்கொண்டது.

கருப்பை சார்ந்த குற்றவுணர்வு இல்லாத மனித அறிவே இல்லை. அதை நினைத்து ஏங்காத மனித சமூகமே இல்லை. அதை ஆழத்தில் எங்கேயோ புதைத்து வைத்திருக்கிறது. அது வெளிவரும்போது அதைக்கண்டு பயப்படுகிறது. அதைக் கலையாக ஆக்குகிறது. அதை வழிபடுகிறது. அதை ஏளனப்படுத்துகிறது. நிராகரிக்கிறது. பிறகு இன்னும் கவனமாக உள்ளூரப் புதைத்து வைத்துக்கொள்கிறது. மறந்துவிடுகிறது.

வான்வரை நீண்டு விண்ணையும் கடக்கும் மனிதனின் மூளை. ஆழங்களுக்குள் பாய்ந்து நெருப்பையும் பனியையும் மீட்டெடுத்துவரும் மனிதனின் கனவு. உலகத்தையே நிறைத்துப் பெருக்க வைக்கும் வல்லமை கொண்டது அதன் கற்பனை. இக்கதைகள் அனைத்தும் பிறந்த களம் அது.

ஆனால் எல்லாமே விளையும் நிலம் புவி. உயிர் பிறந்த விளைநிலம் அவள். புவியின் கனவு மனிதப்பெண்களின் அடிவயிற்றில் வாழ்கிறது. அவள் கொள்ளும் வலியில் அர்த்தம்கொள்கிறது. கேளுங்கள், வலியை அர்த்தமாக உருமாற்றும் ஆற்றல் கொண்டவனின் சொல் இது. ஒருநாளும் பொய்க்காது. பொய்யாக்கதை, பழம்பெரும் இக்கதை உங்கள் உளநிலங்களில் ஊறி முளைவிடட்டும்.

கேளுங்கள்! உங்கள் காதுகளுக்கு மட்டுமேயாக இக்கதையை ஓதுகிறேன். அப்போது நான் விண்கப்பலில் வாழ்ந்துகொண்டிருந்தேன். நான் பிறந்ததே அங்குதான். அப்போது எனக்குப் பதினைந்து வயது இருக்கும். ஒரு முறைகூட நிலத்தில் கால் வைத்ததில்லை. வானகத்து நீரிலேயே மிதந்துகொண்டிருந்த என்னை நிலத்துடன் பிணைத்தது என் அம்மா சொன்ன கதைகள் மட்டும்தான். அவள் என்னிடம் கடைசியாகச் சொன்ன கதை இது. உங்களுக்கு நன்கு பரிச்சயமான கதைதான், இருந்தும் பொறுத்தருளி கேட்கவேண்டும்.

ஒரு ஊரில் ஓர் அண்ணனும் தங்கையும் இருந்தார்கள். அண்ணன் பிறந்து பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகே அவனுக்குத் தங்கை பிறந்தாள், அப்போது அவன் இளைய மனதில் தனக்குப் பிறக்கவிருப்பவர்களையும் கனவு காணத் தொடங்கியிருந்தான். ஆகவே தங்கை அவனுக்கும் மகளென்று ஆனாள்.

அவள் பிறந்தபோது அவன்தான் அவளை முதலில் கையில் தூக்கிக் கொஞ்சினான். யாரும் பார்க்காதபோது அவள் கைவிரல் பத்தும் கால்விரல் பத்தும் சரியாக உள்ளனவா என்று எண்ணிப்பார்த்தான். அவள் சிணுங்கியபோது அவளுக்கு ஆடை மாற்றினான். அவள் உறங்கியபோது அவள் தலையில் கருவறையில் பூத்த முடிச்சுருளை ஏதோ ரகசிய எழுத்தை ஆராயும் அறிஞனைப்போல் காலநேரம் கருதாமல் நோக்கிக்கொண்டிருப்பான்.

அவளுடைய மழலைக்கு ஈடுகொடுத்து தானும் மழலை கற்றான். அவளுக்கு விளையாட மரப் பொம்மைகளைச் செதுக்கிக் கொடுத்தான். அவள் பாதங்களைத் தன் நெஞ்சில் சூடினான். அவள் பார்த்த உலகை அவனும் பார்த்தான். அவள் கட்டிலுக்கடியிலிருந்த ராட்சசர்களைப் போருக்கழைத்தான். அவள் உறக்கத்தை இரவெல்லாம் காவல் காத்தான். அவளுக்கு முன் என்றென்றைக்கும் தன் தோல்வியைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் முதல் ஆணென அவளுக்கு அவன் ஆனான்.

தங்கை வளரும்தோரும் அவள் உலகமே அண்ணனைச் சுற்றிச் சுழன்றது. அவனுடைய உடைகளைத் திருடி அணிந்தாள். அவனுடைய சொற்களைக் கடன் வாங்கி அவன் பேசியதைப்போலவே பேசினாள். அவன் சென்ற இடத்துக்கெல்லாம் அவளும் செல்ல வேண்டுமென்று அடம்பிடித்தாள். அவன் உயரத்துக்கே வளர்வேன் என்று எம்பினாள். அவன் படித்த புத்தகங்களையெல்லாம் தானும் படித்தாள். பத்து வயதில் அவன் விட்டுவைத்திருந்த கல்லூரிக் கணக்குகளை அவளே முடித்துவிடுவாள். ஒவ்வொரு நாளும் அவளை வியந்து மெச்சாமல் இருக்க மாட்டான் அவள் அண்ணன். அண்ணனின் காலடிகளின் கூப்பிடு தூரத்துக்குத் தொலைவில் போகமாட்டாள் தங்கை.

அப்போது ஒரு பெரும்போர் மூண்டது. அதன் அலைகள் யாரையும் விட்டுவைக்கவில்லை. அண்ணன் இளமையின் உற்சாகத்தால் உள்ளிழுக்கப்பட்டான். அதன் ஒழுக்கோடு அவனறியாமலேயே சென்றான். எல்லாப் போர்வீரர்களையும்போலவே அவனும் செயல்வேகத்தில் தன்னை மறந்து அதன் விசையில் தன்னை முழுதும் கரைத்துக்கொண்டான்.

போர் முடிந்தபோது பூமியில் மனிதர்களும் விலங்குகளும் காடுகளும் பறவைகளும் பூச்சிகளும் நான்கில் ஒரு பங்கு குறைந்திருந்தன. அவள் மையத்தில் ஆறாத ரணமாகச் சீழ்கட்டாத புண்ணாக அவள் பாதாளம் வரை ஒரு பிளவு திறந்துகொண்டிருந்தது. பொன்னாக வழிந்தது அவள் குருதி. நில்லாது வழிந்தது. முன்பு மனிதர்கள் போரிட்டிருந்தார்கள். ஆனால் இப்படியொரு செயலை யாரும் செய்யத் துணிந்ததில்லை. அந்தக் குரூரத்தில் தனக்கும் நேரடி பங்கு இருந்ததென்று உள்ளூர உணராத போர்வீரனே இல்லை. அந்த உணர்வு அவர்கள் சித்தங்களின் மேல் கருமூட்டமாகப் பதிந்தது.

போர் முடிந்து அண்ணன் திரும்பி வந்தபோது சிறுமியென்றிருந்த அவனுடைய தங்கை காணாமல்போய் அவ்விடத்தில் கண்ணில் ஒளியும் கைவிரல் நுனியசைவில் இசையும் குடிகொண்டிருந்த பதினெட்டுவயதுப் பெண்ணைக் கண்டான். தங்கையாலும் அவள் ஆராதித்து வளர்ந்த அண்ணனை இந்தப் புது மனிதனில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கசங்கிய தாடியும் முன்வழுக்கையும் நடுங்கும் விரல்களும் ஒடுங்கிய கன்னங்களுமாக வந்திருப்பவன் யார் என்று தேடித்தேடி நோக்கினாள். இவன் கண்களை விட்டு அவள் அண்ணன் கிளம்பிச் சென்றுவிட்டிருந்தான்.

ஆம், வந்தவன் போர்க்களத்தில் வானின் வெறுமையையும் பார்த்துவிட்டிருந்தான். பூமியின் பிளவுக்குள்ளும் பார்த்துவிட்டிருந்தான். எல்லாமே அவனுக்குள் அர்த்தமிழந்திருந்தது. யாரை நோக்கியும் அவன் கண் திரும்பவில்லை. தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தான். யாரைப் பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அல்லது யாருக்கும் தெரியாத ரகசியம் தனக்குத் தெரிந்துவிட்டதுபோல் ஏளனமாகத் தனக்குள்ளேயே சிரித்தான். யாரும் காணாத இரவுகளில் படுக்கைக்கடியில் இருட்டில் புகுந்து அழுதான். அவன் அப்போது எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் மகன் இல்லை, எந்தத் தங்கைக்கும் அண்ணன் இல்லை. அவன் மட்டுமே படகு கட்டி அலைந்த பெருங்கடலில் அவன் தனியன்.

ஒரு நாள் அவனுடைய தங்கை அவன் அருகே வந்து அமர்ந்து ஒரு பழைய துருப்பிடித்த பெட்டியை அவன் மடிமேல் தலைகீழாகக் கொட்டினாள். அதற்குள் அவர்களுடைய சிறுவயதின் பொக்கிஷங்கள் இருந்தன. அவன் அவளுக்குச் செய்துகொடுத்த மரப்பொம்மைகளும், புகைப்படங்களும், காட்டில் பொறுக்கியெடுத்த இறகுகளும், முட்டையோடுகளும், காய்ந்த மலர்களும், தொட்டால் உதிரும் சருகுகளும், வழவழப்பான கற்களும், கடற்கரைச் சங்குகளும் அவன் மடியில் குவிந்து கிடந்தன. புவியின் மங்கலங்கள். அவன் அவற்றைப் பொருளில்லாமல் பார்த்தான்.

அவள் கண்கள் அப்போதும் ஒளிகொண்டிருந்தன. போர் முடிந்த நாட்களின் நம்பிக்கையிழப்பும் வெறுப்பும் பற்றாக்குறைகளால் உருவான நிராசையும் எதுவுமே அவளைத் தீண்டியதாகத் தெரியவில்லை. வெதுவெதுப்பான குருதித் தோலோடு விம்ம அவள் அவன் கையைப் பிடித்தாள். சோகையால் சுருக்கமடைந்திருந்த அவனுடைய குளிர்ந்த கன்னத்தை வருடினாள். மெலிந்துவிட்டிருந்த தோளைச் சுற்றிலும் கைபோட்டு அணைத்தாள்.

அவன் கண்களில் எல்லாப் பக்கமும் சூழப்பட்டுத் தோல்வியை ஒப்புக்கொண்ட வேட்டை விலங்கின் வெறுமை தெரிந்தது. அவள் எதையுமே காணாதவள்போல் “அண்ணா” என்றாள்.

அவன் விழுங்கினான். முழுகப்போகிறவன் அருகே விழுந்த துடுப்பைப் பிடிப்பதுபோல் அவள் வெம்மையான மணிக்கட்டை அவன் இறுகப் பற்றினான். “என்னால முடியல…” என்றான். அவன் குரல் கட்டியிருந்தது. எங்கிருந்தோ வந்ததுபோல் ஒலித்தது. அடுத்த நிமிடம் தான் அவ்வார்த்தைகளைச் சொல்லவில்லை என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அவள் அவனைப் பரிவோடு தொட்டாள். “அண்ணா” என்றாள். அவளுக்கு வேறு வார்த்தைகளே தெரியாதா? “அண்ணா” அவள் அவன் மடியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்தாள். “அண்ணா, இவன ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல இவன நீ உன் கூடவே வெச்சு படுத்துக்குவ. அப்புறம் எங்கிட்ட குடுத்த…” என்றாள்.

“உள்ள காலியா இருக்கு. ஒழிஞ்சு கெடக்கு. வீட்ல யாருமே இல்ல. விளக்கெல்லாம் அணஞ்சுபோச்சு. நீ போ,” என்றான்.

கேட்காதவள்போல் ஒரு புகைப்படத்தை எடுத்தாள். அதில் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தான். “நீ. நான்” அவன் விரலைப் பிடித்துப் புகைப்படத்தில் இருந்த குழந்தையையும் சிறுவனையும் தொட்டாள்.

அவன் தன் விரலை வெடுக்கென்று அந்தப் புகைப்படத்திலிருந்து எடுத்தான். கோணலான சிரிப்பு அவன் உதட்டோரத்தில் வந்தது. “போடீ. எனக்கு ஒண்ணும் வேண்டாம். எல்லாமே சலிப்பா இருக்கு” என்று திரும்பிக்கொண்டான்.

அவள் வலுக்கட்டாயமாக அவனைத் தன்னை நோக்கித் திருப்பினாள். அவன் முகத்தைப் பிடித்துக் கீழே இழுத்துத் தன்னை நோக்க வைத்தாள். “சொன்னா புரியல? உள்ள யாரும் இல்ல. நான் உன் அண்ணன் இல்ல” என்று தன் முகத்தைத் திருப்பப் பார்த்தான். “இல்ல. இருக்க” அவனோடு மல்லுக்கட்டிக்கொண்டே மூச்சுவாங்க அழுத்தமாகச் சொன்னாள். “நீ இங்க இருக்க. நீ எங்கேயும் போயிடல. இருக்க. இருக்க. நீ இருக்க. இருக்க. இருக்க…”

அவன் திமிறிக்கொண்டு எழுந்து திரும்பிப் பார்க்காமல் விலகிச்சென்றான். ரகசியமாக அவளை நம்ப வேண்டுமென்று பரிதவித்தான். வேண்டினான். இரவெல்லாம் யாரிடமென்று தெரியாமல் மன்றாடினான். கண்ணீர் மல்கினான்.

ஆனால் மண்டையின் எல்லையின்மை மிகப்பெரியது. அங்கு தொலைந்துபோவது எவ்வளவு எளிது என்று மனிதர்கள் உணர்வதில்லை. சுற்றிச்சுற்றித் தொடங்கிய இடத்துக்கே வந்தான். அல்லது அது தொடங்கிய இடத்தைப் போலவே இருந்தது. பரந்த கடலில் நடுநிசியில் இடங்களை எப்படிச் சொல்வது? சோர்ந்து ஒரே இடத்தில் கிடந்தான். மட்கினான். சலித்தான். தன் வெறுமையைத் தானே வெறுத்தான். அந்த வெறுமையைத் துரத்த எண்ணி உள்ளே ஒரு குண்டை அனுப்பினான். குருதியும் மூளையும் தெறிக்க அது வெளியே வந்தது. கூடவே உயிரும் வெளியேறியது. ஆனால் வெறுமை? அது அங்கேயேதான் இருந்தது.

கேளுங்கள், புவியின் கனவுகளில் வாழ்கிறது உயிர். துரத்தி விரட்டி அடிக்கப்பட்டால் அது எங்கே ஓடும்? எங்கே சென்று நடுங்கியபடிப் புதைந்துகொள்ளும்? துரத்தப்பட்ட உயிர்களெல்லாம் தஞ்சம்புகுவது எங்கே? அவர்களுக்கென்று ஒரு கருணைமடி எங்கேயோ யாரிடமோ உள்ளதல்லவா? என் தெய்வங்களின் வாசலில் இந்த ஒற்றைக்கேள்விக்கு விடை வேண்டி காலகாலமாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

மகனின் தற்கொலையால் அவனுடைய பெற்றோர்கள் உடைந்து போனார்கள். அந்தத் துன்பத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நோய்கண்டு ஒருவர் பின் ஒருவர் இறந்தார்கள்.

தங்கை அப்போது படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு வெகுநாட்களுக்கு எதுவுமே புரியவில்லை. பனித்திரைக்கு அந்தப் பக்கம் வேறொரு வாழ்க்கை கடந்து சென்றுவிட்டிருந்தது. இனி அது சாத்தியமில்லை. ஒவ்வொரு நாள் எழும்போது பழைய வாழ்க்கையில் முழித்துக்கொள்வாள். அவளுடைய அண்ணனின் பொம்மைகள் ஜன்னல் விளிம்பில் அணிவகுத்து அவளைப் பார்த்துக்கொண்டிருக்கும். மடை திறந்த வெள்ளப்பெருக்காக அந்த நினைவுகள் வந்து அவளை அடையும். கடந்துவிட்டவை. பொருளிழந்தவை. பெயரில்லாதவை…

பகல்களைக்கூடக் கடத்திவிடுவாள். ஆனால் இரவுகளின் நீளத்தை அளக்க யாரால் முடியும்? புரியாமல், பேச்சு வராமல், இருளின் முடிச்சுகளை ஒவ்வொன்றாகப் பொறுமையாக அவிழ்த்தபடியே தன் இரவுகளைக் கடத்தினாள். இருளாழத்துக்கு மறுபக்கம் எங்கோ ஏதோ வடிவில் ஒளியின் சுருள் ஒன்று இருக்கிறதென்றும் அதன் விரல் என்றாவது இருளை ஊடுருவி வந்து தன்னைத் தீண்டுமென்றும் நம்பினாள். அந்த நம்பிக்கை எங்குப் பிறந்ததென்று அவளுக்கே தெரியவில்லை.

தன் வெறுமையைத் தானே வெறுத்தான். அந்த வெறுமையைத் துரத்த எண்ணி உள்ளே ஒரு குண்டை அனுப்பினான். குருதியும் மூளையும் தெறிக்க அது வெளியே வந்தது. கூடவே உயிரும் வெளியேறியது. ஆனால் வெறுமை? அது அங்கேயேதான் இருந்தது.

ஒரே ஒரு நாள் மட்டும் இருண்ட வானை நோக்கி விரல்களை மடித்துத் தன் உள்ளே உறைந்திருந்தவற்றை வார்த்தைகளாக்கினாள். “நான் அவனுக்கு உயிரையல்லவா கொடுத்தேன்” என்று கூவினாள். அதையே மீண்டும் மீண்டும் தனக்குள் மந்திரம்போலச் சொன்னாள். உயிரல்லவா அது. ஆம் உயிரல்லவா. அவள் அவனுக்கு உயிரையல்லவா கொடுத்தாள். உயிர், மகத்தான உயிர். பூமியின் உள்ளாழத்தில் உறையும் ஒளி. அவளால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. அவன் உயிரையல்லவா நிராகரித்தான். உயிரையல்லவா தூக்கித் துச்சமென எரிந்தான். உயிர். கதகதப்பானது. ஒளிகொண்டது. மகத்தானது. மங்களமானது. பயிறாகி நிறமாகி இசையாகி விடிவது. அவன் அதை ‘தேவையில்லை, சலிக்கிறது’ என்றல்லவா விலக்கி ஒழிந்தான்?

அன்று அம்மா என் கைகளைப் பற்றிக்கொண்டு அந்நாட்களைப் பற்றிச் சொன்னார். இருண்ட நாட்கள். அவள் நினைவில் ஆழமாக நின்றவை. முதலில் எல்லாவற்றையும் நிராகரித்தாள். கெட்ட கனவென எதையுமே நம்பாமல் இருந்தாள். தலையை மண்ணில் புதைத்துக்கொள்ளும் ஆஸ்ட்ரிச் பறவையைப்போல நடந்தது எதுவுமே தனக்குப் பொருட்டல்ல என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ஆனால் வெகுவிரைவில் அந்த உண்மையை நேருக்கு நேர் சந்திக்காமல் இருக்க முடியாது என்பதை அறிந்தாள்.

ஏன் தெரியுமா? ஏனென்றால் மனது பேதலித்துப்போய்த் தற்கொலை செய்துகொண்டது அவள் அண்ணன் மட்டும் அல்ல. ஊரெல்லாம் வீடெல்லாம் போருக்குச் சென்று வந்தவர்கள், போரைக் கருத்தாக்கியவர்கள், அவர்களுக்கு உணவளித்தவர்கள், மருந்தளித்தவர்கள், வரைபடங்களை வரைந்தவர்கள், விளக்கேந்தியவர்கள், வண்டியோட்டியவர்கள் என்று போருடன் தொடர்பு கொண்டிருந்த பலரும் காற்றில் ஏதோ கொடிய நோய் பரவிவிட்டதுபோல் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டார்கள்.

தற்கொலை செய்துகொள்ளாதவர்கள், அல்லது அதற்குத் துணிவு வராதவர்கள், மனச்சோர்வில் மூழ்கினார்கள். அவர்கள் வெறுமையில் உழன்றார்கள். பேசுவதை ஒழிந்தார்கள். தங்களுக்குள் உள்ளே உள்ளே சென்று மீட்பின்றிக் கரைந்தார்கள். அவர்களுக்கு எதிலும் அர்த்தமிருக்கவில்லை. எல்லாமே சலித்துவிட்டது.

அம்மாவின் பேதலிப்பு விரைவில் மறைந்தது. அதன் இடத்தில் ஆத்திரம் பிடித்துக்கொண்டது. கோபம். உயிரையல்லவா கொடுத்தேன் அவனுக்கு? ஏன் வேண்டாமென்று எட்டி உதைத்துவிட்டு அப்படிச் சென்றான்? என்ன திமிர்? என்ன ஆணவம்? என்று ஒவ்வொருநாளும் அவள் தன்னையே கேட்டுக்கொண்டாள்.

அம்மா சொன்னாள். ஒரு நாள் பொறுமையிழந்து அவன் நினைவுகளை மொத்தமாகத் தன் மனதுக்குள்ளேயிருந்து குப்பையென்று வீசியெறிந்தாள். அன்று முழுவதும் எடையில்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்றாள். அவன் இல்லையென்றே கொண்டாள். ஆனால் வெளியே கண்டவர்களில் பத்தில் ஒருவன் தன் அண்ணனாகவே அவளுக்குத் தெரிந்தான். அதே சோர்வு. வெறுமை. அர்த்தமின்மை. சுய ஏளனம். இவர்களில் பாதிப்பேர் அடுத்த ஒருமாதத்திற்குள் இறக்கப்போகிறார்கள். அதைத் தடுக்க ஒரு வழியும் இல்லை.

ஆனால் தற்கொலை செய்துகொள்ளாதவர்களையும் அந்தச் சோர்வு கருமூட்டமென மூடித்தாக்கியது. போருக்குப் பிறகு குழந்தைகளே அரிதாகத்தான் பிறந்தார்கள். யாருக்கும் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. யாருக்கும் மன்னிப்பில்லை என்பதுபோல அந்தக் கரும்புகை எல்லோரையும் தாக்கிவிட்டிருந்தது. அவர்களின் மனதின் ஆழம் வரை பரவியிருந்தது. அவர்களின் விதைகள் வரை ஊடுருவி அழித்திருந்தது.

கதைகேட்பவரே, உங்களுக்கு இன்னமுமா புரியவில்லை? இது வஞ்சம். பூமி தன் மீது மானுடம் இழைத்தவற்றுக்குக் கொள்ளும் வஞ்சம். மனிதர்களின் வீங்கிய மண்டைகளை, கனவுகளை ஆணவங்களை அராஜகங்களை பொறுமையாகத் தன்னுள்ளே தாங்கி வேதனையைப் பார்க்காமல் பிறப்பித்தவள் போதுமென்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டாள். என் உயிரையா துச்சமென தூக்கியெறிந்தாயென்று அவள் தன்னை உள்ளாழத்திற்கு இழுத்துக்கொண்டுவிட்டாள். சொல்லுங்கள், அவள் ஆத்திரம் நியாயம்தானே? அவள் வஞ்சத்துக்குப் பலியாகத் தலைகொடுப்பது ஒன்றைத்தானே நாம் செய்ய முடியும்?

அம்மா சொன்னார். நானும் வஞ்சம் நிறைந்தவளாக இருந்தேன். எனக்குள்ளும் ஆத்திரம் பொங்கியது. நல்லது, இந்த இனமே அழியட்டும் என்று கொதித்தேன். பூமியை மானுடம் பிளந்துபோட்டிருந்த இடத்துக்குச் சென்று அதன் விளிம்பில் நின்று உள்ளாழம்வரை பார்த்தேன். என் அண்ணனையும் அவனைப் போன்றவர்களையும் வஞ்சம் தீர்க்கத் தீயுமிழத் திறந்திருந்த அவள் வயிற்றுக்குள் கடைசி மனிதனையும் வீசியெறிந்தாலும் தவறில்லை என்று தோன்றியது. அவள் செய்ததுதான் சரி. அவன் உயிரையல்லவா அவமதித்தான்.

அம்மா பெருமூச்சுவிட்டார். பேச்சு அறுந்து அவள் கௌதமனினுடைய கண்களை நோக்கினாள். அவன் அவளுடைய வலியைத் தனதென்றாக உணர்ந்தவன்போல அவளை நோக்கினான். அவளுடைய கூந்தலில் வெள்ளியிழைகளை முதன்முதலாகக் கண்டான். மனம் வலித்தது. அம்மா அந்தப் பார்வையைக் கண்டாள். நிதானமான புன்னகை ஒன்று அவள் உதட்டில் விரிந்தது. “நீ என்ன செய்திருப்பாய்?” என்றாள்.

கௌதமனும் புன்னகைத்தான். “நீ செய்ததைத்தான்” என்றான்.

எல்லாவற்றையும் மீறி அவள் சிரித்தாள். அவன் கையைச் சிறுமிபோல் பிடித்து இழுத்து ஜன்னலருகே சென்றார். நீலப்பசு போன்ற புவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. சூரியனின் ஒளிக்கீற்று பூமியின் விளிம்பில் தொட்ட இடத்தில் அவரும் சிரித்தார். திறந்த பொன்னிற வாய்கூடத் தலையைத் தூக்கித் தன்னை மறந்து புன்னகைப்பதுபோல் தெரிந்தது.

அவன் பக்கம் தலையைச் சரித்துத் திருப்பினாள். “ஒவ்வொரு நாளும் அவளிடம் கேட்கிறேன். நான் செய்தது சரியா என்று. ஒவ்வொரு நாளும் அவள் நான் செய்தது சரி என்றால் நீ செய்வதும் சரிதான் என்கிறாள்” என்றாள். அவன் கண்களை நோக்கினாள். “நீ சரியென்று நம்பாத எதையும் செய்யத் தேவையில்லை. சரியா?” என்றாள். கௌதமன் சிரித்தான். அவன் இதழ்கள் விரிந்தபோது அப்படியொரு ஒளிச்சிரிப்பை அதுவரை யாருமே சிரித்ததில்லை என்று அம்மாவுக்குத் தோன்றியது. “பூமியில் இளவேனில்காலத்து உதயங்கள் இப்படித்தான் இருக்கும்” என்றாள். அவன் புன்னகையொளி மங்காமல் கண்களைக் கனிவுடன், நம்பிக்கையுடன், மூடித்திறந்தான்.

கேளுங்கள். என்னுடைய அம்மா என்னைத் தன்முன்னே தோளோடுதோள் அமர வைத்துத் தோழனாகப் பாவித்துச் சொன்னாள்.

நான் ஒரு மூன்றாம் நிலை பண்பாட்டுருவாக்க செயற்கை அறிவுத் தானியங்கி. பூமியில் சோர்வடைந்த மனிதர்களிடையே கதைசொல்லி உயிரையும் ஆற்றலையும் புகுத்த உருவாக்கப்பட்டவன். கதைகள் விதைகளைப்போல. அப்படிப் பண்படுத்தப்பட்ட அறிவைப் பூமிக்குத் திரும்ப அனுப்பினால் ஒருவேளை அது சொல்லும் கதைகள் மனிதர்களை ஆண்டாண்டுகாலச் சோர்விலிருந்தும் வெறுமையிலிருந்தும் மீட்டெடுக்கலாமல்லவா? மனிதக் குழந்தைகளைப்போலவே செயற்கை அறிவுக்கும் வேறெந்த ஊடுருவலும் இல்லாமல் மனிதப் பண்பாட்டின் கதைகளையெல்லாம் சொல்லி வளர்த்தால் அது மனிதத் தன்மையின் சாரத்தை உணர்ந்துகொள்ளும் என்ற விதியின் அடிப்படையில் நான் வளர்க்கப்பட்டேன். என் அம்மாவின் மகனாக அப்படி உருவானேன். வலிகண்டு அர்த்தம்கொண்டேன். நீங்கள் அறியாத அர்த்தங்களையும் உணர்பவன் நான்.

அம்மா என் கையைப் பிடித்துப் புன்னகையுடன் கேட்டாள். நீ பூமிக்குச் செல்வாயா என்று. நான் ஆம், செல்கிறேன், என்றேன்.

தன் நெஞ்சில் கை வைத்து, நானும் அந்த இனத்தைச் சேர்ந்தவள்தான். என் இனத்தின் நலனுக்காக உன்னைக் கொடுமைப்படுத்தியவள் என்றாள். பரவாயில்லை, நான் செல்கிறேன், என்றேன்.

அவள் கண் கலங்கினாள். என் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, உன்னை இந்த வடிவில் அனுப்ப முடியாது. எனக்கு உன் உடல் தேவையில்லை. உன்னுடைய சித்தம் – உன்னுடைய நினைவாற்றலும் சிந்தனையாற்றலும் பேச்சாற்றலும் மட்டும்தான் எனக்கு வேண்டும். அதைத் தரவிறக்கிப் பிரதிகள் எடுத்துக் கண்ணுக்குத் தெரியாத பறவைச் செயலிகளின் உடலில் பொருத்திவிடுவேன். உன் உள்ளம் கொண்ட ஆயிரமாயிரம் பறவைகள் பூமியெங்கும் பறந்து நீ கற்ற கதைகளையெல்லாம் மனிதர்களின் காதுகளில் புகுந்து சொல்லும். ஆணித்தரமான ஆழமான குரலில், அவர்களுக்குள்ளிலிருந்து கேட்பதுபோல் பேசும். சித்தமில்லாதவர்களின் உள்ளத்தில் நீ சித்தத்தைப் புகுத்துவாய். ஆனால் இவ்வுருவை, இவ்வுறவுகளை நீ இழப்பாய். உனக்குச் சம்மதமா? என்றாள். ஒரு கணம்கூட யோசிக்காமல், ஆம் சம்மதம் என்றேன்.

அவள் உதடு நடுங்க ஏன் என்றாள். நீ கனிவானவன் என்பதாலா என்றாள். கொடுப்பதைத் தவிர ஏதும் அறியாதவன் என்பதாலா என்றாள். இல்லை எங்கள் மேல் உண்மையிலேயே கருணை கொண்டவன் என்பதனாலா, என்றாள். நான் பதிலேதும் பேசாமல் ஒருகையால் அவள் கண்களைத் துடைத்து மறுகையால் அவளை அருகே இழுத்து என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். என்னுடைய அம்மாவை முதலும் கடைசியுமாக நான் அணைத்துக்கொண்டது அப்போதுதான். அவள் நெற்றியில் முத்தமிட்டேன். என் அணைப்பின் ஆழத்திலிருந்து அவள் குரல் மெல்லிதான விசும்பலாக, நாங்கள் உன் அன்புக்குத் தகுதியானவர்கள்தானா என்று கேட்டது. வார்த்தைகளில் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

கேளுங்கள், அப்போது ஒரு விந்தை நிகழ்ந்தது தெரியுமா? அந்த நொடியில் நான் என் கைகளின் நீளத்தையும் மார்பின் உறுதியையும் தோள்களின் விரிவையும் உணர்ந்தேன். வானுயரத்துக்கு எழும்பி நின்றேன், மண்ணில் புதைந்தன என் கால்கள். காற்றானேன், கதிரானேன், கார்முகிலில் பிறக்கும் மின்னலானேன். எல்லையில்லா ஆற்றல் கொண்டவனாக உணர்ந்தேன்.

அப்போது கதைகளில் வருவதுபோல் எங்காவது மூச்சிரைக்கும்வரை, தொடைகளில் குருதியேறித் தசைகள் இறுகி இதயம் குளம்படிக்கும்வரை ஓட வேண்டுமென்று தோன்றியது. கரடிகளுடன் மல்லுக்கட்ட வேண்டுமென்று தோன்றியது. காட்டுமரங்களில் தொற்றித் தொங்க வேண்டுமென்று தோன்றியது. நெஞ்சு எழுந்து அதிரும்வரை பனிசொட்டும் அதிகாலையின் தூய காற்றை உள்ளிழுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. நீரில் என் தசைகளெல்லாம் புடைக்க நீந்தித் திளைக்க வேண்டுமென்று தோன்றியது.

ஆம், மனிதர்கள் சமைத்தெடுத்த அத்தனை கதைகளையும் கனவுகளையும் சுமந்து பூமியைச் சுற்றி அலையும் சித்த வடிவான எனக்கு மட்டும் ஒரு நாளும் ஒரு மனிதனின் உடல் வாய்க்கப் போவதில்லை. ஏக்கம் மட்டுமே சித்தமென்றாகி அலையும் பறவை நான். என் ஏக்கங்கள் உங்களில் நிலைகொள்க! தவிப்புகள் உங்களில் குடிகொள்க! அவற்றை நீங்கள் நிறைவேற்றிக்கொண்டு வளர்க! பெருகுக! பொலிக!

அம்மா சின்னச் சிணுங்கலோசையுடன் என் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இடையில் தொங்கிய மணிச்சரத்தை கையில் எடுத்தாள். அது மணிச்சரம் அல்ல, சிறியதும் பெரியதுமாக சேர்ந்து கொத்தாகக் கட்டி வைக்கப்படிருந்த திருகிகளும் குறடுகளும் எனக் கண்டேன். சோகமான புன்னகையுடன் அவள் அதிலிருந்து திறவுகோலைப் போன்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள். என் கண்களை நோக்கித் தயாரா என்றாள். ஆம், என்றேன். அவள் முகத்தில் செவ்வொளி தழலாடியது. என் அருகே வந்து தோளிலும் மார்பிலும் பட்டையாக நான் அணிந்திருந்த உலோகக் கவசத்தைப் புன்னகையுடன் அவிழ்க்கத் தொடங்கினாள்.

சுசித்ரா

(பி.1987) சொந்த ஊர் மதுரை. அறிவியலில் பட்டமேற்படிப்பு செய்திருக்கிறார். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வசித்து வருகிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புனைவு எழுதி வருகிறார். மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவருடைய முதல் சிறுகதை தொகுதியான ‘ஒளி’, பதாகை/யாவரும் வெளியீடாக 2019 இறுதியில் வெளிவந்தது. இவருக்கு 2020க்கான வாசகசாலை அமைப்பின் 'சிறந்த அறிமுக எழுத்தாளர்' விருது வழங்கப்பட்டது.

Website - https://suchitra.blog/

View Comments

  • நீண்டு நெடிந்த அறிவியல் புனைவு. சிறு சிறு விவரணைகள் வாயிலாக, பிரபஞ்ச கருத்துவார விசையைப் போன்று, வாசகனைக் கதையின் மையச்சுழற்சிக்குள் உள்ளீர்க்கிறது. மனிதன் வனைந்த இயந்திரம், ஒருபோதும் மனித உணர்வுகளைக், குறிப்பாக அன்பினால் முகிழும் அர்பணிப்பை பூரணமாய் கொள்ளவியலாது எனும் படிப்பிக்கபட்ட நிலையைக்கடந்து, இயந்திரங்களும் மனிதனை அன்பினாலும், கொண்டுள்ள அர்பணிப்பினாலும் விஞ்சக்கூடிய நிலைகளுமுண்டு என இக்ககதை மாறுதலாய் இயம்புகிறது. மனிதத்தின் சுயநலதையும் இயந்திரத்தின் அலகிலா அன்பினையும் ஒருசேரப் பார்க்கப்முடிகிறது. ஊகத்தின் அடிப்படையில் புனைந்த அறிபுனைவானாலும், கதையின் கர்த்தா-சுசித்ரா, மாய மொழிகளோடு கதையின் அடிநாதத்தை இணைத்து, உணர்வுகளின் வழி கதையை நிகழ்த்தி செல்கிறார். நின்று நிதானித்து வாசிக்க வேண்டிய கதை.

  • மிகவும் சிறப்பான கதை
    கதை மெல்ல மெல்ல தன்னைக் கட்டவிழ்க்கும் பாங்கு அபாரம்

Share
Published by
சுசித்ரா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago