ம்

7 நிமிட வாசிப்பு

கண்களைத் திறந்துவிட்டேனா? தெரியவில்லை கும்மிருட்டாக உள்ளது. ஒரு துளி வெளிச்சம்கூட இல்லை. எவ்வளவு நேரமாகியது என்றுகூடத் தெரியவில்லை. கண்களை மூடிக் கொண்டிருப்பது போலவே உள்ளது. பூமிக்கு அடியில் அதலபாதாளத்தில் தன் உடம்பளவே கொண்ட பொந்தினுள் வசிக்கும் பாம்பு போல் இங்குள்ளேன். கை கால்களைக்கூட நீட்டி மடக்க முடியவில்லை. ஓர் இம்மியளவு அசையக்கூட இங்கு இடமில்லை. என்னளவுக்கே செய்து வைத்த இரும்புக் கவசத்தினுள் இருப்பது போலுள்ளது. அல்லது என்னை நிற்க வைத்துக் காய்ச்சிய இரும்புக் கூழினை ஊற்றியது போல். இல்லையென்றால் மண்ணுக்கடியில் குழி தோண்டிப் புதைத்தது போல் இருக்கிறது. ஒருவேளை நான் கண் திறந்த பின்பும் இங்குள்ள துளி வெளிச்சமுமற்ற இருள்வெளியில் ஏதும் புலப்படவில்லையோ? அப்படியில்லையெனில் நான் கண்ளைத் திறக்காமலேயே இருக்க வேண்டும். அதுவுமில்லையென்றால் எனக்குக் கண்களே இல்லாமலிருக்கலாம். எதையுமே பார்க்க முடியாதவனாக இருக்கிறேன். ஆனாலும் இருளேயான ஓர் உலகத்தைப் பார்க்கிறேன். தளிரிலை கொண்டு சாமரம் வீசும் இளமரம் அங்குள்ளது. தென்றலாக என்னை வந்தறையும் காற்றில் மலர் மணத்தைப் பரப்புகிறது. என் மூக்கின் வழியே உள்ளத்தைச் சென்றடைகிறது அதன் வாசம்.

முதலில் நான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேனா? என்றுகூடத் தெரியவில்லையே? என்னால் என் மூக்கினை உணரவே முடியவில்லை. என் முகத்தில் மூக்கே இல்லாதது போலிருக்கிறது. எப்படியாவது கைகளைத் தூக்கி முகத்தைத் தொட்டுப் பார்த்திட பெருமுயற்சி செய்கிறேன். கையைத் தூக்கி முகத்தில் வைத்துத் துழாவுகிறேன். ஆ! கண், காது, மூக்கு, வாய் என எதுவும் பிடிபடவில்லை. எனக்கு முகமே இல்லை போலும். இல்லை இல்லை நான் இன்னும் என் கைகளையே தூக்கவில்லையே. தூக்கியதாகக் கற்பனை செய்துகொண்டேன். அதுமட்டுமில்லாமல் எனக்குக் கையே இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் என்னுடல் எப்படி எந்த வடிவத்தில் உள்ளது என்பதும் தெரியவில்லை. என் குழந்தைப் பருவத்தில் அடிக்கடி எனக்குள்ளேயே கேட்டுக்கொள்வதுண்டு. நான் இப்படித்தான் இரண்டு கையும், இரண்டு காலும், கோடு போன்ற நேரான உடலும் கொண்டவனாக இருக்க வேண்டுமா? எனக்கு இரண்டு இறக்கைகளும், எட்டு கால்களும், ஒரு வாலும் முளைக்கக் கூடாதா? என்றெல்லாம். குழந்தைப் பருவத்தில் எனக்குப் பிடித்தமான விளையாட்டே விலங்குகளைப் போலும், பறவைகளைப் போலும் கற்பனை செய்துகொண்டு ஒடுவதும், குறைப்பதும், கீச்சிடுவதும், உறுமுவதுமேயாகும். கடவுள் மீதிருந்த நம்பிக்கையெல்லாம் வற்றிப்போன பதின் பருவத்தில், இயற்கையின் மாபெரும் செயல் ஒழுங்கில் நம்பிக்கை வந்த பின்னும் இந்தக் கேள்வி மட்டும் என்னுள்ளத்திலிருந்து அகலவில்லை. அனைத்து உயிருக்குள்ளும் உறைந்திருக்கும் ஏதோ ஒரு கட்டளைதான் அதன் வடிவத்திற்கும், செயலுக்கும் காரணமாக உள்ளது. ஒரு சொல்லாக, அல்லது ஓர் ஒலியாக எல்லா உயிரினத்திலும் இருக்கிறது.

முடிவேயில்லாத இருள் சூழ்ந்த இடத்தில் இருக்கிறேன். என்னால் இங்கு உணர முடிவதெல்லாம் ஏதுமற்ற இருள்வெளி மட்டுமே. கிட்டதட்ட சூன்யப் பெரு வெளியில் தனியாக உள்ளேன். முழுமுற்றான தனிமை. நான் என்ற இருப்பு மட்டுமே இங்குள்ளது. என்னைச் சுற்றி முடிவில்லா சூன்யமே சூழ்ந்துள்ளது. வெளியற்ற, பொருளற்ற, காலமற்ற சூன்யம். முடிவேயில்லாத சூன்யம். என்னை அச்சுறுத்தும் ஒரே சொல் முடிவிலி என்பதுதான். மனிதன் தன் சிந்தைக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயங்களை எப்பொழுதும் அஞ்சுகிறான். அதில் முதன்மையானது முடிவின்மை. பாலைவனத்தில் திசை தெரியாமல் உச்சி வெயிலில், அலைக்கும் பெருங்கடலென இருக்கும் மணலில் தன்னந்தனியாக நிற்பவனின் உணர்வுக்கு நிகரானது முடிவின்மையை அளக்க நினைப்பவனின் உணர்வு. ஓரடி எடுத்து வைக்கும்போது ஈரடி நீளம் கூடும் பாதையில் நடந்து செல்லும்போது குறுக்கிடும் மதில் சுவர் எப்போதும் பாதையின் முடிவாக இருப்பதில்லை, பயணியின் முடிவாகவோ அல்லது அவன் இயலாமையாகவோதான் இருக்கும். நம் அறிவின் இயலாமையே முடிவின்மையின் மீதான அச்சமாக மாறுகிறது.

என்னைச் சுற்றி முடிவில்லா சூன்யமே சூழ்ந்துள்ளது. வெளியற்ற, பொருளற்ற, காலமற்ற சூன்யம். முடிவேயில்லாத சூன்யம்.

ஆனால் நானிருக்கும் இந்தச் சூன்ய வெளியில் முடிவிலி என்பதே அர்த்தமற்ற, பொருள்கூடா சொல்லாக உள்ளது. வெளியும், காலமும் இல்லாத நிலையில் முடிவிலிக்கு இடமேயில்லை. நான்கூடக் காற்றில் கரைந்த மணம் போலச் சூன்யத்தில் கரைந்து விட்டிருக்கிறேனா? தொடுவதற்கும், உணர்வதற்கும் உறுப்புகளும் ஏன் உடலுமே கூட அற்ற நிலையில் வெறும் சிந்தனைகளாக, எண்ண ஓட்டங்களாக இருக்கிறேன். இந்தச் சூன்ய வெளியின் உள்ளமாக இருக்கிறேன் போலும். நானே சூன்யமாக இங்கு நிரம்பி ததும்பிக் கொண்டிருக்கிறேன். நான் மட்டுமேயான நிலை. முரண்பாடுகளும், எதிரீடுகளும் இல்லை. தனிமை மட்டுமே ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

ஏதோ சத்தம் கேட்பது போலுள்ளது. உயிர் துறக்கும் வேளையில் உடல் கொள்ளும் வலியில் முனகுவது போன்ற ஒலி. எங்கிருந்தோ சொல்லப்பட்ட பொருள் கூடிய சொல் நெடுந்தொலைவு பயணித்துக் காற்றில் தன் பொருளைக் கரைத்த பின் வெற்றுச் சத்தமாக ஒலிப்பது போன்ற ஓர் ஒலி. அப்படியென்றால் சத்தத்தை எழுப்பக் கூடிய ஏதோ ஓர் இருப்பு இங்குள்ளது. மிக முக்கியமாக என்னைத் தவிர, என்னிலிருந்து வேறுபடக்கூடிய இருப்பொன்று இங்குள்ளது. உயிருள்ளதோ? அல்லது உயிரற்றதோவான ஓர் இருப்பு, ஒரு கல்லோ? ஒரு துளி நீரோ? இல்லையென்றால் காற்றோ? நிச்சயமாக இங்குள்ளது. அதுமட்டுமில்லாமல் நான் இருப்பதற்கென்று ஓரிடம் உள்ளது. இந்த ஒலி இருக்க ஓரிடம் உள்ளது. அந்த ஒலி பயணிக்க காற்றும்கூட உள்ளது. எனில் இது சூன்ய வெளியல்ல, நானும் அதன் உள்ளமல்ல.

அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருத்து தூலமான, தொட்டறியக் கூடிய பொருளென இருளில் அமைந்துவிட்டது. கிணற்றுக்கடியில் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் தவளை கத்திக்கொண்டே மேலேறுவது போல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒருவேளை இந்த ஒலி நானே கற்பனை செய்து கொண்டதாகக்கூட இருக்கலாம். மாபெரும் தனிமையிலிருந்து தப்ப நான் கொண்ட விழைவின் ஸ்தூல வடிவமாக இந்த ஒலி இருக்கலாம். ‘ம்…..’ என்று ஸ்பஷ்டமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றியிருக்கும் வெளியே இந்தச் சத்தத்தால் நிறைந்துள்ளது. குளிருக்கு அடக்கமாகச் சுற்றிக் கொள்ளும் போர்வை போன்று ‘ம்’ என்ற சொல்லால் சூழப்பட்டுள்ளேன். அடிக்கடி இதுபோன்ற சத்தங்களும், குரல்களும் எனக்குக் கேட்பதுண்டு. பொருளே இல்லாச் சத்தங்களும், பொருள் கொண்ட வார்த்தைகளும் மாறி மாறி ஒன்றோடொன்று கலந்து காதுகளில் ரீங்காரமாக ஒலிக்கும். சில சமயம் புதுப் புது வாசனைகளும், இந்தச் சத்தத்தோடு சேர்ந்து வரும். ஒவ்வோர் ஒலிக்கும் தனித்தன்மை கொண்ட ஒரு மணம் உண்டு. ஒவ்வொரு சொல்லும் அதற்கே உரிய பொருளுடன், ஒரு மணத்தையும் சுமந்து வரும். கல்லோ கல்லுரசும் ஒலி சுட்ட மீனின் மணத்தைச் சுமந்து வரும், நீர் சுண்டும் ஓசை புதுக் கள்ளின் மணத்துடன் வரும். ‘ம்’ என்ற இந்தச் சத்தம் குருதியின் மணத்தை நிறைக்கிறது. வெட்டப்பட்ட காயத்திலிருந்து வழிந்தோடும் குருதியின் மணம், பலியான ஆட்டின் குருதி மணம், பிறந்த குழந்தையின் மீதெழும் கருவறையின் மணம். ஆம் கருவறையில் அமர்ந்திருக்கும் சிசுவின் மணமே இங்கு நிறைந்துள்ளது.

எங்கிருந்தோ சொல்லப்பட்ட பொருள் கூடிய சொல் நெடுந்தொலைவு பயணித்துக் காற்றில் தன் பொருளைக் கரைத்த பின் வெற்றுச் சத்தமாக ஒலிப்பது போன்ற ஓர் ஒலி.

ஒருவேளை முழுமையாக இதெல்லாம் கனவில் நிகழ்வனவாகக்கூட இருக்கலாம். இது போல் கண்ணறியா இருள் சூழ்ந்த இடத்தில் இருப்பது போலவும், பொந்துக்குள் அடைப்பட்ட எலி போலவும், மூச்சு விடுவதற்கே திணறுவது போலவும் அடிக்கடி எனக்குக் கனவுகள் வருவதுண்டு. கிட்டத்தட்ட கருவறையில் உள்ள குழந்தை போன்ற உணர்வுடன் கூடிய கனவுகள். ஆனால் இவ்வளவு தெளிவான எண்ணவோட்டங்கள் கனவில் அமைவதில்லை அல்லவா? தெளிவான மனவோட்டங்கள் என்றுதான் கனவிலிருக்கும்போது தோன்றும், விழித்த பின்தான் அனைத்தும் அபத்தங்கள் என்று புரியும். கனவு காண்பவன் அதைக் கனவு என்றுணர்ந்த பின் விழித்துக்கொள்வான். அதன் பின் அவன் கணடதெல்லாம் பொருளற்றவைகளாக மாறிவிடும்.

எப்பொழுதுமே நமக்கு ஏற்படும் கனவுகளுக்குக் காரணமாக அமைவது தூக்கத்தில் விழும் முன் நாம் எண்ணிய எண்ணங்களும், கண்ட காட்சிகளுமேயாகும். இந்த இருண்ட பிளத்தில் விழுவதற்கு முன் பார்த்தவற்றைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். சிசுவுடன் ஒட்டியிருக்கும் தொப்பூழ்க்கொடி போன்ற பழுப்புடன் நான் அந்த விண்கலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தேன். உயிர் வாயு ஏற்றப்பட்ட விண்வெளிப் பாதுகாப்புறையில் கோழிக்குஞ்சுப் போல் ஒடுங்கியிருந்தேன். என்னெதிரே மிகத் தொலைவில் சிறு கரும் புள்ளியென அதிருந்தது. மெதுவாக என்னை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தது. இல்லையென்றால் நான் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறலாம். எது மேல்? எது கீழ்? என்று அறிய முடியாத வெளியில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தேன். திசைகளும், தரையுமற்ற இடத்திலிருந்து அச்சிறுங்கரும்புள்ளியைப் பார்த்திருந்தேன். இன்னும் சற்று நேரத்தில் இந்தப் பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும் எத்தனத்துடன் வீங்கிப் பெருத்துக் கொண்டேயிருந்தது. விண்வெளியின் ஸ்திரமின்மை என்னை அலைகழித்தது. மது உண்டவனைப் போலவும், விஷம் தலைக்கேறியவனைப் போலவும், எடையற்றவனைப் போலவும், பெருவலி கொண்டவனைப் போலவும் போதையில் ஆடிக் கொண்டிருந்தேன். வெகு தொலைவிலிந்து ஒரு நட்சத்திரக்கூட்டம் என்னைப் பார்த்துக் கண்சிமிட்டியது. அந்நட்சத்திரங்களிடையே பாலே வழிந்து ஓடிக் கொண்டிருப்பது போல வெள்ளை நிறம் பெற்றிருந்தது வெளி. விண்கலம் உமிழ்ந்த வெளிச்சத்தில் நின்றிருந்தேன். சிறு புள்ளியென்றிருந்த கருந்துளை எனக்கும் அதற்கும் இடையிலிந்த தூரத்தை உண்டவாறு என்னை நெருங்கி வந்தது. அருகே வரவர அதன் அளவும் பெரிதாகியது. ஒரு கட்டத்தில் அதை முழுமையாகப் பார்கக முடியாமலானது. அந்த வட்டவடிவத்தின் ஒரங்களைப் பார்க்க முடியாத அளவுக்கு என் கண் தொடும் தூரத்தையும் தாண்டி பெரிதாகிவிட்டது. கருங்கடலென என்முன் பேருருவம் பெற்று நின்றிருந்தது. அதிலிருந்து வெளி வந்த கதிர்வீச்சு என் சுற்றுப்புறத்தை உஷ்ணமாக்கியது. பாதுகாப்புறையின் வெப்பநிலையும், அழுத்தமும் அதனால் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டிருந்தது. இன்னும் சற்றே நேரத்தில் அழுத்தம் தாங்காமல் வெடித்துச் சிதறிவிடும் நிலை ஏற்ப்பட்டது.

கருந்துளையினுள்ளே சுருள் வடிவிலான நீண்ட பாதை போன்ற அமைப்பிருந்தது. சுருண்டு, சுருண்டு நீண்டுகொண்டே சென்றது. சுருள் வடிவம் கொண்ட ஆற்றினைப் போல் ஒழுகிச் சென்றது. சுருள் பாதையின் தங்குதடையற்ற வழியில் பாசிப் படிந்த கூழாங்கல்லில் கால் வைத்தவனைப் போல் வழுக்கிக்கொண்டே சென்றிடுவேன் என்று தோன்றியது. கடலின் மீது பறக்கும் சிற்றீசல் போலிருந்தேன். அழுத்தம் தாங்காமல் என் விண்வெளி பாதுகாப்புறையின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து, தனித்தனியாக ஈர்ப்பு விசையற்ற வெளியில் மிதக்கத் தொடங்கின. கடைசியாக என் தலைக்கவசமும் பிய்த்துக்கொண்டது. அழுத்தத்தில் என்னுடல் திசைக்கொன்றாக பிய்த்துக்கொள்ளும் போலிருந்து. இன்னும் சில வினாடிகளில் கருந்துளையின் ஈர்ப்பினால் உள்ளிழுக்கப்படுவேன். இன்னும் சில சூர்யோதயத்துக்குப் பின் மொத்த பிரபஞ்சமுமே அதனுள் ஈர்க்கப்பட்டுவிடும். மரணத்தையன்றி வேறெதையும் எதிர்ப்பார்க்க முடியாத தருணத்தில் பரவசத்துடன் நூறு மனிதர்களின் வாழ்நாளிலும் அறிய முடியாத பேரறிதலுக்காக காத்திருந்தேன். புத்தன் போதிமரத்தடியில் அறிந்ததற்கிணையான, இயேசு சிலுவையில் அறிந்ததற்கிணையான ஓர் அறிதல்.

ஏதோ ஒரு பெருமிருகத்தின் கருவிழியைப் போல என்னை உறுத்து நோக்கியது அந்தக் கருந்துளை. உணர்ச்சிகளற்றவனின் கண்களைப் போல் நிச்சலனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. சட்டமிடப்பட்ட ஓவியத்திலுள்ள பெண்ணிண் உறுத்தும் கண் பார்வை போன்றிருந்தது. நிதம் நிதம் வாழ்க்கை முழுதும் என்னைக் காண்காணித்து கொண்டிருந்த பார்வை போன்றிருந்தது. என்னுடைய ஓவ்வொரு செயலையும் கண்ட பார்வை. என் கீழ்மைகளையும், என் குற்றங்களையும், என் தனிமையையும், என் வெறுமையையும் அறிந்த ஒருவனின் பார்வையைப் போல் நெருக்கமானதாக இருந்தது. நான் அழும் போதும், ஆணவம் கொள்ளும் போதும், நான், நான் எனப் பிதற்றும் போதும் நானின்றி நீயல்ல என்பது போல் என்னை நோக்கிப் புன்னகைக்கும் கருமணிப் பார்வையாக இருந்தது. என்னுள் நானே கண்டிராத ஆழங்களில் ஒளி வீசும் பார்வையாய் இருந்தது. இப்போது பெருங்கருணை கொண்டவனின் கண்களின் ஈரத்துடன் என்னைப் பார்க்கிறது.

குளிருக்கு அடக்கமாகச் சுற்றிக் கொள்ளும் போர்வை போன்று ‘ம்’ என்ற சொல்லால் சூழப்பட்டுள்ளேன்.

சேற்றில் வழுக்கி நீரில் விழுவனைப் போல அதன் மெல்லியப் பரப்பில் விழுந்தேன். குட்டியினைக் கவ்விக்கொள்ளும் தாய்ப் பூனையினைப் போல் என்னைக் கவ்வி உள்ளிழுத்துக்கொண்டதது. சுருள் வளைப் பாதையின் உச்சியிலிருந்து பயணிக்கத் தொடங்கினேன். சிறிது நேரம் மேலே ஏறுபவன் போலவும், சிறிது நேரம் கீழே இறங்குபவன் போலவும் உணர்ந்தேன். ஊசலில் ஆடுபவனின் உணர்வு ஏற்ப்பட்டது. அங்கே உடலில்லாதவன் போல் உணர்தேன். ஆதியும், அந்தமுமற்ற விண்வெளியில் பயணித்தேன். ஒவ்வோர் அங்குலமாக பகுத்து அறிந்துகொண்டேன். பெரிதினும் பெரிதான நட்சத்திரங்களையும், சிறிதினும் சிறிதான அணுக்களையும் கண்டேன். வெளியும், காலமும் அளித்த அனைத்து தடைகளையும் தகர்த்துக் கொண்டிருந்தேன். பெருவிடுதலை கொண்டவனானேன். உடலைக் கடந்து வெறும் மனமென்றாகிவிட்டேன்.

‘ம்…….’ என்றச் சத்தம் என் சிந்தையைக் குலைக்குமளவுக்குப் பெருகிவிட்டது. என் கேட்கும் திறனை முற்றழிக்க வேண்டும் என்றிருந்தது. என்னுள்ளேயே உருக்கொண்டிருந்த சத்தமெனில் நானென்ற இருப்பை அழித்துவிட்டு இல்லாமலாகிட வேண்டும். உடலென்று ஒன்றிருந்தால் தற்கொலையாவது செய்து கொண்டிருக்கலாம் உடலும் இல்லையே. எனில் நான் இந்தச் சூன்ய வெளியில் கரைந்து சூன்யத்துடன் சூன்யமாகிட வேண்டும். என்னிருப்பை முழுமையாகத் துறந்திட வேண்டும். ஆனாலும் சூன்யம் என்ற இருப்பாக எஞ்சுவேன் அல்லவா? நான் இல்லாமல் ஆவதென்பதே இயலாக் காரியமில்லையா? இருந்தாலும் இந்தச் சத்தத்தால் பாதிக்கப்படாத நிலையை அடையும் வாய்ப்புள்ளது.

ஆ! இந்த ஒலி என்னைக் கூறுபோடுமளவு பெருத்துவிட்டதே? மானுடப் பெருந்திரளின் மனமாக, உணர்வாக என்னை உணர வைக்கிறது இந்த ஒலி. என்னுள் புதைந்திருக்கும் கோடிகோடி உயிர்த்திரளின் வாழும் விழைவை, குரோதத்தை, காமத்தை வெளிக்கொணர்கிறது. உயிர் கொண்ட, உயிரற்ற் பொருண்மைகளின் தொகையை என்னுள் உணர்ந்தேன். சூலுற்றப் பெண்ணிணைப் போல் பேருவகை அடைந்தேன். அகமே ஒழிந்தவனாகப் பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமானேன். அதே சமயம் அணுவினும் சிறுத்தவனாகவுமிருந்தேன்.

ம்…… என்ற ஒலி சடுதியில் என்னைப் பல துண்டங்களாக சிதறச் செய்தது. பாறைப்பரப்பில் சிதறிய நீர்த்துளிகளைப்போல் விரவிக் கிடந்தேன். சிதறடிக்கப்பட்ட உடனே துளிகளாய் நானிருக்க இடமுண்டானது. ஒன்றை ஒன்று பிரித்தறிய வடிவம் உண்டானது. ஒன்றிலிருந்து ஒன்றைச் சென்றடைய காலமுண்டாது. பெரும் பரவசத்துடன் ஒரு துளியிலிருந்து மற்றொன்றைப் பார்த்தேன். ஆடிப் பரப்பில் பிரதிலிக்கப்பட்ட பிம்பங்களைப் போலிருந்த துளிகளில் அதிலிருந்து இதையும் இதிலிருந்து அதையும் அறிந்தேன். அனைத்திலும் காமமென்றிருந்த அந்த ஒலி ஒன்றை ஒன்றிணைக்கவும், அதன் மூலம் புதியனவற்றை உருவாக்கவும் செய்தது.

கிரிதரன் கவிராஜா

கிரிதரன் 1995 மார்ச் 9ம் தேதி வேலூர் மாவட்டம் மேல்காவனூர் கிராமத்தில் பிறந்தவர். தந்தையின் பெயர் கவிராஜா. தாயின் பெயர் பாக்யலட்சுமி. கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

Share
Published by
கிரிதரன் கவிராஜா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago