நீர்வளரி: ஒரு முன்னோட்டம்

10 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் கோணங்கி தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நீர்வளரி நாவலின் முதல் பாகமான “மேகலா ரேகையின்” முதல் இயல். அதிலிருந்து ஒரு பகுதியை முன்னோட்டமாக அரூவில் வெளியிட முன்வந்துள்ளார். இதோ மேகலா ரேகையின் நூன்முகம்!


உயிர்க்குலத் தளிர்கள் மெலிதாகப் பரவுகிற மெளன நீரோடைகளாய் நெகிழ்ந்து மேல்நோக்கி ஏறி வளர்கின்றன மேகலா ரேகையில். மேனி முளைத்த கல்விதைகள் வளர்ந்து நிற்கின்றன மூடிய விழிகளாய். கல்விதைகளின் இமைகள் இன்னும் மூடியே இருந்த கீறலில் மறைந்த நதி ஒளியாக ஓடுகிறது. அது ஒரு திசையிலிருந்து வேறொரு திசைக்கு இடமுறைத் திரிபில் வளைந்து ஒரு கணிகையாக ஊடுருவித் தெரிவதாயின் அவள் துயிலும் மேகலாரேகையில் ஒரு வேளை கலையின் புதிருக்கான அழுக்கான யாழ் நரம்புகள் அம்முதிய நிலத்தில் குடியிருந்த தமிகளின் உயிர் எழுத்துகளும் ஓரை வட்டமும் ஞாலத்தைப் பூராவும் அடக்கி உடுமகா திசையும் காலச்சக்கர திசையும் நாம் அறிந்துகொள்ள இயலாதபடி கணிகையின் சதிர்க் கால்களின் அனுபவச் சேகரிப்பில் நாம் எல்லோரும் இருந்துகொண்டிருப்பது நூறு கல்விதைகள் விழிகள் திறவாது துங்குவதுதான். கல்விதைகள் திறந்து சதிர்கால்கள் இசையின் ரசநாளங்களில் கால்விரல்களாய் மெல்லத் தாளமிட விழிகள் தனித்துத் திறந்ததும் மூடிய பித்தத்தில் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம். அவள் கடைவிழியின் ஒரு நொடி அபிநயத்தில் செம்மாந்து மாள்வோமா. முதிய கணிகை முகம் நிலவின் வெண்ணிறமாய் மாறிவிட்டதேன். மானேந்தி விரல் கிளைகளாய் மாற உடனே விழியுயர்த்தினாள். ஆனால் அவள் இமைகள் இன்னும் மூடியே இருந்தன. ஒருவேளை அவள் முயலின் கூட்டில் மறைந்திருப்பாள். நெடுநேரம் ஆகியும் கணிகை வியோனி என்பவள் மக்கட்பிறப்பில்லா பலவகை ஜீவகோடி ஓரையின் கடல்கடக்க நெடுநேரம் ஆகியும் அபிநய விழிகள் அடுத்த நொடியில் கனகாங்கி ராகத்தில் சொருகிக்கொண்டன. உடுகணங்களை உதறி எழுகிறாள். நட்சத்திர ஆடையுடுத்திய வியோனியின் சதிர்மரபு தொடுவானில் மறைந்திருக்கும் மேகலா ரேகை துடித்து மின்னலென நகர்ந்து உலகத்தின் வேறொரு தீவகங்களைத் தொட்டு மறைந்த நகரங்களிலிருந்தோ கபாடபுர வாசிகள் சதிர் அரங்கைக் கண்ணுக்குப் புலனாகாத ஒரு புவியியல் பரப்பின் பரவலாக்கியிருந்தனர். சதிர் ரீதியான ஒவ்வொரு பாவங்களும் ஒரு தனித்த ஊழில் இணைந்து அபிநயமாகிவிடும். மூழ்கிய இசை மீளவும் நிஜ உலகிற்கு வருகிறார்கள் அடர்ந்த தன்மையுடன் உப்பு முகமூடிகள் கீழிறங்கிச் சரிந்து வரும். மீள் நிகழ்த்துக் கலைகளில் எதிர்ப்படுகிறார்கள். மறதியை விழிப்படையச் செய்யும் நவீன நிகழ்த்துதலில் சுழலும் விசையாகிவிடும். வெளிமேல் வெளி அடுக்கிய கலையின் உள்ளுமைகள் மெளனத்திலிருந்து விண்மீன் ஓரைகளாய்ச் செறிவடைகின்றன. நிகழ்த்துதலின் அரங்கத்தில் கணிகைகளின் நொடிகள் கடற்சுழிகளாக உள்ளன. கணிகைகளின் அவ்வாறான நொடிகளால் பின்னப்பட்ட மேகலா ரேகை வேட முகங்களைப் புராதனத் துணிகளிலிருந்து பாவைகளாக அச்சத்துடன் வெளிப்படுத்தும். மேகலா ரேகையில் பிளக்கும் ஜம்புவிருட்சமும் விண்மீன்களின் ஆடையுமாக சாதகப்புள்ளின் இன்னோசை கொண்டு சென்மாந்திர அமானுஷ்ய கிருத்தியங்களாகத் தம் முற்பிறவிகளை அறிய முயல்வதில் மிகுதியும் புனைந்தவற்றில் கதை தோன்றியதிலிருந்து தேசாந்திரம் செல்வதற்குப் பொம்மலாட்ட மரக்கலம் கவிழ்ந்தமையால் கடலிடையே தவித்து வருந்தி நின்ற துணிப்பாவைகள் ஏழு நாட்களுக்குள் இடம்மாறி துகில் கூத்தைத் தம்முன் நிகழ்த்தவே சமுத்திராதேவதை மேகலா ரேகைக்குக் கொண்டு வருகிறாள்.

சூலிச்சங்கினைப் பன்னிரண்டு அங்குலமாய் அளவிட்டு நண்பகலைச் சதுரமாக்கிய நிலத்திலே நிறுத்திப் பார்த்தால் சூலகக் கருச்சாயைத் தன் பாதப்பெருவிரலில் சுற்றிய சதிரின் நிழலும் படாமல் சக்கராகாரமாய்ப் பூமியைச் சூழ்ந்திருந்தும் எந்தப் பக்கத்திலும் நிழல் விழாது. அலரி மேடாயன துலாயனத் தினங்களில் விசுவன் மண்டலத்திற்கு நேராகக் கீழே இருக்கிற மேகலா ரேகைக்குச் சதிரில் சுழற்றவாறு போகிறாள் வடக்கிலே போக இருபத்து நான்காம் பக்கத்தில் இருக்கிற அவந்திகாப் பட்டினத்தில் வடக்கு நிழலேயல்லாமல் எப்போதும் தெற்கு நிழல் இல்லை. அந்தத் தினங்களிலே அங்கே இருந்து பரிதி தன் கிராந்தி மார்க்கத்தினாலே தினந்தினம் கொஞ்சங்கொஞ்சமாக நடந்துகொண்டு மிதுனாப்தத்திற்கு வடக்கே இருபத்து நாலு பாகமும் தனூரந்தத்திலே தெற்கே இருபத்தி நாலு பாகமும் போய் மேகலா ரேகையிலிருக்கும் ஓரையான் கடலுள் எழுந்த சூலிச் சங்கின் உள்ளே ஒரே ராகத்தில் சுற்றுகிறாள் சூட்சுமசாயையும் கரைந்து. அவள் உந்தியில் சுற்றும் கலைகளின் முடிவாய் நின்ற கதிரினைத் தொடுவதற்கு உலகுயிர் அனைத்தின் சூட்சுமச் சாயைகளின் ஆரோகண அவரோகண மெலிவிலும் மெலிவான மகவு கருவாகும் சூலிச்சங்கின் சயன நிலை வியோனியின் நனவிலியில் நிலவியிருக்கும். அங்கெழுந்த சூலாகும் மீன்கள் ஒன்றையொன்று மோந்துபார்க்கும் இச்சையின் ஒளிநிலை சங்குவாயில் சிசுவின் விரல் வியோனியின் சயனத்தில் ஊர்ந்து இந்த வெளி எந்த வெளியில் பிறந்துள்ளது என மேகலாவில் ரேகையிட்டு நீராகி நிலம் படைத்து. நெருப்பாகி நீர் ஏறி. ஊழியாகிக் காற்றெழ. சங்கின் சுவாசித்தின் பன்னிரண்டு அங்குலச் சுரியலைச் சுற்றிச் சுற்றி விண்மீன்கள் கூட்டமாய் வியோனியின் கருவை நோக்கி வாளமாய்ச் செல்கின்றன. சூட்சுமமாக உலகப் பொருட்களோடு கல் விதைகள் வியாபித்து மரங்களாய் விரிந்த தோற்றம். கருவில் ஒன்றிணைவதாக இருக்கும் மேகலா மண்டலமாவது பூமத்திய ரேகைக்கு நேராக ஆகாசத்தில் இருக்கிற மண்டிலமாம் மேகலா ரேகை என்பது ஒவ்வொரு திங்களிலும் கடலடி உயிர்க்குலத்தின் அந்தக வெளியில் மேகலாவின் தொப்புள் கொடியில் லட்சம் உயிரினங்கள் அவள் சயன நிலையில் சுரையும் முறுகும் கமழும் வாசனையில் தொகுத்துப் பின்னிய கருங்குழல்களாய் சுழன்று சுற்றும் கூந்தலின் விம்மலில் சலராசிகள் ஊர்ந்துவரும். அவள் வியோனி சென்மாந்திர அத்தியாயங்களில் எழுவகைத் தோற்றத்தில் மக்கட்பிறப்பல்லாத உயிர்க்குலங்கள் பிரவாகமெடுக்கும் மேகலா ரேகையின் தோற்றம். மெல்ல நெளிந்து பகல் பொழுதையும் சேராமல் நிசியையும் சேராமல் இரண்டுக்கும் இடையே ஊடாடும் ஒரு சிருஷ்டி கணமாய் மெல்ல நகரும் மேகலா ரேகை ஒரு முடிவுறாத மங்கியதோர் தெளிவற்ற தமியினத் தொன்மத்தின் ஒளிப்பாட்டமாய் இருக்கலாம். இருட்டு மின்னலில் மறைந்த மேகலா மலையடுக்கத்தின் பரந்த இருளாக இருக்குமென்றும் ஒருவேளை முற்பிறப்பு ரேகையில் சிவந்தெரியும் தமிகளின் எலும்புகளின் தொலைதூர ரேகையில் இருக்கலாம். அவள் கண்கள் இன்னும் நிறைவாக மூடியிராத சயனத்தின் வெளிகளில் எரிந்து கொண்டிருக்கும் இறந்த விண்மீன்களின் தொலைவான ஒளி சதிரில் பட்டுத் திரியும் அவள் கால்களின் ஊடாட்டம். முன் அறிந்திராததையும் சம்புச்சயன மரக்கிளைகளின் சிற்றலை அசைவுகளை உணர்கிற ராகத்தின் நுண்ணிய இலையுதிர்வுகள் மேகலா ரேகையில் ஊற்றுக்கண்களின் இரவு தேட்டங்கள் சூலிச்சங்கில் இருந்து பிரிக்கமுடியா முடிவற்ற இருளின் இயற்கையான புதிரில் மறைந்திருக்கிறோமா. ஒவ்வொன்றும் நிகழப்போவதையும் மேகலாரேகை முன் கூறிவிடுவதாக உவணப்புள் குரலிட்டுச் சகுணம் காட்ட ஆகூழ் போகூழ் பற்றிய யாக்கை மதி கொண்டவளாகப் பிறப்பினின்று நீங்கி என்றும் இருப்பவளின் ஓர் இருண்ட ஒளி கலங்கவிழ்ந்த மரக்கல மாக்களின் திசைதவறிய கடலிடையே வருந்துகிறபோது இந்திரனேவலால் மேகலா ரேகை தோன்றிச் சமுத்திர தேவதை உருவெடுத்து ஏழு நாட்களுக்குள் கலமிழந்தோரைக் காத்து உதவி வந்தாள் என்பதும் ததாகதரிடம் எப்போதும் உரையாடியவாறு திசை திரிகிறாள். பழங்கலஞ் செலுத்துவோரைச் வெய்யோன் வெஞ்சுடர் நோக்கித் தள்ளும் கடற்சாகசக்காரர் சுழியில் கவிழும் வேளை கிழக்கேயுள்ள தீபாந்திரங்களெல்லாம் இந்தச் சமுத்திர தேவதையின் பரிபாலனத்திற்கு உட்பட்டிருந்தன என்றும் போதிசத்துவ புண்ணிய சீலர் ஆழிப்பேரலையில் வருந்தியபோது ஏழாம்நாளில் அம்மேகலா ரேகை பல்ஜாதக சுருள் திறந்து பூமியின் மையத்திலிருந்து மேலெழும்புவது மேகலா ரேகையில். சுழியும் பூமியின் ஆழத்தில் இருளில்கூட ஒரு முளை இரவி நோக்கி வளர திருகிவளைந்து சுற்றும் அலரியின் திசையில் திரும்புகிறாள்.

கடலடி நாடகத்தில் வருந்தும் பொம்மைகளை இந்திரனேவலால் உதவி வந்தவளுக்கு நீர் வளரிகள் வைத்து பதினெட்டு வகை மரக்கிளைகளில் வடித்த வாளம் பல்வேறு சடங்காற்றுப் பாடலில் வியோனிகாவின் சதிர்ப் பொம்மைகள் ஆடும் இவ்விளையாட்டுப் பரிதி வளைவுகளாய்ச் சுற்றிவரும். இந்திரன் விலா எலும்புகளை உருவி ஒவ்வொரு வாளமாக அவனே கொடுத்த சில தீவாந்திரங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவளை அனவி இப்போது இன்னும் பிரகாசிக்கத் துவங்கியிருந்தான். கிரண மாலியின் விடியல் தமிகளின் பலம். கோள்களின் பெயர்களைக் கூறும்பொழுது அரவு சற்பம் அசுரன் அரா ராகுவென அவள் கைகளைச் சுற்றி ஆடி மின்னுகிறது. நான் சவிதா சுற்றிச் சுழல்கிறேன். என்னருகில் கணிகா வரும்போதெல்லாம் இசையின் ஊழ் நோக்கிச் செல்லுமாறு அவளைத் தள்ளுகிறேன். வியோனி ஒவ்வோர் அசைவிலும் ஒரு விண்மின் மடிகிறது. இறந்த விண்மீனுக்கடியில் ஒளி வருடங்கள் தேய்ந்துகொண்டிருக்க மானேந்தியும் விதுவும் சகோதரியாகிய அரிச்சிகாவை அலரி விழுங்கிக் கொண்டிருக்கிறான். யாழின் வரிமீட்டலிலிருந்து மண் நுரையீரலைப் பிரிப்பதற்காக உள் நாக்கு கரு நத்தைகள் கூட்டமாய் எச்சில் கோடுபோட்டு உடுகண நூலை வரைகின்றன. விண்மீன்களற்ற இரவில் மேகலா ரேகை வெளியெங்கும் படர்கிறது. குருத்துவிடும் உயிர்க்குலங்களின் ஒலி. பொம்மைக் கூட்டம் கிழக்குத் திசை நோக்கி வருகின்றன. அங்கேதான் கையணல் வைத்த எயிற்றி மீண்டும் பிறக்கிறாள். உப்பு முகமூடி அணிந்த முதுவாய்ப் பாணன் கடலேறிக் கடந்த துன்பகரமான பொம்மலாட்டக் கப்பலில் நாடு கடந்து மாறியவர்கள், திரும்பி வராமல் போயிருந்தோர். கடல் கயிறு பட்ட வடுக்களோடு களிம்பு பூசி வாழ்ந்திருந்தனர். வேறுசிலப் படைப்புகளின் புனைவு வெளியில் அழுக்கான துணியில் வரைந்த பொம்மைகளாக ஊடுருவிக் கலந்திருந்தனர். மேகலா ரேகைபட்ட பழம் பொம்மைகள் தீயில் வசிக்கும் முதற்காலப் பல்லிகள். தீயில் முலைதிருகியவளை வேந்தன் கடல் வழிக் கூட்டிப் போகிறான். கடலடி நகரம் மீண்டும் எழுந்தது. பறவை நாகம், முதலை மீன் தோற்றங்களைப் படகுகளின் முகப்பில் தீட்டியிருந்தனர். மகர மீன் வடிவில் தம் இருப்பை கற்பனை செய்து தங்கள் மொழியுருவைச் சதா நேசித்த கடற் புலவர்கள் பார்த்திருந்தனர் கடகோனிகழ்வை. சாக்கப்பல்வாசிகள் முணுமுணுத்தார்கள். “உலகம் அமைதியாக இருக்கவில்லை இங்கு எல்லா உயிர் வதையும் நடக்கிறது. அம்பு நிழல் துறவியாக இருக்கிறது” புத்தகங்கள் கசிந்த குருதியைப் படகுகளில் பூசியிருந்தனர். கறை படிந்த உரு கப்பலில் எழுதிய ஏடுகளில் தீயாத மிச்சங்களை வைத்து காப்பியர்கள், அழிந்தவற்றை பொருத்திவிடத் தேடினர். இருளின் படிம மேகலா ரேகைகளாய் அசைந்து உருவில் நுரை கக்கியது. சூறையாடும் பழக்கமுள்ள வில்லின் நிழல்கள் கொன்று தின்னும் ஏடுகளைக் கரிய இரைப்பையிலிருந்து கீறி எடுத்தனர். “மழையில் கரைகிறது என் நிழல்” என்ற புத்தககங்களை உலர வைத்தனர் பொம்மைகள் ஆடும் கயிற்றில்.

காற்றின் நீர் திரியில் சுடர்விடும் தமி நாடோடிகள் வரும் காற்றில் மிதந்த இறகுகள் இச்சிறிய படகுகளில் மௌனமாக வருகிறார்கள். கீழ் முனையில் வாராவதிக்கு வடகிழக்கில் பேய்முனைப் பாறைகள் கூடவே நகர்ந்து வரும் கல்லாகவும் நீராகவும் இருக்கும் கவிதைகளில் இரவோடு இரவாகத் துரத்தியதில் உயிருக்குத் தப்பியவர்களும் பொம்மலாட்டக் கப்பலில் வினாசமாகி உயிர்தப்பி அழிந்த உடல்கள் இன்று உரு கப்பலில் வரும். இறந்தவர்களைக் கொண்டு செல்லும் சாக்கியன் எல்லோரையும் வெறுத்து ‘சித்தார்த்தா’ படைப்பிலிருந்து வெளியேறி விட்டிருந்தான். “நீங்கள் மரணத்தை விரும்புபவர்களாக இருந்தால் அதற்கு நீங்கள் சம்பளம் தர வேண்டும்” என்கிறான் நாடகத்தில் வந்த நடிகன் மாறி வரும் மன உணர்வுகள் மெய்ப்பாட்டு அசைவுகள் முகத்திலும் உடம்பிலும் மனவெழுச்சி கொள்கிறான். உலகில் தமிகளுக்கே உரிய தனித்த தன்னிச்சையான நிலை பேறு மேகலா ரேகையில் வாழிடமாகக் கொண்டிருந்தது அழகுணர்வுக்கலை மாயை வித்தையால் ஒருவரைப் பேச வைப்பது போலப் பாவனைகள் உணர்ச்சிகளை வெளியிட்டு மறையும் பார்வையாளனும் ஓரிழையில் சேர்ந்து அந்த உணர்வுகளுக்குள் இயங்கும் நடிகனாகிறான். அந்த நடிகை வியோனி நாணல் மயிற்சிலிர்ப்பு உடலின் நிறம் மாற்றம் மிகு உணர்ச்சியின் மெய்ப்பாடுகள் விரும்பு நிலை கடந்த மெய்மை என்பது தொன்மை.

நீங்கள் மரணத்தை விரும்புபவர்களாக இருந்தால் அதற்கு நீங்கள் சம்பளம் தர வேண்டும்

சமந்த கூடத்தில் பாதச் சுவடுகளைத் தெரியும்படி பதித்து விட்டு தேஜவனத்திற்குத் திரும்பிச் செல்லாமல் உருகப்பலில் மாலுமியாக வருகிறான் மேகலா ரேகைக்கு. உருமேல் தளத்திற்கு அவன் வரும்போது பறவைகள் சுழன்று சுற்றி ஒலியிடுகின்றன தலைமேல். சக்கரவாளப் பறவைகள் கூட்டங் கூட்டமாய் நிற்காமல் ஓலமிட்டு வெளியேறிவிட்டவை. “தன் குழந்தையையே கொலை செய்த குற்றவாளியான மிடியாவுக்குக்கூடப் பரிவுகாட்டுமாறு செய்த நீங்கள் விஷ அங்கியின் வருணனை அல்லது மிடியா அவள் குழந்தைகளுக்குப் பிரியா விடை கூறும் வரிகள் மூலமாக யூரிப்டஸின் நாடகத்தைவிடக் கப்பல் உருவை வழிநடத்தி சுங்கான் பிடித்த மாலுமியாக நீங்கள் இருப்பது மோசமானதுதான் அபிதரே” என்றன தமி பொம்மைகள். கனவுக்கும் கலைக்கும் ஒரு வகைத் தொடர்பு பழமையான ஆடைகளில் கனவாகப் படிந்திருக்கும்.

ஆவிகள் மனதில் ஊடுருவி நடித்துப் பேசும் சரிந்த தாக்கத்தை ஏற்படுத்திவிடும் பார்வையாளனிடம், உணரும் நடிக்கும் இனமறந்து முத்தமிடும். ஆனால் ஆவிகளின் நாவாயில் சிறுவெண் காக்கையும் பூநாரைகளும் போதாவும் எருவைக் கூட்டமும் கூடுகட்டி மாசற்ற முட்டைகளிட்டு உள்ளே கருவிருக்கும் ஓடுகள் உடைபடாமல் மிதந்து அலையும் மேகலா ரேகையில் நடித்த நாடக ஆவிகளின் அழகுணர்வுக் கலை ஒத்திகை அற்ற நிலவெளிகளில் அடிவானில் சரிந்து கொண்டிருக்கும் மறைந்துபோன நடிகர்களின் அத்தனை முகபாவ அபிநயங்களும் பூசிய நிறங்களோடு வேட்கை கொண்டு தனி வெளியில் காத்திருக்கின்றன கூத்துப் பார்த்துவிட்டுத் திரும்பும் குடிகாரனோடு பேசுவதற்கு. நாடக ஆவிகள் காத்திருக்கும் தூண்கள் பருவந்தோறும் இடம் விட்டு இடம் செல்வதாயின. நீலக் கோழிகளும், நீருமிழ் போதாவும் உரசி அலையும். புலம்பெயர் புள்ளாகி வதியும். பறவை மனிதர்களாய் ஓசனித்து வெக்கையால் தலையெடுத்துப் பருவத்தின் கடைநாள் போதலும் உயிருள்ள மெய்வடிவாகவே தோற்றமளிக்கும் பொம்மலாட்டத் துணிப்பாவைகள் சித்திர துரங்க நியாயம் என்றாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பொம்மைகள் ஜடத்திலிருந்து நடிப்பின் சக்தி பெற்று நம்பும் முகத்தோற்றம் வியர்க அந்த அபிநயங்களை இத்தனை விதமாய் யார்தான் தரமுடியும் மொம்மைகளின் இயல்பாய் மாறியிருந்த சிறுவர்கள் மொம்மைகளோடு ஓடிவிட ஏங்குவர் பறப்பதற்கு. பனைமீனும் பெருமீனும் முத்தமிட்டன மேகலா ரேகையில் பிளந்துவந்த ஆவியோரை.

வெளியேறும் பாணர் சூரியப் பிம்பத்தை வெள்ளிக்கோள் கடந்து செல்வதை நோக்கியே கரும் படகுகளைத் திருப்பினர். நிரை திமில் மருங்கில் படர்தரும் மேகலாத் தீவத் துறைவன் வலைகளை வீசும் ஒலி. புலவுக் கடல் நெடுக ஆயிரம் தீவுகளாகப் படகுகளையே மேகலா தேசமாக மாற்றி மிதவையில் வாழத் தொடங்கினர். பகையம்புகள் செருகிய புண்ணுமிழ் குருதிதான் நிற்காமல் வழிகிறது. எல்லாத் திவலைகளிலும் உப்பின் குருதியும் கடலில் கலந்துவிடும். கடற்பரப்பில் எல்லா வலியனைத்தும் கழுவிக் கழுவி நீரில் கரைக்கிறார்கள் சிலர். பவ்வம் உடுத்த இப்பயங்கெழு மேகலா ரேகை அதிரும் மாநிலம் திங்களுக்கும் கடல் ஓதங்களுக்கும் கலம் கவிழ்ந்த வங்க மாக்களை சமுத்திர தேவதை மறை உருவாக்கினாள்.

மேகலா ரேகையில் கரித்துணி ஆடையுடுத்திய பிச்சைக்காரர்கள் தெருவில் உள்ள குப்பைகளில் அழுக்குக் கந்தலையுடுத்தியவர் அங்கம் பிணநெடி நாறும் சீநாறும், சொல்நாறும் வாய்ப்பந்தல் கூட்டத்தை அழிந்த தமியர் மண்ணெடுத்துத் தூற்றுவார்கள். நூல்களை மாத்திரம் சுமந்தலையும் பாணர்களை வாஞ்சித்து பித்தருமே கூடி வந்து ஒரு பிடி அமுதை மேகலா உடுகணப் பேழையிலிருந்து உருட்டி நீட்டவும் அது பாடலாயிற்று. பேய் போல் திரிந்து, பிணம்போல் மேகலா ரேகையில் நெடுகக் கிடந்து, மேயன் போலுழன்று தன் தாய் பெத்த கூட்டம் கரை நெடுக நிற்பதைக் கண்டனர். சுவையற்ற உணவும் வெளித்திருணை வாசமும் தரையில் கிடந்து ஊதியெடுத்த ஓட்டைத் துட்டுக்கு பரங்கிப் புகையிலை வாங்கி புகைக்கிற மண்ணோடு கிடந்தவர். “இங்கு வந்து எவரிடத்திலும் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை. வெற்றிடமாய் இருப்போரிடம் எதுவும் கேட்கவில்லை. சொற்பொழியும் பந்தல் நனையவுமில்லை கொஞ்சம் பேசாமல் இரு” என்றான் எலும்பு துருத்திய விதிசாகா கழுதையில் வந்த கிட்டானோ சக்கம்பரி. அவரெவரும் மரணிக்கவுமில்லை. எரிந்த ஒரு நூலகத்தை மேகலா ரேகையில் நனைத்து நடிகர்கள் உலர்த்துகிறார்கள் பார். அதை உயிர்ப்பிக்க வந்தவர்களாய்த் தெரிந்தது. எல்லையில்லா புத்தகமாய் விரிந்தவர்கள் அங்கே வருகிறார்கள். கைவிலங்கு உடையும் ஒலி சவக்கப்பல் நாடகத்தில் கேட்டது.

எரிந்த ஒரு நூலகத்தை மேகலா ரேகையில் நனைத்து நடிகர்கள் உலர்த்துகிறார்கள் பார்.

கடல் ஆற்றலை ஈர்க்கிறாள் வியோனி காத்திருக்கிறாள் நீண்ட காலம் பிறந்ததிலிருந்து பிறவாமுன்மையில் கருவிலும் நீந்தி வருகிறாள். கொலைப்படுத்திய பிரதிகளுக்காக கடல் விளிம்புகளில் தேடி வருகிறாள் மேகலா ரேகைக்கு. நீராக மாறியவர் தீயிலும் அவியாத வாக்கு அத்தனை வகைக் காற்றிலும் தனித்தனியாப் பிரிந்தவர்கள் புத்தகங்களின் ஜ்வாலையாக கைகளில் எரியும் நூல்களைப் படித்தவாறு கரைந்து அழிந்த ஏடுகளை மூழ்கி எடுத்தவர் நீரோட்டத்தில் நழுவிச் செல்லும் சொற்றொடர்களை எடுக்க இப்பியும், கிளிஞ்சலும் பால் சங்கும் நகுலன் விழிகளும் கீறல் விடும் இயற்கைக்குத் திரும்பி வருகிறார்கள் பாசிபிடித்த நாவாய் ஓட்டி. தமி மொழியும் நாடகமும் தொன்மத்தில் மறையாமல் வியோனி பெருவாய் முதலை உமிழ்ந்த பெண்ணாகக் காற்றின் சுருள்களில் சதிராடுகிறாள் மேகலா ரேகையில் கால்மாற்றி. “நுழைதரு நூலினர் ஞாலம்/ கோயிலும் சுனையும் கடலும் சூழ்ந்த மேகலா ரேகை இந்திரன் பெயர்த்த வெட்டில் அலைமோதிச் சுழல்கிறது கடல். நூலகச்சுனையில் எரிந்த நீறும் உலகவறவி கொடுத்த கடல் சிலம்பைத் திறந்த வியோனி கூழாங்கற்கள் உருளுமிடத்தில் வரிப்பாடலை நரம்பில் ஏற்றுகிறாள். நிர்ப்பந்தமான வெற்றிடத்தில் நினைவுகள் மரணமான போதில் தோன்றி மறையும் சிறுசிறு சிதைந்து உடைந்த பொம்மைகள் கூடவே படைப்பிலிருந்து நாவாய்க்கு வரும். மேகலா ரேகைப் பின்னலின் கோட்டுருவங்கள் உயிர்பெறும் துடிப்பு. வாடைக்காற்றில் மரணத்தின் படல்களைத் தாண்டி சூரியனற்று சாம்பல் களிமண் பூசிய பேய்க்கப்பலில் வாடியிருந்தனர். காற்றின் கிளைகளில் ஓடும் நாவாயிதில் சாகரா, புட்பா, கிரவுஞ்சா, சான்மலி, ரூபகா , செம்பியா , குளிரி என பல்லிருங் கூந்தல் விம்மிப் பொங்கிய இரவிருட்டில். இவ்வேழு சுரதேவதைகள் வியோனியின் கின்னரியில் மறைந்திருக்கும் பாடல்களை நரம்பு சுருதிகளில் மறைந்தும் தோன்றியும் உயிர் கொடுத்த வேளையில் மயங்கி இருப்போர் காயத்தில் மருந்திடவும் யாளிமுக அம்பியில் வருகிறார்கள் வளைகுடாவில்.

கடல் நெடுக யுத்தத்தின் மௌனம். சாம்பல் வெளியெங்கும் மிதுனா விம்முகிற இசை. கடல் சுழிந்தவர்கள் இசை நூல்களில் வெளிப்படுகிறார்கள். அநாதி கொண்ட கரு இழைக்குள் சாய்ந்து இழைத்த வரிகளில் மேகலா ரேகை நாகரிகத்தின் கோடு உருள்கிறது. தம்மீது தைத்த அம்புகளை வெள்ளி மீன்களாக உருமாற்றி எழுதிய நூலினுள் துடித்து களத்தில் நின்ற நிழல் கரையாமல் தோன்றும். பால்பருவக் காற்று கருநாவாய் தடம்பட்ட வழியினின்று உள் இழப்புகள் கலையாக எழும். ஏனோ அங்கும் இங்கும் எல்லோரது கோடுகளும் மேகலா ரேகைக்குள் வந்தடைந்தவை. வாடைக்காற்றின் இருளில் மேற்குப் பனி மூடிய பனிக்கப்பலில் உருகும் தற்கணமொன்றில் நூலுக்குள் புகுந்து அகம் கரைகிறது மேகலா ரேகையில். மருப்பில் தீட்டிய பெற்றோர் இல்லா வடதுருவத்தில் வெகு பாஷைகள் கலந்த ஒரே கடலுக்கு வருகை.

உலகம் அமைதியாக இருக்கவில்லை இங்கு எல்லா உயிர் வதையும் நடக்கிறது. அம்பு நிழல் துறவியாக இருக்கிறது

துயருறும் வியோனி நெடிய காற்று வழி வருகிறாள். யுத்த வினைக்குப் பின் மேகலா ரேகையில் சோளகக் காற்று ரத்தவாடை வீசும். “இருளால் வீழ்த்தப்பட்டு மீண்டும் இறந்து கொண்டிருக்கிறோம்” என முணுமுணுத்தாள் வியோனி. அழிந்ததை அறிந்தவர் பாழ் போகாது முடிவில்லாதொரு பாதையில் கிளம்பினர். நிழல் தங்க தகரத் தாழ்வாரங்கள், சிறையிலிடப்பட்ட காற்று, அதிதாகம் கொண்ட ஏதிலிகளின் பாடல் மணல் போலும் அழிகிறது காலம். “போர் கடாசி விட்ட உலர் வலயத்து மனிதன் நான்” என்றான் வட துருவத்தில் எழுதி. இல்லாமல் முற்றிப் பழுத்து விழும் இலைகள் கால்வாய்ச் சுரங்கத்தில் நீந்திய இரவு. சாவகத்தின் பல துடுப்புகளைத் தள்ளும் மாலுமிகள். வெற்றிகொள்ள முடியாத படகோட்டிகள். பாண்டிக்கால நங்கூரம் ஒடிகிறது. ஆதாம்பாலம் கரையணைப் புனைவுகளில் கல்சுமந்த வானரங்கள் வரும். மீன் படையுடன் வந்த கடற்கன்னி சுபர்ணஜா அணையைச் சிதைக்கிறாள். மொழி அகராதியில் நங்கூரமிட்ட நாடகர்கள் கரையிறங்காமல் கப்பலிலேயே இருக்க நேரிட்டது. ஆனால் நெடுந்தொலைவில் இருந்தது உருகப்பலின் பாதை. துருப்பிடித்த லாஞ்சி மூழ்கியது. அவர்கள் கடல் மேல் இருக்கிறோம் என்று தெரிந்தும் தெரியாதவர்களாக மேலேறி வந்தவர்கள் கடலில் அகப்படவில்லை. அருகில் சென்றால் படகுகள் மறையும். எவரையும் பிடிக்க முடியவில்லை. அவர்கள் அமைதியில் ஆழ்ந்திருக்கட்டுமென்று சேதுக்காக்கை சொன்னது. படகுகள் முன்னே செல்கிறதென்று யூகிக்க முடியவில்லை. அந்தக் காரிருள் நழுவும் படகுகளின் மெல்லிய ஒலி. வியோனி சதிராடும் நிழல், பாட்டின் சரீரம், அதனுள் அசையும் வாடைக் காற்று, மரபும் தொன்மமும் உரசும் வியோனியின் சதிர்க் கோடு புறம் சிதைந்த இருப்பில் பாட்டின் இயற்கை உயிர் நின்று, இருப்பு பெயர்தல், மாறுபடும் திணைகளைக் கடக்கும் மேகலா ரேகையில் நடமாட்டமில்லாத பின்னிரவில் மணல் மிக்க தெருக்கள் திசைதப்பிப் பெருங்கடல் ஓடும். மரக்கலங்களை அழைக்கும் சமுத்திர தேவதை. ஏணி சாற்றிய எண்ணெயில் எரியும் கடல் விளக்கு. அமரரைத் தடவும் நீர்த்திவலைகள். தாழை மரங்களுக்கிடையே பனங்காய்த் தலைகளுடன் சிறுவர்கள் எட்டிப் பார்க்கின்றனர். உருகப்பலில் உலவிய நிழல்கள் மேகலா ரேகையின் சுற்றத்தைத் கண்டன. நாடகத்தில் மூங்கில் காற்று வீசியது. பெருவலைப் பரதவர் தொலைவே நின்று தங்கள் கடற்கன்னி சுபர்ணஜாவைக் கூவி அழைக்கிறார்கள்.

கோணங்கி

எழுத்தாளர் கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. 1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர். 1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர் இவர். பாழி, பிதிரா, த என்ற இவருடைய மூன்று நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை.

Share
Published by
கோணங்கி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago