நிறமாலைமானி

13 நிமிட வாசிப்பு
  1. முப்பட்டகம் எப்போதும் நிறங்களைப் பிரித்துக்காட்டும் என்று கூறுவதைவிடப் பகுத்துக்காட்டும் எனக் கூறுதல் பொருத்தமாக இருக்கும். காலப்பரிமாண திசையானது மூன்றெனக் காட்டி அமர்ந்திருக்கிறது. மனிதனின் ஊகங்கள் யாவும் குறுக்கீட்டு விளைவுக்குட்பட்ட ஒளிக்கதிரெனச் சிதறிக்கொண்டிருக்கிறது.
  2. அதி-நவீன நிறமாலைமானிகளால் சில மூலக்கூறுகளின் குணாதிசயங்களை, கட்டமைப்புகளை முக்கியமாக அதன் தோற்ற வடிவத்தையே (Molecular re-structuring) மாற்றியமைக்க முடியும்.

°°

பரிதியின் மனைவிக்கு இரு கால்களும் வெவ்வேறு உயரம் கொண்டவை. அடியெடுத்துச் செல்கையில் அவளின் வலது கால் நீளமாக இரண்டு அடி தொலைவு உந்திச்சென்றால், அவளது இடது கால் ஒரு அடி அளவுக்கு மட்டுமே உந்த முடியும். பிறவிக் குறைபாடு என்று தெரிந்தேதான் தாரணியை மணந்துகொண்டான். அதிகாலையில் வைகறையின் வீசு பனியில் இருள் முற்றாக அணைவதற்கு முன்பாகவே வழக்கம்போல் தான் பணிபுரியும் கல்லூரியின் ஆய்வகத்திற்குச் செல்பவனிடம் பகல் தன் அடர்த்தியைக் கூட்டிக் காட்டியது. அந்திமச் சாயலை எவ்வித உறுத்தலுமின்றிப் பார்த்துக்கொண்டிருப்பது இவனின் அநாமதேயக் கற்பனைகளில் ஒன்று. உண்டாகும் மனக்கிளர்ச்சியில் தவிர்க்க இயலாத உபகாட்சிகள் பறவைகளாய், மேகங்களாய், வர்ண ஜாலங்களாய் மிதந்து கொண்டிருந்தன. அதிகாலை மெல்லிருளில், அவன் தன் நிழலைத் தோளில் வைத்துத் தூக்கிப்போவதுபோல் தெரிந்தது. ராட்சதக் காலூன்றி தன் முகம் முழுவதும் சுழன்றாலும் வடிவம் மாறாது நின்றுகொண்டிருந்தன காற்றாடிகள். காற்றடி காலம் காற்றாடிகளின் காலம். சுழன்று சுழன்றே காலத்தில் உறைந்துபோயின அவை. பருவ காலத்தைப் பொறுத்தும் காற்றில் மோதும் அளவைப் பொறுத்தும் அதன் இயக்கம் மாறுவது இயல்பே. ஆனால் காற்றாடியின் மையம் பல்வேறு கிளைகள் வந்து இணையும் ஆன்மாவைப் போலானது. அதன் இயல்புநிலை மாறாதிருக்கும்வரை தனது மையத்தையும் அது மாற்றுவதில்லை என நம்பியிருந்தான் பரிதி.

மையம் > சுழலும் காலம் > விளைவுகள்

ஆன்மா > உடலின் இயக்கம் > செயல்

இயல்பில் ஒளி மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தைச் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளவல்லது. இதை அவன் நினைத்துக்கொண்டிருந்தபோதே வேலியில் அமர்ந்திருந்தவொரு பச்சோந்தி பழுப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறியதைக் கவனித்தான். அதிகாலையின் இருளும் அவ்வாறே அவனிடம் தனது மூச்சடைப்பை வழியெங்கும் கூறிக்கொண்டே வந்தது. ஆய்வகத்தின் கதவுகள் பெரியளவில் ஆனாலும் யாருக்கும் கேட்காத சப்தமோடு அறையைத் திறந்துவைத்தது. எப்போதும் ஆய்வகத்தில் நுழைந்தவுடன் இருக்கும் எல்லா சோதனைக் கருவிகளையும் உயிரூட்டிப் பார்ப்பது அவனது வழக்கம். அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்தமான நிறமாலைமானியின் தொலைநோக்கியை வளைத்து, திசைமாற்றி ஆய்வகத்தை ஒரேசமயத்தில் அறைக்கு வெளியேயும், உள்ளேயும் விரித்துச் சுருக்கிக் காண்பான். நிறமாலைமானியும் தன்னைப் போர்த்தியிருந்த நிழலை விலக்கி அனைத்து இருப்புகளின் நிலையையும் அப்பட்டமாக வெளிக்காட்டும். காட்சிகளை நொடிப்பொழுதில் பரிணமிக்கச் செய்யும் அதன் வில்லைகள் உற்றுநோக்கும் எவரின் பார்வைகளையும் அதன் அர்த்தங்களையும்கூடத் திருத்தியமைக்கும். முன்பைவிடச் சற்று செறிவுகூடி அடர்த்தியாகத் தெரிந்தது சோடியம் விளக்கு.

கடந்த இருபத்தைந்து வருடங்களாகக் கருவிகளே கதியென்று கிடக்கும் பரிதி தனக்கு நேர்ந்த சோதனையான எண்ணத்தைச் செயல்படுத்திப்பார்க்கும் நோக்கத்தினால் செய்த செயலொன்று இப்படியொரு விளைவைச் சந்திக்க நேரிடுமென அவனே எதிர்பார்த்திருக்கவில்லை. இதுவரையில் அவன் சந்தித்த சில தீவிரமான மன அழுத்தமும், வெளியே சொல்லமுடியாமல் தனக்குள்ளேயே போட்டு உழன்றுகொண்டிருந்த அவனின் சில தோற்ற மாயங்களும் ஒருவேளை இப்படியொரு முடிவிற்கு அவனைத் தள்ளியிருக்கக்கூடும். இவ்வறையில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததாகத் தெரியவில்லை. இருப்பதிலேயே மிகவும் பெரிதான அதி ரக நிறமாலைமானியின் முன்பாக அதன் உருவை வியந்து அப்படியே ஆழ்ந்திருந்தான். முன்புபோலில்லை. இங்கிருக்கும் மாணவர்களால் கண்டறியப்பட்ட வினோதமான இந்தப் புதியவகை நிறமாலைமானியினுள் மனிதனின் அடிப்படை மூலக்கூறுகளை ஒருவனால் எளிதில் வாசிக்க முடியும். அவற்றை மூலக்கூறுகளாக பாவித்து அதில் ஒரு திருத்தத்தையும் மேற்கொள்ள முடியும். அதாவது மூலக்கூறுகளுக்கிடையேயான இரட்டைப் பிணைப்பை உடைத்து ஒற்றைப் பிணைப்பாக மாற்றமுடியும். ஆனால் பரிதி துவக்கத்திலிருந்தே தவறான விளக்கங்களால் அக்கருவியைப் புரிந்துவைத்திருந்தான். சுவரிலிருக்கும் ஆணியின் மையத்தில் தூக்கிட்டுக்கொண்டது போல் முன்பின்னென அலைவுறுகிறது பெண்டுலம். அந்தப் பெண்டுலத்தைப் பார்க்கும்போதெல்லாம் தனது மனைவியின் நினைவே அவனுக்குள் மேலெழும். தனது ஊனமுற்ற நிலையைப் பொறுக்க முடியாமல் ஒருமுறை தன் கழுத்துக்குச் சுருக்கிட்டு அவள் தன்னையொரு பெண்டுலமாக மாற்ற முயன்றதைப் பரிதியால் எப்போதும் மறக்க முடியாது. எத்தனையோ மருத்துவங்களால் முயன்றும் பயனின்றி வேறுவழியின்றி இன்று பரிதியோடு யாருக்கும் தெரியாமல், அவனது இந்த விபரீத சோதனைக்கு உடன்பட ஆய்வகத்துக்குள் நுழைத்திருக்கிறாள் தாரணி. மேலும் கூறப்போனால், அவள் தன்னையொரு பெண்டுலமாக எண்ணினாலும், அவனைப் பொறுத்தவரை இன்று அவள் ஒரு மூலக்கூறு. அந்த நிறமாலைமானியின் கண்களால் வாசிக்கத் தகுந்த மூலக்கூறு. ஆகையால் இன்னும் சற்றுநேரத்திற்கு அவளுக்கு உடலுறுப்புகளின் வேறுபாடுகள் களைந்து, அவள் பரிதியின் கற்பனையில் எந்த அடையாளங்களும் அற்றவொரு நிலைக்குச் செல்லவிருந்தாள். இன்னொருவரின் கற்பனைக்குள் பிரவேசித்துவிட்டபின் ஒருவரால் மரணத்தை எளிதாகப் புறந்தள்ள முடிகிறது. தன் நிலையை, இயலாமையை, மற்றும் முடிவினைத் திருத்தியெழுதும் வாய்ப்பையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிகிறது. தாரணியின் கனவு இதைக் காட்டிலும் பெரிதாக இருந்தது. தனது எல்லாப் பிரார்த்தனைகளும் பொய்த்துவிட்ட பிறகு, இறுதி முடிவாக அவள் அவன் பணிபுரியும் ஆய்வகத்திற்கு ரகசியமாக நுழைந்திருந்தாள். அப்போது சத்தமிட்டு நடந்து பழகிய தாரணியின் கால்கள் தெரியாமல் அருகிலிருந்த ஒளியியல் நீர்மத்தைத் தட்டிவிட்டது. அது நிறமாலைமானியின் “அளவுகோலில்” பயன்படும் ஒருவித திரவம். ஒரு பெருங்கிணற்றின் அடர்த்தியானது அக்குப்பியிலிருந்து சாய்ந்து விழுந்து தரையில் சிந்தியது. சத்தம் கேட்டு பரிதி திரும்பி நோக்கினான். நீர்மம் நிச்சயம் ஓசையிட்டிருக்காது. அத்தகைய இழிவான நாக்கு அதற்கில்லை. எதற்கெடுத்தாலும் கூச்சலிடுவது, அகத்தின் குரலுக்கு ஒலியூட்டுவதெல்லாம் மனிதர்களின் அதிகப்பிரசங்கித்தனம். அதிர்ச்சியில் கூச்சலிட்டது தாரணியின் குரல்தான். தாரணியின் கால்கள் சரிசமமாக வளர்ந்ததல்ல. இடது காலைவிட வலது கால் ஒரு திருகளவு அதிகம். எப்போதும் அவளுடல் புவியச்சுக்கோட்டிலிருந்து 10° சாய்ந்திருக்கும். தனது மனைவியின் உயர அளவைச் சரிசெய்யக் கோரி பரிதி முயலாத மருத்துவக் குறிப்புகள் இல்லை. தற்போது அவளது உயரம் குறைந்த இடதுகாலின் எலும்பில் கிருமித் தொற்றும் பரவ ஆரம்பித்திருக்கிறது. சரிசெய்வதற்கு லட்சக்கணக்கில் ஆகுமென்பதால் நிலைகுலைந்து போனான் பரிதி. ஆய்வகக் கருவிகளில் சில ஒவ்வொருமுறையும் தமது துல்லியத்தை வரையறைக்க முடியாமல் போகும் சமயத்திலும், செயல்திறனைக் கருத்தில்கொண்டு அவற்றைப் புறந்தள்ளாமல் இன்னமும் அங்கேயே வைத்துக்கொள்பவன் பரிதி. அவ்வளவு சீக்கிரம் எந்தக் கருவியையும் அவன் வெளியே விற்க சம்மதிக்க மாட்டான். ஒருவேளை சில கருவிகளால் இனி செயல்படவே முடியாவிட்டாலும்கூட அவனுக்குப் பிரச்சனையில்லை. குறைபாடென்பது ஒப்பீடுகளால் உருவாவது. மற்றபடி அதனதன் இருப்பில் ஒவ்வொன்றும் இவ்வுலகில் தனித்துவமானதென்பதை அவன் எப்போதும் நம்பியிருந்தான். உண்மையில் முப்பட்டகத்திலிருந்து வெளியேறும் மின்காந்த ஒளிக் கற்றைகளின் அலைநீளம்கூட ஒரே அளவில் இருப்பதில்லைதானே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். எப்போதும் கருவிகளோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கும் பரிதிக்கும் இது உள்ளுக்குள் நச்சரித்துக்கொண்டே இருந்தது. எப்படியேனும் இதைச் செய்துபார்த்தாக வேண்டுமென்று திட்டம் தீட்டினான்.

சில நாட்களுக்கு முன்பாக இங்கே சில மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உயிரி-இயற்பியலின் (Bio-Physics) அடிப்படையில் ஒரு பச்சோந்தியைப் பிடித்துவந்து அதன் பிறவி இயல்பினையும், குறைபாட்டினையும் அதன் மூலக்கூற்றின் அடிப்படையை ஆராய்ந்து அதைச் சரிசெய்யும் வழிமுறையினைக் கண்டறிந்த ஆய்வில் வழக்கம்போல பரிதியே அவர்களுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தான். அதில் அவ்விலங்கிலிருந்து பெறப்பட்ட மூலக்கூறுகளைப் புறவிசைக்கு உட்படுத்தி அதன் இயல்பினை மாற்றி மீண்டும் அம்மூலக்கூறுகளை விலங்கினுள் செலுத்தியதுவரை பரிதியே அவர்களுடன் இருந்தான். இவ்வாறான தொடர்ச்சியான சிகிச்சையின் மூலம் பச்சோந்தியின் உடல் மெதுமெதுவாகச் சரியானதைப் பரிதி ஆச்சரியம் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனின் குழம்பிய மூளை எல்லா தீர்வும் அவர்கள் மேற்கொண்ட நிறமாலைமானியில்தான் உள்ளதென்று புரிந்துகொண்டான். அதுபோலவே பிறவிக்குறைபாடான தாரணியின் கால்களையும் நிறமாலைமானியைக் கொண்டு சரிசெய்து விடலாமென்றும் யோசனையாக அவனுக்குள் முளைவிட்டது. அவனின் அந்த விபரீத யோசனைதான் அவளையும் இன்று ஒரு மூலக்கூறாக மாற்ற முனைந்திருக்கிறது. இதுவரை அவளின் ஊனத்தைப் பற்றிய எண்ணமேயில்லாது வாழ்ந்து வந்தவன் இப்போது இம்மாதிரியான முடிவுக்கு நகரக் காரணம், அவளின் கால்களில் ஏற்பட்டிருக்கும் தொற்றும், அதற்கு உண்டாகிற செலவும்தான். இதை அவளும் உணர்ந்திருந்தாள்.

பரிதியை ஆய்வகத்தின் பொறுப்பாளர் வேலையிலிருந்து நீக்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்தத் தண்டனை வெறுமனே ஒரு விலையுயர்ந்த முப்பட்டகத்தை உடைத்ததற்காக மட்டும் நிகழவில்லை, மாறாக மூலக்கூறுகளைக் கண்காணிக்கும் நிறமாலைமானியில் எந்தவித அனுமதியுமின்றி சில வடிவ மாற்றங்களை அவனின் விருப்பத்திற்கேற்ப அனுமதி பெறாமல் மேற்கொண்டதற்காகவும்தான் அந்தத் தண்டனை. மேலும், அவ்வப்போது உபகரணங்களை ஆவணங்களின்றித் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகவும் அவன்மீது புகார்கள் இருந்தன. இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்காதென்று மன்றாடியும் பயனில்லை. நிர்வாகம் மசியவில்லை. ஆய்வகத்தினை விட்டுப்பிரிய மனமின்றி மேலதிகமாகச் சிந்திக்கலானான். ஆளில்லாத சமயமாய் ஆய்வகத்திற்குள் வந்துபோகத் துவங்கினான்.

நீள வெளியில் திரியும் ஒளியெனும் பேராற்றல் தனது விழுதுகளால் நிழல் பரப்பி பூமியை ஆட்கொள்ளும் அற்புதத்தை நிறமாலையின் பார்வையால் கண்டறியும் சூத்திரம் மிகவும் முக்கியமானது. ஒளியைப் பிரித்து அல்லது பகுத்துக் காண்பிக்கும் முப்பட்டகம் சரியான உயரத்தில் அதாவது மேசையானது பூமியில் நிறுத்துவதைப்போலச் சமமட்டமாய் இருக்க வேண்டும். இன்றேல் ஒளிமறைந்து அதன் நிழலே பெருகுவது எஞ்சும். ஆக ரசமட்டம் கொண்டு மேசையைச் சமப்படுத்துவதன் மூலம் அதன்மேல் நிற்கவைத்த தனது மனைவியின் கால்களின் உயரமும் சம உயரளவு சரிசெய்யப்படும் என்பதே அவனது எண்ணம். மேலும் ஆய்வகத்தில் பழையது என்று வீசப்பட்ட ஒரு பச்சை வண்ண ரசமட்டத்தை எடுத்துவந்த பரிதி மேசையின்மீது தாரணியை நிற்கவைத்து அவள் கால்களை அளவெடுக்கத் துவங்கினான். ரசமட்டத்தால் அளவிட்டு உயர மாறுபாடு சரிசெய்யும்வரை அவளது கால்கள் அசையாமலிருக்க வேண்டும். நிச்சயம் அது ரணவேதனை. இருப்பினும் தாரணிக்கு இதில் நம்பிக்கை இல்லை. இது ஆய்வகத்தில் கருவிகளோடே புழங்கும் ஒருவனின் வெற்றுப் பைத்தியக்காரத்தனமென்று நினைத்துக்கொண்டாள். மேலும் ஏற்கனவே இரண்டுமுறை அவள் தற்கொலைக்கு முயன்ற நிகழ்வுகள்கூட அவனை இதுபோலக் கிறுக்குத்தனங்களுக்குத் தூண்டியிருக்கலாம். ஆகவே பொறுமையாக அவள் அவனின் விருப்பங்களுக்கு ஒத்துழைத்தாள். ஒருவேளை இத்திட்டம் வெற்றியடைந்தால் பலபேரை இதுபோல சரிசெய்யலாம்தானே. நிறமாலைமானிக்கு முன்பாக இணைக்கப்பட்ட பெரிய மேஜையின் மீது நின்றுகொண்டு விட்டத்தில் கட்டப்பட்ட கயிற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு மானியின் மேசையில் தன்னிரு கால்களையும் இயல்பாக வைத்துக்கொண்டாள் தாரணி. பரிதி மூலக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாகச் சில கண்காணிப்புக் கருவிகளை இணைக்கும் வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தான். நீண்டநேரமாக இவ்வாறு நின்றிருப்பதில் சலிப்புற்றவள் மேலே தொங்குகிற கயிற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டபடி தன் கால்களை மேசையின் விளிம்பில் மெதுவாக ஆட்டியபடி தன்னை மெதுவாக ஒரு பெண்டுலமாக மாற்ற முனைந்தாள். மேலும் அவள் பரிதியை நோக்கி, ‘நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன்…? பெண்டுலம்போலத் தெரிகிறேனா…?

அவன் பதிலுக்கு அங்கதமாக, “ஆமாம்…. நீ தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றதிலிருந்து இதைப் பார்க்கையில் உன்நினைவுதான் வரும்” என்றான்…

அவள் சத்தம் அதிகம் கேட்காதபடி சிரித்தாள்.

அவன் எரிச்சலைடந்து ப்ப்ச்ச் என்றான்.

அறை அமைதியில் திளைத்தது.

***

இயங்கிக்கொண்டிருந்த மின்விசிறியையும் அணைத்துவிட்டதால் அறைமுழுதும் தனிமையில் மூழ்கியிருந்தது. பரிதி இப்போது தன் கற்பனையின் வழியாக உலகை நிர்மாணித்துக்கொண்டான். மூலக்கூறாக, புலனுக்கு அப்பால் எளிதில் யூகிக்க முடியாதபடி மாறிவிட்ட தாரணியைச் சமநிலைப்படுத்த 0° -180° என்ற கோணத்தில் நிறமாலைமானி சமநிலையைத் தேடிக்கொண்டிருந்தது. மிகவும் தேர்ந்தெடுத்த அளவுகளால் பரிதி தொலைநோக்கியை இயக்க, நிறமாலைமானி நின்ற இடத்திலிருந்தே அவனை வேறெங்கோ அழைத்துப்போனது. தொலைநோக்கியின் லென்ஸின் வழியாகப் பரிதி அறையின் ஒவ்வொரு மூலையையும் நோட்டமிட்டான். முகப்பு வாயிலை, இதர உபகரணங்களை, ஜன்னல் கதவுகளை, மேஜையில் அசையாமல் பரிதியின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கும் தாரணியையும் பார்வையிட்டான். அச்சமயம் பிடிமானத்திற்கு அவள் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கயிறானது தாரணியின் கழுத்தை ஒட்டித் தெரிவதால், லென்ஸின் கோணலான பிம்பத்தில் அவள் தூக்கிட்டுத் தொங்குவதுபோல் தெரிந்தது. பரிதி சட்டென்று பயந்து பின்வாங்கினான். திரும்பத் திரும்ப அவள் பங்குபெறும் அந்நிகழ்வானது வெறுமனே காட்சிப்பிழை என்று மட்டும் கூறிவிட முடியாது. லென்ஸுகள் சமயத்தில் நடக்கவிருப்பதையும் முன்னறிவிக்கக்கூடும். இதே ஆய்வகத்தில் அவன் கேட்டறிந்த பல பேராசிரியர்களின் கூற்றுகள் ஏனோ அவன் நினைவுக்குள் அலைபாய்ந்தன. இப்போது சாளரத்தின் வழியே மெதுமெதுவாய் உள்ளேகும் வெளிச்சம் அங்கிருக்கும் காட்சிகளில் தலையிடத் துவங்கியது. மேசையின் விளிம்பில் தாரணியைப் போலவே நிழலை உருவாக்கி அவளின் நிஜத்திற்கு இணையாக நிற்கச் செய்கிறது. அங்குதான் பரிதிக்கு யதார்த்தச் சிக்கல் வெளிப்படத் துவங்கியது. அதாவது தாரணியை நோக்கினால் பகல் மங்கலாகத் தெரிவதும் பகலை நோக்கினாலும் தாரணி மங்கலாவதுமாய் சூழல் தொடர்ச்சியாக முரணாக அலைபாய்ந்தது. எனில் தாரணி இப்போது உள்ளே நிரம்பியிருக்கும் வெளிச்சத்தின் விளைவாகத் தோன்றிய நிழலா…? அல்லது தான் விருப்பிய நிஜத்தைத் தேடுகிற மற்றொரு உண்மையா என்று ஒருகணம் குழம்பிப்போனான் பரிதி. இப்போது நிறமாலைமானி வலதுபக்கமாகத் திரும்புகிறது விளக்குக்குள் கவனம்கொள்ளும் அதன் உடல் 312°4′ – 132°19′ கோணத்தில் நிற்கிறது. எதேச்சையாய் அளவிடுகையில் அவள் பிடித்துக்கொண்டு நிற்கும் கயிற்றை நுண்ணோக்கிப் பார்க்க அவனுக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று ஒரே இருட்டு. நிழல் சற்று தன்னைப் பெரிதாக்கி தன்னுள் அனைத்தையும் இழுத்து நிறுத்தியிருந்தது. அந்த நொடி பரிதியின் அருகிலிருந்த அனைத்தையும் இருட்டு தொலைவாக்கிவிட்டது. தொலைவு பெரும்பாலும் ஒரு பூதாகரமானவொன்றாக நம்பவைத்தே அவன் வளர்க்கப்பட்டிருந்தான். தொலைவு என்பது ஏதுமற்ற வெளி. இன்னுமும் கூறினால் ஏதுமில்லாதிருப்பதே தொலைவுக்கான அடையாளமாகும். தற்போது கூர் மையப்புள்ளியில் தாரணி தொங்கும் காட்சியானது தூர அளவுகளைச் சரியாக அளவிடாததன் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். பரிதிக்குத் தனது செய்முறையில் சரிசெய்ய முடியாத முதல் பிழை தலைநீட்டத் துவங்கியதைக் கவனிக்கத் துவங்கினான்.

மூலக்கூறுகளாகப் பகுத்துவிட்ட தாரணியை அதைப் பகுத்தாயும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பரிதி சற்றுத் திணறினான். ஏனெனில் அவன் அந்த ஆய்வகத்தில் அவனே செய்முறையாளனும் அவனே உதவியாளனுமாக இருந்தான். மேலும் அவன் அங்குப் பயின்ற மாணவர்களைப்போல மொத்த வழிமுறைகளையும் பலமுறை செய்து பயிற்சியடைந்தவனும் அல்ல. நேரத்தைக் கடத்தி வேறொரு மார்க்கத்தைக் கண்டறிவதைத் தவிர அவனிடம் வேறு உபாயங்கள் இல்லை. சிதிலமுற்ற தொலைநோக்கியின் கண்ணாடியின் வழியே குவியப்படுத்துவதில் நேர்ந்த பிழையால் அக்கயிறானது தொலைநோக்கியின் ஆடிக்குள் எல்லாம் “இரண்டாகத்” தெரிய துவங்கியிருந்தது. அக்கணம் தாரணி பிடித்திருந்த மேஜை உட்பட அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதோடு, அவள் பிடித்திருந்த இரண்டு கயிறும் ஒரே முனையில் கட்டப்பட்டு ஒரே தூரத்தில் தொங்குவதாக நம்ப ஆரம்பித்தான். மீண்டும் தன் தொலைநோக்கியின் வழியே அவளை நோட்டமிட, தாரணி இன்னமும் அதேபோல் தூக்கிலிட்டுக்கொண்டதுபோல் தெரிந்தது. ஒருவேளை தாரணியின் விருப்பப்படி அவள் ஒரு பெண்டுலமாக மாறிக்கொண்டிருக்கிறாளோ என்கிற சந்தேகமும் அவனுக்குள் எழாமலில்லை. அது உண்மையில், பழுதான வில்லைகள் மேஜையை, கயிற்றை மற்றும் தாரணியை இரண்டு உருவங்களாக மாற்றி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் தாரணியுடன் மற்றொரு கயிற்றில் தொங்குவது யாரெனப் பரிதி தனக்குள் ஐயமுற்றான். யோசிப்பதற்கு நேரமில்லை. ஒருவேளை அது தான்தானோ எனவும் அவன் மனம் அச்சம் கொண்டது. தொலைநோக்கியின் அளவுருவை மீண்டும் சரிசெய்யத் துவங்கினான். அவையாவும் அவன் முழுமையாக அறிந்திடாத செயல்முறைகளாகும். ஆய்வானது முடியும்வரை தாரணியின் பளுவை மேசையானது தாங்கவேண்டும். ஆனால் பரிதியால் எவ்வளவு முயன்றும் இரண்டாக மாறிய கயிற்றை மீண்டும் ஒன்றாக்க இயலவில்லை. தொலைநோக்கியின் சிதிலமுற்றக் கண்ணாடியால் உண்டாகியிருக்கும் மாயக் கயிற்றை அறுத்தெறியவும் இயலாதது என்பது கூடுதலான சிக்கல். ஏனெனில் அவன் கண்களுக்கு ஈடாக லென்ஸுகளையும் நம்புகிறவனாவான். அவ்வாறு லென்ஸுகளின் வழியே அவன் கண்கள் எதிர்கொள்ளும் சிறு சிறு காட்சிப்பிழைகளும் எப்போது வேண்டுமானாலும் உண்மையாகிவிடக்கூடும் என்றும் நம்பியிருந்தான். ஆனால் நடக்கும் சூழ்நிலையை முன்னிட்டு பரிதி சற்றே திகைத்து நின்றான். இருவரின் கயிறும் எப்படி ஒரே மாதிரி இருக்கமுடியும். எவ்வாறு ஒரு ரேகை போல மற்றொரு ரேகை உருவாக முடியாதோ, ஒரு ரேகை திரித்த கயிற்றின் முடிச்சைப்போலவே மற்றொரு கயிற்றையும் திரிக்க இயலாது. அவ்வாறே திரித்தாலும் பின்னல் வரிசையாவது மாறுமே தவிர அச்சு அசலாக இருப்பது அபூர்வம். எல்லாம் இந்தத் தொலைநோக்கியைத்தான் குறைகூற வேண்டும்.

மூலக்கூறுகளின் உட்கருக்களைக் கண்டறியும் துல்லியம் அவனுக்கு கைகூடவில்லை. ஒளித்துகளைச் சகட்டுமேனிக்கு உமிழ்ந்துகொண்டிருக்கும் சோடியம் விளக்கோ எதற்கும் அசைவதாயில்லை. வலிதாங்க இயலாது வேகமாக அசையும் தாரணியின் கால்களுக்கு நேரே ஒளித்தம்பம் மிதந்துகொண்டிருக்கிறது. அவன் சற்றும் தாமதிக்காமல் நிறமாலைமானியின் கழுத்தைத் திருப்பி இடதுபக்கம் பார்த்தது 71°2′ – 254°30′ கோணத்தில் அளவுகளைக் கணக்கிட்டான். இந்தமுறை அதைவிடச் சிக்கலான விசயம் என்னவெனில் முன்பே கூறியது போல, நிறமாலைமானியில் இலக்கைக் குவியப்படுத்துவதில் நேர்ந்த பிழையினால் (focusing) அந்த ஒற்றைக் கயிறு இரண்டாக மாறியிருந்த நிலையில், இப்போது அந்த மற்றொரு கயிறானது நிஜமாகவே தாரணிக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்தது. தொடர்ச்சியான மாயபிம்பங்கள் மீண்டும் மீண்டும் அவனுக்குள் உருக்கொண்டன. ஊசலாடும் மற்றொரு கயிற்றில் தொங்குகிற மற்றொரு நிழல் எப்போது வேண்டுமானாலும் நிஜமாகிவிடக்கூடும். அந்த நிஜத்திற்கு பரிதியின் உடலும், முகமும், மனநிலையும் எப்போது வேண்டுமானாலும் பொருந்திப்போகக் கூடும். ஏனெனில் பகிரங்கமாகவே பரிதி தனது செய்முறை தோற்றுக்கொண்டிருப்பதை உணரத் துவங்கிவிட்டான். அத்துடன் தாரணி தொங்குகிற கயிற்றுக்கு அருகில் அவளைப்போலவே தனது உடலையும் அசைவற்ற நிலையில் மாறியிருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானான். அவனது மனைவியின் கால்களைச் சரிசெய்ய வந்தவன் கடைசியில் தனது கால்களும் அவளைப்போல் உயரம் மாறுபட்டிருக்கிறது. ஆனால் அவனுக்கு அப்படியே நேரெதிராக வலது காலைவிட இடதுகால் ஒரு திருகளவு உயரமாக மாறியிருந்தது. கண்ணாடி தோற்றுவிக்கும் பிம்பம் எப்போதும் நிஜத்திற்கு எதிர் நிலையென்பதால் இப்படித் தெரிந்திருக்கக்கூடும்.

பரிதிக்குத் துக்கம் கலந்த பயம் நெஞ்சை அடைத்தது. அச்சு பிசகாமல் நின்றுகொண்டிருக்கும் தாரணியோ, “வேண்டுமானால் இந்த முயற்சியைக் கைவிட்டு விடலாம், எனது கால்கள் இதுவரைக்கும் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டுமென” புலம்பத் துவங்கினாள். பரிதிக்கு அது மேலும் எரிச்சலூட்டியது. அவன் கண்கள் போதையேறிய விழிகளைப்போல உலகத்தைச் சுழற்றியது. ஆத்திரமுற்றுக் கத்தத் துவங்கினான். சத்தம் அதிகமானால் யாரேனும் வந்துவிடக்கூடுமென்பதை உணர்ந்து கம்மிய குரலிலே திட்டினான். நிச்சயம் இது உபத்திரமான நிலைதான். அவளின் கால்களைச் சரிபார்க்க வந்தவன் இப்போது தனது கால்களை அவளைப்போல் மாற்றிக்கொண்டதாக நம்பியவன், அதற்குக் காரணமாக தாரணியை பகிரங்கமாகவே குறைகூறி வசைபொழியத் துவங்கினான். காணும் அனைத்தையும் புதிராக எடுத்துக்கொள்ளும் கண்ணாடி வில்லைகள் போல தன் வாழ்வு எது உண்மை எது பொய் என்று பிரித்தறியும் நிலையிழந்து தவிப்பதாகத் தன்னையே அவன் நொந்துகொண்டான்…தாரணி அப்போது பதிலின்றி மௌனமாக நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும், இப்போதைக்கு அவன் நம்பும் அனைத்தையும் தானும் நம்புவதே சிறந்தது என்பதை மேலும் ஒருமுறை உறுதிசெய்துகொண்டாள்.

சிக்கல் இப்போது வேறொரு நிலையை எட்டியிருக்கிறது. அவளுக்கு வலதுகால் நீளமாக இருந்ததும், இவனுக்கோ இடதுகால் நீளமாக மாறியிருந்தது. நிறமாலைமானியின் மேசையில் வைக்கப்பட்ட முப்பட்டகத்தை ரசமட்டம்கொண்டு சரிசெய்வதைப்போல தாரணியின் கால்களைச் சரிசெய்வதாகத் தனது கால்களையும் சரிசெய்ய முயன்றிருக்கிறான். தாரணியின் ஊனத்தைச் சரிசெய்யும் காரியத்தில் இதுநாள்வரை மறைத்துவைத்திருந்த பரிதியின் ஊனம் வெளிப்பட்டிருக்கிறது. பாதிவரைக்கும் வந்துவிட்டு இப்போது திரும்பிச் செல்வதென்பதும் முடியாத ஒன்று.

தவறு என்னவெனில் அவனுக்கு மூலக்கூறுகளை மையப்படுத்துவதற்கு முன்பாக நிறமாலைமானியின் தொலைநோக்கியையும், அதில் மாட்டப்பட்டிருக்கும் பழசான வில்லைகளையும் மாற்றியிருக்க வேண்டும். நிறமாலைமானி நல்ல முறையில்தான் இயங்குகிறதா என்பதைச் சோதிப்பது சற்று எளிதானதே. சோடியம் விளக்கிலுள்ள ஒளித்தம்பத்தைத் தேடிக் கண்டறிய வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறின்றிப் பிசங்கிய மனநிலையிலேயே அவன் நுண்ணோக்கியில் முப்பட்டகத்தை வைத்திருக்க வேண்டும்.

நின்றுகொண்டிருந்த தாரணியின் கால்களை சோடியம் விளக்கு படும்படி நீட்டச்சொன்னான். நிறமாலைமானியை இழுத்து இடதுபக்கம் கொண்டுபோனவன் 340°10′-160°20′ கோணத்தில் வைக்க இரு கால்களும் தெரிந்தது. இரண்டில் ஒரு லென்ஸின் வழியே தாரணியின் நீண்டு வளர்ந்த வலதுகாலை நிலையாக வைத்து, மற்றொரு லென்ஸின் வழியே உயரம் குறைந்த இடதுகாலை மெதுவாக சுழற்றி நீளச்செய்தான். அது சோடியம் விளக்கொளிரும் நுண்ணோக்கின் மட்டத்தில் காட்சிகளை மீள்தன்மையாக்கம் செய்யும் தன்மை கொண்டதால் “வலதுகால் குறிப்பிட்ட செண்டிமீட்டர் வரை நீண்டு பின்பு மறுபடியும் பழைய நிலைக்கே வந்தடைந்தது.” ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நீளும் காலானது ஒரு நொடி நின்று பின்பே பழைய நிலைக்குச்செல்வதை அறிந்துகொண்டவன் எவ்வளவு நீளம் வரை நீளுகிறதெனக் குறித்துக்கொண்ட பின் அந்த அளவோடு நிறுத்திக்கொண்டு தன் மனைவியைப் பார்த்தான். தாரணிக்கும் தன் கால்கள் எப்படித் தன்னையறியாமல் அளவு மாறுகிறது என்று புரியாமல் திகைத்துக்கொண்டிருந்தாள். அவளை மேசையைவிட்டு இறங்கக் கூற, தாரணியால் நம்ப முடியவில்லை. பரிதியின் கண்ணெதிரில் அவனின் ஆய்வு வெற்றி பெற்றுவிட்டதாக, தன்னிரு கால்களும் ஒரேயளவில் மாறியிருந்ததைக் காட்டிக் களிப்பில் துள்ளிக்குதித்தாள்.

ஆனால் அவன் ஏதோ சொல்வது போலிருந்தது. அதெல்லாம் அவள் காதுகளில் நுழையவில்லை. பரிதியைப்போலவே அவளும் கிட்டத்தட்ட காட்சிப்பிழைகளின் வழியே நடக்கும் தவறுகள் தனக்குச் சாதகமாக நடக்குமெனில் அதை உண்மையென்று ஒப்புக்கொள்ளும் மனநிலையை எட்டியிருந்தாள். இதுவரை தன்னை ஊனம் என்று ஏளனப்படுத்திய கண்களை அந்த ஆடிகளின் வழியே பார்க்கச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் இதில் மிகமுக்கியமான விதிமுறையானது. கால்கள் நிலைபெறும்வரை நிறமாலைமானியின் கழுத்தை அதே கோணத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற உண்மையை அறிந்திராத பரிதி தனது கால்களையும் கையோடு சரிசெய்துவிடலாமென, மீண்டும் கோணத்தை மாற்றி மானியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தான். அந்நேரம் மீண்டும் மாறிவிட்ட சமமற்ற கால்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் தரையிறங்க பொத்தென அவள் மேசையிலிருந்து தவறிவிழுந்தாள். இருவருக்கும் அப்போதுதான் விளங்கியது, தாரணியின் கால்கள் மாறிடாது அதே நிலையிலிருப்பதை.

அந்த ஏமாற்றத்தை அவ்விருவராலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை, ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தாரணி வீறிட்டு அழத்தொடங்கினாள். சத்தமிட்டு அழுவதால் யாராவது ஆய்வகத்துக்குள் வந்துவிடலாமென்று பரிதியால் பதிலுக்கு எச்சரிக்கத்தான் முடிந்தது. அவ்வாறு நேரிட்டால் நாம் இருவரும் சட்ட விரோதமாக நுழைந்திருக்கிறோம் என்பது கண்டுபிடிக்கப்படுமென்பதை உணர்த்தி தன் மனைவியைச் சமாதானப்படுத்தினான். இயலாமையிலிருந்து சிலநொடிகள் மீண்டெழுந்து கால்கள் புதிதான உலகில் ஆனந்தமாய் மிதந்தவள் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத அவளுக்கோ ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. சமாதானமாகி கண்ணைத் துடைத்தாளேயொழிய அவன் மேற்கொண்டு கூறியது எதையும் அவள் கேட்கவில்லை. இந்தமுறை பரிதியின் கால்களை வைத்து சோதித்துப் பார்ப்பதாக முடிவுக்கு வந்தனர். நிறமாலைமானியை எப்படி இயக்கவேண்டுமென்று அவன் சொல்லிக்கொடுத்ததையும் அரைகுறையாகக் கேட்டுக்கொண்டிருந்த தாரணி சித்தப் பிரமை பிடித்தவளாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் இனி எதையும் நம்புவதாக இல்லை. எதன்பொருட்டும் ஏமாறும் எண்ணமில்லை. தன்னைச் சுற்றி நடப்பதெல்லாம் இறப்புக்கு முன்பு ஒருவர் தரும் ஆறுதலைப்போல, முடிவினை நெருங்கியபின்பு வருகிற ஆசுவாசத்தைப்போல எல்லாம் அபத்தமாகவே தெரிந்தது. எதற்காக, எதை நம்பி இந்த ஆய்வகத்தில் நுழைந்தோம், எந்த நம்பிக்கையில் இந்தக் குறைபாடு சரியாகிவிடுமென நம்பினோம் என்றெல்லாம் அவளின் எண்ண ஓட்டங்கள் பரிணமித்தன. அவன் கற்றுக்கொடுத்த அளவுருக்களைச் சீரமைக்க முயலுகையிலும் அவளின் கவனம் இங்கு இல்லை. சில நொடிகளேனும் தனது கால்கள் சரியானதுபோல் உணர்ந்த அக்காட்சிகள் அவள் மனதுக்குள் அப்படியே இருந்தது. பரிதிக்கு இடதுகால் நீளம் என்பதால் இப்போது நிறமாலைமானியை இடதுபக்கம் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால் தனது உயரம் குறைந்த வலது காலையே நினைத்துக்கொண்டிருந்தவள் வலது பக்கமாய் திருப்பியதோடு கோணத்தை மாற்றி 160°20′-340°10′ என்று வைப்பதற்குப் பதிலாக 340°10′-160°20′ என்ற ‘எதிர்கோணத்தைத்’ தேர்வு செய்தாள். ஒளியின் குறுக்கீடுகள் அதிகமிருக்கும் பக்கம் வந்துவிட்ட தாரணி இப்போது வில்லைகளின் வழியே ஆய்வு மேசையிலிருக்கும் பரிதியைக் காண நேர்ந்தது. அங்கோ முரணாக அவன் வலதுகாலானது வழக்கத்தைவிட மேலும் சற்று நீண்டிருந்தது. அவள் இதைச் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. மேலும் வில்லைகளின் வழியே காணும் அந்த காட்சிப்பிழையை அவளும் உண்மையென்று நம்பும் குழப்பத்தை அடைந்திருந்தாள். அதுவரைக்கும் அடக்கிவைத்திருந்த சீற்றத்தின் கனல் பொங்கி பரிதி அவ்விடத்தில் ஓங்கி ஆர்ப்பரித்தான். மேலும் இப்போது அவனுக்கு என்ன சொல்வதென்றும் புரியவில்லை. தாரணியின் முகத்தை நோக்க, அவள் பதிலுக்கு உணர்ச்சியின்றி பரிதியின் முகத்தை நோக்க, தோல்வியின் அரிதாரம் இருவருக்கும் பொருத்தமாக இருந்தது.

அவன் நினைத்தது வேறு. ஆனால் நடந்து முடிந்தது வேறு. நிஜத்தில் அங்கே நடந்தது உண்மையென்று நம்பிக்கொள்ளும் அவசியம் இருவருக்கும் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும், நிஜம்போல அங்கே நடந்துமுடிந்ததைப் புறக்கணிக்க முடியவில்லை…எங்கே தவறு நடந்ததெனப் பரிதிக்கும் புரியவில்லை. அவனது கட்டுப்பாட்டிற்குள் ஆய்வினை வழிநடத்தலாமெனத் திட்டமிட்ட அனைத்தும் இப்போது அர்த்தமற்று அவர்கள் முன்பு வெறிச்சோடிக் கிடந்தது. தாரணிக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. கருவிகளால் ஒருபோதும் மனிதனின் வாழ்வில் புதிதாக எதையும் மாற்றியமைத்துவிட முடியாதென. ஆனாலும், ஒரு அற்ப நம்பிக்கையில் மேற்கொள்ளும் இந்த முயற்சியும் கைவிட்டுவிட்டதன் ஏமாற்றம்தான் அவர்களைக் கடுமையாக வதைத்தது.

பரிதியால் அந்தத் தோல்வியை ஏற்க முடியவில்லை. வெறியுற்று ஆய்வகத்தின் எல்லா கருவிகளையும் (நிறமாலைமானி உட்பட) அடித்து நொறுக்கினான். ஆனால் தாரணி வெறுமனே சுவரில் ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். இருவரின் பிரக்ஞையும் ஒரு புள்ளியில் துவங்கி, இருவேறு திசையில் இருவேறு மனோபாவங்களாகப் பிரிந்து சென்றது. அவர்களின் உயிர் ஒரு முனையில் நிலைகொண்டு எண்ணங்களோ மறுமுனையைத் தேடியலைந்து திசைகளைப் பெருக்கின. மீண்டும் மீண்டும் முடிந்த வரியிலிருந்து மீண்டும் துவங்கும் பெண்டுலங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான தூரங்களையும் பொருட்படுத்தாமல் சென்றுவந்தன. கண்ணீரில் அவர்களின் விழிகள் அவ்விருவரின் வலிகளையும் வெளிக்கொணரும் லென்ஸுகளாயின. தான் விரும்பியதெல்லாம் நடந்த ஒரு நல்ல கனவினை பொய்யென்று கூறிட இருவருக்கும் மனமில்லை. இயலாமையின் எல்லைக்குச் சென்றுவிட்ட அவர்களின் மனதுக்குத் தென்படும் சின்னஞ்சிறு தடயங்களும் அவர்களை இன்னலிலிருந்து கரைசேர்க்கும் உபாயங்களாயின. வேறுவழியின்றி நடந்தவை அனைத்தையும் உண்மையென்று நம்பினர். காற்றில் ஆடிக்கொண்டிருந்த கயிறுகளை ஒருசேர பார்க்கும் இருவரும் அழுது, வருந்தி முடித்தபோது அன்றையா நாள் இருளாகியிருந்தது. பின்பு இருவராலும் அவர்கள் கண்ட கயிற்றில் எடை கூடியிருந்தது.

அதற்குள்ளாகவே ஆய்வகத்தினுள் பரிதி எழுப்பிய சத்தங்களைக் கேட்டு கல்லூரியிலிருந்து பதறியடித்துக்கொண்டு ஆட்கள் உள்நுழைந்தபோது இருவரும் ஒருசேர மனித பெண்டுலமாக மாறியிருந்தனர்.


குறிப்பு: தனது தொகுப்பில் இடம்பெறப்போகும் பிரதி இதுவேயெனச் சொல்லி, எழுத்தாளர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

பெரு.விஷ்ணுகுமார்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகிலுள்ள நெய்க்காரப்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் கவிஞர். முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றவர். இதுவரைக்கும் ‘ழ என்ற பாதையில் நடப்பவன்' (2018), மற்றும் 'அசகவ தாளம்' (2021) என்ற இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் கதைகள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு எனத் தொடர்ச்சியாகச் சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் பங்காற்றி வருகிறார்.

View Comments

Share
Published by
பெரு.விஷ்ணுகுமார்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago