அரூவின் சில பரிந்துரைகள்:
Hidden Brain என்கிற ஆங்கிலக் கருத்தொலித் தொடர் (podcast) மனித மூளையின் பல மர்மங்களை ஆராய்கிறது. இத்தொடரின் நெறியாளர் சங்கர் வேதாந்தம் ஒவ்வொரு எபிஸோடிலும் ஓர் அறிவியல் வல்லுநருடன் உரையாடுகிறார். ஒவ்வொரு எபிஸோடின் முடிவிலும் ஏதேனும் ஓர் அறிவியல் புத்தகத்தின் அறிமுகம் கிடைத்துவிடும். மேலும் வெகு நேரம் சிந்திப்பதற்கு ஏதாவது ஓர் அடிப்படைக் கேள்வி மனதில் எழும்பி நிற்கும். அறிவியல் புனைவிற்கு நல்ல விளைநிலம். சமீபத்தில் விரும்பிக் கேட்ட இரண்டு எபிஸோடுகள்:
- ‘One Head, Two Brains’ – இந்த எபிஸோட் மனித மூளை ஏன் வலது இடது என இரு பிளவுகளாக இருக்கிறது என்ற கேள்வியை ஆராய்கிறது.
- ‘Love, Sex and Robots’ – உடலுறவுக்காகத் தயாரிக்கப்படும் ரோபாட்களைப் பற்றிய எபிஸோட்.
சீர்மை – க.அரவிந்த்
அமெரிக்க எழுத்தாளரும் தத்துவவாதியுமான கென் வில்பரின் ‘Grace and Grit’ என்ற நாவலின் அடிப்படையில், அவரது வாழ்வை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கும் நாவல். தன் வாழ்வில் பிழைகள், நோய்கள், குறைகள் போன்ற சமன்குலைவுகளுடனான போராட்டத்திற்கிடையே அறிவியல், தத்துவம் போன்றவற்றின் ஒட்டுமொத்த ஒழுங்கமைவு/சீர்மை தேடியலையும் கென் வில்பரின் கதை. முற்பகுதியை ஆய்வு, தனி மனித வெறுமை, அறிவியல்சார் தர்க்கங்கள் போன்றவை நிறைத்திருக்க, பிற்பகுதியில் மானுட உணர்வுப் பெருக்கின் உச்சத்தைத் தொட்டு, அதன் நீட்சியாக மெளனத்திற்குள் பொதிந்து மையத்தை நோக்கிப் பயணிக்கும் நாவலின் வடிவமும் ஒருவிதமான சீர்மைத் தேடலே. நாவல் வாசித்தபின் சீர்மை, symmetry என்ற வார்த்தைகள் மனதை ஆக்கிரமித்து, இனி காணும் அனைத்திலும் சீர்மையை அல்லது சீர்மைக் குலைவின் சிறுதீற்றலைத் தேடியலையும் அகம்.
கடைசி டினோசார்
தமிழில் அறிவியல்புனைவுக் கவிதைகளுக்கான தேடல் பயணத்தில் எங்கள் பார்வைக்கு முதலில் கிட்டியவை தேவதச்சனின் மர்ம நபர் தொகுப்பில் இடம்பெற்ற சில கவிதைகள். அவற்றில் இரண்டு கவிதைகளை இங்கே பகிர்கிறோம்.
கடைசி டினோசார்
ஒற்றையாய்
நின்றுகொண்டிருக்கிறது
அதன் ரோமங்கள் தொய்ந்து
களைத்துக் கிடந்தன
கடுங்கோடை.
இலைகள் உதிர்ந்து
இலைகளுக்கு உள்ளே
மறைவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது
அதன் கழுத்தில் அமர்ந்து
ஊர்ந்து செல்லும் கரப்பான் பூச்சி
போகட்டும் என்று பொறுத்திருந்து
இன்னும்
சில விநாடிகளில்
கழுத்தைத் தாழக் குனிந்து
விஷக் கற்றாழையைக்
கடிப்பதற்காய் காத்திருக்கிறது
இதுவரை
பார்க்கப்படாத பறவைகள், தொலைவிலிருந்து
கத்துகின்றன,
சீக்கிரம் செத்துப் போ
சீக்கிரம் செத்துப் போ
ரே பிராட்புரி (Ray Bradbury) எழுதிய ‘Fog Horn’ என்கிற ஆங்கில சிறுகதையும் இது போலவே ஒற்றையாய் இருக்கும் மாபெரும் மிருகத்தைப் பற்றியது. தேவதச்சனின் கவிதையும் பிராட்புரியின் சிறுகதையும் அடுத்தடுத்து வாசித்தால் பல திசைகளில் எண்ணங்கள் விரிவடையும்.
சத்தம் கேட்டு
எட்டிப் பார்த்தனர்,
டார்வின், கடவுள்
நான் கனவு,
நான் கனவு, என்று கத்தியபடி
என்று ஓடி வருகிறான்
ஒருவன்
நீளம் காணமுடியாத
ஒலிநாடா ஒன்று
அவன் கோமணம் என
கூடவே வருகிறது
சற்று
வழிவிட்டு
தள்ளி நிற்கின்றனர்
107 வயதுச் சிறுமிகள் இரண்டு பேர்
ஒருவேளை, அவன்
அவர்களை
இடித்துவிட்டால், அவ்வளவுதான்
வெடித்துச் சிதறப் போகிறது
ஆதியிலே இருக்கும் வார்த்தை