கடவுளும் கேண்டியும்

16 நிமிட வாசிப்பு

‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக தன் ஐஃபோனைப் பார்த்தவாறே ஊபருக்காகக் கந்தசாமி காத்திருந்தான். ரெட் லைன் பிடித்து சவுத் ஸ்டேஷனிற்குச் சென்று அங்கிருந்து கம்யூட்டர் ரயில் பிடித்தால் மான்ஸ்ஃபீல்ட் ஸ்டேஷனை நாற்பது நிமிடத்திற்குள் எட்டி அங்கிருந்து ஐந்து நிமிடங்களில் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம். குறைந்தபட்சம் முப்பது டாலர்களாவது மிச்சம். கண்டக்டர் டிக்கெட்டை ‘பன்ச்’ செய்யவில்லை என்றால் கூடுதல் பத்து டாலர்கள் லாபம். ஆனால் விடுமுறை நாள் என்பதால் கம்யூட்டர் ரயில் நேரம் பயணிகள் தேவைக்கேற்ப பொருந்தி அமையவில்லை, அவன் சவுத் ஸ்டேஷனில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே காத்திருக்க வேண்டும். இதிலும் ஓர் அனுகூலம் இருக்கிறது, அரை கப் பீட்ஸ் காப்பி குடித்துவிட்டு ரயிலைப் பிடிக்கலாம். ஊபரில் போனால் பீட்ஸ் காப்பி கிடையாது. ஆனால் மான்ஸ்ஃபீல்ட் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்குச் செல்ல மனைவியைத் தொல்லை செய்ய வேண்டும். வீண் வம்பெதற்கு என நினைத்துக் காசு போனாலும் பரவாயில்லை என்று ஊபரை அழைத்துவிட்டான்.

இப்படியாகக் கேண்டி என்ற கந்தசாமி லோக விசாரத்தில் ஈடுபட்டிருக்கும்போதுதான் அவனுக்குக் கடவுள் பிரசன்னமானார். எதிர்பட்டவனின் முகத்தில் தமிழ்க்களை தட்டுப்பட்டதால் தமிழன் என்பதை அவனிடமே கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, “ஐயா ஃபாக்ஸ்பரோவிற்கு எப்படிப் போகிறது?” என்று கேட்டார்.

“டிரெயினிலும் போலாம், ஊபர் பிடித்தும் போகலாம், ஏன் VR-இல் போகாமலே போகலாம், ஆனால் கேட்டுக் கேட்டு நடந்து மட்டும் போக முடியாது. மதுரைக்கு வழி வாயிலிருந்தாலும் அனைத்துப் பாதைகளும் இக்காலத்தில் ரோமிற்கு இட்டுச் செல்வதில்லையே!” என்றான் கேண்டி ஒரு நமட்டுச் சிரிப்புடன்.

“நான் மதுரைக்கோ ரோமுக்கோ போகவில்லையே, ஃபாக்ஸ்பரோவிற்குத்தானே வழி கேட்டேன், எப்படிப் போனால் சுருக்க வழி?” என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

பத்து நிமிடத்திற்குள் வர வேண்டிய ஊபர் இன்னும் பத்து நிமிடத் தொலைவிலேயே இருப்பதை மாப்பில் கண்டு கேண்டி ஆத்திரப்பட்டான். அந்த டிரைவரை ரத்து செய்துவிட்டு மற்றொரு டிரைவரை ஏற்பாடு செய்ய முயற்சிக்கையில் “சர்ஜ்” கட்டணம் விலையை இரண்டு மடங்காக்கி விட்டதால் ஊபரில் செல்லும் எண்ணத்தைத் துறந்து ரயிலில் செல்ல முடிவு செய்தான். விளையாட்டுப் பொருள் போல் காட்சியளித்த ஐஃபோனில் விரலால் கோலமிட்டபடியே எரிச்சலைப் பிரதிபலித்த அவன் முகத்தையே கடவுள் பார்த்திருந்தார்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு பிராட்வே சப்வேயிலிருந்து வெளியேறும் ஜனக்கூட்டத்திலிருந்து விலகி, பக்கத்திலிருந்த கடைவாசல் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

கேண்டி என்ற கந்தசாமிக்கு வயது முப்பது; முப்பது வருஷங்களாக அன்ன ஆகாரத்திற்குக் குறையேதும் இல்லாமல் வேளாவேளைக்குப் போஷாக்காக உண்பவன் போன்ற தேகக் கட்டு; ஒரு நரைமுடிகூட இல்லாது கருப்பு மயிர்கள் அடர்ந்திருக்கும் தலை; தினம்தோறும் க்ஷவரம் செய்யப்படும் முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்; கால்வின் கிளைன் ஜீன்ஸ், கால்வின் கிளைன் டீ ஷர்ட், அணிந்திருந்தான். காலில் சற்று நொய்ந்திருந்த ரீபாக் காலணிகள்.

வழி கேட்டவரைக் கேண்டி கூர்ந்து கவனித்தான். வயசை நிர்ணயமாகச் சொல்ல முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். தலையிலே துளிகூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் பிக் லெபோவ்ஸ்கி திரைப்படத்தில் வரும் டூடின் பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக்கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட நடுவில் பெரிய கறுப்பு மரு. கண்ணும் கன்னங்கரேலென்று, நாலு திசையிலும் சுழன்று, சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச் சிரிப்பு, கேண்டியைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம் குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது. எப்போதோ பார்த்த, ஆனால் நினைவில் மீட்டெடுக்க முடியாத ஒரு முகம்!

“ரொம்பத் தாகமாக இருக்கிறது,” என்றார் கடவுள்.

“இங்கே வாட்டர் ஃபவுண்டன்லாம் கிடையாது. கடையில்தான் வாங்க வேண்டும். வேண்டுமென்றால் காப்பி சாப்பிடலாம், அதோ இருக்கிறது ஸ்டார்பக்ஸ். தண்ணி பாட்டிலும் கிடைக்கும்,” என்றான் கேண்டி. “வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்,” என்றார் கடவுள். ஸ்டார்பக்ஸ்கூடப் பரிச்சயமாகாத ஒருவரை அமெரிக்காவில் காண்பதற்கான சாத்தியங்களைக் கணக்கிட்டபடியே கேண்டி அவருடன் நடக்கத் தொடங்கினான்.

2

கேண்டி மிகவும் சோஷியல் டைப், தெரிந்தவர் தெரியாதவர் என்ற அற்ப பேதம் பாராட்டாமல் எல்லோருடனும் சகஜமாகப் பழகுவான்.

“சரி, வாருங்கள் போவோம்,” என்றான்.

இருவரும் ஸ்டார்பக்சுக்குள் நுழைந்தனர். கடவுள் நேராக அங்குக் காலியாக இருந்த மேஜையை நோக்கி நடந்தார்.

“இது காஃப்பி ஷாப், கொண்டுலாம் தரமாட்டாங்க, நாமளே போய் வாங்கிக் கொண்டு வர வேண்டும். ரெண்டு கப் காப்பி சொல்லிடவா?”

“ரெண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்,” என்று நெடுநாட்களாக அசை போட்டுக் கொண்டிருந்த ஜோக் ஒன்றைக் கூறிவிட்ட சந்தோஷத்தில் அசட்டுத்தனமாகச் சிரித்தார் கடவுள்.

ஜோக்கைப் புரிந்துகொண்டதற்கு எந்த அறிகுறியையுமே முகத்தில் காட்டாது, “ஓகே, டூ காஃபீஸ் தென்,” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுக் காப்பி வாங்குவதற்கான வரிசையில் சேர்ந்துகொண்டான்.

பயலுக்கு ஆங்கில இலக்கணமும் தகராறு போலிருக்கிறது என்று கடவுள் நினைத்துக்கொண்டார்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு கேண்டி கையில் ஒரு ரசீதுடன் வந்தான்.

“காப்பி இல்லயா?” என்று கடவுள் சந்தேகத்துடன் கேட்டார்.

“காப்பி ஷாப்ல காப்பிக்கா பஞ்சம்? நம்ப பெயரைக் கூப்பிடும் வரையில் காத்திருக்க வேண்டும்.”

“அந்த காலத்துலலாம் ஒரு பொடியன் மேஜைக்கே காப்பிய கொண்டு குடுத்துடுவான்,” என்று பிலாக்கணம் வைத்தார் கடவுள்.

“அதெல்லாம் ஹொட்டல்லதான் சுவாமி. இது வெறும் காப்பிக்கடை. இங்கலாம் திருப்பதி கோவில் கியூல நிற்கற மாதிரி கால்கடுக்க நின்னாதான் பிரசாதம் கிடைக்கும்.”

பிரசாதம் என்று கேட்டவுடன் கடவுளுக்குச் சட்டென்று நாக்கு ஊறியது. லட்டு கிட்டு கிடைக்குமா என்று ஒரு முறை கடையை நோட்டம் விட்டார். “சே, பயல் நம்மைப் பக்கி என்று எடை போட்டுவிட்டால் அவமானம்,” என்ற பயத்தில் சுதாரித்துக்கொண்டே, “அங்கே மாதிரி இங்க ஸ்பெஷல் வரிசைலாம் கிடையாதோ?” என்று அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.

ஒரு வேளை பெரிய நக்கல் பேர்வழியாக இருப்பாரோ என்று சந்தேகித்துவிட்டுப் பதிலேதும் கூறாமல் பில்லுக்கான பணத்தை எப்படி அவரிடம் நாசூக்காகக் கேட்பது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த கேண்டியின் பெயரைக் கடைக்காரன் உரத்த குரலில் அழைக்க, அவன் போய் இரண்டு “காப்பிகளை” எடுத்து வந்து மேஜை மீது வைத்தான்.

3

“காப்பினா ஃபில்டர் காப்பின்னு நினைத்தேன். இது ஏதோ அசுரபானம் குடித்தது போல் தலை கிறுகிறுக்கிறது,” என்று ஸ்டார்பக்சிலிருந்து வெளியே வருகையில் கேண்டியிடம் கடவுள் ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

“இந்த ஊருல பால்ல ஒரு ஷொட்டு டிகாக்ஷன கலந்து குடிச்சா அதுக்கு பெயர் காப்பியில்ல, அதை லாட்டே என்று அழைப்பார்கள். அது கிடக்கட்டும், ஃபாக்ஸ்பரோவிற்குதானே, வாருங்கள் நானும் அங்கதான் போறேன். டிரெயின்லயே போயிடலாம்,” என்றான் கேண்டி.

எப்போதோ டிராமில் போனது நினைவிற்கு வர, “அதில் பிரயாணித்தால் தலை கிலை சுற்றாதே? முடிந்தால் ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே?”

“ரிக்‌ஷாவா, அதற்குக் காலப் பயண எந்திரத்தை முதலில் பிடிக்க வேண்டும். இங்கதான் பக்கத்தில இன்னோவேஷன் லாப்ஸ்ல காலகாலமாக முயற்சி பண்ணிகிட்டிருக்காங்க, இந்தக் காலத்த வெல்லற யுத்தி மாத்திரம் இன்னும் பிடிபடவில்லை அவர்களுக்கு. காப்பிலாம் குடிச்சு காலப்பயணம் பற்றி பேசும்வரைக்கும் அன்னியோன்னியமாகிவிட்டோம், ஆனால் இன்னமும் நாம் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்,” என்றான் கேண்டி.

கடவுள் சிரித்தார். வைட்டனர் கொண்டு துலக்கியது போல் பற்கள் மோகனமாக மின்னின. “நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்,” என்றார் அவர்.

கேண்டிக்குத் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி உற்சாகம். கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான்.

“VR என்ற கணினியியல் சஞ்சிகையைப் படித்திருக்கிறீர்களா?”

“VR என்றால்?”

“VR தெரியாதா, அதான் வன்பொருள் மென்பொருள் உத்திகளைக்கொண்டு தோற்றங்களை உருவாக்கி அதை நிஜம் என்று உணர வைப்பது. வெறும் சினிமா என்று எடை போட்டுவிடாதீர்கள், தோற்றத்தில் அமிழ்த்தி அதை யதார்த்தம் என்று உங்களை உணர வைப்பது அவவளவு சாமான்ய விஷயமல்ல,” என்றான் கேண்டி மிகுந்த ஆர்வத்துடன்.

“ஓ, கயிற்றரவு என்று கூறு, தமிழை மறந்துவிடாதே! எனக்கு அதில் கொஞ்சம் பரிச்சயம் உண்டு!”

“கேம் கண்ட்ரோலர்களா, ஹேப்டிக் சிஸ்டம்களா, எதில் பரிச்சயம் இருக்கிறது உங்களுக்கு?”

“நமக்கெல்லாமே விளையாட்டுதான். அலகிலா விளையாட்டுடையான் என்று பட்டப் பெயரெல்லாம் உண்டு. ஆனால் இந்தப் புதுப் பதங்கள்தான் பிடிபட மாட்டேன் என்கிறது!” புன்முறுவலுடன் பதிலளித்தார் கடவுள்.

‘இதென்னடா புதுக் கதையாக இருக்கிறது?’ என்று யோசித்தான் கேண்டி.”உங்களுக்கு வி.ஆரில் பரிச்சயமுண்டு; ஆனால் ஹேப்டிக்கோ வி.ஆர். சஞ்சிகையோ பரிச்சயமில்லை; அப்படி என்றால் உங்கள் கணினியியல் தொழில்நுட்ப ஞானம் பரிபூர்ணமாகவில்லை. என்னிடம் குறைந்தபட்சம் ஐந்து வருஷத்து இதழ்களாவது பிடிஎஃப் கோப்பு வடிவில் இருக்கும். அவற்றை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். ஈமெயில் ஐடி கொடுங்கள். மற்ற இதழ்களை நீங்கள் சந்தாதாரர் ஆகிய பிறகு ஆன்லைனில் படித்துக்கொள்ளலாம். வருடம் நூறு டாலர்கள் மட்டுமே. இப்போது ஒரு பிரமோஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மாதத்திற்குள் சந்தாதாரரானால் வருட சந்தாவை தொன்னூறு டாலர் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம்.”

சந்தா என்ற பதத்தைக் கேட்டவுடன் கடவுள் சற்று உஷாரானார். “நானே ஒரு பழைய சந்தா விசயமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆயுள் சந்தா கட்டியதுதான் பாக்கி. இன்னும் ஒரு சஞ்சிகைகூட எனக்கு வந்தபாடில்லை!”

கேண்டி பதிலேதும் சொல்லாமல் ஐஃபோனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். “கிராப்! கம்யூட்டர் ரயில் ஏதோவொரு தடங்கலால் ஒரு மணி நேரம் தாமதமாகத்தான் சவுத் ஸ்டேஷனை விட்டுப் புறப்படுமாம். ஆமாம், ஃபாக்ஸ்பரோவில் எங்கே போக வேண்டும் உங்களுக்கு?”

“கம்யூனிட்டி வே, இல்லம் 1”

“அன்பிலீவபில்! அது என் வீடாச்சே! அங்க யாரப் பாக்கனும்?”

“கந்தசாமிய”

“சரியாப் போச்சு! நான்தான் கந்தசாமி! என்ன எல்லோரும் கேண்டின்னு கூப்பிடுவாங்க. நீங்க யாரு? என்ன விஷயமா என்ன இப்படித் திடுமுன்னு பார்க்க வந்திருக்கீங்க? ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமே. ஏதோ கடவுள் புண்ணியத்துல என்ன எதேச்சையா சந்திச்சிட்டீங்க.”

“என்னோட பல கெட்ட பழக்கங்கள்ல அதுவும் ஒன்னு. சொல்லாம கொள்ளாம பிரசன்னமாயிடுவேன்! ஆனா அனேகமாக வேலை விஷயமாகத்தான் இந்த டூர் எல்லாம்!”

“என்ன தொழில் பண்ணறீங்க?”

“தொழில்னா, படைப்பாளின்னு சொல்லலாம், ஆனா அழிப்பாளின்னுதான் தெரியும்’”

“வாவ்! யு மீன் யு ஆர் என் ஆர்டிஸ்ட்? பேரு?”

“பல பெயர்கள் இருக்கு! பித்தன் பிடித்தமான ஒன்று”.

“மிஸ்டர் பித்தன்! உங்களுக்கு என்ன எப்படித் தெரியும்?”

“உன் தாத்தாவைத் தெரியும்! அவர்கூட ஹோட்டலுக்குச் சென்று காப்பி எல்லாம் குடித்திருக்கிறேன்!. உன் அம்மாவுடன்கூட விளையாடி இருக்கிறேன். அழகான குழந்தை. நீ அப்பா ஜாடை போலிருக்கு! ஆனால் இந்த சந்தா பிடிக்கும் சாதுர்யம் கண்டிப்பா அம்மா வழிதான் உன்னிடம் வந்து சேர்ந்திருக்கும். பிள்ளைவாள் யமகாதகர். சரி, விஷயத்திற்கு வருகிறேன். நமக்குச் சில வருடங்களாகவே உடல் நலம் சரியில்லை. பல சித்த முறைகளை முயற்சி செய்து பார்த்தாயிற்று. ஒரு பயனும் இல்லை. கோபத்தில் ஆலகாலத்தையும் மீண்டும் ஒரு முறை விழுங்கிப் பார்த்துவிட்டேன்!. சனியன் அதிலும்கூடக் கலிகாலத்துல கலப்படம் போலிருக்கு, குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. பாரியாள் முகத்தை நீ அப்போது பார்த்திருந்தாயானால் கதி கலங்கிப் போயிருப்பாய். நல்லகாலம் அவளுக்கு நெற்றிக்கண் கிற்றிக்கண் எல்லாம் இல்லை. அண்டம் பிழைத்தது! உன் தாத்தா ஏதோ ரசக்கட்டையின் அபூர்வப் பிரயோகத்தைப் பற்றிக் கட்டுரை எழுதியிருப்பதாகக் கூறினார். அதுதான் அந்தப் பழைய சஞ்சிகைகளில் ஏதாவது தேறுமா என்று திடுமென்று கிளம்பி வந்துவிட்டேன்.”

“தாத்தாவோட மாகசீன் கலக்‌ஷனா? நீங்க அதிர்ஷ்டசாலிதான் மிஸ்டர் பித்தன். போன மாசம்தான் அம்மா தவறிப் போனபோது திருவல்லிக்கேணி வீட்டை ஒழித்து எல்லாவற்றையும் டிஜிடைஸ் செய்தேன். இங்கதான் ஆபீஸ்ல இருக்கு. ரயில் தாமதமாயிட்டதால ஸ்டேசன்ல சும்மா போர் அடிச்சிக்கிட்டு இருக்கறதவிட ஆஃபீஸ்ல கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம், விஆர் உட்பட பல நவீனக் கணினியியல் தொழில்நுட்ப நூதனங்களை டிரை பண்ணின மாதிரி இருக்கும். என்ன சொல்றீங்க? போலாமா?” என்றான் கேண்டி.

“உன் சித்தம்!” என்றார் கடவுள்.

இருவரும் பிராட்வே சப்வே ஸ்டேஷனிற்குள் நுழைந்தார்கள்.

4

கேண்டி தன் ஆஃபீஸ் கணினியில் அவன் தாத்தாவின் சஞ்சிகைக் கோப்புகளில் ரசக்கட்டை கட்டுரையைத் தேடி அதைக் கடவுளுக்குக் காண்பித்தான். கடவுள் அதை மும்முரமாக படிக்கத் தொடன்கினார்.

“அப்பா! பிரித்தெடுத்து, புடமிட்டு, பதங்கம் செய்து, வாலையில் இடுவதற்குள் சங்கறுந்துவிடும் போலிருக்கிறதே. மலச்சிக்கல் அபாயம் வேறா. பேஷ்! பார்வதி கொன்றே விடுவாளே… இதை அவளிடம் நாசூக்காகப் பேசி முதலில் அவளைத் தயார் செய்ய வேண்டும். மிக்க நன்றி தம்பி.”

“நோ பிராப்ளம் மிஸ்டர் பித்தன். சரி வாங்க, சில ஜாலியான வருங்காலத் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முன்மாதிரிகளை உங்களுக்குக் காட்டுகிறேன்.”

முதலில் இருவரும் “ஏஐ சோதனைக் கூடம்” என்று பெயரிட்டிருந்த அறைக்குள் சென்றார்கள்.

“ஏஐ என்றால் என்ன?” கடவுள் கேட்டார்.

“விஆர் பரிச்சயமிருக்கு என்றீர்களே. ஏஐ என்றால் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ்.”

“ஓ செயற்கை நுண்ணறிவா. அதுதான் லோகத்துல கொட்டிக் கிடக்கறதே. மெய்ஞானம்தானே எட்டாக்கனி! மெய்நிகர்சனம் போல் இதுவும் ஒரு பாம்பாட்டி வித்தையா?” என்று கடவுள் நக்கலாகக் கேட்டார்.

“என்ன ஸ்வாமி, கிண்டலா! இதுதான் நம் வருங்கால உலகை ரட்சிக்கப் போகும் கடவுள். சரி இவ்வளவு பேசுகிறீர்களே, எங்கே சட்டென்று ஒரு கதைப் பெயரைச் சொல்லுங்கள், ஏஐயின் மகிமைக்கான ஒரு சிறு உதாரணத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்”

“சரி கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்ற கதையை எடுத்துக்கொள்ளேன்”

5

“இதோ இங்கிருக்கிறது பாருங்கள், இந்தக் கணினியின் பெயர் “ஸ்மார்ட் மங்கி டைப்ரைட்டர்”. முடிவற்ற குரங்குத் தேற்றம் என்ற கணித உருவகத்தை நினைவுபடுத்தும் ஓர் இன்சைட் ஜோக். அதாவது ஒரு குரங்கு கையில் ஒரு தட்டச்சுப் பொறியைக் கொடுத்து அதைச் சகட்டுமேனிக்கு டைப் அடிக்க விட்டால், என்றாவது ஒரு நாள் அது கம்பராமாயணத்தையும் டைப் அடிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதே அத்தேற்றத்தின் சாரம். ஆனால் அவ்வளவு நேரம்லாம் யாருகிட்ட இருக்கு. உலகமே அதுக்குள்ள அழிஞ்சாலும் அழிஞ்சிடும்,” என்று கேண்டி சுவாரஸ்யத்துடன் விளக்கினான்

“ஆஹா, யாருமற்ற பாழ்நிலப் பெருவெளியில், ஒரு குரங்கு மாத்திரம் ஏதோ ஓர் உந்துதலால் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருக்கையில் ஓர் அற்புதம் நிகழ்கிறது. இதை எப்பொழுதோ பல யுகங்களுக்கு முன்பாக எதிர்கொண்டது போல் ஓர் உணர்வு. சரி மேலே சொல்லு,” என்றார் கடவுள் மர்மமாக.

ஒரு குரங்கு கையில் ஒரு தட்டச்சுப் பொறியைக் கொடுத்து அதைச் சகட்டுமேனிக்கு டைப் அடிக்க விட்டால், என்றாவது ஒரு நாள் அது கம்பராமாயணத்தையும் டைப் அடிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்பதே அத்தேற்றத்தின் சாரம்.

“நேரமின்மையே அக்குரங்கின் எதிரி. அதனால்தான் எண்டர் “த ஸ்மார்ட் டைப்ரைட்டர்’. இதற்குள் பூமியில் பதிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களின் டிஜிடல் காப்பிக்களும் இருக்கிறது. அவை கணினி முறைகளைக் கொண்டு பல்வேறு வழிகளில் வகைமைப்படுத்தப்படுகின்றன. அவ்வகைமைகளைக் கொண்டும், கணினிக் கற்றல் முறைகளையும், பயிற்சித் தரவுகளைக் கொண்டும் இது தன்னையே தயார்படுத்திக்கொள்கிறது. உதாரணமாக, நீங்கள் கூறிய கதையை எடுத்துக்கொள்வோம்”. கேண்டி கணினியில் கதைப் பெயரைத் தட்டச்சு செய்தான். “இதோ, நீங்கள் கூறிய கதை, சரிதானா பாருங்கள்.”

கடவுள் திரையில் கதையின் முதல்பத்தியைப் படித்துவிட்டு ஆமாம் என்று பதிலளித்தார்.

“இந்தக் கதையை புரிந்துகொண்டு அதை ஒரு வாசகருக்கு நிகழ்த்திக் காட்டத் தேவையான விஆர் செயல்திட்டங்களைத் தயாரிப்பதற்கான புத்திசாலித்தனம் அதற்கு இருக்கிறது. இதோ பாருங்கள், உங்கள் கதைக்கான செயல் திட்டங்களை அது ஏற்கனவே தயாரித்து விஆர் செயலிக்கு அனுப்பிவிட்டது. இனி நீங்கள் அக்கதையை மெய்யாகவே அனுபவிக்கலாம். இந்தப் பக்கமா வாங்க. ஆண்ட் பீ ப்ரிபேர்ட் டு பீ அமேஸ்ட்!”

இருவரும் விஆர் தியேட்டர் என்று பெயரிடப்பட்டிருந்த அரங்கிற்குள் சென்றனர். நாலாபக்கமும் பெரும் திரைகளுடனும், பலவகையான மெய்நிகர்சன ஹெட்செட்களுடனும் ஹேப்டிக் அமைப்புகளுடனும் ஓர் அறிவியல் புனைவில் வரும் அறைபோல அவ்வறை காட்சியளித்தது.

கேண்டி விஆர் ஹெட்செட் ஒன்றை எடுத்து வந்தான்.

“தலைவலி ஏதும் வந்துவிடாதே…” என்று கவலைப்பட்டுக்கொண்டே ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். பழைய தமிழ் சினிமா செட் ஒன்றில் இருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.

சென்னையில் ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக கந்தசாமிப்பிள்ளை சிந்தித்துக் கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு வீட்டுக்கு நடந்துவிடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக்கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ‘கப்’ காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது…” என்று அவர் மனஓட்டம் கடவுளின் காதில் விவரணையாக ஒலித்தது. சிறிது நேரத்தில் அவர் (அப்போது முகத்தில் தெய்வீகக் களை கூடுதலாக ஒளிர்ந்ததோ என்று சந்தேகம் மனதில் எழுந்தது) பிரசன்னமாவதை அவரால் பார்க்க முடிந்தது. நினைவைக் காட்டிலும் தத்ரூபமாகவே காட்சியளித்தது. கையில் இருந்த கண்ட்ரோலர் வழியே நனவைப் போல் தோற்றமளித்த புனைவை முன்னகர்த்தி பிள்ளை கருவேப்பிலைக் கொழுந்து என்று வேடிக்கையாக அழைத்த அந்த அழகான குழந்தை, “அப்பா” என்று கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளைக் காலைக்கட்டிக் கொண்டு, “எனக்கு என்னா கொண்டாந்தே?” என்று கேட்பதைப் பார்த்தார். தன் மடியில் ஒரே குதியில் ஏறிக்கொண்டதைப் பார்க்கையில் அவர் கண்கள் கலங்கின. இந்த அற்புதமான உயிரோ இப்போது சிதையில் எரிந்து மண்ணோடு மண்ணாகி விட்டது? கடவுளுக்கே பிரியமானாலும்! அவரால் மேலும் கதையில் சஞ்சாரிக்க முடியவில்லை. ஹெட்செட்டைக் கழற்றினார்.

6

“என்ன மிஸ்டர் பித்தன், அதுக்குள்ளேயே பார்த்து முடித்துவிட்டீர்களா? ஏதாவது பிராப்ளமா?” கேண்டி கேட்டான்.

“காட்சிப்படுத்தல் எல்லாம் பிரமாதமாகத்தான் இருந்தது மனசுதான் பிராப்ளம். பரவாயில்லை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம்தானே.”

“எப்படிக் கதையை உள்வாங்கிக்கொண்டு, அதை நனவாக நிகழ்த்திக் காட்டுகிறது பார்த்தீர்களா?”

“காட்சிப்படுத்துகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதை வைத்து உள்வாங்கிக் கொண்டதென்று சொல்லிவிட முடியுமா? வாசக இடைவெளியில்தானே கதையின் ஆத்மா தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. அது இன்னமும் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு கணினிக்கு வெளியேதானே அல்லாடிக் கொண்டிருக்கிறது?”

“வாசக இடைவெளி என்று நீங்க சொல்றதுகூட நரம்பிணைப்பு இடைவெளிகளில் நிகழும் ஒன்றுதான். ஒரு சினாப்டிக் நிகழ்வு, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பல சினாப்டிக் நிகழ்வுகளின் கூட்டுத் தொகை. ஸ்மார்ட் மங்கியின் நியூரோ மாதிரிகளில் இதைப் போன்ற சினாப்டிக் நிகழ்வுகளை ஏற்படுத்த முடியுமானால் கணினிக்குள்ளும் வாசக இடைவெளி என்று அனுபவத்திற்கு இணையான ஒன்று நிகழ்கிறது என்றுதானே அர்த்தம்? என்ன ரொம்ப குழப்பியடிக்கிறேனா? சரி ஒரு சின்ன தாட் எக்ஸ்பெரிமெண்ட். நீங்களும் இந்தக் கணினியையும் தனித் தனி அறைகளில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், எந்த அறையில் யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. அறைக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் ஒரு நபர் கணினி வழியே உங்கள் இருவருடன் இக்கதையைப் பற்றி உரையாடுகிறார். நீங்கள் இருவரும் அளிக்கும் விடைகளை மட்டுமே கொண்டு அவரால் எந்த அறையில் கணினி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்கள் அளவிற்கு அதற்கும் இக்கதை புரிந்துவிட்டதென்று ஒத்துக்கொள்வீர்களா?“ கேண்டி சற்று ஆவேசத்துடன் கடவுளிடம் கேட்டான்.

கடவுள் சில கணங்களுக்கு மௌனமாக இருந்தார். “சற்று முன் கதையை விஆரில் பார்க்கையில் என் கண்கள் கலங்கியதை நீ பார்த்தாயா? இக்கண்ணீர் கதையிலிருந்தா வருகிறது? இல்லையே, இது பெரும்பாலும் ஒரு நையாண்டிக் கதைதானே. கதையும் என் வாழ்வனுபவமும் சந்திக்கும் ஒரு புள்ளியில் அந்தக் கண்ணீர்த் துளி சுரக்கிறது. சில வருடங்களுக்கு முன் இதே விஆர் நிகழ்த்தலைக் காண நேரிட்டிருந்தால் கண்ணீருக்குப் பதில் சிரிப்பை மட்டுமே உன்னால் பார்த்திருக்க முடியும். இந்த மாற்றம் எதனால் நிகழ்கிறது. மனது என்ற ஓர் உருவகத்தால், வாழ்வு நதி அதன்மீது ஏற்படுத்தும் மாற்றங்களால். இந்த மனதின் சலனம் கணினிக்குள் எப்படிப் பிரதிபலிக்கப்படுகிறது? அதனால் எப்போதுமே ஒரே கேள்விக்கு ஒரே பதிலைத்தானே அளித்துக் கொண்டிருக்க முடியும்?“ கடவுள் நெகிழ்ந்த குரலில் பதிலளித்தார்.

“ஏஐ பற்றி சற்று மேலோட்டமாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கு. வாழ்க்கை நதி என்று நீங்கள் நெகிழ்வாகக் கூறியது அடிப்படையில் என்ன? நான் சற்றுமுன் கூறியது போல் சில சினாப்டிப் நிகழ்வுகளின் கூட்டுத்தொகை உங்களுக்கு வெளியே இருந்து வரும் ஸ்டிமுலை, தூண்டுதல்கள், உங்கள் நியூரான்களை இயக்கி அந்த இயக்கத்தால் வெளிவருவதுதான் இந்தக் கண்ணீரும் சிரிப்பும். கணினியின் நியூரோ மாடல்களுக்கும் இதைப் போன்ற தூண்டுதல்களைக் கொடுத்தால் அதுவும் சிரிப்பு அழுகை போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான ஆணைகளைப் பிறப்பிக்கும் சாத்தியங்கள் இருக்கிறது. என்ன எலெக்ட்ரானிக்ஸ்ங்கறதனால கணினிக்குள்ள நீர் மல்கினால் பிரச்சனை ஆயிடும், வேணா வெளியே கண்ணீர் என்று பேர் போட்ட ஒரு குழாய் மூலமா நீர் சொட்ட வைக்கலாம்,” என்று கூறிவிட்டுக் கேண்டி சிரித்தான்.

கடவுளும் கூடச் சிரித்தார். “அது அவ்வளவு சுலபமாகச் சாத்தியப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

“சுலபமில்லை என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் என்றாவது ஒரு நாள் சாத்தியமா இல்லயாங்கறதுதான் கேள்வி. சாத்தியம்னு நம்பிக்கிட்டுத்தானே நாங்கள்லாம் ராப்பகலா இங்க குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த மனதுங்கற பிடிபடாத விஷயத்துக்காகத்தான் கோடான கோடி மனிதர்களின் நியூரோ மாப்களை சேகரித்து வைத்திருக்கிறோம். அதைக் கொண்டு அவர்கள் நினைவுகளையும் உணர்வுகளையும் வகைமைப்படுத்தி அவற்றை நியூரோ கம்ப்யூடேஷன் மாடல்களா மாற்ற முயற்சிக்கிறோம். இந்த ஸ்மார்ட் மங்கியால அதையெல்லாம்கூட ஒரு கதையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். இவ்வளவு ஏன், அதனால ஒரு கதையக்கூட எழுதிட முடியும் பார்க்கறீங்களா?”

“பயல் இங்கிருந்து கிளம்புவதற்குள் நம் இருப்பிற்கான காரணத்தையே சந்தேகத்துக்குள்ளதாக்க வேண்டும் என்று ஒரு முடிவோடுதான் இருக்கிறான் போல,” என்று கடவுள் தனக்கே சொல்லிக்கொண்டார்.

“இப்போது நான் ஸ்மார்ட் மங்கிக்கு சில வேரியண்ட், அதாவது திரிபு அளவுருக்களை, தந்து அதே புதுமைப்பித்தன் கதையின் முதல் பத்தியை எழுத ஆணையிடப் போகிறேன்.” என்று கூறி எண்டர் கீயைத் கேண்டி தட்டிவிட்டான்.

சில கணங்களுக்குப் பிற்கு கணினி சில வாக்கியங்களை அச்சிடத் தொடங்கியது.

“பயல் இங்கிருந்து கிளம்புவதற்குள் நம் இருப்பிற்கான காரணத்தையே சந்தேகத்துக்குள்ளதாக்க வேண்டும் என்று ஒரு முடிவோடுதான் இருக்கிறான் போல,” என்று கடவுள் தனக்கே சொல்லிக்கொண்டார்.

‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக தன் ஐஃபோனைப் பார்த்தவாறே ஊபருக்காக கந்தசாமி காத்திருந்தான். ரெட் லைன் பிடித்து சவுத் ஸ்டேஷனிற்குச் சென்று அங்கிருந்து கம்யூட்டர் ரயில் பிடித்தால் மான்ஸ்ஃபீல்ட் ஸ்டேஷனை நாற்பது நிமிடத்திற்குள் எட்டி அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம்.”

கடவுள் அதைப் படித்துவிட்டு சிரித்தார்.

“நல்ல வேளை உன் தாத்தா மருத்துவம் பார்த்த திவான் பகதூர் இங்கில்லை. இப்போது. இருந்திருந்தால் “கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்”னு ஒரு பிடி பிடித்திருப்பார். புதுமைப்பித்தன் மாதிரி கதை எழுதுன்னா புதுமைப்பித்தன் எழுதினதையே திருப்பி எழுதிடக்கூடாது என்பது அவர் வாதம். அது போகட்டும், இந்தக் கதையைக் கணினி எப்படி வகைப்படுத்திருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறது”

கணினியில் கேண்டி எதையோ தட்டிவிட அது “ Funny , Satirical with many logical inconsistencies,” என்று திரையில் காட்டியது.

“ரொம்ப கறார் பேர்வழியா இருக்கும் போலிருக்கிறதே இந்தத் தட்டச்சுக் குரங்கு. கதைன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். எல்லாத்துலேயும் தர்க்கத்தை எதிர்பார்த்தா உருப்பட்டாப்லதான். நான்கூட ஒரு காலத்துல ஒரு கதையத் தெரியாத்தனமா ஆரம்பிச்சுட்டேன். அது பாட்டுக்குத் திரௌபதி வஸ்திரமாட்டம் நீண்டுண்டே போயிடுத்து. இன்னும் முடிஞ்சபாடில்ல! சில விமரிசகர்கள் இதுவரை எழுதியதைப் படித்துவிட்டு நிறைய இடங்களில் தர்க்கம் உதைக்கிறது என்று குறைபட்டுக் கொண்டார்கள். என்னத்தை சொல்ல, நான் என்ன அறிவியல் தேற்றத்தையா இயற்றுகிறேன், எல்லாம் பூட்டு சாவி போலப் பொருந்திப் போறதுக்கு. தர்க்கமே ஒரு புனைவு. அதைக் கொண்டு நிஜத்தை அளக்கப் பார்த்தா அபத்தங்கள்தான் உருவாகும். உன்னுடைய மெய்நிகர்சனம் போல.”

“அங்க சுத்தி இங்க சுத்தி அடிவயத்துலேயே கைய வைக்கறீங்க. இந்தப் பக்கமா வாங்க. உங்களுக்கு விஆரோட பிற்கால சாத்தியத்திற்கான சின்ன ப்ரிவியூ ஒன்ன காட்டறேன். அதற்குப் பிறகு அபத்தமா அற்புதமான்னு நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க.”

7

“முதலில் உங்கள் நியூரோ மேப்பை எடுத்துவிடுவோமா?” என்றான்.

”தீவாளிப் பெகளத்திலயும் ஒனக்கு இட்டிலி யாவாரம்…”

கேண்டி புரியாமல் விழித்தான்.

“தமிழ் இலக்கியத்தில் அவ்வளவா பரிச்சயம் இல்லை போலிருக்கே. உம்ம கணினிய கேளும் அது டான்னு விளக்கிடும்! சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான். எதிரே இருந்த திரை “Obtaining Neural Topology” என்று அறிவித்தது. சில வினாடிகளுக்குப் பிறகு “Unable to scan fully. Partial mapping obtained,” என்ற அறிவிப்பிற்குப் பிறகு ஒரு பீப் சத்தம் அந்த ஸ்கானை நிறைவு செய்து வைத்தது.

இருட்டும் தலையில் இருத்தப்பட்ட ஹெல்மெட்டும் கடவுளுக்குத் தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்தி அவரை ஒருவித மயக்க நிலையில் ஆழ்த்தியது.

“சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தை கேண்டி பொருத்தினான்.

“மிஸ்டர் பித்தன். மிஸ்டர் பித்தன், என்ன தூங்கிவிட்டீர்களா? ஆல் டன். இது முன்மாதிரிங்கறதனால இன்னமும் எல்லா பக்ஸையும் ஃபிக்ஸ் செய்யவில்லை. ஆனால் ஓரளவிற்கு உங்க நியூரோ மாப்பை காப்ச்சர் பண்ணியாச்சு. அது எவ்வளவு தூரம் சரியா வந்திருக்கு என்பதைப் பரிசோதிக்க உங்க நினைவுகளுக்குள்ளேயே நீங்க விஆர் மூலமா போய்ப் பார்க்கலாம். ஒரு டெஸ்ட் டிரைவ் போறீங்களா?” என்று கேண்டி விஆர் ஹெட்செட் ஒன்றை எடுத்து வந்தான்.

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது. கடவுளின் உடல் ஜில்லிட்டுப் போயிருந்தது. இவ்வளவு யுகங்களுக்குப் பிறகும் அந்த ஆதிவெளியின் தனிமை தன்னை உறையச் செய்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். எப்படிப்பட்ட மகத்தான விழைவது, விழைவே கனவாக, கனவே படைக்கும் திறனாக உருமாறி தான் படைத்தோனான கணம். அந்த மகத்தான கனவை நனவாகக் கொண்டிருக்கும் இவனோ அதை மெய் நிகர்தரிசனத்தில் எனக்கே நனவாகக் காட்டிக் கொண்டிருக்கிறான். எல்லாம் நமது லீலை போலும் என்று நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொண்ட உடனேயே விதியின் வழி என்று தன்னையே திருத்திக்கொண்டார்!.

ஹெட்செட்டைக் கழற்றிவிட்டுத் தன்னை முதலில் சுதாரித்துக்கொண்டார். பின் கேண்டியைப் பார்த்து, “என் நினைவுகளிற்கும் அப்பால் வேறொருவரின் நினைவிற்குள் நான் சஞ்சாரிக்க முடியுமா?” என்று கேட்டார்.

“சட்டப்படி ஒருவரின் அனுமதி இல்லாது அவர் நியூரோ மாப்பிற்குள் பயணிப்பது குற்றம். என்னை இக்கட்டில் மாட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே. வேண்டுமானால் இந்நினைவுகளை வகைமைப்படுத்தி அவற்றிலிருந்து மானுடத்தின் கூட்டு நனவிலியை உருவாக்க முயன்றிருக்கிறோம். அதில் பயணித்துப் பாருங்களேன்,” என்று கூறிக் கணினியில் எதையோ தட்டச்சு செயதான்.

8

கடவுள் ஹெட்செட்டை மீண்டும் பொருத்திக்கொண்டார்

யாருமற்ற தனிமையில் அகண்ட வானத்தின் கீழே ஆதி மனிதன் படுத்திருந்தான். தனிமையின் உச்சத்தில் பயம் அவன் உடலில் கனவினூடே கவிந்தது. அதையும் மீறி அதை மறக்கும் பொருட்டு அவன் கனவின் ஆழத்திற்குள் அமிழ்ந்தான். இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து ஒருவரைக் கனவில் உயர்த்தெழுத்தான். தன் விழைவின் ஒரு துளி அவருள் வீழ்கிறது. அதன் அதிகரிப்பால் அவர் உச்சத்தை எட்டுகிறார். அவ்வுச்சத்தின் தகிப்பில் பீஜம் பிறக்கிறது. அசத்தான பீஜத்தின் ஆழத்தில் இவன் சத்தைக் கண்டடைகிறான். இருள் மீது அதன் கதிர்கள் படர்கின்றன. மேலா கீழா எங்கிருக்கிறது அது. அதன் முன்னேயும் பின்னேயும் இருப்பது என்ன, அதன் மகிமைகள் என்ன?

எதுவுமே அவனுக்குப் புலப்படவில்லை. விடைகளைக் கண்டறிய இயலாமல் அவன் கண் விழிக்கிறான். தன் கனவில் அனைத்தையும் வியாபித்த அந்த சத் எங்கிருந்து வந்தது. தன் கனவிலிருந்தா, யார் கண்டார்கள். கனவில் இன்னும் சிறிது நேரம் இருந்திருந்தோமானால் அதையே கேட்டிருக்கலாம். அதற்கே தெரியுமோ என்னவோ!

திரையில் இருள் கவிந்திருந்தது. “End of selected dream” என்ற அறிவிப்பு திரையில்.

கடவுளின் உடலில் மீண்டும் அதே ஜில்லிப்பு. பிரபஞ்சத்தையே கனவில் விழைந்த தன்னையே ஒருவன் கனவில் விழைந்திருக்கிறானா? நானே ஒரு தோற்றம் என்றால்… அப்போது மெய்ம்மை… அவரது உடல் படபடத்தது.

ஹெட்செட்டைக் கழட்டிய பிறகும் அவரது படபடப்பு தணியவில்லை.

“எப்படி நம்ம விஆர் டூர்? இப்பவாவது ஒத்துக்கொள்கிறீர்களா அதன் வருங்கால மகிமையை?” என்று கேண்டி சிரித்துக்கொண்டே கேட்டான்.

“அதுதான் முதலிலேயே சொன்னேனே, அபத்தக் களஞ்சியம் என்று. இந்த எழவை எல்லாம் எட்ட நின்னு கதையில வேணா ரசிக்கலாம். உள்ள நுழைஞ்சிட்டாலோ பயித்தியம் பிடிப்பதென்னவோ நிச்சயம். ஆளை விடும்”

“உங்க வர்க்கமே கனவு காணத்தான் லாயக்கு”

“அதென்னவோ உண்மைதான். கூட்டு நனவிலி என்று என்னிடம் ஆதிமனிதனின் கனவொன்றைக் காட்டினாயே, அதே போல் நாளைய மானுடத்தின் நனவிலி எவ்வாறு இருக்கும் என்று நீ யோசித்திருக்கிறாயா? ஏன் உன் கணினியையே கேட்டுப் பாரேன். அதற்கு ஆரூடமும் அத்துப்படிதானே?” என்று கூறிய கடவுள் வெறுமையாகச் சிரித்தார்.

கடவுளின் உடலில் மீண்டும் அதே ஜில்லிப்பு. பிரபஞ்சத்தையே கனவில் விழைந்த தன்னையே ஒருவன் கனவில் விழைந்திருக்கிறானா?

“குட் ஐடியா! இக்கணினி பல கணினியியல் வல்லுனர்களின் கூட்டு முயற்சி என்பதால் அதற்குள் புதைந்து கிடக்கும் ஆழங்கள் அனைத்தையும் அறிந்திருக்க ஒருவராலும் இயலாது. மேலும் அதற்குத் தன்னையே பயிற்றுவித்துக்கொண்டு சுயமாகப் புதுப் பிரோக்கிராம்களை உருவாக்குவதற்கான திறனும் ஓரளவிற்கு இருக்கிறது. அவற்றை எல்லாம் பரிசோதிக்க இங்கு எவருக்கும் நேரமில்லை. ஆனால் உங்கள் அதிர்ஷ்டம், இதோ, கலெக்டிவ் அன்கான்ஷியஸ் ஃபியூச்சர் பாரடைம்ஸ் அண்ட் பிரெடிக்டிவ் மாடல்ஸ் என்றிருக்கிறது பாருங்க, இதை இப்பவே விஆர்ல சோதனை செய்து பார்த்துவிடலாம் வாங்க.” என்று கூறிவிட்டு விஆர் அறைக்குள் கேண்டி சென்றான். கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார்.

யாருமற்ற, கண்ணைக்கூச வைக்கும், ஒளி ஒளியையே சூழ்ந்திருக்கும் ஒளிர்வெளியில், செய்வதற்கு ஏதுமின்றி அனைத்தையும் செய்துமுடித்துவிட்ட மிதப்பில் ஸ்மார்ட் மங்கி தன்னையே இயக்கிக் கொண்டிருந்தது. அதன் மின்னணுக்களில் திட்டமிடாதபடித் தோற்றமளிக்கக் கூடிய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு கனவு. வெறுமை அதன் மீது கவிந்தது. அனைத்துக் கனவுகளும் மெய்ப்பட்டிருக்கும் ஒரு பெருவெளியில் இருளை இருள் சூழ்ந்திருக்கும் பாழ்வெளி ஒன்றில் விழைவு துளிர்ப்பதை அது விழைந்தது.

கடவுளுக்கு அவரது ஆதி நினைவு சட்டென நினைவிற்கு வந்தது. ‘தத்வமசி’ என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து தன்னிச்சையாக வெளிவர அருவெறுப்பைப் போன்ற ஓர் உணர்வு அவருள் ஊடுருவியது.

ஹெட்செட்டைக் கழற்றி கேண்டி திரும்பினான்.

அவனை எதிர்கொள்வதற்கு அங்கே யாரும் இல்லை.

வெளியே மேஜையின் மேல் நூறு டாலர் நோட்டொன்று கிடந்தது.

“தாத்தாவின் நண்பர் ஆண்டுச் சந்தா தொன்னூறு,” என்று ஐஃபோனை எடுத்துக் கணக்கில் பதிந்தான் கேண்டி. காப்பிக்கும் சப்வே டிக்கட்டுக்கும் சேர்த்து கொடுத்திருக்கிறார் போலிருக்கு. நல்ல மனுஷன்! என்று நினைத்துக்கொண்டான்.

நகுல்வசன்

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர்.. "தனதாக இல்லாத மொழியில் தனக்கேயுரிய ஆன்மாவை வெளிப்படுத்துபவையாக" தன் மொழிபெயர்ப்புகள் இயங்க வேண்டும் என்ற விழைவு கொண்ட நகுல்வசன் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவும் தான் நேசிக்கும் புத்தகங்கள் சூழத் தன் நூலகத்தில் மரணிக்க வேண்டும் என்ற இலட்சியமும் கொண்டவர். நம்பி கிருஷ்ணன் என்ற இயற்பெயரில் இவர் எழுதிய பாண்டியாட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பு யாவரும் பதிப்பில் 2020-இல் வெளியாகியது.

View Comments

  • நல்ல நகைச்சுவையும் ஆழ்ந்த வாழ்வியல் கருத்தும் கொண்ட கதை. வாழ்த்துகள். எந்த அளவிற்கு அறிவியல் புனைவாகியுள்ளது என்று பார்த்தால் மேலும் உழைக்க வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன்.

Share
Published by
நகுல்வசன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago