ஆழ்துயில் பயணங்கள்

4 நிமிட வாசிப்பு

அவர்களுக்கு வந்த கனவுகளிலேயே மிகவும் வினோதமாகவும், எதுவும் புலப்படாமலும் இருக்கும் கனவு ஒன்றைப் பற்றி எழுதித் தர சிலரிடம் கேட்டிருந்தோம். அக்கனவுகள் சொற்களாக இங்கே:

அப்பா வந்தார்

அப்பா இறந்து ஐந்தாவது நாள். வீடே மௌனத்துவிட்ட இரவு. வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன். சட்டென்று அப்பா ஓர் ஆடம்பரமான மகிழுந்தில் வீட்டின் முன் வந்து நிற்கிறார். அவரே அம்மகிழுந்தை ஓட்டி வந்திருந்தார். வீடு பூட்டியிருப்பதை உள்ளிருந்துகொண்டு நான் கவனிக்கிறேன். ஆனால், அவர் அதையும் மீறி கதவை இயல்பாகத் திறந்து உள்ளே வருகிறார். 1990களில் அவர் வழக்கமாக உடுத்தும் அதே உடை. முகத் தோற்றமும் அக்காலத்தையே ஒத்திருந்தது. ஒரு சிவப்புத் தொப்பி, வெள்ளைச் சட்டை. முகமெல்லாம் சரிக்கப்படாத தாடி மூடியிருந்தது. வீட்டின் உள்ளே நுழைந்தவர் என்னைக் கவனிக்கவில்லை அல்லது என் இருப்பை மீறி அங்கு எதையோ தேடிக் கொண்டிருந்தார். அம்மா அறைக்குள்ளிருந்து அப்பா எதைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார். அப்பா நாற்காலி, மேசைக்குக் கீழ் தொடர்ந்து எதையோ தேடிக் கொண்டிருந்தார். அப்பாவிற்கு இப்படித் தேடும் பழக்கம் இல்லை. ஆனால், அப்பொழுது அக்கணம் எதையோ தேடிக்கொண்டே இருந்தார். ஒருவேளை என்னைத் தேடுகிறாரோ என்கிற பயம் எழுந்ததும் ஓர் அடர்ந்த வெளிச்சம் சுருள் சுருளாக வீட்டில் நுழைகிறது. அப்பாவின் தலைக்கு மேல் நின்றுவிடுகிறது. மெல்ல அவர் உடல் முழுவதும் பரவுகிறது. அவ்வெளிச்சம் பின்னர் வீட்டை விட்டு நகர்கிறது. அப்பா அப்பொழுது அங்கு இல்லை. அம்மா மட்டும் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.

கே.பாலமுருகன்

ஜோவும் நானும்

ஜோவைத் தங்கை என்றுதான் எல்லோரிடமும் சொல்வேன். வீட்டிலும் குடும்ப உறுப்பினர் போலவே பார்ப்போம். எல்லோரும் ஜோவிடம் பேசுவோம். அதுவும் புரிந்தது போலவே நாக்கை தொங்கப்போட்டுத் தலையை ஆட்டிக்கொண்டே இருக்கும். தெளிவாக நினைவில்லை ஒரு நாள் வந்த கனவு… ஜோ என்னிடம் பேசுவதாக. என்ன பேசினாள் என்று எதுவும் ஞாபகம் இல்லை. ஜோவின் குரல் நன்றாக இருந்தது. சிரித்துக்கொண்டே பேசியதாக ஞாபகம். அன்றிலிருந்து ஜோவை எப்போது பார்த்தாலும் ஓர் எண்ணம் தோன்றும். அதுக்கும் இதே கனவு வந்து நான் நாய் பாஷையில் பேசியிருப்பேனோ?

விஸ்வநாதன்

நிலைத்திரிபு

நான் அந்தக் கால்வாயின் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறேன். அதன் அகலம் வழக்கமான கால்வாய்களைப் போலவே இருந்தாலும், அதன் விளிம்புகள் சீரானதாக ஒரு நீச்சல் குளத்தைப் போலிருக்கின்றன. ஆனால், வழக்கமானதொன்றைப் போலல்லாமல், அக்கால்வாய் ஓர் இடத்தில் கச்சிதமாகத் தொடங்குகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை நீரின் தடம் ஒரே நேர்க்கோட்டில் நீண்டிருக்கிறது. தொலைவில் சிறு புள்ளிகளாக சில மரங்கள் தெரிகின்றன. அக்கால்வாய், முடிவிலா நீளம் கொண்ட ஒரு நீச்சல் குளம் போலக் காட்சியளிக்கிறது. அது தொடங்கிய இடத்திற்குப் பின்னேயுள்ள பகுதி வெறும் வறண்ட சமதளம்.

நான் நீரின் ஓட்டத்துடன் சிறிது தூரம் நீந்துவதும் பிறகு தொடங்கிய இடத்திற்கே எதிர்நீச்சலிட்டுத் திரும்புவதுமாக, திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருக்கிறேன். பின்னர், அதன் தொடக்கப் புள்ளியில் நின்றபடியே, நீருக்குள் மூச்சையடக்கி நீரின் ஓட்டத்துடன் செல்ல எத்தனிக்கிறேன். கால்களை மிக மிக மெதுவாக அசைத்து ஒரு மீனினைப் போல நீரினடியில் நீந்திச் செல்கிறேன். கற்கள், மண் மற்றும் எந்த எச்சங்களும் இன்றி கால்வாயின் அடிப்பரப்பு கண்ணாடியைப் போன்ற தெளிவுடனிருப்பது அப்பொழுதுதான் கவனத்தில் நிறைகிறது. கிட்டத்தட்ட கீழே எந்த அடித்தளமும் இல்லையென்பதைப் போலிருக்கிறது அது. கடல் கடந்து வலசை வந்த ஏதோவொரு பறவை, கடலின் ஒரு சிறு குறுக்குவெட்டுப் பகுதியைக் கவ்வி வந்து கீழே போட்டுவிட்டுப் போனதைப் போலத் தனித்து நிற்கிறது அந்தக் கால்வாய். நீரில் முன்னோக்கிச் செல்லச் செல்ல, நீரின் ஓட்டம் வேகமெடுப்பதாகத் தோன்றுகிறது. திடீரென, நீர் அளவுகடந்த வேகத்தில் என்னை இழுத்துச் செல்லத் தொடங்குகிறது. பயத்தில் கண்களை மூடிக் கொள்கிறேன். கட்டுப்பாடற்ற நிலையை அடையும்போது, பிரயத்தனப்பட்டுக் கால்வாயின் விளிம்பைத் தேடித் பற்றிக்கொள்கிறேன்.

கண்களைத் திறக்கும்போது (கனவுக்குள்ளேயேதான்!), என்னைச் சுற்றிலும் சிறிதும் நீர் இல்லை. நான் நிற்கிற தரையில், புற்களும், செடிகளும், காய்ந்த இளமஞ்சள் நிற மணலும் இருக்கின்றன. பல ஆண்டுகளாக வற்றியே இருக்கிற ஒரு நீர்நிலையாக மாறியிருக்கிறது அக்கால்வாய். அப்போது, கால்வாய் தொடங்கிய திசை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்குகிறேன். நான் வெறும் நீச்சல் உடை மட்டும் அணிந்திருப்பதை உணர்ந்து நடையைத் துரிதப்படுத்துகிறேன். அதே திசையில் நடக்க நடக்க, உலர்ந்த மணற் பரப்புகள், சேற்று மண்டலங்கள், விலகிச் செல்லும் குறுகிய ஒரு வழிப் பாதைகள், இலைகள் அருகிய நீண்ட மரங்கள் மற்றும் தனித்திருக்கும் ஒரு வீடு ஆகியவற்றைக் கடந்து செல்கிறேன். பல இடங்களில், அந்நிலப்பரப்பு கால்வாய்க்கான எந்தத் தடயமுமின்றி இருக்கிறது. அத்தனை தூரத்திலும், எந்தவொரு மனிதரையும் கண்டிருக்கவில்லை. திடீரென, கால்வாயைச் செங்குத்தாக கிழித்துக் கொண்டு செல்லும் ஒரு சிறிய சாலை இடைபடுகிறது. அதில், ஒரு சிறுவன் சைக்கிளில் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நான் அவனை நிறுத்திக் கேட்கிறேன், “இங்க கால்வாய் ஏதாவது இருக்கா?”

கால்வாயைக் மீண்டும் கண்டடைந்து, நீச்சலிட்டுத் தொடங்கிய இடத்திற்கே செல்வதற்கான எண்ணம் இருந்ததாக நினைவு. அவன் எந்த ஆச்சர்யங்களையும் காட்டாதவாறு,

“ஒண்ணு இருந்துச்சு. நீங்க சரியா அதோட பாதையில தான் நின்னுகிட்டு இருக்கீங்க” என்கிறான். அவன் சைக்கிளிலிருந்து கீழே விழாமலிருக்க, ஒரு காலை அருகிலிருக்கும் கல்லில் ஊன்றி நின்று கொண்டிருக்கிறான்.

“அப்படின்னா, தண்ணிலாம் எங்க போச்சு” எனக் கேட்கிறேன்.

“வறண்டு போச்சு” எனத் தோள்களைக் குலுக்குகிறான்.

“எப்ப இருந்து?”

“நெறைய நெறைய வருஷம்”

அவன் சொல்வது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவனிடம் கேட்கிறேன், “ஏர்போர்ட் எவ்வளவு தூரம்? நான் ஒரு ஃபிளயிட்டை அவசரமா பிடிக்கனும்”

“நாலு-அஞ்சு கிலோமீட்டர் இருக்கலாம். உங்களுக்கு ஆட்டோ எங்க கிடைக்கும்னு காட்றேன்”

“தாங்க்ஸ் தம்பி. எனக்கு ஒரு சட்டை வேணும். வெறும் ஷார்ட்ஸோட போக முடியாதே”

“நான் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரேன். உங்களுக்கு கொஞ்சம் சின்னதா தான் இருக்கும். இங்கயே இருங்க என்ன?” எனச் சொல்லியபடியே நான் சற்று முன் வந்த அதே திசையிலேயே சைக்கிளை அழுத்தியபடி மறைந்துவிடுகிறான்.

நா.பாலா

 

1 thought on “ஆழ்துயில் பயணங்கள்”

  1. இதழ் இம்முறையும் வித்தியாசமான அம்சங்களைத் தொட்டிருந்தது. ஆழ்துயில் பயணங்கள் தலைப்பிலிருந்த கனவுப் பதிவுக் கதைகள் வித்தியாசமான முயற்சி.
    கோ.பாலமுருகனின் “அப்பா வந்தாச்சு” கனவு ஒரே ஆழ் மனத்தாக்கம் கனவாயிருக்கிறது. இபீபடி இறந்தவர்களை கனவில் காணும்போது ஆழ்மனசில் இது கனவுதான் என உணர்ந்தாலும் இது நிஜமாயிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் வரும்போது சட் டென கனவு கலைந்துவிடும். கனவும சரி. பதிவும் சரி இயலபு.

    அடுத்து விஸ்வநாதன் அவர்களின் “ஜோவும் நானும்”… கனவில் மட்டுமல்ல நிஜத்திலும் தோன்றக்கூடியதுதான்… நம்மைப் பார்த்து குலைக்கிற நாயைப் பார்த்து பதிலுக்கு குலைத்ததுவிட்டுப் போன நிகழ்வுகள் உண்டு. தங்கை போல் வளர்த்த நாயை கனவில் கண்ட பதிவு நிஜத்தின் சாயல். நறுக் கென்றிருத்த பதிவு.
    தொடர்வேன்…….

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்