அவன்

14 நிமிட வாசிப்பு

“குத்து… குத்து… குத்துடாஆஆ… ச்சை”

சீட்டிலிருந்து எழுந்து நின்று கத்திக்கொண்டிருந்த ஷ்யாம் சோர்ந்து இருக்கையில் விழுந்தார். அது நளினமாக குழைந்து அவரை உள்வாங்கிக் கொண்டது.

சிவா ஸ்கிரீனில் விரலை அழிப்பதுபோல் மெதுவாகத் தேய்த்தான், திரை அணைந்து கருத்தது.

சிவா ஷ்யாம் பக்கம் தன் இருக்கையைத் திருப்பி, “இன்னும் எத்தன நாள் இருக்கு நமக்கு?” என்றான்.

“சிக்ஸ் காட் டேம் டேஸ்” என்றார் ஷ்யாம். கருத்த திரையை வெறித்தபடி. நெற்றியை நீவிக்கொண்டே. “நம்ம எதையாவுது மிஸ் பண்ணிட்டோமா?” என்றார் கவலையாய்.

“எல்லா டாடா பாயிண்ட்சையும் செக் பண்ணிட்டேன், கணிப்புல ஒன் பர்செண்ட் கூட தப்பில்ல. அவன் வாங்குவான்னு சொன்ன ப்ராண்ட் டூத்பேஸ்ட்ல இருந்து, அவன் இன்னிக்கு சாப்பிடப் போற ஐட்டங்கள், அவன் போகப்போறான்னு சொன்ன சினிமா வரைக்கும் அல்காரிதம் என்ன சொன்னுச்சோ அதத்தான் பண்றான். இத மட்டும்தான் பண்ண மாட்டேங்கிறான்” என்றான் சிவா.

“அவனுக்கு தெரிஞ்சிருச்சோ?” என்றார் ஷ்யாம் பதட்டமாய்.

சிவா வாய் விட்டுச் சிரித்துவிட்டு, “ஒன்னு நான் சொல்லணும், இல்ல நீங்க சொல்லணும். இல்ல நம்ம டைரக்டரே அவன கூப்பிட்டு சொல்லி இருக்கணும்”.

“பச்… கண்டிப்பா வேற யாருக்கும் தெரியாதில்ல?”

“ நம்ம கையையும், கண்ணையும் புடுங்கித்தான் இந்த இன்பர்மேஷனையெல்லாம் தெரிஞ்சிக்க முடியும், கண்டத கற்பன பண்ணிக்காதிங்க. ஏன் இத பண்ண மாட்டேங்கிறானு யோசிப்போம். வாங்க பசிக்குது, சாப்ட்டு வந்தா ஏதாவுது தோணும்”, என்றான் சிவா.

ஒரு பெருமூச்சோடு எழுந்து ஷ்யாம் சிவாவோடு நடக்க ஆரம்பித்தார்.

“இன்னிக்கு கண்டிப்பா நடந்திரும்னு நெனச்சேன் சிவா. அவன் கண்ண பாத்தியா அவ்ளோ குரோதம் இருந்தது அதுல,” என்றார் ஷ்யாம். சிவா பதிலேதும் சொல்லவில்லை.

ஷ்யாம், “கோவமா பேசியிருந்தாகூட சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படி சிரிச்சி பேசிட்டு போய்ட்டான். நம்ம ப்ரோபைலிங்கே தப்புன்ற மாதிரில்ல ஆயிருச்சு,” என்றார்.

சிவா, “கண்ல காமிச்சானே,” என்றான்.

ஷ்யாம், “தட்ஸ் மை பாயிண்ட், கண்ல காட்ற ஆள் இல்லய்யா அவன், கைல காட்றவன்னு இல்ல அல்காரிதம் சொல்லுது, அப்ப ப்ரோபைலிங் தப்புதானே?” என்றார் சற்றே குரலை உயர்த்தி.

சிவா, “இன்னைக்கி கண் நாளைக்கு கை,” என்றான் சிறு புன்னகையுடன்.

ஷ்யாம், “ஒன் பர்செண்ட் கூட தப்பே இல்லாத கணிப்புனு சொன்ன அதே வாய், போய்யா. இன்னைக்கி வன்முறைல எறங்குவான்னு நாலு நாளா சொல்லிக்கிட்டு இருக்கு, அவன் ஜோரா கையகூட தட்ட மாட்டேங்கிறான்,” என்றார் கடுப்பாக.

“இது நாலாவுது தப்பான ப்ரெடிக்‌ஷன், இதுல இருந்து என்ன கத்துக்குதுனு பாப்போம்,” என்றான் சிவா.

“கிழிச்சது, இன்னிக்கு குத்துவானு சொன்னுச்சு, நாளைக்கு கத்தில குத்துவான்னு சொல்லும்,” என்றார் ஷ்யாம்.

சிவா ஒன்றும் சொல்லவில்லை.

ஷ்யாம் சிவாவின் தோளில் அணைப்பது போல் கைபோட்டு, “ஸாரிய்யா, ஐ நோ இட்ஸ் யுவர் பேபி. பட் என்னவோ தப்பா இருக்கு.”

அலுவலக காண்டீனுக்குள் நுழைந்தனர். சிவா பதிலேதும் சொல்லாமல், வெள்ளையாய் ஐஸ் பெட்டி போல் இருந்த ஒரு புட் டிஸ்பன்ஸர் முன் சென்று நின்றான். வெளிர் நீலக் கதிர்கள் அதனுள் இருந்து வந்து சிவாவின் உடலை வருடியது. “ஹேலோ சிவா” என்றது ஒரு பெண் குரல்.

“ஹேலோ” என்றான் சிவா.

“ ஹைதராபாதி மட்டன் பிரியாணிதானே?”

“ஆமா”

“உங்க புட் அக்கவுண்ட் பாலண்ஸ் கம்மியா இருக்கு, உங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்துக்கட்டுமா?” என்றது.

“சரி, இனிமேல் கேக்காத, நீயே டாப் அப் பண்ணிக்கோ,” என்றான் எரிச்சலாக.

“நன்றி சிவா. இனி நானே செய்துக்கிறேன், பிரியாணி ஒரு நிமிஷத்துல வந்துடும்”.

சரியாக ஒரு நிமிடத்தில் ஒரு ட்ரேவில், ஒரு அலுமினியம் பாயிலில் சிலிண்டர் போல் மடிக்கப்பட்ட கவரில் பிரியாணி வந்தது. எடுத்துக்கொண்டு ஷ்யாமைக் கண்களால் தேடினான். அவரும் ஒரு பொட்டலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சிவாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கையில் உள்ள கவரைப் பார்த்துவிட்டு “இன்னிக்கும் பிரியாணியா! உனக்கு போரே அடிக்காதாயா?” என்றார் ஷ்யாம்.

சிவா அங்கேயே மேல் கவரைப் பிரித்து இளமஞ்சள் நிறத்தில் சப்பாத்தி போல் இருந்த பிரியாணியைக் கடித்தான். அதை விழுங்கிவிட்டு முகத்தில் புன்னகை தவழ, “மூணு நேரமும் இதையே சாப்பிடச் சொன்னாலும் சாப்பிடுவேன்,” என்றான்.

“என்ன கருமமோ போ,” என்றார் ஷ்யாம். இருவரும் தங்கள் டெஸ்க் நோக்கி நடந்தனர். சிவா சாப்பிட்டுக்கொண்டே வந்ததால் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

டெஸ்க் வருவதற்குள் சிவா அந்தச் சப்பாத்தி போல் உருட்டப்பட்ட பிரியாணியைச் சாப்பிட்டு முடித்துவிட்டான். கவரை டெஸ்க் அருகில் இருந்த சிறிய குப்பை இன்சினேட்டரில் தூக்கிப் போட்டுவிட்டு, தண்ணீர் குடித்தான்.

ஷ்யாமைப் பார்த்து “இந்த ப்ரோஜக்ட் முடிஞ்சப்புறம் இந்த பிரியாணி பாக்டரில சேந்து அவன் ரெசிப்பிய தூக்கறதுதான் முதல் வேல,” என்றான்.

“இத மட்டும் நெனச்ச மாதிரி முடிச்சா அந்த பிரியாணி பாக்டரிய சுத்திப்பார்க்க டைரக்டர்ட்ட இருந்து ஒரு ரெக்கமண்டேஷன் வாங்கி தரேன்” என்றார் ஷ்யாம், தன் சாப்பாட்டுப் பொட்டலத்தை டெஸ்க்கில் வைத்துப் பிரித்துக்கொண்டே.

சிவா சிரித்துவிட்டு “பாக்டரிய சுத்தி பாக்க பர்மிஷன் வாங்கறதை ஏதோ பாக்டரியே எனக்கு வாங்கி தரேனு சொல்ற மாதிரி சொல்றிங்க” என்றான்

ஷ்யாம் “ஜன்சேவா கவர்மெண்ட் ஏஜென்ஸி, இங்க அதுவே பெருசுதான். இவ்ளோ சென்சிடிவான தகவல்களோட விளையாட வேற எங்க உனக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுதான் உனக்கு ஜன்சேவா தர பேர்க்”

சிவா புன்னகைத்துவிட்டு ஸ்கிரீனில் தன் ஆட்காட்டி விரலை வைத்தான், வெளிர் நீல ஒளி வெளிவந்து அவன் முகத்தை வருடிவிட்டு புட் டிஸ்பென்ஸரில் கேட்ட அதே பெண் குரலில், “தயவு செய்து வலது கை முழுக்க பதியுமாறு வையுங்..”

அது சொல்லி முடிப்பதற்குள் அவன் முழு கையையும் ஸ்கீரினில் பதியுமாறு வைத்தான். திரை உயிர் பெற்றது.

“என்லார்ஜ்” என்றான், திரைக்குள் இருந்து மெல்லிய கண்ணாடித் திரைகள் மூன்று மேலும், இடமும், வலமுமாய் வெளிவந்து அத்திரையை நான்கு மடங்கு பெரிதாக்கியது.

“open poc” என்றான் சிவா. சொல்லிவிட்டு அவன் இரு கைகளையும் திரையின் மேல் முழுமையாய்ப் படும்படி வைத்தான், சிகப்பு நிறக் கதிர்கள் திரையின் உள்ளிருந்து வந்தன. கண்களை விரித்து அக்கதிர்களைக் கண்ணில் வாங்கினான்.

அவர்கள் அமர்ந்திருந்த அறையின் திரை மறைப்புகள் தானாகக் கீழறங்கின, திரைக்கு ஓரடிக்குப் பின்னால் நிற்பவர்கள் திரையில் தெரிவதைப் பார்ப்பதைத் தடுக்கும் மெல்லிய ப்ளாஸ்டிக் படலம் திரையில் பரவியது.

“கீ போர்ட்,” என்றான் சிவா, திரைக்குக் கீழ் இருந்து வெண் ஒளி தோன்றி திரைக்கு முன்னால் ஒரு கீ போர்ட்டை வரைந்தது.

சில கட்டளைகளை வேகமாக கீ போர்டில் தட்டினான், பல வண்ணங்களில்வரைபடம் போல் ஒன்று திரையில் எழுந்து வந்தது.

“ஓக்கே, எல்லாத்தையும் ஒரு தடவ பாத்திருவோம், அவன் டி.என்.ஏ. அனாலிஸிஸ் வன்முறைக்கான நாட்டம் இருப்பதற்கான சாத்தியம் நூறு பர்செண்ட்னு சொல்லுது. இதே டி.என்.ஏ ஹாப்லாக்ரூப்ல இருக்க இவனோட க்ளோஸ் மாட்சிங் ஸ்ட்ராண்ட்ஸ் இருக்க ஐம்பது பேரோட ஹிஸ்டரி பாத்ததுல ஐம்பது பேரும் ஒன்னு ஜெயில்ல இருக்கான், இல்ல வன்முறைல ஈடுபடும்போது செத்துப் போய் இருக்கான், ஸோ டி.என்.ஏ. அனாலிஸிஸ் ரிசல்ட் சரினு ஊர்ஜிதமாகுது.

“அடுத்து அவன் குடும்பம், வாழ்ற எடம் எட்சட்ரா… அவனோட அப்பா கூலிக்கு கொலை பண்ற ஆள், வாழ்ற எடம் வன்முறையின் விளை நிலம்,அவனோட ஆதார குணத்த மழுங்கடிக்க, இல்ல மட்டுப்படுத்த, எந்த புறச் சூழ்நிலையும் இல்ல. சொல்லப்போனா அதிகப்படுத்தும்னு அனாலிஸிஸ் சொல்லுது. ஒரு ட்ரெயிண்டு அசாசினுக்கு இருக்க எல்லா குணாதிசயங்களும் இந்த வயசுலயே அவனுக்கு இருக்குனு சொல்லுது. இதையும் ஐம்பது ஹிஸ்டாரிகல் கேஸஸோட கம்பேர் பண்ணியாச்சு, சரியா மாட்ச் ஆகுது.

அவன் டி.என்.ஏ. அனாலிஸிஸ் வன்முறைக்கான நாட்டம் இருப்பதற்கான சாத்தியம் நூறு பர்செண்ட்னு சொல்லுது.

“அடுத்து அவனோட தனிப்பட்ட அனாலிஸிஸ். அவனுக்கு இப்போ இருபது வயசாகுது. அவன் பொறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் அவன் பொது எடத்துல இருக்கும்போது எடுக்கப்பட்ட சிசிடிவி, சாட்டிலைட் ட்ராக்கிங் விடியோஸ் எல்லாம் அவன் யாரையாவுது அடிக்கவோ, சண்டைக்கு இழுக்கவோ யாரும் அவன தூண்டவே வேண்டாம் அவனே தானா அதைச் செய்வானு காட்டுது. அவன் முகத்தையும் கண்ணையும் மட்டும் அனலைஸ் பண்ணதுல ரொம்ப சாதாரணமான விஷயங்கள்கூட அவன கோபப்படுத்துதுனு தெரியுது.

“இப்போ நம்ம அல்காரிதத்தப் பாப்போம், அவனோட இந்த மொத்த வரலாற்றையும், ஒவ்வொரு நாள் நடத்தையையும், அவன் வாங்குற ஐட்டங்கள்,அவன் நண்பர்கள்னு எல்லாத்தையும் அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேய்ஞ்சு வெச்சிருக்கு, பத்தாததுக்கு இந்த இருபத்து நாலு நாளா ஒவ்வொரு நிமிஷமும் அதுக்கு அவனப் பத்தின லைவ் டாடா குடுத்துகிட்டே இருக்கோம். அவன் அடுத்து என்ன பண்ணப் போறானு, இந்த இருபத்து நாலு நாள்ல 99.95 சதவீதம் சரியா சொல்லி இருக்கு.

அதுல வன்முறை கணிப்ப மட்டும் பிரிச்சு பாப்போம்.

“மானிடரிங் ஆரம்பிச்ச மூணாவது நாள், கூடப் படிக்கிற பையன அடிப்பானு சொன்னுச்சு, அடிச்சான். எட்டாவது நாள் அவன் காதலிக்கிற, அவன காதலிக்காத கூட படிக்கிற பொண்ணோட சண்டைக்கு போவானு சொன்னுச்சு, அவள அறைஞ்சே அறைஞ்சுட்டான், பதினாலாவது நாள் கேண்டீன்ல சண்டை இழுப்பானு சொன்னுச்சு, ரெண்டு பேரு சட்டைய கிழிச்சான்.

“அதுக்கப்புறமும் சின்னச் சின்ன அடிதடி, எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனா மூணு நாளா கேண்டீன் சண்டைல அடி வாங்காம தப்பிச்ச பையன அடிப்பானு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கு, இன்னையோட சேத்து நாலாவது தடவ அவன் அதை பண்ணல. ஸோ, கணிப்புல கடைசி நாலு நாள்லதான் தப்பு இருக்கு, மத்த இருபது நாளும் சரியாத்தான் இருந்திருக்கு. இந்த நாலு நாள்லயும் கூட மத்த விஷயத்துல எல்லாம் சரியா இருக்கு, இத தவிர்த்து. இதான் ஸ்டேடஸ்”.

“ம். ஆட்டோ லேனிங் ரிசல்ட் என்ன?” என்றார் ஷ்யாம்.

“நீங்க சொன்னதுதான், கணிப்பு தவறிப் போகல, அவன் நடத்தைய வெச்சு பாக்கும்போது அவன் கோவத்த அடக்கி வெச்சுக்கிட்டு இருக்கான், நாளைக்கு பெருசா ஏதாவுது பண்ணப் போறானு சொல்லுது”.

“அப்போ ஒரு எழவும் கத்துக்கல அது! என்ன ராஷனல், எத வெச்சு சொல்லுது?” என்றார் ஷ்யாம் தண்ணீருக்குக் கை நீட்டியபடி.

சிவா தண்ணீரை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் கீ போர்டில் வேகமாகத் தட்டினான், திரை வரிசைக்கிரமமாய் பல வரிகளைக் காட்டியது. சிவா அவற்றை வாசித்துவிட்டு நிமிர்ந்தான்.

“கண்ல குரோதம், முஷ்டி மடக்கின கை, அடிக்க வேண்டியவன தாண்டி போனப்பறம் அவன் முகத்துல வந்த சிரிப்பு, அவன் கை முடி சிலித்துக்கிட்ட விதம், இப்படி எல்லாமே பிசிக்கல் அனாலிஸிஸ் ராஷனல்தான்” என்றான் சிவா.

“ப்ச், நேத்தும் இதேதான் இல்ல. சைக்கோ அனாலிஸிஸ் ராஷனல் ஒன்னு கூட இல்லயா?” என்றார் ஷ்யாம்.

“அது எக்கச்சக்கமா இருக்கறதால தனியா லிஸ்ட் பண்ணலனு சொல்லுது, வேணா அத தனியா எடுத்து பாக்கலாம்”.

“டைம் வேஸ்ட் விடு, இப்போ என்ன பண்றான்?”

சிவா திரையின் இடது ஓரத்தைத் தன் இடக்கை ஆட்காட்டி விரலால் தட்டினான், ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் கூட்டமாக சில இளைஞர்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த காட்சி திரையில் தோன்றியது. சிகப்பு வட்டம் ஒன்று அதில் ஓர் இளைஞன் மேல் நிலை கொண்டிருந்தது. அவனும் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஷ்யாம் திரையில் அந்த இளைஞனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இன்னும் ஆறு நாள் தொடர்ச்சியா இது சொல்றத அவன் செய்யலனா மொத்தத்தையும் ஊத்தி மூடிருவாங்க தெரியும்ல?” என்றார் சிவாவை நோக்கி.

சிவாவும் அவனையே திரையில் பார்த்துக் கொண்டிருந்தான். “முதல் இருபது நாள் இவன் இப்படியெல்லாம் சிரிச்சதே இல்ல. கவனிச்சிங்களா, இந்த நாலு நாளா ரொம்ப சிரிக்கிறான்,” என்றான்.

“சிரிப்புக்கு பின்னாடி கோவத்த மறைக்கிறானு உன் அல்காரிதம் சொல்லுதே,” என்றார் ஷ்யாம்.

“கோவத்த மறைக்கிறானா, இல்ல…” என்றுவிட்டு கீ போர்டில் மீண்டும் வேகமாகச் சில கட்டளைகளைத் தட்டினான். வேறு சில காட்சிக் கோர்வைகள் திரையின் வலது புறத்தில் தோன்றின.

சிறிது நேரம் அவற்றைப் பார்த்துவிட்டு, சிவா “பாருங்க, இதெல்லாம் மொதல் இருபது நாள்ல அவன் கோவத்த அடக்க முயற்சி பண்றானு வந்த அனாலிஸிஸ் ரிசல்ட்ஸ். ஒரு எடத்துலகூட சிரிக்கல, கைய பின்னாடி கட்றான், இல்லாட்டி முஷ்டி மடக்கி எது மேலயாவுது தேய்க்கிறான், ஒரு வாட்டி கூட இந்த சிரிப்ப சிரிக்கல,” என்றான்.

ஷ்யாமும் பாத்துவிட்டு ”யூ ஆர் ரைட்” என்றார் விழி விரிய, “அப்போ இந்த சிரிப்பு பத்தின அனாலிஸிஸ் தப்புனு சொல்றியா?”

“இல்ல, அது சரிதான், அந்த சிரிப்புக்கு அதான் அர்த்தம். ஆனா அதை நாலு நாளாதான் பண்றான், அதுக்கு முன்னாடி பண்ணதே இல்ல, அதான் நெருடலா இருக்கு,” என்றான் சிவா.

“அந்த சிரிப்ப தள்ளி வெச்சுட்டு மத்ததை மட்டும் வெச்சு கணிக்க சொல்லு” என்றார் ஷ்யாம் பரபரப்பாக.

சிவா மீண்டும் வேகமாக கீ போர்டில் தட்ட ஆரம்பித்தான், ஷ்யாம் பொறுமை இல்லாமல் “ப்ச். இன்னும் 2020ல யூஸ் பண்ணதெல்லாம் பண்ணிட்டு இருக்க. இப்போ 2080 யா. முதல்ல இதுக்கு வாய்ஸ் ரெகக்னிஷன போட்டு விடு, நச நசனு டைப் பண்ணிகிட்டு” என்றார். “எனக்கு இதான் பிடிச்சிருக்கு” என்றான் சிவா தட்டிக்கொண்டே. ஷ்யாம் “இந்த காலத்துலயும் பிரியாணி திங்கறவந்தானே நீ, அப்ப இதான் பிடிக்கும். அப்பெல்லாம் கண்ணாடினு ஒண்ணு போடுவாங்களாம் கண்ணுக்கு மேல அதையும் போட்டுக்கோ, ஒரு ஆதிகால ஸ்பெஸிமென் மாதிரி இருப்ப” என்றார் உரக்கச் சிரித்தபடி. திரையில் வரிகள் மாறின.

சிவா பெருமூச்சுடன், “அதேதான் சொல்லுது, கோவத்த மறைக்கிறானு, சிரிப்பு பல ராஷனல்ல ஒன்னு. ஆனா எனக்கு இந்த சிரிப்பு முக்கியமா படுது,” என்றான்.

“என்னய்யா சொல்ல வர” என்றார் ஷ்யாம் எரிச்சலாக.

சிவா அவர் பக்கம் திரும்பினான். “என் உள்ளுணர்வு சொல்லுது அவன் மாறிட்டு வரான், இந்த சிரிப்பு அதுக்கான முதல் அறிகுறி.“

“அவன் மாறுறான்னா உன் அல்காரிதம் அதை சொல்லுமே?”

சிவா சிரித்தான். “அல்காரிதம் வெளிய இருந்து உள்ள போறத வெச்சு கணிக்கறது, உள்ளயே ஏதாவுது மாறுச்சுனா அந்த மாற்றத்தோட விளைவால த்ஏதாவது சம்பவம் நடந்தப்புறம்தான் அதுல இருந்து கத்துக்கும்”.

ஷ்யாம், “உன் லாஜிக்படியே வருவோம், அவனுக்குள்ள அப்படி ஏதாவுது மாறுறதுக்கு வெளிய இருந்து ஏதாவுது அவனுக்குள்ள போகனும்ல, இந்த இருபத்தி நாலு நாளா அவனோட ஒவ்வொரு அசைவும் நமக்கு தெரியும், வெளிய ஒரு மாற்றமும் இல்ல, அப்புறம் எப்படி?” என்றார்

சிவா “அதான் எனக்கு குழப்பமா இருக்கு…” என்றுவிட்டு மீண்டும் சில கட்டளைகளைத் தட்டினான். “நாளைக்கான கணிப்பு”.

ஷ்யாம் திரைக்கு அருகில் வந்து பார்த்தார் “வயலன்ஸ் மட்டும் பில்டர் பண்ணு” என்றார். செய்தான்.

“சுத்தம்,“ என்றுவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டார். சிவா திரையைப் பார்த்தான். இருபது வயது ஆணைத் தாக்குவான் எனப் போட்டிருந்தது.

“நாளையோட அஞ்சாவுது நாள்,” என்றான் சிவா.

“நீ என்ன நினைக்கிற?”

சிவா, “தரவுகள் படி இது நடந்தே ஆகணும், அல்காரிதத்தோட கணிப்புல தப்பே இல்ல, ஆனா நடக்கும்னு எனக்கு தோணல,” என்றான்.

“வாய கழுவுயா. இந்த பிஓசி மட்டும் சக்ஸஸ் ஆச்சுனா எத்தன குற்றங்கள அரசாங்கத்தால நடக்கறதுக்கு முன்னாடியே தடுக்க முடியும்னு யோசிச்சுப் பாரு. ஏதாவுது பண்ண முடியாதா?”

“எல்லாமே சரியாதான இருக்கு, அவன் செய்யணும், செய்ய மாட்டேங்கிறான், நாமளே போய் அவன செய்ய தூண்டினாத்தான் உண்டு” என்றான் சிவா.

“சரி, எல்லா மானிடரிங்கையும் ஜாஸ்தி பண்ணு, உன் அல்காரிதத்த தொடர்ச்சியா அனலைஸ் பண்ணிட்டே இருக்க சொல்லு, என்ன நடக்குதுனு பாப்போம்.” என்றார் ஷ்யாம்.

அடுத்த நாளும் பல வாய்ப்புகள் அமைந்தும் அவன் அடிக்கவில்லை. தொடர்ச்சியாக ஒன்பதாம் நாள் வரை அடிப்பான் என்றே கணிப்பு வந்தது, அவன் அடிக்கவில்லை.

பத்தாவது நாள் ஷ்யாமும், சிவாவும் மழிக்காத தாடியும், தூக்கம் இல்லாமல் வீங்கிய கண்களும், சோகம் அப்பிய முகமுமாய்த் திரையின் முன் அமர்ந்திருந்தனர்.

“காலைல இருந்து ஒரு எழவும் பண்ணல இவன். இன்னைக்கும் அதே கதைனா இழுத்து மூட வேண்டியதுதான், டைரக்டர் வேற கூப்டு கேட்டுகிட்டே இருக்கார்,” என்றார் ஷ்யாம்.

இருவரும் திரையில் புட் டிஸ்பென்சர் முன் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் உணவை எடுத்துக்கொண்டு நண்பர்கள் அமர்ந்திருக்கும் மேஜை நோக்கி நடந்தான்.

பத்து நாள் முன்னால் அடிக்குத் தப்பியவன் இவன் நண்பர்கள் இருக்கும் மேஜையைக் கடந்து கொண்டிருந்தான். நடக்கும்போது அவன் கைபட்டு மேஜையில் இருந்த கோப்பை உருண்டது.

அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து அவன் முகத்தில் அறைந்தான், மற்ற இருவர் அதே சமயம் எழுந்து அவனைத் தாக்க ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் பலர் வந்து விலக்கிவிட, அடிபட்டவன் எழுந்து ஓடினான், மூவரும் மீண்டும் மேஜையில் அமர்ந்தனர். உணவுத் தட்டுடன் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போழுது தன் நண்பர்கள் இருந்த மேஜைக்குச் சென்று அமர்ந்தான்.

ஷ்யாம், “வாட்! நின்னு பாக்கறான் சிவா, டிட் யூ ஸீ தட்! நின்னு பாக்கறான். அன்பிலிவபிள்!” என்றார்.

சிவா ஒன்றும் சொல்லாமல் அவன் நண்பர்களுடன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

ஷ்யாம், “இனிமே பாத்து என்ன பண்ணப் போற, அதான் கணிப்பு தப்பா போச்சே, கண்ணு முன்னாடி நடக்கறத பாத்துட்டு அடிக்காம நிக்கறான், இவனெங்க அடிக்கப் போறான், புல்ஷிட் ப்ரெடிக்‌ஷன்ஸ். மானிடரிங் ஸ்டாப் பண்ணிடு, எல்லாத்தையும் ஆர்க்கைவ் பண்ணிட்டு ப்ரோஜக்ட் க்ளோஸர் ரிப்போர்ட் சப்மிட் பண்ணிரு. நான் நேர்லயே போய் டைரக்டர பாத்து சொல்லிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார்.

சிவா கண்ணில் கோர்த்த நீரின் மங்கலான ஒளியில் திரையில் தெரிந்தவனை வெறித்துக் கொண்டிருந்தான். அவன் தன் நண்பர்களுடன் வெளியே செல்ல வாசல் நோக்கி நடந்தான்.

சிவா திரையில் தன் விரல்களால் தன் முதுகை காமிராவுக்குக் காட்டிக்கொண்டு சிகப்பு வட்டத்துக்குள் இருந்தவனை இருமுறை தொட்டான், அவனைக் கண்கானித்துக் கொண்டிருந்த காமிரா ஜூமை உள் கொண்டு சென்றது, திரையில் அவன் நண்பர்கள் மறைய அவன் காமிராவுக்கு முதுகு காட்டி நடப்பது மட்டும் மிக அருகில் தெரிந்தது. முன்னால் பார்த்து நடந்து கொண்டிருந்தவன் ஒரு நொடிக்கும் குறைவான சமயம் தன் தலையை வலது புறம் திருப்பிவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டான்.

சிவா சேரில் இருந்து துள்ளி எழுந்தான். கண்களைத் துடைத்துக்கொண்டு அந்த காட்சியை மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தான், மனப்பிரமையல்ல, கண்டிப்பாகத் தலையைத் திருப்புகிறான். கீ போர்டில் அவன் இதயம் தடதடக்கும் வேகத்தில் கட்டளைகளைத் தட்டினான். பல காட்சித் துணுக்குகள் திரை முழுக்க எழுந்து வந்தன. அனைத்திலும் ஒரு நொடிக்கும் குறைவாகத் தன் தலையைத் திருப்பியவண்ணம் இருந்தான் அவன், ஆனால் காமிராவை நேராகப் பார்க்கவேயில்லை.

சிவாவின் முகத்தில் பெரிய புன்னகை அரும்பியது, “அப்கோர்ஸ்!” என்றான் வாய்விட்டு.

ஷ்யாம் அறைக்குத் திரும்பியபோது சிவா தன் டெஸ்கில் உட்கார்ந்து நிதானமாக பிரியாணியைக் கடித்துக் கொண்டிருந்தான். ஷ்யாம் ஆச்சரியமாக அவனைப் பார்த்துவிட்டு, “என்னய்யா கொஞ்சம்கூட வருத்தமே இல்லயா உனக்கு, உடஞ்சு போய் உட்கார்ந்திருப்பனு நெனச்சேன்,” என்றார்.

சிவா, “நீங்களும் பெருசா வருத்தப்பட்ட மாதிரி தெரியலயே,” என்றான் சிரித்துக்கொண்டே.

ஷ்யாம் “போகும்போது கிட்டத்தட்ட அழுதுகிட்டுதான் போனேன், ஆனா டைரக்டரோட முடிவ கேட்டு டான்ஸ் ஆடாத கொற. வந்து உன்னையும் சந்தோஷப்படுத்தலாம்னா ஏற்கனவே உன் பிரியாணியோட தியான நிலைல இருக்க,” என்றுவிட்டு தொடர்ந்தார். “போய் மொத்த ப்ரூப் ஆப் கான்சப்ட்டையும் ஒரு தடவை சொன்னேன், முழுசா கேட்டுட்டு டைரக்டர் தப்புக்கான சதவீதம் ரொம்ப கம்மியாதானே இருக்கு, இதுக்கு நாம ஒரே ஒரு ஆளை யூஸ் பண்ணது கூட காரணமா இருக்கலாம், ஒரு பத்து பேரை செலக்ட் பண்ணி இதையே இன்னும் ஒரு முப்பது நாளைக்கு முயற்சி பண்ணுங்கனு சொல்லிட்டாரு,” என்றார் உற்சாகமாக.

சிவா, “அது வேஸ்ட் ஆப் டைம்,” என்றான்.

ஷ்யாம் புரியாமல், “வொய்?” என்றார்.

“அவன் அதை செய்யாததுக்கு காரணம் எனக்கு தெரிஞ்சிருச்சு”

ஷ்யாம் “என்னது?” என்றார் ஆர்வமாக.

சிவா திரையில் அவன் திரும்பும் காட்சித் துணுக்குகளை ஓடவிட்டான்.

ஷ்யாம், “காமிராவ பாக்குறான், காமிராவ பாக்குறான், நான் அப்பவே சொல்லல, அவனுக்கு தெரிஞ்சிருச்சு,” உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தார்.

சிவா “நல்லா பாருங்க அவன் காமிராவ பாக்கல, இன்பேக்ட் காமிரா இருக்க திசையவே பாக்கல, தேவையில்லாம அனிச்சை செயல் மாதிரி அந்தப் பக்கம் திரும்புறான்.” என்றான்

ஷ்யாம் மீண்டும் ஒரு முறை பாத்துவிட்டு, “ஆமா… அப்போ அவன க்ளோசா நாம கண்காணிக்கறது தெரியலனு சொல்றியா?” என்றார் குழப்பமாக.

சிவா “பல தலைமுறையா சிசிடிவி முன்னாடியேதான் நம்மெல்லாம் பொறந்து வளர்ந்து செத்தும் போறோம். சிசிடிவி பத்தின பிரக்ஞை நம்ம யாருக்குமே இல்ல. யாராவுது நம்ம முதுகுக்குப் பின்னாடி பாத்தா திரும்பிப் பாக்குறோம். ஆனா இருபத்தி நாலு மணி நேரமும் நம்மள பாத்துட்டு இருக்கறதால சிசிடிவிக்கு நம்ம சென்ஸஸ் ரியாக்ட் பண்றதில்ல. நம்ம உடம்பு இந்த சிக்னலை எல்லாம் நம்ம மூளைக்கு அனுப்பறதில்ல. ஆனா இவன் கொஞ்சமா ஒரு பக்கமா திரும்பறது உடம்பு சிக்னலை அனுப்பாமலே அவன் மூளை அதை அவதானிக்க ஆரம்பிச்சிருச்சின்னு நான் நினைக்கிறேன்.”

ஷ்யாம், “யோவ் கொழப்பாத, புரியும்படியா சொல்லு,” என்றார்.

சிவா சட்டென்று எழுந்து இன்சினிரேட்டருக்குள் கையை விட எத்தனித்தான். ஷ்யாம், “ஏய்ய்ய், என்ன பண்ற,” என்று கத்திக்கொண்டு ஓடி வந்து அவனைப் பின்னால் இழுத்தார்.

சிவா அவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு “இப்ப என்ன பண்ணிங்க?” என்றான்.

ஷ்யாம் “லூசாயிட்டியா நீ, கை பொசுங்கி இருக்கும் நான் இழுக்கலனா,” என்றார்.

சிவா “ஆமா. என்ன காப்பாத்தணும்னு ஏன் உங்களுக்கு தோணிச்சு?” என்றான்.

“ஓங்கி மிதிக்கப் போறேன் உன்ன, என்னய்யா கேள்வி இது?”

“காரணம் இருக்கு, சொல்லுங்க”.

ஷ்யாம், “ஒருத்தர் ஆபத்துல இருந்தா காப்பத்தணும்னு தோன்றது மனித இயல்புயா,” என்றார் சலிப்புடன்.

சிவா “இத வேற மாதிரியும் சொல்லலாம். என் கை இன்சினிரேட்டர தொடக்கூடிய தூரத்தை தாண்டும்போதே உங்க மூளை கை பொசுங்கப் போறத பாத்துருச்சு, உங்கள காப்பாத்திக்கச் சொல்லி அலர்ட் பண்ண தயார் ஆயிருச்சு, உங்க கை மூளைகிட்ட நான் இன்சினிரேட்டர் பக்கத்துல இல்லனு ஒரு சிக்னல் உடனே அனுப்பிருச்சு. ரெண்டையும் ப்ராஸஸ் பண்ணி கை வேற ஒருத்தனுக்கு பொசுங்கப் போகுது, அவனக் காப்பாத்துனு உங்களுக்கு சொல்லிருச்சு, நீங்க அதுக்கு ரியாக்ட் பண்ணிட்டிங்க. சிம்பிளா சொல்லணும்னா எனக்கு நடக்கப் போறத தனக்கு நடக்க போறதா உங்க மூளை, குறிப்பா அதில் உள்ள மிரர் நியூரான்ஸ் பிராசஸ் பண்ணினதுதான் என்ன காப்பாத்த தூண்டுனதுக்கான முதல் காரணம் இல்லயா?”

“இதுக்கும் நம்ம அல்காரிதத்துக்கும் என்ன சம்மந்தம்?”

சிவா, “உங்க மூளைல நடந்த அதே ப்ராஸஸ் என் மூளையிலயும் நடந்தது, அவன காப்பாத்துனு சொல்றதுக்கு பதிலா உன்ன காப்பாத்திக்கோனு என் கிட்ட என் மூளை சொன்னது. ஆக ரெண்டு பேர் மூளையிலயும் அந்த நொடில அதே கை, அதே பொசுங்கல் அதே காப்பாத்துதான். என் மூளை உங்க மூளைய உணருது, உங்க மூளையும் என் மூளைய உணருது, மிரர் நியூரான் தயவால. “

ஷ்யாம் “இது கண்ணால பாத்தாதானே, அவந்தான் பாக்கலயே” என்றார் பொறுமையிழந்து

சிவா “மூளை கண்ணால மட்டும் இல்ல வேறொரு வழியாவும் பாக்கும், பளைண்ட் சைட் கேள்விபட்டிருக்கிங்க இல்ல, கண்ணு பாக்க முடியாததை கூட அதால பாக்க முடியும். கண்ணு தெரியாதவங்களுக்கு இந்த ப்ளைண்ட் சைட் ரொம்ப பலமா வேலை செய்யும்னு நிரூபிச்சிருக்காங்க. ஒரு புலன் சரியா வேல செய்யாம போகும் போது மூளை இன்னொன்னை வெச்சு அதை ஈடு செய்ய பழகிடும். உடம்பு சிசிடிவிக்கு எந்த சிக்னலும் கொடுக்காம போச்சு அதனால மூளை அதை வேற ஒரு வழில உணர ஆரம்பிச்சிருச்சினு நான் நினைக்கிறேன். பிளைண்ட் சைட் மாதிரி பிளைண்ட் அவேர்னஸ் இல்ல இண்டியூஷன்னும் சொல்லலாம்.. ஒரு உள்ளுணர்வு. இவன மாதிரி எந்நேரமும் குற்றத்தை பத்தி சிந்திச்சிட்டு இருக்கவனோட மூளைக்கு கண்காணிக்க படுறதை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் ரொம்ப இருக்கு.” என்றுவிட்டு தொடர்ந்தான்.

“நம்ம அல்காரிதம் சாதாரண மனித மூளையவிட பல மடங்கு தகவல் கொண்ட பெரிய மூளை, ஆனா தகவல்கள் மட்டுமே மூளை ஆயிடாது. அதுக்கு மனுஷங்களுக்கு இருக்க இந்த பிறரை உணர்தல்ன்ற உள்ளுணர்வு இல்ல. நம்ம கிட்ட இருக்க தகவல்கள் எல்லாம் தனியா தனியா ஒவ்வொருத்தர் பத்தியும் சேகரிச்சு அத கூட்டி பெருந்தகவலாக்கி வெச்சிருக்கோம். இந்த தனி தனி தகவல்களை நம்ம கூட்டியோ கழிச்சோ ஒரு முடிவுக்கு வரோம். நடைமுறைல இதெல்லாம் ஒன்னோடு ஒன்னு முயங்கி, அவனோட மூளை அதை ப்ராஸஸ் பண்ணும் போது வேற ஒன்னா ஆகுது. அவன் புலன்கள் உணரும் விஷயங்கள நம்மால தகவலாக்க முடியுது, ஆனா அதை மூளை வேற விதமா உணர்ந்துக்கும் போது அது தகவலா ஆகல. அதுவுமில்லாம, அவன மாதிரி பலமா குற்ற பிண்ணனி உள்ள டி.என்.ஏ உள்ளவங்களுக்கு இந்த மாதிரி நுண்ணுனர்வு ரொம்ப அதிகம், அவனால ரொம்ப சுலபமா இதைத் தாண்டிப் போக முடியும், இதால அவனோட இந்த உள்ளுணர்வ கணிக்க முடியாது, ஸோ, இத கண்டினியூ பண்றதுல ஒரு ப்ரயோஜனமும் இல்ல,” என்றான்.

ஷ்யாம் சற்று நேரம் அமைதியாக இருந்தார். “அவன் எவால்வ் ஆயிட்டானு சொல்றியா?” என்றார் நம்பமுடியாமல்

சிவா “எல்லா டி.என்.ஏ முடேஷனும் இப்படி எங்கேயாவது சாதாரணமாத்தான் ஆரம்பிக்கும். இது என்னோட யூகம்தான் இப்போதைக்கு. உள்ளுணர்வுன்னு ஒன்னு இருக்கலாம், இல்லாமப் போகலாம் ஆனா இப்ப அதை வச்சுதான் என்னால இவனைப் புரிஞ்சிக்க முடியுது.”

ஷ்யாம் “அவ்ளோதான் அப்போ?”

சிவா புன்னகைத்தான். “அப்படியெல்லாம் விட்டுட முடியுமா? அறிவியல் முட்டுச் சந்துல தலைய முட்டி முட்டி அத ஹைவே ஆக்கறதுதான நம்ம வேல. இந்த உள்ளுணர்வு இருக்கா, இருந்தா எப்படிப்பட்டது? இதைத் தெரிஞ்சிக்க வேண்டிய இடத்துக்கு வந்தாச்சு. இந்த உள்ளுணர்வைக் கணிக்கனும்னா எனக்கும் உங்களுக்கும் அவனுக்கும் எல்லா மனுஷங்களுக்கும் இருக்க இந்த இணைந்து அதிரும் கூட்டு நனவிலில ஒரு பகுதியா இந்த சிஸ்டம் மாறணும், அப்படி இணைஞ்சப்பறமும் இதையெல்லாம் வெளிய இருந்தும் பாக்கணும். அது முடியும்னா சாத்தியம்தான்.” என்றான்.

“ம்ம்ம்.. அதாவுது இருக்கவும் செய்யணும், இல்லாமலும் ஆகனும், நான் போயிட்டு வந்த கொஞ்ச நேரத்துல இதையெல்லாம் யோசிச்சு வெச்சுட்டியா” என்றார் ஷ்யாம்.

“இந்த தாட் எல்லாம் ரொம்ப பழசு. ‘உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே’ னு பல நூற்றாண்டுக்கு முன்னாடி பாட எந்த உள்ளுணர்வு காரணமா இருந்தததோ அந்த உள்ளுணர்வை அல்காரிதத்துல கோட் பண்ண நம்ம மூளையக் கொஞ்சம் கசக்கணும். ஒரு பல்லாயிரத்தாண்டு சவால்.” எனச் சிரித்தான் சிவா.

தன்ராஜ் மணி

தன்ராஜ் மணி தமிழ் ஆங்கிலப் புனைவு மற்றும் அபுனைவு வாசிப்பில் ஆர்வமுள்ளவர். சமீபகாலமாகச் சிறிது எழுதவும் செய்கிறார். மென்பொருள் கட்டமைப்பு இவரின் தொழில். மனைவி இரு குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசிக்கிறார். 2019 அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் பதிப்பிக்கத் தேர்வான பத்து கதைகளில் இவரின் 'அவன்' சிறுகதையும் ஒன்று.

Share
Published by
தன்ராஜ் மணி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago