முடிவிலி

< 1 நிமிட வாசிப்பு

யூகங்களுக்கு அப்பாற்பட்ட
பெரும் பரப்பின் பிரதிபோலான
மாதிரிகளைத்தான்
நாம் கடல் என்கிறோம்.
முழுவதுமாய்த் தீக்குளிக்கும்
குடும்பத்தலைவனிடத்தில்
நெருங்க வழியின்றிச் சுற்றுகின்றனர்
ஏனைய உறுப்பினர்கள்.
வெளியெங்கும் சிதறியிருக்கும்
குளிரும் தனிமையும் தாளாத
பாட்டி இரைத்த சோழிகள்.
அந்தப் பறக்கும் பாய்மீது
அமர்ந்திருப்பது ஒருவனா? குழுமமா?
விடையற்ற விவாதங்களில்
ஆளுக்கொரு கருத்து இருக்கின்றது.
எல்லையற்ற சமவெளியில்
கிடந்துருளும் எண்ணிக்கையற்ற பந்துகளில்
நீலமும் பச்சையும் கலந்ததொரு
வண்ணப் பந்திலிருந்துதான்
நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்