1984க்கு ஒரு காதல் கடிதம்

8 நிமிட வாசிப்பு

உங்கள் நம்பிக்கைகளைப் புரட்டிப்போட்ட கனவுருப்புனைவு (speculative fiction) எது என்று 2018 சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கலந்துரையாடிய மூன்று எழுத்தாளர்களிடம் கேட்கப்பட்டது. ஒருவர் The Infinite Library and Other Stories சிறுகதைத் தொகுப்பை எழுதிய விக்டர் ஆர். ஒக்காம்போ (Victor R. Ocampo). இவரின் குறுங்கதை முடிவிலியின் இழை என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு அரூவின் முதல் இதழில் வெளியானது. இன்னொருவர் Suicide Club என்ற அறிவியல் புனைவு நாவலை எழுதிய ரேச்சல் ஹெங் (Rachel Heng). மூன்றாவதாக The Gatekeeper என்கிற மிகைப்புனைவு நாவலை எழுதிய நுராலியா நோராசித் (Nuraliah Norasid).

ஒக்காம்போ இக்கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 என்றார் (க.நா.சு இந்நாவலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்). ஒக்காம்போ பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வாதிகார ஆட்சி காலத்தில் பிறந்து, பின்பு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர். 1984 சர்வாதிகார ஆட்சிமுறையைப் பின்புலமாகக்கொண்ட நாவல். அறிவியல் புனைவின் சாத்தியங்களை காட்டியதற்காக அந்நாவல் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றார். Riders of the Purple Sage மற்றும் பிளேட்டோ எழுதிய Republic – இவ்விரண்டும் ஒக்காம்போவின் அறப்பார்வையை ஆழமாகப் பாதித்த நூல்கள். “என் கண்ணோட்டத்திற்கு நேரெதிர்க் கண்ணோட்டத்தை நான் ஏற்காவிட்டாலும், அதைப் புரிந்துகொள்ள உதவுவதே சிறந்த புனைவு,” என்றார் ஒக்காம்போ.

ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) எழுதிய Brave New World நாவலில் வரும் பிறழ்ந்த உலகு (dystopia) சிங்கப்பூரை நினைவூட்டியது ரேச்சலுக்கு. ஹக்ஸ்லி இந்நாவலை 1931 ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை 15 வயதில் படித்த ரேச்சல், தனது Suicide Club நாவலிலும் Brave New World இன் தாக்கம் இருப்பதாகச் சொன்னார்.

12 வயதில் ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm படித்திருந்தாலும், 18 வயதில்தான் அதன் முழு அர்த்தத்தை உள்வாங்கிக்கொண்டதாக நுராலியா சொன்னார். மறைமுகமாக அரசியல் விமர்சனத்தை முன்வைக்கும் அந்நாவலின் தன்மை நுராலியாவின் The Gatekeeper நாவலிலும் வெளிப்பட்டுள்ளது. ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் நுராலியா, The Gatekeeper நாவலில் அழிந்துகொண்டிருக்கும் மொழி ஒன்றைக் கற்பனை செய்கிறார். ஒரு மொழி அழியும்போது அதனுடன் சேர்ந்து என்னவெல்லாம் அழியும் என்ற தேடலே இப்படியொரு கற்பனைக்கு உந்துதல். உதாரணத்திற்கு “நீலு” என்ற மலாய் மொழிச் சொல்லைக் குறிப்பிட்டார். இது பற்களுக்கு இடையே உலோகம் உரசும் உணர்வை வெளிப்படுத்தும் சொல்லாம். ஒரு மொழி அழியும்போது இவ்வாறான பல நுணுக்கமான சொற்களும் உணர்வுகளும் சேர்ந்தே அழிகின்றன என்றார்.

அப்போது ஒக்காம்போ சொன்னது, “மொழிகள் புழக்கத்தில் இல்லாமல் போகும்போது, அவை அழிவதில்லை உறைந்துபோகின்றன. இதனால் ஒரு பயனும் உள்ளது. புழக்கத்தில் இல்லாத மொழி துல்லியமான சொற்களைக் கொண்டிருக்கும். அவற்றின் அர்த்தம் காலம் கடந்தும் மாறாது. ஆகவே அரசாங்க மொழியாகத் தெளிவாக அர்த்தம் செய்துகொள்ளப் பயன்படும். இப்படித்தான் லத்தீன் மொழியைச் சில நாடுகள் அரசாங்க மொழியாகப் பயன்படுத்துகின்றன.”

ஒக்காம்போவின் இந்தக் கருத்து ஒரு நாணயத்தின் மறுபக்கத்தைப் பார்த்த உணர்வை எனக்களித்தது. இந்த அணுகுமுறை எழுத்தாளர்களுக்கு மிகவும் அவசியம் என்று தோன்றியது, குறிப்பாக அறிவியல் புனைவு எழுதுபவர்களுக்கு. மனித வாழ்வைப் பற்றி அறிவியல் எழுப்பும் கேள்விகளை முன்முடிவுகளின்றி ஆராயும்போது நல்ல அறிவியல் புனைவு பிறக்கும். Tidal locking என்கிற தோற்றப்பாட்டினால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நாம் பூமியிலிருந்து பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஒரு சீன செயற்கைக்கோள் நிலவின் பின்புறத்தைப் புகைப்படம் எடுத்தது. ஒரு கேள்விக்குச் சட்டென்று தோன்றும் பதிலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரூபத்தைக் கண்டடைந்து எழுத்திலும் படம் பிடிக்க வேண்டும்.

ஓர் உதாரணம் கொடுக்கிறேன் – எந்திரன் திரைப்படத்தில் சிட்டி சனாவைக் காதலிப்பதாகச் சொல்லும் தருணம். ஒரு ரோபாட் மனிதனைக் காதலிப்பது இயற்கைக்குப் புறம்பானது என்று சனா மறுத்துவிடுவாள். சிட்டி இது இயற்கைக்குப் புதிது என்பான். சிட்டி சொன்ன கருத்தைப் பின்தொடர்ந்தால் மனிதனுக்கும் ரோபாட்டுக்குமான உறவை ஆராயும் பெருங்கதை எழுதலாம். இதைச் செய்யாமல், “உலகம் இன்னும் சிட்டிக்குத் தயாராகவில்லை,” எனச் சொல்லி முடித்திருப்பார்கள். ஸ்பைக் ஜோன்ஸ் இயக்கிய Her திரைப்படம் ஒரு மனிதனுக்கும் ஆப்பிளின் சிரி (Siri) போன்ற அவனின் செயற்கை நுண்ணறிவுகொண்ட உதவியாளருக்குமான காதல் உறவை விவரிக்கும். எந்திரனில் நிகழ்ந்த உரையாடலின் நீட்சியே Her. ரோபாட்டும் மனிதனும் எப்படிக் காதலிக்க முடியும் என்று குழம்பிய சனா பார்க்க வேண்டிய திரைப்படம்.

கேள்விகள் வழியே பயணிக்கும் இன்னொரு புத்தகம் – “I, Robot” ஐசக் அசிமோவின் ரோபாட் சிறுகதைகளின் தொகுப்பு. ரோபாட்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் செயல்பட அவர் மூன்று விதிகளை உருவாக்கினார் (Three Laws of Robotics).

  1. ஒரு ரோபாட் எந்த மனிதனையும் காயப்படுத்தக் கூடாது மற்றும் அலட்சியத்தினால் எந்த மனிதனுக்கும் காயம் ஏற்பட விடக்கூடாது.
  2. ஒரு ரோபாட் மனிதர்களின் கட்டளைப்படி நடக்க வேண்டும், முதல் விதியை மீறாமல்.
  3. ஒரு ரோபாட் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும், முதல் மற்றும் இரண்டாம் விதிகளை மீறாமல்.

இம்மூன்று விதிகளைப் படித்துப் பார்க்கும்போது, இவற்றைக் கடைப்பிடிக்கும் ரோபாட்களினால் தீங்கு வரக்கூடாதுதானே? ஆனால் “I, Robot” தொகுப்பின் ஒவ்வொரு கதையும் இம்மூன்று விதிகளைப் பல கோணங்களிலிருந்து கேள்விக்கு உட்படுத்தி, அவற்றிலிருக்கும் ஓட்டைகளைக் கண்டறியும்.

இப்படிக் கேள்விகளைப் பின்தொடர்ந்து ஆழமாகச் செல்லுதல் நல்ல அறிவியல் புனைவிற்கு அவசியம். 1984 நாவல் அதையே செய்கிறது. இந்த நாவலை முதன் முறையாக 2017 இல் படித்து முடித்தபோது இத்தனை வருடங்களாக ஏன் இதைப் படிக்காமல் வாழ்ந்தோம் எனத் தோன்றியது. ஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்? அது கொள்கையாக இருக்கலாம், உணர்வாக இருக்கலாம், இன்னொரு மனிதனாக இருக்கலாம். இதுவே 1984 எழுப்பும் ஆதாரக் கேள்வி. மகத்தான படைப்புகள் என்று சொல்லப்படும் அனைத்தும் ஏதோவொன்றை வாழ்க்கையின் ஆதாரமாக முன்னிறுத்தும் – அன்பு, மீட்பு, மனிதம், அறம், ஏதோவொன்று. 1984 எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைத்துத்தள்ளும் நாவல். மனிதனின் எல்லா சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் இயந்திரங்களின் மூலம் சித்திரவதை செய்து மாற்றிவிடலாம் எனக் காட்டுகிறது. அபாரமான உறுதிகொண்ட மனிதனையும் ஒரு தருணத்தில் உடைத்துவிடலாம் என்கிறது. The Dark Knight படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு இதுதான் விளையாட்டு. உறுதியாக இருப்பவர்களை உறுதியிழக்கச் செய்வதில் அவனுக்குப் பேரானந்தம். இவ்விதத்தில் நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல்லும் ஜோக்கரும் ஒன்றுதான்.

ஒரு கொள்கையையோ, உணர்வையோ வலுவாக நம்பும் ஒருவரால் 1984 எழுத முடியாது. தமிழ் மொழியை உயிருக்கும் மேலாக நேசிக்கிறேன் என்று சொல்பவரால் சுஜாதா எழுதிய “தமிழாசிரியர்” கதையை எழுத முடியாது. அதைச் செய்ய நாம் ஆழமாக நம்புவதையே தூரத்தில் நின்று எதிர்க்கப் பழக வேண்டும். ஒரு கேள்வி இழுத்துச்செல்லும் ரோலர் கோஸ்டர் சவாரியில் ஏறத் தயங்கி நிற்காமல், உள்ளே தாவிக் குதித்து அது அழைத்துச் செல்லும் இடங்களைக் கண்கள் மூடாமல் உள்வாங்க வேண்டும்.

கேள்வியைப் பின்தொடர்தல், விலகி நின்று கவனித்தல் – இரண்டுமே எல்லாவித எழுத்திற்கும் தேவைதானே? அறிவியல் புனைவிற்கு மட்டும் ஏன் இது மிகவும் அவசியம்? அறிவியலின் அடிப்படையே கேள்விகளும் அவதானித்தலும்தான். அவையே அறிவியலை முன்னகர்த்துகின்றன. முன்முடிவுகளோடு ஒரு பரிசோதனையை அணுகினால் சரியான முடிவு கிட்டாது. சிட்டுக்குருவி பாவம் என்ற முன்முடிவுடன் ஒரு கதை எழுத ஆரம்பித்தால், 2.0 போன்ற அறிவுரைப் புனைவுதான் கிடைக்குமே தவிர, ஓர் உயிரினத்தின் அழிவினால் சமநிலை குலையும்போது இயற்கையே வேறொரு வழியில் அதைச் சரி செய்துகொள்ளாதா என்ற கேள்வியின் பக்கமே திரும்ப மாட்டோம்.

கடந்த சில வருடங்களாகச் சிங்கப்பூரிலும் சரி, பிற நாடுகளிலும் சரி கனவுருப்புனைவின் செல்வாக்கு பெருகி வருகிறது. இதற்கு ஒரு மறைமுக காரணம் இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்வதற்கு அரசியல் மற்றும் சமூக நெருக்கடி இருக்கும்போது, அதைப் பூடகமாகச் சொல்ல வேறொரு உலகை அமைத்து, அதில் கதாபாத்திரங்களை உலவவிட்டு, அதன் மூலம் நமக்குச் சொல்ல வேண்டியதை மறைமுகமாகச் சொல்வது. ஒரு வித எழுத்து escapism. உதாரணத்திற்கு 2012 ஆம் ஆண்டு Nebula விருது வென்ற Ponies மற்றும் How Interesting A Tiny Man சிறுகதைகள் இரண்டுமே இப்படிப்பட்ட கதைகள்தான். (Nebula விருது அமெரிக்காவில் எழுதப்படும் சிறந்த மிகைப்புனைவு மற்றும் அறிவியல் புனைவு படைப்புகளுக்கு வருடந்தோறும் அளிக்கப்படுவது.)

ஒரு மனிதன் தனது உயிருக்கும் மேலாகக் கருதும் ஒன்றுடன் எந்த அளவிற்கு உறுதியாக நிற்க முடியும்?

சிறு வயதில் நட்பு வட்டத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தன்னைத்தானே எப்படியெல்லாம் அழித்துக்கொள்கிறார்கள் சிறுமிகள் என்பது Ponies கதையின் கரு. இதை நேரடியாகச் சொல்லாமல், ஒரு கற்பனை உலகில் எல்லாச் சிறுமிகளும் ஒரு குதிரைக்குட்டி (pony) வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குதிரைக்கும் சிறகிருக்கும், இனிமையான குரலிருக்கும், கொம்புகளும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயதானதும், அந்தக் கொம்புகளையும், சிறகுகளையும், குரல்வளையையும் வெட்டி வீச வேண்டும். அவ்வயதைத் தாண்டிய குதிரைகள் அனைத்தும் பறக்க முடியாமல், முட்ட முடியாமல், ஊமையாய் நிற்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதன் சாரத்தை எதார்த்தக் கதையாகவும் எழுத முடியும். நுராலியா எழுதிய The Gatekeeper நாவலின் கதை கற்பனை உலகில் நிகழ்ந்தாலும், சிங்கப்பூரைத்தான் மறைமுகமாகச் சுட்டுகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு கற்பனை உலகை உருவாக்கி, அதற்குள் பயணித்து, அதில் கதையைக் கண்டறிவதற்குப் பதிலாக, முன்தீர்மானித்த கருத்தைச் சொல்ல கற்பனை உலகங்களையும், குறியீடுகளையும், படிமங்களையும் கையாளுகிறார்கள். கற்பனை உலகிலிருக்கும் வண்ணங்களைப் பார்க்காமல், நிஜ உலகின் நிழலை அள்ளி அங்கு பூசுவது போல. நீங்கள் சமீபத்தில் படித்த நான்கு கதைகளை நினைத்துப் பாருங்கள் (குறிப்பாக, தீவிர இலக்கியக் கதைகள்), நிச்சயம் அவற்றில் இரண்டு கதைகளாவது இந்த மறைமுக வகையறாவுக்குள் வரும்.

இங்கு எழும் கேள்வி: நேரடியாகச் சொல்ல முடிகிற ஒரு விஷயத்தைக் குறியீடுகளாலும், கற்பனை உலகங்களாலும் ஏன் பூடகமாகச் சொல்ல வேண்டும்? ஏன் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்? எழுதுபவர், “நான் எப்படி ஒளித்துவைத்தேன் பார்த்தியா?” என்றும், படிப்பவர், “நான் எப்படிக் கண்டுபிடித்தேன் பார்த்தியா?” என்றும், இருவரும் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்துக்கொள்வதற்கா?

உங்கள் திரைப்படம் என்ன சொல்ல வருகிறது என்று The Salesman இயக்கிய அஸ்கர் ஃபர்ஹாதியிடம் கேட்டபோது அவர் சொன்னது, “என் திரைப்படம் சொல்ல வருவதை என்னால் ஓரிரு வாக்கியங்களில் சொல்ல முடிந்தால், நான் திரைப்படமே எடுக்கத் தேவையில்லையே. அந்த வாக்கியத்தை உங்களிடம் சொல்லிவிடுவேன். நான் சொல்ல வருவதை என்னால் இத்திரைப்படத்தின் வடிவத்தில்தான் சொல்ல முடிந்துள்ளது, வேறு எப்படியும் சொல்ல என்னால் இயலாது. நான் சொல்ல வருவது இத்திரைப்படம்தான்.”

1984 இன் கதையை வேறெப்படியும் சொல்ல முடியாது. அறிவியல் புனைவு வடிவத்தில் மட்டுமே அதைச் சொல்ல முடியும். அந்நாவல் 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. அப்போது நிலவிய அரசியல் சூழல் தொடர்ந்தால், 1984 ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்பதே அந்நாவலின் மையம். ஆர்வெல் தற்காலச் சூழலை விமர்சிக்கிறார், ஆனால் புதிதாக வேறொரு உலகை உருவாக்குவதன் மூலம் அல்ல (Animal Farm நாவலில் செய்தது போல), தற்கால உலகத்தின் எதிர்கால நீட்சியை எழுதுவதன் மூலம். ரே பிராட்புரி எழுதிய There will come soft rains சிறுகதையும் தற்கால உலகின் எதிர்கால நீட்சி. இக்கதையையும் வேறெந்த விதத்திலும் சொல்ல முடியாது.

இதை எதார்த்தக் கதையாகவே எழுதியிருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கனவுருப்புனைவுப் படைப்புகள் என்னைப் பெரிதாகப் பாதிப்பதில்லை. இதை வேறெப்படியும் சொல்ல முடியாது என்று தோன்றினால், “அற்புதம்!” என்று மனம் அலறும், 1984 படித்து முடித்ததும் அலறியது போல.

இந்த நாணயத்திற்கு இன்னொரு பக்கம் உள்ளது. மறைமுகமாகச் சொல்வதன் மூலம் நாம் நிஜ உலகில் காண முடியாத சில விஷயங்களை துல்லியமாகக் காட்டலாம். ஒளியின் கீற்று முப்பட்டைக் கண்ணாடி வழியாகப் பயணித்து வண்ணங்களாக விரிவது போல. இதற்கொரு சிறந்த உதாரணம், ஐசக் அசிமோவின் The Gods Themselves (“அற்புதம்!” என்று மனதை அலற வைத்த இன்னொரு நாவல்.) மூன்று பாலினங்கள் வாழும் வேற்றுகிரகம் ஒன்றை விவரிப்பார். இவ்வுலகின் நியதிப்படி இம்மூன்று பாலினங்களும் ஒன்று சேரும்போது மட்டுமே உடலுறவு நிகழ்கிறது. இம்மூன்றுக்கும் தனித்தன்மைகள் இருக்கின்றன. அவற்றினால் ஏற்படும் காதல், ஊடல், மோதல்கள் வழியாக, நமது உலகில் பாலினங்களுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கிறார். இவ்வாறு நாம் கற்பனை உலகிற்குப் பயணம் செய்து வருவதன் மூலம், நமது உலகை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது. இதுவே நல்ல கனவுருப்புனைவின் சான்றாகும்.

முன்பு மொழி அழிவதைப் பற்றிக் குறிப்பிட்டேன். 1984 நாவலில் புழக்கத்தில் இருக்கும் மொழி சுருக்கப்படுகிறது. Newspeak (புது மொழி) என்ற ஒரு கற்பனை மொழி இந்நாவலில் வருகிறது. மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக சர்வாதிகார அரசு எதிர்ப்போ, கிளர்ச்சியோ தூண்டும் சொற்களை மொழியிலிருந்து நீக்கிக்கொண்டே இருக்கிறது. Newspeak பழைய மொழியின் கத்தரிக்கப்பட்ட வடிவம். “விடுதலை” என்ற சொல்லே மொழியில் இல்லாவிட்டால் எப்படி விடுதலையைப் பற்றி சிந்திக்க முடியும்? மொழிக்கும் சிந்தனைக்குமான இத்தொடர்பை அற்புதமாக ஆராய்ந்த இன்னொரு அறிவியல் புனைவு டெட் சியாங் (Ted Chiang) எழுதிய குறுநாவல் Story of your Life. (Arrival என்கிற திரைப்படம் இக்கதையைத் தழுவி உருவானது.) பூமிக்கு வந்துசேரும் வேற்றுக்கிரகவாசிகளின் மொழியைக் கற்கும் மொழியியலாளரின் சிந்தனை முறை எவ்வாறு மாறுகிறது என்பதே இக்கதையின் முடிச்சு.

1984 காட்டும் பிறழ்ந்த உலகு (dystopia) டெர்ரி கில்லியம் (Terry Gilliam) இயக்கிய Brazil திரைப்படத்தை நினைவூட்டியது. 1984 டெர்ரி கில்லியம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. Brazil இன் கதை வேறாக இருந்தாலும், கதை நிகழும் உலகம் 1984 இல் விவரித்தது போலவே இருக்கும். (முதலில் இத்திரைப்படத்திற்கு “1984 ½” என்று தலைப்பிட இருந்ததாக டெர்ரி சொல்லியிருக்கிறார்.) 1984 படித்துவிட்டு இத்திரைப்படம் பார்த்தால் அதன் சிறப்பம்சம் விளங்கும். 1984 இல் எது நிஜம் என்றே தெரியாது, கதையிலுள்ள கதாபாத்திரங்களுக்கும் சரி, நமக்கும் சரி. சர்வாதிகார ஆட்சியின் தலைவனான Big Brother இன் உருவம் எல்லா இடங்களிலும் வரையப்பட்டிருக்கும், அவர் உங்களைக் கண்காணிக்கிறார் என்ற அறிவிப்புடன். Big Brother ஐ எதிர்த்துப் போராடும் Emmanuel Goldstein என்பவர் தனது கொள்கைகளை விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருப்பார். Emmanuel எழுதிய புத்தகத்தை முக்கிய கதாபாத்திரம் படிப்பதாக வரும். ஆனால் நிஜமாகவே Big Brother என்றொருவர் இருக்கிறாரா, Emmanuel Goldstein இருக்கிறாரா, அவர் எழுதிய புத்தகம்தானா இது, என்ற கேள்விகளுக்கு நாவலில் பதிலில்லை. நாவல் முழுதும் பரவிக்கிடக்கும் நிஜத்தின் மீதான மூடுபனி டெர்ரியின் Brazil படத்திலும் நிரம்பிவழிகிறது. இதன் உச்சக்கட்டம் இறுதிக் காட்சியில் இந்தப் பாடல் ஒலிக்கும் தருணம். இதில் வரும் சீட்டியொலி 1984 இன் அடிநாதம்.

அறிவியல், கனவுருப்புனைவு, அரூ, உரு எதுவாக இருந்தாலும், இறுதியில் அது நம்மைத் தொட வேண்டும், நமது வாழ்க்கைக்கு ஏதோவொரு விதத்தில் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். இதை ஒக்காம்போ நச்சென்று சொன்னார், “அறிவியல் புனைவு பேரண்டத்தில் மனிதனின் நிலையைப் பற்றி பேசுவது. அறிவியலைப் பற்றியோ, தொழில்நுட்பத்தைப் பற்றியோ அல்ல. நம் கலாச்சாரத்தையும் அறிவியலையும் இணைக்கும் பாலமே அறிவியல் புனைவு.”


குறிப்புகள்

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நடந்த இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு – நவீன அறிவியலின் மீது அறிவியல் புனைவு ஏற்படுத்திய தாக்கம் என்கிற தலைப்பில் விக்டர் ஒக்காம்போவின் உரை. ஐந்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு (இணையதளம், கைபேசி உட்பட) அறிவியல் புனைவு எவ்வாறு உந்துதலாக இருந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்கினார். இதன் ஆங்கிலக் குறிப்புகளை இங்கே படிக்கலாம்.

நன்றி – சிங்கப்பூர் தேசிய கலை மன்றத்தின் கவிதா கரும் மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா ஏற்பாட்டாளர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்