அரூவில் வெளியான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது.
தமிழாக்கம்: அஷ்வினி செல்வராஜ்
சென்ற இதழில் வெளியான தென்கிழக்காசிய கனவுருப்புனைவு (speculative fiction) இலக்கிய இதழான லொந்தாரின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க்கின் நேர்காணலின் தொடர்ச்சியாக, அரூ வாசகர்கள் முன்வைத்த சில கேள்விகளும் அவரது பதில்களும்.
அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கு, எந்த அளவிற்கு ஆழமான அறிவியல் அறிவு அவசியமாகின்றது?
நீங்கள் சொல்ல விரும்பும் கதையின் தன்மையைப் பொருத்தே அது அமையும் என்று நான் நினைக்கிறேன். தங்களது புனைவுகளில் அறிவியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் மிகத் துல்லியமாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று விரும்பும் எழுத்தாளர்கள் உள்ளனர். (இதை “செறிவான அறிவியல் புனைவு” என்று கூறுவதுண்டு) வேறு சிலர் அறிவியல் புனைவு கருப்பொருள்களைக் கருவியாகக்கொண்டு, உணர்ச்சிகள் மிகுந்த கதைகளைக் கூறுவர். இரண்டுமே உகந்த உத்திகள்தான். எனினும் செறிவான அறிவியல் புனைவை நீங்கள் எழுத விரும்பினால், உங்கள் கதைகளில் நீங்கள் சொல்ல வருவதைப் பற்றி ஓரளவு பரிச்சயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், அறிவியல் சார்ந்த தகவல் பிழைகளுக்காகவோ அல்லது அவசர ஆய்வுகளால் கோர்க்கப்பட்ட அறிவியல் விவரணைகளுக்காகவோ உங்களை யாரும் குற்றம் சாட்டிவிடக்கூடாது.
உங்களுடைய அறிவியல் புனைவு எழுத்துக்கு உதவக்கூடிய, தற்கால விஞ்ஞான வளர்ச்சிகளை/முன்னேற்றங்களை எவ்வாறு தொடர்ந்து தெரிந்து வைத்துக்கொள்கிறீர்கள்?
சிறுவயதிலிருந்தே அறிவியலில் நாட்டம் இருந்துவந்துள்ளதால், செய்திகளின் வாயிலாகவே அதன் வளர்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முயல்கிறேன். சொல்லப் போனால், அதுவும் போகிறபோக்கில் மட்டுமே. . எனது எழுத்துகளில் அறிவியல் புனைவு சார்ந்த கருப்பொருள்களைவிட, கற்பனை சார்ந்தவற்றையே அதிகமாக பயன்படுத்துவதால், இதுவே போதுமானதாக இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் எழுதப்படும் பல கனவுருப்புனைவு படைப்புகள், வர்த்தகப் பொழுதுபோக்கிற்காக, குறிப்பாக ஹாலிவுட்டைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்றன. இத்தகைய பின்னணியில், வளரும் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் பொதுவாகப் புரியும் தவறு என்று எதைக் கூறுவீர்கள்?
ஹாலிவுட்டைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதுவதுதான் மிகப் பெரிய தவறாகும். நீங்கள் கலிஃபோர்னியாவில் பணிபுரியக்கூடிய வசனகர்த்தாவாக இல்லாதவரையில், உங்களால் இயன்ற அளவிற்குச் சிறப்பான ஒரு கதையைக் கூறுவதே முதன்மை இலக்காக இருக்க வேண்டும். மிகச் சில நாவல்கள் மற்றும் கதைகளின் உரிமைகள்தான், திரைப்பட அல்லது தொலைக்காட்சித் தொடர்களுக்கான தழுவல்களுக்காக வாங்கப்படுகின்றன (இது குறித்த துல்லியமான எண்ணிக்கை என்னிடம் இல்லை, ஆனால் அப்படி வாங்கப்படும் படைப்புகளின் விகிதம் மிகவும் சிறியது). மேலும், அத்தகைய உரிமைகள் வாங்கப்பட்ட நிலையில் இருக்கும் பல படைப்புகள் தயாரிப்பு நிலையை அடைவதே இல்லை. எனவே, உங்களுடைய படைப்புகள் திரைப்படங்களாக்கப்படும் என்று நீங்கள் எப்பொழுதும் எண்ணக்கூடாது. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அது உங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியே ஒழிய உங்களுடைய கதையை, உங்களுடைய பாணியில் சிறப்பாகச் சொல்வதே உங்களுடைய முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்; அதுவே உங்களுடைய சாதனையும் ஆகும்.
இவற்றையெல்லாம் நினைவில்கொள்ளும் அதே வேளையில், ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டுள்ள படைப்புகளைக் குறித்த விழிப்புணர்வு உங்களுக்கு இருத்தல் அவசியம். வளரும் எழுத்தாளர்கள் அல்லது முதன்முறையாகப் பதிப்பிக்கும் எழுத்தாளர்கள், அவர்களது நாவல்களில் காலப்பயணம், இணைப் பிரபஞ்சக் கோட்பாடு, மாய உயிரினங்கள் போன்ற குறிப்பிட்ட சில அறிவியல் புனைவு கருப்பொருள்களையோ அல்லது தத்துவங்களையோ சாமர்த்தியதாகக் கையாண்டதைப் பற்றிப் பெருமை பேசுவது எனக்கு அதிகம் எரிச்சலைத் தரக்கூடியது. மாறாக, பல எழுத்தாளர்கள் ஏற்கனவே எழுதிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டுதான், அவற்றில் சில மாற்றங்களைச் செய்து தத்தம் கதைகளை எழுதிருப்பார்கள். இவ்வாறு செய்வதில் தவறில்லை – பல நேரங்களில் இவ்வாறு செய்வது ஆதரிக்கவும் படுகின்றது. எனினும், நீங்கள் கையாளவிருக்கும் கருப்பொருள்களை எவ்வாறெல்லாம் பிற எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துகளில் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருந்தால்தான், நீங்கள் அதே கருப்பொருள்களை வைத்துப் புதிதாக ஒன்றினைப் படைக்க இயலும்.
வளரும் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள் வழமையான சிந்தனைகளில் சிக்கிக்கொள்வது சுலபமானது. உதாரணத்திற்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று இயற்கையிலிருந்து வரும் ஒன்றினைவிடச் சிறப்பானதாக அமையாது என்ற எண்ணத்தினைச் சுட்டிக்காட்டலாம். இத்தகைய வட்டங்களில் எழுத்தாளர்கள் சிக்காமல் இருப்பது எப்படி?
பரந்த மனப்பான்மையையும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்வதால்தான். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி நாம் அறிந்திராதவைப் பல உண்டு; இவ்வாறு இருக்கையில், அனைத்தும் தெரியும் என்ற ஆணவ எண்ணம் ஒருவருக்கு எப்படி வரக்கூடும்?
“ஒரு கதையைச் சொல்வதற்கான வழியாகக் கனவுருப்புனைவு திகழ்கிறது, மற்றபடி, மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அது இயல்பாகவே உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.”
கனவுருப்புனைவிற்கும் கலாச்சாரத்திற்கும் (சமூக வழக்கங்கள்) உள்ள தொடர்பு என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்களுடைய முன்னோரின் கலாச்சாரத்தை அறிவியல் புனைவோடு எவ்வாறு ஒன்றிணைக்கிறீர்கள்?
இன்றைய காலகட்டத்தில் கனவுருப்புனைவு கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தது. இன்று மிகப் பெரிய அளவில் வெற்றிப்படங்களாகத் திகழ்பவை, காமிக் புத்தகங்களின் அல்லது மிகைப்புனைவு படைப்புகளின் தழுவல்கள். தற்போதைய அரசியல் சூழல்கூட, 1980களின் ‘சைபர்பங்க்’ நாவல்களின் பிரதிபலிப்பாகவே தோன்றுகிறது. தற்காலம் என்பதே புனைவுதான்.
என்னுடைய முன்னோரின் கலாச்சாரம் சற்று சிக்கலானது. தாயார் வழி பார்க்கப்போனால், நான் பாதி கிரேக்க மதத்தைச் சார்ந்தவன். எனினும் கிரேக்க மரபுவழி திருச்சபையில் நான் என்றுமே சேர்ந்ததில்லை. குழந்தை பருவத்தில் எபிஸ்கோபேலியனாக தேவாலய நீராட்டுச் சடங்கினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நாத்திகராகத்தான் வளர்க்கப்பட்டேன். கடந்த சுமார் பதின்மூன்று ஆண்டுகளாகப் புத்த மதத்தைப் பின்பற்றுபவனாக என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளபோதிலும், சில மதக் கோட்பாடுகள் குறித்த சந்தேகங்கள் எனக்கு இன்னும் உள்ளன (உதாரணமாக, மறுபிறவி). அறிவியல் புனைவு இக்கோட்பாடுகளில் எதை வேண்டுமானாலும் ஆராயலாம்; அனைத்தையுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாம்; அறிவியல் புனைவில் விவாதிக்கப்படக் கூடாதது என்று எதுவும் இல்லை.
பாரம்பரிய கனவுருப்புனைவிற்கும் சமகால, நவீன கனவுருப்புனைவிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடாக எதைக் கருதுகிறீர்கள்? இத்துறையில், எத்தகைய சோதனை முயற்சிகளைக் குறித்து நீங்கள் ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?
எழுதுவது யார், வாசிப்பது யார் என்பதில்தான் என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. ‘பாரம்பரியம்’ என்று நீங்கள் குறிப்பிடுவது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என எடுத்துக்கொண்டால், அக்காலத்தில் கனவுருப்புனைவு பெரும்பாலும் வெள்ளையர்களாலேயே எழுதப்பட்டது. சமகால கனவுருப்புனைவில் இயங்கும் பல அருமையான எழுத்தாளர்கள், பாலினம், இனம், உடற்திறன், பாலியல் விருப்பம் ஆகியவற்றுடன் தங்களை வேறுவிதமாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
பலதரப்பட்ட கதைகள் இப்போது பொதுவெளியில் வருவதை நாம் காண்கிறோம். இவற்றைப் பல வெள்ளையர்கள், குறிப்பாக ஆண் எழுத்தாளர்கள் அவர்களுடைய கலாச்சார ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படக்கூடியதாகக் கருதுகிறார்கள். ஆனால், வெள்ளையினத்தைச் சேர்ந்த ஆணாக நான் இருந்தபோதிலும், இத்தகைய பலதரப்பட்ட படைப்புகளையும் கனவுருப்புனைவின் கீழ் உள்ளடக்கும் தன்மையை நன்மையாகவே கருதுகிறேன்.
கனவுருப்புனைவின் பிரபலம் குறித்த உங்களுடைய கருத்தென்ன? இந்த வகையைச் சேர்ந்த புனைவெழுத்து, வேறு வகை எழுத்துகளைப் பின்னுக்குத் தள்ளி அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதா?
இது சூழலைப் பொருத்தது. நான் தற்போது வசிக்கும் சிங்கப்பூரில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கனவுருப்புனைவுப் படைப்புகள் சற்றுப் பிரபலமாக உள்ளன. ஆனால், இத்தகைய படைப்புகளை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் சிங்கப்பூர் அல்லது தென்கிழக்காசியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கனவுருப்புனைவுப் படைப்புகளை தரம் குறைந்ததாகக் கருதும் போக்கும் உண்டு. என்னுடைய சொந்த ஊரான/இடமான அமெரிக்காவில் கனவுருப்புனைவு பிரபலமாக இருப்பினும், அந்தக் குறிப்பிட்ட புனைவு வகையைப் படைப்பவர்களுக்கும் அதனை வாசிப்பவர்களுக்கும் இடையேதான் அது பிரபலமடைந்துள்ளது. மிகப் பிரபலமான திரைப்படங்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள போதிலும், இத்திரைப்படங்களின் பிரபலமானது, வாசகர்களைக் கனவுருப்புனைவின் பக்கம் இழுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
எனினும், ஒரு படைப்பை வகைப்படுத்துதல் என்பதே தன்னிச்சையானதுதான். புத்தகங்களை விற்பவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எந்தப் பிரிவின் கீழ் கடையில் வைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்க மட்டுமே, நடைமுறையில் இத்தகைய வகைப்படுத்துதல் உதவும். காதல், நகைச்சுவை, திகில், சாகசம்/அதிரடி, உணர்வு என நம் சிந்தனைக்குட்பட்ட அனைத்துக் கருப்பொருள்களுடனுமே கனவுருப்புனைவு எளிதாக ஒத்துப்போகும் தன்மையுடையது. ஒரு கதையைச் சொல்வதற்கான வழியாகக் கனவுருப்புனைவு திகழ்கிறது, மற்றபடி, மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அது இயல்பாகவே உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.
பெரும்பாலான அறிவியல் புனைவுகளில் கடவுள் என்பவர் இருப்பதில்லை. எனவே, கடவுளின் இருப்பை அறிவியல் புனைவு மறுப்பதாக நம்மால் கருத இயலுமா?
குறிப்பிட்ட பதிலை எதிர்பார்த்துக் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. மேலும், இக்கேள்வியின் அடிப்படைத் தர்க்கத்தையே என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது; கடவுளின் இருப்பைக் குறித்த பார்வை வாசிக்கும் எழுத்தாளரையும் அவரது படைப்பையும் பொறுத்துள்ளது. எனினும், பலவாறான படைப்புகள் நம்மிடையே இருப்பதால், எந்தவொரு வகையான எழுத்தைக் குறித்தும் அத்தகைய பொதுப்படையான கருத்தை நம்மால் முன்வைக்க இயலாது.
கனவுருப்புனைவின் பொற்காலம் என்று எதைக் கருதுகிறீர்கள்? ஏன்?
கனவுருப்புனைவின் பொற்காலம் 1930களின் நடுப்பகுதியிலிருந்து 1960களின் நடுப்பகுதி வரை என்று கூகுள் சொல்லும். ஆனால், இத்தகைய வரையறுத்தலில் எனக்கு நாட்டமில்லை. கனவுருப்புனைவிற்கென பற்பல பொன்னான காலகட்டங்கள் இருந்துள்ளன, தொடர்ந்து இருக்கவும் செய்யும். அவற்றுள் சில ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும்; குறிப்பாக கனவுருப்புனைவின் அண்மைய பொற்காலம் எனப்படுவது 1990களின் பிற்பாதியில் தொடங்கி இந்நாள் வரை இருந்துவருவது; இக்காலகட்டத்தில் என்னுடைய பல எழுத்தாளர் நண்பர்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளதோடு அவர்களது படைப்புகளும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வாசகரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புகளின் இருப்பும் எண்ணிக்கையையும் பொறுத்துதான் பொற்காலங்கள் என்பது அமையும் என்பதால், அவை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மாறுபடும்.
நன்றி: வே.நி.சூர்யா
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…