நேர்காணல்: கவிஞர் சிரில் வாங்

3 நிமிட வாசிப்பு

அரூவில் வெளியான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது.
தமிழாக்கம்: ஹேமா


திரு. சிரில் வாங், சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்ற கவிஞர்களுள் ஒருவர். அவ்வப்போது புனைகதைகளை எழுதி வரும் இவர், Seoul Fringe Festival மற்றும் Hong Kong Fringe Club ஆகியவற்றில் பங்காற்றியிருக்கிறார். இவரது கவிதைகள் W. W. Norton மற்றும் Everyman’s Library வெளியிட்ட தொகுப்புகளிலும், Atlanta Review, Poetry New Zealand, Transnational Literature, Ambit உள்ளிட்ட பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. இவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை cyrilwong.wordpress.com இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

நாடகம் ஒன்றிற்குச் செல்லும் வழியில் டாக்ஸிக்காகக் காத்திருந்த சிரிலுடன் கஃபே (Café) ஒன்றில் அரூ இதழாசிரியர் ராமின் சிறு உரையாடல்.

ராம்: உங்களை முதன்முதலில் கவர்ந்த கனவுருப்புனைவு எது?

சிரில் வாங்: எனக்கு ஸ்டீபன் கிங் (Stephen King) எழுதிய அனைத்துத் திகில் கதைகளும் பிடிக்கும். நான் முதன்முதலாகப் படித்த பெரியவர்களுக்கான நாவல் ஸ்டீபன் கிங் எழுதிய ‘கேரீ’ (Carrie). என் வாழ்க்கையை முழுவதுமாய்ப் புரட்டிப்போட்டது அது! வளரும்போது நான் சந்தித்த பல முக்கிய சவால்களைப் பிரதிபலித்தது. அதன் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். ஓர் எழுத்தாளனாகும் ஆர்வத்தைத் தூண்டியது அந்தப் புத்தகம்தான். திகில் கதை எழுத்தாளனாகும் விருப்பத்தில் தொடங்கி, ஒரு கவிஞனாகிய எனது வாழ்க்கைப் பயணம் விசித்திரமானது. பயணத்தின் போக்கில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் வாழ்க்கை எனக்கு வேறுவிதமான திட்டங்களைக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.

ராம்: சிங்கப்பூரில் கனவுருப்புனைவின் நிலை என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

சிரில்: நிக்கி மோயி (Nicky Moey) சில நல்ல திகில் புத்தகங்களை எழுதியுள்ளார். சிங்கப்பூரில், ஸ்டீபன் கிங் பாணியில் அமானுஷ்யக் கூறுகளைச் சிறந்த முறையில் எழுதிய முதல் சில எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவர் கதைகள் Singapore Ghost Stories தொடரைப் போலத் தரமற்றவை அல்ல. நிக்கி மோயி இருத்தலியலையும், வளர்ச்சியையும் மையமாகக்கொண்டு இலக்கியச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கேத்தரின் லிம் (Catherine Lim) எழுதிய சில கதைகளும் ஓரளவுக்குக் கனவுருப்புனைவுத் தன்மை கொண்டவை. ஸ்டெல்லா கோன் (Stella Kon) எழுதிய சில கதைகளில் அறிவியல் புனைவிற்கான கூறுகள் இருக்கின்றன. இவையனைத்தும் என்னை ஒரு விதத்தில் செதுக்கின. சிங்கப்பூரைப் புதிய வெளிச்சத்தில் பார்க்கச் செய்தன.

ராம்: மேற்கத்திய கனவுருப்புனைவு மற்றும் சிங்கப்பூர் கனவுருப்புனைவுகளின் தனித்தன்மைகளாக எதை நினைக்கிறீர்கள்?

சிரில்: சிங்கப்பூரர்களாக ‘ஒரு தேசமாக நாம் யார்’ என்பதில் எப்போதும் நிச்சயமற்று இருக்கிறோம். வேறுபட்ட கலாசாரங்களின் கலப்பு, அதில் நாம் எப்படிப் பொருந்துகிறோம், பழமைவாதம் – அடையாளங்களுக்கிடையிலான அடையாளத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.

நமது கனவுருப்புனைவுகளுக்கு எப்போதும் ஓர் உள்நோக்குப் பார்வை இருக்கிறது. நமக்குப் பொருந்திப் போகும் உலகத்தையே நாம் கற்பனை செய்கிறோம். மேற்கத்தியர்கள் ஏற்கனவே தங்கள் பார்வையை விண்வெளியை நோக்கித் திரும்பிவிட்டார்கள். அவர்கள் வேற்றுக்கிரக மனிதர்களையும், மாற்றுப் பிரபஞ்சங்களையும் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னமும் அவ்விடத்தை அடையவில்லை. நம் அடையாளத்தின் மீதான நம்பிக்கையும் உறுதியும் இல்லாத காரணத்தால், இணை காலவெளிகளையும், மாற்று அண்ட உயிரினங்களையும் அவ்வளவாக கவனத்தில் கொள்வதில்லை.

“நான் யார்? ஒரு சீனராக, மலாய் இனத்தவராக, பிலிப்பினோவாக இருப்பதென்றால் என்ன? பாலினச் சிறுபான்மையினத்தில் ஒருவராய் இருப்பதென்றால் என்ன? என் நாட்டில் மனிதனாக இருப்பதென்றால் என்ன? இன்னமும் இது போன்ற கேள்விகளே நம்மை அதிகம் பாதித்தபடி இருக்கின்றன.

ராம்: கனவுருப்புனைவுகளில் மனயெழுச்சியையோ அல்லது சலனத்தையோ ஏற்படுத்தக்கூடிய போக்கு ஏதேனும் தென்படுகிறதா?

நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும்.

சிரில்: சலனத்தை ஏற்படுத்தக் கூடிய போக்கு கனவுருப்புனைவுகளுக்குள் இருப்பதாகத் தோன்றவில்லை. அது, கனவுருவின் கூறுகளைக்கொண்ட சில குறிப்பிட்ட வகை எழுத்துகள், பிற எழுத்து வகைகளைவிட எப்படி மேலோங்கியும், முந்திச் செல்வதுமாகவும் இருக்கின்றன என்பதில்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சிறிதளவில் காலவெளிப் பயணம் மற்றும் அரைகுறை கனவுருப்புனைவுக் கூறுகளை உள்ளடக்கிய பின்நவீனத்துவ நாவல்களை எழுதுவது, பிரபலமான சமகாலப் போக்காக இருக்கலாம். இதனால் அகநோக்குப் பார்வை கொண்ட குடும்பம், வரலாறு, மற்றும் கனவுருப்புனைவு அல்லாத எழுத்துகள் புறம் தள்ளப்பட்டுவிடுகின்றன. இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும். இவை எழுத்தாளர்களின் ஆதர்ச போக்காகிவிடும் என்பதே என் பயம்.

ராம்: இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன?

சிரில்: எப்போதும் தற்போதைய நடப்பின்மீதே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிங்கப்பூரின் தேவைக்கேற்ப, நிகழ்பொழுது என்பதற்கு என்ன அர்த்தமாயிருந்தாலும் சரி! இது, கடந்த காலத்தை முழுமையாக வாழ்ந்ததால் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் உதறிவிட்டு, எப்பொழுதும் நிகழ்கணத்தையே உற்று நோக்குவதாய் இருக்கிறது. நமது வரலாற்றின் முழுமையை அங்கீகரிப்பதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வேதனைகளையும், மன எழுச்சிகளையும் நாம் நமது எழுத்துகளில் கொண்டுவருவதில்லை. எப்பொழுதும் தொடர்ச்சியற்ற சிந்தனைகளுடன், அமைதியின்றி எதிர்காலத்தைப் பார்த்தபடி இருக்கிறோம் அல்லது விஷயங்களை மேலோட்டமாய்க் கடந்து செல்கிறோம். நமது கடந்தகாலத்தை நாம் திரும்பியே பார்ப்பதில்லை. பொதுவாய் சிங்கப்பூரில் இருக்கும் எழுத்துகளைப் பற்றிய இந்தப் பயம் எனக்குள் இருக்கிறது. எது நம்மை மனிதனாய் வைத்திருந்தது என்பதைப் பற்றி இப்பொழுதெல்லாம் நாம் யோசிப்பதே இல்லை.

ராம்: வளர்ந்து வரும் கனவுருப்புனைவுச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சிரில்: படைப்பூக்கமுள்ள எழுத்துகளை மட்டுமல்லாது அனைத்து வகை எழுத்துகளையும் படியுங்கள். உங்கள் கருத்துகளுக்கு ஒத்து வராத தத்துவார்த்த எழுத்துகளைப் படியுங்கள். உங்களை அதிகச் சினம் கொள்ள வைப்பவற்றையும் படியுங்கள். மிக மிக மட்டமான திரைப்படங்களைப் பாருங்கள். உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடிய, உங்களை புண்படுத்தக்கூடிய அனைத்தையும் ரசித்து அனுபவியுங்கள். உச்சக்கட்ட உணர்வுகளின் எல்லைகளுக்குச் சென்று திரும்பும் இடைவெளியில் எங்கோதான், படைப்பாற்றலின் ஆதிப்புள்ளி இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்