Categories: சிறுகதை

நீல நிறக் கண்கள்

16 நிமிட வாசிப்பு

கடுவன் காடு / கடுவன்

‘கடுவன் காடு தெங்குலூங் மலையோடு சேர்ந்து விரிந்து பத்து டுவா, பத்து தீகா, பட்டாணி வயல், செலாயாங், ஹூத்தான் திங்கி, மலாயா லாமா என்கிற பகுதிகளைச் சுற்றி அடர்ந்திருக்கும் பெருங்காடு. 2018 ஆம் ஆண்டில் மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தான பகுதி என்று அரசால் அறிவிக்கப்பட்டு சுற்றி இராணுவப் படைகளும் பாதுகாப்பு அரண்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.’

2016 ஜூன் 20

இடப்பக்கம் தெரிந்த வெட்டுமரக் காட்டைக் கடந்தால்தான் துரைசாமி மாமாவை நெருங்கிச் செல்ல முடியும் என்ற முடிவுக்கு வேல்முருகன் வரும்போது மரத்திலிருந்த சாம்பல்நிற மரகதபுறாக்கள் சட்டென சடசடத்துக்கொண்டே பறந்தன. காட்டுக்குள் இரண்டு மணி நேரம் நடந்து ஆற்றைக் கடந்து நீண்டு வளர்ந்திருந்த ஒரு தடித்த வெட்டு மரத்தின் ஓரம் எல்லோரும் உட்கார்ந்துவிட்டோம். சூரியன் தெரியாத ஓர் அடர்ந்த வனத்தின் மடியில் இருக்கிறோம் என்று மட்டும் தெரிந்தது. தவளையின் பெருங்கூச்சல் விட்டுவிட்டு ஒலித்துக் காட்டை அசைத்துக் கொண்டிருந்தது. தூரத்தில் தெரிந்த காட்டு மரத்தில் ஓராங் ஊத்தான் ஒன்று ஏறி, எங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் இறங்கி எங்கோ ஓடியது. அநேகமாக ஆற்றோரம் இருந்த கொட்டை வாழைகளைக் குறி வைத்து அது அங்கு வந்திருக்கலாம் என்று வேல்முருகனின் நண்பன் ஒருவன் சொன்னான். “ஓராங் ஊத்தான் மண்டைல ஒரு காடு பத்தி எல்லாம் விசயமும் இருக்கும்… எப்போ எங்கோ பழம் காய்க்கும்னு அதுங்களுக்குத் தெரியும்!” என்று எங்கோ இந்தக் காட்டில் கரைந்து கொண்டிருக்கும் துரைசாமி மாமாவின் குரல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

“இந்த வெட்டுமரக் காட்டெ தாண்டினா மலை அடிவாரம்… அந்த மலை எங்க எப்படிப் போகும்னு தெரில…” என்று வேல்முருகன் கருமையடைந்து கொண்டிருந்த மலைக்காட்டைப் பார்த்தான். அப்பொழுதுதான் மாமா காணாமல் போயிருக்கக் கூடாது என்று அழுத்தமாகத் தோன்றியது.

அன்று மதியம் துரைசாமி மாமாவைக் காணவில்லை என்றதும் பகீரென்றிருந்தது. அவர் அத்தனை எளிதாகக் காணாமல் போகக்கூடியவர் அல்ல. சாதாரணமான ஒரு காலையில் வரும் நாளிதழ் செய்தியைப் போல, பக்கத்து வீட்டு அக்கா வந்து அம்மாவிடம் சொல்வதாக நினைத்து, வீட்டின் உள்ளே ஒருமுறை கத்திவிட்டுப் போனார். முதலில் எழுந்து உட்கார்ந்தேன். சட்டென எதனையும் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டிற்குள் அழைத்துப் போகிறேன் என்று அவர் கொடுத்த உற்சாகத்தில்தான் இன்று வேலைக்கும் போகவில்லை.

துரைசாமி மாமா காட்டில் வேலை செய்கிறார் என்று மட்டும்தான் தெரியும். என்ன வேலை செய்கிறார் என்றெல்லாம் நான் கேட்டதில்லை. பகல் பொழுதெல்லாம் உறங்கிவிட்டு மாலையில்தான் தன்னுடைய ஹொண்டா 70-யை எடுத்துக்கொண்டு காட்டை நோக்கிப் புறப்படுவார். அதுவொரு மலாய்க்காரர் தோட்டத்து வழியாகப் போகும் ஒற்றையடிப் பாதை. சுற்றிலும் வயல்வெளி விரிந்திருக்கும். எங்கள் வீட்டின் சந்தின் வழியாக அப்பாதைக்குச் சென்ற பின், சுமார் இரண்டு நிமிடமாவது துரைசாமி மாமாவின் மோட்டார் சத்தம் கேட்கும். அது மறையும் சமயம் மாமா காட்டை நோக்கி வெகுதூரம் சென்றுவிட்டார் என்று புரிந்துகொள்வேன். அதேபோல அவருடன் ஒரு நாள் அக்காட்டிற்குள் நுழைந்து நமக்காக அங்குக் காத்திருக்கும் அதிசயங்களைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த இவ்விரண்டு நாள் எண்ணங்கள் எல்லாம் அன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. முகத்தைக் கழுவிவிட்டு வெளியில் வந்தேன். துரைசாமி மாமாவின் வீட்டிற்கு வெளியில் ஒரு சிறு கூட்டம். வேலைக்கு அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த சிலர் மாமாவின் வீட்டுக்கு வெளியிலிருந்து ஆர்வத்துடன் உள்ளே எக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

துரைசாமி மாமா யாரிடமும் அவ்வளவாக பேச்சு வைத்துக்கொள்ள விரும்பாதவர். அவருக்கு நண்பர்கள்கூட கிடையாது. எப்பொழுதாவது பினாங்கிலிருந்து ஓர் ஆள் வந்து மாமாவைப் பார்த்துவிட்டுப் போவார். மற்ற நேரங்களில் துரைசாமி மாமா தனியாகத்தான் இருப்பார். அவருடைய பகல் பொழுது எனக்கு நன்றாகத் தெரியும். தூங்கி மட்டுமே கழிப்பார் அல்லது வீட்டின் பக்கத்தில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி அமைதியாக உட்கார்ந்திருப்பார். அதிகாலை ஐந்து மணியைப் போல காட்டிலிருந்து ஒரு சத்தம் மெதுவாகப் புறப்பட்டுக் காட்டுக் குயில்களின் கூவுதல் போன்று ஒலித்துப் பின்னர் நெருங்க நெருங்கக் கறாராக மாறும். எங்கோ கனவில் யாரோ ‘ஹார்ன்’ அடிப்பதுபோலக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்துகொள்வேன். அப்பொழுதெல்லாம் மாமாவின் மோட்டார் சத்தம் வெளியில் கேட்கும். காட்டிலிருந்து அவர் வீட்டிற்கு வந்துவிட்டார் என்பதன் சமிக்ஞை அது.

வேலை இல்லாமல் வீட்டிலேயே கிடந்த பல நாட்கள் மாமா காட்டுக்குச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொள்வேன். எனக்குத் தெரிந்து ஐந்தாம் ஆண்டு படிக்கும்போது ஒரேயொரு முறை கிய்யோங் தோட்டத்துக்கு அருகில் இருந்த காட்டின் வாயில்வரை செல்ல வாய்ப்பு கிட்டியது. அதுவும் அறிவியல் ஆசிரியர் தாவரங்கள் பறிப்பதற்காக அங்கு அழைத்துச் சென்றார். பெரும்பாலும் செம்பனை மரங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எங்கோ சில இடங்களில் மட்டும் ரம்புத்தான், கொய்யா மரங்களைப் பார்க்க முடிந்தது. அவையும் கிழட்டு மரங்களாக வெறும் காய்ந்த இலைகளுடன் காட்சியளித்தன. காட்டைப் பற்றிய வேறெந்த நினைவுகளும் மனத்தில் இல்லை. எனக்கு மூன்று வயது இருக்கும்போதே தோட்டத்திலிருந்து வெளியேறிவிட்டதாக அப்பா சொல்லியிருக்கிறார். கண்களை மூடிப் பார்க்கிறேன். அச்சிறுவயதில் ஏதோ வழவழப்பான ஒன்றிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்ததாக ஒரு நினைவு மட்டும் குற்றுயிராய் ஞாபக அடுக்கில் அசைந்து கொண்டிருக்கின்றது. அந்த விழுதல் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஓர் அதிர்ச்சியும் பயமும் மனத்தை அழுத்துகின்றன. எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்நினைவும் கீழே தவறி விழலாம் என்பது போலிருந்தது.

“மாரியாத்தா உனக்கு என்ன அவ்ள கோபம்… என் புருசன கொண்டு போய்ட்டீயா?” என்று அத்தை திடீரென கத்திக்கொண்டே வெளியில் வந்தார். மாமா வீட்டிலிருந்து ஒரு சாலையைக் கடந்தால் மாரியம்மன் கோவில். அத்தையை அங்கிருந்த சில பெண்கள் பிடித்து நிறுத்தினர். அவர்கள் மேல் சாய்ந்து அப்படியே தரையில் விழுந்தவரை அம்மாதான் தூக்கி மடியில் படுக்க வைத்தார். “யாராவது கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க!” என்று அம்மா கத்தும்போதுகூட எனக்குத் தூரத்தில் மாமாவின் மோட்டார் சத்தம் கேட்காதா என்று தோன்றியது.

***

காலையில் நாங்கள் எல்லோரும் எழுந்துகொள்ள மாமாவின் மோட்டார்தான் முதல் சத்தத்தை எழுப்பும். அதிகாலை இரவுக்கு ஒரு சத்தம் உண்டு. பூச்சிகளின் சத்தமும், பனியின் ஓர் ஏகாந்தமான நகர்வும் இணையும் புள்ளி அது. பனியும் காற்றும் சேர்ந்து காட்டின் மௌனத்தை அசைக்கும் நேரம். அப்பொழுதுதான் காடு விநோதமான சலசலப்பை உண்டாக்கும். மலாய்க்காரத் தோட்டத்தின் ஊடாக காட்டின் அந்த ஏகாந்த ஓசையைக் கேட்க முடியும். காற்றோடு உரசித் தேய்ந்து எழும் கெக்கெரிப்பு. காலைப் பனியின் குளிரில் மிச்சமாய் எங்கோ காட்டின் சத்தம் ஒட்டிக் கொண்டிருக்கும். அதனை நுகர்ந்த கணமெல்லாம் காட்டின் மீதான ஒரு பிரமிப்பு அதிகரிக்கும். அதுவும் துரைசாமி மாமாவின் மீது எப்பொழுதும் வீசும் ஒரு விதமான நெடிக்குள் ஒரு காடு இருப்பதாகவே கற்பனை செய்துகொள்வேன். காட்டைப் பற்றியே பிதற்றும் மாமாவின் கண்களில் நீலம் பூத்திருக்கும். பூனைக் கண்கள் என்று சொல்வார்கள். அந்தக் கம்பத்திலேயே அவருக்கு மட்டுமே இருக்கும் நீலநிறக் கண்கள்கூட அவரைத் தனிமைப்படுத்தியிருக்கலாம்.

“ஆமாம்… அவன் காட்டுக்குள்ள என்ன வேலை செஞ்சான்னு யாருக்காவது தெரியுமா?” என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கேட்டார். அதுவரை மாமாவின் மீது அக்கறைப்படாத பலரும், அக்கேள்வியின் மீது பாய் விரித்துப் படுத்து உருண்டு கொண்டிருந்தார்கள். அத்தை அரைமயக்கத்தில் இருந்ததால் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் அதனைக் கேட்டதில்லை என்பதால் மௌனம் சாதித்தோம்.

“எப்பவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துருவாப்புல… நேத்துலேந்து வரலே… இன்னிக்கும் பத்து பதினொன்னு மணி தாண்டியும் வரல. ரெண்டு மூனு பேரு உள்ள கொஞ்ச தூரம் போய் பார்த்தாச்சு… எங்க எந்தப் பாதைல எப்படிப் போறதுனு யாருக்கும் தெரில… என்னா காடோ இது? அதான் வேல்முருகன் வரட்டும்…” என அதுவரை மாமாவின் வீட்டின் முன் இருந்த சாய்க்கப்பட்டத் தோம்பில் அமர்ந்திருந்த கட்டை ரவி சத்தமிட்டார். அவருடன் சில இளைஞர்கள் அயர்ச்சியுடன் நின்றிருந்தனர். அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு முகமெல்லாம் வாடிக் காட்சியளித்தனர். ஒருவன் கால் மேல் காலிட்டுக்கொண்டு அணிந்திருந்த செருப்பை ஆட்டிக் கொண்டிருந்தான். பாதத்தில் புற்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

“இந்தப் பக்கமாதான் போவாக… ஆனா எங்கப் போவாகன்னு யாரும் பார்த்ததில்லயெ… தோ… அந்தச் சிவா பையனுக்கு ஏதாச்சம் தெரியுமான்னு கேட்டுப் பாருங்க…” என்று கட்டை ரவி என்னைக் கைகாட்டினார். நான் தலையை மட்டும் இல்லை என்கிற சமிக்ஞைக்காக ஆட்டினேன்.

“உன் புருசன காட்டுப் பூதம் தூக்கிட்டுப் போய்ருக்கும்டி. அது காட்டுக்குள்ள யார்னாலயும் கண்டுபிடிக்க முடியாது… நெறம் மாறி இலையல ஒளிஞ்சிக்கும்… மரத்தோடு மரமா ஆயிக்கும்… நாங்க முன்ன மரம் வெட்டும்போது அந்த மாதிரி ஆளுங்க காணாம போய்ருக்காங்க… அதுக்கல்லாம் காரணம் அந்தக் காட்டுப் பூதம்தான்…” என்று துரைசாமியின் பாட்டி நல்லம்மா சொன்னபோது, அனைவரும் கேலியுடன் அவரைப் பார்த்தனர். நல்லம்மா பாட்டி முன்பு வீட்டிலேயே விளக்கண்ணெயைத் தயாரித்து விற்றவர். ஆமணக்கு மரத்தைத் தேடிக் காட்டுக்குள் நுழையும் கூட்டத் தலைவி என்று துரை மாமா சொல்லியிருக்கிறார். “எங்க பாட்டி காட்டுக்குப் பயந்தவ இல்லடா… காட்டெரும மாதிரி வெளக்கண்ணெ மரத்தெ தேடி உள்ள திமிறிக்கிட்டு ஓடுவா… இதுவரைக்கும் நான்கூட அந்த ஆமணக்கெ பாத்ததில்ல…” என்று அவர் சொல்லும்போது முகமெல்லாம் மாறும்; நீலக்கண்கள் மலரும்.

“எந்தக் காலத்துலெ இருந்துகிட்டு இந்தக் கெழவி பேய் பூதம்னு சொல்லுது…” என்று கட்டை ரவி சத்தமாகவே நொந்துகொண்டார். யாருக்கும் நல்லம்மா பாட்டியின் வயது தெரியாது. எப்படியும் நூறைத் தாண்டியிருக்கலாம். அவருக்கேகூட அது நினைவில் இல்லை. கட்டை ரவியைப் பார்த்து முறைக்கும்போது, அவருடைய இரு தொங்கிய காதுகளும் இலேசாகக் குலுங்கின. “காட்டைப் பழிக்காதீங்கடா! காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…” பாட்டி முனகிக்கொண்டே எழுந்து வளைந்து தொங்கும் தன் உடலைத் தூக்கிக்கொண்டே உள்ளே போனார். பாட்டி வைத்திருந்த பெரிய சைக்கிள் சங்கிலி அறுந்து வட்டயங்கள் வெடித்து, உடல் துருபிடித்து வீட்டின் ஓரம் ஒரு மூலையில் சாய்ந்து கிடந்தது. பாட்டி காட்டுக்குள் போகப் பயன்படுத்தும் சைக்கிள் அது. கைலியைக் குறுக்காக இழுத்து வேட்டியைப் போல மடித்துக் கட்டிக்கொண்டு மலைக்காட்டிற்குள் போனால், திரும்ப அரைநாள் ஆகும். வரும் வழியில் பல மூலிகைச் செடிகளையும் கொண்டு வருவார். அவை எங்கு எப்பொழுது விளையும் என்றும் நல்லம்மா பாட்டிக்கு மட்டுமே தெரியும்.

“காட்டைப் பழிக்காதீங்கடா! காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…”

எங்கள் வீட்டிலிருந்து பிரிந்து போகும் நீண்ட காட்டுப் பாதையைப் பார்த்தேன். இந்த இடம் நாங்கள் வரும்போதே வெட்டவெளியாக அழிக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது. ஒரு கடை வரிசை கட்டப் போவதாக அறிவிப்புப் பலகையும் நடப்பட்டிருந்தது. வெட்டவெளிக்கு அப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வயல்வெளி. அதையும் தாண்டி தூரத்தில் மிகச் சிறியதாகத் தெரியும் காடு. அதற்கும் அப்பால் மெல்ல மேலேறிப் படரும் ஓர் அடர்ந்த மலை.

“சரி இந்தப் பையனுங்க திரும்பியும் காட்டுக்குள்ள போய் தேடுறானுங்களாம்… டத்தோ சாமிகிட்ட அனுமதி கேட்டுட்டுப் போகட்டும். இந்தத் தடவெ மாட்டலாம்… டேய் சிவா நீயும் இவனுங்ககூட போய்ட்டு வா. நீதானெ துரைக்கூட இருப்ப… உன்னால அவரெ கண்டுக்க முடியும்… உங்கப்பன்கிட்ட நான் சொல்லிக்கறன்,” என்று கட்டை ரவி சொன்னதும், துரை மாமா காணாமல் போய்விட்டார் என்கிற சோகத்தைக் கடந்து ஒரு துள்ளல் மனத்தில் கிளைத்தெழுந்தது. முதல்முறை காட்டிற்குள் நுழையும் ஒரு மகா வாய்ப்பு. எதையோ காத்திருந்து தரிசிக்கப் போகும் தருணம். அம்மாவைப் பார்த்தேன். அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. மறுக்க மாட்டார் என்று புரிந்துகொண்டு, உடனே வீட்டிற்குள் நுழைந்து, நீட்டுக் கைச் சட்டை, நீண்ட காற்சட்டை, தோலில் சிராய்ப்புகள் ஏற்படாமல் இருக்க தடிமனான ஜீன்ஸ் காற்சட்டை எனக் காட்டுக்குத் தகுந்த மாதிரி உடையை மாற்றிக்கொண்டு, அப்பாவின் பெரிய காலணியை அணிந்துகொண்டேன். வெளியில் வருவதற்குள் அந்த இளைஞர்கள் கூட்டம் மோட்டாரில் தயாராக இருந்தது.

வேல்முருகனின் மோட்டாரில் ஏறிக்கொண்டேன். உடும்பு வேட்டையில் பெயர்போனவன். அவனிடம் இருக்கும் நாய்கள் அத்தனை எளிதில் எங்கும் கிடைக்கக்கூடியவை அல்ல. அவற்றின் தோற்றமே அச்சுறுத்தும். பற்கள் கூரில் சிறு வளைவுடன் எதிரியின் சதையைக் கொக்கிட்டுக் குத்திக் கிழிக்கும் ஆக்ரோஷத்துடன் காணப்படும். உடும்பு, பன்றி வேட்டைக்காகவே அவற்றையெல்லாம் வளர்த்து வருகிறான். துரை மாமாவிற்கு அடுத்து, அடிக்கடி காட்டுக்குள் போய் வருபவன் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனோடு காட்டுக்குள் போவது பெருமையாக இருந்தது. அவன் தோள்பட்டைகளைப் பற்றும்போது ஏதோ மரத்தின் வன்தண்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் பாதுகாப்புணர்வைக் கொடுத்தது. துரைசாமி மாமாவின் தோள் பட்டைகள் உறுதியிலும் உறுதி. கொஞ்சம்கூடக் குழைவுத்தன்மை இல்லாதவை. முன்பு அதில் என்னைத் தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டினோரம் இருந்த மரத்தில் ரம்புத்தான்களைப் பறிக்க விடுவார். மரத்தின் மீது ஏறி மரத்தை அடைவதைப் போல இருக்கும்.

***

ஒருவேளை அவர் காட்டுக்குள் தியானத்தில் இருந்துவிட்டாரோ என்றுகூட மனத்தில் ஒரு பொறி தட்டியது. “காலை நல்லா மண்ணுல புதைச்சிக்கிட்டு கைகள மேல்நோக்கி கூப்பி வச்சுக்கிட்டு கண்ண மூடி மலை உச்சியெ நினைச்சிக்கணும்டா… திருவாட்சி மரத்த மனசுல நினைச்சிக்கிட்டா தியானம் கெடாது… தியானம்னா இப்படிச் செய்யணும். சும்மா ஒரு நாலு ரூம்புக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு லைட்டெ பாரு வெளிச்சத்தெ நடுவுலெ கொண்டு வான்னா அது தியானமாடா?” என்று துரைசாமி மாமா சொன்னபோது எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவர் வீட்டின் ஓரம் எப்பொழுதும் காடு தெரியும் திசையைப் பார்த்தவாறு கைகளை மேல்நோக்கி கூப்பியபடி கால்களை மண்ணுக்குள் புதைத்து நின்றிருப்பார். கண்கள் திறந்திருக்கும். எங்கோ தூரத்தில் தெரியும் மலையை நிலைக்குத்திப் பார்த்திருக்கும். எவ்வளவு நேரம் அப்படி நிற்பார் என்று தெரியாது. நானே கவனித்துச் சலித்து உள்ளே போய்விடுவேன். ஆனால், மாமா பல சமயங்களில் அங்கேயே அசையாமல் நின்றிருப்பார். தூரத்தில் தெரியும் மலையைப் பார்ப்பேன். என்னை ஒன்றுமே செய்யாத அக்காட்சி மாமாவை என்ன செய்கிறது என்று அறியவே முடிந்ததில்லை.

தியானம்னா இப்படிச் செய்யணும். சும்மா ஒரு நாலு ரூம்புக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு லைட்டெ பாரு வெளிச்சத்தெ நடுவுலெ கொண்டு வான்னா அது தியானமாடா?

வேல்முருகன் மோட்டாரை டத்தோ சாமி கோவிலிடம் நிறுத்தினான். ஒரேயொரு ஒற்றை எட்டி மரம். திறந்தவெளியில் அநாதையாக நின்றிருந்தது. சிறிய பலகைத் தடுப்பு அம்மரத்தோடு வைத்துக் கட்டப்பட்டிருந்தது. சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்த டத்தோ சாமி கோவிலின் தகரத்திற்கு மேலே ஒரு கைலியும், வெள்ளை நிறச் சட்டையும், குல்லாவும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்த்தால் டத்தோவே நிற்பதைப் போலத் தெரிவதற்காக அப்படிச் செய்யப்பட்டிருக்கலாம்.

ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்துவிட்டு வேல்முருகன் மண்டியிட்டு வேண்டினான். சடாரென உடன் இருந்த வேல்முருகனின் நண்பன், நாக்கைப் பல்லுக்கிடையில் வைத்து எச்சிலை உள்ளிழுத்துக்கொண்டு கண்களை உருட்டியவாறு கத்தினான். “டத்தோ சாமி இறங்கிட்டாரு… ஐயா! எங்க ஊர்ல ஒருத்தரு காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டாரு. நீங்கத்தான் உள்ள போய் நல்லபடி தேடிட்டு வர அருளணும்யா!” என்று கைகளைக் கூப்பியவாறு வேல்முருகன் அருள் வந்தவனிடம் கெஞ்சினான். நான் பார்த்து அப்படி அருள் வந்தது அம்மாவுக்கு மட்டும்தான். அதுவும் தைப்பூசத்தில் பால்குடம் ஏந்தி நிற்கும்போது கண்களை மூடிக்கொண்டு ஆள் இருப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அம்மா ஆடுவார். ஆனால், இங்கே அந்த இளைஞன் கண்களை உருட்டிய விதம் அச்சத்தைக் கூட்டியது. வேல்முருகன், அவன் நெற்றியில் திருநீறை வைத்து அடக்கினான். சோர்ந்து அப்படியே அவன் மடியில் விழுந்தவன், உடனே எழுந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி ஏதும் நடவாததைப் போல டத்தோவைப் பார்த்து வணங்கினான். அங்கிருந்த ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து மோட்டாரின் வக்குளில் வைத்துவிட்டு வேல்முருகன் காட்டுக்குள் நுழையத் தயாரானான். டத்தோ சாமியைப் போலத் தெரிந்த அந்த உடையை அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் மோட்டார் அவ்விடத்தை விட்டு வலதுபக்கம் வளைந்து தூரத்தில் தெரிந்த மரக்காட்டை நோக்கி நகர்ந்துவிட்டது.

“சிவா! காடு அம்மா மாதிரி… நீ உள்ளுக்குப் போகும்போதே உன் உடம்பு சொல்லும்… சூடு குறைஞ்சி ஜில்லுன்னு தோணும். அப்போ மனசும் குளிரும். அம்மாவோட கருவறைக்குள்ள போற மாதிரி இருக்கும்டா… கிடைக்குமாடா இந்த மாதிரி!” துரைசாமி மாமா சொன்னது என் உடலில் நான் உணர்ந்த ஒரு வீநோதமான மாற்றத்திற்குப் பிறகே சட்டென மனத்தில் ஒலித்தது. பெரிய தோற்றத்துடன் தெரிந்த மழைக்காட்டு மரங்கள் நிரம்பிய ஒரு காட்டின் எல்லைக்குள் நுழைந்திருந்தோம். காற்றில் அசையாமல் என்னையே சூழ்ந்து நோக்கிக்கொண்டிருந்த அம்மரங்கள் மிக உயரமான தோற்றத்தில் நிதானமாகத் தெரிந்தன. காடெங்கிலும் குளிர்ந்த இருள் பரவியிருந்தது. பச்சிலை வாடை எங்கும் வீசிக்கொண்டிருந்தது. மண் சொதசொதப்பாக இருந்ததால் மோட்டாரின் வட்டையங்கள் பலமுறை சுழன்று சுழன்று சேற்றைப் பீய்ச்சியபடித் தடுமாறிக் கொண்டிருந்தன. என் சட்டையின் பின்பக்கம் சேறால் முழுவதும் நனைந்து கொண்டிருந்தது. சேறடித்து விளையாடும் ஓர் ஐந்து வயது பையன் போல மாறிக் கொண்டிருந்தேன். அப்படியே மோட்டாரிலிருந்து தாவிக் குதித்துக் கத்திக்கொண்டே காட்டிற்குள் ஓட வேண்டும் என்று தோன்றியது. வேல்முருகனின் தோள் பட்டை ஞாபகம் அவ்வெண்ணத்தைத் தடுத்தது. வேட்டை நாயைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள் ஓடுவது எல்லோராலும் செய்ய முடியாது. துரை மாமா வளர்த்த நாயின் ஞாபகம் கொஞ்சம் நினைவில் இருந்தது.

“கை மரத்துப் போயிரும்டா. சங்கிலியெ பிடிச்சிக்கிட்டு அது காட்டும் எடத்துக்குக் கூடவே ஓடணும். வெறிப் பிடிச்சி பண்டியெ தேடிக்கிட்டு ஓடும். அதுக்கூட ஒரு மிருகம் மாதிரி நானும் வெறிப்பிடிச்சி ஓடுவென். ஒரு புலி உறுமுற சத்தத்த நாய்ங்கக்கிட்ட அப்பொ நீ பாக்கலாம். அதுக்கு சமமா நீயும் உறுமணும்… கடுவன் நாயெ இங்க வச்சிருக்கறெ ஒரே ஆளு நாந்தான்… அதுக்கு நிகரா நீயும் மாறலைனா உன் மேல அது பாஞ்சி தாக்க ரொம்ப நேரம் பிடிக்காது… நீயும் நாயாய்டணும்… கடுவனுக்கு அதான் பிடிக்கும்…”

வேட்டையாடுவதில் வேல்முருகனுக்கு முன்பே துரைசாமி மாமா கம்பத்தில் புகழ்பெற்றவர். தீபாவளி நெருக்கத்தில் உடும்பும் பன்றியும் நிறைய தேவைப்படும். நாயை மோட்டாரில் வைத்துக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் போவார். இப்பொழுதும் அதுவொரு விளையாட்டைப் போலத்தான் என் நினைவில் மிச்சமிருக்கிறது. வேல்முருகனின் மோட்டார் வக்குளில் நாய்ச் சங்கிலியைப் பார்த்ததும், ஒருவேளை அதை என் கழுத்தில் கட்டிவிட்டுக் காட்டுக்குள் துரைசாமி மாமாவைத் தேடி ஓடச் சொல்வார்களோ என்று பயமாகவும் இருந்தது. வேல்முருகனோ மாமாவோ காட்டுக்குள் பன்றி வேட்டைக்குக் கூட்டிச் செல்லும் ஒரு வேட்டை நாயைப் போலக் காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எகிறிப் பாய்ந்து காட்டின் மகா இரகசியத்திற்குள் குதிக்க வேண்டும் என்கிற வெறி கூடிக்கொண்டே வந்தது. நெல்லி மரங்கள் சூழ்ந்திருந்த இடத்தில் மோட்டாரை நிறுத்திவிட்டு இனி நடந்துதான் போயாக வேண்டும் என்று வேல்முருகன் சொன்னதும், துள்ளலுடன் கீழே இறங்கினேன். கால்கள் சில்லிட்டன. கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூத்த நெல்லிக்கனிகள் பாதை நெடுகச் சிதறிக் கிடந்தன.

“பாத்து நடங்கடா… பாதையிலே நடங்க… ஓரத்துக்குப் போவாதிங்க… பண்டிக்குக் நரம்புலெ கன்னி வச்சிருப்பானுங்க… மரம் வளைஞ்சி நிண்டா அதெ பாத்துக்குங்க… மிதிச்சிறாதீங்க…” என்று வேல்முருகன் சொல்லிவிட்டுக் கவனமாக காட்டுக்குள் நடந்தான். காட்டுப் பன்றியின் கால் தடங்கள் நிறைந்திருந்தன. எந்நேரத்திலும் புதருக்குள்ளிருந்து அவை பாய்ந்து வந்து விரட்டலாம் என்கிற அச்சம் தொற்றிக்கொண்டே வந்தது. காட்டுப் பன்றிகள் ஆக்ரோஷமான தாக்குதல் வெறி கொண்டவை. ஓடி ஒளிவதற்குள் தாக்கிவிடும் வேகம் கொண்டவை. புதர் மெல்ல அசைந்தது. ஒருவேளை காட்டுப் பன்றி எதிர்வேட்டைக்குத் தயாராகிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.

***

வானத்தை மூடி மறைத்திருந்த நீர்நொச்சி மரங்கள் தூரத்தில் நீரோட்டம் வரலாம் என்று நினைவூட்டின. நினைத்ததைப் போல ஒரு நீர்வீழ்ச்சியை வந்தடைந்தோம். அத்தனை கோபத்துடன் பாறைகளை மோதி உடைந்து, காட்டாற்றைப் போல எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. அதைக் கடக்க முடியாது என்று மட்டும் தெரிந்தது. “இதுக்கு மேல நாங்க போனதில்ல. வேட்டைக்கு வர்றவங்களோட எல்லை இவ்ளதான். இதுக்கு மேல போனா மலைக்குப் போகலாம்… உங்க மாமா மலையெ பத்தி ஏதாச்சம் சொல்லிருக்காரா?” என்று வேல்முருகன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

“அந்த அருவிதான் எல்ல… அங்கயே ஒரு நாளு இருந்து பார்த்தா சரியா விடியகாலைல நாலு மணிக்கு அதுங்க இறங்கி வந்து குளிக்குங்க… சத்தம் போட்டாம பாக்கணும். ஒரு எல அசைஞ்சாலும் அதோடு உனக்கு சாவுத்தான் தெரியுமா? மலைக்கன்னிகள் தேவதைங்க மாதிரி… உனக்கும் எனக்கும் தெரியாத எத்தனயோ மலைக்காட்டு மரங்கள் ஒவ்வொன்னும் தேவதைங்கடா… காலைல மனுசன் ரூபம் எடுத்து அருவிக்கு இறங்குங்க…” என்று துரைசாமி மாமா முன்பு எனக்குச் சொன்னதை இப்பொழுது சொன்னால் அநேகமாக வேல்முருகனிடம் எனக்கு உதை விழலாம். ஆற்றைப் பார்த்தேன். விழுந்தால் உயிர் மிஞ்சாது என்பதால் மாமா சொன்ன மலைக்கன்னிகள் பற்றி வாயைத் திறக்கவில்லை.

“இந்த ஆறுதான் ஏதோ மலையோடெ எல்லைன்னு சொல்லிருக்காரு… அவ்ளதான் எனக்குத் தெரியும்ணே,” என்று நான் சொன்னதும் நினைத்தபடியே வேல்முருகன் என்னைப் பார்த்து முறைத்தான். காட்டுச் செடிகள் ஆற்றினோரம் ஆற்றோட்ட நீரில் ஊசலாடிக் கொண்டிருந்தன. அதன் வாழ்நாள் முழுவதும் நீரோடு போராடியாக வேண்டும் என்று தோன்றியது. காண்டாமிருக வண்டுகள் பாறைகளின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன. திகட்டிக்கொண்டு வந்தது. இதை வீட்டுக்குப் பக்கத்தில் ஒரேயொருமுறை பார்த்திருக்கிறேன். உடலில் ஏறிக் காதுகளில் புகுந்தால் என்ன ஆகும் என்று யோசித்ததுண்டு.

“என்ன மச்சான் மலைக்குப் போலாமா? இதுவரைக்கும் காட்டுக்குள்ள வர்ற நாங்க அந்தப் பக்கம் போனதில்ல… ஒருவேள அவர் மலைக்கு ஏறிருந்தா அங்க போக முடியமானு தெரில…” வேல்முருகன் உடன் வந்தவர்களின் ஆலோசனைக்குக் காத்திருந்தான். காடு மெல்ல இருளத் துவங்கியிருந்தது. வண்டுகளின் சத்தம் நாலாப் பக்கங்களிலும் பெருகி வந்து கொண்டிருந்தன. “மொத்தமா இருட்டறதுக்குள்ள இதுக்கு அப்பால கொஞ்சம் தூரம் போய்ப் பார்ப்போம்… ஏதும் செய்தி கிடைக்கலன்னா வந்துரலாம் வேலு…” என்று உடல் மெலிந்திருந்த ஒருவன் கூறினான். “சரி வாங்க அங்கொரு மரம் இருக்கு… அதுல ஏறி ஆத்துக்கு அந்தப் பக்கம் போவ முடியும்… மரம் ஏற தெரியும்தானே?” என்று வேல்முருகன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

உடல் சிறுத்து மூன்று வயதாகி அப்பாவின் கைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏதோ வழவழப்பான ஒன்றிலிருந்து நான் வழுக்கிக் கீழே விழுகிறேன். முகம் மண்ணோடு உரசி மூக்கில் ஒரு நெடி பரவுகிறது. அழுது வடியும் சத்தம். அப்பா மீண்டும் தூக்குகிறார். அதற்கு மேல் ஏதும் சரியாகத் தட்டுப்படவில்லை. மீண்டும் நினைவு மங்கலாகிறது. “தம்பி! மரம் ஏறத் தெரியுமா?” என்று மீண்டும் வேல்முருகன் அதட்டும் குரலில் கேட்டான். சூரிய ஒளி புகாத அக்காட்டின் இருளில் அவனுடைய கண்கள் மின்னின. அப்பொழுதுதான் இருள் ஓர் அமைதியுடன் எங்களைச் சுற்றி வளைக்கத் துவங்கியது தெரிந்தது. எல்லோரும் கையில் வைத்திருந்த கைவிளக்குகளை எடுத்துத் தட்டினார்கள். அப்பொழுது நல்ல மதியம் என்றாலும் காடு இருண்டிருந்தது.

வேர்கள் புடைத்துக் கொண்டிருந்த மரம் அது. எவ்வளவு எக்கினாலும் அதன் உயரத்தைக் கணிக்க இயலவில்லை. நீர்நொச்சி மரங்கள் அதற்கிடையில் சுற்றி வளைத்துப் பின்னிக் கொண்டிருந்தன. ஆற்றைக் கடக்கும் ஒரு கிளை அந்தப் பக்கம் இருக்கும் இன்னொரு காட்டு மரத்தோடு இணைந்திருந்தது. இதை யாரும் உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், உற்று கவனித்தால் அதுவொரு பாலத்தைப் போலக் காட்சியளித்தது. “ஏறித் தண்டெ பிடிச்சிக்குங்க… கொஞ்சம் வழுக்கிச்சின்னா அதோட பரலோகம்தான்… கெட்டியா பிடிச்சிக்கிட்டெ ரெண்டு தொடையயும் முன்னுக்கு அசைக்கணும்!” என்று வேல்முருகன் அக்கிளையின் மீது ஏறி உட்கார்ந்து நகர்ந்து காட்டினான். தடித்து நீண்டிருந்த அக்கிளை கொஞ்சம்கூட அசையவில்லை. பெயர் தெரியாத அம்மரத்திடம் வேண்டினேன். என்னை விழாமல் கொண்டு சேர்த்துவிடு என்று அதன் கிளையை முத்தமிட்டு உட்கார்ந்தேன். வந்திருந்த ஆறு பேரும் கிளையில் ஊர்ந்து நகர கிளை இலேசாக ஆடியது. ஆற்றோட்டத்தின் காற்றழுத்தமாகக்கூட இருக்கலாம். கால்களில் ஆற்று நீர் தெறித்து நனைத்துக் கொண்டிருந்தது. நுரைப் பெருக்கம் நிறைந்த நீரோட்டம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதில் விழுந்தால் தேடவே முடியாது என்பது உறுதி.

கிளையின் விளிம்பை வந்தடைந்த பிறகு ஒவ்வொருவராக கீழே குதிக்கத் துவங்கினார்கள். சகதியாக இருந்த நிலத்தில் குதித்ததும் கால்கள் உள்ளிழுக்கப்பட்டன. அதற்கு மேல் நடக்க முடியுமா என்கிற சந்தேகம் தொற்றிக்கொண்டது. டப்பா பழங்கள் நிறைந்த செடிகள் எங்கும் பரவி நிலத்தை மூடியிருந்தன. “துரை மாமா எப்பவும் டப்பா பழத்தெ கொண்டு வந்து கொடுப்பாரு…” என்று ஏதோ ஓர் உண்மையைக் கண்டுபிடித்ததைப் போலச் சத்தமாகக் கூறினேன். “டேய்! டப்பா பழம் இங்கன்னு இல்ல ஆத்துக்கு அந்தப் பக்கமும் கிடைக்கும்…” என்று கூறிவிட்டு வேல்முருகன் செடிகளில் கவனமாகக் கால்களை ஊன்றிப் பரிசோதித்துக்கொண்டே நடந்தான். சில இடங்களில் வேர்கள் மண்ணுக்கு வெளியே பாதையைத் தடுத்துக் கொண்டிருந்தன. அவற்றைக் கவனித்துக்கொண்டே மெதுவாக நடந்தோம். மரங்கள் மேலும் அடர்ந்து இருளைக் கூட்டிக் கொண்டிருந்தன. குரங்குகள் அங்குமிங்கும் தாவித் தப்பித்துக் கொண்டிருந்ததால் மரங்களின் சலசலப்பு அதிகரித்தபடியே இருந்தது. தூரத்தில் மலைச் சறுக்கம் தெரிந்தது. சமநிலத்தின் எல்லைக்கு வந்துவிட்டோம் என்று தெரிந்தது. தாகமாக இருந்தும் அதைச் சொல்ல மனம் வரவில்லை. என்னைப் பலவீனமானவன் என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சினேன். கொசுக்கள் பதம் பார்த்த கைகளில் அரிப்பு தாளவில்லை. அப்பொழுது கால்களுக்கிடையில் சிறிய உருவம் கொண்ட ஏதோ ஒன்று தாவிக் குதித்துச் சென்றது. கருந்தேரையைப் போல இருந்தும் அவ்வளவு சரியாகக் கணிக்க முடியவில்லை. பிறகு அதுபோல நிறைய சிறிய உருவத்திலானவை அங்குமிங்குமாகத் தாவிக் குதித்துச் சென்று கொண்டிருந்தன.

“கொஞ்ச நேரம் உட்காரலாம்… முடில…” என்றவாறு வேல்முருகன் வெட்டுமரத்தினடியில் அதன் வேரின் மீது படுத்தான். டப்பா பழச்செடிகள் அவனுடைய உடலைச் சுற்றி மூடிக் கொண்டன. மரக்கிளைகளுக்கிடையில் சிறிய துவாரத்தினூடாக வரத் தவித்துக் கொண்டிருந்த ஒளியைக் கவனித்தேன். ஒளி காட்டில் சிறு குழந்தையாகிவிடுகிறது. அதனை அப்படியே பார்த்துக் கொண்டிருந்ததில் சிறு மயக்கம். “இதுக்கு மேல போகறது நல்லதில்லை வேலு… இனி இந்தக் காட்டுல ஒன்னும் இல்ல…” என்று அங்கிருந்த ஒருவன் சொன்னபோதுதான் மீண்டும் நினைவுகள் காட்டின் சுழற்சிக்குள் திரும்பின. துரைசாமி மாமாவின் மீது இரக்கம் கூடி நின்று அழுகையாக முட்டிக் கொண்டிருந்தது. காட்டின் மீதிருந்த பிரமிப்பு குறைந்து துரை மாமாவைப் பற்றி நினைத்தேன். சற்று முன் பார்த்த ஓராங் ஊத்தானைப் போல வேர்கள் மீதேறி வேல்முருகன் நின்று கொண்டிருந்தான்.

இப்பெருங்காட்டில் அவர் என்ன வேலை செய்திருக்கக் கூடும் என்கிற சந்தேகம் முதன்முதலாக எழுந்தது. அதற்கான ஒரு தடயம்கூடக் காட்டில் இல்லை. காற்றில் நிரம்பியிருந்த பச்சிலை வாடைக்குள் துரைசாமி மாமாவின் வாடையையும் என்னால் நுகர முடிந்ததை எப்படி வேல்முருகனிடம் புரிய வைப்பேன் என்றும் விளங்கவில்லை. வந்த அழுகையை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். சுற்றி நின்ற பெரிய வெட்டு மரங்களைப் பார்த்தேன். அவையொரு தியானத்தில் இருந்தன. யாராலும் களைக்க முடியாத தியானம். எங்கோ தூரத்தில் நாய்கள் ஊளையிடும் சத்தமும் காற்றோடு சேர்ந்து ஒலித்தது.

***

“இது நாயோட சத்தமே இல்ல… எனக்கு நல்லா தெரியும். சரி வாங்க, வந்த வழிக்குப் போலாம்…” என்று கூறிவிட்டு வேல்முருகன் திரும்பி நடந்தான். ‘இவ்ளதானா காடு?’ என்று கேட்கத் தோன்றியது. “காடு நீ நினைக்கற மாதிரி இல்ல… அதுக்கு எல்லையே இல்ல. அது மலையோட உச்சில சேர்ந்து பின்ன இன்னும் விரியும்… அதுலாம் நம்மனால பாக்க முடியாது…” என்று துரைசாமி மாமா சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். ஓர் ஆச்சர்ய பூமியாக காடு தெரிந்தது. வலது மூலையில் தூரத்தில் சில இலவ மரங்கள் தெரிந்தன. அந்த மரத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். “இலவம் காத்த கிளி ஒன்னு காட்டுல இருக்குடா!” என்று துரைசாமி மாமா தியானத்தின் முடிவில் எப்பொழுதும் சொல்வார். அப்படிச் சொல்லும்போது அவர் கண்கள் பூரிப்பின் உச்சத்தில் இருக்கும். காட்டைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த மாமா இப்பொழுது எங்காவது ஒரு மிருகம் தாக்கி இறந்திருக்கலாம்; அல்லது இந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்; அல்லது மண்ணில் புதைந்திருக்கலாம்; மலையிலிருந்து உருண்டு உடல் சிதறியிருக்கலாம் என்று பல கற்பனைகள் செய்துகொண்டே நடந்தேன். மீண்டும் ஊளையிடும் சத்தம் கேட்டது. இம்முறை சத்தம் மெல்ல நெருங்கி வருவதாகக் கேட்டது. எல்லோரும் நடையை வேகப்படுத்தினார்கள். இந்தக் காட்டில் ஓநாய்கள் இருக்க வாய்ப்பில்லை; இருந்திருந்தால் மாமா சொல்லியிருப்பார் என்று அவர்களிடம் சொல்லத் தைரியமில்லாமல் பின்தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன்.

வேர்களுக்கிடையில் சட்டென ஓர் அசைவு தெரிந்தது. நடந்துகொண்டே அவ்விருளில் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நடப்பதை நிறுத்திவிட்டு செடிகள் அசைவதைப் பார்த்தேன். வேரைப் போல ஒன்று ஊர்ந்து செடிகளுக்கிடையில் நகர்ந்து கொண்டிருந்தது. வேர்களைப் போல அல்ல, வேர்கள்தான். அது பாம்பாக இருந்திருந்தால் அசைவு அப்படியிருக்க வாய்ப்பில்லை. மேலே அம்மரங்களைப் பார்த்தேன். பெயர் தெரியாத மரம். அதன் வேர்கள் மெல்ல அசைந்து எங்கோ நகர்ந்து கொண்டிருந்தன. உடலில் அப்பொழுதுதான் ஒரு பெரும் நடுக்கத்தை உணர்ந்தேன். எனக்கு முன்னே நடந்து கொண்டிருந்தவன் சற்றுத் தூரமாகச் சென்றிருந்தான். நடையை வேகப்படுத்தத் தோன்றவில்லை. காட்டின் மௌனத்தில் ஒரு முணுமுணுப்பு கேட்டது. அங்கேயே அப்படியே நின்று அதன் அபூர்வ முனகலைக் கேட்கலாம் என்று தோன்றியதில் அப்படியே நின்றுவிட்டேன். தூரத்தில் ஒரு பேரோசை காற்றையெல்லாம் சுழற்றியடித்துக் கொண்டு மரங்களில் ஏறிக் கிளைகளை அசைத்து மீண்டும் நிலத்தை நோக்கிச் சரியத் துவங்கியது. வேல்முருகனையும் அவனுடைய நண்பர்களையும் காணவில்லை. “சிவா! காடு சிரிக்கும்டா… நம்புறியா?” என்று மாமா அன்றொருநாள் இரவில் உற்சாகத்துடன் என்னிடம் சொன்னபோது “உங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சிக்குச்சி மாமா!” என்று சொல்லிச் சிரித்தேன். இந்தப் பேரமைதிக்குள், வண்டுகளின் இரைச்சலுக்கு நடுவே ஒரு சிரிப்பொலியை என்னால் கேட்க முடிந்ததை யாரிடம் சொல்வது? மயக்கும் ஒலி. அப்படியே எங்கோ கரைந்து கொண்டிருந்தது. அவ்வதியசத்தின் முன்னே உடல் இல்லாமல் வெறும் மனமாக நின்று கொண்டிருந்தேன்.

ஊளையிடும் ஓசை இப்பொழுது காதுக்குச் சமீபத்தில் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கினேன். காட்டு மரங்கள் அசையாமல் ஒரு தூரத்துச் சலனத்தைக் காட்டி நின்றன. மலைச் சறுக்கத்தைத் தொட்டு நிற்கும் மரங்களுக்கு நடுவே அதைப் பார்த்தேன். அச்சுறுத்தும் கண்கள். அத்தனை தூரத்திலும் அதன் கண்கள் பெருத்துத் தெரிந்தன. வேட்டையாடத் தயாராக இருக்கும் பார்வை. மெல்ல அசைந்த கருந்தேகம் இருளுக்குள் வழவழப்புடன் மின்னியது. மீண்டும் ஊளையிடும் அந்தச் சத்தத்தின் நடுவே சிரிக்கும் ஒலியும் கலந்திருந்தது. ஒருவேளை அது என்னை நோக்கிப் பாய்ந்து வரும் என்று நினைத்திருந்தேன். ஓட்டம் பிடிக்கக் கால்கள் தயாராகின. ஆனாலும் அதன் மீதுள்ள கவனத்தை அசைக்க முடியவில்லை. மரத்தின் தண்டைப் பிடித்து அவ்வுருவம் மெல்ல எழுந்து நின்றது. முதுகு ஒரு மரத்தண்டைப் போல, கால்கள் சல்லி வேர்களாக மண்ணோடு உலாவி நின்றது. ஆக்ரோஷத்துடன் மிக நீளமான ஓர் ஊளைக்குப் பின் சட்டென மலைக்கு மேல் தாவிக் குதித்து ஓடியது.

“டேய் மட்டி! இங்க என்னா நின்னு பாத்துக்கிட்டு இருக்க?” என்று வேல்முருகன் தலையில் தட்டினான். ஏதோ கனவுக்குள்ளிருந்து மீண்டதைப் போலிருந்தது. காட்டின் அமைதி சற்றும் மாறவில்லை. “யேன் பேய பாத்த மாதிரி நிக்கற? வா…” என்று இழுத்துக்கொண்டு போனான். கால்கள் நகர மறுக்க, என்னை நானே அங்கிருந்து இடம்பெயர்த்துத் தூக்கிக்கொண்டு நகர்ந்தேன். உடல் கனமாகி நிலத்தோடு ஈர்த்துக்கொள்ளத் துடித்தது. செடிகொடிகள் மரங்கள் அனைத்திலும் ஒரு பற்று தோன்றி, காடு அதன் பெரும் வாயை அகலத் திறந்து என்னை உள்ளிழுக்கத் தயாராக இருந்தது. கண்களின் உள்ளே எல்லாம் பச்சையாகிப் பெருத்து பெரும்தோற்றத்தில் காட்சியளித்தன. கருவிழி கருமை இழந்து பச்சை வண்ணமாகிக் கொண்டிருக்கக் கூடும் என்று கண்களில் ஏற்பட்ட உறுத்தல் உணர்த்தியது. கண்களைக் கசக்கி மீண்டும் காட்டின் வெளியைப் பார்த்தேன். நீலநிறம் எங்கோ மிச்சமாய் ஒட்டிக்கொண்டே வந்தது.

மோட்டாரில் ஏறிப் போகும்வரை நீலம் பூத்து இருளைத் தின்ற வெறியில் தெரிந்த அந்தக் கண்கள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வு குறையவில்லை. காட்டின் வாயிலிருந்து வெளியே வந்தோம். உடல் மீது இருந்த குளிர் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் துரைசாமி மாமாவைப் பார்த்தீர்களா என்று கேட்டார்கள். மற்ற யாவரும் பார்க்கவில்லை என்று அழுத்தமாகச் சொன்னார்கள், என்னைத் தவிர.


குறிப்பு: இக்கதை விரைவில் ‘நீலநிறக் கண்கள்’ என்கிற தலைப்பில் நாவலாக எழுதப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

 

கே.பாலமுருகன்

மலேசியா, கடாரத்தில் வாழும் கே.பாலமுருகன் 2005ஆம் ஆண்டு முதல் தமிழில் சிறுகதை, நாவல், சிறுவர் நாவல், சினிமா விமர்சனம், பத்தி, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை கல்வி, இலக்கியம் என்று 25 நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகஙகளில் மாணவர்களுக்குச் சிறுகதை பயிற்சிகளும் வழங்கி வருகிறார். இதுவரை அநங்கம், பறை, களம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு அமரர் சுஜாதா நினைவாக ஆழிப் பதிப்பகம் நடத்திய உலகலாவிய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். மேலும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்கிற நாவலுக்குக் 'கரிகாற் சோழன்' விருதைப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவருடைய சிறுவர் நாவல்/சிறுவர் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அன்னை வேளாங்கன்னி அறிவியல் கலைக்கல்லூரி 2018ஆம் ஆண்டு 'தமிழ் நாயகர் தனி நாயகர்' விருதை அளித்துக் கௌரவித்தது. மேலும், நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் மாணவர்களுக்காக அவர் வழங்கிய இலவச கல்விச் சேவையைப் பாராட்டி 2020ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருதும் அளிக்கப்பட்டுள்ளது. தன் balamurugan.org என்கிற அகப்பக்கத்தில் தற்போது எழுதியும் வருகிறார். இவருடைய மூக்குத் துறவு என்கிற அறிவியல் சிறுகதை கடந்தாண்டு அரூ அறிவியல் சிறுகதை போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான பத்து கதைகளில் ஒன்றாகும். இதுவரை எழுதிய நூல்களின் எண்ணிக்கை கல்வி, இலக்கியம் சார்ந்து 38 நூல்கள் ஆகும். சமீபத்தில் இவரது குறும்படத்திற்காக மலேசிய அளவிலான சிறந்த குறும்படம் பிரிவில் சோழன் விருது கிடைத்தது.

View Comments

  • அடர்த்தி மிகு கடுவன் காட்டின் ஒரு சிறு பகுதி தரும் உளமயக்கம் , நிலையில்லா தொடர் வாழ்வு நிலைக்கும் எனும் உணர்வை சற்றே கலைத்துச் செல்கிறது.
    தாவிச் செல்லும் மந்தியின் மனது நிலை நில்லாமல் கவனிக்கிறது.

    • மிக்க நன்றி வாசிப்பிற்கும் கருத்திற்கும்

  • அண்மையில் பார்த்து வந்த ஒரு அடர்வனத்தை உங்கள் வரிகளோடு மீட்டுரு செய்து கொண்டே இருக்கிறேன். காடுகள் அடர் ரகசியம் கொண்டவை. அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும் ஒரு உயிரசைவை கொண்டவை. சொன்னால் நம்பமாட்டார்கள். அனுபவிக்க வேணும், உயிரும் உடலும் பரவசமாகவோ அல்லது முதுகு தண்டு ஸ்லீரிடவோ.

  • அருமையான காட்சி படிமம், வாழ்த்துகள்.

  • சமீபத்தில் வாசித்த மிகச் சிறந்த ஒரு புனைவு. கதையோட்டம், மொழி இரண்டுமே மனத்தைக் கட்டிப் போட்டு விட்டது. அருமை. அரூவிற்கும் எழுத்தாளர் பாலாவிற்கும் வாழ்த்துகள்.

  • அரூ இதழ் படைப்புகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் முயற்சிகள். நீலநிறக் கண்கள் ஒருவகை அச்ச உணர்வையும் காட்டைப் பற்றிய ஓர் பேரதிசய உணர்வையும் உருவாக்கியது. கதை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் போல. வாழ்த்துகள்

  • //நீலம் பூத்து இருளைத் தின்ற வெறியில் தெரிந்த அந்தக் கண்கள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வு குறையவில்லை. காட்டின் வாயிலிருந்து வெளியே வந்தோம். உடல் மீது இருந்த குளிர் மெல்ல கீழிறங்கிக் கொண்டிருந்தது. // i think tamil writers fantasctic language users. hats off to this story writer.

  • மயக்கமூட்டும் மொழிநடை. இப்படி வாசிக்கக் கிடைத்தால் நிறைய நூல்கள் வாசிக்கலாம். இவர் தமிழ்நாட்டு எழுத்தாளரா? வாழ்த்துகள்

    • இது மலேசியாவைப் பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதை. ஒரு புனைவு காடுத்தான். ஆனால், வழி வழியாகச் சொல்லப்பட்ட ஒரு நாட்டார்த்தன்மையும் இக்காட்டிற்குள் உண்டு.

Share
Published by
கே.பாலமுருகன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago