Categories: கட்டுரை

நவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்

8 நிமிட வாசிப்பு

இலக்கியத்தில் அதிகதைகளுக்கு (Fables) என்றுமே பிரதானமான இடம் இருந்ததுண்டு. அதிகதைகளின் தன்மைகளை எப்படி வகைப்படுத்தலாம்? மனிதன் அல்லாத விலங்குகள், பறவைகள், பூதங்கள், வேதாளங்கள், மரங்கள், செடிகள் போன்றவை கதாபாத்திரங்களாகத் தோன்றி மனிதனிடம் சொல்லாடும். விளைவாக, மனித குலத்துக்கு இன்றியமையாத நீதியை வலியுறுத்துபவையாகவோ, மனிதனின் பரிதாபமான கையறு நிலையைச் சுட்டுபவையாகவோ, மனித மனத்தின் நுண்ணியல்புகளை அல்லது ஆழத்தை வெளிக்கொணரும் தன்மை கொண்டவையாகவோ இவ்வதிகதைகள் அமையும். பல்வேறு நாட்டு இலக்கியங்களிலும் இவ்வகைக் கதைகள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், இவையாவும் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளாகத்தான் முதலில் அறிமுகமாயின. பேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தில் இருக்கிறார்கள்? வடையைத் திருடிய காகமும் அதை ஏமாற்ற விரும்பும் நரியும் அதிகதைகளில்தானே நம் குழந்தைகளுக்கு அறிமுகமாகின்றன.

உலகமெங்கும் அதிகதைகள் பிரமலமானவையாக இருந்தாலும், இந்தியா இவ்வகைக் கதைகளின் நாற்றங்காலாகவே இருந்து வந்திருக்கிறது. இயல்பிலேயே இந்திய மனம் இவ்வகை அதிகதைகளை விரும்பும் தன்மை வாய்ந்தது. காரணம், குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் அதிகதைகளின் ஊற்றுகளான ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களினூடாக வளர்ந்தமையால் அதிகதைகளின் வடிவம் என்பது நமக்கு அந்நியமானதல்ல. அனுமன் கடலைத் தாண்டியதும், ராமனுக்காக ராவணனிடம் தூது போனதையும் கேட்டு வளந்தவர்கள் நாம். வாய் பேச முடியாத ஒரு வானரம் எப்படி “சொல்லின் செல்வன்” ஆனது என எவரும் கேட்பதேயில்லை. அந்த அளவிற்கு நம் கூட்டு நனவிலியில் அதிகதைகளின் வடிவம் ஊறிப்போயிருக்கிறது.

அதிகதைகள் வெறும் விளையாட்டுக் கதை வடிவமாக எஞ்சிவிடவில்லை. வேடிக்கைக் கதைகளைத் தாண்டி மனித வாழ்வின் இயல்புகளையும், ஆதாரமான விசைகளையும், உயர் தத்துவங்களையும் விவாதிப்பதற்காகவும் அதிகதைகள் பயன்பட்டிருக்கின்றன. சிறந்த உதாரணம்: மகாபாரதத்தின் யட்சப்பிரசன்னம்.

உலகளவில் அதிகதைகள் இந்தியாவைத் தவிர்த்து கிரேக்கத்திலும் மிகுந்திருந்திருக்கின்றன. எல்லோரும் அறிந்த உதாரணம்: ஈசாப் நீதிக்கதைகள். வாழ்வின் நிலையாமையை உணர்த்தவும், மதத் தத்துவங்களை உணர்த்தவும் அதிகதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிறந்த உதாரணம்: புத்த ஜாதகக் கதைகள்.

நவீன இலக்கியத்தில் இவ்வகை அதிகதைகள் சிறுவர் நாவல்களில்தான் முதன்முதலில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. லூயி கரோலின் “ஆலீஸின் அற்புத உலகம்”, டோல்கினின் “லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்”, எக்சுபெரியின் “குட்டி இளவரசன்” போன்ற ஆக்கங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். ரூட்யார்ட் கிப்ளிங்-இன் “ஜங்கிள் புக்”கைத் தெரியாதவர்கள் அநேகமாக எவரும் இருக்கமாட்டார்கள். அதிலுள்ள பாலு, பகீரா போன்ற விலங்குகள் அந்தக் காலத்தைய சிறார்களின் தோழர்களாக விளங்கின.

ஒரு விலங்கு எப்படிப் பேசும், குரங்கு எப்படிக் கடலைத் தாவும் என்று கேட்கும் வாசகனால் இலக்கிய அனுபவத்தை முழுக்கத் துய்க்க இயலாது.

அரசியல் விமர்சனமாகவும், அரசியல் நையாண்டிக் கதைகளாகவும் அதிகதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜார்ஜ் ஆர்வெல்-இன் “விலங்குப் பண்ணை” நாவல் முழுக்க அதிகதை வடிவம்தான் கையாளப்பட்டுள்ளது. ஸ்டாலினையும் அவர் காலத்தைய ருஷ்ய அரசியலையும் பகடி செய்வதற்கு ஆர்வெல் இவ்வதிகதை வடிவத்தைப் பயன்படுத்தினார்.

அதிகதைகளை, மாய யதார்த்தக் கதைகளை அல்லது பொதுவாக பின்நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதற்கு வாசகன் மனதளவில் சில தீர்மானங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில், முன்முடிவற்று இப்பிரதிகளை வாசிக்கப் பழக வேண்டும். ஆங்கிலத்தில் “Wilful suspension of disbelief” என்பார்கள். வாசகன் இவ்வகை அதிகதைகளை வாசிக்கையில் தனது நம்பிக்கையின்மையை அல்லது அவநம்பிக்கையை அல்லது தர்க்க அறிவை பிரக்ஞைபூர்வமாக ரத்து செய்துவிட்டுப் பிரதிக்குள் நுழைய வேண்டும். ஒரு விலங்கு எப்படிப் பேசும், குரங்கு எப்படிக் கடலைத் தாவும் என்று கேட்கும் வாசகனால் இலக்கிய அனுபவத்தை முழுக்கத் துய்க்க இயலாது. அவனது தர்க்க மனமே வாசிப்புக்கு வேகத் தடை போட்டு அவனைப் பிரதிக்குள் நுழையவொட்டாமல் செய்யும்.

பின்நவீனத்துவ ஆக்கங்களில் அதிகதைகள் அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின் நவீனத்துவக் கூறுமுறைகளான கட்டற்றுச் சொல்தல், நேர்க்கோடற்ற விவரணை, வடிவமற்ற வடிவம் போன்றவை அதிகதைகளில் ஏற்றப்பட்டு அடுத்த தளத்திற்கு அவை நகர்ந்தன.

தமிழில் எஸ். ராமகிருஷ்ணனின் “வெயிலைக் கொண்டு வாருங்கள்” சிறுகதைத் தொகுதி இத்தகைய நவீன அதிகதைகள் (Modern Fables) மட்டுமே உள்ளடங்கியது. ஏழு இறகுகள், அந்தரம், வடு, பத்ம விகாரை, வெயிலைக் கொண்டு வாருங்கள், சாக்கியனின் பல், நாளங்காடி பூதம், கானகப் புலியின் மனைவி போன்ற முக்கியமான கதைகள் நிறைந்த தொகுதி. நவீன மனத்தின் கொந்தளிப்புகளையும், சிடுக்குகளையும், தனிமைச் சிக்கலையும், புறக்கணிப்பையும் தனது நவீன அதிகதைகள் மூலம் காட்டிச் செல்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

சாக்கியனின் பல்லைத் தேடியலையும் விவசாயியின் மகன்கள், ஒற்றை மழைத்துளி தனது வீட்டின்மேல் அந்தரத்தில் நிலைகொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயி, புலியை மணந்து கொண்டு காட்டுக்குச் செல்லும் பெண் கடைசியில் புலியின் சுபாவத்தைத் தான் பெற்றுக்கொண்டு தனது வீட்டிற்குள் சென்று மறைவது, கபில நிறத்தில் பெண் வாசனையைச் சுரக்கும் இரண்டு மலர்களுடைய செடி என இத்தொகுதி முழுக்க அவர் காட்டும் சித்திரங்கள் வாசகன் முன்னறியாதவை.

“நாளங்காடி பூதம்” என்ற கதையை நான் பல வருடங்களாகத் தொடர்ந்து வாசித்தபடியிருக்கிறேன். இக்கதையின் தளம், கதை சொல்லல் முறை, கதாபாத்திரங்கள், கதையின் முடிவு என யாவும் இன்றளவும் என்னை வசீகரித்தபடி இருக்கின்றன. தமிழின் முக்கியமான கதைகளில் ஒன்றாக இக்கதையைச் சந்தேகமில்லாமல் சுட்டிக் காட்டலாம். சிலப்பதிகாரத்தின் சதுக்க பூதத்தை நினைவுபடுத்துவது இக்கதை. ஆனாலும், சதுக்க பூதம் என்ற ஆழ்படிமத்தில் நவீன மனத்துக்குரிய சிக்கலை ஏற்றி, அதை நாளங்காடி பூதம் என்ற நவீன படிமமாக மாற்றியிருக்கிறார் எஸ்.ரா.

“நாளங்காடி பூதத்தினைப் பற்றி நான் சொற்பமே அறிந்திருந்தேன்” என்று துவங்கும் இக்கதை வாசகனை சட்டென உள்ளிழுத்துக்கொள்கிறது. அந்த நகரின் வணிகச் சந்தையைக் காவல் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது பூதம். அதனைத் தவிர்த்து, சந்தையில் நிகழும் வியாபாரம் நாணயத்துடன் நிகழ்கிறதா என்று கண்காணிப்பதும் பூதத்தின் பணி. இவை யாவற்றையும் பூதம் தன்னுடைய புலன்களால்தான் நிகழ்த்துகிறது. வியாபாரத்தைத் தனது கண்களின் மூலமாகவும், தராசுகளின் அளவைகளைத் தனது நாவின் மூலமாகவும், வாசனைகளின் துல்லியத்தைத் தனது நாசியின் மூலமாகவும் பூதம் கண்காணிக்கிறது. சந்தைக்குள் வணிகம் செய்யும் வணிகர்களுக்கு பூதத்தின் கூர்மையானதும் சமரசமற்றதுமான புலன்களின் மேல் தீராத பயம் இருப்பதால், அவர்கள் தங்கள் வணிகத்தில் நேர்மை தவறுவதில்லை.

விநோதமான பண்டங்களை விற்கும் இரட்டை ஸ்திரிகள் முதன்முதலாக அந்தச் சந்தைக்கு வருகிறார்கள். ஒருவள் தனது சிரிப்பையும், மற்றவள் தனது அழுகையையும் விற்கத் துவங்குகிறார்கள். சிரிப்பை விற்பவள் தனது சிரிப்பை வெகு சொற்பமான விலைக்கு விற்கிறாள். அழுகையை விற்பவளோ தனது அழுகைக்கு விலை அதிகமாகச் சொல்கிறாள்.

சிரிப்பை விற்பவளிடம் கூட்டம் கூடுகிறது. மக்கள் அவளது சிரிப்பை வாங்கிச் சென்றபடி இருக்கிறார்கள். ஆனால் அழுகையை விற்பவளது முன் எவரும் வரவில்லை. துயரை எவரும் விலை கொடுத்து வாங்கிச் செல்ல விருப்பமற்றிருக்கிறார்கள். விசித்திரமாக அதன் பிந்தைய நாட்களில் அந்த இரட்டை ஸ்திரிகள் சந்தைக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் சிரிப்பை வாங்க வந்தவர்கள், அந்த இரட்டை ஸ்திரிகளை காணாமல் சந்தைக்குள் சண்டையிடத் துவங்கினார்கள். வணிகம் சிதைகிறது. நாளங்காடி பூதத்தின் சமாதானத்தை எவரும் பொருட்படுத்தவில்லை. முதன்முறையாக நாளங்காடி பூதம் கவலைப்படுகிறது. அந்த இரட்டை ஸ்திரிகளைக் கண்டுபிடித்து மீண்டும் அவர்களைச் சந்தைக்குள் வருமாறு அழைப்பு விடுக்கிறது. அவர்களில் அழுகையை விற்பவள், தான் போகும் எந்தச் சந்தையிலும் தன் அழுகையை எவரும் வாங்கிக்கொள்ள மறுக்கிறார்கள், தனது அழுகையை வாங்க முன்வராத இந்த நகரத்தில் வெறுமை சூடிக்கொள்ளட்டும் என்று சாபமிடுகிறாள். பூதம் அவளது அழுகையைத் தான் வாங்கிக்கொள்ள முன்வருகிறது. அவளது அழுகையின் விலை மிக அதிகம் என்பதால் தன்னுடைய ஒரே சொத்தான தனது புலன்களை அவளது அழுகைக்கு ஈடாகத் தந்துவிடுகிறது. அதன் பிறகான நாட்களில் நகரமும் சந்தையும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகின்றன. ஆனால், அதன்பின் நாளங்காடி பூதத்தை ஒருவரும் பார்க்கவேயில்லை. தான் வாங்கிய கண்ணீர்த் துளியை பூதம் தன் கைகளில் ஏந்தியதும் அதன் கனம் தாங்காமல் சரிந்துவிடுகிறது. அந்த வீடும் இடிந்துவிடுகிறது. ஈரம் உலராத அந்த அழுகைத் துளி மட்டும் கண்ணாடித் துகளென அந்த வீட்டில் எஞ்சிவிடுகிறது. நெடுநாட்கள் கழித்து ஒரு காலையில் இடிபாடுகளில் விளையாட வந்த ஒரு சிறுமி இந்தக் கண்ணீர்த் துளியை எடுத்து வானில் எறிகிறாள். அந்தத் துளி உடைந்து காற்றில் பெருஞ்சிரிப்பொன்று எழுகிறது. வானம் சிரிக்கிறது என்றபடியே சிறுமி சந்தோஷமாகத் தாவிச் சென்றாள் என்று கதை முடிகிறது.

இக்கதையில் நவீன மனதின் சிக்கல்களைப் பூடகமாகச் சித்தரிக்கிறார் எஸ்.ரா. நவீன வாழ்வின் சிடுக்குகளில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கவலைப்படுவதற்கும் அழுவதற்கும் எண்ணிக்கையற்ற காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காரணமற்று அவன் சிரிப்பதுகூட இல்லை. சிரிப்பை அவன் தொலைக்கும் தறுவாயில் இருக்கிறான். மாநகரத்தின் பேருந்துகளிலோ, ரயில்களிலோ, வீதிகளிலோ சாதாரணமாக அவதானித்தாலே தென்படக்கூடிய நிதர்சனம் இது. எவரும் சிரிப்பை உதிர்ப்பதேயில்லை. தனக்குள் அமிழ்ந்துவாறு ஏதேதோ சிந்தனையில் சிடுசிடுத்த முகங்களை ஏந்திக்கொண்டு தினமும் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். நின்று நிதானித்துச் சிரிக்க இயலாத ஒரு வாழ்வைச் சூடிக் கொண்டிருக்கும் மனிதர்கள். தன்னிடம் இல்லாத பண்டத்தைத்தான் மனிதன் வாங்கிக்கொள்வான். இந்தக் கதையிலும் மனிதன் தன்னிடம் இல்லாத சிரிப்பைத்தான் வாங்கிச் சென்றபடியிருக்கிறான். அழுகையை அவன் ஏன் வாங்கிக்கொள்ள வேண்டும். அதுதான் அவனிடம் நிறைய இருக்கிறதே.

ஆனால் அழுகையை விற்றவள் ஆற்றாமை காரணமாக நகரைச் சபித்துவிடுகிறாள். “சிரிப்பின் நீண்ட சாலை முடியும் இடத்தில் அழுகையின் வீட்டு முன்கதவு தெரிகிறது” என்ற வரியொன்றைச் சொல்கிறாள் அவள். எப்படிச் சிரிப்பின் சாலை அழுகையின் வீட்டில் முடிகிறதோ, அதுபோலவே அழுகையின் சாலையும் சிரிப்பில் முடிகிறது. கதையின் முடிவு இதை உணர்த்துவது போல அமைந்துள்ளது.

இக்கதையில் பூதம் ஏன் இடம்பெறுகிறது? மனிதனை விடவும் பலமும், கூர்மையான நாசியும் பெற்ற பூதத்தினாலும் சிரிப்பின் இயல்பையும் அழுகையின் இயல்பையும், மனித வாழ்வில் இவையிரண்டின் பாதிப்பையும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. மனிதனை விடவும் பெரிய சக்தியொன்று தன்னிடம் உள்ள அரியதொன்றை இழக்கத் துணிந்தாலன்றி, மனித உணர்வுகளில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயலாது என்பதைச் சுட்டுவதற்காக பூதத்தினைக் கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது பார்வை. மனிதனை விடவும் வலியதான பூதம்கூட மனிதனின் ஒற்றைக் கண்ணீர்த் துளியைத் தாங்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் கதை நுட்பமாக உணர்த்திச் செல்கிறது.

ஈரம் உலராத அந்த அழுகைத் துளி மட்டும் கண்ணாடித் துகளென அந்த வீட்டில் எஞ்சிவிடுகிறது.

இத்தொகுப்பில் படிமங்களின் அர்த்தங்களைத் தலைகீழாக்கும் பரிசோதனையையும் எஸ்.ரா முயன்றிருக்கிறார். சாக்கியனின் பல்லைத் தேடிப் போகும் ஒரு விவசாயியின் மகன்கள், பல அவஸ்தைகளின் பிறகு தங்கள் வாழ்நாளின் அந்திம காலத்தில் தங்கள் தந்தையின் மண்டையோட்டில் இருக்கும் பல்லில் சாக்கியனின் பல்லை உணரும் கதை மிக நுட்பமானது. ஆசையின் இலக்கு சாக்கியனின் பல்லின் மீது இருந்தாலும்கூட அது அர்த்தமற்றதே. அதை அறிந்துகொள்ள அவர்கள் தங்கள் வாழ்நாளையே தியாகம் செய்திருந்தனர். மேலும் அவர்கள் அபகரிக்க விரும்பிய பல்லை உடைய சாக்கியன் உண்மையில் அவர்களிடமேதான் இருந்துள்ளான் என்ற உண்மையை அவர்கள் அறிய நேரும்போது தகப்பனின் கபாலம் வெயிலில் சூடேறிக்கொண்டிருக்கிறது. ஆசையற்றிருப்பவன் எவனுமே சாக்கியனின் குறியீடு என்ற அர்த்தத் தலைகீழாக்கத்தை இக்கதையின் மூலம் சுட்டிச் செல்கிறார் எஸ்.ரா.

படைப்பாளி தான் உணர்த்த விரும்பும் ஒன்றை உக்கிரமாக்கிக் காட்டவும், அதன் இயல்பு வடிவத்தினின்றும் பூதாகரமாக்கிக் காட்டவும் அதிகதைகள் உகந்த வடிவங்களாக இருக்கின்றன. ஏன் தான் சொல்ல வருவதை அவன் பூதாகரமாக்க வேண்டும்? காரணம் அதன் இயல்பு வடிவத்தில் அதைப் பலரும் பலவிதத்தில் சொல்லிவிட்டார்கள். ஆனாலும் அது பெரிதான தாக்கத்தையோ, பிரக்ஞைபூர்வமான இருப்பையோ வாசகனிடத்தில் ஏற்படுத்தவில்லை. மாறாக, அபௌதிக உருவகங்களைக் கதைக்குள் சிருஷ்டித்து, மீபொருண்மைத் தளத்துக்குக் கதையை உயர்த்தி, படிமங்களை உக்கிரமாக்கிக் காட்டும்போது வாசகனிடத்தில் ஒரு கவனக்குவிப்பை ஏற்படுத்த இயல்கிறது. இவ்வியல்பினாலேயே அதிகதைகள், பின் நவீனத்துவப் படைப்பாளிகளின் விருப்பத்திற்குரிய கதை வடிவமாகின்றன. ஜெயமோகனின் புகழ்பெற்ற கதைகளான படுகை, மாடன் மோட்சம், மண் போன்ற கதைகளிலெல்லாம் அதிகதை வடிவங்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என வாசகர் கவனிக்கலாம்.

மனிதன் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் எண்ணங்களை ஏற்றி அதன் மூலம் அந்தப் பொருளை சந்தோஷத்தின் குறியீடாகவோ நிராசையின் குறியீடாகவோ மாற்றிவிட வல்லவன். அவனது இந்த இயல்பை ஒற்றை மழைத்துளி மூலமாக “அந்தரம்” என்ற கதையில் காட்டியிருக்கிறார் எஸ்.ரா. ஒரே ஒரு மழைத்துளி மட்டும் தச்சாசாரியின் வீட்டுக்கூரைக்கு மேலே சில அடிகள் காற்றில் நிலைத்துவிடுகிறது. ஆரம்பகட்ட ஆச்சர்யங்களைத் தாண்டி, அந்த ஒற்றை மழைத்துளி ஒரு சமயம் வளத்தின் குறியீடாகவும், மறுசமயம் துயரத்தின் குறியீடாகவும் மாறிமாறிக் காட்சியளிக்கத் துவங்கும் விந்தையைக் கொண்டிருக்கிறது. வளத்தின் குறியீடாக அது தென்படும்போதெல்லாம் தச்சாசாரியின் வாழ்வும் வளம் பெறுகிறது, அவனும் சந்தோசமாக இருக்கிறான். ஆனால், துயரத்தின் குறியீடாக அது மாறுகையில் அவனும் துக்ககரமான மனிதனாக மாறிவிடுகிறான். இயற்கையில் மனிதனைச் சூழ்ந்துள்ள பருவுலகத்திற்கென்று தனியான அர்த்தம் ஒன்றில்லை, ஆனால் மனிதன்தான் தனது மனநிலைக்கேற்ப அவற்றுக்கு அர்த்தத்தை அளிக்கிறான் என்ற உண்மையை எதிரொலிக்கிறது இக்கதை. முடிவில், குறியீடும் அக்குறியீட்டிற்கு அர்த்தம் கற்பிப்பவனும் ஒன்றாய்க் கலந்து தங்களுக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்கள் என்ற கவித்துவமான முடிவை கதை அடைகிறது.

ஒரு மேலான நோக்கத்திற்கான கதைவடிவாக மட்டுமே அதிகதைகள் இருக்க வேண்டியதில்லை. உண்மையில் அது எந்த அர்த்தத்தையும் உணர்த்தாத கதை மொழிபாகக்கூட இருக்கலாம். குறிப்பிட்ட நோக்கமோ, அர்த்தமோ அன்றி, சகல திசைகளிலும் பாய முயலும் பாதரசத்தைப்போல ஒரு கதை இத்தொகுப்பில் இருக்கிறது. கற்பனையின் உச்சமும், அதற்கேற்ற மொழியும் ஒரு படைப்பாளிக்கு வாய்க்கப் பெறும்போதுதான் “சயன விடுதி” போன்ற கதைகள் பிறக்கின்றன. உத்கலாவின் சயன விடுதியில் நான்கு திசைகளிலும் சயன அறைகள் இருக்கின்றன. கிழக்கு சயனம், மேற்கு சயனம், வடசயனம், தென்சயனம் ஆகிய சயன அறைகள் விசித்திரத்திலும் விசித்திரமானவை. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மனிதர்கள் அச்சயன அறைகளில் உறங்கிப்போயிருக்கிறார்கள். ஆனால், அச்சயன அறைகளில் உறங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. ஒருவன் வயதானவனாக உருமாறுகிறான், இன்னொருவன் சிறுவனாக உருமாறுகிறான், பெண்கள் சிறுமிகளாகிறார்கள், இன்னும் சிலர் விழித்தெழுகையில் முற்றிலும் வேறு இடத்தில் இருக்கிறார்கள். கனவை விடவும் புதிரான அந்தச் சயன அறைகளையுடைய விடுதியைத் தேடிப்போகும் தேசாந்திரிக்கும் அதே அனுபவம்தான் ஏற்படுகிறது. உண்மையில் உத்கலா என்ற நகரம் வரைபடத்தில் எங்கும் இல்லை, அது ஒரு சாயை எனவும், வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒட்டிக்கொண்டு பறந்தலைவதாகவும் கதை முடிகிறது. சூதாட்டப் பலகையைப் போலச் சுற்றிச் சுற்றி ஒவ்வொருவரின் அகத்தையும் குலைத்துப் போட்டுவிட எத்தனிக்கும் அந்தச் சயன விடுதி உண்மையில் மனிதனின் கற்பனையே என்கிறது இக்கதை. இலக்கிய அனுபவம் பெறுவது என்ற நோக்கத்தை உதறி, வெறும் கதை கேட்கும் அனுபவத்தை அடைவதற்காகவேகூட இக்கதையை வாசிக்கலாம்.

இத்தொகுப்பில் உள்ள சில கதைகளுக்குள் நுழைய வாசகனுகனுக்குச் சில சிரமங்கள் இருக்கலாம். நவீன கவிதைக்குள் நுழையச் சிரமப்படுவது போன்றதே இது. காரணம், இவ்வதிகதைகள் யாவும் தர்க்கங்களை மீறிய ஒன்றுக்குக்காக கலாபூர்வமாக வாதிடுகின்றன. குறியீட்டு மொழியிலும், தொன்ம வெளியிலும் புழங்கும் கதைகள் என்பதால் இவை அடிப்படையில் உட்சிக்கலான வடிவத்தில் இருப்பவை. இக்கதைகள் வாசகனிடம் முதன்மையாகக் கோருவது ஒன்றே. கற்பனை. கற்பனை என்பதே அடிப்படையில் தர்க்கத்தை மீறும் இயல்புடையதால், கற்பனை ஆற்றல் கொண்ட வாசகனுக்கு இக்கதைகள் அணுக்கமாகிவிடுகின்றன. தர்க்கத்தை ஒத்திவைத்து கற்பனையின் துணைகொண்டு இக்கதைகளுக்குள் நுழைகையில் மட்டுமே கதையின் சாளரம் திறந்துகொள்ளும்.

கவித்துவமான படிமங்களும் இத்தொகுப்பில் மிகுந்திருக்கின்றன. சிறந்த உதாரணம்: சோர் பஜார் என்ற கதை. இக்கதையில் எழுத்தாளன் ஒருவனுடைய எழுதும் மேஜை நாளடைவில் மரமாக உருமாறுவது கவித்துவமான ஒரு காட்சி. படைப்புச் செயல்பாட்டினையும், கற்பனை வற்றாத படைப்பூக்கத்தையும், செழித்து வளரும் ஒரு மரத்துக்கு ஒப்பிடுவது சிறந்த கற்பனை.

மந்திரவாதி, வான சாஸ்திரிகள், தாவரவியல் நிபுணர்கள், புத்த பிட்சுக்கள், பூதங்கள், நத்தை முதலிய உயிரினங்கள், விந்தையான நகரங்கள், சயன விடுதிகள், தெருக்கள், கூழாங்கற்கள் என்று மாறி மாறி மானுடரும் அமானுடரும் இத்தொகுப்பின் அதிகதைகளில் சாரை சாரையாக வந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்களை மாறி மாறிச் சந்திப்பதே வாசகனுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

நவீன அதிகதைகள் (Modern Fables) நிறைந்த, ”வெயிலைக் கொண்டு வாருங்கள்” போன்ற தொகுப்புகள் வாசகனின் கற்பனைக்குச் சவால் விட்டபடியே, அவனை அறியாமலே அவனை நவீன இலக்கிய வாசிப்புக்குத் தயார்ப்படுத்துவதை வாசகன் உணர்ந்துவிட்டால், அவனுக்கும் நவீன இலக்கிய வாசிப்புக்கும் இடையே உள்ள மெல்லிய கோடுகள் யாவும் காலப்போக்கில் மறையும் விந்தையை அவன் உணர்ந்துகொள்வான்.


மேலும் படிக்க

கணேஷ் பாபு

2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு, தனக்கே உரிய பாணியில், மொழியின் பல்வேறு அடுக்குகளுக்குள் புகுந்து பார்க்க எத்தனிக்கும் புதுப் படைப்பாளி. பின்மதியங்களில் தூங்கி வழியும் தெருவினில் விளையாடும் சிறுவர்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகளின் வழியே இளவெயிலை வீட்டுக்குள் பாய்ச்சுவது போல, மொழியின் வெளிச்சத்தால் வாழ்வை ஆராய்வதே தன்னுடைய கதைகளின் நோக்கம் என்று நம்புகிறார். வாழ்வின் பல்வேறு சாத்தியங்களை மொழியின் பல்வேறு சாத்தியங்களால் அள்ளி எடுப்பதே எழுதுபவனின் சவால் என்று சொல்லும் இவர், தன்னுடைய எழுத்து வழிகாட்டிகளாக எஸ்.ராமகிருஷ்ணனையும், ஜெயமோகனையும் சுட்டிக் காட்டுகிறார். சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடனால் சிறந்த சிறுகதைகளாக சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்குகளில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்றன. இவரது கதைகள் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ், தமிழ்முரசு போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

Share
Published by
கணேஷ் பாபு

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago