மார்கழி! இன்றுவரை சில்லென்ற பனியும், கோவில் பொங்கல் வாசமுமாய் இந்த மாதம் எனக்குள் உறைந்திருக்கிறது. மென்புகையாய்ப் படர்ந்திருக்கும் வெண்பனியில் முந்தானையால் முக்காடிட்டபடி கோலமிட்டுத் தெருவை நிறைக்கும் அம்மாக்கள் மற்றும் அக்காள்கள். திண்ணையில் பிரவுன் பேப்பர் கொண்டு தைக்கப்பட்ட கோல நோட்டுகள், அதில் பல வருடங்களாய் வரைந்து சேமிக்கப்பட்ட கோலங்கள். சாதாரண நாட்களில் ஏழு புள்ளி ஏழு வரிசைக்குள் முடிந்துவிடும் அவை, அந்த மாதம் மட்டும், பட்டாம்பூச்சிகளாய், இரண்டடுக்குத் தாமரைகளாய், மயில்களாய் வீட்டின் முன் விரிந்து பரவும்.
அம்மா தண்ணீர் தெளித்துப் பெருக்கித் தயாராக்கிய தரையில் அமர்ந்து கோலத்திற்கான வெண்புள்ளிகளை வைக்கத் துவங்கியிருப்பாள். ஒரு வட்டத்தைச் சுளிப்பின்றி வரைய முடியாத எனக்கு, அவளின் விரல் இடுக்கிலிருந்து சீரான இடைவெளியில், ஒரே அளவில், மொக்கு மொக்காய்த் தரையில் விரியும் வெண்புள்ளிகளைப் பார்க்க வியப்பாய் இருக்கும். சில நாட்கள் நேர்ப்புள்ளிகள் வைத்து இதழ் விரிந்த பூவை வரையும் அம்மா மற்றொரு நாள் சந்துப் புள்ளிகள் வைத்து லட்டு நிறைந்த தட்டுகளை வரைவாள். அப்புள்ளிகளுக்கு இடையேயிருந்து எழப்போகும் வடிவத்தை மனதுக்குள் காட்சிப்படுத்தியபடி, வண்ணப்பொடி வட்டில்களைத் தட்டி விடாத கவனத்துடன் அவ்விடத்தைச் சுற்றி வருவேன்.
க.சுதாகர் எழுதிய 6174 நாவலில் வரும் ஜானகியும் இதைப் போன்ற ஒரு பின்புலத்தில் வளர்ந்தவள். கோலமிடுவதன் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் வடிவம் அமைத்து அதில் தனக்கென சவால்களை உண்டாக்கி, அவற்றிற்கு விடை காணுவது பெண்களின் தன்மை என்றும் அதுவே அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துகிறது என்றும் நம்புபவளாய் இருக்கிறாள். அவளுக்கு சிகாகோ சென்று, அங்கு வடிவக் கணக்கியல் பிரிவில் ஆராய்ச்சி செய்யும் முனைப்பைச் சிறுவயதில் கோலங்களின் மீது கொண்டிருந்த ஆசையே உருவாக்கியிருக்கக் கூடும். வடிவம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய புதிர் ஒன்றை விடுவிக்க நம்பகமான ஆளாய் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுவென செல்லும் 6174 நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒருத்தி இந்த ஜானகி.
பிற கிரகங்களுடனான தகவல் தொடர்பு சாதனங்களாகவும், பெரும் ஆற்றலின் சேமிப்புக் கிடங்குகளாகவும் இருக்கும் பிரமிடுகள், அவை தீய மனிதர்களிடம் சிக்கினால் பெரும் அழிவு ஏற்படும் என்று நம்பும் லெமூரிய அறிஞர்களின் குரு பிரமிடைத் துண்டாக்கி அழிக்கிறார். இந்நிகழ்வுகளுடன் புராதன யுகத்தில் தொடங்குகிறது நாவல்.
நிகழ்காலத்தில் அந்தப் பிரமிட் துண்டுகள் ஒன்றிணையும் நேரம் நெருங்கி விட்டதைத் தங்களுக்குக் கிடைக்கும் வினோத சமிக்ஞைகள் மூலம் அறிகிறார்கள் உலக விஞ்ஞானிகள். அதனால் ஏற்படக்கூடிய அழிவினைக் கணிக்கும் அவர்களுக்கு அத்துண்டுகளின் ஆற்றலை அழித்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அந்தப் பணியை நிறைவேற்ற அவர்கள் கிரிஸ்டல் ஆராய்ச்சியில் நிபுணனான ஆனந்தையும், வடிவக் கணக்கியல் பிரிவில் ஆராய்ச்சி செய்யும் ஜானகியையும் சிறு பரீட்சைகளின் மூலம் தேர்வு செய்கிறார்கள்.
பிரமிடுகளின் வடிவமும், இறந்த உடலைக் கெடாமல் வைத்திருக்கும் அவற்றின் தன்மையும் என்னைச் சிறுவயதில் ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. அதனுள்ளே இருப்பதாகச் சொல்லப்பட்ட மர்மப் பாதைகளும், அவற்றினூடாக அலையும் ஆவிகளைப் பற்றிய மர்மக் கதைகளும் என் பால்யத்தின் பகுதிகளை நிறைத்திருக்கின்றன. இக்கதையில் வரும் பிரமிடின் சக்தியும் அதே வசீகரத்துடன் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
லெமூரிய குருவால் வெட்டப்பட்டு இணையக் காத்திருக்கும் பிரமிட் துண்டுகளுக்கும், தமிழர்களின் வழிவழியாய் வந்த பாரம்பரிய கோலத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? தொடக்கத்தில் இந்தச் சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, ஆனந்துடன் பிரமிடைத் தேடிப் பயணிக்கும் ஜானகிக்கும் ஏற்படுகிறது. இதற்கு விடையாக, பிரமிடுடன், புராண கால லெமூரியா, 1949-ல் கப்ரேகரால் கண்டுபிடிக்கப்பட்ட மாறிலி, தற்கால பாங்காக், சிகாகோ, ரஷ்யா, அம்பாசமுத்திரம், எர்ணாகுளம் இவற்றை நம் பாரம்பரிய கோல இழைகளால் பின்னி நகர்கிறது கதை.
ஜானகியும் ஆனந்தும் வழியில் தங்களுக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் பிரம்மி மற்றும் வட்டெழுத்துக் குறியீடுகளில் பொறிக்கப்பட்ட செய்யுள் வடிவிலான தமிழ்ப் புதிர்களை விடுவித்தபடியே செல்கிறார்கள்.
தலைவால் நேராகித் தன் வாலே தலையாகித்
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே…
நாலார வட்டத்துள் நாலே எண்ணாம்
இந்தச் செய்யுளைக் கப்ரேகர் மாறிலியுடன் தொடர்புபடுத்தி இருந்ததைக் கண்டு மீண்டும் ஒருமுறை செய்யுளைப் படித்து அசை போட்டு ரசித்தேன். அதே போல எண்களில் கருந்துளை உண்டென்பதை அறிய வியப்பு ஏற்படுகிறது.
அறுமுகத்தோன் ஆதியாதிக்கும் ஆதி தானேயாகி
ஒன்றாக ஆலிலைமேல் கிடந்திட்ட சிசுவாகி
எழுபுரவி தான்செலுத்தும் ஆதவனின் தேவாகி
நான்முகன் தான் படைத்த, பூவுலகை நீ காத்தி,
அடிக்கீழ்படி கந்தனையே என்றுமிருத்தி…
இப்பாடல், முதல் பார்வையில் தாய் மாமனான விஷ்ணுவிற்கு அடங்கிடும் முருகனாய்த் தோன்றி ஆன்மீகப் பொருளைக் கொடுத்தது. இரண்டாவது வாசிப்பில் ஒவ்வொரு அடியின் முதல் சொல்லும் இணைந்து கப்ரேகர் மாறிலியாகவும் (6174), ‘அடிக்கீழ்படி கந்தனையே’, ‘அடி கீழ் படிகம் (Crystal) தனையே’ வாகவும் மாறி அறிவியல் மற்றும் கணிதத்திற்குள் இட்டுச் சென்றது. இப்படிப்பட்ட புதிர்களும், படிக்கும் பொழுதே தாளை எடுத்து கணக்கைப் போட வைக்கும் பக்கங்களும், இடையிடையே சுவாரஸ்யம் தரும் விதத்தில் முடிச்சுகள் இடுவதும், அவற்றை விடுவிப்பதுமாகக் கதை முன்னேறுகிறது.
தன் சிறுவயதில், லேசாக மண்ணுக்கு வெளியே தெரிந்த சாதாரண தூணை வழிபடும் குருவைச் சீடன் கவனிக்கிறான். அவன் சொன்ன இந்தத் தகவலை வைத்து அசோக மன்னன் அத்தூணைப் பெயர்க்கிறான். கொள்ளை போகாமல் காப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தரின் பல் அதிலிருந்து வெளிப்படுகிறது. வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற உப கதைகள் புதியவை.
லோனார் பள்ளம், அதைச் சுற்றியிருக்கும் இடிபாடுகள், கற்கோவில் தூண்கள், கால் தூக்கிய நிலையில் வாமன அவதார சிற்பம், அவற்றின் மீது படிந்திருக்கும் வெயில். இவை மகாபலிபுரத்தையும் அங்கிருக்கும் சிற்பக் கோவில்களையும் நினைவுபடுத்துகின்றன. மீண்டும் மாமல்லபுரம் சென்று புலிக்குகை மற்றும் ரதக் கோயில்களின் உட்சுவர்களில் புதிர்கள் ஏதேனும் பொறிக்கப்பட்டிருக்கின்றனவா எனத் தடவிப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கின்றன.
இனி கோலமிடும் பொழுது அதனுள் பொதிந்திருக்கும் வடிவங்கள், அவற்றின் மீள் அடுக்கமைவு, சமச்சீர்த்தன்மை மற்றும் தொடர் வளைவுக் கோடுகள் நிச்சயம் என் பார்வையில் படும்.
தலையற்ற உடலமிங்கு தலைகீழாய் தான்நின்று
தன்னினின்று தான் கழிய …. தானென்றுமுள்ளோனே!
தோன்றக்காண் தலையங்கே தடையற்ற ஒளிததும்பி
என்ற புதிர்ப்பாடலும்கூட நினைவிற்கு வரலாம்.