மிகச்சிக்கலாக மடிக்கப்பட்ட காகிதமாக உள்ளே ஒரு அரசர் கிடக்கிறார். அவரது அரண்மனை அவரைவிட இன்னும் சிக்கலானது. அவ்வரண்மனைக்கு வெளியே ஒரு விளம்பரத்தட்டி தொங்குகிறது, அதில் புரியாத கையெழுத்தில் எழுதியிருக்கிறது “நான் ஒரு சிக்கல்”. அவ்வரண்மனைக்குள்ளிருந்து ஆணைகள் வருகின்றன. அவ்வாணைகளை நிறைவேற்ற பணியில் உள்ளனர் எம்மக்கள்தொகை கணக்கிலும் வராத பலகோடிபேர். அடிக்கடி காரணமின்றி பயத்தில் உறைவதே அவர்களின் சீருடையாக இருக்கிறது. அச்சீருடைக்காரர்களில் ஒருவர் இப்பிரபஞ்சத்தையே முட்டையெனப் பார்க்கிறார். இன்னொருவர் ஒரு மூக்கைத் தலையாகக் கொண்ட மனிதரைக் காட்டித்தருகிறார். மற்றொருவர் தனக்குள்ளேயும் வெளியேயும் இருந்து தன்னையே கொறித்துத் தின்பவரிடம் அறிமுகப்படுத்துகிறார். இப்படியாக அவர்களில் ஒவ்வொருவரும் ஓய்வு நேரங்களில் ஒவ்வொன்றைச் செய்கின்றனர். அரண்மனையைப் பனிக்கட்டிக்குள் உறையவைத்துவிட்டும் தன்னுடைய சீருடைக்காரர்களைத் திரட்டிக்கொண்டும் அரசர் சிலசமயம் யுத்தத்திற்கும் போவதுண்டு. யுத்தத்தில் அரசருடைய ராஜதந்திரங்கள் அலாதியானவை. தனக்குள்ளாகவே வீரர்களைச் சுருக்கிக்கொள்ளச்செய்வார். அதற்கென்று பிரத்யேகமான பொத்தான்களை வைத்திருப்பார். அரசரும் அப்போது தனக்குள் சுருங்கிக்கொள்வார். ஏதோ நத்தைக்கூடு தானேயென எதிரிகள் நெருங்கிவரும்போது இன்னொரு பொத்தான். வீரர்கள் கொடுவாளெடுத்து சடாரென வெட்டி வீசுவார்கள். இப்படியாக யுத்தத்தில் அரசர் வெற்றிபெறுவார். அதன்பிறகு வெட்டுக்கிளிகளைத் தோரணமென அரண்மனையெங்கும் சீருடைக்காரர்கள் கட்டுவார்கள். ஆந்தைகளுடனும் பூரான்களுடனும் அரசர் வெற்றியைக் கொண்டாடுவார். இப்படியாகச் சீரும் சிறப்பாக வாழ்ந்த அரசர் ஒருநாள் கண்ணயர்ந்து கனவொன்றைக் கண்டார். சீருடைக்காரர்களின் கலகம் அச்சமயத்தில்தான் தொடங்கியது. அரசர் கனவு கண்டுகொண்டிருந்தார். விழித்தபோது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இந்த மண்டைக்குள்ளிருந்து தொடங்கியதுதான் எல்லாமெனச் சொல்லிச்சொல்லி அப்போது தலையை (அவரது கையை ஏற்கனவே வெட்டியிருந்தனர்) திரும்பத்திரும்ப அடித்துக்கொண்டார். அடிக்கடி காரணமின்றி பயத்தில் உறைவதைச் சீருடையாக கொண்டவர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக்கொண்டனர். அரண்மனைக்கு வெளியேயும் ஒருவர் திரும்பத்திரும்பச் சொல்கிறார்: “இந்த மண்டைக்குள்ளிருந்து தொடங்கியதுதான் எல்லாம்”. உண்மையில் அவர்தான் அரண்மனைக்கும் சீருடைக்காரர்களுக்கும் எஜமானர். ஏன் அரசருக்கும்கூட. அவரும் காரணமின்றி பயத்தில் உறைவதைச் சீருடையாக அணிந்திருக்கிறார்.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…