ச.துரை கவிதை

< 1 நிமிட வாசிப்பு

நாடியில் இருந்து கீழ்நோக்கி
இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது
கடைசி ஒரு வாரத்தில் கோட்டின்
இடதுபுறத்தில் கிடார் வாசிக்கிற
சிறுவனொருவன் வந்தமர்ந்தான்
வலதுபுறத்தில் ஒரு பெரும் புயலை
கப்பலில் கட்டித் தூக்கியபடி
மாலுமியொருவர் கரையைப் பார்த்தபடி நின்றார்

இது என்னவென்று கேட்டேன்
பதிலுக்கு வயிரும்
யாரிந்த மாலுமி
யாரிந்த கிடார் சிறுவன்
இந்தக் கடல் எங்குள்ளது
இவனுக்கு யார் கிடார் வாசிக்கக் கற்றுத் தந்தது

“எனக்குத் தலை சுற்றுவது மாதிரியிருக்கிறது வயிறே”

நேற்றிரவு கோட்டின் வலதுபுறத்தில்
புயலைக் கரைக்குக் கொண்டு வந்த
மாலுமி மது அருந்தினான்
சிறுவன் கிட்டார் வாசித்தான்
இரவு முழுக்க உறங்கவேயில்லை
வெகு அதிகாலையிலே வீட்டுக்காரர்
மனைவியோடு கதவைத் தட்டினார்
இனி இம்மாதிரியான கச்சேரிகளைச்
செய்வதாய் இருந்தால் நீங்கள்
தாராளமாக வேறு வீடு பார்க்கலாம்
எனக்கு வேறு வீடு பார்ப்பதெல்லாம்
பிரச்சனையில்லை வீட்டுக்காரரே
அத்தனைக்கும் காரணம் இந்த
மாலுமிதான் அவனையும் கொஞ்சம்
கேளுங்களென்று வேகவேகமாக
பனியனைக் கழற்றினேன்
அங்கு சிறுவனுமில்லை
மாலுமியுமல்லை
பிறகென்ன எல்லாம் நடந்தாகிவிட்டது
இது புதுவீடு இப்போது முதுகில்
நேர்குறுக்கில் நான்கு கோடுகள்
ஒருவன் ஜெபம் பாடுகிறான்
மற்றொருவன் சொற்பொழிப்பு நிகழ்த்துகிறான்
இன்னொருவன் மீன் பொறிக்க
முகம் தெரியாத மாதிரி ஒருவன்
குப்புறப்படுத்திருக்கிறான்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்