சிறார்களிடமும் இளைஞர்களிடமும் அவர்களுக்குப் பிடித்த கனவுருப்புனைவு ஆக்கங்களைப் பற்றி கேட்டோம். நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், காமிக்ஸ் என்று பலவிதமான படைப்புகளைப் பற்றி அவர்கள் பேசியுள்ளனர். அவர்களைக் கவர்ந்த கற்பனை உலகங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொருவரின் பார்வையும் நமக்கு ஆயிரம் தரிசனங்களை அளிக்கின்றன.
பிரிஷா மாரியப்பன், வயது 11, கெடா, மலேசியா
சூப்பர்மேன் கார்ட்டூன் எனக்கு மிகவும் பிடித்தமானது. பறப்பது ஒரு மிகச் சிறந்த சாகசம் என்றே நினைக்கிறேன், அதனால் அக்கார்ட்டூன் எனக்குப் பிடித்திருக்கிறது. சூப்பர்மேன் கதையில் அக்கதைப்பாத்திரம் மேற்கொள்ளும் சாகச அம்சங்களே என்னைக் கவந்தன. சூப்பர்மேனால் பறக்க முடிகிறது என்பதே எனக்கு அவரைப் பிடிக்க முதல் காரணம். எனக்கும் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; ஆனால் முடியவில்லை. ஆகவே சூப்பர்மேன் மூலம் என் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறேன்.
ஷாஷ்வத், வயது 16, அமெரிக்கா
நருடோ எனக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர். அதன் முதன்மைக் கதாப்பாத்திரம் நருடோ உசுமாகி உறுதியும் விட்டுக்கொடுக்காத மனமும் கொண்டவராக இருப்பார். அவர் எப்போதும் தன்னை மேலும் உறுதியாக்கிக்கொள்ள முனைவதும், தன்முனைப்பாற்றலுடன் செயல்படுவதும் எனக்கு உறுதியுடன் செயல்படத் தூண்டுதலாக இருக்கிறது. மொத்தம் 700 எபிசோடுகள் – எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்! தொடரில் காட்டப்படும் அனைத்துச் சிக்கல்களையும் நான் அனுபவிக்கும் இடையூறுகளுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதால், என்னையே அந்தக் கதாப்பாத்திரமாக எண்ணிக்கொள்ள முடிகிறது.
தர்சாயினி வயது 20, சென்னை
எனக்கு டிவைலைட் சாகா மற்றும் நார்னியா திரைப்படங்கள் பிடிக்கும். ரத்தக் காட்டேரிகள் மற்றும் மனித ஓநாய்க் கதைகள் மீதுள்ள ஈர்ப்பு என்னை டிவைலைட் சாகாவில் திளைக்கச் செய்தது. இக்கதையில் வரும் மிகை மனித இயல்பு (meta human nature) என்னைக் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள மிகை மனிதர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் இடையேயான காதல் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமானதாக்கியது.
ஒரு சிறிய அலமாரியின் உள்ளே வியாபித்திருக்கும் நார்னியா உலகம், சின்னஞ்சிறு பொருட்களும் எளிய தருணங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதற்குப் போதுமானவை என்பதை உணர்த்தியது. மனிதர்களை மட்டுமே சாராமல், தனித்தனி அடையாளங்கள் கொண்ட விலங்குகளும் நம்மோடு உறவாடுகின்றன. சித்தரிக்கப்பட்டுள்ள மரபுகலவையர்களை (mutants – மனிதர்களும் விலங்குகளும் சேர்ந்த கலவை உயிரினங்கள்) சரித்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் எவ்வகை விலங்குகளும் உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தன என்பது நாம் அறியாத ஒன்று. இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் அனைத்து மரபுகலவைகளும் அத்தொன்மையான விலங்குகளின் பிரதிபலிப்பாகத் தோன்றின.
டிவைலைட் படத்தில் உள்ள ரத்தக்காட்டேரி கதாபாத்திரங்களை மனிதர்களைப் போன்றே காட்சிப்படுத்துதலும், கதாநாயகன் எட்வர்ட் என்ற ரத்தக்காட்டேரி ஒரு மனிதப் பெண்ணின் மீது மையல்கொள்வதும், ரத்தக்காட்டேரி இனத்தின் அடிப்படை குடும்ப சாராம்சமும் இக்கதையை நம் உலகோடு இணைத்து என்னுள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆலிஸ் என்ற இரத்தக்காட்டேரி, கதாநாயகன் எட்வர்டின் தங்கை, டிவைலைட் திரைப்படத்தில் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரம். ஆலிஸ் மனிதர்களைவிடவும் ரத்தக்காட்டேரிகளை அதிகமாக விரும்பும் ஓர் உயிர். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுபவள். ஆலிஸ் தன் எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தியைக் கொண்டு எட்வர்டின் காதலிக்கு உதவினாள். எப்பொழுதும் மகிழ்ச்சியை மட்டுமே விளைவிக்கும் ஒரு தேவதையாகவே ஆலிஸ் என் மனதில் வாழ்கிறாள்.
கோகுல், வயது 14, சிங்கப்பூர்
எனக்கு ஹாரி பாட்டர் நாவல்கள் மிகவும் பிடிக்கும். அவை என்னை முற்றிலும் புதியதோர் உலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன, எப்போதுமே எதுவும் சாத்தியமாகக் கூடிய ஓர் உலகம். அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு அதன் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் பிடிக்கும், போகப் போக அக்கதாபாத்திரங்களின் வளர்ச்சி அருமையாக கூறப்பட்டிருக்கும். முதன்மைக் கதாபாத்திரமான ஹாரி பாட்டர் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவன். பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் அனைத்து போராட்டங்களையும் அவனும் எதிர்கொள்வதால், அது என்னைப் பற்றிய கதை என்றே எனக்கு தோன்றும்.
பிரசன்னா, வயது 17, சென்னை
ஹாரிப்பாட்டர் – தி கர்ஸுடு சைல்ட் (நாவல்), டூம்ஸ்டே (படக்கதை), டிஃபென்டர்ஸ் மற்றும் ஆல்ட்+கன்ரோல்+எஃப்+டெலிட் (தொடர்கள்) எனக்குப் பிடிக்கும்.
தி கர்ஸுடு சைல்ட் நாவலில் நாயகன் ஹாரியின் மகன் வில்லனாகவும் காமெடியன் ராணின் மகள் ஹீரோவாகவும் உருவாக்கம் பெற்றுள்ளனர். நாயகனின் மகனே நாயகனாகும் மரபு இங்கு முற்றிலும் உடைக்கப்பட்டுள்ள விதம் என்னை ஆழமாகப் பாதித்தது. ஒரு நல்ல கதை தொடருக்கு, தொடர்ச்சி முக்கியமானது அதே சமயம் அடிப்படைக்கட்டுமான மாற்றம் இன்றியமையாதது. என்னதான் அறிவியல் புனைவாகவோ கனவுருப்புனைவாகவோ இருந்தாலும் விளம்பரமற்ற எளிய பின்னணியுள்ள கதாபாத்திரங்களே வாசகனுக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைத்து வாசகனுக்கானத் தளத்தையங்கே ஏற்படுத்திக் கொடுக்கும்.
தற்போது சமகாலப் புனைவுகளில், டேர்டெவில், லூக் கேஜ், ஐயர்ன் ஃபிஸ்ட் மற்றும் வயிட் டைகர் போன்ற புதுப்புது எளிய அடையாளங்கள் கொண்ட அடித்தட்டு சூப்பர்ஹீரோக்கள் எனக்குப் பிடிக்கும். மிகப் பெரிய உருவ அமைப்பினை உடைய ஹல்க், தோர் முதலிய சூப்பர்ஹீரோக்களுக்குப் பதில் டிஃபென்டர்ஸ் தொடரில் மேற்குறிப்பிட்ட எளிய ஹீரோக்களைப் பயன்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. கனவுருப்புனைவுகளில் குறைந்த பக்கங்களிலேயே உங்கள் இரத்தத்தை உறைய வைக்கும் அமானுஷ்ய சிறுகதை ஷிவர் (Shiver). சூழல் சார்ந்த எளிய விவரணையும், பொருட்கள் பற்றிய குறைந்த வர்ணனையும் கதாபாத்திரங்களின் அதீத உணர்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்தது. இந்த அம்சம் இளம் கனவுருப்புனைவு எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
எனது அபிமான சூப்பர் ஹீரோ கேப்டன் அமெரிக்கா. என்ன ஒரு எதார்த்தமான வீரர்! அவரது சக்திகள் அனைத்தும் ஒரு மருந்து குப்பியில் இருந்தே வந்தன என்பது அறிவியல் தர்க்கத்திற்கும் பொருந்துகிறது. அவரின் மனிதத்தனமை என்னைக் கவர்ந்துவிட்டது. கேப்டன் அமெரிக்காவின் சாகசங்கள் நம்மால் கணிக்க முடியாதவை. ஆனால் எதார்த்தத்தோடு ஒப்பிடக் கூடியவை.
சஞ்சனா, வயது 16, சிங்கப்பூர்
எனக்கு காப்லின் என்கிற கொரியன் தொலைகாட்சித் தொடர் பிடிக்கும். காப்லின் என்ற முக்கிய கதாபாத்திரத்தின் தேடல் சிரிப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். தனது சாவில்லா வாழ்வை முடித்துக்கொள்ள அவனுக்கு ஒரு மனித மனைவி தேவை. தனக்கு உதவி செய்ய பல மனிதர்களின் நட்பை நாடுவான். ஒரு க்ரிம் ரீப்பரும் (Grim Reaper) அவனின் நண்பன். என்னால் கதைக்குள் சுலபமாகப் பயணிக்க முடிந்தது ஏனென்றால் ஒரு சிறுமியைச் சுற்றியே கனவுருக் கதாப்பாத்திரங்கள் சுழல்கின்றன. சாதாரண கதையமைப்பாக இல்லாமல் பல திருப்பங்களைக் கொண்டதாக இருப்பதால் இருக்கை நுனியில் என்னை அமரச் செய்தது. சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாகவும் மனதைத் தொடும் விதத்திலும் இருந்தன.
இக்கதையில் வரும் க்ரிம் ரீப்பர் என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். அவன் காப்லினுக்கு விசுவாசமான நண்பன். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அவனுக்கு காப்லின் மீது மிகுந்த அக்கறை இருந்தது. முந்தைய ஜென்மத்தில் க்ரிம் ரீப்பர்தான் தன்னைக் கொன்றான் என காப்லினுக்குத் தெரிய வரும். இந்த ஜென்மத்தில் நண்பர்களாகிவிட்டதால், க்ரிம் ரீப்பர் காப்லினுக்காகத் தனது உயிரையே கொடுக்க தயாராக இருப்பான். இது க்ரிம் ரீப்பருடன் என்னை நெருக்கமாக்கியது.
அல்க்கா வருண், வயது 21, சென்னை
Alice in Wonderland, Time Machine மற்றும் Pirates of the Caribbean எனக்குப் பிடிக்கும். காலத்தை திருடி, கட்டுப்படுத்துவதை மையமாகக்கொண்ட Alice in Wonderland மற்றும் Time Machine நாவல்கள், இறந்தகாலம் மாற்ற முடியாதது என்பதை உணர்த்துகின்றன. Pirates of the Caribbean இல் வரும் கடற்கொள்ளையர்கள் தாங்கள் செய்ய விரும்புவதையே செய்கிறார்கள், எவரையும் சார்ந்திராமல் யாருடைய கட்டுப்பாட்டிற்கும் ஒடுங்காமல், தீர்மானிக்கப்பட்ட திசையில் முன்னேறிச் செல்கிறார்கள். தீயவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் பார்வையில், அவர்களின் நீதியில் கடற்கொள்ளையர்கள் குற்றமற்றவர்களே.
அன்பு, காதல் அழுகை என அனைத்தும் கொண்ட குழந்தை உள்ளத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே கொடூரமாகக் காட்சியளிக்கும் வில்லன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். சாத்தியமற்றதை வாழ்ந்துபார்க்கும் அனுபவமே என்னை நாவல்களுடன் இணைக்கிறது. உண்மைத் தகவல்கள், பழங்கால அறிவியல், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் குறித்த ஆர்வமே என்னை இந்நாவல்களுக்குள் மூழ்கடிக்கின்றன.
என் மனதுக்கு இணக்கமான கதாபாத்திரம் ஜாக் ஸ்பேரோதான். யாருக்குத்தான் ஜாக் ஸ்பேரோவைப் பிடிக்காது! எப்பொழுதும் மூச்சுவாங்க தன் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவன், தன் மீது விழும் விமர்சனங்களைக் கவனியாமல், உயிரின் கடைசி சொட்டு வரை தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ஜாக் ஸ்பேரோவைக் காதல் தோல்வி கலங்கடிக்கவில்லை. ஜாக் ஸ்பேரோ தலைமையில் பயணிக்கும் கொள்ளையர் குழுவில் நானும் ஒருத்தியாகிவிட என்றும் விரும்புகிறேன்.
ஷ்ரிஹா, வயது 10, சிங்கப்பூர்
எனக்கு டோடல்லி ஸ்பைஸ் என்கிற தொலைக்காட்சித் தொடர் பிடிக்கும். அதில் நிறைய உளவாளிகள் இருப்பார்கள், ஒவ்வொருவரும் விதவிதமான சிறுபொறிகருவிகள் வைத்திருப்பார்கள். என்னிடம் உள்ள பொம்மைகளைத் தொடரின் கதாப்பாத்திரங்களாக நினைத்து, அவற்றுடன் விளையாடுவேன், சண்டை போடுவேன். இத்தொடரில் வரும் சாம் என்கிற பெண் கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவள் அழகாக இருப்பாள். எதைச் செய்தாலும் கவனத்துடன் செய்வாள்.
பா. பாவணன், வயது 8, கெடா, மலேசியா
ஸ்பைடர்மேன் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே எனக்குச் சிலந்தியைக் கண்டால் பயம். பார்த்தாலே ஓடிவிடுவேன். ஆனால், சிலந்தி-மனிதன் மனிதர்களுக்கு நண்பனாக இருப்பதைப் பார்க்கும்போது தானாகவே பயம் நீங்கி அக்கதாப்பாத்திரத்தைப் பிடிக்கிறது. அக்கதை மீது எனக்கு மிகவும் ஈர்ப்பு உள்ளதால் ஒன்றிப் போக முடிகிறது. மற்றவர்களைவிட ஸ்பைடர்மேன் கதாப்பாத்திம்தான் எனக்குப் பிடிக்கும். அவர்தானே மக்களைக் காப்பாற்றுகிறார்… அவரின் கையிலிருந்து எப்படி இவ்வளவு நீளமான கயிறு வெளிவருகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இன்னொரு விஷயம், சிலந்தியை யாரும் தவறாக நினைக்காதீர்கள்.
புகைப்படம் – விஸ்வநாதன்