சசம் உடனிருத்தல்

7 நிமிட வாசிப்பு

நீல மற்றும் வெள்ளை நிறம் மாற்றி மாற்றிப் பூசிய அறைகள். மூத்திர வாடையும் மல வாடையும் முட்டிக்கொண்டு வரும், முகமூடியைப் போட்டு நுழைவதற்குள். ஒரு வருடமாக இந்த இரண்டு வெள்ளை ஜாம்பவான்களைத் தினம் பார்க்கும் மூன்று பேரில் நானும் ஒருத்தி. இந்த அறையில் காற்றும் ஒளியும்கூட என் அனுமதி இருந்தால்தான் நுழைய முடியும். ஒவ்வோர் இனத்திற்கும் தனித்தனி என மூன்று கூண்டுகள். நேரத்திற்கு உணவு, எப்போதும் ஏ.சி, தீரத் தீரத் தண்ணீர் இப்படி ஏக வசதியும் உண்டு. வாரம் ஒரு முறை மெடிக்கல் செக் அப், அதற்கு ஏற்றார்போல் மருந்துகள், ஊசிகள்.

போதாக்குறைக்கு ‘கைனடிக்’ முறையில் செய்த கூண்டுக்குள் கலர் கலராய்ப் பிளாஸ்டிக் பந்துகள். ஒரு பந்து இடித்து, பின் அது ஒரு குடுவையைத் தொட, அதில் உள்ள குண்டு பறந்து சாய்வான படுகையில் உருள, அங்கு அடுக்கி வைத்த இரண்டு அடர் பழுப்பு நிறக் கண்கள் கொண்ட பாடல் கேசட்டுகள் நகர்ந்து டேப்ரிகார்டரின் குறுகிய வாய்க்குள் சரியாய் விழ, அதில் ஒட்டிய கம்பி தட்டி பாடல் ஒலிக்கும். வீட்டுப் பரணில் நிறைய இடத்தை ஆக்கிரமித்து, அம்மாவிடம் திட்டு வாங்கிய கேசட்டுகளை நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் எடுத்து வருவேன். தற்போது, அவற்றை நோண்டிக் களைத்துப்போடும் அவசியம் ஏற்பட்ட போதும், திட்ட யாரும் இல்லாமல் அவை மகிழ்ந்திருந்தன.

மனிதயினம் விலங்கினம் இரண்டும் ஒன்றோடு ஒன்று எப்போதும் தழுவிக்கொள்ளும் அவசியம் இல்லை, ஒன்றுக்கு ஒன்று அவசியம் ஆகும் வரை. அப்படி தழுவிக்கொண்ட ஒன்றை ஆராய்ச்சிக்காக சாக்ரிபைஸ் (sacrifice) பண்ண வேண்டும் என்ற நிலை, அத்தை சொன்ன அந்த நெஞ்சழுத்தக்காரியை நினைக்க வைத்தது. கடந்த காலத் தருணங்களைப் புரட்டிப் போடுவதுகூட நிகழ்கால அவசியமாகிறது.

கிராமம் அழகு, ஆனால் பிறந்து வளர்ந்து அங்கேயே இறந்தும் போன அம்மாவிற்கு அது அழகாக மட்டுமே இருந்திருக்க முடியாது. எனக்குத் தெரியும், அம்மாவிற்கு வேறு உலகம், இடம், மாற்றுப் பொழுதுகள் வேண்டும். அவளுக்குப் புரியும்போது அதற்கான அவசியம் இல்லாமல் போனது.

வருடம் பத்து முறை செல்வதனால் மட்டும் எனக்குக் கிராமம் பிடித்தமானதாக இருந்தது. நான் வரும்போதெல்லாம் அங்கு விளையாடும் ஏதோ ஒரு நாட்டுக்கோழிக்கு அதுவே கடைசி நாள்.

“ஏய் அந்த நெஞ்சழுத்தக்காரிய கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லு” என்ற அத்தையின் குரல் கேட்டுக் கொல்லைப் பக்கம் போனேன். பக்கத்து வீட்டுப் பெண் வந்து ஒரு சட்டியில் முக்கி வைத்திருந்த கோழியை அறுத்து, மஞ்சள் தடவிய தோலை உறித்துக்கொண்டு இருந்தாள். மனிதப் பிணங்களைக் கடைசியாகக் குளிப்பாட்டி அலங்கரித்து வைத்த மாதிரி இருந்தது.

“அது ஏன் நெஞ்சழுத்தக்காரின்னு சொல்றீங்க?” அத்தையைக் கேட்டேன்.

“நம்ப வீட்டுல வளர்ந்ததை வெட்ட ஒரு தயக்கம் இருக்கும். பொதுவா எல்லாருக்கும் அப்படித்தான். ஆனா அவளுக்கு அப்படி இருக்காது.”

உப்பு அதிகம் போட்டு வைத்த நாட்டுக்கோழிக் குழம்பு பிடிக்காததால் சரியாகச் சாப்பிடாமல் மீந்து கிடக்கும் அந்தக் கோழியின் மீது இரக்கம் வந்தது.

“டேவிட், நாளை என் லேபுக்கு வந்து ஒரு முயலை சாக்ரிபைஸ் பண்ணனும். மேடமுக்குத் தெரிய வேணாம். தெரிஞ்சா சென்டிமெண்டா இருக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க.”

“ம்ம் சரி. நான் நாளைக்கு வர்றேன்.”

***

டேவிட்டிடம் முயலை எடுத்துக் கொடுத்துவிட்டு வராண்டாவிற்கு நகர்ந்தேன். மனதுக்குள் அங்கு நடக்கப் போகின்றவற்றைக் கற்பனையாய்ப் புகுத்துவதற்குள் கையில் இருந்த தொலைபேசி அலறியது.

வெளியிலிருந்து அவனை நோக்கிக்கொண்டு இருந்தபோதே கை காண்பித்து என்னை உள்ளே வரச் சொன்னான். அவனின் பதற்றமும் வியர்வையும் முகமூடிகூட அணியத் தோன்றாமல் என்னை அங்கு நுழைய வைத்தன.

கையுறை போட்டுக் கூண்டில் உள்ள முயலை வெளியில் எடுத்து மேஜையில் வைத்தேன். என் கைக்குள் பிடிப்படாமல் அது ஆடிய ஆட்டத்தில் என் வெள்ளை கோட்டு முழுவதும் அதன் முடிகள் வந்து ஒட்டிக்கொண்டன.

“ஏய், மாறன் என்ன ஆச்சு உனக்கு? நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்,” என்று கேரட்டை எடுத்துக் கொடுத்தேன்.

கை கால்களைச் சுருட்டி உடம்போடு ஒட்டிக்கொண்டது. அதன் பெரிய காதுகள் மடங்கியிருந்தன. முக்கோண வடிவ முகம் வாட்டமாயிருந்தது.

“நோ, நோ, ஸ் கி மீ பௌ நபி சே… இஸ்… பி…” இப்படியாகத் தொடர்ந்த சத்தம்.

இதுவரை கேட்காத குரல்!

என் கண்கள் மாறனைப் பார்த்துக்கொண்டே இருந்ததனால் அந்தச் சத்தம் திடுக்கென இருந்தது.

“ஏய் இதே இதே மாதிரி தான் கேட்டது,” என்று டேவிட் சொன்னான்.

மறுபடியும் அதே சத்தம்.

“ம்ம்… நோ… மீ.. சி… சூ… பீஸ்… ஷா…”

“என்ன இது? என்னாச்சு உனக்கு?”

அலமாரியில் வைத்திருந்த ஒரு கூண்டுக்குள் இருந்து தலையாட்டியது தீரன். பார்த்துக்கொண்டே இருந்தோம். யானை பிளிறுவது போல் அலறியது.

பயந்து மாறனை மறுபடியும் கூண்டுக்குள் விட்டுவிட்டு வெளியில் வந்தோம். பதற்றமும் பரபரப்பும் தொடர்ந்துகொண்டே இருந்தன. அவற்றில் இருந்து வெளியே வர முயற்சி செய்தும் முடியாமல் போனது. இதுவரை அவ்விலங்குகளின் உடற்செயல்களில் மட்டுமே மாற்றங்களைக் கண்டு வியந்த எனக்கு அவற்றின் மொழிகளும், ஏதோ என்னிடம் சொல்ல முயன்ற அலறல்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. முயல்களின் உடற்கூறுகளைப் பற்றி விரிவாகத் தேட ஆரம்பித்தும், அவற்றின் தேவையை மனம் மறுத்துக்கொண்டு இருந்தது.

ப்ரொபஸரிடம் சொன்னபின் எங்களிடம் இருந்த அதே கேள்விகளும் ஆச்சரியங்களும் அவருக்கும் தொற்றின.

“நீ லேபுக்கு போ, நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வர்றேன்.”

இருவரும் பேசிக்கொண்டே நடந்து போனோம்.

“ம்ம்.. இது வோகல் மிமிக்கிரி (vocal mimcry) வகையாகவும் இல்லை.”

“ஓக்கே.. வில் சீ. கம்.”

“இங்க இருக்கு மேம், கிளவுஸ்.”

“அனிமல் ஹவுஸ்லாம் வந்து ரொம்பநாள் ஆச்சு. நம்ப லேப் ஒர்க் ரிலேடட் அனிமல்ஸ்தான் இருக்குல?”

“ம்ம் ஆமா மேம்.”

“இந்த மாதிரி பண்ணினது அல்சீமர் சார்ந்த ஆய்வுக்காகத்தானே?”

“அப்படித்தான் ஆரம்பித்தோம். பின் அதற்கான ஆய்வு முடிவுகள் முன்பே வெளிவந்ததினால் ‘கைனடிக்’ மாடலை மென்டல் இல்னஸ் ஒர்க்காக மாத்திட்டோம்.”

“இரண்டையும் ஒரே கூண்டிலா வைத்திருக்கோம்?”

“கைனட்டிக் முறை பழகியதால் அவை இதுவரை ஒரு கூண்டுக்குள் இருந்தும் சண்டை போட்டதில்லை, கடித்துக் கொண்டதில்லை என்பதால் ஒன்றாக வைத்திருந்தோம்.”

மூத்திர வாடையையும், மல வாடையையும் முந்திக் கொண்டு இரண்டு பச்சை நிறப் பந்துகள் இருவரின் காலிலும் வந்து விழுந்தன. கீழே விழுந்து கிடந்தது கூண்டு. பந்துகள் சிதறி ஆங்காங்கே கிடந்தன. நூல்கண்டு அறுந்து தொங்க, கேசட் விழிகள் பிதுங்கி இருந்தன. உணவுகள் எல்லாம் கொட்டி அதை எலிகள் கொறித்த அடையாளம் தெரிந்தது.

அந்தக் கணம் நாங்கள் எதிர்பார்த்து வந்த பிளிறல் சத்தமும் இல்லை, குரலும் இல்லை. மழை பெய்து ஓய்ந்த கடைசிச் சொட்டின் நிசப்தம்.

மாறனின் கை தீரனின் கழுத்தை நெருக்கிக் கொண்டும், தீரனின் கை மாறனின் கழுத்தை நெருக்கிக் கொண்டும் கூண்டுக்குள் செத்துக் கிடந்தன.

பார்த்து திகைத்து உறைந்து நிற்பதைத் தவிர என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறுவது மட்டுமே அப்போதைய அவசியமாக இருந்தது.

அவற்றின் சிவப்புக் கருவிழிகள் மூடப்பட்டு இருந்தனவா, வாய் திறந்து இருந்ததா என்பதைக்கூடப் பார்க்கவில்லை. கண்கள் மூடித்தான் இருந்திருக்கும். ஒரு வேளை திறந்திருந்தால் என்னை அறியாமல் நான் அவசரமாக போய் அதை மூடி விட்டு விலகியிருப்பேன் என நினைத்துக்கொண்டேன்.

“உங்கள் வளர்ப்புப் பிராணிகளோ, இல்லை ஆய்வக உயிரினங்களோ பேசியிருந்தால், இல்லை அதன் உயிரிழப்புகள் தற்கொலை என நீங்கள் நினைத்திருந்தாலோ தகுந்த ஆதாரங்களுடன் எங்கள் பல்கலைக்கழகத்தை அணுகவும். அதற்கு சன்மானங்களும் வழங்கப்படும்,” எனச் சமூக வலைதளங்களில் பதிவு செய்தோம்.

‘என் ஜானி (நாய்) லொள் லொள் என்று குரைக்காமல் பௌ பௌ என்கிறது’. ‘என் கிளி நான் சொல்லிக் கொடுப்பத்தைப் பேசாமல் வேறு எதையோ பேசிக்கொண்டே இருக்கிறது’. ‘வீட்டுக்கு அருகில் ஒரு பூனை என் குழந்தை அழுவதை போல் அழுகிறது’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சிலர் வந்தனர். அவர்களிடமெல்லாம் குறிப்பெழுதிக்கொண்டு போகச் சொல்லிவிட்டோம்.

கேமராவில் பதிவானதை ‘தி அனிமல் ஸ்டடி ஆஃப் சைக்காலஜி’ என்ற கலிஃபோர்னியாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பினோம்.

இரண்டும் ஏதோ பேசிக்கொண்டன. பின் கூண்டை உதைத்துத் தள்ளின. எல்லாம் உருண்டு கிடந்தது. ஒரே நேரத்தில் முயல்கள் மாற்றி மாற்றிக் கழுத்தை இறுக்கிக்கொண்டன. தற்கொலை செய்துகொண்டன எனச் சொல்லலாம். பல ஆராய்ச்சியாளர்களிடம் நகர்ந்து நாடு கடந்தது இக்காட்சி. உடற்கூற்றின் ஆய்வும் விசித்திரம் நிறைந்ததாகவும் குழப்பமாகவும் தொடர்ந்து கொண்டிருந்தது. மருத்துவ உலகின் மிகப் பெரிய பங்கு, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் உயிரினங்களின் பிரதிபலிப்பு. நான் அவற்றிடம் பேசும் போதெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன், உங்களால் பல பேரின் மனதைப் படிக்கப் போகிறேன் என்று.

தன்னை மாய்த்துப் பிறரைக் காப்பது என்பது மனித இனம் மட்டுமே உருவாக்கிய வரையரையாகவோ கொள்கையாகவோ இருக்க முடியும் என்று நினைத்த எனக்குக் காக்கை இனங்களும், அசாமில் ஜாதிக்கா கிராமத்தில் ஒரு பறவை இனமும் தற்கொலை செய்துகொள்ளும் என்ற செய்தியை ஒட்டி நிறைய புத்தகங்களைப் புரட்ட வேண்டியிருந்தது.

ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டன. ஆயிரம் விசித்திரங்களில் இதுவும் ஒன்றாகவே பார்க்கப்பட்டிருக்கும். இந்தப் பரபரப்புகள் என்னை கலிபோர்னியா நோக்கி நகர வைத்தன. கடிதங்கள் உடன் இல்லாத தற்கொலைகளின் காரணங்களைப் போல் பலர் புரளி பேசிக்கொண்டும் கற்பனைக் கதைகளை உருவாக்கிக்கொண்டும் இருந்தனர்.

முயல்களுடன் முடிந்திருக்க வேண்டியது. இன்று பல பெயர் தெரியாத உயிரினத்தின் ஆராய்ச்சியும் தேடலுமாய், பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய பெரும் பயணங்களாய்த் தொடர்ந்தது.

நியூயார்க் என் முதல் விமானப்பயணம். உயரப் பரத்தல் என்பது விசித்திரமானது. மாறனின் அந்தக் குட்டி வாய் என் கையுறை அணிந்த விரலைச் சப்பியது போலிருந்தது, நான் முதலில் மதுபானம் அருந்திய என் வாய்.

பயணங்கள் எப்போதுமே சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. நினைக்க விரும்பாத கடந்த காலத்தைக்கூட மீட்டிவிடுகின்றன. உடற்கூறு செய்து பதப்படுத்தப்பட்ட முயல்கள் ஒரு கண்ணாடிக் குடுவையில் மிதந்து கொண்டிருக்கும் புகைப்படத்தைத் தேடி எடுத்துப் பார்த்தேன். அப்போது அடுத்ததாய் இருந்த கைனடிக் மாடல் வரைபடத்தைப் பார்க்க நேர்ந்தது.

‘கைனடிக் ஆர்ட்’ எனக்குள் எப்படியோ வந்துவிட்டது. எதையும் படிக்கவில்லை. புகழ்பெற்ற ஜோசப் வீடியோக்களைக்கூடப் பார்க்கவில்லை. நம்மை நாமே வியந்து பார்க்கும்போதுதான் நம்மை மேலும் அலங்கரித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

அப்பாவுக்கு ஒரு பழக்கம் இருந்தது. எந்த ஊரில் எங்கு சர்க்கஸ் நடந்தாலும் தேடிப்பிடித்து அங்கு என்னையும் கூட்டிச் செல்வார். நாங்கள் போகும் போதெல்லாம் தாத்தா முணுமுணுத்துக்கொண்டே இருப்பார், “என்னதான் இருக்கோ இந்த சர்க்கஸ்ல. நல்லா வெள்ளைத்தோல், அரைகுறை ஆடை அதைப் பார்க்கத்தான் போறது.” அதையெல்லாம் அப்பா காது கொடுத்துக் கேட்டதேயில்லை.

பயணம், சாப்பிடத் தீனி, பஞ்சுமிட்டாய், கலர் கலர் லைட், பறவைகள், குரங்கு, முயல், எலி, நாய், அந்தத் தீ வளையம், மினுமினுக்கும் ஆடை, நடனம் இப்படியாகப் பார்ப்பதற்கே மனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், கூடவே தாத்தாவின் கெட்ட வார்த்தைகளையும்.

நமக்குத் தெரியாமல் சில விஷயங்கள் எப்படியோ புகுந்துவிடுகின்றன. அதற்காகச் சில ஆய்வாளர்கள் சொல்லியது போல் முயல்களுக்குப் பேய் எல்லாம் புகுந்து இருக்குமோ என்றெல்லாம் தோன்றவில்லை.

யேல் யுனிவேர்சிட்டியில் சந்தித்த ப்ரொபஸர் என்னை ஒரு மலைக்கிராமம் கூட்டிக்கொண்டு போனார். அங்கு மனிதர்கள் யாரும் பேசவே இல்லை. அவர்களுக்கென்று எந்த மொழியும் இல்லை. அவர்களுக்குள் ஏதோ சத்தம் எழுப்பிக்கொள்கின்றனர். பிட்யின் இனமக்கள் போன்ற மொழியொன்றைக் கொண்டிராத குழுவாக அவர்கள் தோன்றினார்கள். அங்கு விலங்கினமும் மனித இனமும் இனக்கலப்பு மட்டும்தான் செய்யவில்லை என்பதுபோல் தோன்றிற்று.

தொலைத்துவிட்டு அரிதாகக் கிடைக்கும் ஒரு பொருளைத் தேடுவதற்கும் புதிதான ஒன்றை உருவாக்கித் தொலைப்பதற்கும் உள்ள மனநிலையை நான் உணர்ந்த தருணம் அது. நான் அறியாமல் போன மனித மொழியாற்றலின் காரணம் கிடைத்தது.

அவர்களுக்கு வீடியோவை போட்டுக் காண்பிக்கச் சென்ற எங்கள் மனநிலை பல கேள்விகளை எழுப்பிய வண்ணமே இருந்தது. மௌனமாக அப்படியே உறைந்துவிட்டது.

முயல்களின் மனம் மொழியை உருவாக்கியது. மனதையும் தேட முடியவில்லை, மொழியையும் கண்டுபிடிக்கவில்லை.

***

“நைன்! உன்னோட ஷூவை நான் இன்னைக்கு எடுத்துட்டு போகவா?”

“உனக்குத்தான் கால்களே இல்லையே. பின்ன என்ன? போ!”

என்னிடம் என் மகள் வந்து கேட்டாள், “அம்மா, நீ ஸ்நேக் பார்த்திருக்கியா? அது நாய்கிட்ட ஷூ கேட்டுச்சு. அது உனக்கு கால் இல்லன்னு சொல்லி தரலயே மா. ஸ்நேக்கால ஷூ போட முடியாதா மா?”

இல்லையென்றவாறே சிரித்தேன்.

1 thought on “சசம் உடனிருத்தல்”

  1. அறிவியல் புனைவு கதைகள் படிப்பது எனக்கு இதுவே முதல் முறை இந்த கதை மிகவும் நன்றாக உள்ளது சகோதரி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்