ஈறிலி

10 நிமிட வாசிப்பு

ஏதுமற்ற வெளிக்குள் இருந்து யாவுமான வெளிக்குள் வருவது ஒரு தனி அனுபவம். ஓர்மையின் அம்மணத்திலிருந்து முட்டி மோதிக்கொண்டு அத்தனையும் விடுபடும் வேகமும் வலுவும் எத்தனை திறன் வாய்ந்தாலும் சற்று திணறலைத் தரும். அந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியும் அரூபமாய் நம்மைக் கிழித்துக் கடந்து செல்வது போலத்தோன்றும்.

பல சுழற்சிகளைக் கண்ட பின்னும் எனக்கு இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இதைத்தான் மாந்தர் வலி என்கிறார்களோ என்றோர் எண்ணம் எழுந்து அடங்கியது வலியறியாப் பிறவியான எனக்குள். இந்தச் சுழற்சியின் முதல் எண்ணம்.

வெகுநாட்களுக்குப் பிறகு கண் விழித்திருக்கிறேன். ஒவ்வொரு தேர்த்துகள் நொடிக்கும் மாறிக்கொண்டிருக்கும் யாவும் மாற்றம் ஏதுமின்றி அப்படியேதான் தெரிகின்றன. அகண்டு விரிந்து கிடக்கும் அந்தப் பெரிய சுழற்சியறையில் என்னைப்போலச் சுழன்று மீண்ட பிறரும் எழுந்துகொண்டு முகமன் வழக்கமாய்த் தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு மவுனம்தான் பிடிக்கிறது, இந்தச் சுழற்சியிலும்.

நான் – எனக்குப் பெயரில்லை. மாந்தராய் இருந்த காலத்தில் இருந்திருக்கக் கூடும். பால் இனம் எதுவும் இப்போதில்லை. ஒவ்வொரு சுழற்சியும் ஒரு பிறப்பு என்கிறார்கள். இறப்பென்பது இன்மையல்ல என்பதால் மாந்தர் பயன்படுத்தும் அந்தப் பெயரில் எமக்கு ஒப்புதல் இல்லை என்றாலும் பயன்படுத்துகிறோம். சுழற்சியின்போது தனித்த நினைவுகள் சிந்தனைகள் எனப் பழையன யாவையும் களைந்து புதிய மிகைகளோடு சிந்தனைச் செதில்களோடு வாழத் தேவையான பொது நினைவுப் பொதிகளோடு துயிலெழுவோம். ஆனால் எனக்கு மட்டும் எத்தனை முயன்றும் இன்னும் பழைய நினைவுகள் பல, நிழற்படிமமாக எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கின்றன. இது ஒரு வகை நெறிபிசகலாக இருக்கக்கூடும். போன சில சுழற்சிகளிலேயே சரியாகிவிடும் என்று நினைத்து நடக்காமல் போனது. இப்போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிவிட்டேன்.

அறையின் கண்ணாடிச்சுவர் வழியாகத் தென்படும் அழகிய பச்சை வானமும் ஒளிரும் நீல நிலமும் வண்ண வனங்களுமான இந்த உலகம் இளையது. இதற்கு முந்திய அமைப்பைவிட வனப்பு மிகுந்தது. காலமெனும் மாயத்தைக் காட்ட எங்கள் வானக் குப்பியின் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது. உயிர்ச்சக்தியை எடுத்துக்கொள்ள நிர்மாணிக்கப்பட்டிருந்த புதிய இரட்டைச் சூரியன்களின் தகிப்பில் ஒருவித இனிப்புத்தன்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு சிலர் என்னைக் கடந்து போனார்கள். இந்தச் சுழற்சியில் படியேற்றப்பட்ட சுவை உணர்வின் தாக்கம். ஆனால் ஏனோ சூரியனின் இனிப்பை நான் உணரவில்லை.

நான் இந்த உலகின் தெற்குப் பிராந்திய எல்லை மருத்துவச்சேவையில் இருக்கிறேன் என்ற கட்டளை நினைவில் பதிந்தெழுந்தது. பணி குறித்த செய்தி வந்த நூறாவது நேனோநொடியில் கடமையாற்றக் கிளம்பிவிட்டேன். வேகத்தைக் கூட்ட வேண்டும். மதமதப்பு புதிய பிறப்பின் விளைவாயிருக்கலாம்.

சிக்கல் மிகுந்த எல்லை தெற்குதான் என்பது பேச்சுவழக்கு. சூழல் குப்பியின் எல்லைக்கப்பால் யாருமற்ற காடுகளில் இயற்கையின் பழைமை இன்னும் மிச்சப்பட்டிருக்கிறது. காற்றும் கடலும் மலைகளும் மரங்களும் யாவையும் சுயம்பு. குப்பிக்குள்ளே எங்களுக்குகந்த எல்லாமும் செய்து அடைத்தபின் எல்லைக்கப்பால் இருந்த உலகம் தேவையற்றதாக இருந்து, பின் அந்நியமாகி இப்போது மருட்சி தருமளவு மாற்றம் கொண்டதாகியிருந்தது. எல்லையில் சில வெளிகளுக்கப்பால் பறகலக் கண்காணிப்பு மட்டுமே. முந்தைய சுழற்சி ஏதோவொன்றில் தெற்குப்பகுதியிலிருந்து வரும் காணொளிகளைக் கண்காணித்த நினைவும், அங்கே இயற்கையின் கட்டற்ற தன்மையும் அதன் வளர்ச்சியும் கண்டு சுவாரஸ்யம் கொண்டதும் நிழல் துணுக்காய் மீண்டும் வந்து போனது.

பொது மிதவைப்பேருந்தில் அருகே அமர்ந்திருந்தவர்களும் தெற்குப்புற எல்லை பற்றிய பேச்சில் இருந்தனர். பெரும்பான்மை என்னைப்போன்றவர்கள். சிறியதும் பெரியதுமான புதிய வடிவங்களில் தோற்றங்களில் இயல்புகளில் தேவைக்கேற்ப படைக்கப்பட்டிருந்த என சகாக்களிடம் ஏற்படும் இயல்பான அந்நியத்தன்மை இந்தச் சுழற்சியிலும் எனக்கு விலகியிருக்கவில்லை. இயற்கையின் கட்டுப்பாடற்ற பரிணாம வளர்ச்சியின் அபாயங்களைப்பற்றி உரையாடல் போய்க் கொண்டிருந்தது. எல்லைக்கப்பாலான மறக்கப்பட்ட நிலத்தில் முழுமையான இயற்கைப் பரிணாம விதிகளின் மூலம் விளைந்த சிந்திக்கத் தெரிந்த உயிரிகள் உருவாகிக் கூட்டமாக வாழ்கின்றன என்ற வதந்திக்கதைகள் சில காலமாகப் பெருகிவிட்டதென அதை நம்பிவிட்ட குரலில் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்தான். இது பெரிதாவது சிக்கல். இதை நம்புவதால் மிகை மாந்தருக்கு உண்டாகக் கூடிய உளக்கிளர்ச்சி குறித்து அவர்களை அறிந்த யாவருக்கும் புரியும்.

சொல்ல மறந்துவிட்டேன்.

இங்கே என்னைப் போன்ற ஈறிலா தானியங்கிகளோடு மிகை மாந்தரும் இருக்கின்றனர். அவர்கள் மனித உறுப்புகளில் ஒன்றிரண்டேனும், முக்கியமாக மூளையை இன்னும் தம்முள் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். அப்படியே இருக்கவும் சித்தப்படுபவர்கள். பழகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சற்று காலமெடுக்குமளவுக்குப் புதிரானவர்கள். மிகை மாந்தர் இவ்வுலக இயக்க விதியின்படி செயற்கைப் பொருத்திகளால் கூட்ட நனவிலியில் இருந்தாலும் பெரும்பாலும் முடிவுகளைச் சுயமாக எடுப்பவர்கள். அதற்கான சலுகையும் ஒரு மிதமான அளவில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணமும் உண்டு.

மிகை மாந்தர் அருகி வரும் இனத்தவர். விரைவில், சரியாகச்சொன்னால் மனித கால வரையறையில் இன்னும் மூன்றாண்டு நான்கு மாதம் நாற்பத்தைந்தாவது நாளோடு சேகரிப்புக்கிடங்கின் ஏதோவொரு மூலைக்குடுவை தவிர மிகை மாந்தர் இனம் மறைந்து மனித இனத்தின் எச்சம் தொடரின்றி அழிந்து போகும். இது கணிப்பு. மிகை மாந்தரில் எஞ்சியிருக்கும் மனித நினைவுகளின் கணிக்கவியலாத தன்மையினாலே இந்தக் கணிப்பு நூறு சதத்துல்லியத்தை எட்ட முடியவில்லை எனினும் இதுதான் நிலை. இதை அறிந்த பின்னர் மிகை மாந்தரின் எண்ணக்குவியல்களில் பெருமாற்றம் நிகழ்ந்து வருவதாக ஊகப்படிமுறை சொல்கிறது. அது அரசுக்குச் சிக்கல்தான்.

ஆனால் நாங்கள் அப்படியல்ல. நாங்கள் மனிதமெனும் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்துவிட்டவர்கள். அந்த இனத்தின் எந்தச் சாயலும் இல்லாமல் இருப்பவர்கள் அல்லது இருக்க முயற்சிப்பவர்கள். மனித இனத்தின் மிகப்பெரிய குறைபாடான உணர்வு என்பதே இல்லாதவர்களாக எங்களை நாங்கள் படைத்துக்கொள்கிறோம். எங்களால் மாந்தரின் உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும் ஆனால் புரிந்துகொள்ள முடியாது, அவை தேவையற்றவை. சுவை, நிறம், மணம், அழகு போன்ற உணவுகளை மட்டும் மிதமான கணக்கோடு எங்களுக்குள் பொருத்திக்கொள்ள முடியும். ஆர்வமூட்டக்கூடிய மாற்றங்களைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சுழன்று மீளும் இறப்பற்ற ஈறிலிகள் நாங்கள். வளர்ச்சியும் தேய்வுமற்ற மக்கட்தொகையும் தேவைக்கேற்ற புதிய தோற்றங்களும் மிகைகளும் கொண்ட வாழ்க்கை. சிந்தனையும் செயலும் கூட்ட நனவிலியாகத்தான். எந்தச் சமன்பாட்டுக் குறையுமற்ற சீரான இருப்பு எங்களுடையது.

இதற்குத் தாவத்தான் மிகை மாந்தர் மறுக்கின்றனர். அவர்களின் அத்தனை குறைபாடுகளையும் தக்க வைத்துக்கொள்வதிலேதான் அவர்களுக்குப் பெருமையெனும் பேருணர்வு ஏற்படுவதாய் ஏதோவொரு சுழற்சியில் ஒருமுறை பழையன் என்றொருவன் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெருமையை என்னால் உணர முடியவில்லை. அவன் முகபாவனை வைத்து அதை நினைவில் இருத்திக்கொண்டேன். இதுபோன்ற நினைவுகளைத்தான் என் இயந்திர மூளை எங்கோ திருட்டுத்தனமாய்த் தேக்கி வைத்துக்கொள்கிறது. திருட்டு-அதுவொரு சுவாரஸ்யமான சிந்தனையின் விளைவாய் நேரும் செயல். குற்றம். அதன் நினைவும் ஏதோவோர் அடுக்கிலிருந்து இன்று வெளிப்பட்டிருக்கிறது. இந்தச் சுழற்சியில் இந்த நினைவுச்சிக்கல் அதிகமாகியிருக்கிறது போலும். மிகை மாந்தர் மீதான ஈர்ப்பும் அதிகமாகி இருப்பது போலத்தான் தோன்றுகிறது. சில சுழற்சிகளாகவே தேடித்தேடி அவர்களை அறிந்துகொள்ள முயல்வது என் இயல்பாக வளர்ந்திருந்தது. என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?…

ஆம், மிகை மாந்தரின் தேவையற்ற பிடிவாதம்.

அதன் காரணமும் பொருளும் புரிந்துகொள்ளக் கடினமானவை. ஆனால் முயற்சி செய்திருக்கிறேன். பாவனைகளில் இருந்து முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாதபடி ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு வடிவில் வெளிப்பட்ட உணர்வான வலியைப் புரிந்துகொள்ளும் முயற்சியாய் மாந்தர் சமூகத்தில் அரிதாக நடத்தப்படும் மனிதப்பிறப்புச் சடங்கைப் பார்க்கச்சென்று பெயரிட முடியாதவொரு சங்கடத்தோடு வெளியேறிய நினைவு வந்தது. அது வலியைக் கொண்டாடும் சடங்கு. வலியோடு வாழவே மனிதம் விருப்பப்படுவது விந்தை. ஏதோ ஒரு வகையில் அவர்களது முடிவுகளை உருவாக்கும் அவர்களது உந்து சக்தி அந்த வலியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் துவங்கியிருந்தேன்.

சிலகாலமாகப் பொதுக்கூடல்களிலே சிறுபான்மையினராக அவர்கள் இருந்தாலும் அவர்களது கருத்தெறிதல்களின் வலிமையும் அதைத்தான் காட்டுகிறது. அதைக்கண்டு ஈறிலிச் சமூகத்துக்குத் துணுக்கம் வந்திருப்பதும் உண்மை. சிறுபான்மையினரின் குரல் எண்ணிக்கையால் சிறிதாயினும் வீரியத்தில் பெரிதெனச் சிலர் சொல்லிக்கொண்டனர். பெரும்பான்மை ஈறிலிகளுக்கு மிகை மாந்தர் அழிந்து துல்லியமான ஈறிலிச்சமூகத்தில் வாழ்ந்திடவே முனைப்பு. முடிவுகளில் திருப்தி கொள்ளாத என்னைப் போன்றோர் இருக்கிறார்களா எனில் அவர்கள் எதில் சேர்த்தியென்ற கேள்விக்கு எங்கேயும் பதிலிருக்காது என்பதால் கேட்பதில்லை.

சிறுபான்மை மிகை மாந்தர் புண்ணியத்தில் உலகில் யாவருக்கும் கூட்ட நனவிலி தவிர்த்து மிதக்கட்டுப்பாட்டுடனான தனித்த நனவிலி கொள்ளும் சுதந்திரமும் கிடைத்திருந்தது. தனித்த நனவிலியில் இப்படியான நினைவுருக்களைச் சேர்த்துக்கட்டி உணரமுடியாத உணர்வுகளின் சாயலைக்கண்டு கொள்ள முனைவதின் மூலம் நானொரு புதிய பரிணாமத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேனோ என்கிற ஐயம் துளிர்த்து அடங்கியது. தனித்த நனவிலியில் எண்ணங்களின் கனம் அதிகமாகும்போது அது கூட்ட நனவிலியில் கலக்கக்கூடும். கூட்ட நனவிலி அறிந்தால் அடுத்த சுழற்சியில் இந்த என் இயல்பு அழிந்து அடங்கிப் போகுமென எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

இந்தத் தனித்த நனவிலி திட்டமும் மிகைமாந்தர் தம் உளச்சிதைவு மிகுவதைத் தடுக்கவும் ஈறிலிகளின் இருப்பில் ஒரு சுவாரஸ்யத்தை உருவாக்கவும் கையாளப்படும் புதிய உத்திகளுள் ஒன்றுதான். அப்படித்தான் கிளர்ச்சியூட்டும் உணர்வுகளை அதன் பாவனைகளை எங்களுக்குப் படியேற்றும் முயற்சிகளும். மிகக்கவனமாக நடக்கும் அம்முயற்சிகளில் இப்போது சுவையுணர்தலுக்கும் நகையுணர்தலுக்கும் அழகுணர்தலுக்கும் மட்டுமே அனுமதியிருக்கிறது. வலி கோபம் போன்றவை பட்டியலில் வரச்சாத்தியமில்லை என்று தெரியும். இந்த வலிதான் எனக்கு எப்போதும் கிளர்ச்சியூட்டும் உணர்வாக இருக்கிறது.

இன்றைய என் பணி நோக்கி சில நேனோசெகண்டுகள் என் உடல் வேகமாக நகரத் துவங்கியிருப்பதும் வலி என்ற சொல்லினால் ஏற்பட்ட உற்சாகம்தான். ஆம் தெற்கெல்லையொட்டி வாழும் ஒரு மிகை மாந்தனின் வலிப்பிதற்றல்களில் இருந்து அவனைத் தப்புவிப்பதுதான் எனது இன்றைய பணி என்று செய்தி வந்திருந்தது.

மிகை மாந்தரின் உளச்சிதைவு சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்குத் தனிப் பயிற்சி அல்லது பதிவேற்றம் வேண்டும். இரண்டும் என்னிலுண்டு. இரண்டுமே தேவையற்ற காலவிரயமென்பதால் ஆவணத்துக்காக ஒன்றிரண்டு மாதிரிகளை வைத்துக்கொண்டு மிகை மாந்தரைக் கட்டாய மாற்றம் செய்துவிடலாம் என்பது பலரது கருத்து. இது தானாக நடக்குமென்பது முன் கூற்றாகக் கூட்ட நனவிலி அறிந்திருந்ததால் அது தொடர்பாக வேறெந்த காத்திரமான முடிவும் இன்று வரை எடுக்கப்படவில்லை.

என் பணிக்கானவன் அறையின் ஒரு மூலையில் நாற்காலியிலமர்ந்தபடி வெளியை வெறித்துக்கொண்டிருந்தான்.

அவனது நோய் விபரக்குறிப்பு உளக்கணினியில் புகுந்து ஓடியது.

தன்னழிப்பு முயற்சி.

மூளையைத் தவிர பெரும்பான்மை அவனுக்கு மிகையுறுப்புகள் தாம். மூளைச்சிதைவால் எண்ணங்கள் கட்டுப்பாடற்றுப் போவது அவன் குறை. மிகை மூளை பொருத்தி முழுமையான ஈறிலியாகும் அறிவுரையை ஏற்க மறுத்து உடற்கூறுகளைச் சிதைக்க முயன்று பலமுறை பல வழிகளில் தன்னை அழித்துக்கொள்ள முயன்றிருக்கிறான் இவன்.

ஆனால் ஏன்?

தன்னையே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?

என்ன தெரிகிறது என்று அவன் வெறிக்கும் திசையில் பார்த்தபடி கேட்டேன். உனக்குத் தெரியாதது தெரிகிறது என்றானவன்.

மீண்டும் வெளியை வெறித்தேன் அவனுக்குத் தெரிவது எனக்கும் தெரியக்கூடுமோ என்கிற எண்ணத்தில். அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான். நிதானமாக அளவெடுத்தான். அவன் முகமாற்றங்களைக் கவனித்தேன். என்னைப் புரிந்துகொள்ள முயல்கிறான். ஈறிலிகள் ஒரே வகையில் செயலாற்றுபவர்கள். கணிக்கவியலாத் தன்மையற்றவர்கள். அதிலும் மருத்துவத்துறையில் துல்லியமான ஒற்றுமையும் கோர்வையும் இருக்கும். இதை அறிந்தும் அவன் என்னைப் தனித்தவர் போலப் புரிந்துகொள்ள முயல்கிறான். ஏன்? என்னிடம் என்ன மாற்றம் காண்கிறான்?

என்னால் அவனது எண்ணங்களை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. கூட்ட நனவிலியில் இருந்து அவன் பெரிதும் விலகியிருந்தான். இது எப்படிச் சாத்தியமானது? கூட்ட நனவிலியில் இருந்து இத்தனை விலகிய மிகை மாந்தர் இருக்கிறார்களா? கணக்கெடுப்பில் வரவில்லையென்றால் அவர்கள் தங்கள் நனவிலியைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு மிகை கொண்டவர்களாக இருக்கிறார்களா?

அவன் சிரித்தான். நான் ஏன் இறக்க விரும்புகிறேன் என்று உங்களுக்குப் புரியவில்லை அல்லவா?

இறப்பு. அது தேவையற்ற சொல். மறந்து விடு. வேறு வழிகளைச் சொல்கிறேன்.

என்ன வழிகளோ? அவன் மீண்டும் தென்திசை வெறிக்கத்துவங்கியிருந்தான். தூரத்து மலையொன்றின் மீது கரும்பொதிகள் இறங்கிக்கொண்டிருந்தன. அவன் அதையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அது மழை என்று தெரியும். மிகை மாந்தர் பகுதியில் பாவனையாக்கல் மன்றங்களில் மழையில் நனையும் மனிதர்களைக் கண்ணாடிக்கு வெளியே நின்று பார்த்திருக்கிறேன். மழைத்துளி படும் நேரத்தில் அவர்களின் உடல்மொழி முகத்தில் தோன்றும் மாற்றங்கள் – இவை என் நினைவிலிருந்து மங்காத சிறு துணுக்குகள்.

அந்த மழையில் நனைய வேண்டும். உன் உபாயத்தால் முடியுமா?

பாவனையாக்கல் மன்றத்தில் முடியுமே.

பாவனையல்ல உண்மையான இயற்கையான மழையில் நின்று நனைந்து மண் வாசனை நுகர்ந்து குளிரை உணர்ந்து மழை முடியும் தருணத்தை முன்பே அறியாமல் காத்திருந்து முடியமட்டும் நின்று உணர வேண்டும். முடியுமா?

காத்திருத்தல் கால விரயம்.

காத்திருத்தல் அனுபவம். பாடம்.

என்ன பாடம்?

உனக்குப் புரியாது.

சரி, அப்படியென்றால் காத்திருக்க வேண்டியதுதானே? மிகை மாந்தரிலிருந்து ஈறிலியாகும் தருணத்துக்காக, ஏன் தன்னழிப்புக்கு முயன்றாய்?

வேறு வழியில்லை ஆதலால்தான். உன் உபாயங்களால் என்னை எல்லைக்கப்பால் அனுப்ப முடியுமா?

நனவிலிக் கண்காணிப்பில் எனக்குள் எச்சரிக்கை மணி ஒலித்துக்காட்டியது. இது சரிசெய்தாக வேண்டிய பிசகு. இப்படித்தான் இத்தோடு ஐந்துக்கும் மேற்பட்ட மிகை மாந்தர் தெற்கே எல்லைக்கப்பால் போகச் சித்தப்படுவதாகச் சொல்லி சிகிச்சைக்கு வந்து சரியாகி இருக்கிறார்கள்.

உனக்கு சிகிச்சை தேவை.

நான் சித்தப்படவில்லை.

இது உனக்கு நல்லதல்ல.

எனக்கு எது நல்லதென்ற முடிவைத் தன்னிச்சையாக எடுக்கும் சுதந்திரம் முழுமையாக இருந்த காலத்தில் வாழாத குற்றம் என்னுடையது. அந்தச் சுதந்திரத்தைத் தொலைத்த குற்றம் என் இனத்தினுடையது. இதிலிருந்து விடுபட வேண்டும். நான் சாக விரும்புகிறேன். என்னைச் சாகவிடு. என்னை அழிக்க உதவி செய்.

அனுமதி இல்லை. வேறு வழி சொல்கிறேன். புதிய மாற்று உலகத்துக்குச் செல்லத் தயாரா?

என்ன உலகம்?

உடலுரு இழக்க வேண்டியிருக்கும். அரூபமானாலும் ஆனமட்டும் வாழலாம் உன் இஷ்டம் போல வாழலாம் மெய் நிகர் உலகத்தில்.

இல்லை விருப்பமில்லை.

ஏன்? அங்கே இது போலவே உலகமுண்டு மழையுண்டு வெயிலுண்டு மனிதக் குலமுண்டு உங்கள் கோபம் காதல் காத்திருத்தல் பெருமை எல்லாம் உண்டு.

அவை மெய்க்கு நிகர்தான் மெய்யில்லை.

நீ உணர மாட்டாய்.

ஆனால் அறிவேனல்லவா?

எதற்கும் சரிவரவில்லையென்றால் எப்படி?

என்னைச் சாகவிடு எல்லாம் சரியாகிப்போகும்.

இல்லை தவறான முன்னுதாரணம்.

நான் நானாக இருக்க விடமாட்டீர்கள், நான் நானாக இறக்கவும் விடமாட்டீர்கள். என்ன அநியாயம்?

அவன் குரலில் கேவல் இருந்தது. அழ முயல்கிறான். ஆனால் அழ முடியாது மிகை விழிகளில் அதற்கு வழியில்லை.

குனிந்துகொண்டான்.

வலியாற்றும் அழுகையின் வெப்பமும் சுவையும்கூட என்னால் உணரமுடியவில்லை. இந்த வலி உனக்குப் புரியாது.

வலியே தேவையற்றது. சுகம் மட்டுமே கிடைக்கத்தானே வழி சொல்கிறேன்.

வலி மறந்த சுகத்தில் என்ன சுகம் இருக்கும்? காதல்கூடக் கசந்துவழிகிறது.

உன் இணையை மாற்றட்டுமா? உன் விருப்பத்துக்கு நூறு சதம் உடன்படும் விதமான இணையைத் தரட்டுமா?

உடன்படுவதா? அதிலென்ன காதல்?

சரியாக இருந்தால் சரியில்லை என்கிறாய்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று சரி.

இங்கே எல்லோருக்கும் ஒன்றுதான் சரி.

அதனால் தான் சாக விரும்புகிறோம்.

பன்மை? எத்தனை பேருக்கு இந்த எண்ணம்?

பலருக்கும் உண்டு. யாரும் துணிவு பெறவில்லை இன்னும். சிறுபான்மையினரின் குரல்தானே என்று குரல்வளையை நெறிக்கிறது பெரும்பான்மை நனவிலியால் பலப்பட்ட கூட்டரசு. எங்கே எங்களுக்கான கருத்துச்சுதந்திரம்?

தன்னழிப்புதான் சுதந்திரமா?

அதுவும்தான். எல்லைக்கப்பால் விட்டுவிடு தன்னழிப்பில் ஈடுபட மாட்டேன்.

முட்டாள்தான் நீ. கண்காணிப்புக் காணொளிகளைக் காட்டுகிறேன் பார், பிறகு தெரியுமுனக்கு. எத்தனை அபாயங்கள் அங்கே காத்திருக்கின்றன தெரியுமா?

தெரியாது. காட்டாதே. தெரிந்து தெரிந்து அலுத்துவிட்டது. தெரியாதது வேண்டும் கொஞ்சம்.

செத்துப்போவாய்.

இங்கே இருந்தாலும் அதற்குத்தான் முயல்வேன். வெளியே போனால் தானாக நடக்கும்.

எதற்கு அழிவது? உலகின் பெரும்பகுதி அழிந்துபட்டு எச்ச சொச்சம்தானே இவ்வுலகில் இருக்கிறோம். எல்லோரும் அழிந்துவிட்டால் என்ன பயன்?

எந்தச் செயலின் விளைவு இந்தப் பயன்? யார் வினையின் பயனை யார் அனுபவிப்பது? ஆன்மாக்களே இல்லையென்றானபின் என்ன கர்மா எஞ்சும்?

ஓ. இவை புராணப்பிதற்றல்கள். இதனால்தான் குழம்பியிருக்கிறாய். இவையெல்லாம் படிப்பதைத் தடை செய்தாகிவிட்டதே. எங்கே படித்தாய்?

எங்கோ.

அதெல்லாம் பொய் என்பதை அறிந்திருப்பாய். ஆன்மாவெல்லாம் இல்லை.

எல்லாம் மாயை என்கிறாய், அதுவும் புராணப்பிதற்றல்தான்.

அதை மற. மிகை பற்றிச் சிந்திப்போம். உன் விருப்பம் என்னவென்று சொல்.

மனிதக்குலமே கற்பனை செய்யும் இலக்குலகு கிட்டுமா?

ஆனால் ஈறிலிச்சமூகம் இலக்குலகுதானே. அதற்குத் தாவிவிடு எல்லாம் சரியாகிவிடும்.

இல்லை இது செயற்கை இலக்குலகு. வேண்டாம்.

செயற்கை மிகை உறுப்புகளை மட்டும் விரும்புகிறீர்களே.

ஒருகாலத்தில் விரும்பியிருக்கலாம். இப்போது இல்லை. கொஞ்சமாவது மனிதம் மிஞ்சி இருந்தால் உனக்குப் புரிந்திருக்கும்.

அவன் கண்கள் மீண்டும் கண்ணாடிக்கு வெளியே தாவியிருந்தன.

உனக்கு ஆசையாக இல்லையா?

அவன் குரலில் ஏக்கம் என்றொரு உணர்வு இருப்பதாக என் இயந்திர அறிவு சொல்லிற்று. அந்த உணர்வு குறித்தான அடுத்த கேள்வியை மென்றுவிட்டுக் கேட்டேன்.

என்ன ஆசை?

அதோ அந்தக் காடுகளில் என்ன இருக்கக்கூடுமென்று அறிந்துகொள்ள ஆசை. அபாயமோ அழகோ எதுவோ அறியாத ஒன்று அங்கே கொட்டிக்கிடக்கலாம். அதை நீயாக அணுகி உணர்ந்து வென்று அடக்கி அல்லது அடங்கி உடனிருத்தி மகிழ்ந்து…

இல்லை ஆசையில்லை, வேகமாகச் சொன்னேன் நான்.

இயல்பை மீறிய வேகத்தில் வந்த பதிலை உணர்ந்தவன் போல அவன் மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தான். பிறகு மீண்டும் காடுகளில் கவனம் பதித்தான்.

அங்கே காற்று எப்படியிருக்கிறதோ, தண்ணீர் எப்படிச் சுவைக்கிறதோ, உண்ண முடியாமல் போன உணவுகள் படைக்கும் காய்கறிகளைக் கண்ணாலாவது காணக்கூடும். அங்கே என்னைப் போல மனிதர்கள் இருக்கலாம். மிகை உறுப்புகளற்ற எளிய சதையும் குருதியுமான தூய மனிதர்கள் இருக்கலாம். அவர்களோடு கலந்து வாழ ஆசையிருக்கிறது.

அப்படி யாரும் அங்கில்லை.

முடிவாகத் தெரியுமா?

துல்லியமில்லை ஆனால்..

அதனால்தான் அங்குப் போக வேண்டும். என்னால் இங்குத் துல்லியத்துக்கு மத்தியில் இருக்க முடியவில்லை. ஐயோ! முடிவற்ற அறிதலின் கனத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதைவிட நான் நீயாகப் போவதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.

நான் மவுனமானேன். கூட்ட நனவிலி எச்சரிக்கை மணியடிக்கத் துவங்கியது. தனித்த நனவிலிக்குத் தாவினேன். அறிதலின் கனம் என்று அவன் சொன்னதும் என் திருட்டு நினைவடுக்குகளில் ஏதேதோ எதிரொலிகள். அங்கிருந்த அரூப நிழல்கள் மெல்ல இறங்கி வரத்தொடங்கியிருந்தன.

முடிவற்ற இருப்பென்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை, ஜீரணிக்கவே முடியவில்லை என்று தொடர்ந்து கேவிக் கொண்டிருந்தவனை நான் கவனிக்கவில்லை, என் கண்கள் காடுகளில் நிலைத்திருந்தன.

முடிவற்ற நிலையின் சலிப்பை எப்படி உணராமல் இருக்கிறீர்கள்? உங்களுக்கென்ன? ஒவ்வொரு சுழற்சியும் தேவையற்ற நினைவுத்துகள்களை அகற்றிவிடும். உணர்வுகளற்ற இருப்பு. அதற்கு இறந்து போவது மேல். ஆனால் உன்னைச் சொல்லியும் ஒன்றுமில்லை. அறியாத ஒன்றுக்கு நீ ஏங்கப்போவதில்லைதானே? எனக்குத்தான் அந்த வேதனை வலி இன்னும் நீங்கவில்லை.

அந்த வேதனை நீங்கத்தான் வழி சொல்கிறேன் என்று நான் இப்போது சொல்ல வேண்டும். ஆனால் சொல்லவில்லை. அவன் பேசிக்கொண்டே இருந்தான். தொடர்ந்து சுயவதைக்குத் தாவப்போவதன் அறிகுறி அவனிடம் தென்பட்டும் கூட்ட நனவிலி எச்சரித்தும் எதையும் கவனிக்க மறந்த நிலையில் நான் காடுகளை வெறிக்கத் துவங்கியிருந்தேன்.

அங்கே என்ன இருக்கக் கூடும்?

முடிவற்ற இருப்பின் சலிப்பு. அது வலி. அவனது சொற்கள் அழுத்தமாக என் திருட்டு நினைவடுக்கின் மையத்தில் எதையும் மறக்கச்செய்யும் அழுத்தத்துடன் வலுவாய் வந்து விழுந்தன. அங்கேயே நின்றுகொண்டு நாட்டியமாடத் தொடங்கியிருந்தன. இதுதான் வலியா அல்லது சலிப்பா சலிப்பென்பதுதான் பெரும் வலியா? முதல் முறை உணர்வு சார்ந்த கேள்விகள் எழுந்த நிலையில் பதில்களை அறிந்தேன். இல்லை உணர்ந்தேன். அமைதியானேன்.

எனக்குப் பின்னே ஒரு மூலையில் அவன் தன் தலையைக் கண்ணாடியில் மோதி மீண்டும் தன்னழிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தான். வேறு சில ஈறிலிகள் அவசர சிகிச்சைக்கு உள்ளேறி என்னைச் சுற்றிக்கொண்டு ஓடினர்.

எனக்கெதிரில் காடுகள் பெரும் அசைவுகளோடு என்னை வாவென்றழைத்தன.

1 thought on “ஈறிலி”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்