தேவதேவன் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

சந்தித்தபின்தான்

வட்டம் வரைகையில்
வீச்சோடு அவன் தொடங்கிய புள்ளியை
மீண்டும் அவன் சந்திக்கும்வரை
வீச்சிலே பயணம் செய்துகொண்டிருந்தன
புள்ளியினின்றே பிறந்து
புள்ளிகளும் இயக்கமுமான ஆற்றல்.
சந்திந்தபின்தான்
புள்ளிகளுமில்லை பயணமுமில்லை
இருந்தது பூஜ்யம்
பேரியக்கமெனும் பூஜ்யம்


ஏதோ ஒன்று

தோன்றிய போதோ
அல்லது
இதுவரை இருந்தவை மறைந்தபோதோ
இரண்டற்ற ஒருவேளையில்தான்

ஏதோ ஒன்று
சொல்வதற்கு இருந்தது
அதுதான் அவனை
இவ்வளவுதூரம்
இழுத்துக்கொண்டே வருகிறது.

‘நான்’ அல்ல அது.
நிச்சயமாக வேறு யாரோவும் அல்ல
ஏதோ ஒன்று.

காணமுடியாததல்ல அது
மிக எளியதாகக்
காணக்கூடியதாகவே இருக்கிறது
சொற்களாக அன்றி
கண்டவர் இயற்றக்கூடிய
செயலாக
காட்சியாக
உணவாக
இருக்கிறது அது.


வீண்

சிந்தாது விளிம்பு நிறைந்து ததும்பும்
அமுதுக்குவளைபோல்
அவர் நின்றார்.

தான் வாய்திறந்தால்
பருகிவிடக் கூடியவரிடமே
பேசுவார்போல் ஒளிர்ந்த பெருந்தெய்வம்.

அவர் உருஉடலையும்
உருஒலியையும் மட்டுமே காண்பவர்களிடம்
தான் வீணாவதைத் தவிர
வேறு வழியில்லை அவருக்கு.


வளிமண்டலத்தை உருவாக்கிய

வளிமண்டலத்தை உருவாக்கிய
இயற்கையைக் காக்கிறது வளிமண்டலம்
தாயைக் காத்துக்கொள்ளும் மகவாய்.

யார் உருவாக்கிவிட்டார்கள்
பூமியைச் சுற்றிய இந்தக் கருமண்டலத்தை?
தற்கொலையை?

வேதனிக்கும் நெஞ்சினால்
இப்போது இந்த முழுநிலவையும்
இழந்துவிடக்கூடாது.

வலிகள் நீங்கும் வழியும் வெளியும் நிலையமும்
ஒன்றே என்பதைக்
கண்டாக வேண்டும்.

காண்பதற்கு வேண்டியவை
கண்கள்;
கடவுள்கள் அல்ல.


இருக்கை

காத்திருப்பதைப் போலவோ
கண்டு அமர்ந்துவிட்டதைப் போலவோ
பணி செய்வதைப் போலவோ
பரிவு கொண்டதைப் போலவோ
தானே தான் ஆனது போலவோ
எப்போதும் இருக்கும்
தயார் நிலையைப் போலவே
சோர்வென்பதே அறியாத்
துறுதுறுப்புடனே இருந்து அது.

அவன் போய் அதில்
அமர நெருங்கிக் கொண்டிருந்தான்

தலையில்லை
கைகளில்லை
கால்களில்லை
உடலேயில்லை
யாரோ அமர்ந்திருப்பது போல்
அமர்ந்து கொண்டிருந்தது நாற்காலி.

அவன் போய் அதில்
அமர நெருங்கிக் கொண்டிருந்தான்

இந்த நினைவுகள் தவிரவும்
வேறேதோ ஒன்றுடன்தானே
இருக்கிறது இந்த நாற்காலி?

அவன் போய் அதில்
அமர நெருங்கிக் கொண்டிருந்தான்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்