கருங்குழிப் பயணம்

< 1 நிமிட வாசிப்பு

சதுரம் உருண்டையை
அறியும் முயற்சியாய்
விண்வெளியின் கருவூலங்களைத் தோண்டும்
கடலோடியாய்க் கிளம்பினேன்

இருள் சூழ்ந்த இறந்த காலம்
என் எதிரினில்
இருட்டு கண்களிலா?
ஒளி இறந்துவிட்டதா?

விண்வெளி விரைவுப்பாதையில்
இயற்பியல் வெளியேறும்
ஒருவழி வீதியில் செல்ல
எத்தனை எத்தனித்தும்
எடை மட்டும் குறையவில்லை

கடலாழத்தின் பாசிபோல்
கருங்கடல் நடுவே அசையாமல் நின்றேன்
அசைவும் இயக்கமும் காலச்சிதைவில்
மட்டுமே உணர்ந்திட
இறைவனார் இங்கே
பூச்சியத்தால் வகுத்தனர் போலும்

அண்டத்தை எள்ளிலிட்ட
விந்தை கண்டதும்
பாற்கடல் நக்கிட முயன்ற
கம்பனின் பூனையாய்
ஏமாந்து நின்றதென் பிராணன்

தலைகால் தெரியாமல்
ஆடிய தலை ஒவ்வொன்றும்
கருத்த அக்காளியால் அறுத்தெறியப்பட
மலையை மயிரைக் கட்டி இழுத்தேன்
மயிரின் நீளம் போதவில்லை

பரிச்சயமான திணிவுகள் எல்லாம்
புரட்சிகள் செய்திட
பிரகிருதியில் இருந்து
நிதர்சனம் வெளிநடப்பு செய்தது

கணிதத்தால்
இடமும் நேரமுமாய்
பிடித்துவிட முடியாத
ஒளி திருடும் கள்வன்
நடுநாயகமாக வீற்றிருக்கிறான்

திணிவுகள் சமைத்திடும்
தாரகைத் தாயின்
தியாகத்தில் பிறந்து
அடிமுடி கண்டிடா
அயனும் அரியும்
மறுபடியும் தோற்றுப் போக
வெளியிலே பிழையாய்
உதித்தது இக்கருத்த
மாபெரும் விந்தை

இலங்கை அந்தணன் போல்
தலையிழந்து புலனிழந்து
அறிவுக் கணைகள்
அனைத்தும் இழந்து
இறையைக் கண்டேன்
இருளில் சரணடைந்தேன்


ஓவியம்: டிராட்ஸ்கி மருது

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்