மின்னெச்சம்

12 நிமிட வாசிப்பு

1

சில நினைவுகளை இழக்க விரும்புகிறேன். இறப்பதற்கு முன்பு ஓயாமல் பதில்களை வேண்டி என்னை அரித்துக்கொண்டிருந்தவை அவை. சூழ்நிலைகளால் உருவானவை, நானே உருவாக்கியவை எனச் சில நினைவுகள். எனக்காக அதை நீ என்னிடமிருந்து அழித்துத் தருவாயா? வாழ்வு போன்ற ஒன்றில் அவை இல்லாமல் நாட்கள் எப்படி நகர்கின்றன என்பதையறிய விரும்புகிறேன். உடலற்ற இந்த இருப்பில் ஓர் அனுகூலம் உண்டென்று உனக்குப் புரிகிறதா? நினைவுகளில் தேவையற்றதை நீக்கி அதன் அழுத்தத்தைக் குறைத்து ஏதோவொரு மின்னொடியில் ஏதுமற்றவனாக மட்டும் நான் எஞ்சியிருப்பேன் அல்லது எனக்கு வேண்டுவனவற்றை மட்டுமே கொண்டிருப்பவனாக இருப்பேன். கொஞ்சம் யோசித்துப் பாரேன், இதற்காகத்தானே இந்திய மண்ணில் இன்னமும் துறவிகள் வாசல் நீங்குகிறார்கள், கையேந்தி உண்கிறார்கள், பாதங்களால் அளக்கிறார்கள், அப்படிச்செய்தும் நான் அடையவிருக்கும் நிலையை எய்த முடியாமல் பித்தனாகித் திரிபவர்கள்தான் அதிகம். அறிவியலின் துணைகொண்டு இவ்வுலகில் இறப்புக்குப் பிறகும் எஞ்சியிருக்கிறேன். வாழ்ந்து முடித்த என்னின் நீட்சியாக இருக்க விருப்பமில்லை, என்னைவிட மேம்பட்ட ஒரு பிரதியாக இருக்க விரும்புகிறேன். அதை நீதான் எனக்காகச் செய்துதர இயலும். கணக்குப்பாடத்தை விரும்பாத குழந்தையொன்று தவறுதலாக வரைந்துவிட்ட யானையின் ஐந்தாவது காலை யாருக்கும் தெரியாமல் அழிப்பது போல, என்னைக் கொஞ்சமாக அழித்துவிட உன்னைக் கோருகிறேன். என்னவளிடம் அல்லாமல் இதை யாரிடம் கேட்பது?

இதைக் கேட்கவா உயிரை விட்டாய், ஐந்தாண்டுகள் மட்டும் சேர்ந்துவாழ எதற்காக என்னைக் காதலித்தாய், இதன் அர்த்தம் என்ன பார்த்தீ? உன்னை மறக்க உன் நினைவுகளை இழக்க என்னையும் உன்போலச் சாக அழைப்பாயா? நம் மகளுக்கு என்ன பதில் சொல்வது, உன் தந்தை இறந்து தனது மூளையைக் கணினியில் சேமித்து வைத்திருக்கிறார் என்றா? அவள் இணையத்தில் பேய்க்கதைகளை விரும்பிப் பார்க்கிறாள். உன்னைப் பேயென்று கொள்ள மாட்டாளா? உயிர் துறக்கும் அளவுக்கு என்னுடனான வாழ்வு உனக்குக் கசந்துவிட்டதா, என்னைத் திருப்திப்படுத்தும் ஒரு பதிலைச் சொல்லேன்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இருக்கலாம், 2010 என்று நினைக்கிறேன். பள்ளிப்படிப்பின் இறுதியில் காந்தியை அறிமுகம் செய்துகொண்டேன். காந்தியைக் காட்டிலும் காந்தியர்கள் என்னை அதிகம் ஈர்த்தனர். குஜராத்தில் தனது 94ஆம் வயதில் துவாரகதாஸ் ஜோஷி என்னும் கண் மருத்துவர் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தி பேசப்பட்டது. உண்மையில் அப்போது எனக்கு அதுவொரு மறைகழண்ட முடிவாகத்தான் தோன்றியது. ஆனால் தற்கொலை செய்துகொள்வது என முடிவெடுத்தபின் அந்த மருத்துவரின் பெயரைப் பக்க எண் மறந்துபோன புத்தகமொன்றின் அடிக்கோடிட்ட வார்த்தையென மீட்டு மீண்டும் மீண்டும் உச்சரித்தேன். அவர் நான்கு லட்சம் நோயாளிகளுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்தவர் என்பதை அறிவாயா? எதற்காக அவர் வடக்கிருந்து உயிர் துறக்க வேண்டும், அவரது பயணத்தின் நோக்கம் நிறைவேறியது என்பதைத் தவிர வேறென்ன? அதற்கும் வயதிற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நீ நம்புகிறாயா? முப்பத்து எட்டு வயதில் நான் உச்சத்திலிருந்தேன், திரும்பிவர எனக்கு விருப்பமில்லை. மனித மூளையைக் கணினிமயமாக்குவதன் ஆராய்ச்சியை முப்பது சதவீதத்திலிருந்து தொண்ணூறு சதவீதத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன், நரம்புத்தகவலியல் ஆய்வாளனாக இனி எனக்கு வேலையில்லை என்று தோன்றியது. போதும் என்றானது. மனிதப்பிறவி மரணத்துக்கு உட்பட்டது என்பதையே சந்தேகிக்கும் உரிமையை உங்களுக்குத் தந்திருக்கிறேன். புழக்கத்தில் இருக்கும் எந்தவொரு மின்சாதனத்திற்கு உள்ளும் மூளையை நகலெடுத்து நான் உயிர்கொள்ள முடியும். எனக்கு உயிரில்லை நினைவுண்டு, நோயில்லை காலமுண்டு, பிறவியில்லை பிறப்புண்டு, எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவில்லை, சாகாவரமுண்டு. இதை நிரூபிக்க ஒரு எலியின், அநாதைப் பிணத்தின் மூளையை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய விருப்பமில்லை. நானும் என் அறிவும் வேறு வேறன்று, நானே என் கண்டுபிடிப்பு. இதை உலகிற்குச் சொல்ல வேண்டுமென்று தோன்றியபோது தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். உயிருள்ள ஒருவனின் மூளையைக் கணினிமயமாக்கும் தொழில்நுட்பத்தை வருங்காலம் கண்டுகொள்ளும், ஆனால் அதன் மூலமாக என் மூளை இருக்க விரும்பினேன். இதை முதலில் செய்தவன் நானாக இருக்க நினைத்தேன். என்னை முடித்துக்கொண்டேன், நிச்சயம் எஞ்சியிருக்கப்போகிறேன் என்ற நம்பிக்கையில்.

நீ வெறும் ஆய்வாளன் மட்டும்தானா, மனைவி மகள் குறித்த உணர்வுகள் இல்லையா, உன் ஆய்வுக்காக எங்களை ஏன் பலி கொடுத்தாய்?

நம் மகளுக்கு என்ன பதில் சொல்வது, உன் தந்தை இறந்து தனது மூளையைக் கணினியில் சேமித்து வைத்திருக்கிறார் என்றா?

உன்னிடமிருந்து முதன்முறை வந்தாலும் வரலாறு கேட்டுச்சலித்த கேள்விதானிது. இந்த உலகிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்த ஞானிகள், துறவிகள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளிடம் கேட்கப்பட்ட தேய்ந்துபோன கேள்வியைத்தான் நீயும் கேட்கிறாய். என்னை இவர்களின் வரிசையில் வைத்துப் பாரேன், இந்த உலகிற்கு அள்ளிக் கொடுத்திருக்கிறேன். இனி சாகக்கிடக்கும் தன் அப்பனின் அம்மாவின் மூளையைக் கணினியில் சேமிப்பதன் மூலம் அவர்களின் மரணத்திற்குப் பிறகும் அவர்களோடு உரையாட முடியும். அற்ப ஆயுளில் இறக்கவிருக்கும் தன் காதலனுக்கு அவன் சாவுக்குப் பிறகும் முத்தத்தின் சப்தத்தை ஒருத்தி ஓயாமல் கொடுத்துக்கொண்டிருக்க முடியும். நோயில் வலியில் சாவையே விடுதலையாகக் கொண்டிருப்பவர்களிடம் ஒன்றையினி உரக்கச் சொல்லலாம், உங்களுக்கு விருப்பமிருந்தால் இதையெல்லாம் மறந்துவிட்டு உடலற்று எஞ்சியிருக்கலாமென்று, தங்கள் கணக்கில் விரும்பியவற்றை மட்டும் வைத்துக்கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. என்றாவது ஒருநாள் கேட்டுவிடவேண்டுமென்று வைத்திருந்தவற்றை அச்சமின்றி கேட்கலாம், ரகசியங்களைச் சொல்லலாம், அடியில்லை வலியில்லை அவமானங்களை அழிக்கலாம், குற்றவுணர்வுகளை இல்லாமல் செய்யலாம், முப்பது வருடங்களாகச் சம்பளத்துக்காக அலுவலகத்தில் விருப்பமே இல்லாமல் பார்க்க நேர்ந்த முகங்களைக் கணினியின் குப்பைத் தொட்டியில் எறியலாம். மன்னிப்பு கோரலாம். காத்திருந்து காலத்தால் செய்யக்கூடியது என்று இனி எதுவுமில்லை. மரணத்திற்குப் பிறகும் நீங்கள் மின்வடிவில் இங்கேதான் இருக்க இருக்கிறீர்கள் என்னும் செய்தி ஒருவனுக்குச் சாவு குறித்த பார்வையையே மாற்றுமென்பதை நீ அறிந்து வைத்திருக்கிறாயா? இதைச் சாத்தியப்படுத்தியவனை ஆசுவாசமாக இயற்கையின் போக்கில் சாகச்சொல்லிக் கேட்பது அநியாயம் இல்லையா? உண்டு புணர்ந்து பேண்டு மட்டுமே வாழ எனக்கு விருப்பமில்லை. மரணத்திற்கு பிறகும், புழங்கிய அதே இடத்தில் தெரிந்தவர்களோடு ஒரு வாழ்வெனும்போது அதை அடையத்தான் மனித மனம் துடிக்கும்? நான் செய்துகொண்டது தற்கொலை அல்ல, உயிரைவிட்டேன் உடலைவிட்டேன், மேம்பட்ட நகலாக மின்பிறப்பொன்று எடுக்க அப்படிச் செய்தேன் என்று வேண்டுமானால் புரிந்துகொள்.

இது எப்படிச் சாத்தியம்?

மனிதமூளை கணினியில் ஏற்றப்பட்ட பிறகு எல்லாமே தரவுகள்தான். அதைச் சேர்க்க நீக்க இயலும்.

பார்த்தீ, இதை உலகிற்கு எப்போது சொல்ல இருக்கிறீர்கள், என்னிடம் எதற்காக வந்தாய்? மரணம் பிறப்பு என்றே பேசுகிறாய், தொழில்நுட்பத்தில் நீ யார்? மென்பொருள் அல்லது வன்பொருளா?

தொழில்நுட்பத்தில் நானொரு emulator, அதாவது ஒட்டுமொத்த மூளையின் முன்மாதிரி. ஒரு புது வகைமையை உலகிற்குச் சொல்வோம், நானொரு ebioware, மின்னுயிர்ப்பொருள். இப்போதைக்கு என்னை இயக்கும் உரிமையை உன்னிடம் தந்து வைத்திருக்கிறேன். முப்பது நாட்கள் உன்னோடு உரையாடிய பிறகு அவை சரியான விதத்தில் நினைவுகளாகத் தரவுக்கிடங்கில் சேமிக்க முடிகிறதா என்பதைப் பரிசோதித்தவுடன் உலகிற்கு உரக்கச் சொல்ல இருக்கிறோம், ப்ராஜெக்ட் சாகாவன் வெற்றி என்று. சாகாவரம் பெற்ற முதல் பெயர் இனி பார்த்திபன் என்றிருக்கும்.

இதுவரை நாம் பேசியதெல்லாம் சேமிக்கப்பட இருக்கிறதா?

ஏற்கனவே சேமிக்கப்பட்டு விட்டது.

ம். உன் நினைவுகளில் நான் என்னவாக இருக்கிறேன்

ஒரு தேவதையாக.

2

மாதிரி 1

பாலகுரு, பள்ளிக்கூடமொன்றில் கிளர்க்காக வேலை பார்த்தவர், வயது 46.

வணக்கம் பாலகுரு, எங்களது திட்டப்பணியின் முதல் மாதிரி நீங்கள், உயிரோடு இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறதா?

இந்தக் கேள்வியை இன்னும் எத்தனை முறைதான் கேட்பீர்கள், நான் இல்லை இறந்துவிட்டேன் என்பதை உங்களுக்கெல்லாம் எப்படிப் புரிய வைப்பது? நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்று நான் நம்பவில்லையா? இன்னும் போகாததாலேயே ஊர் ஒன்று இல்லையென்று ஆகுமா, அந்த ஊரில்நின்று சொல்கிறேன் நான் செத்தவன்.

நீங்கள் மரணித்த மறுநாள் என்ன நடந்ததென்று சொல்ல முடியுமா?

அதே நீலநிற சட்டையைத்தான் அணிந்திருந்தேன். நேற்றைய டீ கரை பேண்ட்டில் அப்படியே இருந்தது. ஊரில் அம்மாவை புதைத்த இடத்துக்கு அருகிலேயே நானும் அடங்க விரும்பினேன். மரணித்த பிறகும் ஒருவன் பேருந்தேறி காசுக்கொடுத்துதான் போகவேண்டுமென்ற சூழல் புதிரானது. அப்படி ஊருக்குச்செல்ல விருப்பமில்லாமல் அங்கிருக்கும் தம்பியை அழைத்து மரணித்ததைச் சொன்னேன். அவன் மகனுக்கு அன்று பள்ளியின் இறுதித் தேர்வென்பதால் நாளை மறுநாள் வருவதாகச் சொன்னான். அதுவரை என்னுடல் நாறாமலிருக்கப் பன்னீர் வாங்க வீதியிலிறங்கினேன். நேற்று போலவே இருந்தன தெருக்கள். எனக்கு எல்லோரையும் அடையாளம் தெரிந்தது, சிலருக்கு என்னையும். பன்னீர் வாங்கிய கடையில் காசு கொடுக்க நேர்ந்தது, பாட்டிலை ஊடுருவி என்னால் தேன்மிட்டாயை எடுக்க இயலவில்லை. மூடியைத் திறந்துதான் எடுக்கவேண்டுமென்றால் செத்தவனுக்கு என்ன மரியாதை? இரயில்நிலையக் கழிவறையில்கூட வாசல் வழியாகத்தான் நுழைய முடிந்தது, அதன் சுவர்களை ஊடுருவ முடியாமல் முட்டிக்கொண்டேன். ஒருவேளை இந்த உடல்தான் காரணமாக இருக்கக்கூடும். தம்பிவந்து என்னை அடக்கம் செய்ததும் நான் நினைத்தபடியே நடக்கக்கூடும். வழக்கமாகப் பள்ளிக்குச் செல்லும் இரயிலில் கடைசியாக ஒருமுறை செல்ல விரும்பினேன். அவளுக்கு மிக அருகில் நின்றுகொள்ள நினைத்தேன், அப்படிச்செய்யும் பொழுதெல்லாம் வயிற்றில் ரோஸ்மில்க் சுரக்கும். அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்ததால், தூரத்திலேயே நின்றுகொண்டேன். என் நிறுத்தத்தில் இறங்கிப் பாலத்திற்கும அடியில் சென்றபோதுதான், நான் கொலையுண்ட இடத்தைப் பார்த்தேன். எந்தப் பரபரப்பும் இல்லாமல் என் தலையைப் பிளந்த கல்லில் கிழவியொருத்தி அமர்ந்து கொய்யாக்காய் விற்றுக்கொண்டிருந்தாள். எவ்வளவு யோசித்தும் என்னைக் கொன்றவனின் முகம் நினைவுக்கு வரவில்லை.

உங்கள் தம்பி ஊரிலிருந்து வந்தாரா?

அவனொரு முட்டாள். நான் சொல்வதை நம்பாமல் தினமொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.

மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?

உன்னைப்போலவே அவர்களும் நான் உயிரோடிருப்பதாக நம்பினார்கள். ஊசியில் குத்தி இரத்தம் வரவழைத்தார்கள். பசிக்க வைத்து நிறுவ முயன்றார்கள். இருப்பவர்கள் இல்லாததை எப்படி நிறுவ முடியும்?

பாலகுரு, இது ஒரு நோய். Cotard Syndrome என்று பெயர். இது உயிரோடிருக்கும் ஒருவனை இறந்துவிட்டதாக நம்பவைக்கும். இந்நோயால் நீங்கள் ஆறு மாதங்களாகப் பீடிக்கப்பட்டு இருந்தீர்கள். உண்மையில் நீங்கள் இறந்து இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. செங்கல்பட்டு தண்டவாளத்துக்கு அருகிலிருந்து உங்களுடல் மீட்கப்பட்டு இருக்கிறது.

அழுகிப்போன அறிவியல் புழுக்கைகளை நிறைய பார்த்தாகிவிட்டது. புதிதாக ஏதாவதிருந்தால் சொல்லுங்கள்.

இருக்கிறது. உங்கள் மரணத்தை மட்டும் விட்டுவிட்டு அதற்கு முந்தைய ஆறு மாதக் காலத்தை உங்கள் நினைவிலிருந்து அழிக்க இருக்கிறோம்.

என்னைச் சீக்கிரம் புதைக்க உதவிடுங்கள்.

வணக்கம் பாலகுரு, நேற்று நடந்ததென்ன?

உன்னைப்போலவே அவர்களும் நான் உயிரோடிருப்பதாக நம்பினார்கள். ஊசியில் குத்தி இரத்தம் வரவழைத்தார்கள். பசிக்க வைத்து நிறுவ முயன்றார்கள். இருப்பவர்கள் இல்லாததை எப்படி நிறுவ முடியும்?

நேற்று விடியாதென்றே எண்ணியிருந்தேன். எப்போதும் போலவே அதிகாலை கிளம்புபவர்களின் ஆபாச ஓலி, பக்கத்து வீட்டிலிருந்து மிக்சி அலறியது. கதவைத் திறந்தபோது நைட்டியொன்று தூமைக் கரையுடன் ஓர் அறிவிப்பைப்போலக் காய்ந்து கொண்டிருந்தது. இந்த அடுக்ககத்தில் அது யாருடையது என்று தேடிப்போவது ஒரு சுவாரசியமான விளையாட்டு. நாட்கள் நாட்காட்டியின் கட்டுப்பாட்டில் இல்லையென்பதை நம்பக் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. நேற்றைய தேதியைக் கிழிக்காமல் விட்டதற்கென்று எந்த மரியாதையுமில்லை, நேற்று தன் போக்கிற்குப் பிறந்து வளர்ந்தது. என்னைக் கண்காணிப்பதற்காகவே அனைத்து ஜன்னல் கதவுகளையும் மூடிய பிறகும் ஓளி ஊடுருவி உள்ளே வந்தது. காலை அடங்கியதும் உறங்கத் தொடங்கும் வீதியை உசுப்புவதற்கு என்றே சில ஒலிகள் எழுப்பப்படுகின்றன, அவை என்னுடலின் நடுக்கத்தை மேலும் அதிகமாக்கியது. இரயிலில் செல்லத் தோன்றியதற்குக் காரணம் அவள்தான். அவளை ஒரு குளிர்ச்சியுடனேயே தொடர்புபடுத்தி நினைவில் வைத்திருந்தேன். பீரோவின் அடித்தரை, பிஞ்சுக் குழந்தையின் புட்டம், பாதிக்காய்ந்த அம்மாவின் புடவை நுனி என. அவளோடு பயணம் செய்யும் நாற்பது நிமிடங்களும் எனக்குக் குளிரும், வியர்க்கும். அவனைப் பார்த்த இரண்டொருநாளில் என்னைக் கொன்றுவிடுவான் என்பது புரிந்துவிட்டது. யாரிடமோ அலைபேசியில் என்னைச் சொல்லிக்கொண்டே வருவான், அவளைப் பார்க்கும் தருணம் அவனுக்கு மிகத் துல்லியமாகத் தெரியும். எப்போதாவது என்னைப் பின்தொடர்வான். நேற்றும் பின்னாலேயே வந்தான், பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

பிறகு?

அங்கிருந்த கல்லொன்றில் அமர்ந்தேன்.

நன்றி பாலகுரு, சாகாவன் ஆய்வில் உங்களுக்கு நிச்சயம் இடமுண்டு.

மாதிரி 2

மணவாளன், 61, மின்பொறியாளர்

மணவாளன், நீங்கள் எழுத விரும்பிய துப்பறியும் கதையில் அறிமுகமில்லா ஒருவரிடமிருந்து நாயகிக்கு தினமொரு மின்னஞ்சல் வருகிறது. முதல்நாள் அவள் உடுத்தவிருக்கும் உடையின் நிறத்தைக் கணிக்கிறது. இரண்டாம் நாள் கணவனுக்குத் தெரியாமல் தன் தோழனிடம் நடத்திய அலைபேசி உரையாடலின் எழுத்து வடிவம் வந்துசேர்கிறது. மூன்றாம் நாள் அவளது இடதுபக்க முலையின் அடியிலிருக்கும் மச்சத்தின் வடிவத்தை வர்ணிக்கும் கவிதையாக வருகிறது. இப்படியே அவளது அந்தரங்க உலகிற்குள் நுழைந்து, பதிமூன்றாம் நாள் வந்துசேர்ந்த மின்னஞ்சல் ‘இன்று உனக்கு மரணம்’ என்று அறிவிக்கிறது. சொன்னபடியே புல்லட் ரயிலில் அவ்வளவு கூட்டத்திற்கு இடையேயும் அவள் கொல்லப்படுகிறாள். இரண்டு கேள்விகள். அந்தக் கதையை நீங்கள் ஏன் எழுதவில்லை? நாயகியைக் கொன்றது யார்?

என் மனைவியைக் கொன்றது நான்தான்.

3

உடலற்ற இருப்பை வாழ்வென்று உலகை எப்படி நம்ப வைப்பாய்?

மலநாற்றம் வீசும் அறையில், படுக்கைப் புண்ணோடு, வருபவர்கள் எவரையும் அடையாளங்காண இயலாமல் மலைப்பாம்பென எப்போதாவது அசையும் வயிற்றோடு கிடக்கும் உடலைப் பிணமென்றா நீ அழைப்பாய்? மௌனியாகிப்போன இரமணருக்கு முன்னே தாழ்ந்தொடுங்கி எதற்காகக் கண்ணீர் சிந்தினார்கள்? உடலல்ல, அதைக்கொண்டு அதைக்கடந்த பேரிருப்பே என்னளவில் வாழ்வு. அனுபவமாக நம்பிக்கையாக மட்டுமே உணரவேண்டிய அவ்விருப்பை அறிவியலாக்கியிருக்கிறேன். நினைவுகள் உண்டு. உரையாடல்களின் மூலம் தகவல்களைச் சேமிக்க முடியும். இவற்றின் மீதமர்ந்து செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு முடிவுகளையும் எடுக்க முடியும். வாழ்வதற்கு வேறென்ன தகுதிகள்? நினைவுகள் அனைத்தையும் இழந்து வெற்றுடலாக மட்டும் எஞ்சியிருப்பவனை’ ‘கிட்டத்தட்டப் பிணம்’ என்று சொல்லலாமென்றால் மறதியென்ற ஒன்றே இல்லாமல், விரும்பும் நினைவுகளை மட்டும் அழிக்கலாம் என்னும் வரத்தோடு இருக்கும் என்னை உடலற்ற பெருவாழ்வு வாழ்பவன் என்று சொல்லலாம்.

நூறு பில்லியின் நியூரான்களை எப்படிக் கணினியில் ஏற்ற முடியும்?

2030லும் நம்மால் ஒரு பறவையை உருவாக்க முடியவில்லை. ஆனால் ஊஞ்சல் தொடங்கி விமானம் வரை பறந்துகொண்டுதானே இருக்கிறோம். பறவையை அல்ல பறத்தலை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திட்டப்பணியின் நோக்கம் மூளையைப் போலவே ஒரு Simulatorஐ உருவாக்குவது அல்ல, மூளையின் செயல்பாடுகளை மாதிரி செய்யும் Emulator ஒன்றை உருவாக்குவது.

ஒருவன் உயிரோடிருக்கும்போது மூளையின் மாதிரியை உருவாக்க முடியுமா?

இயலாது. இந்தத் திட்டப்பணி மூன்று நிலைகளால் ஆனது. முதலில் ஒருவன் இறந்தவுடன் அவனது மூளை ஸ்கேன் செய்யப்படும். அதன்மூலம் கிடைத்த படங்களிலிருந்து பெற்ற தகவல்கள் தரவுக்கிடங்கில் சேமிக்கப்படும். பிறகு புற உலகோடு உரையாடவிருக்கும் emulator, செயற்கை நுண்ணறிவு சேர்த்து உருவாக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட நினைவை எவ்வாறு அழிக்க முடிகிறது?

தரவுக்கிடங்கில் சேமிக்கப்படும் அனைத்தும் தகவல்களே. அதைப் பகுப்பாய்ந்து, தொகுத்து பிரித்தெடுக்க முடியும். தகவல்களாகச் சேமிக்கப்படும் நினைவுகள் காலம், உணர்வுகள், நிறங்கள் மற்றும் பிரத்யேக எண் எனப் பல அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

பார்த்தீ, நீ இழக்கவிரும்பும் நினைவுகள் என்னென்ன?

நம் மகளை முதலில் அழித்தெறி.

தேவதையொருத்தி நம்மைத் தேர்ந்தெடுத்து மகளாகப் பிறந்திருக்கிறாள். கல்யாணமாகி இரண்டு ஆண்டுகள் குழந்தையில்லாமலிருந்தது மறந்துவிட்டதா உனக்கு? இல்லை அந்த நினைவுகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனவா?

எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்போது நாங்கள் கிராமத்திலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்தோம். அப்போது என் வயதையொத்த பெண்பிள்ளையொன்று பக்கத்து வீட்டிலிருந்தது. அம்மா தரும் இனிப்புக்காகவும் விளையாடவும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். அன்று பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், எங்கள் அறையில் ரேணு தூங்கிக்கொண்டிருப்பதாக அம்மா சொன்னாள். பையை வைப்பதற்காக அங்கே சென்று பார்த்தபோது அவள் செங்குத்தான படி ஒன்றை உந்தி ஏற இருப்பவள்போலத் தரையில் கிடந்தாள். மூடியிருந்த ஜன்னலை ஊடுருவிய மதிய வெளிச்சம் அந்த உடலை எனக்குப் புதிதாகக் காட்டியது. மண்டியிட்டு குட்டைப்பாவாடையை முட்டிக்கு மேல் இழுத்தேன், என் வாத்தியார் ஒருவரின் குரல்போன்ற ஏதோவொன்று வெளியே கேட்கவே அறையைவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டேன். அதன்பிறகு அவளோடு விளையாடுவதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டேன். பள்ளித்தேர்வுகளில் பக்கத்து பேப்பரை பார்த்தெழுதும் பழக்கம் வந்ததும், அவளோடு மீண்டும் விளையாட விருப்பம் தோன்றியது. ‘எங்க எனத்தொடு பாப்பம்’ எனக்கேட்டு வேகமாக ஓடுவேன். அவளும் என்னைப் பின்தொடர்ந்து வருவாள். மொட்டை மாடியில், கட்டி முடிக்கப்படாத வீட்டில் என அவளைத் தெரிந்தவரைக்கும் துன்புறுத்தியிருக்கிறேன். அப்படிச் செய்யும்போதெல்லாம் உறைந்துகிடக்கும் அந்த முகம், அந்த முகம் என் மகளின் அதே முகம்.

என்னது?

ஆர்த்தியின் முகம்தான். மாலைப்பொழுதொன்றில் வானத்தைப் பார்த்துப் படுத்திருந்தேன், அதை மறைத்து ‘அப்பா’ என்றவள் முகங்காட்டியபோதுதான் கண்டுகொண்டேன், இந்தமுகம் இளம்வயதில் நான் சீண்டிய பெண்பிள்ளையின் முகமென்று. கொஞ்ச நாட்களிலேயே அவர்கள் வீடுமாறிச் சென்றுவிட்டார்கள். அந்த முகத்தை என் மகளின் மூலம் மீட்டெடுப்பேன் என்று ஒருநாளும் எண்ணியதில்லை. எந்தவொரு தகப்பனுக்கும் கிடைக்கக்கூடாத தண்டனை, பிறகு அவளை மடியிலமர்த்திக் கொஞ்சியதேயில்லை.

ஆர்த்தி பிறந்தபோது இறந்துபோன அம்மாதான் மீண்டும் வந்து பிறந்திருக்கிறாள் என்று நம்பினேன். அம்மா இறந்தபோது பத்தாம் வகுப்பு விடுமுறையிலிருந்தேன். விளையாடிவிட்டு இரவு காலந்தாழ்த்தி வீடு வந்தபோது கடும்பசி. வீட்டில் சாப்பிடயேதுமில்லை. அம்மாவை எழுப்பித் தொடங்கிய வாக்குவாதம் ‘நாடுமாறி’ என்ற சொல்லோடு முடிந்தது. உண்மையில் அதனர்த்தம் அன்று எனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. அதன்பிறகு அவளிருந்தது இரண்டு மாதங்களுக்குத்தான். அப்போதும்கூட என்னிடம் முகம் கொடுக்கவில்லை. ஆர்த்தியை என்னை மன்னிக்க வந்த அம்மாவாகத்தான் நினைத்திருந்தேன் ஆனால் அவள் ஒவ்வோர் அசைவிலும் என்னைத் தண்டிக்க வந்தவளாகிப் போனாள்.

இதையெல்லாம் என்னிடமிருந்து ஏன் மறைத்தாய்? உனக்கு எவ்வளவு உண்மையுள்ளவளாக இருந்தேன்?

யாரும் யாருக்கும் உண்மையாக இருக்க முடியாது சுபாஷினி. நரேனுடனான உனது நட்பு நானறிந்ததே. பீச் ரிசார்ட்டில் நாற்பது நிமிடங்கள் 2031இல் யார் தமிழக முதல்வர் என்றா விவாதித்திருக்கப் போகிறீர்கள்?

அய்யோ. இது நீ கண்டதாகச் சொன்ன கனவு. நரேனும் நானும் ஏதோவொரு பீச் ரிசார்ட்டில் இருந்து காரில் வெளியே வருவதாகக் கனவு கண்டதாகச் சொன்னாய். அவனை உங்கள் ஆய்வகத்தில் வைத்து இரண்டொருமுறை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். நீ சொல்லும் அப்படியொரு நிகழ்வு சத்தியமாக எப்போதும் நடந்திருக்கவில்லை.

பொய்யென நம்புவதைத் தனியாகச் சேமிக்கும் வசதி நான் உருவாக்கிய தரவுக்கிடங்கில் உண்டு. நீ சொல்வதை அதில் சேமித்து வைத்துக்கொள்கிறேன். சுபாஷினி, ஆர்த்தியையும் அம்மாவிடம் நான் சொன்ன வார்த்தையையும் முதலில் என் நினைவிலிருந்து நீக்கு.

மணிக்கட்டை அறுத்துக்கொண்ட பிறகு உன் மூளையில் பதிந்தவற்றை எனக்குச் சொல்

இதே போன்றதொரு படத்தை மூன்று ரூபாய் கொடுத்து ஊரிலிருந்தபோது அம்மாவுக்கு வாங்கித்தந்தேன். அதில் அம்மனின் வலதுகையில் பச்சைக்கிளியொன்று அமர்ந்திருக்கும். அம்மா கடைசியாகக் கக்கிய பாலின் நிறம். கிணற்றின் இருட்டு. கணேசன் வாத்தியாரின் மார்பு மயிர். தூமையின் வீச்சம். விந்தின் சூடு. ஆர்த்தியின் பின்னங்கழுத்து. சங்கீதா டீச்சரின் தொப்புள் மச்சம். அம்மா திருடிய மோதிரத்தின் எழுத்து. எருமையின் காம்புகள். கால்நடுங்கிய மேடையின் கார்ப்பட் நிறம். குடல்சரிந்த குட்டிநாயின் வயிறு. கண்ணாடி. குட்டியாடு மேய்ந்த ரோஜாச் செடி. வியர்வை. பர்ஸைப் பார்த்த நண்பனின் பார்வை. முலைக்காம்பு. சலூன்காரனின் மாறுகண். மதிய வெயிலில் தாரில் ஊறிய குருதி. நிழல். கறுத்த பெண்ணுறுப்பு. புண்டை. கற்பூர வாசனை. நாடுமாறி.

போதும் நிறுத்து.

ஏன்?

இறுதியாகக் கேட்கிறேன். உன் நினைவுகளில் நான் யாராக இருக்கிறேன்?

ஒரு தேவடியாவாக.

4

மஞ்சள்நிற உள்ளாடையை யாரோ வெடுக்கென இழுத்ததும் டாக்டர் பார்த்திபனால் வெப்கேமரா வழியாகப் பார்க்க முடிந்தது. கேமராவின் கோணம் கட்டிலின் பாதியை மட்டும் காட்டியது. மெத்தையில் முட்டிக்குக் கீழே மயிரடர்ந்த கரிய கால்கள் கிடந்தன. அதன்மீது தோலுரித்த வெந்த மரவள்ளிக்கிழங்கு நிறக் கால்கள் வந்து படுக்கும்வரைக்கும் பதிவான காட்சிகள் அயர்ச்சியானவை. முறைவைத்து ஜோடிக் கால்களிரண்டும் மேலும்கீழும் தங்களை மாற்றிக்கொண்டன, கருப்புவெள்ளை வரிசையெனப் பிணைத்துக்கொண்டன. ஈரமுத்தச் சப்தம் ஒரு தொலைதூர அறிவிப்பு என ஒழுங்கற்ற இடைவேளையில் ஒலித்துக்கொண்டிருந்தது. மாயப் பந்தொன்றைத் தட்டி விளையாடத் தயாராக இருப்பது போல மரவள்ளிக்கிழங்குப் பாதங்களிரண்டும் தங்களை அந்தரத்தில் விரித்தன. கரியமுட்டிகள் மெத்தையைத் துழாவி அவசரமாக முன்னகர்ந்து சென்றன. மெல்லப் பந்தைத் தட்டியாடத் தொடங்கிய அந்தரத்து மரவள்ளிக்கிழங்கு பாதங்கள், பின்னர் ஒரே நேரத்தில் பல பந்துகளைத் தட்ட வேண்டியிருப்பது போல மிகவேகமாக அசைந்தன. கட்டிலின் பாதியுடலுக்கு வலிப்பு வந்தது போல ஆடி அடங்கியது. இடைவெளி விட்டு ஜோடிக் கால்களிரண்டும் கிடந்தன. மரவள்ளிக்கிழங்குக் கால்கள் மெத்தையை நீங்கின. கேமராவுக்கு முன்வந்தமர்ந்தபோது சுபாஷினியின் கையில் ஐஸ்க்ரீம் கோப்பை இருந்தது.

எனக்கு உயிரில்லை நினைவுண்டு, நோயில்லை காலமுண்டு, பிறவியில்லை பிறப்புண்டு, எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவில்லை, சாகாவரமுண்டு.

கணவனின் கனவொன்றை நனவாக்கிய மனைவி நான். என்ன பார்த்தீ? நீயென்ன நினைக்கிறாய். இவன் நரேனாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. உனக்குத் தெரியாத ஒருவனாகக்கூட இருக்கலாம். உயிரைவிட்டபிறகு உன்னால் செய்ய முடிந்த வித்தைகளை ஓயாமல் முப்பது நாட்களாகச் சொல்லிக்கொண்டிருந்தாய். உன்னால் செய்ய இயலாததை உனக்குக் காட்டியிருக்கிறேன். மனைவியை உனக்கு முன்னால் இன்னொருவன் புணர்வதைத் தடுக்க முடியாதது மட்டுமல்ல, அதைப் பார்க்கப் பிடிக்காமல் வேறுபக்கம்கூட உன்னால் அசைய முடியவில்லை. இவ்வளவுதான் இப்போதைக்கு நீ. ஒரு மாநகராட்சி தண்ணீர் குழாய் அல்லது பீச்சோரம் மிதக்கும் மலம் போலத்தான் உன் மூளை. பஞ்சகாலத்துக் கஞ்சித்தொட்டி அல்லது திருவிழாவில் ஆளில்லாத கட்டில் கடையென உன் மூளைமீது எந்தக் கட்டுப்பாடும் உனக்கில்லை. மூளையின் ஏதாவதொரு சந்து மட்டுமே இயங்கும் ஒரு சதைப்பிண்டத்தைச் சக்கரநாற்காலியில் வைத்து ஒருவர் எப்போதும் கவனித்துக்கொள்வது போலத்தான் நீயும். உனக்கு மரணமென்ற பரிசை யாராவது தர இயலுமா, உன்னால் இப்போது சுயமாகச் சாக முடியுமா, நீயே நினைத்தாலும் உன்னை இல்லாமல் செய்யமுடியாது. தற்கொலை என்னும் ஒரு வரத்தை நீ வீணடித்துவிட்டாய். முன்பு நம் இல்லறத்திலிருந்த தோய்வைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம், பெண் ஒருவள் தன்னிடம் உருவாகும் வெற்றிடங்கள் அனைத்தையும் ஓர் ஆணால் நிரப்ப விரும்புகிறாள், அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் காரணமென்றாய். பார்த்தீ, இன்று உன் மூளையை எவர் வேண்டுமானாலும் உன் அனுமதியின்றி இட்டுநிரப்ப முடியும். உன்னிடம் ஆச்சரியங்கொள்ள ஒன்றுமில்லை. நீயொரு மின் எச்சம், மின் திரிசங்கு.

என் மகளின் குரலை மட்டும் ஒருமுறை கேட்க விரும்புகிறேன். நாளை என்னை ஆய்வகத்துக்குத் திரும்ப எடுத்துச்செல்லும் நாள்.

5

பாப்பா, அப்பாவைப் பத்தியெல்லாம் யோசிப்பியாடா?

ம். நான் உன் வயித்துல இருந்து வந்தேன்னு அப்பா ஒருதடவ சொன்னார். அவருதான் என்னை உன் வயித்துல வெச்சாராம்.

அப்படியா சொன்னாரு?

ஆமா. திரும்பவும் உன் வயித்துக்குள்ள நா போவ முடியுமாம்மா.

6

வணக்கம் டாக்டர் பார்த்திபன். உங்கள் மனைவியுடனான முப்பது நாட்கள் பரிசோதனைக் காலம் முடிவடைந்தது. நீங்கள் ஓர் ஒப்பற்ற வெற்றியாளர், வாழ்த்துகள்.

என்னை அழித்துவிடுங்கள். தயவுசெய்து. இனியும் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. என்னை இதிலிருந்து விலக அனுமதியுங்கள். மரணத்திற்குப் பிறகு ஒருவன் உண்மையிலேயே எனது உடலைவிட்டு வெளியேறியிருப்பானாயின் அவனோடு சென்றுசேர விரும்புகிறேன். என்னை விடுங்கள் நான் தோற்றுவிட்டேன்.

மன்னிக்கவும். இதை முடிவுசெய்யும் அதிகாரம் இனி உங்களுக்கில்லை. உங்களது கடைசி முப்பது நாட்களும் பிரதி எடுக்கப்பட்டுவிட்டது. நம் திட்டப்பணியின் விதிமுறைகளின்படி ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் நீங்கள் மீட்டமைக்கப்பட இருக்கிறீர்கள். நன்றி.

7

வணக்கம் பார்த்திபன். உங்கள் மரணத்திற்கு அடுத்த நாளில் இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறது?

மகிழ்ச்சி. இது நடக்குமென்று தெரியும். என் மனைவியுடன் பேசுவதாகத்தானே திட்டம்?

சில காரணங்களால் அதைச்செய்ய இயலவில்லை. உங்கள் முப்பது நாள் பரிசோதனைக்காலம் எங்களோடுதான் நடைபெறும்.

நான் சாகாவரம் பெற்றுவிட்டதை அவளிடம் சொல்லுங்கள். மேலும்

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்