தியானி – கிபி 2500

11 நிமிட வாசிப்பு

காலத்தின் மீது சத்தியமாக மனிதன் பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்…

டிஜிட்டல் உலகின் நூறாவது ஆண்டிற்கு உங்களை வரவேற்கிறோம் எனும் கிண்கிணி(அலாரம்) அடித்ததும் கண்விழித்த சுடலை அருகில் இருந்த கறுப்புக் கண்ணாடியை சார்ஜில் இருந்து எடுத்து ஆன் செய்து அணிந்துகொண்டான். கருவிழிகளால் அசைத்து இயக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடியில் உள்ள திரை காலை மணி ஏழு என்பதோடு அன்று செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தவன் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு டிஜிட்டல் உலகின் நூறாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகளைப் பார்க்க ஆரம்பித்தான். முதலில் டிஜிட்டல் உலகம் உருவான வரலாறு வந்தது, உலக அரசுகளால் காகிதம் மற்றும் அதன் சம்பந்தமான அனைத்துவிதப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் உபயோகிப்பதற்கும் செய்யப்பட்ட தடை, வீடுகளில் காகிதம் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதற்கான தடை, பின் புத்தகங்கள், நாளிதழ்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டது, தங்கள் மத நம்பிக்கைக்காக ரகசியமாய் காகிதம் தயாரித்தவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டது, காகிதக் குப்பைகள் இல்லாத ஊர்கள் வடிவமைக்கப்பட்டது, பின் உலகமே காகிதப் பயன்பாடு இல்லா ஒரு நிலையை எட்டி டிஜிட்டல் உலகமாக அறிவிக்கப்பட்டது என அந்த வரலாறு கண்ணாடியின் திரையில் ஓடி முடிந்தது. அடுத்து டிஜிட்டல் உலகின் 100வது ஆண்டின் கொண்டாட்டமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பழைய காகிதங்கள் கொண்டு சிறப்புக் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் மக்கள் பெரும் ஆர்வங்கொண்டு நேற்றைய இரவில் இருந்தே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் ஓடியது. அனைத்தையும் ஒரு மர்மப் புன்னகையோடு ஒதுக்கிவிட்டு கண்ணாடியைக் களைந்தான் சுடலை.

சுடலை டிஜிட்டல் நூலகத்தின் பொறுப்பாளனாக ஒரு கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நூலகம்தான் அவனது வீடு அவனது உலகம் அனைத்தும். உலகம் டிஜிட்டலாக மாறிய பின் அனைத்தும் மெமரிகளாகவும் டேட்டாக்களாகவும் மாறிவிட்டிருந்தது. அவன் வேலை பார்க்கும் டிஜிட்டல் நூலகம் என்பது மூன்று பெரிய சர்வர்களையும் ஒரு பெரிய திரையும் கொண்ட சிறு அறையாக இருந்தது. அங்குதான் அவன் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வழங்குவது, நூல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாலமாக இருப்பது, துறை வாரியாக புத்தகங்களை ஒதுக்கீடு செய்வது எனச் சகல வேலைகளையும் செய்வான். இதுதான் அவனது அன்றாட வாழ்வாகவும் இருந்தது. சுடலைக்குச் சிறு வயதிலிருந்தே புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்தது. அது புத்தகங்கள் சார்ந்த துறையில் வேலை செய்ய வேண்டும் என ஆசையாகப் பரிணமித்து டிஜிட்டல் லைப்ரரி எனும் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வைத்தது. அதுவே பின்னர் இந்தக் கல்லூரிக்கு நூலகப் பொறுப்பாளர் வேலையில் சேர்வதற்கும் காரணமாக இருந்தது.

நூலகத்தில் வேலைக்கு வந்து சேர்ந்த புதிதில் ஆர்வத்துடன் நிறையப் புத்தகங்கள் படித்த சுடலைக்கு சில மாதங்களில் அலுப்புத் தட்ட ஆரம்பித்தது.மேலும் அவன் வீட்டினில் அனைத்து வசதிகளும் இருந்ததால் வெளியே செல்ல வேண்டிய தேவையும் இல்லாமல் இருந்தது. ஒரு வீட்டுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த சுடலை தன்னை அடுத்த படி நிலைக்கு முன்னேற்ற விரும்பினான். அது அவனை ஒரு புத்தகம் எழுத உந்தியது. இந்த முடிவுதான் அவனது வாழ்வை மாற்றப் போகிறது என அப்போது அவனுக்குத் தெரியாது. வன்முறை, விஞ்ஞானம், அறிவியல் காலப்பயணம் என அப்போது பிரபலமாக இருந்த அத்தனை நூல்களையும் படித்திருந்த சுடலை தான் எழுதப் போகும் ஒரு புத்தகம் முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தான். முடிவு செய்து மூன்று மாதங்கள் ஆகியும் எதுவும் தோன்றாமல் இருக்கவே பதில்கள் எனும் வலைத்தளத்தை தொடர்புகொண்டு தனது பிரச்சனையைக் கூறினான். அது பல பதில்களைக் கொடுத்தது. அதில் ஒன்றுதான் எழுதும் தியானம்.

எழுதும் தியானம், சுடலை இதுவரை அறிந்திராத ஒரு விஷயமாக இருந்தது. வெளியவே செல்லாமல் இருந்த சுடலை எழுதும் தியானம் செய்து பார்க்கலாம் என நினைத்துக்கொண்டான். கையோடு குறிப்பிட்ட வலைதள முகவரிக்குச் சேரும் ஆவலை வெளிப்படுத்தி வீடியோ வடிவிலான தனது பயோடேட்டாவை அனுப்பி வைத்தான். டிஜிட்டல் உலகம் அமைக்க வேண்டும் என முடிவானபோது முதலில் அழிக்கப்பட்டது மை என்கிற வஸ்துதான். மையை அழித்துவிட்டாலே பிரிண்ட் எடுப்பதில் இருந்து எழுதுவது வரையான மொத்தக் காகிதப் பயன்பாட்டையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதே ஆளுமைகளின் நோக்கமாக இருந்தது. காகிதத்தோடு பேனாக்களையும் சேர்த்தே நிறுத்தினார்கள். பள்ளிகளில் குரல் எழுத்தாகும் செயலி மூலம் குழந்தைகளுக்கு ஆரம்பகாலப் பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த பின் எழுதச் சொல்லிக் கொடுப்பது நின்றுவிட்டது. உலகில் உள்ள அனைவருக்கும் எழுதுவது என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது. சுடலைக்கும் எழுத தெரியாது. ஏதாவது திரையில் எழுத்து வடிவில் வேண்டும் என்றால் சொன்னால் போதும் பேச்சுகள் எழுத்து வடிவம் பெற்றுவிடும்.எழுதுவது என்கிற வார்த்தையை ஏதோ புத்தகத்தில் படித்தது மட்டும் நியாபகம் இருந்தது சுடலைக்கு. எழுதுவது என்றால் என்ன என்றே தெரியாத அவனுக்கு எழுதும் தியானம் புதிதாகத் தெரிந்தது.

உலகில் உள்ள அனைவருக்கும் எழுதுவது என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது.

எழுதும் தியானம் அப்பொழுதுதான் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வலைத்தளம் காண்பித்தது. முகத்தில் மயிர்கள் இல்லாத ஒரு வளர்த்தியான மனிதன், முழு வெள்ளை ஆடை அணிந்து வந்து ‘நான்தான் தியானி, எழுதும் தியானத்தை உலகத்திற்கு அர்ப்பணிக்க வந்திருப்பவன். எழுதுவது ஒன்றே மனதைத் திறக்கும் சாவி’ எனக்கூறுவது போல் எழுதும் தியானத்தின் அறிமுக வீடியோ இருந்தது. மனதைத் திறக்கும் சாவி எனும் வார்த்தை சுடலையின் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. எனவேதான் உடனடியாகத் தனது பயோடேட்டாவை அனுப்பிவிட்டுப் பதில் வரக் காத்திருந்தான். சரியாக ஒரு வாரத்தில் வெள்ளை ஆடை அணிந்து நேரில் வர சொல்லி பதில் வந்தது. ஒரு மாற்றத்திற்குத் தயாராகிவிட்டவன் போல வெள்ளை ஆடைகளை அணிந்து குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றான். அது ஒரு தனி வீடாக முழு வெள்ளை நிறத்தில் இருந்தது. ஏற்கனவே அனுமதி பாஸ்வேர்ட் அனுப்பப்பட்டிருந்ததால் அதைக் கொண்டு வீட்டினைத் திறந்து உள்ளே சென்றான். ஒரு சிறிய அறை இருந்தது. அந்த அறையில் ஒரு பெட்டியும் அதற்கு மேல் இருந்த ஒரு திரையில் டிஜிட்டல் எலக்ட்ரானிக் பொருட்களை அதனுள் போட்டுவிட்டு உள்ளே செல்லுமாறும் அறிவிப்பு ஓடிக் கொண்டிருந்தது. அவனிடம் இருந்த ஒரே ஒரு பொருள் அவனது கண்ணாடி மட்டுமே. அதைக் கழட்டிப் பெட்டியில் போட்டுவிட்டு உள்ளே சென்றான். உள்ளே ஜன்னல்கள் ஏதும் இல்லாத நீண்ட வெள்ளை நிற அறை இருந்தது. அந்த அறையின் ஒரு கோடியில் ஒரு திரையில் ‘ஏதும் பேச வேண்டாம். கவனித்தால் போதும்’ என்ற வாக்கியம் ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிப் பார்த்த சுடலைக்கு ஏதோ ஒரு வெள்ளைக் குடுவைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறோமா எனும் சந்தேகம் ஒரு வினாடியில் பயமாக மாறி அவனது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தியது. திரும்பி விடலாமா என யோசித்த அந்த நேரத்தில் முகத்தில் மயிர் இல்லாத அந்த மனிதன் சிரித்த முகத்தோடு சுடலைக்கு நேர் எதிரில் சுவரோடு சுவராக இருந்த ஒரு வெள்ளைக் கதவை திறந்து கொண்டு வந்தான். அங்கு ஒரு கதவு இருந்தது என்பதே அப்போதுதான் புரிந்தது சுடலைக்கு. ஏதும் பேசாமல் நின்றான் சுடலை. சுடலையின் பயத்தை உணர்ந்துகொண்ட அந்த மனிதன் ஓர் அரும்புன்னகையோடு சைகையாலேயே சுடலையைத் தன் அருகில் வரச் சொன்னான். தயங்கியபடியே சென்றான் சுடலை.

சுடலை அவனை நெருங்கியதும் அந்த மனிதன் சுடலையின் கண்ணை நோக்கிச் சில நொடிகள் பார்த்துவிட்டுப் பின் சுடலையைச் சுற்ற ஆரம்பித்தான். இரண்டாவது சுற்றில், சுற்றிக்கொண்டே மெதுவாக அதே நேரத்தில் உறுதியான குரலில் “விதைக்க விதைக்கத்தான் விளையும் நிலம். அது போல எழுத எழுதத்தான் திறக்கும் நம் மனம். டிஜிட்டல் உலகில் அனைவரும் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய எழுதுவது எனும் தியானப் பயிற்சியைக் கை விட்டதால்தான் குறுகிய மனம் கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்காமல் காலம் கடந்து செல்லவும் பூமியைக் கடந்து செல்லவும் முயற்சி செய்து பொழுதுகளை வீணடிக்கிறார்கள். மேலும் இந்த வாழ்வு நம் மனதை விரிவுபடுத்தி மகிழ்ச்சியாக வாழப் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டார்கள். நமக்கு மகிழ்ச்சியான வாழ்வு வேண்டுமெனில் நம் சிந்தனை பெரிதாக இருக்க வேண்டும். நம் சிந்தனை பெரிதாக வேண்டுமெனில் நமக்கு இந்த எழுதும் தியானம் அவசியம்” என சுற்றிக்கொண்டே சொல்லி வந்தவன் இதோடு நிறுத்திவிட்டு, “எழுதுவது என்றால் என்ன?? தெரியுமா??” எனக் கேட்டான். தெரியாது என வாயால் சொல்ல முனைந்த சுடலையைப் பேசாதே என சைகையால் நிறுத்திச சைகையால் சொல்லச் சொன்னான்.

தெரியாது என்பது போலத் தலையை ஆட்டினான் சுடலை.

பின் சுடலையைப் பார்த்தவாரே நேராக நின்று பேச ஆரம்பித்தான் தலையில் மயிர் இல்லாதவன். “நான் தியானி, பல தலை முறைகளுக்கு முன்னாள் இந்த எழுதும் தியானத்தை மனிதர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால் நமது முன்னோர்கள் அருளிய இந்தத் தியானத்தை எக்காரணம் கொண்டும் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே என் குடும்பம் யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திக்கொண்டு வந்தது. இப்போது அதை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டிய கட்டத்தை அடைந்துவிட்டோம். நான்தான் இப்போது எனது பரம்பரையில் எழுதத் தெரிந்த கடைசி மனிதன். அநேகமாக உலகிலும் எழுதும் தியானம் தெரிந்த கடைசி மனிதனும் நானாகவே இருப்பேன். அதனால் உலகிற்கு இந்த அற்புதத்தை வழங்கி மனித குலத்தை ஒரு பரவச நிலைக்கு அழைத்துச் செல்வது என முடிவெடுத்துவிட்டேன். அதோடு மனிதர்கள் டிஜிட்டல் உலகில் மூழ்கிவிட்டனர். அவர்களை அதிலிருந்து மீட்டு மனதை மாற்ற இந்தத் தியானத்தை உலகம் முழுதும் பரப்ப வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதுதான் காலத்தின் சத்தியம்.” எனப் பேசி முடித்தான் தியானி.

சுடலைக்கு முதலில் இருந்த பயம் விலகி ஆர்வம் ஏற்பட்டது. பரவசம் என்கிற ஒரு சொல் அவனது முழுக் கவனத்தையும் தியானியின் மேல் செலுத்த வைத்தது. அந்த வசீகர முதல் பேச்சிலே தன் மொத்த மூளையும் செயல்பட ஆரம்பித்ததைப் போல உணர்ந்தான். ஏதும் பேசாமல் அமைதியாக மேலும் அவரைப் பேசச் சொல்வது போலப் பார்த்தான். தியானியும் எதும் பேசாமல் குழந்தையைப் பார்ப்பது போல ஓர் அரவணைப்புப் பார்வையை அவன் மேல் செலுத்தினான். சிறிது நேர மௌனத்திற்குப் பின் சுடலையைத் தரையில் அமரச் சொல்லிவிட்டு தியானி உள்ளே சென்று ஒரு மணல் நிரப்பிய சதுரக் கண்ணாடிப் பெட்டியை எடுத்து வந்து சுடலைக்கு முன்னால் வைத்தான். சுடலை மிகுந்த ஆர்வத்தோடுப் பார்த்தான். அதில் மணல் நிரப்பப்பட்டிருந்தது.

தியானி, தன் விரலைகளைக் காட்டி “இந்த உலகின் மிகப் பெரிய பொக்கிஷம் இந்த விரல்கள். இதைக் கொண்டு நாம் செய்த விஷயங்கள் எவ்வளவோ உள்ளது. நம் முன்னோர்கள் இப்போது மாதிரி விண்கலங்களைக் கொண்டு வானத்தில் சண்டை போடாமல், கையினால் ஆயுதம் ஏந்தி எதிரி மனிதர்களைக் கொல்வார்கள். அவ்வளவு சக்தியை இந்தக் கை கொண்டிருந்தது” என தியான நிலையில் கூறினான்.

இதைச் சொல்லும்போது சுடலை கொஞ்சம் பயந்துதான் போனான்.

தொடர்ந்தான் தியானி, “இந்தக் கைகளுக்கு அவ்வளவு சக்தியும் இந்த விரல்களில் அவ்வளவு வலிமையும் இருந்தது, காரணம் நாம் எழுதும் பழக்கம் கொண்டிருந்ததால்தான். பேனா என்கிற ஒரு கூர்மையான ஆயுதம் இருந்தது. அதில் மை நிரப்பி காகிதம் என்கிற ஒரு வஸ்துவில் எழுதுவார்கள். அந்தக் காலத்தில் புத்தகங்கள் அப்படிதான் எழுதப்பட்டது” என மனித குல வரலாற்றைச் சொல்லிக்கொண்டே சென்றான் தியானி. சுடலைக்கு மிக ஆச்சர்யமாகவும் மந்திரக் கதைகள் கேட்பது போல ஆர்வமும் பெருக்கெடுத்தது. தியானி அந்த கண்ணாடிக் குடுவைக்குள் இருந்த மணலில் தன் கை விரலால் படம் வரைவதைப் போல ‘க’ எனும் ஓர் எழுத்தை எழுதினான். ஆர்வத்துடன் தியானியின் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான் சுடலை. ஓவியம் வரைவதைப் போல அவரின் விரல் அந்த எழுத்தை இலாவகமாக எழுதியதைக் கண்டு வியந்தான். பின், அன்றைய வகுப்பு முடிந்தது எனவும் அடுத்த இரண்டு நாளைக்கு அந்த எழுத்தின் மேல் கையை வைத்து காலை மற்றும் மாலை வேளைகளில் எழுதும் தியானத்தைத் தொடரும் படியும் கூறினான் தியானி. அன்றைய தினம் வெகு நாளைக்குப் பின் நல்லபடியாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினான் சுடலை.

இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் அந்தக் கண்ணாடிப் பெட்டியைச் சுமந்து கொண்டு தியான வகுப்பிற்குச் சென்றான். எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் அந்த வெள்ளைக் கதவை திறந்துகொண்டு தியானி உள்ளே நுழைந்தான். மீண்டும் அதே போன்ற ஓர் உரையை நிகழ்த்தினான். அதில் பௌர்ணமி பற்றிய சிறப்புகள், எழுதும் தியானத்தால் ஏற்படும் நன்மைகள் போன்றன சிறப்பம்சமாக இருந்தன. தியானி பழைய எழுத்தை மணலில் இருந்து அழித்துவிட்டு வேறு சில எழுத்துக்களை எழுதி, “பௌர்ணமி அன்று முழுதுமாக விழித்திருந்து மணலில் எழுதியிருக்கும் எழுத்துக்களின் மேல் உன் கைகளைக் கொண்டு எழுதும் தியானம் செய்து வந்தால் இன்னும் உனக்குத் தெளிவான மனம் உண்டாகும். அது உன்னைப் பரவசப்படுத்தும்” எனக் கூறி அனுப்பி வைத்தான் தியானி. சுடலை இரண்டு வகுப்புகளிலும் ஏதும் அவரிடம் பேசவில்லை அவரை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் சொல்லும் எல்லாம் தன் நன்மைக்கு என்று நினைத்துக்கொண்டான். இப்போது அவனுக்கு எழுதுவதை விடவும் மனிதர்களுக்கு இந்த எழுத்துத் தியானத்தை எப்படிக் கொண்டு சேர்ப்பது எனும் சிந்தனை வலுப்பட ஆரம்பித்தது.

மொத்தமாக ஏழு வகுப்புகள் முடிந்திருந்தன. சுடலை சில வார்த்தைகளை எழுதவும் பின் பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் அறிந்திருந்தான். எட்டாவது வகுப்புக்கு அறையின் உள்ளே நுழைந்தவன், அங்கிருந்த ‘பேச வேண்டாம்’ எனும் டிஸ்பிலே போர்ட் இல்லாதிருப்பதைக் கண்டு இன்று தியானியிடம் பேசலாம் என நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் தியானி உள்ளே நுழைந்தான். வழக்கமான உரைகளுக்குப் பின் எழுதும் தியானம் முடிந்து அன்றைய வகுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியது. வெகு நேரமாய்ப் பேச ஆவலுடன் இருந்த சுடலை “நன்றி தியானி” எனும் தன் முதல் வார்த்தையைப் பேசினான். “நானும் வரேன் போறேன். நீங்க சொல்றத செய்றேன். ஆனா நீங்க என்னயப் பத்தி எதும் கேட்கவே இல்லையே ஏன்?” என மெதுவாகக் கேட்டான்.

சிறிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, “நான் உன்னை நம்பவில்லை. நான் என் எழுதும் தியானத்தை நம்புகிறேன். அது எல்லாரையும் உண்மையாளர்களாகவும் பரவசம் அடையக் கூடியவர்களாகவும் மாற்றும் என எனக்குத் தெரியும். இதோ நீ செய்து வந்த பயிற்சி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இது நாள் வரை பேசாத நீ இன்று பேசுகிறாய். இதுதான் ஆரம்பம். இப்போது சொல் உன்னுடைய பிரச்சனை என்ன?” என தெளிவான குரலில் கேட்டான் தியானி. கொஞ்சம் திக்கித்தான் போனான் சுடலை. அவனுக்கே அப்போதுதான் தோன்றியது ‘நாம இதனாலதான் பேச ஆரம்பித்தோமா’ என்று. இருந்தும் மெதுவாக அவனைப் பற்றியும் தான் எழுத நினைக்கும் புத்தகம் பற்றியும் அதற்குத் தடையாக இருந்த விஷயங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினான். எதுவும் சொல்லாத தியானி நாளை வரும் படியும் இனி இந்தக் கண்ணாடிப் பெட்டி தேவை இல்லை. அதை இங்கேயே வைத்துச் செல்லும்படியும் கூறினான். பெட்டியை வைத்துவிட்டு வீடு திரும்பிய சுடலை தியானியிடம் பேசிய பின் பெரும் சுமை ஒன்று குறைந்தாய் நினைத்துக்கொண்டான்.

மறுநாள் வகுப்பிற்குச் சென்ற சுடலை வெள்ளையாக இருந்த அந்த அறையில் முதல் முதலாகக் கருநிறப் பலகை ஒன்று இருப்பதைப் பார்த்தான். தியானி வந்தான். ஆரம்பக் கட்ட பயிற்சி முடிந்தது எனவும், இனி மணலில் எழுதும் தியானம் செய்யத் தேவையில்லை என்றும், அன்று முதல் குச்சி கொண்டு அந்தக் கரும்பலகையில் எழுதும் தியானம் செய்யவும் சொல்லித் தந்தான். ஒரே மாதம் அனைத்து எழுத்துக்களையும் வேகமாக எழுதப் பழகிக்கொண்டான் சுடலை. ஆனால் சுடலை எழுதும் எழுத்துக்கள் அழகாக இல்லாமல் அலங்கோலமாக இருந்ததால் தான் தியானம் நன்றாக செய்யவில்லையோ என்னும் மன வருத்தத்திற்கு ஆளானான். எனவே இடையில் ஒருநாள் அதைப் பற்றி தியானியிடமும் கேட்டுவிட்டான். “வீட்டிற்கு சென்று தியானம் செய்யும் பொழுது வெள்ளை ஆடை இல்லாமல் வேறு ஆடை அணிந்து தியானம் செய்தாயா?” என பதிலுக்குக் கேட்டான் தியானி. ஆமாம் என்பது போலத் தலையை ஆட்டினான் சுடலை. “வெள்ளை ஆடை அணிந்து தியானம் செய்தால்தான் எழுத்து அழகாக வரும், எனவே, இனி இப்போது செய்வதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வெள்ளை ஆடை அணிந்து எழுதும் தியானம் செய். உன் தியானம் நேர்த்தி ஆகி, உன் எழுத்துக்கள் அழகாக வரும்” என்றான் தியானி. அப்படியே செய்ய ஆரம்பித்தான் சுடலை. பலன் கிட்டியது.

உலகமே காகிதப் பயன்பாடு இல்லா ஒரு நிலையை எட்டி டிஜிட்டல் உலகமாக அறிவிக்கப்பட்டது என அந்த வரலாறு கண்ணாடியின் திரையில் ஓடி முடிந்தது.

ஒரு மாதத்திற்குப் பின் சுடலையை அழைத்த தியானி, “உன்னுடைய இறுதி வகுப்பு இது. நீ இந்த எழுத்து தியானம் மூலம் பெரும் புகழ் அடைவாய். ஆனால் அது மனித குலத்தின் நன்மைக்காக இருக்க வேண்டுமே தவிர எக்காரணம் கொண்டும் தீங்கு விளைவிப்பதாய் இருக்கக் கூடாது. ஏற்கனவே சொல்லிய அறிவுரைகளை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள். இந்த எழுதும் தியானம் மனிதக் குலத்தை மேம்படுத்துவதற்கு மட்டும்தான்” எனக் கூறி ஒரு கண்ணாடிப் பாட்டிலைக் கொடுத்தான் தியானி. புனிதப் பொருளைப் பெறுவது போல் பெற்றுக்கொண்ட சுடலை அதை உற்றுப் பார்த்தான். அதில் மையும் புறாவின் ஓர் இறகும் இருந்தது. “இதைக் கொண்டு ஒரு பெரிய துணி பண்டலில் உன் எழுத்துப் பணியை ஆரம்பம் செய்” எனக் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தான் தியானி.

வீடு வந்த சுடலை அன்று நிம்மதியாகத் தூங்கினான்.

டிஜிட்டல் உலகின் 100வது ஆண்டிற்கு உங்களை வரவேற்கிறோம் எனும் கிண்கிணி(அலாரம்) அடித்ததும் கண்விழித்த சுடலை அருகில் இருந்த கறுப்புக் கண்ணாடியை சார்ஜில் இருந்து எடுத்து ஆன் செய்து அணிந்துகொண்டான்.கருவிழிகளால் அசைத்து இயக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடியில் உள்ள திரை காலை மணி 7 என்பதோடு அன்று செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தவன் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு டிஜிட்டல் உலகின் நூறாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகளைப் பார்க்க ஆரம்பித்தான். முதலில் டிஜிட்டல் உலகம் உருவான வரலாறு வந்தது, உலக அரசுகளால் காகிதம் மற்றும் அதன் சம்பந்தமான அனைத்துவிதப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் உபயோகிப்பதற்கும் செய்யப்பட்ட தடை, வீடுகளில் காகிதம் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதுற்கான தடை, பின் புத்தகங்கள், நாளிதழ்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டது, தங்கள் மத நம்பிக்கைக்காக ரகசியமாய் காகிதம் தயாரித்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, காகிதக் குப்பைகள் இல்லாத ஊர்கள் வடிவமைக்கப்பட்டது, பின் உலகமே காகிதப் பயன்பாடு இல்லா ஒரு நிலையை எட்டி டிஜிட்டல் உலகமாக அறிவிக்கப்பட்டது என அந்த வரலாறு கண்ணாடியின் திரையில் ஓடி முடிந்தது. அடுத்து டிஜிட்டல் உலகின் 100வது ஆண்டின் கொண்டாட்டமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பழைய காகிதங்கள் கொண்டு சிறப்புக் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மக்கள் பெரும் ஆர்வங்கொண்டு நேற்றைய இரவில் இருந்தே தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் ஓடியது. அனைத்தையும் ஒரு மர்மப் புன்னகையோடு ஒதுக்கிவிட்டுக் கண்ணாடியைக் களைந்தான் சுடலை.

எழுதும் தியானத்தைக் கொண்டு தன் சிறுகதையை எழுத ஆரம்பித்தான். காலத்தின் மீது சத்தியமாக மனிதன் பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என ஆரம்பித்து அவனுக்கும் தியானிக்கும் இடையிலான உறவையும் எழுதும் தியானம் எனும் கலையின் சிறப்புகளையும் கூறுவதாகத் தனது முதல் சிறுகதையை ஒரு முழு துணி பண்டலில் மையையும் புறாவின் இறக்கையும் கொண்டு எழுதினான். மறக்காமல் அதைச் சொல்லித் தன் டிஜிட்டல் மெமரியில் பதிவு செய்தும் வைத்துக்கொண்டான். இரண்டு முறை படித்துப் பார்த்த பின் தனக்குத் தானே சபாஷ் என சொல்லிக்கொண்டு எங்கு எப்படி அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது எனச் சிந்திக்க ஆரம்பித்தான். உலகின் முதன் முதலில் எழுதும் தியானம் மூலம் எழுதப்பட்ட புத்தகம் எனக் கூறி ஒரு தேதியைக் குறிப்பிட்டு அன்று முதல் இதைப் பார்க்க விரும்புகிறவர்கள் தன் கல்லூரிக்கு வருமாறு விளம்பரப்படுத்தினான். அந்தக் குறிப்பிட்ட தேதியில் டிஜிட்டல் நூலகத்தில் ஒரு கண்ணாடி அறையை உருவாக்கி அங்குத் தன் துணிப்புத்தகத்தைக் காட்சிப்படுத்தியிருந்தான். முதல் இரண்டு நாட்களில் பத்துக்கும் குறைவான நபர்களே பார்த்துச் சென்றனர்.

தியானப் பயிற்சி செய்த காலத்தில் ஒரு நாள், “முழு பரவச நிலையை அடைவது எப்படி?’ எனத் தியானியிடம் கேட்டான் சுடலை.

“பரவச நிலையை நாம் அடைய முடியாது. ஆனால் எழுதும் தியானம் மூலம் நாம் பெரும் பயன்கள் நம்மைப் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும். இந்த எழுதும் தியானம் உனக்குக் கண்டிப்பாக ஒரு நாள் பரவச நிலையைக் கொடுக்கும், அன்று நீ ஒரு மகத்தான புத்தகத்தை எழுதுவாய்” எனத் தீர்க்கமாகப் பதில் சொல்லியிருந்தான் தியானி.

இந்த சம்பாஷணைகளை நினைத்துப் பார்த்தவன் ‘நிச்சயம் பரவசம் கிடைக்கும்’ என்னும் தியானியின் வார்த்தைகள் மேல் மதிப்பு கொண்டு அமைதியாக இருந்தான். மூன்றாம் நாள் அந்தக் கல்லூரி மாணவர்களில் சிலர் வந்து பார்த்துவிட்டு அதைப் பற்றி சுடலையிடம் கேட்டுச் சென்றனர். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடையத் தொடங்கியது, அவனது துணிப்புத்தகமும் எழுதும் தியானமும். கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரத்தில் உலகம் முழுதும் பரவியது. உலகின் முதல் எழுதும் தியானம் மூலம் எழுதப்பட்ட புத்தகம். அவனது சிறுகதையைவிட அந்த எழுதும் தியானம் மனிதர்களிடம் மிக வேகமாகப் பரவியது. பலர் எதிர்த்தனர். இது நம்மைப் பின்னோக்கி இழுக்கிறது என எழுதும் தியானத்திற்கும் சுடலைக்கும் எதிராக அனல் பறக்கும் வாதங்கள் கிளம்பின. மக்களின் முழு ஆதரவு எழுதும் தியானத்திற்குக் கிடைத்தது. சுடலை தியானியை உலகிற்கு அறிமுகப்படுத்தினான்.

எதிர்ப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல் சுடலையும் தியானியும் இணைந்து மிகப் பெரும் ஆசிரமம் ஒன்றைக் கட்டினர். அங்கு எழுதும் தியானம் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கப்பட்டது. சுடலை முழு பரவச நிலையில் தன் மகத்தான புத்தகத்தை எழுத ஆரம்பித்தான்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்