கோதார்டின் குறிப்பேடு

10 நிமிட வாசிப்பு

கோதார்ட் தன் தற்போதைய ஆய்வுப் பணியின் களசேகரங்கள், கவனநிலைகள், கவனமின்மைகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருந்த தன் குறிப்பேட்டைத் தினமும் போலவே இன்றும் திறந்து வைத்து வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கையில், அவருள்ளம் முதலை வயிற்றில் இறங்கும் மரித்த மானுடலென மெல்ல நழுவிக்கொண்டிருந்தது. மனநிலையிலிருந்து நழுவுதலே பல புதிய கருத்துகளையும், கருவிகளையும் உலகிற்குக் கொடையெனத் தந்துள்ளது; மாறாக மனநிலைகொள்ளல் அல்ல. மனநிலைகொள்ளல், மனக்குவியம், மனவொருமுகம் ஆகியவை மாணவர்களுக்கானது; மனநழுவுதல் கவிஞர்களுக்கும் அறிவியலறிஞர்களுக்குமானது. மனநழுவுதலிருந்தே மாபெரும் தத்துவங்களும், மகோன்னத காவிய கணங்களும், அறிவியல் கண்டடைதல்களும் நிகழ்வெடுக்கின்றன.

அவரது கண்டடைதல்களின் உட்சுவர்களில் மோதி ஒலித்து ஆர்வத்தைத் தூண்டிய, ராம்சேயின் வழக்கினை ஆய்வுக்குட்படுத்திய தன் குறிப்புகளை நோக்கியவாறு, தன் உள்முகப் பயணத்தின் தொடர்ச்சியில் நிகழ்ந்து, கரைந்து கொண்டிருந்தார். அவன் பள்ளியில் பாடங்களில் வெகு மெதுவானவனாக இருந்து வந்தான் குறிப்பாக கணிதத்தில். ஒவ்வொரு முறையும் அவனது கணித வகுப்பில், அனைவருக்குமான ஒரு ஜோக்கராக அவனுரு நிலைபெற்றிருந்தது. தன்னை உயர்ந்த மாணவனாக கருதிக்கொள்ள எவரும் தன்னருகே ராம்சேயினைப் பொருத்திப் பார்த்துக்கொண்டால் போதும் என்ற கருத்து பொழுதொரு வண்ணமென வளர்ந்து, வகுப்பறையில், பள்ளியில் நிறைந்துவிட்டிருந்தது.

அவ்விளைவு அவனைத் தனியனாக ஆக்கிய கணந்தோறும், தனிமை அவனைத் தோல்வியுற்றவன் என்று அவனுக்கே சுட்டுவிரல் நீட்டி, தனிமையின் சுட்டுவிரல் மடங்கியதும் இரு கைகளென அவன் கழுத்தினை நெருக்கி, அவனை விழுங்கிடத் துடித்தது. அவனது ஐந்தாம் வயதில், அவனது பெற்றோருக்கேற்பட்ட மணமுறிவின் வலிகள் மெல்ல இதைச் சரியான தருணமெனப் பற்றி அவனை மேலும் அழுத்தியது. எதற்காகவோ, யார்யார் மீதெல்லாமோ கோபமும் ஆற்றாமையும் நுரைத்து அவனைத் தனக்குள்ளேயே மூழ்கடித்தது.

ஒரு வழியாக, ஆரம்ப காலத் தனிமையை அவன் உள்ளம் மெல்ல கடந்தது. தனிமை – ஓடினால் துரத்திவரும் என இருந்து, துரத்தினால் பயந்தோடும் – நிழலெனப் படிமாறிப் பின், நிழலென்பதாலேயே அவனுடனேயே இருந்தது; திகழ்ந்தது; அணைத்தது; குழைந்தது. பின், தனிமை அவனை அவனது குற்ற எண்ணங்களிலிருந்து, விடுவிக்கும் பாவனையில் அவனைக் கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது. அவன், நிகருலகில், நிகரிலா மகிழ்வையும், தன்னிச்சைகளின் விடைகளையும் கண்டது அவனைத் தனிமையின் நண்பனாகவே மாற்றியது. இந்த நட்பின், நீள்காலம், புதிய பரிட்சார்த்தங்களைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் புறச்சூழல் எப்போதும் போலவே – சொல்லப்போனால், இன்னும் கூடுதலான காழ்ப்புடன் – அவனைச் சிரிப்பிற்கானவனாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததிலிருந்து, அவனை இளக்காரத்திற்கும், மனநோயாளியென எடுத்துக் காட்டுவதற்குமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தது.

ராம்சேயின் பதினேழாம் வயதில், தன் தனிமையின் உத்தரவுப்படி, அவன் தன்னை வேகத்தின் ஆற்றலாய்க் கருதிக்கொண்டிருந்தான். வேகமாக எதையும் செய்திட வேண்டுமென அவனுள்ளம் அவனைப் படுத்திக் கொண்டிருந்தது. வேகம் என்பது, தனது ஆழத்தில் ஊறுகின்ற ஒரு நதியென அகம்கொண்டான். அவன் தன் அகம் செல்லும் வேகத்தில் ஒரு வாகனம் வேண்டிப் பெற்றான். அதில் பயணம் செய்கையில், அவன் இன்னொருவனாக உருவம் கொள்வதைக் கண்டு வியந்தான்; பரவசமடைந்தான்; தற்காலிகமாகவேணும், விசும்பினையும், காற்றினையும் வெற்றி கொள்வதாய் மனமகிழ்ந்தான்.

வேகம் என்பது, தனது ஆழத்தில் ஊறுகின்ற ஒரு நதியென அகம்கொண்டான். அவன் தன் அகம் செல்லும் வேகத்தில் ஒரு வாகனம் வேண்டிப் பெற்றான்.

மனசாட்சியின் படி நடப்பதெனப்படுவது எப்போதும், நன்மையைப் பெற்றுத் தராது. அது துயரத்தைப் பல சமயங்களில் உருவாக்கிவிடும். அவனது, வேகம், பல நேரங்களில் ஆபத்தினைத் துவக்கப்புள்ளியாகக் கொண்டே தன்னை நீட்சித்துக் கொண்டிருந்தது. அவனது, வாழ்வின் நீளத்தை எல்லாம் அந்த இரு சக்கர எந்திரப்பறவை அவனை ஏற்றிக்கொண்டு கடந்து கொண்டிருந்தது. அதன் மேல் நாளுமொரு புதிய இலக்கினைக் கொண்டு கடந்து சென்று கொண்டிருந்ததால் அவ்வெற்றியின் இனிமையில் முழ்கி அந்தப் பேரிலக்கொன்றை அகம்கொண்டிருந்தான். ஃப்ரான்சின் காம்பி லேவல் சாலையினைக் கடும் வேகத்தில் தன் வாகனத்தில் கடந்திடவும், அதைக் கொண்டு தன்னகவெறியினைச் சற்றே தணித்திடவும் எண்ணம் கொண்டு அதுதரும் உத்வேகத்திலேயே சில நாட்களைக் கழித்தான்.

அச்சாலையின் தோற்றம் அதைச் சொர்கத்திற்கான வழியெனக் காட்டியது. அதன் மீது வேகத்தைப் பொழிவதே அதன் வனப்பினை முழுதும் அடைந்து வென்றெடுப்பதன் நிறைவைத் தரும். தன் பறவையைத் தட்டினான். அவனது அருந்திறன், அவனது அசைவுகள் இரண்டும் சேர்ந்து அவன் மோட்டாரினை அவன் அங்கமெனவும், அவன் எண்ணங்களை அதில் சேர்க்கும் நரம்பிழைகளென அவன் தோலடுக்கும் மாற்றிக் கொண்டிருந்தது. அவனது வேகமானி, மெல்ல சிகப்பைத் தொட்டு, அவனை மேலுமேலுமென உன்மத்தம் நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது.

அவன் பயணத்தில் உலகின் பால்கனியில் நடந்து கொண்டு, கீழே நுண்புற்களென மானுடர்களைப் பார்ப்பது போல நினைக்கத் தோன்றியது. பனி மெல்லிய படலமாகி, வெண்மங்கையின் மேலாடையென நிரம்பியும், விலகியும் அவனுக்குப் பெரும்கனவொன்றைச் சமைத்துத் தந்து கொண்டிருந்தது.

அவன் தன் வாழ்வின் கடிமான இலக்கொன்றைப் பூர்த்தி செய்திருந்தான். ஆம், அந்த உலகின், அழகும், ஆபத்தும் நிறைந்த சாலையை வெகு வேகத்தில் கடந்திருந்தான். மெல்ல தன் வேகத்தைக் குறைத்து காற்றோடு கை சேர்த்துப் பயணிக்கையில் அவன் கவசத்தின் உள்ளேயே கண்ணீரின் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன், தன் உள்ளச் சமவெளியைத் தொடும் முன்னரே, சமவெளியை அடைந்திருந்தான். அவனது, வேகமானியின் சிகப்பினைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டே இருந்தான். அவன், தன் மனவெழுச்சியைத் தாங்க முடியாதவனாகித் தன் வாகனத்தின் மேலேயே ஏறி நின்று தன் கைகளை விரித்தான், ஏதோ பிரபஞ்சத்தைக் கட்டி அள்ள நினைப்பவன் போல.

அவன் தேவனாகி இருந்தான். அத்தனை எள்ளல்களையும், எரிச்சல்களையும் கடந்தவனாகி இருந்தான். அவனெதிரே, மைய நதியில் இணையும் ஒரு கிளை நதியென, ஒரு சிறுசாலை வந்திணைந்தது. இவன் அதன் முகப்பைத் தொடும் நிச்சலனத்தில், சாலையின் மேலேயே ஊர்ந்து வந்திருந்த ஒரு பாரவண்டி அவனுடன் இதழ் சேர்த்தது. அதன் பின்னர், வலியைக் கடந்த வலியையும், ஆம்புலன்ஸ் ஒலியையும், சித்திரமெனத் தோன்றி மறையும் செந்நிறப் பின்னணியில் வெண்ணிற இறகென அசையும் தேவைகளையும் உணர்ந்து கொண்டிருந்தான்.

அவனைச் சூழ்ந்து அவனுயிரைப் பறிக்கக் காத்துக் கொண்டிருந்த உயிரிலிகளிடமிருந்தென, அவனைப் பாதுகாக்கும் முனைப்புடன் செவிலிகளும் மருத்துவர்களும் பெரும் நகரத்தின் இயக்கமெனச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வசைவுகள் அனைத்தையும், ஒரு துளி விடாமல் முழுமழையிலும் நனைய இச்சைகொண்ட மழலை போல, தன் சுவர்ண முலாமிட்ட பேனாவினுதவியால், தன் குறிப்பேட்டில் வரைந்தும், சுருக்கெழுத்துகளிட்டும், எழுதியும் கொண்டிருந்த கோதர்ட் நிரம்பியிருந்த மை குருதியாய் வெளிவந்து கொண்டிருப்பதை அறிந்து நிலைத்தார்.

அவன் பயணத்தில் உலகின் பால்கனியில் நடந்து கொண்டு, கீழே நுண்புற்களென மானுடர்களைப் பார்ப்பது போல நினைக்கத் தோன்றியது.

அவரால், அடுத்தேதும் குறிப்பெடுக்க இயலாதபடி, அவரை ஏதோ ஒன்று தடுப்பதுபோலிருந்தது. அவரை நெடு நேரம், அவரே கவனிக்காத போது, முகத்தில் எவ்வித உணர்வுகளுமற்று உற்றுக் கொண்டிருந்த நீல நிறக் கண்களுடைய செவிலி திடீரென அவரது சவரம் செய்யாத தாடையைக் கவ்வி, மயிர்க்கால்களை இழுத்து விழுங்கத் தொடங்கியதும், திடுக்கிட்டு விழித்தார்; உண்மையில், அது தன் தாடையில் கவ்விய நாகமெனக் கண்டதும், பயமெழுந்தாடி தன் உடலெங்கும் வெந்நீலமென மெல்ல சூழ்ந்து, அவரது மூளைக்குள் நிறமியெனத் தொட்டதும், தேற்கொடுக்கென கொட்டியதும், மூச்செழுச்சி கொண்டு தன் நினைவின் தளத்திற்கு வந்து, தன் குறிப்பேட்டை வெறித்துப் பார்த்து விலக்கி வைத்தார்.

நீரில் தன் முகத்தை அறிமுகப்படுத்தி, தன் மீது படர்ந்திருந்த ஆய்வின் நீட்சியால் உணர்ந்த களைப்பின் ரேகைகளைக் களைய முற்பட்டார். ஆய்வென்பது, ஒரு தொடர் நிகழ்வு, அதில் ஆர்வம் மட்டுமே ஒரு தூண்டுதல் என்றிருக்க முடியாது. தவ நிலையால் மட்டுமே அது நிகழும்; மனிதனைப் பற்றிய ஆய்வுகள் அதனினும் கடியது; மனித மனங்களைப் பற்றிய ஆய்வுகள் கடவுளைப் பற்றிய ஆய்வுகளை விடவும் சிடுக்குகள் நிறைந்தது. முகம் மட்டும் குளிர்வித்த, நீரின் போதாமையை உணர்ந்து இசைத்தட்டினை உருளவிட்டார். அது, அலைகளென மாறி, அவ்வறையையும் அவரையும் அணைத்துத் ததும்பியது.

கோதார்ட் அன்று முழுச்சவரம் செய்திருந்து தன் அகவையில் சற்று பின்னகர்ந்திருந்தது, ராம்சேயின் மனச்சுமைகளை அவர் முன்னர் இறக்கிவைக்கச் சற்றெளியதாய் இருந்தது என்பதைக் காட்டும்விதமாக அவனே அன்று அவருக்கு முன்னதாகத் தன் உரையாடலைத் தொடர்ந்திருந்தான். “அன்று, அனைவரும் என்னை உயிர்பிழைக்க வைத்துவிட வெகுவாய் முயன்றிருந்தனர்”, ராம்சே தொடர்ந்தான். “ஆனால், எனக்கோ இன்னும் சில நுண்காலத்தில், தன்னை நிச்சயம் இழந்துவிடுவேன் என்ற உறுதி மண்டைக்குள் வந்து சேர்ந்திருந்தது. அதை என் உள்ளுணர்வு முன்வைத்திருந்தது. உள்ளுணர்வுகள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்ற எண்ணம் என்னை ஒரு மெல்லிய கீறலென வெட்டிச் சென்றது; அதைத் தொடர்ந்து உடனேயே உள்ளுணர்வுகள் அனைத்துமே பொய் என்ற எண்ணம் மெல்ல எனக்கு வலுப்பெற்றது.”

இடைநுழைந்த கோதர்ட், “ராம்சே! தங்களுக்கு ஏற்பட்ட ‘உள்ளுணர்வுகள் பொய்’ என்ற எண்ணம் எதை உங்கள் மனதில் சுட்டியது எனச் சற்றே குறிப்பாக உணர்த்தினால் மகிழ்வேன்’ என்றார்.

“நிச்சயமாக, எனதருமை மனவியல் மருத்துவரே!” என்றவாறே தன் கைகளால் தன் உதட்டருகே துடைத்தவாறே, தன் எதிரே அமர்ந்திருந்த கோதார்டின் நாற்காலியைக் கவனித்துக்கொண்டே, தன் கைகளை ஒன்றோடொன்று பிணைத்து சிந்தித்தவாறே“ வெகு நேரம் நடக்கையில் நம் மனம் நிற்பதை விரும்பும்; வெகு நேரம் நிற்கையில் நம் மனம் நாற்காலியைத் தேடும் இயல்பாக; வெகு நேரம் அமர்ந்திருந்தால் படுக்கையில் சற்று முதுகைச் சாய்த்து, துயில் கொள்ளலாம் என்று தோன்றும்; அன்று, நான் இருந்த நிலையில், படுக்கையில், உயிரினைச் சற்றே பிரியலாமென்று என் மனம் சொன்னது; அது எனக்குப் பேராறுதலாய்ப் பட்டது. மனம், நம்மை ஆட்கொண்டால் அது மரண யாத்திரை; மனத்தை வெல்வதே வாழ்கை.”

“எனக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் வாழ்கை அல்ல, ஆறுதல்! எனவே, நான் உயிரைப் பிடித்து இறுக்கி என்னுடலோடு நிறுத்திக்கொள்ள முட்டிக்கொண்டிருக்காமல், என் அத்தையின் கதறலையும் தாண்டி மரணத்தை அணைத்துக்கொள்ளவே நசை கொண்டிருந்தேன். கோரமான இந்த உலகின் முன்பு என் இயல்புகளோடுடனே கூட நான் அநாதரவாய் வாழத் தலைப்பட்டேன்; அன்று, இருந்த வலியின் நிலையில், நான் உயிர் பிழைத்திருந்தாலும் நான் இழக்கப்போகும் அங்கங்களின் விளைவுகளையும் எண்ணிய போது, உலகின் விழிகள் என்னை நீள்நாக்குடன், வெறித்த விழிகளுடனுமே வரவேற்றன.” வேகமாகப் பேசிக் கொண்டிருந்தான் ராம்சே உணர்ச்சிகளின்றி.

“ஒரு புள்ளியில் வெண்ணிறத் துணியில் ஊறும் நீரினைப் போல, திரையினை விலக்கி ஓர் அறைக்குள் செல்லும் உணர்வினைப் பெற்றேன். புரிந்தது அத்தனையும்; என்னை நோக்கி, பொறுமையுடன் காத்திருந்த, அத்தை இசபெல்லை நோக்கி சொன்னேன் ‘அத்தை! நான் பேசுவது கேட்கிறதா. நான் இறந்துவிட்டேன். இனி, சென்று தங்கள் பிழைப்பைப் பாருங்கள்!’ அதைக் கூர்ந்து நோக்கிய அவள், அதிரும் கோணலான உதட்டோரத்துடனும், விழியைப் பிழிந்து வழிந்து கொண்டிருந்த லாக்ரிமல் நீருடனும் என்னருகில் வந்து ‘இல்லை, என் செல்லமே, தேனே, நீ இறக்கவில்லை, நீ பிழைத்துவிட்டாய்! விரைவிலேயே என்னுடன் வந்து சுகமாக வாழப் போகிறாய்’ என்று சொன்னவாறே, பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். அத்தனையும், என்னால் கேட்க முடிந்தாலும், ‘எனக்குப் புரிகிறது, எப்படி இதயம் கழண்டோடித் தாவி வெளியேறும்படி அழுதாலும், மூளைவெடிக்குமளவிற்குத் துயர் கொண்டாலும், நான் இறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மாற்ற முடியாது அத்தை’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன் உணர்ச்சிகளற்று.”

அவ்வளவுதான் என்பது போலத் தன் நாற்காலியின் முனையிலிருந்து தன்னை உள்ளித்துக்கொண்டு, இலகுவாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான் ராம்சே.

அவன் கூறிய அத்தனையையும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த கோதார்ட் முழுக்கவே அவனது ஒன்றோடு ஒன்று பின்னியிருந்த கைகளிலேயே தன் பார்வையைப் பதித்திருந்ததை உணர்ந்து உடன் தன் கைகளைக் கவனித்துத் தான் எப்போது அவனைப் போலவே நாற்காலி அமர்வின் முனைக்கு நகர்ந்து, தன் கைகளைப் பின்னிக்கொண்டோம் என்பதை எண்ணி வியந்திருக்கையிலேயே, தன் கைப்பிணைப்பில் இடது பெருவிரல் மேலே இறுதியாக இருப்பதைக் கண்டு, அவனுக்கு எந்தப் பெருவிரல் வெளியே இருந்திருக்கும் எனக் கேள்வி கொண்டு நினைவு மீட்டெடுக்க எவ்வளவு முயன்றும் இயலாமல் சிறுகுறுஞ்சோர்வுற்றார்.

மீண்டும் தன்னிலை மீட்டு, “ஆனால், நீங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றீர்கள்; அல்லவா? இல்லை, இன்னும் அதை நீங்கள் உணரவில்லையா?” என்று வினவினார். இந்தக் கேள்வியின் எதிரொலியெனத் தன் நெற்றியில் உண்டான சுருக்கங்களுடன் முதல் முறையாக எரிச்சலுடன் “இல்லை. இல்லை. நான் உயிருடன் இல்லை; ஏன் ஐயா, என்னை அவமதிக்கத்தான் என்னை அழைத்தீர்களா?” என்று அலறியவாறே அவரது பெயர்ப்பலகையைப் பார்த்து நுண்ணணுகி, “மிஸ்டர். ஜூல்ஸ் கோதார்ட்!” என்று சொற்தடுக்கி நின்றான். “மன்னிக்கவும், ராம்சே அவர்களே, நிதானமாக அமருங்கள், தங்களை நான் அவமதிக்கவில்லை; மாறாக புரிந்துகொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் உயிரோடிருப்பதாக நான் எப்போதும் இனி சுட்டமாட்டேன்.” என்று தான் சொன்னதை இரண்டாம் முறை சொன்னதாகப் பொருள்படுமாறு அவனைக் கண்ணொடு கண்ணோக்கி மேலும் , கீழுமென தலையசைத்தார்.

“உங்களோடு ஒரு குறிப்பினைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன், நான் உங்களைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு கனமான மனதுடன் கிளம்பிய பிறகு, தங்கள் சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே, தங்களுக்கும் மேல்தளத்தில், இருக்கும் கடைசி அறையில் இன்னுமொரு சுவாரஸியமான நோயாளி இருப்பதை அறிந்து அவரைப் பற்றிய குறிப்புகளை எடுப்பதற்காக வந்திருந்தேன்; அவர் காத்தரீன், 38 வயது பெண்மணி; அவர் தீயில் சுடப்பட்டுத் தன் உடலின் முக்கிய பாகங்களை மெல்ல மெல்ல திறமையான மருத்துவர்களின் உதவியால் பாதுகாத்துக்கொண்டு, உயிர்பெற்றெழுந்தவர்”. கோதார்ட் தொடர்ந்தார்.

காத்தரீன், தன் உயிர் தன்னுடன் வந்து சேர்ந்ததுமே, முதலில் விழிதேடியது தன் கணவர் ஸ்டீவினைத்தான். தன் நா மீண்டும் மொழியின் சுவையை முதலில் அறிந்ததுமே அவள் சொன்ன வார்த்தை ‘ஸ்டீவ்’ என்பதைத்தான். அவர், தன்னை வந்து சந்திக்கவில்லை என்பதை அவள் அப்போது மறு மரிப்பிற்கீடாய் கருதினாள். மறுநாளே, அனைவரும் அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவளொரு, பெரிய கூட்டுக் குடும்பத்தின் ஓர் அங்கம்.

இதைச் சொல்லியதுமே நிமிர்ந்து நோக்கி, “ராம்சே, இதைச் சொல்வதன் மூலம், தங்களது தனிமையினை நான் ஏளனம் ஏதும் செய்ய விழையவில்லை; மாறாக, அந்தச் சூழலின் விவரணையைச் சொல்லத்தான் முயல்கிறேன்” என்றார் கோதார்ட்.

“தனித்தீவில், கரையொதுங்கியவனைக் கடலலைகளைவிட எவரும் ஏளனம் செய்துவிட முடியாது; நீங்கள் தொடருங்கள்” என்று சுருக்கமான பதிலைத் தந்து ராம்சே தான் அவரது கூற்றினை ஆர்வமுடன் கவனிப்பதையும் அறிவித்துக்கொண்டான்.

கோதார்ட் தொடர்ந்து, “நானும், அந்தக் குடும்பத்தில் ஒருவரென, ஓரத்தில் அமர்ந்திருந்தேன் – என் நோக்கம் வெறும் குறிப்புகளெடுப்பது என்றபோதும், அவளைச் சூழ்ந்திருந்த அவளது குடும்பத்தாரது நோக்கம் என்னை மகிழ்வுறச்செய்தது. அனைவரும் சூழ்ந்திருக்க பாடல் பாடி, ஸ்டீவினை வரச் செய்து காத்தரீனுக்குப் பூங்கொத்து தரவைப்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. மெல்ல பாடல் தொடங்கிய போதே, காத்தரீன் முழுதும் புரிந்து கொண்டவளாய் பேரானந்தம் கொள்வதன் முற்றத்திற்கு வந்திருந்தாள். எங்கே தன் உயிரின் ஒரு பாதி; தன் வாழ்வின் சரிபாதி என்று நோக்கி இருந்தவளை நோக்கி அழகிய, சீரான நடையுடன் அணுகிக் கொண்டிருந்த ஸ்டீவின் முகத்திலும் அதே அளவு காதலின் உக்கிரமும், மீள்வின் மகிழ்வும் நிலை கொண்டிருந்தது.”

தனித்தீவில், கரையொதுங்கியவனைக் கடலலைகளைவிட எவரும் ஏளனம் செய்துவிட முடியாது.

அருகில் வந்து, தன் பூங்கொத்தினை அளித்த அவன் அவள் முகத்தினருகே வந்து அந்த செவ்வுதடுகளின் உலர்வை மாற்றிட வன்பாலையில் மழையென தன் உதடுகளை இணைத்திட நெருங்கினான். பளார், என வாளால் வீசியதென அவனை அறைந்து தள்ளினாள். ஒரே நொடியில், அவ்வறையின் அங்கங்கள் அனைவருமே மெளனத்தின் மேலாடையை அள்ளிப் போர்த்திக்கொண்டனர். அது இருளின் நிறத்திலிருந்தது; ஆனால், ஸ்டீவ் விடவில்லை, “மன்னித்துக்கொள், என்னுயிரே, நீ கண்கள் திறந்து என்னைத் தேடிக் கொண்டிருக்கையில் நான் பார்க்க முடியவில்லை என்று கோபித்துக்கொள்ளாதே” என்று சொல்லி மீண்டும் அவளை அனைக்கப் பார்த்தான்.

“நீ யார்?” என்றாள் சந்தேகமும் எரிச்சலும் கலந்த முகத்தோற்றத்தில்.

“…”

“என் கணவனைப் போலவே, உருவமிட்டிருக்கும் நீ யார்? சொல்! எங்க என்னோட ஸ்டீவ்? ஏன் எல்லாரும் இப்பிடி ஏமாந்தீர்கள். இது என் ஸ்டீவ் இல்லை; இல்லை, நீங்க எல்லாருமே சேர்ந்து என்னை ஏமாற்றுகிறீர்கள்! என் ஸ்டீவ என்னடா பண்ண, நாய் மகனே” என்றெல்லாம் சொல்லி காத்தரீன் தன் வாழ்வில் மீண்டும் துன்பத்தை நோக்கி ஒவ்வோர் அடியாக எட்டுவைத்துப் பயணித்தாள்.

“என்னிடம் குடும்பத்தாரும், ஸ்டீவும் அவர்கள் பரஸ்பரம் எடுத்துக்கொண்ட நிழற்படங்களைக் காட்டி, அவள் மனதில் ஏற்பட்டிருக்கும், பிரச்சனையைச் சரிசெய்து தரவேண்டுமாறு மன்றாடினார்கள்.” சொல்லி முடித்த ஜூல்ஸ் தான் எழுந்து சென்று தன் அலமாரியிலிருந்து எடுத்து வந்த தன் (இருபதாம் தொகுதி என்று தலைப்பிட்டிருந்த) குறிப்பேட்டின், 25ம் பக்கத்தினைக் காட்டினார். அது காத்தரீன் பெய்ர்ட் என்ற தலைப்பில் பல புரியாத கலைச்சொற்களுடன் நிரம்பியிருந்தது.

“மனம் பல விதமான ஏமாற்றங்களைச் சந்திக்கிறது; பல விதமாக நம்மையும் ஏமாற்றுகிறது. யாரோ ஒருவர் வந்து நம் மனதைக் குழப்ப வேண்டியதில்லை; ஒருவரது மனம் என்பதைக் கணக்கில் கொள்ளும்போதும், அந்த மனதின் உரிமையாளனே யாரோ ஒருவனாகிவிடுகிறான்.”

“உண்மையில் உன் மனம், வேகத்தைச் சரியாகக் கணக்கிட்டும், அதை வென்றும் கடந்தும் செல்லும் தன்னுணர்வை நுட்பமாகப் பெற்றிருக்கிறது. இதுவே, கணிதப்பாடத்திற்கான அடிப்படை ஆற்றல்; ஆனால், உன் வாழ்வின் ஆதாரத்திலேயே, நீ கணிதத்தில் ஞான சூன்யம் என எப்படியோ உன் மனத்தால் நிறுவப்பட்டிருக்கிறாய். அதை, ஏற்காத மனத்தின் மனம் உன்னை ஒரு வேகமான வண்டியோட்டியாக மாற்றியிருக்கிறது – இன்னும் சொல்லவேண்டுமெனில், வெற்றிகரமான, வேக வண்டியோட்டியாக!” தன் வாழ்நாளின் மிக முக்கியமான தருணமாய் ராம்சேயைக் கருத வைத்துத் தன் உரையாடலின் முடிவிற்கு வந்திருந்தார் கோதார்ட்.

“நீ! நேராக உன் அத்தை வீட்டிற்குச் சென்று, அவளோடு உரையாடு; மனத்தை வெல்ல நினைப்பதற்கு, அதைப் புரிந்துகொள்ள முனைவதே முதல் படி. அதை நிகழ்த்திப்பார்; அடுத்த வாரம், இதே நேரம் என்னை மீளச்சந்தி” “நீ உயிரோடிருக்கிறாய் என்று நான் – முன்பே சத்தியம் செய்தது போல – இனி எப்போதும் சொல்லமாட்டேன்” என்றவாறு கதவினைத் திறந்துவிட்டு, இலகுவாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த ராம்சேயைப் பார்த்துவிட்டுத் தன் கதவுகளை மூடி உள்ளே தாழிட்டார் கோதார்ட்.

தன் வலது உள்ளங்கையில், பந்தினை மூடிக்கொண்டு, அரைச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்தவாறே, தன் மனநழுவுதலை முயன்று கொண்டிருந்த போதே, உறக்கம் மெல்ல அவரைப் போர்த்தத் தொடங்கிடும் சில நுண்கணங்களுக்கு முன், தன்கனவுத் திரையில், வலது கையும், இடது கையும் பின்னிப் பிணைந்திருப்பதைக் கண்டபோது அது காத்தரீனின் கைகளெனப் பட்டது; அக்கைகளின் வலது பெருவிரல் வெளியே இறுதி விரலாய் இருந்ததைப் பார்த்ததும், தன் கைகளிலிருந்து பந்து விடுபடுவதையும், அது கிழே இருந்த வெண்கலச் சட்டியில் உருண்டு எழும் சத்தத்தையும், அதிர்ந்தவராக உணர்ந்து, சட்டென்று விழித்தார். வேகமாய், தன் குறிப்பேட்டைத் தேடிக்கொண்டிருந்தார்.

அது கிடைக்காமல் போகும் தோறும் அவரது பதற்றம் பெருகியது; ஒரு புள்ளியில், நின்று நினைவுகொள்கையில், அதை ராம்சே எடுத்துச் சென்றிருக்கலாம் என்று புரிந்தபோது, அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து கத்தினார். அவரது சத்தம் யாருக்கும் கேட்காதபடி, அவருடல் மட்டுமே துயில் கொள்ளத் தக்கவாறு அமைப்புடன் கூடியிருந்த அவரது அறையினைச் சுற்றி, நிலம் பெரும் பேராழியென சூழ்ந்து, விழுங்கிக் கொண்டிருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்