உவன்

4 நிமிட வாசிப்பு

மங்கிய பீச் பழத்தோலின் நிறத்திலிருக்கும் சிறுவன் உவன். உவனின் வீடு இளம்பச்சைச் சுவர்களையும், பழுப்பு கதவு ஜன்னல்களையும், அடர் சிவப்புக் கூரையையும் கொண்டிருந்தது. அந்தக் கூரையின் பக்கவாட்டிலிருந்த புகைப்போக்கி, சிக்கலாகிவிட்ட கம்பியைப் போலச் சுருண்டு செல்லும் புகையை எந்நேரமும் கக்கியபடி இருந்தது. உவனுடைய வீட்டிற்கு முன்னால் இருந்த செங்கற்படிகள் சிதைந்திருந்தாலும், வெப்பச் சலனங்களால் விரிசல் விட்டு, நாளடைவில் துண்டுகளாகி மண்ணில் புதைந்து தட்டையாகிவிட்டிருந்த அதன் கற்கள் உவன் தவ்விக் குதிக்க ஏதுவானதாய் அமைந்திருந்தன.

உவனது வீட்டுக் கூரையின் கிடைமட்டக் கோட்டிற்கு 47 டிகிரி சாய்மானத்தில், ஆறு கதிர்களுடன் எப்பொழுதும் மிதந்து கொண்டிருந்த சிவப்புச் சூரியன் இரவு பகல் பாராமல் வெயிலை அந்த இடம் முழுக்க பரப்பிக் கொண்டிருந்தது. அதற்கு இரண்டு பக்கமும் வெண்குன்றுகளாய்ப் பம்மிய ஓரங்களுடன் படர்ந்திருந்த மேகங்களில் ஒன்று மல்லார்ந்து படுத்தபடி கால்களை மேல் நோக்கி நீட்டியிருக்கும் மூன்று கால் பூனை போல இருந்தது.

வீட்டின் முன்புறம் இருந்த புல்தரைதான் உவனுடைய விளையாட்டு மைதானம். சில சமயங்களில் அந்தப் புற்களில் ஒன்றை விரல்களால் கிள்ளியெடுத்து, அதன் உச்சியில் மொட்டாய் அமர்ந்திருக்கும் பனித்துளியைச் சுவைத்துப் பார்ப்பான். புல் வாடை படர்ந்த குளிர்ந்த பனிக்கூழாய்க் கரைந்து அரைநொடியில் காணாமல் போகும் அந்தத் துளியை, என்றேனும் ஒருநாள் தன் தொண்டை நனையும் வரை உள்ளிழுத்துச் சுவைக்க வேண்டும் என்ற பேராசை உவனுக்கு உண்டு. ஆனால் ஒவ்வொரு துளியும் எச்சிலுடன் கரைந்து தொண்டையை அடையும் பொழுது குளுமையின் சுவடே தெரியாமல் போய்விடும்.

அந்தப் புல்வெளியில் இரண்டு கைகளாலும் கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு உடலின் பகுதிகள் நிலத்தில் பதிய, உருண்டு செல்லும் விளையாட்டு உவனுக்குப் பிடித்தமான ஒன்று. அந்தப் புல்தரையின் மீது படர்ந்திருக்கும் பனித்துளிகள் உவன் உடையைத் தாண்டி தோலை நனைத்தபோது எழும் சில்லிப்பில் உவனுக்கு விருப்பமிருந்தது. அப்படி உருள்வதால் சட்டை அழுக்காகும் என்று அம்மா உவனை என்றுமே தடுத்ததில்லை. உவனது அம்மா எப்பொழுதும் வீட்டு வேலைகளைச் செய்தபடியே இருந்ததால் உவனுக்கு விளையாடுவதற்கு வீட்டின் பின்புறமிருந்த குளத்தில் மிதக்கும் மஞ்சள் வாத்தையும் அதன் குஞ்சையும் தவிர வேறு யாருமில்லை. அந்த வாத்துகள் வளைந்த நூலைப் போன்ற அலட்சியமான நீர்க்கோடுகளைத் தங்களின் கீழ் இழுத்தபடி தண்ணீரில் நீந்திச் செல்பவை. குளத்தின் நடுவில் வட்ட இலைகளுக்கிடையே பூத்திருந்த செந்தாமரையை நெருங்கும் போதெல்லாம் அதைத் தன் சிவந்த அலகால் முத்தமிட்டுச் செல்பவை.

ஓவியம்: ஜெயந்தி சங்கர்

சீரான இடைவெளியில் சுற்றிலும் நடப்பட்டிருந்த பழுப்பு மரக்கட்டைகள்தான் உவர்கள் வீட்டின் வேலி. உவனது வீட்டின் புல்வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் வெள்ளைப் பூக்கள், அந்த வேலியோரமாக உயர்ந்து நிற்கும் பைன் மரங்களின் கீழ் உதிர்ந்து கிடப்பவை. அம்மரங்களுக்கு மேல் கறுத்த வளைகோடுகளாய் இறகை அசைத்துப் பறந்தபடியிருக்கும் பறவைகள் கவ்வியிழுத்துப் போட்டவை.

இது நாள் வரையில் அந்த வேலியைத் தாண்டி உவன் சென்றதே இல்லை. அந்த வேலிக்கு அப்பால் சரிந்து செல்லும் பசிய வெளியை மட்டுமே அங்கிருந்து உவனால் பார்க்க முடிந்தது. அதற்கு அப்பாலிருக்கும் உலகம் எத்தகையதாக இருக்கும் என்று அங்கிருந்த பைன் மரங்களில் ஒன்றின் கீழ் படுத்தபடி கற்பனை செய்வது உவனது பொழுது போக்குகளில் ஒன்று.

அதற்கு அப்பாலிருக்கும் உலகம் எத்தகையதாக இருக்கும் என்று அங்கிருந்த பைன் மரங்களில் ஒன்றின் கீழ் படுத்தபடி கற்பனை செய்வது உவனது பொழுது போக்குகளில் ஒன்று.

சில சமயம், அந்தச் சரிவைச் சுற்றிச் சரிகையாய் ஆறு ஒன்று ஓடுவதாகவும் அதிலிருக்கும் ஆரஞ்சு நிற மீன்கள் தன் வீடிருக்கும் குன்றைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும் நினைத்துக்கொள்வான். மற்றொரு முறை அந்தச் சரிவு முடியும் இடத்தில் ஒரு ரயில் தண்டவாளம் இருப்பதாகவும் அதில் எப்பொழுதும் பெரிய எஞ்சின் பகுதியும், போகப் போகச் சிறுத்து வாலாய்த் தேயும் பெட்டிகளையும் கொண்ட மஞ்சள் ரயில் ஒன்று கரும்புகையைக் கக்கியபடிச் சுற்றிவருவதாகவும் கற்பனை செய்துகொள்வான். உடனே ரயிலாக மாறி வேலியின் உட்புறமாகச் சுற்றிச் சுற்றி ஓடுவான். அப்படி ஓடும்போது உவன் எழுப்பும் கூவென்ற ஒலியில் குளத்தில் இருக்கும் வாத்துகள் தன் பச்சை வளையம் கொண்ட கழுத்தைத் திருப்பி உவனைப் பார்க்கும்.

உவனுக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு ஆசை தான். தன்னுடன் புல்வெளியில் உருண்டு விளையாட ஒரு சிறுமி. பலவண்ணப் பூக்கள் போட்ட ப்ராக் அணிந்திருக்கும் அவள் தன் கூந்தலை இரு பின்னல்களாக்கி அதன் நுனியில் ரிப்பன் கட்டிக் கொண்டிருப்பவளாக இருப்பதை உவன் விரும்பினான். இதற்காக உவன் இன்று மீண்டும் ஒரு முறை கடவுளை வேண்டிக்கொண்டான்.

நிதிலனின் தங்கை, அவள் கேட்ட நாய்க்குட்டியை அப்பா வாங்கித் தரவில்லை என்ற வருத்தத்துடன் நிதிலனின் அறைக்குள் நுழைந்தாள். கையில் பென்சிலுடன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்ததும் அவளுக்கு நாய்க்குட்டி மறந்து போனது. ஆவலுடன் அவனுக்கு முன்னாலிருந்த தாளை எட்டிப் பார்த்தாள். அதில் அவன் தீட்டியிருந்த சித்திரம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று தன்னை வரையும் படி அவனை மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

நிதிலன், அவளை அருகிலிருந்த முக்காலியில் அமரச் சொன்னபோது, கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய்த் தன் டெடி பேரை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். அவளது முகத்தைப் பார்த்தபடி தாளில் இருந்த புல்வெளிக்குச் சற்று மேலாக அந்தரத்தில் ஒரு வட்டமிட்டான் நிதிலன். அதனுள் மேலும் இரண்டு சிறு வட்டங்களைப் போட்டு அதற்குள்ளிருந்த பாதி வெளியைக் கருப்பாகி அதைக் கண்களாக்கினான். அதற்குக் கீழே ஆங்கில எழுத்து சியைக் கால்நீட்டி படுக்க வைத்தது போல வாயை வரைந்தான். பின்னர் மெலிந்த கழுத்தும், முன்பக்கம் பட்டன் வைத்த சட்டையும் பூக்கள் அலங்கரித்த அவளது அரைப் பாவாடையையும் வரைந்தான். தாளில் மொட்டைத் தலையுடன் நின்றிருந்த தன் தங்கையின் சிரத்தின் உச்சியில் கருப்பு வளைக் கோடுகளை இழுத்து அதை குதிரைவாலாக்கினான். தன் அம்மா வைத்திருப்பதைப் போன்ற ரப்பர் பேண்ட் ஒன்றை வரைந்து அதனால் அவளது கூந்தலை முடிச்சிட்டான். பின்னர் மெலிந்த கால்களை வரைந்து, அதன் மேல் அவள் வைத்திருந்தது போலத் தொடைகளின் மீது பதிந்திருக்கும் கைகளையும் அதிலிருக்கும் டெடி பேரையும் வரைந்தான். அவனது தங்கைக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.

தூங்கியெழுந்தபோது தன் வீட்டிற்கு முன்னாலிருந்த புல்வெளியில் பூப்போட்ட பாவாடையையும் பொத்தான் வைத்த சட்டையும் அணிந்து உட்கார்ந்திருந்த அந்த மூக்கில்லா சிறுமியைக் கவனித்தான் உவன். மஞ்சள் நிறத்திலிருந்த உவளின் கைகள் உவனுடையதைப் போலவே மெலிந்திருந்தன. உவள் கூந்தலை உச்சியில் முடிச்சிட்டிருந்தாள். உவளது கைகளில் வைத்திருந்த கரடிப் பொம்மை உவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, இரண்டு கால்களாலும் எம்பி எம்பிக் குதித்தபடி உவளை நோக்கி ஓடத் துவங்கினான் உவன்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்