மனிதர்களுடன் இணக்கமாகும் வேற்றுகிரக மிருகங்கள்

11 நிமிட வாசிப்பு

பிரதீப் பாலு எழுதும் புனைவின் விடுதலை தொடரின் இரண்டாம் பாகம்.


கனவுருப்புனைவில் நிகழும் நவீன மாற்றம்

The Untamed

Directed by Amat Escalante

மெஹிக்கோ (Mexico) நாட்டிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுப் பின்புலமுள்ளது. இஸ்பானிய மேலாதிக்கத்திற்கு முன்புவரை உலகின் தலைச்சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற நகரம் இன்று மெஹிக்கோ நகரம் (Mexico City) என்று அழைக்கப்படும் ஆஸ்தேக் கலாச்சாரத்தின் தலைநகரமான தெனோச்டிட்லான் (Tenochtitlan). இஸ்பானிய மேலாதிக்கம் துவங்கியது முதல், மெஹிக்கோ நாட்டு மக்களுக்கு, உலகின் வேறெந்த பிற கலாசாரங்களுக்கும் நிகழ்ந்திடாதவொரு துர்பாக்கியம் நிகழுகின்றது. இஸ்பானியர்களால் ஆளப்பட்ட சுமார் நானூறு ஆண்டுகளில், இன்றுவரை, சாமானிய மக்கள் ஆளும் அரசுகளை எதிர்த்து அவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஒரு முறைகூட வெற்றி பெறவில்லை. செழுமையான கலாசாரப் பின்னணியைக் கொண்ட நாடு என்றாலும் அம்மக்கள் தொடர்ச்சியாகக் கொன்றழிக்கப்பட்டும், கழிவிரக்கத்துடன் அணுகப்பட்டும் வருகின்றனர். அப்பகுதியில் இன்று நிகழ்ந்து வரும் போதைப் பொருட்களின் பரவலாக்கம், தெருக்களில் கட்டவிழ்க்கப்படும் வன்முறை, உருவாகும் இதுவரை எவரும் சிந்திக்க இயலாத குற்றமிழைப்பவர்கள் என, நூற்றாண்டு காலமாகத் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வந்த மக்கள் திரள், உலகையே பயங்கொள்ள வைக்கும் அளவிற்கு வெடித்து மேலெழுந்து வருகிறது. மெஹிக்கோவின் இந்த அதிர வைக்கும் பரிணாமம், சமகாலத்தில் அது வெளியிடும் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வகையில் மெஹிக்கோ திரைப்பட நடைமுறையில் தவிர்க்க முடியாத அங்கம் வகிக்கும் இயக்குநர் அமத் எஸ்கலாந்த்தே (Amat Escalante).

மெஹிக்கோ நாட்டின் குவானஹுவாதா (Guanajuata) பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமிது. புனைவு மற்றும் சமூகக் கட்டமைப்பு ஆகிய இரண்டு அடிப்படைகளிலும் திரைப்படம் இந்நிலப்பகுதியைச் சுற்றி நிகழ்கிறது. படம் இவ்வாறு துவங்குகிறது: விண்வெளியில் ஒரு எரிகல் பாய்கிறது; அது முதல், அது பூமியில் விழுந்த விதம் யாது, அதன் மூலம் அந்தப் பகுதியில் நிகழ்ந்த மாற்றம் என்ன போன்ற விளக்கவுரைகள் எதையும் படம் வழங்காமல், நேரடியாகக் கதை துவங்கப்படுகிறது. காரணம், திரைக்கதையில் விளக்கவுரைகளைப் பொருத்துதல் நிகழ்ந்த சம்பவத்திற்கு இறுதிக்காட்சியில் ஒரு முடிவு கட்டவே அதிகம் பயன்படும். ஆனால், இந்த எரிகல்லால் அப்பகுதியில் நிகழ்ந்த மாற்றங்கள் எந்த வகையிலும் மனித குலத்திற்கு எதிராகவோ அல்லது மெஹிக்கோ நாட்டின் சமநிலையைக் குலைக்கும் விதத்திலோ காட்சிப்படுத்தப்படவில்லை (இந்தக் கதைக்கும் மெஹிக்கோ சமூகத்துக்கும் இடையிலிருக்கும் அடுக்குகளுக்குப் பின்னர் வருவோம்).

எரிகல்லுடன் வேற்றுகிரக மிருகமொன்றும் குவானஹுவாதா பகுதிக்கு வந்துவிடுகின்றது. அதிக மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு வயது முதிர்ந்த தம்பதி அந்த மிருகத்தின் குணாம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த மிருகம் பூமியில் விழுந்த இடம் மற்றும் அது தற்பொழுது வசித்துவரும் அந்த முதிய தம்பதியின் வீடு ஆகிய இடங்களின் சுற்றத்தில் மிருகங்கள், பறவைகள், ஊர்வன (Reptiles) மற்றும் மனிதர்களின் உள்ளார்ந்த பாமர உளத்தூண்டுதல்கள் (Primal Impulses) வீரியமடைகின்றன. ஒரு சாதாரண மெஹிக்கோ நாட்டுக் குடும்பத்துக்குள் இந்த மிருகத்தின் அறிமுகம் நிகழ்த்தும் மாற்றங்களே கதை.

படம் எரிகல்லில் துவங்கியும் அதனூடே ஒரு மிருகத்தைத் தோற்றுவித்தாலும், இது நையப்புடைத்த உலகளாவிய அறிவியல்-வானியல் புனைவு வகைமையைச் (Sci-Fi genre) சார்ந்திருக்கவில்லை. இதே வகைமையில் இதுவரை எண்ணிலடங்காத படைப்புகள் உலகெங்கிலும் வெளிவந்துவிட்டன. பெரும்பாலும் இந்தக் கதையம்சங்களைக் கொண்ட படங்கள் மனிதர்கள் கண்டிருக்க வாய்ப்பற்ற காட்சிப்படிமங்களைக் (Visuals) கொண்டிருக்க வேண்டும் என்று பணிக்கப்படுவதால், எந்தெந்த நாடுகளில் சினிமா ஒரு தனிப்பெரும் வணிகமாக வளர்கிறதோ, எங்கெல்லாம் அதில் அதிக அளவிலான முதலீடுகள் நிகழ்கின்றனவோ, அவையே மக்கள் இதுவரை கண்டிராத காட்சிப்படிமங்களை வடிவமைப்பதில் வெற்றி பெறுகின்றன. அவ்வாறு, உலகளாவிய அளவில், கனவுருப்புனைவு மற்றும் அறிவியல்-வானியல் புனைவில் அதிக படைப்புகளை உருவாக்கிய நாடு அமெரிக்கா என்றே கூற வேண்டும். பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் அசகாய மூலதனம் மற்றும் தனது படங்களுக்கென பல நாடுகளில் வளர்த்து வைத்திருக்கும் சந்தைகள் ஆகியவை, இந்த வகைமையைக் கொண்டு பிறிதொரு நாடு ஒரு படைப்பை உருவாக்க முன்வந்தாலும் அவை அமெரிக்க முன்மாதிரியையே பின்பற்றியாக வேண்டும் என்ற அளவிற்கு உலகளாவிய கற்பனையில் தனது மேலாதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. ‘The Untamed’ திரைப்படம் இந்த வகைமையைக் கடந்துவிடும் சிந்தனைப் பரப்பில் செயல்படுகிறது என்பதை, அமெரிக்காவால் வளர்க்கப்பெற்றுத் தற்பொழுது உலகெங்கும் பரவிவரும் கனவுருப்புனைவையும் அறிவியல்-வானியல் புனைவையும் ஆய்வு செய்யாமல் நம்மால் விவரித்துவிட முடியாது.

அமெரிக்க வகைமை

சமகால அறிவியல்-வானியல்/கனவுருப் புனைவின் வேர்கள் ஜோர்ஜ் மெலியே (Georges Méliès) காலம் வரைப் பின்செல்கின்றன. இதை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பெரும்பான்மைப் படைப்புகளின் சட்டகம்: ஒன்று, வணிக இலாபத்துக்கோ அல்லது மனித இருத்தலியலுக்கு எதிராகப் பூமி விடுக்கும் மிரட்டலை எதிர்கொள்ளவோ அமெரிக்கா ஒரு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும்; பிறகு அந்தப் பயணத்தின் நடுவில் எப்படியோ ஒரு புதிய கிரகம் அல்லது வேற்றுகிரக மக்கள்/உயிரினங்களின் தொடர்பு ஏற்படும்; கதையின் இந்த விண்வெளிப் பயணம் ஒருவேளை வணிக நோக்கத்தைக் கொண்டிருந்தால் இந்தத் தொடர்பு பேராசைமிகு மனிதர்களின் குற்ற உணர்ச்சியை மேலேழுப்பவும், இல்லை இருத்தலியல் சார்ந்துள்ளது என்றால் மனித குலத்தின் இனத் தொடர்ச்சி பூர்த்தி செய்யும் விதத்திலும் கட்டமைக்கப்படுகின்றன. யதார்த்தமோ மனித குல நீட்சி மற்றும் வணிகத் தேவை ஆகிய இரண்டும் காலனியாதிக்க நாணயத்தின் இரண்டு முகங்கள் என்பதைப் பலர் அறிவதில்லை. வணிகத் தேவை பொருள் சார்ந்தது என்றால், மனித குல நீட்சிக்கென போராடும் கதாப்பாத்திரங்கள், இம்மிபிசகாமல், பிரான்சிஸ்கன் (Franciscan) அல்லது இயேசுயித் (Jesuit) மதகுருமார்களின் குணாம்சங்களைக் கொண்டவர்களாவர். அறிவியல்/வானியல் புனைவுக் கதாப்பாத்திரங்களின் ஆன்ம அகநிலையில் இந்த மாற்றுக் கிறித்துவப் படிப்பினைகள் அசைக்க முடியாத அங்கம் வகிக்கின்றன என்கிறோம்.

இரண்டு, பூமியில் விழுமொரு எரிகல்லோ (சில சமயம் இது வேற்றுகிரக வாசிகளின் நேரடியான விண்வெளிக் கலமாகவும் இருப்பதுண்டு), அல்லது தடை செய்யப்பட்டவொரு அறிவியல் சோதனையாலோ மனித குலத்தை மிஞ்சியவொரு சக்தி தோற்றுவிக்கப்படுவது. தொண்ணூறு சதவிகிதப் படங்களில் இவை என்றுமே மனிதர்களுக்கு – அமெரிக்கர்களுக்கு – எதிராக உள்ளதாகவே சித்தரிக்கப்படும். இதனைக் கையாளும் விதமாக தனது முழு ஆயுத பலத்தையும் கொண்டு போரிட்டு, சரியாக அழிவின் முகப்பில் உலகம் நின்று கொண்டிருக்கையில் அமெரிக்க அரசாங்கம் ஒட்டுமொத்த உலகையே காப்பாற்றிவிடும். அமெரிக்காவின் ஆயுத பலம் என்னவென்று பார்த்தால், ஒருவேளை தனது எதிரி நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா அமெரிக்காவின் மீது திடீர் தாக்குதல் ஏற்படுத்தினால் அதனை முறியடிக்கவே இந்த வானியல் முன்னெடுப்புகளை அமெரிக்க ஜனாதிபதி எடுத்ததாக இதே படங்களில் ஒரு வசனமும் வைக்கப்படும்; அதாவது வந்து விழும் வேற்றுகிரக எதிரிகளை நிஜ எதிரிகளின் பிம்பத்துடன் கலப்பது. முந்தைய அம்சம் காலனியாதிக்கத்தை முன்னெடுக்கும் உளப்பாங்கு என்றால், இது சக காலனியவாதிகள் மத்தியில் தனது மேலாண்மையை நிலைநிறுத்துவதாக உள்ளது. முந்தையது காலனியாதிக்கத்தைத் துவக்க காரணம்; பிந்தையது தனது ஆதிகத்தைத் தொடர்ச்சியாக, எந்த இடத்திலும் தளரவிடாமல், மேற்கொள்ள வகைசெய்கிறது.

இதே குணாம்சங்களை இன்று அமெரிக்காவின் சமகால ஊகப்புனைவுப் (Speculative Fiction) படைப்புகள் என்று அழைக்கப்படும் அறிவியல்/வானியல் காமிக்ஸ் திரைப்படங்களிலும் காணலாம். தனது நாடே உலக ஏகாதிபத்தியத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று விழையும் மக்கட்குழுக்கள் மத்தியில் இந்த அமெரிக்க நவகாலனியப் புனைவுப் படைப்புகள் கணிசமான வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அமெரிக்கப் படங்களின் பிரதான சந்தையாகவும் இவையே திகழ்கின்றன.

தனது நாடே உலக ஏகாதிபத்தியத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று விழையும் மக்கட்குழுக்கள் மத்தியில் இந்த அமெரிக்க நவகாலனியப் புனைவுப் படைப்புகள் கணிசமான வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

காலனியாதிக்க நாடுகள் வெளியிடும் அறிவியல்-வானியல் புனைவுகள் மற்றும் கனவுருப்புனைவுகளில் இத்தகைய அம்சங்கள் இருக்கும் அதே சமயம், முந்தைய காலமொன்றில் காலனியாதிக்கத்தின் பாதிப்புகளில் உழன்ற நாடொன்றில் உருவாக்கப்படும் படங்கள் அமெரிக்க எகாதிபத்தியத்தால் நிரம்பி வழியும் இந்தத் திரைப்பட வகைமையை முற்றிலும் மாற்றியமைக்க முயல்கின்றன. இங்குதான் மெஹிக்கோ போன்றவொரு பின்காலனிய நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘The Untamed’ போன்றொரு அறிவியல்-வானியல்/கனவுருப்புனைவு திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

தனிநபர்கள் தங்களின் வாழ்வுகளில் புதிய பாலியல் அனுபவங்களை அடைய உதவுவதாகப் படத்தின் துவக்கத்தில் இந்த மிருகம் சித்தரிக்கப்படுகிறது. தடித்த சதைகளையுடைய எண்காலி அந்த மிருகம். துவக்கத்தில், அந்த மிருகத்திடம் புதிய அனுபவங்களைப் பெற்றுப் பழகிய பெண்ணொருத்தி அந்த மிருகத்தால் நிராகரிக்கப்படுகிறாள்; மிருகம் இவளைக் காயப்படுத்திவிடுகிறது. தனது பாலியல் ஆசைகளை அதுவரை பூர்த்தி செய்து வந்த அம்மிருகத்தின் நிராகரிப்பை இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிருகம் எதனால் இவளை நிராகரிக்கிறது என்பது, அந்தப் பெண் மற்றும் மிருகத்தை ஆய்வு செய்யும் முதிய தம்பதி என எவருக்கும் புரியவில்லை. வேறொரு நபரை இந்த மிருகத்திடம் கொண்டு வந்தால், அதன் மூலம் மிருகம் சற்று ஆசுவாசமடைந்து, அதன்பின் இவளை ஏற்கும் என்று அத்தம்பதி அனுமானிக்க, இவள் அதனை நிகழ்த்த ஆயத்தமாகிறாள்.

தனது காயத்திற்கு மருத்துவம் செய்யும் ஆண் செவிலியர் ஒருவருடன் பழகத் துவங்கும் இப்பெண், தனது புதிய நண்பரை அம்மிருகத்திடம் கொண்டு செல்ல, அதிலிருந்து நிகழும் சம்பவங்களும், நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு விரியும் மெஹிக்கோ நாட்டுச் சமூக நனவிலியின் மீதான விமர்சனமுமாகத் திரைப்படம் விரிகிறது.

இந்த மிருகம் ஒரு எண்காலி. கனவுருப்புனைவில் பல இடங்களில் பெண்ணுடலின் மீது ஒரு எண்காலியின் கரங்கள் படருதல் பலப்பல கிழக்காசிய பாலியல் இலக்கியங்களில் (erotica) நாம் காணக்கூடியவை. குறிப்பாக ஜப்பானிய கலை வடிவமான ‘ஷுங்கா’வில் இந்தப் பாலியல் புனைவுகளை நாம் அதிகம் காணலாம். இந்த எண்காலி பாலியல் புனைவு வெறும் ஆண்களின் ‘காட்சி மோகத் திரிபின்’ வெளிப்பாடு என்று வகைப்படுத்தும் மேற்குலகப் பெண்ணியவாதிகள் பலர் உள்ளனர். அதுவே ‘The Untamed’ திரைப்படத்தின் மீதான விமர்சனமாகவும் வைக்கப்பட்டது.1

எண்காலி பாலியல் புனைவு ஜப்பானில் பதினைந்தாம் நூற்றாண்டு காலத்திலேயே துவங்கப்பட்டாலும், அது பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகே தடை செய்யப்படுகிறது. அதாவது போர்ச்சுகீசியர்களின் கிறித்துவ மதப் பரப்பல்கள் ஜப்பானில் நிகழத் துவங்கிய காலத்திற்குப் பிறகு. பிறகு, ஃப்ராய்டியன் மோகத்திரிபுப் (Perversion) பட்டியலும் பெரும்பாலும் கிறித்துவ மற்றும் மேற்குலகக் கலாச்சார மதப் படிப்பினைகளை முன்வைத்தே வகுக்கப்பட்டது. அதன் நீட்சியாகவே நவீன பெண்ணிய விமர்சகர்கள் ஜப்பானிய ஷுங்கா கலையை அணுகுகின்றனர்.

ஆனால், ஜப்பான் வரலாற்றாசிரியர்கள் கூறுவதோ, இந்தக் கலை பெரும்பாலும் ஆண்-பெண் உறவுமுறைகளையே அதிகம் சித்தரித்தாலும், அந்த ஓவியங்களில் இடம்பெறும் இரண்டு பாலினத்தவர்களும் எந்த வகையிலும் துன்புறுத்தப்படாமல் மற்றும் திணிக்கப்பட்ட பாலியல் உறவில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பது சுவாரசியத்திற்குரியது.2 அதுமட்டுமல்லாமல் அச்சமய உயர்வர்க்க மக்கள் சக குடும்பங்களின் விழாக்களுக்கு இந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகங்களைப் பரிசாக வழங்கியதும் உண்டு. எங்கு இவை கீழ்மையான ஆபாசப் புனைவுகளாக (Obscene Pornography) மாறுகின்றன என்றால், இந்த ஜப்பானிய கலை ஐரோப்பிய, கிறித்துவம் வளர்த்த தத்துவவியலுடன் இணைத்துப் பார்க்கப்படும் பொழுதுதான். இந்த ஜப்பானிய பாலியல் புனைவின் முக்கியத்துவம் அந்நாடு ஒரு மாபெரும் பொருளாதார நிலை அடையும் பொழுதே உலகின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. அதற்கு முன்புவரை இந்தக் கலை, இஸ்லாம் நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட பெடூயின் வாழ்வியலை மேற்குலகம் ஆபாசமானவையென வகைப்படுத்தியதைப் போல, இதுவும் கீழைத்தேய நாடுகளின் கீழ்மையான புனைவுகளென அதே மேற்குலகம் வகைப்படுத்தியது.

ஜப்பானிய ஷுங்கா கலையின் ‘மீனவ மனைவி ஒருத்தியின் கனவு’ (The Dream of the Fisherman’s Wife, 1814) எனும் புகழ்பெற்ற ஓவியமே ‘The Untamed’ திரைப்படத்தின் வேற்று கிரக மிருகப் புனைவின் மையமாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் இந்த மிருகத்தின் குணாம்ச கட்டமைப்பு, நாம் இதற்கு முன்பே கூறியது போல, அதனருகில் இருக்கும் சக பிராணிகளின், மனிதர்கள் உட்பட, பாலியல் வேட்கையை அதிகரிக்கச் செய்தாலும், அதை மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்கும் மிருகமல்ல இது. கதையின் முதற்பாதியில் ஆண் செவிலியர் ஒருவர் வருவதாகக் கூறினோம் அல்லவா. அந்தக் கதாப்பாத்திரம் ஓர்பால் ஈர்ப்பு கொண்டது. ஷுங்கா ஓவியத்தைப் போலல்லாமல், திரைப்படத்தின் ஜீவராசி அந்த ஓர்பால் ஈர்ப்பு கொண்டவரையும் பூர்த்தி செய்கிறது. இந்த மிருகத்தின் சவகாசத்தினால் அந்த ஆண் செவிலியரும் பாலியல் ரீதியில் பூர்த்தியடைகிறார்.

அடுத்த காட்சியில் இவரே கொன்றழிக்கப்பட்டு நதியின் கரையில் ஒதுங்கும் பொழுது, ஒருவேளை, எதனால் இயக்குநர் பெண்களின் பாலியல் தேவைகளை மட்டும் இந்த மிருகத்தின் உதவியால் பூர்த்தியடைவது போல காண்பித்துவிட்டு, இந்த ஓர்பால் ஈர்ப்பு கொண்டவரை மட்டும் கொன்றழிக்க வேண்டும் என்ற விமர்சனரீதியிலான கேள்வியொன்று எழலாம். அதே விமர்சனம் நமக்கும் இருந்தாலும், படத்தின் காட்சிப் படிமங்கள் இந்த விமர்சன உணர்வை ஒரு வலுவான கருத்தாக மாற்றாமல், இந்தப் புரிதலுக்குள் ஒருவித ஐயப்பாட்டைச் சொருகுகின்றது: மனிதர்களின் பாலியல் வேட்கையைப் பூர்த்தி செய்வதே இந்த மிருகத்தின் நோக்கம், அதே சமயம் இது எந்த மனிதருக்கும் துன்பமிழைக்காது, என்று கூறும் படத்தின் ஆய்வாளரை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளும்பொழுது, இறந்து கிடக்கும் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவர் அந்த மிருகத்திடம் எதிர்ப்பார்த்த பாலியல் விருப்பம் என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தை நம்முள் இப்படம் இலாவகமாக விதைக்கின்றது. ஒருவேளை ஆண் செவிலியர் கதாப்பாத்திரம் ஒரு வலியேற்பின்ப (Masochistic) குணாம்சம் பெற்றிருந்தால்? இங்கு அந்த மிருகம் அந்தக் கதாப்பாத்திரத்தின் தேவையை மிகைப்படுத்தியதால் அவர் இறந்துவிடுகிராறேயொழிய, இதில் அந்த மிருகமே குற்றமிழைத்துள்ளது என்று நாம் கூற இடமில்லை அல்லவா!

இதன் மூலம் அந்த மிருகம் குறித்தவொரு மதிப்பீட்டை நம்மால் நிகழ்த்த முடியும்: இந்த எண்காலி மிருகத்துடன் உறவு கொள்ளும் நபர்கள் அனைவருக்கும் பாலியல் அனுபப் புத்துணர்ச்சி ஒத்த படிப்படியான துவக்கம்-இடைநிலை-முடிவு எனும் கவான் (arc) ஒன்று உள்ளது. அதாவது, வறண்ட வாழ்க்கை வாழும் ஒரு நபருக்கு இந்த மிருகத்துடன் ஏற்படும் அறிமுகம், அவருக்கு தேர்ந்த புது உணர்வுகளை வழங்கத் துவங்கி, எப்பொழுது அவர் மீண்டும் மீண்டும் அதே உணர்வுகளை அதீதமாக பெற வேண்டும் என்ற பீடிப்பு நிலையை (Obsessive State) அடைகின்றனரோ அப்பொழுது மிருகம் அந்த மனிதர்களை நிராகரிக்கின்றது. துவக்கத்தில் ஒரு பெண்ணை மிருகம் காயப்படுத்திவிடுவதையும், கதாநாயகியின் இருப்பு மிருகத்திடம் சமநிலை ஒன்றை ஏற்படுத்துவதையும், மிருகம் தனது செயல்பாடுகளை அதனிடம் வரும் மனிதர்கள் நிர்ணயிக்க இடம் தராமல் ஆனால் அவர்களுடன் தொடர்ந்து உறவு கொண்டும் நிராகரிப்பதுமான இரண்டு முரண் செயற்பாடுகளையும் ஒரு சேர நிகழ்த்துகிறது.

எவரேனும் இதை வெறும் பாலியல் வேட்கையைத் தீர்க்கும் மிருகமென வகைப்படுத்திவிட்டால் அவரொரு மாபெரும் தவறை இழைத்தவராகிவிடுவார். காரணம், இந்த மிருகம் மனிதரின் id உடைய முழுமையான உருவகம். பாலியல் அதில் பெரும்பங்கு வகிக்கலாம், ஆனால், அதனையொத்த மனிதரின் இருள் பொதிந்த தேவைகள், மனிதருக்கே உரிய முன்னுக்குப் பின் முரணான எண்ணப் பாதை, மற்றும் தனது நனவிலி விழையும் அத்தனிநபரே வெறுக்கும் வேட்கைகளின் இருப்பு, என இந்த நுட்பமான அடுக்குகள் அந்த மிருகத்தின் இருப்பிடத்தில் வெளிவருகின்றன. படத்தில் பாலியலை மீறிய சில அழிவுச் செயற்பாடுகள் உள்ளன. அவை பார்வையாளர்கள் படத்தைக் காணும் பொழுது புலப்படும்.

மிருகம் idன் குறியீடு என்று நாம் உணரும் அதே சமயம், மெஹிக்கோ சமூகத்துக்குள் புறையோடியிருக்கும் போதைப் பொருளின் குறியீடாகவும் இந்த மிருகத்தைப் பொருத்த நமக்கு இடமுண்டு. முதல் முறையொரு புத்துயிர்ப்பு அனுபவம் கிடைத்த எவருக்கும் தொடர்ச்சியாக இந்த மிருகத்தின் உதவியைப் பெறாமல் இருக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும், வரையறுக்கப்பட்ட இடைவெளியையும் மீறி, அந்தக் காட்டுப் பகுதியிலிருக்கும் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். இந்த மிருகம்-போதைப் பொருள் ஒப்பீடு நாம் இதுவரை வளர்த்தெடுத்த மதிப்பீடுகளின் அளவிற்கு வீரியம் பொருந்தியதாயில்லாமல் இருக்கலாம்; ஆனால், இது நமக்குப் புலப்படுத்தும் மெஹிக்கோ (மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகள்) நாட்டின் சமூக நிலை, கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஏமாற்றப்பட்டும், ஒடுக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் தனது தினசரி வாழ்வில் உடல்/மன போதைக்கு எவ்வளவு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றது என்பதைப் படம் மறைமுகமாக வெளிப்படுத்தத்தான் செய்கிறது. மெஹிக்கோவில் புழக்கத்தில் இருக்கும் போதை பொருட்களின் நேரடியான பிரதிநிதியாக இந்த மிருகம் இல்லை, ஆனால் அந்த மிருகத்தின் இருப்பும் குணாம்சமும் அந்நாட்டின் சமூகவியல் அடுக்குகளில் தென்படும் தனித்துவமான குதர்க்கங்களிலிருந்து அந்நியப்படாத வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறோம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் எண்காலி மிருகம், ஓர் ஆணின் மனப் புனைவில் பெண்ணுடலைச் சுகப்படுத்தும் விதங்கள் யாவை என்று ஆண்கள் சிந்தித்ததன் விளைவே என்று மேற்குலகப் பெண்ணியவாதிகளும், விமர்சகர்களும் இந்த உருவத்தின் மீதொரு ‘காட்சிமோகத் திரிபு’ (Voyeurism) சார்ந்த விமர்சனத்தை முன்வைத்ததாக முன்னரே கூறியிருந்தோம். ஒரு புறம், இந்த விமர்சனத்தின் பின்னிருக்கும் வலுவான மேல்நாட்டுத் தத்துவவியலை நாம் கேள்விக்குட்படுத்தும் அதே சமயம், இத்திரைப்படம் ஒருவேளை உண்மையிலேயே காட்சி மோகத்தை ஒத்ததுதான் என்று கூறினாலும், ஜப்பானிய ஓவியத்தைப் போலவே, இது பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவையல்ல. இயக்குநர் தான் வாழும் நகரமான குவானஹுவாதாவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தியே இந்தக் கனவுருப்புனைவுக் கதையை உருவாக்கியதாகக் கூறுகிறார். தனது ஊரில் ஓர்பால் உறவு கொண்டவொரு ஆண் செவிலியர் ஆற்றில் இறந்து கிடந்ததும், அந்தச் சம்பவத்தை செய்தியாக்கிய ஊடகம் அது குறித்து வெளியிட்ட பிற்போக்குத்தனமான தலையங்கமுமே இந்தப் படத்தை உருவாக்க தம்மை உந்தியது என்கிறார் இயக்குநர்.3 தனது ஊரில் ஓர்பால் உறவு கொள்பவர்களின் நிலை அவ்வாறிருக்கக் காரணம், இருபால் உறவு சார்ந்த மிகைப்புனைவுகளே என்று உணர்ந்து, ஆண்-பெண் தம்பதிகள் இருவர் இயைந்தவரைத் தனது மனங்களுக்குள் புதைத்துக்கொள்ளும் பாலியல் உணர்ச்சிகள் வெடித்தெழும் பொழுது உருவாகும் அலைகளை இத்திரைப்படத்தின் மையக் கருவாகவும் ஆக்கியுள்ளார். அதுவும், பிரதானமாக ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து இக்கதையைக் கூறுகிறார்.

ஆக அறிவியல்-வானியல்/கனவுருப்புனைவு யுக்தியை இவர் தனது சமூகத்தின் பிற்போக்குவாதத்தை விமர்சிக்க பயன்படுத்திக்கொண்டார். இந்த வகைமையைப் படமாக்க அவர், ஹாலிவுட்டைப் போல, தனது சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு முற்றிலும் பிறிதொரு நிலத்தில் தனது கதையை அமைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதீதப் பொருட்செலவை மேற்கொண்டு படம் நெடுக CGIஐயும் பயன்படுத்தவில்லை (வெறும் இந்த மிருகத்தின் தோற்றத்துக்கும், அது இடம்பெறும் காட்சிகளுக்கென பிரத்யேகமான பின்னணி இசையும் சிறப்பு சப்தங்களுமே இந்தத் திரைப்படத்தின் பிரதான திரையுக்திகளாவன. டாக்மி 95 திரைப்பட இயக்கத்தில் லார்ஸ் வான் ட்ரீருடன் நிம்ஃபோமேனியாக் மற்றும் மெலன்கோலியா ஆகிய படங்களில் பணிபுரிந்த பீட்டர் ஹ்யோர்த் (Peter Hjorth) இத்திரைப்படத்தின் VFX மேற்பார்வையாளராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது4). மாறாக, புனைவின் வீச்சை இவர் தம் நிலத்தின் மீதே திருப்புகிறார். மேலும், இதற்கு முன்னர் நாம் அமெரிக்கா வளர்த்தெடுத்திருக்கும் வரட்டுத் தனமான அறிவியல்-வானியல் புனைவின் மீது சில விமர்சனங்களை முன்வைத்தோம் அல்லவா, அந்த மேல்நாட்டுக் கதைக் கூறுகள் எதுவும் ‘The Untamed’ திரைப்படத்தில் இருக்காது.

இந்த மிருகம் எந்த வகையிலும் மெஹிக்கோ சமூகத்திற்கு தீங்கிழைக்கவில்லை; வேற்றுகிரக மிருகம்தான், ஆனால் அது பூமியின் அழிவுக்குக் கேடுண்டாக்கவில்லை; அனைத்து மனிதர்களுடனும் இந்த மிருகத்தால் ஓர் உரையாடலை (பாலியல் ரீதியில் இருந்தாலும் அதுவொரு உரையாடலே) நிகழ்த்த முடிகின்றது-ஹாலிவுட் படங்களில் இது நிகழச் சாத்தியமே இல்லை (சமீபத்தில் வெளிவந்த ‘Arrival’ மற்றும் ‘Annihilation’ ஆகிய படங்கள் இதற்கு விதிவிலக்கு); குறிப்பாக மிருகத்தைக் கொல்வது இறுதிக் காட்சியல்ல, மாறாக, அந்த மிருகம் மெஹிக்கோ வாழ்க்கையுடன் கலந்துவிடுகிறது. அது அவர்களுக்கொரு யதார்த்தமாகிவிடுகிறது. சமூக மக்களுடன் அம்மிருகம் ஒரு சமநிலையுடன் வாழக் கற்றுக்கொண்டதைப் போல முடிகின்றது இத்திரைப்படம்.

அந்த மிருகம் மெஹிக்கோ வாழ்க்கையுடன் கலந்துவிடுகிறது. அது அவர்களுக்கொரு யதார்த்தமாகிவிடுகிறது.

முன்னரே வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் கனவுருப்புனைவுக் கதைச் சொல்லல் கூறுகளை இப்படம் உடைக்கும் அதே சமயம், ஒரு வேற்று கிரக மிருகத்தை வைத்துத் திகில் படம் ஒன்றை வழங்கியுள்ளார் இயக்குநர். தற்பொழுது இந்தத் திரைப்பட வகைமையில் (Genre) ஏற்படும் இந்த மாற்றம், இதே அடிப்படையில் எண்ணிலடங்கா படங்கள் வெளியாவதன் விளைவாகத்தான் என்று நம்மால் தீர்க்கமாகக் கூற முடியும். அந்த வகையில் இப்படியொரு அறிவியல்-வானியல்/கனவுருப்புனைவு வகைமையை புதிய விதத்தில் அணுகிய இத்திரைப்படம் உலக அளவில் கவனம் பெறாமல் இல்லை. 2016ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளிச் சிங்கம் (Silver Lion) விருதை ‘The Untamed’ திரைப்படம் பெற்றது; மேலும் தங்கச் சிங்கம் விருதுக்கும் போட்டியிட்டது5. அமத் எஸ்கலாந்த்தேவின் படைப்புகள் அனைத்தும் மெஹிக்கோவின் சமூக நிலையைப் படம்பிடித்துக் காட்டும் தன்மை பெற்றவை. இதற்கு முன்பு வெளிவந்த ‘Heli’ திரைப்படம் அவருக்கு கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுத்தந்து. அது ஓர் யதார்த்தவாதத் திரையாக்கலைக் கொண்டிருக்கும். அதனையடுத்து கனவுருப்புனைவை மையமாகக் கொண்டு தனது பாணியில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டு வெற்றி காண்கிறார் இவர். அமெரிக்கர்களும் பெரும்பான்மை இந்தியர்களும் நினைப்பது போல, அதீத பண முதலீடும், சிறப்பு சப்தங்களும்தான் முக்கியம் எனக் கருதாமல், நுட்பமான சமூகப் பார்வையும், மனிதப் புரிதலுமே, பிறவகைப் படங்களை உருவாக்க உதவுவதைப் போல, அறிவியல்-வானியல்/கனவுருப்புனைவுகள் உருவாக்கப்படவும் போதுமானது என்பதைப் பொட்டிலடித்தாற்போல உணர்த்தியிருக்கிறார் இந்த மெஹிக்கன் இயக்குநர்.

குறிப்புகள்

  1. https://www.nytimes.com/2017/07/20/movies/the-untamed-review.html
  2. http://www.bbc.com/culture/story/20131003-filth-or-fine-art
  3. https://www.filmcomment.com/blog/interview-amat-escalante/
  4. http://www.filmpressplus.com/wp-content/uploads/dl_docs/TheUntamed-Notes.pdf
  5. https://en.wikipedia.org/wiki/73rd_Venice_International_Film_Festival

பிரதீப் பாலு எழுதும் ‘புனைவின் விடுதலை’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்