கவிதை – ஜமீல்

< 1 நிமிட வாசிப்பு

புதிதாக வாங்கி வந்து
அறைச் சுவரில் மாட்டி விட்டிருக்கும்
ஓவியத்தில் வரையப்படிருந்த குழந்தை
ஒழுகொழுக ஐஸ் பழம் சுவைக்கிறது
அதனைப் பார்த்த கணத்தினிடை
ஹயாவும் வாயூறத் துவங்குகிறாள்
ஓவியத்திலிருந்து சிந்தும் துளிகளைத்
தொட்டு நாவில் வைக்கிறாள்
அது என்ன பழமென்று கேட்டு
பாசாங்கு செய்கிறாள்
இதற்கு முன்னர் ஒரு நாளும்
தின்னாததைப் போன்று
சுவை மிகுந்ததாக இருக்குமா
இது எங்கு வாங்கலாமென்று நச்சரிக்கிறாள்
பின்னர் தனக்கும் வேண்டுமென்று
சிணுங்கி மாய்கிறாள்
பனி பொழியும் முன்னிரவில்
அவளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்கிறேன்
தலை விரித்துப் போட்டு
பேயாட்டம் ஆடுகின்றன மரங்கள்
காற்று தனது கொம்புகளால்
ஆடைகளை கொழுகி இழுக்கிறது
தாமதியாது நானும் அவளுமாக
ஐஸ் பழம் வாங்கிச் சாப்பிடுகிறோம்
சுவையில்லையென்று சொல்கிறேன்
கரைந்து ஒழுகுவதுபற்றி மட்டுமே
பெரும் கவலை கொள்கிறாள் ஹயா
அவள் ஐஸ் பழத்தைத் தின்று தீர்ப்பதற்கிடையில்
மீதம் வைக்காமல் தின்று முடித்தது காற்று
உடன் காற்றை திட்டித் தீர்த்தபடி
இன்னுமொரு பழம் வேண்டுமென்று
அவ்விடத்தை விட்டு நகராமல் நின்றாள்
காற்றும் உறங்குவதாக இல்லை

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்