றியாஸ் குரானா கவிதைகள்

2 நிமிட வாசிப்பு

ஒரு சொல்லுக்குத் தெரிந்த வித்தைகள்

அமர்வதற்கு ஏற்ற இடம் தேடி
தாளெங்கும் அலைகிறது ஒரு சொல்
அமர்ந்ததும், சொல்லின் கதவுகள்
படபடவென திறக்கின்றன
வரிசையாக உள்ளிருந்து
புறப்பட்ட சொற்கள் எல்லாம்
விரும்பிய இடங்களில்
உட்கார்ந்து கொண்டன
எனக்கருகில் நின்றவர்
இது ஒரு அழகான காதல் கடிதம்
எனச் சொன்னார்.
வானில் வட்டமடித்து மரத்தில்
குந்தும் பறவைகளைப்போல
தாளில் இருந்து எழுப்பி
அந்தரத்தில் வட்டமடித்துவிட்டு
மீண்டும் தாளில் அமரும்போது
அற்புதமான ஒரு கவிதை என்றார்
அந்தச் சொல்லின் கதவு திறந்தது
சொற்கள் எல்லாம் நுழைந்துவிட்டன
தாளில் சிறுதுாரம் நடந்த
அந்த ஒரு சொல்,
ஒரு வண்ணத்திப் பூச்சியாகி
அவளின் கண்களில் மொய்த்தது
அவள் இமைக்க இமைக்க
தாள்களெங்கும் கவிதை எழுதின
இப்போது அவளுறங்குகிறாள்
தாள் மெல்ல விடிந்து கொண்டிருக்கிறது
அதிகாலையில் நான் நடந்து செல்கிறேன்
சந்தித்த முதல் மனிதன்
விழிக் கரையில் நின்று
அவளின் மனதிற்குள் குதித்து
பயிற்சி செய்து கொண்டிருக்கிறான்

புலம் பெயர்தல்

நினைவுக்குள் ஒரு வீடு
அதில் வசித்து வந்தபோது,
ஒரு நாள்
புயல்
மழை
வெள்ளம்
அங்கிருந்து புலம் பெயர்ந்து
செல்ல நினைத்தேன்.
பிரதிக்குள் அந்த வீட்டைக்
கட்டினேன்.
தேவையான பொருட்களை
எடுத்துக்கொண்டு
பிரதிக்குள் குடியேறினேன்.
இடம் மாறிய தகவலை
அறிவிக்க நினைவுக்குள்
சிறு மரமுமில்லை.
ஒலியை எழுப்பி
காற்றில் குறித்து வைத்தேன்.
பின்னர் அங்கு செல்ல முடியாது
என அறிந்த போது,
பிரதிக்குள் தனித்திருந்தேன்.
நினைவிலிருந்து
எட்டிப்பார்க்கும் போதெல்லாம்
பிரதிக்குள்ளிருக்கும் என் வீடு
தெரிந்த மாதிரி
இங்கிருந்து நினைவுக்குள்
பார்க்க முடியவில்லை.
நினைவின் உள்ளடக்கத்தை
பிரதியின் கட்டுமானப் பணியினால்
உருவாக்க முடியவில்லை.
நினைவை அதன் பண்புகளனைத்துடனும்
நிர்மாணிக்கும் வரை
திருத்தி திருத்தி
பிரதியைக் கட்டுகிறேன்.
ஒரு தும்பி மட்டுமே
அவ்வப்போது என்னைச் சந்திக்க
வருகிறது.
தனக்குப் பிடித்த சொல்
எதுவென்று சொல்லாமல்
ரகசியமாக அதனுடன்
பேசிவிட்டுச் செல்கிறது


புகைப்படம் – TerenceVu

கவிஞரைப் பற்றி

றியாஸ் குரானா இலங்கையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது சிறு வியாபாரி. 2006 – 2007 வரை பெருவெளி சிற்றிதழை நடத்தினார். பின்நவீன கவிதைகள் குறித்து தொடர்ச்சியாக உரையாடுகிறார்.

இவரது தொகுப்புகள்:
1. ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை. (அரசியல் இலக்கியப் பிரதி, (MICRO EPIC) நுண் காவியம். – மிகச்சிறு பிரசுரம். 2003. – இயல்பு வெளியீடு
2. வண்ணத்துப்பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம். (அரசியல் இலக்கியப் பிரதி, (MICRO EPIC) நுண் காவியம் – மிகச்சிறு பிரசுரம். 2006 – பெருவெளி வெளியீடு
3. நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு (கவிதைப் பிரதிகள் 2010, 2011 – முதலாவது கவிதைத் தொகுப்பு) புது எழுத்து வெளியீடு
4. மிகுதியை எங்கு வாசிக்கலாம் ( 2013 சிறு கவிதைகள், பின்னைய மொழிக் கவிதைகள்)
5. மாற்றுப்பிரதி ( கவிதைப் பிரதிகள் 2017) புது எழுத்து வெளியீடு

முகநூல் பக்கம் – https://www.facebook.com/riyas.qurana
ட்விட்டர் பக்கம் – https://twitter.com/riyasquranaa
வலைப்பூ – http://maatrupirathi.blogspot.com/

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்