நேர்காணல்: ஜேசன் எரிக் லுண்ட்பர்க்

9 நிமிட வாசிப்பு

லொந்தார் – தென்கிழக்காசிய கனவுருப்புனைவிற்கான (speculative fiction) ஒரே இலக்கிய இதழ். கனவுருப்புனைவிலக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2012ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுவப்பட்டது. குறிப்பாக, தென்கிழக்காசிய கனவுருப்புனைவு இலக்கியத்தைக் கவனத்திற்கு கொண்டுவருவதே லொந்தாரின் நோக்கம்.

ஜேசன் எரிக் லுண்ட்பர்க், லொந்தாரின் நிறுவனர் மற்றும் ஆசிரியர். நியூயார்க்கில் உள்ள ப்ரூக்லினில் பிறந்த இவர், 2007ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் தொகுத்தும் உள்ளார். கடந்த 16 வருடங்களில் இவர் எழுதிய சிறுகதைகளில் சிறந்தவற்றின் தொகுப்பையும், சிங்கப்பூர்த் தேசிய கலை மன்றத்தின் ‘2013 கிரியேஷன் கிராண்ட்’ பெற்ற ஒரு குறுநாவலையும் எபிகிராம் புக்ஸ் (Epigram Books) 2019இல் வெளியிடவுள்ளது. ஜேசன் எபிகிராம் புக்ஸின் புனைவுப் பிரிவின் பதிப்பாசிரியர்.

புகிஸ் நூலகத்திற்கு எதிரில் இருக்கும் கஃபேவில் ஜேசனும், ’அரூ’வின் ஆசிரியர் ராமும் சூடான தேநீர் (தேனுடன்) பருகியபடி உரையாடினர். லொந்தார், கனவுருப்புனைவு பற்றிய பார்வைகள், மேற்கத்திய-கிழக்கத்திய நாடுகளில் இவ்வகைப் படைப்புகளின் போக்குகள் மற்றும் அவரை உள்ளிழுத்த மாயாஜால உலகின் வசீகரம் பற்றி ஜேசன் விரிவாகப் பேசியுள்ளார்.

ராம்: உங்களை முதன் முதலில் ஈர்த்த மிகைப்புனைவு (fantasy) அல்லது அறிவியல் புனைவுப் படைப்பு (science fiction) நினைவிருக்கிறதா?

ஜேசன்: நான் எழுதிய Embracing the Strange என்ற குறுநூலில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். 12 வயதில் ​​ஐசக் அசிமோவின் Prelude to Foundation நூலைக் கையில் எடுத்தேன்; அவர் Foundation தொடர் நாவல் வரிசையில் சில புத்தகங்களை எழுதியிருந்தார். பின்னர் Foundation தொடங்கிய முன்கதையை அந்நாவலில் எழுதினார். உண்மையில், நான் படித்த முதல் பெரியவர்களுக்கான அறிவியல் புனைவுப் புத்தகம் அதுதான். அதைப் பற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன், பார்த்ததும் ஈர்த்தது, எதேச்சையாக அதைக் கையில் எடுத்தேன். அந்தப் புத்தகம்தான் என்னை முதன் முதலில் அறிவியல் புனைவுலகிற்குள் இழுத்துச் சென்றது.

அதற்கு முன்னர் நான் குழந்தைகளுக்கான மிகைப்புனைவு கதைகளைப் படித்திருந்தேன். என் சிறு வயதில் ​​ராபர்ட் சில்வர்பர்க் எழுதிய Revolt on Alpha C படித்திருக்கிறேன். ஆனால், அதைப் பற்றி ஒன்றுமே நினைவில் இல்லை! Prelude to Foundation இன்றும் எனக்குள் தங்கியிருக்கிறது. அறிவியல் புனைவு படிக்க ஊக்கப்படுத்திய முதல் நூல் அது.

“அந்தப் புத்தகம்தான் என்னை முதன் முதலில் அறிவியல் புனைவுலகிற்குள் இழுத்துச் சென்றது.” – ஜேசன் எரிக் லுண்ட்பர்க்

ராம்: உங்களுக்குப் பிடித்த அறிவியல் புனைவுத் திரைப்படங்கள்?

ஜேசன்: ஸ்டார் வார்ஸ் மிகவும் பிடிக்கும்! நான் ஸ்டார் வார்ஸின் முதல் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்ததாக என் பெற்றோர் சொன்னார்கள். அப்போது எனக்கு இரண்டு வயது! இது உண்மையாக நடந்ததா தெரியவில்லை, ஆனால் நடந்ததாகவே எடுத்துக்கொள்கிறேன். Back to the Future, Gremlins – இது போன்ற திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்.

ராம்: தொன்மத்திற்கும் அறிவியல் புனைவிற்குமான உறவு என்ன? அறிவியல் புனைவு எழுதுவதற்குத் தொன்மம் அவசியமா?

ஜேசன்: இரண்டும் ஒன்றுதான். ஊகங்களை முன்வைப்பது கனவுருப்புனைவு. நாம் அறிந்த நிஜ உலகைப் பற்றிய எழுத்தல்ல. மிகைப்புனைவு, அறிவியல் புனைவு, ஸ்டீம்பங்க், ஸ்லிப்ஸ்ட்ரீம் போன்ற அனைத்து வகைமைகளும் இதில் அடங்கும். பொதுவாக, அறிவியல் புனைகதை எழுதுபவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தொன்மத்தை நன்கு அறிவார்கள். தொன்மத்தை அறிந்த வாசகர்கள் பெரும்பாலும் பிற வகைமைகளைவிட அறிவியல் புனைவையே அதிகம் விரும்புவார்கள்.

லொந்தார் என்பது ஓலைச்சுவடிக்கான இந்தோனேசியச் (ஜாவனீஸ் மொழி) சொல். கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கும் முன்னர்) எழுதப் பயன்படுத்தப்பட்ட ஓர் ஊடகம். அவை பௌத்த சூத்திரங்கள், சட்ட நூல்கள், புராணக் கதைகள் மற்றும் வானவியல், ஜோதிடம், கட்டிடக்கலை, சட்டம், மருத்துவம், இசைத் துறைகளைச் சார்ந்த தகவல்களைப் பதிவு செய்தன. இதனால், இந்தப் பண்டைய எழுத்து வடிவம் தென்கிழக்காசிய கனவுருப்புனைவுத் தொகுப்பிற்குச் சரியான குறியீடு. இது அறிவுப் பரிமாற்றத்தில் புரட்சி உண்டாக்கிய பண்டைய தொழில்நுட்பமாகும் (இது வந்தபின் வாய்வழித் தகவல் தொடர்பு தேவையற்றுப் போனது). இது முக்கியமாக இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளில் புழக்கத்தில் இருந்தது.

லொந்தாரின் 10 இதழ்கள்

ராம்: லொந்தார் தென்கிழக்காசியாவின் கனவுருப்புனைவு மீது கவனத்தைக் குவிக்கும் முதல் இதழ். இவ்வட்டாரத்தின் கனவுருப்புனைவை இணைக்கும் கூறுகள் ஏதேனும் உள்ளனவா?

ஜேசன்: இது ஒரு கடினமான கேள்வி. சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளில் பெரிதாகக் கருதப்படும் விஷயம் ஒன்று உள்ளது – அது தேசிய அடையாளம். சிங்கப்பூரர்கள், பிலிப்பினோஸ், தாய்லாந்து மக்கள் போன்ற அடையாளங்களுக்கு என்ன அர்த்தம்? இந்தக் கேள்விகள் இவ்வட்டாரக் கதைகளின் கருப்பொருளாகத் தொடர்ந்து வருவதைக் கவனித்துள்ளேன்.

அமெரிக்காவில் இது ஒரு கேள்வியே அல்ல. அமெரிக்காவில் பிறந்து, வாழ்கிற ஒருவர், “நான் ஓர் அமெரிக்கன்” என்று சொன்னால், அதற்குத் தெளிவான அர்த்தம் உண்டு. ஆனால் பல தென்கிழக்காசிய நாடுகள் இன்னும் இந்தக் கேள்வியுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன, குறிப்பாக சிங்கப்பூர், ஏனென்றால் இது இன்னமும் ஓர் இளம் நாடு.

ராம்: தென்கிழக்காசிய மொழிகளில் கனவுருப்புனைவு பரவலாக எழுதப்படுகிறதா? இம்மொழிகளில் கனவுருப்புனைவை ஊக்குவிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் உள்ளனவா?

ஜேசன்: எனக்குத் தெரிந்தது ஐரோப்பிய மொழிகள்தான். தென்கிழக்காசிய மொழிகளில் எனக்குப் பரிச்சயம் இல்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் கனவுருப்புனைவு வலுவாக உள்ளது, ஆங்கிலத்திலும் பிலிப்பினோ மொழியிலும்கூட. மற்ற நாடுகளைப் பற்றி கருத்து சொல்ல எனக்கு அனுபவமில்லை. படைப்புகளை அணுகுவதில் பிரச்சனை இருக்கிறது. பர்மிய அல்லது இந்தோனேசிய மொழிகளில் கனவுருப்புனைவு எழுதுபவர்கள் இருந்தாலும், அவ்வட்டார இலக்கியத்திற்குள் நான் எப்படி நுழைவது? எழுத்தாளர்களைத் தெரிந்திருந்தாலும், அம்மொழி தெரியாவிட்டால், எப்போதும் அவ்விலக்கியத்திற்கு வெளியே நிற்கும் நிலைதான் நமக்கு.

ராம்: பிலிப்பைன்ஸில் கனவுருப்புனைவின் வளர்ச்சிக்கு என்ன காரணம்?

ஜேசன்: இக்கேள்விக்கு என்னைவிடச் சிறப்பாகப் பதில் சொல்லக்கூடிய பலர் இருக்கிறார்கள். அமெரிக்காவின் தாக்கம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். பிலிப்பைன்ஸின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்கிலம் பேசும் மக்களைப் பார்க்க முடியும், அவர்களால் அமெரிக்கப் புத்தகங்களை ஆங்கிலத்தில் படிக்க முடியும். என் பிலிப்பினோ நண்பர்கள் எனக்குச் சொன்னது – அங்கு வசிப்பவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அமானுஷ்யம் இருப்பதால் எழுத்தாளர்களால் சுலபமாக எழுத முடிகிறது.

ராம்: தென்கிழக்காசிய நாடுகள், மேற்கத்திய நாடுகள் – இவ்விரண்டின் கனவுருப்புனைவிற்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?

ஜேசன்: வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்குக் காரணம் என்னுடன் பணியாற்றிய பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் முதல் மொழியாக ஆங்கிலத்தைக் கொண்டதாலோ, இரு மொழி வல்லமை கொண்டதாலோ இருக்கலாம். அவர்கள் ஆங்கிலத்தில் சிந்திக்கிறார்கள், எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள். இதனால் மேற்கத்திய எழுத்தாளர்களை ஒத்த சிந்தனையும் தேடலும் இருக்கலாம். இன்னொரு சாத்தியம் – எழுத்தாளர்கள் எங்கிருந்தாலும் எழுத்தாளர்களே. குறிப்பாக, அறிவியல் புனைவு மற்றும் மிகைப்புனைவில் – மனிதனின் நிலை என்ன, யார் மனிதன், நம் உறவுகளில் எது முக்கியம் என்ற கேள்விகளே எங்கும் மேலோங்கி நிற்கின்றன. இவை உலகளாவிய கருப்பொருள்கள் என்றே நினைக்கிறேன். மேற்குடன் ஒப்பிடுகையில், லொந்தாரில் இடம்பெறும் படைப்புகளும் அவற்றின் நிலப்பரப்பும் வேறுபடலாம். ஆனால், படைப்புகளின் வேர் உலகெங்கும் ஒன்றுதான்.

ராம்: கிழக்குடன் ஒப்பிடுகையில் அறிவியல் புனைவு மேற்கில் மேலும் பிரபலமாக இருக்கிறதா?

ஜேசன்: ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். கிழக்கில் இன்றும் அறிவியல் புனைவு முழு வளர்ச்சி அடையவில்லை.

ராம்: ஏன்?

ஜேசன்: எல்லா கிழக்கு நாடுகளின் சார்பிலும் பேசுவது கடினம். சிங்கப்பூரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். சிங்கப்பூரர்கள் நடைமுறைவாதிகள். மருத்துவர், வக்கீல் போன்ற உயர்த் தொழில்கள் நீண்ட காலமாகப் பல பெற்றோர்களால் மேன்மையாகக் கருதப்பட்டன. அதிக ஊதியமும் கொடுக்கப்பட்டன. கடந்த தலைமுறையில், இக்கருத்து சற்று மாறியுள்ளது. இன்று பல பெற்றோர்களின் கருத்து, “நீ ஒரு கலைஞனாக விரும்பினால், எழுத்தாளராக விரும்பினால், எங்களுக்குப் பிரச்சனை இல்லை. நீ விரும்புவதைச் செய்.”

என்ன மாதிரியான கதைகள் இதுவரை எழுதப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். சிங்கப்பூரின் ஆரம்பகால நாவல்களும் சிறுகதைகளும் புதியதொரு தேசத்தைக் கட்டமைப்பதைச் சுற்றியே இருந்தன. நான் முன்பு குறிப்பிட்ட ’தேசிய அடையாளம்’ பற்றியதுதான் இது. அதனால் அவை நிஜ உலகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டன. இன்று, சிங்கப்பூர் ஒரு வளமான நாடு – சமூகத்தில் இன்னும் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் – பலரும் வசதியாக வாழ்கின்றனர். இந்நிலை பல வருடங்களாக நீடிக்கும்போது, எழுத்தாளர்கள் புதுப்புது உலகங்களை உருவாக்கத் துவங்குவார்கள்.

மேலும், இங்குள்ள எழுத்தாளர்களால் இப்போது கனவுருப்புனைவு அதிகம் எழுதப்படுகிறது. ஏற்புடையதாக இல்லாததால், முன்பு அவற்றை எழுதுவதற்குத் தயக்கம் இருந்தது, இப்போது அப்படி இல்லை. அதிர்ஷ்டவசமாக கடந்த 10-15 ஆண்டுகளில், இந்நிலை மாறி ஏற்பு அதிகரித்துள்ளது. வெளியீட்டுத் தளங்கள் பெருகியுள்ளன. இது நிகழ்ந்ததில் எனக்கும் ஒரு சிறு பங்குள்ளதாக நினைக்கிறேன்.

ஜேசன் Best New Singaporean Short Stories, Fish Eats Lion (2012) என்ற தொகுப்புகளின் ஆசிரியர். A Field Guide to Surreal Botany (2008) மற்றும் Scattered, Covered, Smothered (2004) தொகுப்புகளின் இணையாசிரியர்.

ராம்: மேற்கில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே பல மோதல்கள் நிகழ்ந்துள்ளன. ஒப்பீட்டளவில், கிழக்கில் இவ்விரண்டிற்கும் இடையே பெரிய சச்சரவுகள் இல்லை. மத நம்பிக்கைகளுக்கு எதிரான மறைமுகப் புரட்சியே மேற்கின் அறிவியல் புனைவா?

ஜேசன்: இது மிகவும் சுவாரஸ்யமான பார்வை. கிழக்கில் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் மோதல்கள் இல்லை என்பதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது. இது உலகெங்கும் நிகழக் கூடியது.

உற்று நோக்கி கேள்விகள் கேட்பதே அறிவியலின் வேலை. பல மதங்கள் சொல்வது, “இதோ பதில்கள். உலகம் இவ்வாறுதான் செயல்படுகிறது. இக்கோட்பாடுகளுக்கு உட்பட்டு நீங்கள் செயல்பட வேண்டும்.” அறிவியல் புனைவு கேட்கும் கேள்வி, “இவ்வழி சரியாக இல்லாவிடில்? வேறொரு வழி சரியாக இருந்தால்?” அறிவியலிற்கும் மதத்திற்கும் பெரிதாகப் பிரச்சனை இல்லாத சமூகத்திலும்கூட இவற்றுக்கிடையே உரசல்கள் இருந்துள்ளன.

ராம்: A Public Space என்கிற இலக்கிய இதழ் லொந்தார் உருவாவதற்கு உந்துதலாக இருந்ததை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பிப் படிக்கும் பிற இதழ்கள்?

ஜேசன்: வாசிப்பின்பத்திற்கு எனக்கு அவகாசம் இருப்பதில்லை. என் முழுநேர வேலையே நாவல்களைப் படிப்பதும் திருத்துவதும். தூங்கும் முன் நான் ஏதேனும் வாசித்தால், பெரும்பாலும் அது புத்தகமாக இருக்கும், இதழ்கள் அல்ல. இருந்தாலும் A Public Space எனது ஆதர்ச இதழ். அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரு நல்ல விஷயம் செய்து வருகிறார்கள் – ஒவ்வொரு இதழிலும் ஒரு நாட்டின் படைப்புகள் மீது கவனத்தைக் குவிக்கிறார்கள். இதை நான் பெரிதும் ரசிக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலிருந்து கதைகள், கவிதைகள், காமிக்ஸ் மற்றும் பிற படைப்புகளை ஆங்கிலத்தில்(தேவைப்பட்டால் மொழிபெயர்த்து) தொகுத்து வெளியிடுகிறார்கள். இது ஓர் அற்புதமான இதழ்.

“A Public Space எனது ஆதர்ச இதழ்.” – ஜேசன்

Freeman’s இதழும் எனக்குப் பிடிக்கும். இங்கிலாந்தில் கிராண்டாவின் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய ஜான் ஃப்ரீமேன் தொகுத்து அரையாண்டுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ். அவர் கிராண்டாவில் செய்த வேலையை இந்த இதழிலும் செய்கிறார். நீண்ட அபுனைவு படைப்புகளும், நினைவுக் குறிப்புகளும், புனைவும் உள்ளடக்கிய இதழ். ஓர் ஆசிரியராக அவர் செய்யும் வேலையின் நுட்பத்தை நான் ரசிக்கிறேன். எழுத்தாளர்களுடன் சுமூகமான உறவையும் வளர்த்துக்கொள்கிறார்.

இவ்விரண்டும் கனவுருப்புனைவு இதழ்கள் அல்ல. இதுதான் வினோதம்! அமெரிக்காவில் வெளிவரும் Lightspeed இணைய இதழ் எனக்குப் பிடிக்கும். அவ்வப்போது அதைப் படிப்பேன். இப்போது லொந்தாரின் கடைசி இதழ் வெளியாகிவிட்டதால், வாசிப்பதற்கு நேரம் கிடைக்கும் என நினைக்கிறன். இதன் ஆசிரியர் ஜான் ஜோசப் ஆடம்ஸ். அவரது ஆசிரியப் பணியின் ரசிகன் நான்.

ராம்: அரூ போன்ற புதிய இதழ்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஜேசன்: ஆரம்பத்திலேயே நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். லொந்தார் வெளியாவதற்கு முன் தென்கிழக்காசியாவை மையப்படுத்தி எந்தவொரு கனவுருப்புனைவு இதழும் உலகில் இல்லை. இதைத் தொகுக்க வேண்டும் என நான் நினைத்தேன். அது நிரப்பப்பட வேண்டிய ஒரு வெற்றிடமாக இருந்தது. “இதுதான் நான் சாதிக்க விரும்புவது, இதுவே என் இலக்கு.” இலக்கைத் தெளிவாக்கிக்கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் செய்யுங்கள்.

உங்கள் இதழை இணையத்தில் வெளியிடுவது நல்லது. லொந்தாரை இணையத்தில் வெளியிட்டிருந்தால் இன்னும் நிறைய வாசகர்கள் கிடைத்திருக்கலாம். நான் அச்சு இதழ்களை நேசிப்பவன். A Public Space இதழ் என் மனதிற்கு நெருக்கமானது. லொந்தாரின் அட்டை அளவுகளைக்கூட அவ்விதழைப் போலவே அமைத்தேன். அச்சில் வெளியிட்டதால் சில வாசகர்களை இழந்திருக்கலாம். ஆனால் நான் உருவாக்க நினைத்த இதழ் இதுவே.

பெரும்பான்மையான வாசகர்களுக்கு இப்போது எல்லாமே இலவசமாக வேண்டும். நான் முன்பு குறிப்பிட்ட Lightspeed இதழும் சரி, பிரபல Clarkesworld மற்றும் Uncanny இதழ்களும் சரி, அனைத்தையும் இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம். ஓர் இதழ் இணையத்தில் வெளிவருவதன் மூலம் அதிக வாசகர்களைச் சென்றடையும்.

ராம்: இன்று கனவுருப்புனைவு எழுதத் துவங்குபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஜேசன்: எப்போதும் சொல்லப்படும் அதே ஆலோசனைதான்: நீங்கள் ஓர் எழுத்தாளராக விரும்பினால், நிறைய படிக்க வேண்டும். வெறும் கனவுருப்புனைவு மட்டுமில்லாமல், அனைத்துவிதமான புனைகதைகளையும், கவிதை மற்றும் நாடகங்களையும் கிராஃபிக் நாவல்களையும் படிக்க வேண்டும். பல விதமான எழுத்துக்களைப் படிப்பது முக்கியம். நான் நான்கு ஆண்டுகள் சிங்கப்பூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன். ஒவ்வொரு ஆண்டும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் நிகழ்ச்சியில் (சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் Gifted Education கிளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது) பயிற்சி வகுப்புகள் நடத்துகிறேன். நான் மாணவர்களிடம் எப்போதும் சொல்லும் விஷயம்: பற்பல விதமான புத்தகங்களைப் படிக்க வேண்டும். உங்கள் வாசிப்பின் தாக்கம் உங்கள் எழுத்தில் தெரியும்.

உதாரணமாக, இராணுவ அறிவியல் புனைக்க்கதைகளை (military science fiction) மட்டும் படிப்பவர்கள், அவ்வகை கதைகளை மட்டுமே நன்கு அறிவார்கள். அவர்கள் எழுதும் கதைகள் ஏற்கனவே வெளிவந்தவற்றின் நகலாகவே இருக்கும். நபகோவ் (Nabokov), ப்ரொந்தே சகோதரிகள் (Brontë Sisters), நெரூடா (Neruda) மற்றும் கிறிஸ் வேர் (Chris Ware) போன்ற எழுத்தாளர்களையும் சேர்த்து படித்தால், புதிய சுவாரஸ்யமான கண்ணோட்டங்கள் பிறக்கும். பரந்துபட்ட வாசிப்பு மிக முக்கியம்.

எழுத ஆரம்பிக்கும்போது, ​​உங்களின் தனித்துவத்தைக் கண்டடைய முனைவீர்கள், அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். நிறைய எழுத வேண்டும். பெரும்பாலும் சோதனை முயற்சிகளாக இருக்கும். எழுத்து உங்களுக்குள் ஊறிப்போகும் அளவிற்கு எழுத்துப்பயிற்சி ஆரம்ப காலத்தில் முக்கியம்.

ஜேசன் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுபவர். முறையாக 2008 இல் பௌத்தத்தில் சரணடைந்து, மதிப்பிற்குரிய Thubten Chodron அவர்களிடமிருந்து தனது அடைக்கலப் பெயரை பெற்றுள்ளார் (Thubten Jangchub, அதாவது “புத்த வழியில் சுடர்மிகும் அறிவு” என்று அர்த்தம்).

ராம்: நீங்கள் பௌத்தத்தில் சரணடைந்துள்ளீர்கள். உங்கள் பதிப்பாசிரியர் பணியில் பௌத்தத்தின் தாக்கம் இருக்கிறதா?

ஜேசன்: நிச்சயம் இருக்கிறது. எனது எடிட்டிங் அணுகுமுறையில் பௌத்தத்தின் தாக்கம் இருக்கிறது. ஒரு படைப்பின் மீது என் சொந்த கருத்துக்களை திணிப்பதற்குப் பதிலாக, அதனுடன் உரையாடுகிறேன். என் எழுத்தாளர்களிடம் நான் எப்பொழுதும் சொல்வது, நான் எடிட்டிங் செய்யும் பிரதி ஒரு நாவலோ, சிறுகதையோ, எதுவாக இருந்தாலும்: “நான் ஒரு மருத்துவச்சி. நீங்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெற்றோர். அது சிறப்பாக உயிர்த்தெழுவதற்கு நான் உதவுகிறேன்.” இதை நான் ஒரு சேவையாகவே பார்க்கிறேன். நான் ஒளிவட்டத்திற்குள் நிற்க விரும்பவில்லை. “எல்லோரும் என்னைப் பாருங்கள்! நான்தான் இந்த நூலை செம்மையாக்கினேன்!” என்று அறிவிக்க வேண்டியதில்லை. அங்கீகாரம் கிடைப்பது சந்தோஷம்தான், ஆனால் எழுத்தாளரே முக்கியம். எழுத்தாளரின் படைப்பு முக்கியம். நூல்களைத் திருத்தி அமைக்கும் பணியை நான் இவ்வாறே அணுகுகிறேன். “எடிட்டிங் மூலம் இப்பிரதியைச் சிறந்த வடிவத்திற்கு எப்படி கொண்டுவருவது?” இதுவே என் தேடல்.

ராம்: தற்காலக் கனவுருப்புனைவில் உங்களை உற்சாகப்படுத்தும் அல்லது கவலைக்குள்ளாக்கும் போக்கு ஏதேனும் உள்ளதா?

ஜேசன்: சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னைத் தொந்தரவு செய்த விஷயம் இன்றும் தொடர்கிறது – குறிப்பிட்ட படைப்புகளைப் புறந்தள்ளும் முயற்சி. பல மேதாவி எழுத்தாளர்களும் வாசகர்களும் கொண்ட தீவிர வலதுசாரி கும்பல் ஒன்றிருந்தது. வெள்ளையர் அல்லாத எழுத்தாளர்கள், LGBT எழுத்தாளர்கள், மூளை வளர்ச்சி குறைபாடுள்ள எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை எதிர்த்து கடுமையான கோஷங்கள் எழுப்பினர், “இது நாங்கள் படித்து வளர்ந்த அறிவியல் புனைவு கிடையாது. இது உண்மையான அறிவியல் புனைவே அல்ல!” எல்லா பிரபல கலை ஊடங்கங்களிலும் இது நடந்தது – கனவுருப்புனைவு, கேமிங், காமிக்ஸ், சினிமா ஆகியவற்றிலும். ரசனையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தங்களிடம் உள்ளதாக நினைத்து கூச்சலிட்டது இக்கும்பல். அவர்களுக்குச் சரி என்று தோன்றுவதற்கு எதிராக இருக்கும் அனைத்தையுமே அழிக்கப் போகிறார்கள். நல்ல வேளை, அறிவியல் புனைவெழுத்தில் இந்தப் போக்கு குறைந்துள்ளது.

உலகம் செல்லும் திசை, அது செல்ல வேண்டிய திசை, இவ்விரண்டிற்கும் இடையே எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவர்கள் தங்களிடம் இருப்பதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ள நினைக்கிறார்கள், பிறருக்குத் தீங்கு நிகழ்ந்தாலும் சரி. இந்தப் பிரச்சனை என்றென்றைக்கும் இருக்கும். இதற்குச் சுலபமான தீர்வுகள் இருப்பதாகத் தெரியவில்லை. தினந்தோறும் இதை எதிர்த்து நாம் போராடியாக வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் – நாம் உருவாக்கும் படைப்புகள், நாம் ரசிக்கும் கலை, நாம் உலகிற்கு அளிக்கும் அனைத்தும்.


We published this interview in English here.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்